Home » சாந்தி ரமேஸ்

 
 

சாந்தி ரமேஸ்

 
 
நேர்காணல்-சாந்தி ரமேஸ்

நேர்காணல்-சாந்தி ரமேஸ்

      சாந்தி ரமேஸ் யாழ்ப்பாணம் குப்பிளானி்ல் பிறந்து யேர்மனியில் வசிக்கின்ற ஈழப்பெண்.  இலக்கிய ஈடுபாட்டாளர், எழுத்தாளர், போராட்டப்பற்றாளர், களப்பணியாளர் என்று தன்னார்வத்தில் செயற்பட்டு வரும் சாந்தி, எழுதத்தொடங்கியது 13வயதில். 1) இன்னொருகாத்திருப்பு (கவிதைத்தொகுப்பு-2000)  2) அழியாத ஞாபகங்கள் (கவிதைத்தொகுப்பு 2001) 3) கலையாத நினைவுகள் (சிறுகதைத்தொகுப்பு 2002) 4) உயிர்வாசம் ((கவிதைத்தொகுப்பு 2005) 5) கண்கள் எழுதிய கவிதையின் கடைசிச்சொட்டு (கவிதைத்தொகுப்பு 2012)என இதுவரை  ஐந்து புத்தகங்கள்  வெளியாகியுள்ளன. பத்திரிகைகளிலும் இணையத்தளத்திலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.   போர் நடந்த இலங்கையின் வடக்குக் கிழக்குப்பகுதி மக்களின் வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதை நோக்காகக் கொண்டுநேசக்கரம் என்ற அமைப்பை உருவாக்கி, வடக்குக் கிழக்குப்பகுதிகளில் உதவிப் பணிகளைச் செய்து வருகிறார். இந்தப் பணி என்பது ஒரு முதலுதவிச் சிகிச்சைக்கு நிகரானது. கல்வி, சுயதொழில் ஊக்குவிப்பு, வாழ்வாதாரமுயற்சிக்கான ஆதரவு, அனர்த்த உதவிகள் என இந்தப் பணிப் பரப்பை வடிவமைத்திருக்கிறார்.  நெருக்கடிகள், விமர்சனங்கள், எதிர்ப்புகள், கேள்விகள் என்ற பல அழுத்த நிலையிலும் தணியாது தன்னுடைய பணிப் பரப்பை விரித்தபடியிருக்கும் சாந்தியின் இந்த நேர்காணல் மின்னஞ்சல் வழியாகச் செய்யப்பட்டது.    00 இலக்கியத்திலும் அரசியலிலும் தொண்டுப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்ற உங்களைப் பற்றிய அறிமுகம்? நான் பிறந்தது யாழ் மாவட்டம் வலிகாமம் வடக்கு குப்பிளான் என்ற சிறு கிராமம். எனது ஊர் பலாலியை அண்டிய ஊர் என்பதால் துப்பாக்கிச்சத்தங்களோடு எறிகணைகள் விமானத்தாக்குதல்ஆமியின் சுற்றிவழைப்பு என எல்லாவற்றையும் எனது ஊரும் நாங்களும் அனுபவித்தே வளர்ந்தோம். எனது தந்தையார் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர், விசுவாசி. எங்கள் வீட்டு விறாந்தையில் சிறீமாவோ பண்டாரநாயக்கா , பண்டாரநாயக்கா , அனுரா , வினோதன் போன்றோரின் படங்களே கறுப்புவெள்ளையாக தொங்கியிருந்தது. இப்படியமைந்த எனது அப்பாவின் அரசியல் ஈடுபாடே என்னிலும் வந்ததென்றே சொல்வேன். 1980 இன் பின்னர் இயக்கங்கள் ஊர்களில் வந்த காலம். எனது தந்தையாரின் ஈடுபாடு புலிகள் அமைப்பினரோடு தொடர்பாகியது. அப்பாவின் நண்பர்கள் பலர் புலிகளாக இருந்தார்கள். நான்சிறுமியாக என் ஞாபகங்களில் இன்றுவரை சேமித்து வைத்திருக்கிற உயர்ந்தவர்களாக புலிகளே என்னோடும் நிரந்தர உறவாகிப்போயினர். அப்போது எனக்கு மாமாக்களாக வந்தவர்கள் இன்றுபலர் உயிரோடில்லை. சிலர் மட்டும் அந்த ஞாபகங்களை மீளத்தருகிறவர்களாக உள்ளார்கள். அப்போது காசியானந்தன், புதுவை இரத்தினதுரை போன்றோரின் கவிதைகளை என்கூடப்பழகிய மாமாக்கள் வாசிப்பார்கள். தங்கள் கனவுகள் பற்றிச் சொல்வார்கள். அன்று அவர்களிடமிருந்துதொடங்கிய வாசிப்புப்பழக்கம் விடுதலையென்ற சொல்லை உணர்த்திய அவர்களது அன்புமே இன்று என்னையும் உங்களோடெல்லாம் பேசும் வலுவைத்தந்துள்ளது. 1987 இல் எங்கள் ஊரைவிட்டு இடம்பெயர்ந்தோம். முதல் இடப்பெயர்வின் போதே ஊரைப்பிரியும் அகதி வாழ்வு ஆரம்பமாகியது. 05.07.1987 கரும்புலி கப்டன் மில்லரின் நெல்லிடியத் தாக்குதல் முடிந்து இந்தியராணுவத்தின் வருகையில் ஊர் திரும்பினோம். தியாகி திலீபன் அவர்களின் மரணம் 13வயதுச் சிறுமியாயிருந்த எனக்குள்ளும் நெருப்புப்பொறியை வீசியது. நல்லூரில் போயிருந்து திலீபனண்ணாவைக் காக்குமாறு முருகனை நானும் இறைஞ்சினேன். ஆனால் யாராலும் காக்கப்படாமல் திலீபனண்ணா மடிந்து போன நாளில் எனது குழந்தையுணர்வுகளை கவிதையாக்கினேன். பின்னர் ஊர்களை உழுத இந்திய டாங்கிகளுக்குள்ளால் தப்பி எங்கள் ஊரில் அடைக்கலம் வந்த போராளிகளின் அன்பும் நட்பும் மீண்டும் துளிர்த்தது. அந்தக்காலத்து அவலங்களை குழந்தைக்கவிதைகளாய் படைத்தேன். அவற்றை கொப்பி உறைகளில் பாதுகாத்து அப்போது என்னோடு பழகிய போராளிகளுக்கு வாசிக்கக் கொடுப்பேன். அந்த நட்புகளின் தொடர் 1990இல்மீண்டும் இடம்பெயரத்தொடங்கிய போது விடுதலைப்புலிகளின் கலைபண்பாட்டுக்கழகத்துடனான தொடர்பு  என் குழந்தை எழுத்தை படி உயர்த்தியது. 1990இன் பின் நாடகம் சிறுகதையென மெல்ல மெல்ல எழுந்ததே எனது எழுத்தனுபவம். முற்றிலும் தாயக விடுதலைப்பாடல்களோடும் எழுத்துக்களோடும் வாழ்ந்து அவர்களோடு பழகிய அந்த உறவுகளைப் பிரிந்து புலம்பெயர்ந்து குடும்பம் குழந்தைகள் என காலம் மாறிப்போயும் சிறுமியாய் நானிருந்த காலம் என்னுள் உறவாகி என்னோடு வாழ்ந்து மடிந்தும் போனவர்களின் கனவுகளோடு அவர்களது சந்ததிகளுக்காகவும் அவர்கள் விதைத்த கனவு கலைந்த இக்காலத்தில்அவர்களுக்கான நன்றியாகவே தொண்டுப்பணியோடு இணைந்திருக்கிறேன். இப்போது யேர்மனியில் கணவர் ரமேஷ் வவுனியன், மகன் பார்த்திபன், மகள் வவுனீத்தா இந்த மூவரின் பலத்தோடே இன்றைய எனது எல்லாப்பணிகளும் நகர்கிறது. உங்களுடைய தந்தையாரிடம் இப்படியான மாற்றம் எப்படி ஏற்பட்டது? பின்னாளில் அவர் என்னமாதிரியான மனநிலையில் இருந்தார்? மானிப்பாய் வினோதன் குமாரசாமி அவர்கள் ஊடாகவே எனது தந்தையாரின் அரசியல் ஆரம்பமானது. இந்த இடத்தில் வினோதன் பற்றிக் குறிப்பிட வேண்டும். வினோதன் குமாரசாமி அவர்கள் எனது தந்தையாரின் நல்ல நண்பர். வினோதன் அவர்களுடனான நட்பு வினோதன் அவர்கள் நேசித்த இயங்கிய கட்சியான சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் விசுவாசியாக அப்பாவும் மாறக்காரணமாயிருந்தது. தனது நண்பரின் மீதான அன்பை எனது தங்கைக்கு வினோதினியென்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். அந்தளவுக்கு வினோதன் அவர்கள் அப்பாவோடு நெருங்கிய நட்பைக்கொண்டிருந்தார். நாங்களும் வினோதன்மாமா என்று உரிமையோடு அழைக்கும் அளவு வினோதன் அவர்கள் எங்கள் குடும்பத்தோடு நட்பாயிருந்தார். வினோதனின் தந்தையார் குமாரசாமி ,பண்டாரநாயக்கா குடும்பத்தின் அபிமானியும் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினரும் நண்பரும் ஆவார். சாதியத்தால் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை வினோதனும் அவரது தந்தையார் குமாரசாமியுமே சமமாக எல்லோரையும் மதிக்க வேண்டுமென்ற நிலமையை உருவாக்கியவர்கள். (நான் பிறக்க முதலே இந்த மாற்றத்தை கொண்டு வந்ததாக பல மூத்தவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்) ஒடுக்கப்பட்டவர்களுக்கான […]