Home » இதழ் 03 » யுத்தத்திற்குப் பின்னரான யாழ்ப்பாணத்துக் கவிதை முயற்சிகள்!

 

யுத்தத்திற்குப் பின்னரான யாழ்ப்பாணத்துக் கவிதை முயற்சிகள்!

 

(2009க்குப் பின் தளமாற்றமும் பொருள்புலப்பாட்டு நெறியும்)

அறிமுகம்
————————–
நவீன இலக்கிய உலகில் ஈழத்துத் தமிழ்க் கவிதைகள் கனதியானவை. தொண்ணூறுகளுக்குப் பின் ஈழத்தில் முனைப்புப் பெற்ற ஆயுதப்போராட்டத்தின் எழுச்சி, ஈழத்துக் கவிஞர்களைப் போர்க்கால வாழ்வியலை பிரதிபலிக்கும் வகையில் கவிதைகளை எழுதத் தூண்டின. தமிழ்த் தேசியம் சார்ந்த கருத்துநிலைகளால் ஈழத்துக் கவிதைப்புலம் பல்வேறு தளங்களில் இருந்து சார்ப்புநிலைக் கவிதைகளாகவும், எதிர்நிலைக்கவிதைகளாகவும் போரியல் கவிதைகளாகவும் என பல இயங்குதளங்களில் இயங்கிக் கொண்டன.

இத்தளக் கட்டுமானங்களுக்குள் அகப்படாது அறம்சார்ந்த இயங்குநிலையில் மனிதத்தை நேசிக்கும் பண்பு கொண்ட கவிதைகளில், அரசியல், ஆயுதப் போராட்ட நடப்பியலை உள்முக, வெளிமுகப்போக்கு என இரண்டு கோணங்களிலும் வெளிப்படுத்தப்படும் கவிதைகளும் இக்காலப்பகுதியில் எழுந்துள்ளன.
ஈழத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த கவிதைகள் அநேகம் அரசியல் மயப்படுத்தப்பட்ட சித்தாந்தங்களை பிரதிபலிக்கும் கவிதைகளாகவே தமது இயங்குதளத்தினை அமைத்துக் கொண்டன. இலக்கியம் என்பது காலத்திற்கேற்ற சூழ்நிலை, கருத்தியல் தழுவியது என்பதற்கேற்ப யாழ்ப்பாணத்துக் கவிதைகளின் தளம் குழுநிலைச் சித்தாந்தம் தழுவியது என்பதில் தவறில்லை. போரும் வாழ்வுமான யாழ்ப்பாணத்து கவிதைப்புலத்தில் மனோரதியப் பாங்கான கவிதைகள் மறைந்து போக, போரும் போர் அவலமும் அடக்கு முறைக்கெதிரான எதிர்ப்பும், போராட்ட வலுவும் மிக்கதான கவிதைகளே அநேகம் இடம் பிடித்தன.

யாழ்ப்பாணத்துக் கவிதைப்புலம்
(2009ம் ஆண்டிலிருந்து)
யுத்தத்திற்குப் பின்னரான யாழ்ப்பாணத்துக் கவிதைப்புலம் தனது இயங்கு தளத்தினை பிறிதொரு கருத்தியல் சார்ந்த மூன்று தளத்திற்கு நகர்த்தியுள்ளது.
1. போரும் வலி சூழ்ந்த வாழ்வியலும்
2. போர், போராட்டம் பற்றியதுமான சுயவிமர்சனப் போக்கு
3. இருப்பியல் பற்றியதான சிந்தனைப் புலம்

இதுவரை காலமும் போராட்ட அவசியத்திற்கு முதன்மை கொடுத்து வந்த யாழ்ப்பாணக் கவிதைப்புலம் தற்போது போர் வலி சுமந்த வாழ்வையும், போராட்ட வரலாற்றின் சரி பிழைகளை மதிப்பீடு செய்யும் தன்மையினையும் கொண்டதாக அமைந்துள்ளது.

உண்மையில் ஒரு கவிதைத் தளமானது திறந்த நிலை, உள்முகநிலையாக இருக்க வேண்டும் எந்தவித சித்தாந்தங்களும் பதியப்படாத தூய்மையான தளத்தில் இருந்து பிறக்கும் கவிதைகள்தான் உண்மையான படைப்பாக்கமாக கருதப்படும். யாழ்ப்பாணத்துக் கவிதைகள் அநேகம் இதுவரை காலமும் ஒரு வழித்திசையிலேயே பயணித்துள்ளது. அதனது இயங்குதளத்தில் ஏனைய திசைகள் மறைக்கப்பட்டு ஒரு திசையை மட்டுமே நோக்கியதான திசையாக இருந்திருக்கிறது. இது அரசியல் மயப்படுத்தப்பட்டதான செலுத்துகை அல்ல ஒரு வழித்திசை என்பது போர்ப்பரணி மட்டும் பாடிய நிலை அல்ல பேரும் போருக்கான தேடலும் போர்க்கால வாழ்வியலும் வலியும் நிறைந்ததான திசையாக இருந்திருக்கிறது. இத்திசையமர்வில் இருந்து கொண்டு கனதியான கவிதைகள் படைக்கப்பட்டிருக்கிறது.
இன்றைய நவீன கவிதை முயற்சியில் பல்வேறு புதுமுகங்களின் வரவு நிகழ்ந்திருப்பினும் அவர்களில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர்களே புதிய பரிமாணம், புதிய சிந்தனைகளில் தமது கவிதையை நகர்த்திச் செல்கின்றனர். இதனை விட தொடர்ந்து கவிதை எழுதி வருபவர்களும் இறுதி யுத்தத்திற்கு பின்னரும் எழுதி வருகின்றாhர்கள் இவர்களின் கவிதைகளிலேயே அதிகமா தளமாற்றங்களும் பொருள் புலப்பாட்டு நெறியும் விரிவடைந்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

யுத்தத்திற்குப் பின்னரான கவிதை முயற்சியில் கல்வயல் வே. குமாரசாமி, சோ.பத்மநாதன், த.ஜெயசீலன், கருணாகரன், தீபச்செல்வன், பா.அகிலன், சித்தாத்தன், தா.விஸ்ணு, ந. சத்தியபாலன், குணேஸ்வரன், கு.றஜீபன், பெரிய.ஜங்கரன், வெற்றி.துஸ்யந்தன், மருதம்கேதீஸ், அஜந்தகுமார், நிலாந்தன், மகாலிங்கசிவம், கோகுலராகவன், துவாரகன், புலோலியூர் வேல்நந்தன் அல்வாயூர் சிவநேசன், ஆகியோரின் கவிதை முயற்சிகள் முக்கியமானவையாக கருதப்படுகின்றன.

இன்றைய யாழ்ப்பாணத்து கவிதைப் புலத்தினை இரண்டு நிலைகளில் நோக்க முடியும்.
1. சஞ்சிகைகள், பத்திரிகைகளில் வெளிவரும் படைப்புக்கள்
2. நூலாக்க முயற்சிகள்
சஞ்சிகைகள் என்ற நோக்கில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் கலைமுகம், ஜீவநதி, அம்பலம், மறுபாதி, தவிர, நடுகை வெள்ளிமலையும் ஏனைய மாவட்டங்களில் இருந்து வெளிவரும் மல்லிகை, ஞானம், நீங்களும் எழுதலாம் போன்ற சஞ்சிகைளிலும் யாழ்ப்பாணத்தைச் சோர்ந்த எழுத்தாளர்கள் எழுதி வருகின்றனர்.
கவிதை நூல் வெளியீட்டு முயற்சிகள்.

நூல் வெளியீட்டு முயற்சிகளைப் பொறுத்தவரையில் சேரனின் “காடாற்று” கல்வயல் குமாரசாமியின் “முறுகல் சொற்பதம்”, சோ.பத்மநாதனின் “சுவட்டெச்சம்”;, ந.சத்தியபாலனின் “இப்படியாயிற்று நூற்றியோராவது தடவையும்”; கருணாகரனின் “பலி ஆடு”, “எதுவுமல்ல எதுவும்”;, சித்தாத்தனின் “துரத்தும் நிழல்களின் யுகம்”, தீபச் செல்வனின் “பதுங்கு குழியில் பிறந்த குழந்தை”, “பாழ் நகரத்தின் பொழுது”, “பெருநிலம்”, “ஆட்களற்ற நகரத்தைத் தின்ன மிருகம்”, பா.அகிலனின் “சரமகவிகள்”;, கு.றஜீபனின் “பேசற்க”, “நகுநயம் மறைத்தல்”, பெரிய. ஜங்கரனின் “கறுப்பு மழை”, வெற்றி. மு.பொன்னம்பலத்தின் “கவிதையில் துடிக்கும் காலம்”, துஸ்யந்தனின் “வெறிச் சோடும் மனங்கள்”, “மொழிபெயர்க்கப்படாத மௌனங்கள்”, ஸ்ரீ.பிரசாந்தனின் “ஓவியம் செதுக்குகிற படல்”, தம்பித்துரை ஜங்கரனின் “அமாவாசை நிலவு”, வே.ஜ.வரதராஜனின் “என்கடன்”, நெடுந்தீவு மகே~pன் “மனிதத்தைத் தேடி”, நெடுந்தீவு முகிலனின் “மனத்திரை மேகங்கள்”, “பயனிகள் கவனத்திற்கு”, “கடவுளின் சயனத்தை கலைக்கும் மணியோசை”, “சாடிகள் கேட்கும் விருட்சங்கள்” ஜே.எஸ்.ராஜ்ஜின் “உயிர்ச்சமர்”,க.ஜெயவாணியின் “இப்போது சொல் எப்போது வந்த கவிதை நீ” ஆழியூர் ரதீஸின் “ஒரு நெஞ்சத்தின் நெருடல்கள்”, க.யோகேஸ்வரனின் “கீற்றுமதிச்சாரல்”, ஆ.முல்லைதிவ்யனின் “கவியின் ஏக்கம்” வை.சாரங்கனின் “புதையல்”, இ.சு.முரளிதரனின் “புழுவிற்கும் சிறகு முளைக்கும்”, தில்லைநாதன் பவிதரனின் “ரசவாதம்”, கமலசுதர்சனின் “அவல அடைகாப்பு”,மட்டுவில் ஞானக்குமாரனின் “சிறகு”, மு.ஆ.சுமனின் “மரணித்த மனிதம்”, வ.பிரபாஜியின் “பிரிவின் யாதார்த்தங்கள்” “பிணம் தின்னிக் கழுகு”, வேல்.சாரங்கனின் “மொழி பெயர்க்கப்பட்ட மௌனம்” வு.ளு.யோசுவாவின் “கரிக்காட்டுப் பூக்கள்” போன்ற தொகுப்புக்கள் வெளிவந்துள்ளன.

தொகுப்பு முயற்சிகள்

இவற்றை விட ஜீவநதி சஞ்சிகை பல கவிஞர்களின் கவிதைகளை “நதியில் விளையாடி”, என்ற பெயரில் தொகுத்துள்ளது. அதனது “கவியில் உறவாடி” என்ற தொகுப்பிலும், சூரியனின் ரீங்கார கவிஞர் வட்டத்தின் “காற்றலையின் கவிதைகள் தொகுப்பிலும் யாழ்ப்பாணத்துக் கவிஞர்களின் கவிதைகள் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் 2010ஆம் ஆண்டு குட்டிரேவதியால் தொகுக்கப்பட்ட “முள்ளிவாய்க்காலுக்குப் பின்”, தீபச்செல்வனால் தொகுக்கப்பட்ட “மரணத்தில் துளிர்க்கும் கனவு”, என்ற கவிதைத் தொகுப்புகளும் முக்கியமானதாகும். 2009ஆம் ஆண்டுக்குப்பின்னரான சூழ்நிலையில் யாழ்ப்பாணத்துக் கவிஞர்களின் கவிதை வெளிப்பாடுகளும் இதில் இடம்பெற்றிருக்கின்றன.

கவிதையின் பாடுபொருளும் அமைப்பும்
————————————————-
2009ஆம் ஆண்டுக்கு முன்னர் யாழ்ப்பாணத்துக் கவிதைகளில் தமிழர் தேசியம், தேசம் பற்றியதான கனவு, வன்முறை, அடக்குமுறை, அடக்குமுறைக்கெதிரான குரல், போராட்டத்துக்கான நியாயங்கள் அதிகம் இடம்பெற்றிருந்தன. சூழல் சார்ந்த அரசியல் புலம் வன்மையானதாக இருக்கும் போது அதன்பால் இழுக்கப்படும் கவிதா உணர்;வே அநேக யாழ்ப்பாணத்துக் கவிஞர்களின் கவிதைகளில் தெறித்தன.
இந்நிலையில் யாழ்ப்பாணத்துக் கவிதை முயற்சியில் ந. சத்தியபாலனின் “இப்படியாயிற்று நூற்றியோராவது தடவையும்” என்ற கவிதைத் தொகுதி முக்கியமான தொன்றாகும். 2009ஆம் ஆண்டு வெளிவந்த இத்தொகுப்பு யுத்தம் நடந்த காலப்பகுதியில் ஒவ்வொருத்தர் மனதில் ஏற்பட்ட துயரங்களும், வன்முறைகளும், வடுக்களும் பற்றிப் பேசுகின்றன. இவரின் கவிதைகள் பற்றி பா.அகிலன் குறிப்பிடுமிடத்து
“சத்தியபாலன் ‘மனவோட்டின் மென்பாகம் வெடித்து’ வடியுமொரு திரவத்தைத் தன் கிண்ணத்தில் ஏந்துகிறார். கசப்பும், சோகமும், அதன் உள்ளீடுகள். வாழ்வு பற்றிய வியப்பும் நேசமும் அவற்றில் கலந்துள்ளனவாயினும் அதன் தொனிப்பொருள் என்னவோ அடிப்படையில் துக்கம் தான்”. என இவரது கவிதைப்புலம் மென்மையான வாழ்நிலைத் தளமாக இருக்கிறது.

யுத்தத்திற்கு பின்னரான கவிதைப்புலத்தில் ஜீவநதி, கலைமுகம், மறுபாதி, நடுகை போன்ற இலக்கிய சஞ்சிகைகளில் இவரின் பதிவுகள் இடம்பெற்றிருக்கின்றன. ஈழத்துக் கவிதை உலகில் இவரது கவிதைகள் கனதியானவையாகும். இவற்றினுடைய தளம் சமூகம், மனிதம் சார்ந்த உணர்வு நிலையாகவும் இவருடைய புலப்பாட்டு நெறி அறம்சார்ந்த வாழ்வியலாகவுமே மிளிர்கின்றது எனலாம்.

ஈழத்துக் கவிதைப்புலத்தில் குறிப்பிடக் கூடிய பிறிதொருவர் கல்வயல் வே. குமாரசுவாமி. இவரது கவிதா அனுபவம் வீச்சும், வீரியமும் கொண்டவை. சமூகப் பிறழ்வுநிலைகளுக் கெதிரான கொதிப்பினை இவரது கவிதைகளில் கண்டுகொள்ளலாம். யுத்தத்திற்கு பின்னர் இவர் “முறுகல் சொற்பதம்” என்ற நெடுங்கவிதை தொகுப்பு ஒன்றினையும் வெளியிட்டுள்ளார்.

தமிழ்க் கவிதைப்பரப்பில் சொல்லாடலை முதன்மைப் படுத்தும் இவர் இறுதி யுத்தத்திற்கு பின்னர் ஞானம், ஜீவநதி சஞ்சிகைகளில் எழுதி வருகிறார். இவரது இன்றைய கவிதைகள் புதிய தொரு மாற்றத்திற்கு உட்பட்டிருக்கிறது என்றே சொல்லலாம். தான் கூற வந்த கருத்தியலை எள்ளலாகவும், கிராமிய நடையிலும் சொல்ல வல்ல இவர் இக்காலப்பகுதியில் அரசியல் சமூக நிலைகளை உருவகக் காட்சிக் குறியியலுக்கூடாகவே வெளிப்படுத்தி வருகின்றார்.

கல்வயல் குமாரசாமியினுடைய கவிதைகள் புதிய சமூக இருப்பியலையும், மானுட விடுதலையையும் அவாவி நிற்கின்றன. இன்றைய யாழ்ப்பாணத்துக் கவிதைப் புலத்தில் மரபு, நவீனம் என்ற இரண்டு தளங்களில் இயங்கின்றன.

சோ.பத்மநாதனின் கவிதை முயற்சிகளும் தொடர்ந்த வண்ணமுள்ளன. யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் மறுபாதி, கலைமுகம், ஞானம், ஜீவநதி போன்ற இலக்கிய சஞ்சிகைகளில் எழுதி வருகின்றார். 2011ம் ஆண்டில் சுவட்டெச்சம் என்ற கவிதைத் தொகுப்பினையும் வெளியிட்டுள்ளார். ஜீவநதி, தாயகம், வீணை, போன்ற இதழ்களில் எழுதி வருகிறார். யுத்தத்திற்குப் பின்னரான யாழ்ப்பாணத்துக் கவிதை முயற்சியில் இவரது பங்களிப்பும் மூத்த கவிஞர் என்ற அளவில் தொடர்ந்த வண்ணமுள்ளன.
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகைக் கூடாக தனது எழுத்துப் பணியை ஆரம்பித்து “கனவுகளின் எல்லை”, “கைகளுக்குள் சிக்காத காற்று” ஆகிய கவிதைத் தொகுப்புக்களை வெளியிட்டவர் த.ஜெயசீலன். ஓசை நுணுக்கங்களை சிறப்பாக தனது கவிதைகளில் கையாண்டு வருபவர்.
யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் கவிதைக்குள் பிரவேசித்த இவர் மக்களின் அவலங்களை யுத்தக் கொடுமைகளை, தேசிய உணர்வுகளை விடுதலை வேட்கைகளை, மனிதத்தின் மகத்துவத்தினைப் பிரதி பலிப்பனவாக இவரது கவிதைகள் அமைந்திருந்தன. தான் பாடவந்த கருத்தியலை பெருமளவு நேர்காட்சிப் பொருளுக்கூடாக பாடப்பட்டவையாக இவரது ஆரம்ப காலக்கவிதைகள் காணப்பட்டன.
இறுதி யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் இருந்து இவரது கவிதை புதிய மாற்றத்திற்கு உள்ளாகி இருப்பதை கண்டுகொள்ளலாம். இவர் ஞானம், ஜீவநதி, தாயகம்,இருக்கிறம் ஆகிய இலக்கிய சஞ்சிகைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். தமிழரின் எதிர்காலம் பற்றியதான ஒரு ஏக்க உணர்வு இவரது அநேக கவிதைகளில் காணமுடிகிறது. யுத்தத்திற்குப் பின்னரான யாழ்ப்பாணத்துக் கவிதை முயற்சியில் இவரது பங்களிப்பும் முக்கியமானதாகும்.

கவிதைக்கான தளம் சமூகச் சூழ்நிலைகளால் உருவாவது யுத்தத்திற்கு பின்னரான வல்லழுத்தம் மிக்கதான ஒரு சூழ்நிலையில் படைப்பாளி தன்னுடைய கருத்தை நேரடியாக பாடமுடியாத சூழ்நிலையில் இன்னொரு காட்சிப் படுத்தலுக்கு ஊடாக பாடுவான் இது கவிதையின் இன்னொரு தளம். இது இன்றைய பெரும்பாலான கவிதைகளில் காணப்படும் ஒரு கூறு ஆகும். இதனையே ஜெயசீலன் கவிதைகளிலும் காணலாம்.
ஜெயசீலனைத் தொடர்ந்து வருகின்ற கவிஞர்கள் புதிய சிந்தனை வீச்சுக்களையும் புதிய பாடுபொருள்களையும் தமது கவிதைகளில் புகுத்தியவர்களாக விளங்குகின்றனர். புதுக்கவிதை மரபில் இருந்து நவீன கவிதை மரபில் காணப்படுகின்ற அமைப்பியல், பின்அமைப்பியல், பின்நவீனத்துவ சிந்தனைகளை எல்லாம் உள்வாங்கியவர்களாக இக்கவிஞர்கள் விளங்குகின்றனர்.

யுத்தத்திற்குப்பின்னரான யாழ்ப்பாணத்துக் கவிதை முயற்சியில் முக்கியமான தொகுப்பு முயற்சியாக இறுதி யுத்தம் பற்றியதான அவலங்களை இக் கவிஞர்கள் ஆவணப்படுத்தி இருப்பதும், இவர்களின் பாடுபொருளில் ஏற்பட்ட மாற்றமுமே காரணம் எனலாம். யுத்தம் பற்றியதான, சிறந்த ஆவணமாக கொள்ளப்படுவது கருணாகரனின் “பலி ஆடு”, “எதுவுமல்ல எதுவும்”, சேரனின் “காடாற்று” தீபச் செல்வனின் “பதுங்கு குழியில் பிறந்த குழந்தை”, “பாழ்நகரத்தின் பொழுது”, “பெருநிலம்”;, “ஆட்களற்ற நகரத்தைத் தின்ற மிருகம்” சித்தாந்தனின் “துரத்தும் நிழல்களின் யுகம்” கு.றஜீபனின் “பேசற்க” போன்ற கவிதைத் தொகுப்புக்களே எனலாம்.

இவற்றில் கருணாகரனின் கவிதைகள் என்பது புதியதொரு நுண்மையான மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. நவீன கவிதை உலகில் முக்கியமானவராகக் கருதப்படும் கருணாகரனின் முந்தைய கவிதைகள் ஆயுதப் போராட்ட அரசியலுக்குள் அகப்பட்டு இருந்ததனால் தான் வாழ்ந்த சூழல் சார்ந்த அரசியலுக்கு எதிராக அதாவது அரசியலின் பிழைகளை எழுத முடியாமல் போனது ஆனால் தற்போது அந்த நிலமை மாறி சூழல் சார் அரசியலையும் அதன் பலம் பலவீனங்களையும் அசை போடுவதாகவும், யுத்தத்தால் ஏற்பட்ட வலிகளை உரைப்பனவாகவும் அவரது கவிதைகள் காணப்படுகின்றன. எனினும் கருணாகரனின் கவிதைகளை அவர் வாழ்ந்த கால ஆயுதப் போராட்ட அரசியல் தீர்மானித்தமையால் அவருடைய கவிதைக்கான தளம் அரசியல் பின்புலத்திலேய நன்கு கட்டமைக்கப்பட்டவையாக இருந்திருக்கின்றன. இன்றைய நிலையில் வேறொரு சூழல் சார்ந்த அரசியலுக்குள் நின்று முன்னைய அரசியலைச் சாடுபவராக அன்றியும் தற்போதைய அரசியலை புகழ்ந்துரைப்பவராக அன்றியும் இல்லாமல் நடுவுநிலமையாக நின்று சரிபிழைகளை அலசுபவராக அவரது அண்மைக்கால கவிதை முயற்சிகள் அமைந்திருக்கின்றன. ஞானம், கலைமுகம், வீணை போன்ற இலங்கைச் சஞ்சிகைகளிலும் காலச்சுவடு போன்ற இந்தியச் சஞ்சிகைகளிலும் இவர் எழுதிவருகிறார்.எனவே யுத்தத்திற்கு முன்னரான கவிதைத் தளம் அதன் பாடுபொருள் ஒரு வகையாகவும் யுத்தத்திற்கு பின்னரான கவிதைத் தளம் அதன் பாடுபொருள் இன்னொரு வகையானதாகவும் அமைந்திருப்பது கவிதையின் சுதந்திரத் தன்மையினையும் உறுதியினையுமே எடுத்துக் காட்டுகிறது.

கருணாகரனைத் தொடர்ந்து யுத்தத்திற்கு பின்னரான கவிதைப் புலத்தில் அறிமுகமானவராக தீபச் செல்வன் காணப்படுகிறார். வன்னியில் இடம் பெற்ற இறுதிப் போரின் அவலங்கள் பற்றியதாகவே இவரது கவிதைகள் அனைத்தும் அமைந்துள்ளன. யுத்தத்தில் ஏற்பட்ட அவல இழப்புக்களை மட்டுமே காட்சிப் பின்புலத்துக்கு ஊடாக காட்டி வருகின்றார். தமிழகத்து சஞ்சிகைகளான காலச்சுவடு, உயிர்மை, பூவரசி, போன்ற இதழ்களிலும் வலைப்பதிவுகளிலும், ஆங்கிலத்திலும் எழுதி வருகின்றார். இவரது கவிதைகள் பற்றி துவாரகன் குறிப்பிடுமிடத்து “போருக்குள்ளேயே வாழ்ந்த மக்களின் துயரம் தோய்ந்த வாழ்வும் வலியும் மட்டுமல்லாது சாவின் விளிம்புக்குத் தள்ளப்பட்ட மக்களின் உயிர்ப்பிச்சைக்கான ஏக்கமாகவும் தீபச்செல்வனின் கவிதைகள் அமைந்துள்ளன.” என்று குறிப்பிடுவது கவிதைக்கான சமூகத்தளத்தினை காட்டுகிறது.

எனினும் அவரது கவிதைகள் ஒரு சார்புத் தளம் கொண்டவையாக அமைந்துள்ளதுடன் செயற்கைத் தன்மை கொண்டதாகவும் காணப்படுகிறது. யுத்தத்திற்கு பின்னரான யாழ்ப்பாணத்துக் கவிதை முயற்சியில் தீபச் செல்வனின் பங்களிப்பு என்பது புதிய தளம் சார்ந்ததாக புதிய கருத்து நிலை சார்ந்ததாக அமைந்துள்ளது. கவிதைக்கான கட்டமைப்பு நவீன கவிதைக்குரிய கட்டமைப்புக்களையும் புதிய புதிய உருவகக் குறியியலையும் இவரது கவிதைகளில் காணமுடிகிறது.

கவிதை முயற்சியில் சித்தாந்தனின் பங்கும் முக்கியமானது நவீன கவிதையின் அடையாளங்களையும் ஆழங்களையும் கொண்டதான ஒரு கனதியான படைப்பாக இவரது கவிதைகள் காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவருகின்ற கலைமுகம், அம்பலம், மறுபாதி சஞ்சிகைகளிலும் இந்திய சஞ்சிகையான மணற்கேணியிலும் எழுதி வருகின்றார். “துரத்தும் நிழல்களின் யுகம்” என்பது இவரது கவிதைத் தொகுப்பாகும். 2009க்குப் பிறகு யாழ்ப்பாணத்துக் கவிதை முயற்சியில் முக்கியமானதொரு தொகுப்பாகவும் இறுதி யுத்தம் பற்றிய சிறந்ததொரு ஆவணமாகவும் இது விளங்குகின்றது.
எளிமையான சொற்கள் கொண்டு இயல்பான காட்சி நிலைப்பாடுகள் மூலம் தனது கருத்தியலை முன்வைக்கும் கவிதைகளாக இவரது கவிதைகள் விளங்குகின்றன. பொதுமைப் பட்ட படைப்பாக ஒரு கருத்தின் இரண்டு பங்கங்களையும் பார்க்குப் பார்வைகளையும் இவரது கவிதைகளில் காணலாம். நவீன கவிதைக்குரிய அலங்காரப் பண்பற்ற தன்மையும், காட்சிகளே படிமங்களாகும் தன்மையும் இவரது கவிதைகளில் காணமுடிகிறது. யுத்தத்திற்குப் பின்னரான யாழ்ப்பாணத்துக் கவிதைப்புலத்தை இன்னொரு திசைக்கு கொண்டு செல்வதற்கு இவரது கவிதைகள் முக்கியமானவையாகும்.

பதுங்குகுழி நாட்கள் என்ற கவிதைத் தொகுப்பின் மூலம் அடையாளங் காணப்பட்ட பா.அகிலன் அதிகமாக எழுதுபவர் அல்ல அவர் எழுதும் ஒவ்வொரு கவிதையும் மிகநேர்த்தியாகவும் இரத்தினச்சுருக்கமாகவும் சொல்லிவிடும் பாங்கு இவருடையது. சொற்செறிவுடன் கூடிய காட்சிக்கனதி இவரது கவிதையின் அடையாளம். அம்பலம், மறுபாதி போன்ற யாழ்ப்பாணத்து சஞ்சிகைகளிலும் மணற்கேணி போன்ற இந்திய சஞ்சிகையிலும் எழுதி வருகிறார். “சரமகவிகள்” இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு இத்தொகுப்பு புதுவிதமான அனுபவங்களை வாசகர்களுக்கு கொடுக்கிறது. இவர் கையாளும் உவமைகள் கூட புதுவிதமானவை. யாழ்ப்பாணத்துக் கவிதைப்புலத்தில் ஆழமான கவிதைகளாக இவரது கவிதைகள் காணப்படுகின்றன.

ஈழத்து நவீன கவிதைப்பரப்பில் சேரன் முக்கியமானவர். 2000ஆம் ஆண்டு “நீ இப்பொழுது இறங்கும் ஆறு” என்ற கவிதை நூலும், 2004ஆம் ஆண்டு “மீண்டும் கடலுக்கு” என்ற கவிதைத் தொகுப்புக்களை வெளியிட்டவர். யுத்தத்திற்கு பின்னரான சூழ்நிலையில் இறுதி யுத்தம் பற்றியதும், தமிழர்களின் அவல நிலைபற்றியதுமான “காடாற்று” என்ற கவிதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. 2010ஆம் ஆண்டில் இந்தியாவில் குட்டிரேவதி தொகுத்த “முள்ளிவாய்க்காலுக்குப் பின்” என்ற கவிஞர்களின் கவிதைத் தொகுப்பில் வெளிவந்த கவிதைகளும் இதில் அடங்கி உள்ளன. 2009ஆம் ஆண்டுக்குப்பின்னர் இவரது கவிதை புதிய தொரு கருத்துநிலை சார்ந்த தளத்திற்கு மாறியுள்ளது. அரசியல் ரீதியாக ஆயுதப்பேராட்ட நடப்பியலை எதிர்த்து வந்த சேரனின் 2009ஆம் ஆண்டுக்கு முற்பட்டதான படைப்புலகம் முள்ளிவாய்க்காலுக்குப் பின் ஆயுதப் போராட்ட வீழ்ச்சிக்கு இரங்குபவராகவும் இவரது கவிதைகள் காணப்படுகின்றன. இந்திய சஞ்சிகைகளான கலச்சுவடு, மணற்கேணி, போன்ற இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகின்றார். ஈழத்து சஞ்சிகையான ஜீவநதியிலும் எழுதி இருக்கின்றார். எனவே இவருடைய தளமாற்றம் என்பது தமிழரின் எதிர்கால இருப்பு மீதான அக்கறையாகவே படுகிறது. 2009ஆம் ஆண்டுக்குப் பின்னரான யாழ்ப்பாணத்துக் கவிதை முயற்சியிலும், கவிதைத் தளத்திலும் சேரனின் கவிதைகள் மிக முக்கியமானவையாகும்.


1996 காலப்பகுதியில் கவிதை உலகில் பிரவேசித்தவர் குணேஸ்வரன். இவர் துவாரகன் என்ற பெயரில் கவிதைகள் எழுதி வருகின்றார். 2008ம் ஆண்டில் வெளியிடப்பட்ட “மூச்சுக் காற்றால் நிறையும் வெளிகள்” என்ற கவிதைத் தொகுப்பின் மூலம் நன்கு அடையாளம் காணப்பட்டவராக விளங்குகிறார். கவிதைத் தளத்தில் சொற்சேர்க்கைகளும் அது இயல்பாக வந்துவிழும் ஒழுங்கமைவிலுமே நல்ல கவிதை பிறக்கமுடியும் அப்படிப்பட்ட கவிதைகள் துவாரகனுடையவை. யுத்தத்திற்குப் பின்னரான கவிதை முயற்சியிலும் எழுதிவருகின்றார். மல்லிகை, புதிய உலகம், சக்தி, தூண்டி, புதிய தரிசனம், உயிர் நிழல், கலைமுகம், ஜீவநதி, தாயகம், கலைக்கதிர் போன்ற சஞ்சிகைகளிலும் உதயன், சஞ்சீவி, நமது ஈழநாடு, தினக்குரல், சவிதைச்சாரம், தேடல் திருவுடையாள் போன்ற பத்திரிகையிலும் எழுதி இருக்கிறார். இவற்றைவிட இன்று பெரும்பாலும் இணைய சஞ்சிகைகளிலேயே அதிகம் எழுதி வருகின்றார். யுத்தம், யுத்த அவலம், தமிழர் இருப்பு நிலைதொடர்பான அலசல்களாக இவரது அண்மைய படைப்புக்கள் விளங்குகின்றன. யாழ்ப்பாணத்துக் கவிதை முயற்சியில் குறிப்பிடக்கூடியவராக விளங்குகிறார்.

மௌனத்துயில் என்ற செம்மணி படுகொலைகள் பற்றிய கவிதைத் தொகுப்பின் ஊடாக அறிமுகமானவர் கு.றஜீபன். மரபிலக்கியத் தளத்தில் இருந்து நவீன இலக்கியத்திற்கு வந்தவர். இவரது கவிதைகளில் மரபின் தாக்கம் அதிகமாக காணப்படும். யுத்தத்திற்கு பின்னரான கவிதை முயற்சியில் “பேசற்க” “நகுநயம் மறைத்தல்” என்ற இரண்டு கவிதைத் தொகுப்புக்களை வெளியிட்டுள்ளார். யுத்த அவலம் பற்றியதான இவரது பேசற்ற என்ற கவிதைத் தொகுப்பு குறிப்பிட்டு சொல்லக் கூடியது. கலைமுகம், ஜீவநதி, நீங்களும் எழுதலாம் போன்ற சஞ்சிகைகளில் எழுதி வருகிறார்.

நவீன கவிதை பற்றிய சிந்தனைப் போக்குகளுடன் கவிதை படைத்து வருபவர் பெரிய.ஜங்கரன் “கறுப்பு மழை” என்ற கவிதைத் தொகுப்பினை யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் வெளியிட்டுள்ளார். இலகுவான காட்சிப்படுத்தலுடன் எளிமையான சொற்களால் ஆன படிமங்களை இவரது கவிதைகளில் கண்டு கொள்ளலாம் யுத்தம் பற்றியதும் யுத்தத்திற்கு பின்னரான வாழ்வு பற்றியதுமான கவிதைகளை எழுதி வருகின்றார். மல்லிகை, ஞானம், கலைமுகம், ஜீவநதி, மறுபாதி, நீங்களும் எழுதலாம் போன்ற ஈழத்து சஞ்சிகைகளிலும், இந்திய சஞ்சிகைகளிலும் தொடர்நது எழுதி வருகிறார். யாழ்ப்பாணத்துக் கவிதை முயற்சியில் குறிப்பிடக் கூடியவராக விளங்குகிறார்.

“வெறிச்சோடும் மனங்கள்” “மொழிபெயர்க்கப்படாத மௌனங்கள்” என்ற கவிதைத் தொகுப்புக்கள் மூலம் அறிமுகமானவர் வெற்றி.து~;யந்தன் இளமை, போர், போரியல் வாழ்வு பற்றியதாக இவரது கவிதைகள் காணப்படுகின்றன. வளர்ந்து வரும் ஒரு இளங்கவிஞரான விளங்கும் இவர் ஜீவநதி, ஞானம் போன்ற சஞ்சிகைகளில் எழுதி வருகின்றார்.

2009ஆம் ஆண்டுக்குப் பிறகு பல இளம் எழுத்தாளர்கள் கவிதைத் துறைக்குள் நுழைந்திருக்கிறார்கள் பல கவிதைத் தொகுப்புக்களையும் வெளியிட்டிருக்கிறார்கள் எனினும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியதான கவிதைத் தொகுப்புக்களாக “ஒரு நெஞ்சத்தின் நெருடல்கள்”, “கீற்றுமதிச்சாரல்”, “கவியின் ஏக்கம்” போன்ற கவிதைத் தொகுப்புக்கள் விளங்குகின்றன. இவர்களது கவிதைப்புலம் சமூகம் சார்ந்ததாகவும், காதல் சாரர்ந்ததாகவும், யுத்த அவலம் சார்ந்தாகவும் காணப்படுகின்றன. பெரும்பாலும் நவீனகவிதைக்குரிய பண்பில் இருந்து விலகி புதுக்கவிதைக்குரிய கூறுகளையே இவர்களது கவிதைகளில் காணமுடிகிறது. சமூகச் சீரழிவுகளும் காதலுமே இவர்களது அநேக பாடுபொருளாகக் காணப்படுகிறது. யுத்தகாலத்தில் வெளிவந்த படைப்புக்கள் பெரும்பாலும் காதலுக்கும், சமூக பிறழ்வு நிலைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அது யுத்தமும் யுத்த வாழ்வு பற்றியதுமாகவே இருந்தது. ஆனால் யுத்தத்திற்குப் பின்னரான கவிதைப்புலத்தில் எழுதி வருகின்ற புதிய கவிஞர்கள் இந்த இரண்டு விடயங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து எழுதிவருகின்றார்கள்.

சஞ்சிகைகள் மூலமான இலக்கிய முயற்சிகள்
———————————————————-
2009ஆம்; ஆண்டிலிருந்து கவிதைத் துறையில் எழுத நுழைந்தவர்களுக்கு பல சஞ்சிகைகள் களம் அமைத்துக் கொடுத்துள்ளன. யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவருகின்ற கலைமுகம், தாயகம், ஜீவநதி, அம்பலம், மறுபாதி, தவிர, ஆகவே, தமிழருவி, பாதுகாவலன், வெள்ளிமலை, வீணை, வணக்கம், சிகரம்தொடு போன்ற சஞ்சிகைகளும் கொழும்பில் இருந்து வெளிவருகின்ற மல்லிகையும் கண்டியில் இருந்து வெளிவருகின்ற ஞானமும், திருகோணமலையில் இருந்து வெளிவருகின்ற நீங்களும் எழுதலாம் என்ற சஞசீகைகளும் நிறையவே புதிய எழுத்தாளர்களையும் வெளிக்கொணர்ந்துள்ளது. இவற்றில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பலர் எழுதி வருகின்றார்கள். எனவே 2009ம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாணத்துக் கவிதை முயற்சிகளில் இந்த சஞ்சீகைகளின் பங்கு முக்கியமானதாகும்.

கவிதை தொகுப்புக்களைச் செய்தவர்களும், நூல்களாக எதுவும் செய்யாமல் தொடர்ந்து கனதியான கவிதைகளை பலர் இச் சஞ்சிகைகள் மூலம் படைத்துவருகின்றார்கள். இங்கு கவிதைத் தொகுபு;புக்களை செய்யாமல் தனியே சஞ்சிகைகளில் மட்டும் எழுதி வருகின்ற படைப்பாளிகளின் படைப்புக்கள் மட்டும் நோக்கப்படுகிறது.

ஈழத்து சஞ்சிகையின் தன்கென ஒரு தனியிடத்தினை பெற்றிருப்பது மல்லிகை ஆகும் இதிலும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பல எழுத்தாளர்கள் தொடர்ந்து தமது கவிதைகளை எழுதி வருகின்றார்கள். யாழ்ப்பாணத்துக் கவிதை முயற்சியில் மல்லிகையின் பங்கு முக்கியமானதாகும். இதில் வை.சாரங்கன், பெரிய ஜங்கரன், வதிரி.சி.ரவீந்திரன், புலவர் மா.பார்வதிநாதசிவம், த.கலாமணி, க.சட்டநாதன் போன்றவர்கள் தரமான கவிதைகளை எழுதி வருகின்றார்கள் யாழ்ப்பாணத்துக் கவிதைப்புலத்தின் ஆளுமையினை மதிப்பிடுவதற்கு இவர்களின் கவிதை முயற்சியும் முக்கியமானதாகும்.

யாழ்ப்பாணத்தில் இருந்து நீண்டகாலமாக வெளிவருகின்ற இலக்கிய சஞ்சிகை கலைமுகம். அது தொடக்க காலம் முதுலே படைப்பின் தரத்தினை உயர்வாக பேணி வருவதனால் இதில் ஒரு எழுத்தாளனது படைப்பு வந்தால் அது தரமான படைப்பாக அமைவதோடு அனைவராலும் ஏற்றுக் கொள்ளும் படைப்பாகவும் விளங்குவது யாழ்ப்பாணத்து இலக்கியச் சூழலில் இன்றும் நிலவி வருகின்றது.

இந்தவகையில் 2009ஆம் ஆண்டிலிருந்து கலைமுகத்தில் பல எழுத்தாளர்கள் தமது கவிதைகளை தொடர்ந்து எழுதி வருகின்றார்கள். அவர்களில் துவாரகன், இ. ஜீவகாருண்யன், புலோலியூர் வேல்நந்தன் நிஷாங்கன், நா.இராஜமனோகரன், கலையார்வன், சடொ.விக்னேஸ், சத்திமலரவன், வ. யோகானந்தசிவம், யோகி பி.கிரு~;ணானந்தன், பொன்.சுகந்தன், செல்வா, யோ.ஜெஸ்ரின், சீனா. உதயகுமார் கடலோடி, போன்றவர்களது படைப்புக்கள் இடம்பெற்றிருக்கின்றன. இவர்கள் ஏனைய சஞ்சிகைகளிலும் எழுதி வருகின்றார்கள். சமூக பிரக்ஞையோடு எழுதிவரும் இவர்கள் யாழ்ப்பாணத்துக் கவிதைமுயற்சியில் குறிப்பிடக்கூடியவர்கள்.

இலக்கியத்தரத்தினை முதன்மைப்படுத்தி நவீன கவிதைகளை அதிகம் தாங்கிவருகின்ற ஒரு இதழாக மறுபாதி காணப்படுகிறது. 2009க்குப் பிறகு இதில் வெளிவந்த கவிதைகளும் முக்கியமானவை. அ.கேதீஸ்வரன், யோகி, தானா.விஸ்ணு, சி.ஜெயசங்கர், எஸ்போஸ், த.அஜந்தகுமார், அ.யுகசேனன் போன்றவர்கள் இக்காலப்பகுதியில் கவிதைத் தொகுப்பு முயற்சிகளில் ஈடுபடாமல் தொடர்நது கவிதைகளை எழுதி வருகின்றார்கள் வெறும் கற்பனாவாத போக்குகளில் இருந்து மாறி நடைமுறைவாழ்வியலையும் அதில் எதிர்கொள்கின்ற சவால்ககளையும் தமிழரின் இருப்பு சம்பந்தமாகவும் தமது கவிதைகளை நேர்த்தியாக முன்வைத்து வருகின்றார்கள். இவர்களது கவிதை முயற்சிகளும் யாழ்ப்பாணத்துக் கவிதைப்புலத்தினை புதியதொரு தளத்திற்கு கொண்டுசெல்கின்றன.

குறுகிய காலத்தில் பெருவளர்ச்சி கண்ட இலக்கிய சஞ்சிகையாக வடமராட்சியில் இருந்து வெளிவருகின்ற ஜீவநதி விளங்குகின்றது. குறுகிய காலத்தில் மிக அதிகமானவர்கள் தமது கவிதையை படைத்த சஞ்சிகையாகவும், பல புதிய கவிஞர்களை அறிமுகப்படுத்திய, சஞ்சிகையாகவும் இது விளங்குகின்றது. 2009ம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாணத்து கவிதைப் புலத்தினை புதியதொரு பாடுபொருளுக்கு கொண்டு செல்வதற்கு இச்சஞ்சிகையின் பங்கும் முக்கியமானது.

இதில் கூடுதலான படைப்பாளிகள் எழுதி வருகின்றனர். அவர்களில், த.அஜந்தகுமார், ந.சத்தியபாலன், சோ.பத்மநாதன், பரா.ரதீஸ், சீனா.உதயகுமார், மா.செல்வதாஸ், கு.கோபிராஜ், துவாரகன், கல்வயல் வே.குமாரசாமி, தாட்சாயணி, த.கலாமணி, வை.சாரங்கன், இ.சு.முரளிதரன், யோகி, கண.மகேஸ்வரன், சேரன், திருமாவளவன், ச.தர்சினி, ர.விஜிதரன், இ.ஜீவகாருண்யன், அ.பௌநந்தி, எஸ்.நிமலன், பொலிகையூர் சு.க.சிந்துதாசன், ச.முருகானந்தன் எஸ்.புஸ்பானந்தன், அல்வாயூர் சி.சிவநேசன், நல்லை அமிழ்தன், நீலாபாலன், வதிரி சி.ரவீந்திரன், பி.அமல்ராஜ், வல்வை மு.ஆ.சுமன், கு.தனஞ்சயன், வேலணையூர் தாஸ், சபாஜெயராசா, செ.மோகன்ராஜ் யோகேஸ், சத்தியமலரவன், வேரற்கேணியான், கமலசுதர்சன், மகிழ்னன், மிருசிவிலூர் கார்த்தி ஆகியோர்கள் எழுதி வருகின்றார்கள். படைப்பு முயற்சிகளைப் பொறுத்தவரையில் அதிகம் எழுதி வந்தாலும் அவர்களுடைய படைப்புக்கள் எல்லாம் தரமானவையாக இல்லை. குறிப்பிடக்கூடிய ஒருசிலரின் படைப்புக்களே கனதியானவையாக அமைந்துள்ளன. பாடுபொருளின் தன்மை பாடப்படும் மொழியின் தன்மை, என்பவற்றில் இவர்களின் படைப்புக்களில் சில பழைய கருப்பொருள்களையே கொண்டிருப்பதும் ஒரு குறையாகும். எனினும் யாழ்ப்பாணத்துக் கவிதை முயற்சியில் ஜீவநதி மூலம் கனதியான படைப்புக்கள் யாழ்ப்பாணத்துக் கவிதைப் புலத்தினை சிறந்த முறையில் எடுத்துக் காட்டுவனவாகவும் உள்ளது சிறப்பிற்குரியது.

புதிய சிந்தனை வடிவங்களைத்தாங்கி வெளிவந்த சஞ்சிகைகளில் அம்பலம், தவிர, ஆகவே போன்ற சஞ்சிகைகளிலும் மேற்குறிப்பிட்ட எழுத்தாளர்கள் தமது காத்திரமான படைப்புக்களை வெளியிட்டிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்துக் கவிதை முயற்சியில் இத்தகைய சஞ்சிகைகளின் பங்களிப்பு என்பது இப்பிரதேசத்தினுடைய கவிதைகளை செழுமைப்படுத்தி இருக்கின்றன.

இதனை விட யாழ்ப்பாணம், கிளிநொச்சியைச் சேர்ந்த எழுத்தாளர்கள் யாழ்ப்பாணத்திலும், ஏனைய பிரதேசங்களிலும் இருந்து வெளிவருகின்ற சஞ்சிகைகளில் தமது படைப்புக்களை வெளிக்கொணர்ந்ததுடன் இந்திய சஞ்சிகைகளான காலச்சுவடு, உயிர்மை, தீராநதி, உயிர்எழுத்து காலம், பூவரசி, மணற்கேணி போன்ற சஞ்சிகைகளில் கருணாகரன், தானா.விஸ்ணு, சித்தாந்தன், பா.அகிலன், சேரன், திருமாவளவன், ஜெயபாலன் அ.யேசுராசா தீபச்செல்வன், பொன்.காந்தன், பெரிய.ஜங்கரன், போன்றவர்கள் தமது நேர்த்தியான படைப்புக்களை வெளிக்கொணர்ந்து யாழ்ப்பாணக் கவிதைமுயற்சிகளையும் அதன் தரத்தினையும் உலகறியச் செய்திருக்கின்றார்கள்.

யாழ்ப்பாணத்தில் இருந்து நீண்டகாலமாக வெளிவருகின்ற சஞ்சிகைகளில் தாயகமும் ஒன்றாகும். தேசிய கலைஇலக்கியப் பேரவையினால் வெளியிடப்படும் இச் சஞ்சிகையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களின் கவிதைகள் இடம்பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. கல்வயல் வே.குமாரசாமி, சோ.பத்மநாதன், த.ஜெயசீலன், மட்டுவில் ஞானக்குரமன் குப்பிழான் ஜ.சண்முகம், அழ.பகீரதன், புலோலியூர் வேல்நந்தன், யாதவன், ஜெயம் ஜெகன், சீதளன், யோகி, மாவை வரோதயன், க.தணிகாசலம், n~ல்லிதாசன் போன்றவர்கள் கவிதைகளை எழுதி வருகின்றார்கள். யாழ்ப்பாணத்துக் கவிதை முயற்சியில் தாயகத்தின் பங்கு முக்கியமானதொன்றாகும்.

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவருகின்ற சஞ்சிகைகளில் அரசியல் கட்சிசார் பின்புலத்தில் இருந்து வருகின்றது “வீணை” என்ற சஞ்சிகை. சுதந்திர மாத இதழ் எனும் தொனிப் பொருளில் வெளிவருகின்ற இச்சஞ்சிகையில் இலக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஒருசில யாழ்ப்பாணத்து எழுத்தாளர்களுடைய கவிதைகள், புதியதாகவும், மீள்பிரசுரம் செய்யப்பட்டும் வருகிறது. 2009ஆம் ஆண்டுக்குப் பிறகான கவிதை வெளிப்பாடுகளுக்கு களம் அமைத்துக் கொடுக்கிறது.

2009ஆம் ஆண்டுக்குப் பிறகான யாழ்ப்பாணத்துக் கவிதைப் புலத்தில் சுன்னாகம் பொது நூலகத்தால் வெளியிடப்படும் “வெள்ளிமலை” என்ற சஞ்சிகையும் முக்கியம் பெறுகிறது. புதிய கவிஞர்கள் பலருக்கு களம் அமைத்துக் கொடுத்துவரும் இச்சஞ்சிகையில் பழைய எழுத்தாளர்களும் தமது படைப்புக்களை வெளிக்கொணர்ந்திருக்கிறார்கள். கவிதை முயற்சியை பாடசாலை மட்டத்தில் இருந்து வளர்க்கும் முகமாக பள்ளி மாணவர்களின் கவிதைகளையும் வெளியிட்டு வருகின்றது. சி.பா.ஹரிசக்தி, வாசக பாரதி, ச.நளாயினி, ஏகராஜ், இயல்வாணன், சிற்பி, எஸ்.மதி, செ.ரவிசாந், கு.றஜீபன், ப.மகேந்திரதாசன், சௌந்தரராஜன், தவா, பரணி, நற்சோணை, இலட்சுமி புத்திரன், பா.பாலச்சந்திரன், எம்.இந்திராணி, போன்றவர்களின் கவிதைகள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணத்துக் கவிதைப்புலம் என்பது கனதியானது அதற்கேற்றவாறு இச்சஞ்சிகைகளில் வெளிவருகின்ற படைப்புக்களும் கனதியானதாக அமையவேண்டும். இருப்பினும் 2009ஆம் ஆண்டுக்குப் பிறகான யாழ்ப்பாணத்துக் கவிதை முயற்சியில் வெள்ளிமலையின் பங்கும் குறிப்பிடக்கூடிது.

சஞ்சிகைகளின் கவிதை முயற்சியில் சிகரம் தொடு, தமிழருவி, நெடுந்தீவில் இருந்து வெளிவருகின்ற “சப்தம்”, அனலைதீவில் இருந்து வெளிவருகின்ற “அனலை” போன்ற சஞ்சிகைகளும், ஓரளவு கவிதைக்கான களங்களை அமைத்திருக்கின்றன. பாடசாலை மாணவர்களின் படைப்புக்கள், எழுத்தாளர்களின் படைப்புக்கள் என இரண்டு வகைகளில் இதில் கவிதை முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. எனினும் ஏனைய சஞ்சிகைகளுடன் ஒப்பிடும் பொழுது இவற்றினுடைய முயற்சி இன்னும் முழுமையடைய வேண்டும். இத்துடன் சிறுவர் ஆக்கங்களை வெளியிடுகின்ற “பாக்யா”, “வரை”, “கண்மணி”, “துளிர்” போன்ற சிறுவர் சஞ்சிகைகளும் பள்ளிமாணவர் கவிதைகளை வெளியிட்டு வருகின்றன. யுத்தத்திற்குப் பின்னரான கவிதை முயற்சியில் இவைகளும் பங்கெடுத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மதிப்பீடு
—————————–
யுத்த்திற்கு பின்னரான யாழ்ப்பாணத்துக் கவிதை முயற்சி என்பது பழையவர்களோடு பல புதியவர்களை உள்வாங்கியதாக தனது கவிதைப் புலத்தினை கனதியுறச் செய்துவருகின்றது. பத்திரிகைகள், சஞ்சிகைகள், நூலுருவாக்கங்களோடு காணப்படும் இக்கவிதை முயற்சியில் எழுதப்படுகின்ற கவிதைகள் சமூகம் பற்றியதும் போர் பற்றியதும், போரியல் வாழ்வு பற்றியதும், இறுதி யுத்தம் பற்றியதுமான கருத்துநிலைகளைக் கொண்டு விளங்குகின்றது.

பெரும்பாலான கவிதைகள் போரும் வாழ்வும் என்ற தொனிப்பொருளில் இறுதி யுத்தத்திற்கு பின்னரான நிலையில் போராட்டம் பற்றிய சுயமதிப்பீட்டு நிலையில் இருந்து புதிய தொரு தளமாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது. யுத்தத்திற்கு பின்னரான தமிழரின் வாழ்நிலை அதில் ஏற்படுகின்ற அவலக்காட்சிகள், இழப்புக்கள் போன்றவற்றை சித்தரிக்கும் பாங்கு காணப்படுகின்றது. நவீன கவிதைக்குரிய அம்சங்களுடன் எழுதி வரும் படைப்பாளிகளில் முக்கியமானவர்களாக கல்வயல் வே.குமாரசாமி, சோ.பத்மநாதன், த.ஜெயசீலன், அ.யேசுராசா கருணாகரன், சித்தாந்தன், பா.அகிலன், தானா.விஸ்ணு தீபச்செல்வன், கு.றஜீபன், பெரி.ஜங்கரன், துவாரகன், த.அஜந்தகுமார், யோகி, சத்தியபாலன், வை.சாரங்கன்,க.சட்டநாதன், புலோலியூர்வேல்நந்தன், போன்றவர்களின் கவிதைகள் குறிப்பிடக்கூடியவை யாழ்ப்பாணத்துக் கவிதைப் புலத்தினை இன்னொரு தளத்திற்கு எடுத்துச் செல்லுபவையாக இவர்களது கவிதை முறச்சிகள் காணப்படுகின்றன. சமூகத்தின் பொதுநிலைப் பட்ட பொருள்சார்ந்த நிலைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற இவர்களது கவிதைகள். தமிழர்களின் இருப்புப்பற்றியதான பொதுமைப்பட்ட கருத்தியலை யாழ்ப்பாணத்தின் தற்போதைய கவிதைப் புலம் கொண்டிருக்கிறது.

௦௦௦௦௦௦

 

65 Comments

  1. யுத்தம் பற்றி அதிகம் பேசாத என்னையும்சேர்த்துள்ளார்.பட்டியல்தயாரிப்பாக
    கொள்ளலாம்.

Post a Comment