Home » இதழ் 03 » கொலம்பஸின் வரைபடங்கள்-யோ.கர்ணன்

 

கொலம்பஸின் வரைபடங்கள்-யோ.கர்ணன்

 

என்
சனங்கள் பாவம்
முன்னொரு போது
போரினின்று
நான் வெளியேறுகையில்
ஒன்பதாம் திசையில்
வழிகாட்டி ஒளிர்ந்த நட்சத்திரத்தை
அவர்களுடைய வானத்திலேயும்
ஒளிரச்செய்யும்
என் ஆண்டவரே..
– த.அகிலன்-

– 01-
வுஸ்திரேலியா நோக்கி சென்ற அகதிகள் படகொன்று கடந்த மாதம் விபத்துக்குள்ளாகியிருந்தது. கிட்டத்தட்ட நூறு பேரளவில் அதில் மரணமாகியிருக்கக்கூடும். இது இந்தப்பகுதியில் நடந்த முதல் விபத்தல்ல. கடைசி விபத்துமல்ல -குறிப்பாக அகதிகளையேற்றிக் கொண்டு சென்ற கப்பல்களிற்கு. உண்மையில் அவற்றை கப்பல்கள் என்றும் சொல்ல முடியாது, படகுகள்.
துரதிஸ்டவசமான உண்மையென்னவெனில் யுத்தபூமிகளிலிருந்து தப்பிப்பதற்கு பலரிடமுமுள்ள முதல் தெரிவாகவும் வாய்ப்பாகவுமுள்ளவை இது மாதிரியான கடற்பயணங்கள்தான். தினம் தினம் இறந்து கொண்டிருப்பதைவிடவும், தெளிவாக ஒருமுறை இறந்துவிடுவதற்கான சந்தர்ப்பங்களிலிருந்தாலும் தப்பிப்பதற்காக சமுத்திரங்களில் இறங்கிவிடுகிறார்கள். அல்லது பிள்ளைகளை வழியனுப்பிவிடுகிறார்கள்.

சமுத்திரங்கள் எல்லோரையும் ஒரே மாதிரி வரவேற்பதுமில்லை. உபசரிப்பதுமில்லை.
உலகின் எந்த பகுதிக்கும் செல்லவல்ல படகோட்டிகளும். வழிகாட்டிகளுமிருக்கிறார்கள். பயணங்களை இலகுவாக்கவல்ல தொழில்நுட்பசாதனங்களுமுண்டு. ஆனாலும் சிறிய படகுகளில் நீண்ட இலக்குகளை நோக்கி இரகசியப் பயணங்களை மேற்கொள்பவர்களின் பயணங்கள் பெரும்பாலும் அதிர்ஸ்டத்தையே நம்பியது. அதன் பின்னர் படகோட்டிகளின் திறமை. பின்னர்தான் மிகுதியெல்லாம். அதனால்தான் எல்லாப் பயணவழிகளிலும் யாராவதொரு துரதிஸ்சாலியாவது கடலில் மூழ்கிவிடுகிறான்.

கடல்ப்பயணங்களிற்கிருக்கும் பொதுவான துயரவிதியிது. வரலாற்றில் பதியப்பட்டிருக்கும் முதல் கடல்ப்பயணங்களிலேயே இந்தத் துயர விதியும் பதியப்பட்டிருக்கிறது. வெற்றிகளின் பின்னால் மறைந்து போகும் துயரமிது.

பிரசித்தி பெற்ற கடலோடியான கொலம்பஸ் தன் பயணங்களின் வெற்றிக்காக எண்ணற்ற மனித உயிர்களை ஈடு வைத்திருக்கிறார். வரலாற்றில் அவர்கள் யாரதும் பெயர்களுமில்லை. கொலம்பஸ் இருக்கிறார். தொடக்கமும் முடிவுமற்றதாக கருதப்பட்ட கடலில் துணிச்சலுடன் அவர் இறங்கியதால்தான் அவர் நினைவுகூரப்படுகிறார். அது ஒரு சாகசம்தான்.

அப்பொழுது உலகத்தின் வடிவம் பற்றிய சர்ச்சையிருந்தது. பெரும்பாலானவர்கள் தட்டையான உலகத்தையே கற்பனை செய்து வைத்திருந்தனர். கடலோடிகளிற்கு தெளிவிருந்ததாக சொல்லப்படுகிறது. அவர் வரைபடம் கீறுபவராக இருந்த அனுபவத்தால் பயணங்களிற்கான வரைபடங்களைத் தயாரித்து வெற்றியும் பெற்றுவிட்டார். உண்மையில் அவை பிழையான வரைபடங்கள். அளவுப் பிரமாணங்களிலும் இட அமைவுகளிலும் ஏராளம் தவறுகளைக் கொண்டவை. ஆனாலும் அந்த வரைபடங்களிற்கு கொலம்பஸின் உயிரைக் காப்பற்றும் வல்லமையிருந்தன. இந்தத் தவறுகள் எதுவுமேயில்லாத சில வரைபடங்கள் வரைந்தவரையும் உபயோகித்தவரையும் பலிவாங்கியிருக்கிறது. கொலம்பஸ் ஒரு அதிஸ்டக்காரன்தான். எல்லோருக்குமிந்த அதிஸ்டம் வாய்ப்பதில்லை.

யுத்தம் எண்ணற்ற மனிதர்களை கடலிற்குள் இறக்குகிறது. உயிர்வாழ்வதற்காக உயிராபத்தான கடல்ப்பயணங்களிற்காக கடலிற்குள் இறங்குபவர்களில் அதிர்ஸ்டசாலிகள் கரையேறுகிறார்கள். துரதிர்ஸ்டசாலிகள் கரையேறுவதேயில்லை. கடலிற்குள் இறங்குபவர்களெல்லோரிடமும் குறைந்தபட்சம் ஒரு மன வரைபடமாவதிருந்திருக்குமென்றே நினைக்கிறேன். ஆயினும் எல்லோரும் கொலம்பசாகிவிடுவதில்லை.
கொலம்பஸ் வரைந்த வரைபடமொன்றைப் போல நானுமொரு வரைபடம் வரைந்திருந்தேன். கொலம்பஸ் கடலிற்கு மட்டுமே வரைந்தார். அதிஸ்டக்காரன். நான் தரைக்கும் சேர்த்து வரைய வேண்டியிருந்தது. நாங்கள் வாழ்ந்த சூழல் அப்படி.

நோர்வேயின் அனுசரணையுடனான சமாதானத்தின் இறுதிநாட்களில் யுத்தத்திற்கான ஆயத்தங்களை இரண்டு தரப்பும் மும்முரமாக செய்து கொண்டிருந்தன. ஒப்பீட்டளவில் ஆளணி குறைவான புலிகள் ,கட்டாய ஆட்சேர்ப்பை ஆரம்பித்தார்கள். இந்த ஒன்றுதான் எல்லா அடிப்படைகளையும் ஆட்டம்காண வைத்தது.
எல்லா வீடுகளிலுமிருந்தும் கட்டாயமாக ஒவ்வொருவர் இல்லாமல்ப் போனார்கள். இதனர்த்தம்- ஒன்றில் படையணிகளிற்கு பிடித்துச் செல்லப்பட்டார்கள். அல்லது அதிலிருந்து தப்பிப்பதற்கான ஏதாவதொரு முயற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். அந்த நாட்கள் மிகவும் துயரமானவை. வாழ்க்கை பற்றிய எல்லோரது கற்பனைகளும் அர்த்தமற்றிருந்தன. வாழ்வுபற்றிய கற்பனைகளும் யதார்த்தங்களும் ஒன்றுக்கொன்று எதிர்த்திசையில் நின்ற நாட்கள் அவை.

தேவதைகளின் கதைகள் மிகத்துயரமாகயிருந்தது. கதாநாயகனிற்கும் வில்லனிற்குமான பேதங்களையறிவதற்கும் அவர்களிற்கு அவகாசமிருக்கவில்லை. சுயம்வரங்களிற்கும் பொழுதிருக்கவில்லை. யானைகள்கூட மணக்கோலங்கொண்டன. இரகசியக்கனவுகளை விதைத்தவர்களெல்லோரும்; திடீர் திடீரென காணாமல் போனார்கள். சிலநாட்களில் யார் யாரினதோ மோட்டார்சைக்கிள்களின் பின்னால் தலைகளை கவிழ்ந்தபடி உட்கார்ந்தபடி உலகின் முன் வெளிப்பட்டனர். வாழ்க்கை அவர்களைக் குரூரமாகப் பழிவாங்கியது.
ஆட்சேர்ப்பிலிருந்து தப்பிக்க பெண்களின் முன்னிருந்த சுலபமான தெரிவது. ஆண்கள் காடுகளிலும் பதுங்குகுழிகளிலும் ஒளிந்திருந்தனர். யாரும் வன்னியைவிட்டு வெளியேற முடியாது. மிக இறுக்கமான பாஸ்நடைமுறையிருந்தது.

ஓருநாள் காற்றுவாக்கில் கதையொன்று வந்தது. நண்பனொரவன் இந்தியா போய்விட்டதாக. விசாரித்ததில் படகுப்பயணமென்று தெரிந்தது. அவன்தான் முதல் சாகசக்காரன். எப்படியோ கிளிநொச்சியிலிருந்து இந்தியாவிற்கான வரைபடமொன்றை வரையத் தெரிந்திருந்தான்.

இன்னொரு நண்பனொருவனின் காதலி கிளிநொச்சியிலிருந்தாள். ஒரு நாள் பதறியடித்தபடி வந்தான். அவளது குடும்பத்தையே காணவில்லையாம். இரவு அந்த வீட்டிற்குச் சென்றோம். வீட்டில் யாருமில்லை. மர்மமும் அச்சமும் மட்டும் இருளுடன் இறைந்து கிடந்தது. ஒரு வாரத்தின் பின்னர் ஆண்கள் தவிர்ந்த மிகுதியானவர்கள் திரும்பி வந்தார்கள். நாங்கள் போனோம். மரணவீட்டைப் போல தாயும் அவளும் கதறியழுதனர்.
அவர்கள் படகில் இந்தியாவிற்குத் தப்பிப்போக முயன்றனராம். வழியில் இயக்கம் பிடித்துவிட்டது. தகப்பனை பங்கர் வெட்டவும் மகனை இயக்கத்திற்கும் எடுத்துக் கொண்டு பெண்களை விடுதலை செய்திருந்தனர். எல்லோரும் பேசாமலிருந்தோம். பேசுவதற்கு விடயமிருக்கவில்லை. நம்பிக்கைத்துரோகமும் வாழ்வின் மீதான பிடிப்பும் எதிரெதிர் திசையில் நின்றன. அன்றுதான் நாங்கள் அந்த வீட்டிற்கு கடைசியாகச் சென்றது. அவள் கதறியழுதாள். அவன் திரும்பி வரவேயில்லை.

இதற்குப்பின்னர் திடீர் திடீரென பலர் காணாமல் போயினர். சிலர் கண்ணீருடன் ஆண்களைப்பறி கொடுத்துவிட்டுத் திரும்பி வந்தனர். பலர் கரையேறினர் .மன்னாரின் கரையோரக்கிராமங்களான விடத்தல்தீவு, தேவன்பிட்டி, மூன்றாம்பிட்டி, கிராஞ்சி, வலைப்பாடு கிராமங்களிலிருந்து இந்தியாவிற்கும்,யாழ்ப்பாணம் மன்னார் பிரதேசங்களிற்கும் படகுகள் புறப்பட்டுக் கொண்டிருந்தன. ஒரு இலட்சம் தொடக்கம் பத்து பதினைந்து இலட்சங்கள் வரையில் பேரங்கள் பேசப்பட்டன. அவரவர் அளவில் சிறகுகளை விரித்தனர்.
கிட்டத்தட்ட கச்சதீவு யாத்திரை செல்பவர்கள் போல எண்ணுக்கணக்கற்றவர்கள் படகுகளில் தப்பியோடத் தொடங்கிய பின்னர் புலிகள் சில இறுக்கமான நடவடிக்கைகளை எடுத்தனர். தப்பிப்பதற்கு தோதான மன்னார் உள்ளிட்ட பகுதிகளைக் கொண்ட வன்னி மேற்கிற்கு யாரும் இலகுவில் பயணம் செய்ய முடியாத நிலையை ஏற்படுத்தினார்கள். முக்கியமாக பல்லவராயன்கட்டிற்கு அப்பால் ஒரு சோதனைச்சாவடி ஏற்படுத்தப்பட்டது. பயணஅனுமதிச் சீட்டு நடைமுறைக்கு வந்தது.

கரையோரங்களெல்லாம் முகவர்கள் வைக்கப்பட்டார்கள். காவலரண்கள் நிறுவப்பட்டன. கடலில் ரோந்து நடவடிக்கைகளிருந்தன. படகுகளிற்கும் அனுமதிப் பத்திர நடைமுறைகள் வந்தன.
இதனைவிட நூதனமான இன்னொரு முறையையும் கையாண்டார்கள். அது புலிகளின் ஸ்டைல். பிரச்சனையை முளையிலேயே கிள்ளியெறிவது நோக்கமாக இருந்திருக்கலாம்.
வன்னியெங்கும் முகவர்கள் இறக்கப்பட்டார்கள். தப்பிக்கும் எண்ணம் மனதிலிருப்பவர்கள், சிறு சஞ்சலத்துடனிருப்பவர்கள், ஏன் சிவனேயென இந்த எண்ணமில்லாததிருப்பவர்கள் என யாரையும் மிச்சம் விடாமல் இரகசியமாக தொடர்பு கொண்டார்கள். இந்தியாவிற்கு ஆட்களை அனுப்புபவர்கள் என தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு அந்த வீடுகளிற்குச் சென்று, குழையடித்து குழையடித்து எப்படியோ அவர்களைக் கிளப்பி விடுவார்கள். கூட்டிச் சென்று படகில் ஏற்றி, கடலில் ஒரு வட்டமடித்து‘இந்தியா வந்துவிட்டது இறங்கு’ என அதேயிடத்தில் இறக்கி கைது செய்தனர். அவர்கள் கொடுத்த பணத்தில் ஒரு பங்கு குழையடித்துக் கிளப்பிய முகவரிற்கு செல்லும்.

ஒரு கட்டத்தில் விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறையின் வேலை இந்தியா செல்பவர்களை பிடிப்பது என்பது மட்டுமேயென்றாகிவிட்டது. இதற்குள் இன்னொரு புதினமும் நடந்தது.

இங்கே பெயர் குறிப்பிட முடியாத புலிகளின் பிரிவொன்று ஆட்களை இந்தியாவிற்கு அனுப்பும் அலுவலையும் பார்க்க தொடங்கியது. அது கொஞ்சம் பெரிய பார்ட்டி. உங்களிடம் ஒரு நல்ல நிலையிலான கல்வீடு இருக்குமெனில் அதனை அவர்களிடம் கொடுப்பீர்களெனில் உங்கள் குடும்பத்துடன் நீங்கள் இந்தியாவிற்கு செல்லலாம். அல்லது பத்து இலட்சம்ரூபா பணம். ஆட்பிடிக்க வரும் அரசியல்த்துறைகாரிடம் ‘இது நம்ம ஆட்கள். கை வைக்க வேண்டாம்’ என்ற தகவலையும் அவர்களே கொடுப்பார்கள். தவறி கை வைத்தால், ஆளை மீட்டெடுத்தும் தருவார்கள். இதில் துயரம்மிக்க வேடிக்கையென்னவெனில், 2009 ஜனவரி மாதம் முள்ளிவாய்க்காலிலிருந்த வீடுகளைக் கொடுத்துவிட்டும் குடும்பத்துடன் தப்பித்தவர்களிருக்கிறார்கள்.
கிளிநொச்சியிலிருந்த காலப்பகுதியில் ஒரு திடீர் நண்பன் எனக்கும் அறிமுகமாகினான். என்ன கதைத்தாலும் கீழ்க்குரலிலேயே கதைத்தான். பழகிவிட்டது போல. நகரில் பகிரங்கமாகத் திரிய அஞ்சினான். இரவுகளிலேயே என்னைத் தேடி வந்தான். எல்லாவற்றிற்கும் காரணமிருந்ததாம். அவன் தன்னையொரு பிரபலமான ‘ஆட்கடத்தல்காரன்’ என்றான். தனது பெயர் புலனாய்வுத்துறைக்காரர்களிற்கு தெரியுமாம். ஆதனால்த்தான் அவ்வளவு முன்னெச்சரிக்கையாம். சரி. அவனது புண்ணியத்தில் நானும் வன்னியைவிட்டு வெளியேறுவதென தீர்மானித்தேன்.

இதற்குள் புதுக்குடியிருப்பில் ஒரு பிரபலமான எண்சாஸ்திரக்காரனிருப்பதாக நண்பர்கள் கதைத்துக் கொண்டிருந்தார்கள். அந்த நாட்களில் பிரபாகரனிற்கு அடுத்ததாக அவன்தான் வன்னியில் பேசப்பட்டான். அவனது நாக்கு ஆண்டவரால் ஆசிர்வதிக்கப்பட்டதென சனங்கள் நம்பினார்கள். அவனது வாடிக்கையாளர்களில் கணிசமான போராளிகள் இருந்தனர். பின்னர்தான் தெரியும்- சிப்பாய்கள் மட்டுமல்ல. லொக்கா மட்டத்தில் அவனது வாக்கு எடுபட்டது. இயக்கத்தின் உயர்மட்டத்தினர் எல்லோரது கைரேகையும் அவனது மூளையில் பதிந்திருந்தது.

எனக்கு அறிமுகமான ஒருவன் திருமணத்திற்கு முன்னர் அவனிடம் சென்றுள்ளான். அந்த கலியாணத்தை நிறுத்தும்படி சாத்திரி சொல்லியுள்ளான். மீறிக் கட்டினால் பதின்னாலு நாளின் பின்னர் அந்த உறவு நீடிக்காது எனச் சொல்லியுள்ளான். குறுகியகாலக் காதல் திருமணம் வரை வந்துவிட்டது. அவன் விடவில்லை. கலியாணம் செய்து விட்டான். பதினோராம்நாள் இரவு தூங்கிவிட்டு,பன்னிரண்டாம்நாள் காலை முழித்தால் பெட்டையில்லை. ‘என்னை மன்னியுங்கள் அத்தான்’ என்ற மாதிரி எழுதப்பட்ட கடிதமொன்றுதானிருந்தது. இது நடந்து ஒரு வாரத்தின் பின் அவனை சந்தித்தேன். அதிர்ச்சி கலையாதவனாக சொன்னான் ‘சாத்திரி ஒரு கடவுள்தான்’ என.

‘ரிஸ்க்’கான காரியங்கள் செய்யமுன் சாத்திரியிடம் போய்வருவது நல்லதென நண்பனொருவன் வற்புறுத்தி அழைத்துச் சென்றான். பிறந்த ஆண்டு, மாதம், திகதியைக் கேட்டுவிட்டு கொஞ்ச நேரம் யோசித்தான். பிறகு ‘நீர் கனக்க பறக்க ஆசைப்படுற ஆள் என்ன’ என்றான். நான் சிரித்தன். ‘எல்லாம் பிசகிலயிருக்கு. நீர் பறக்காட்டிலும் அது உம்மை பறக்க வைக்கும். வலு கவனம். குறிப்பாக நவம்பர் பதின்னாலாம் திகதி தொடக்கம் இருபத்தாறாம் திகதி வரை. இந்த நாளில இருக்கிற இடத்திலயிருந்து நாற்பது கிலோமீற்றருக்கு மேல பயணம் போகாதையும். போனால் இரண்டிலொன்று நடக்கும். ஒன்று விபத்து. அல்லது சிறை. கவனம்’. (பிறகொருநாள்(2008.ஓகஸ்ட் நடுப்பகுதி) நாட்டுசிற்றிவேசன் பற்றி அவனுடன் கதைத்துக் கொண்டிருந்தேன். உதட்டைப்பிதுக்கிவிட்டு சொன்னார் ‘ஒரு சர்வதேச தலையீடு வரும். அதை சரியாய் பயன்படுத்தாவிட்டால் 2009 ஏப்ரல் கடைசியில இந்த இயக்கம் முழுவதுமாக அழிந்துவிடும்’ என)
இதெதுவும் என்னைத் தடுக்கப் போதுமானவையல்ல. நான் பறப்பதில் உறுதியாக இருந்தேன். ஆனால் மிகுந்த எச்சரிக்கையாகப் பறக்க வேண்டும். கடற்கரைக்குப் போய் பாதுகாப்பாகப் புறப்படுவது இருக்கட்டும். அதற்கு முன் யாருக்கும் சந்தேகம் வராமல், சோதனைச்சாவடிகளைக் கடந்து வெளியேற வேண்டும். அதற்கான பாதைகளைக் கண்டறிய வேண்டும். பல்லவராயன்கட்டிற்கு அப்பால் ஒரு சோதனைச்சாவடி. அதனைக் கடந்தால் எங்கும் புலனாய்வுத்துறைகாரர். சந்தேகத்திற்கிடமானவர்களை விசாரிக்கவும் கைது செய்யவும் அவர்களால் முடியும். தவிரவும், ஆழஊடுருவும் படையணி அந்தப் பகுதிகளை குத்தகைக்கு எடுத்திருந்தது. தினம் ஒரு கிளைமோர் வெடிக்க வைப்பதை தமது அன்றாடப் பொழுதுபோக்காக அவர்கள் வைத்திருந்தனர். அதனால் அது சனநடமாட்டம் அற்ற பாதையாகிவிட்டது. ஒரு பொடியன் மோட்டார்சைக்கிளில் சென்றால் கட்டாயம் அமத்துவான். இதிலிருந்தெல்லாம் தப்ப நான் திட்டங்கள் போட்டேன். முக்கியமாக அங்கு செல்ல ஒரு வரைபடத்தை மனதிற்குள்ளேயே வரைந்தேன். கடற்கரைக்கு செல்ல பல்லவராயன்கட்டு சோதனைச்சாவடி வீதியைவிட்டால் வேறு பிரதான வழிகளிருக்கவில்லை. ஆனால் ஒரு காட்டுப்பாதையை கண்டடைந்தேன். அந்தப்பாதையினால் முழங்காவில் வரை பாதுகாப்பாக செல்ல முடியும். அதற்கப்பாலான புலனாய்வுத்துறையினரை சமாளிக்க சில ஏற்பாடுகள்.

ஆனால் காட்டுப்பாதையில் செல்லும் பொழுது ஆழஊடுருவும் படையணியினரை எதிர்கொள்ள வேண்டிய ஆபத்திருந்தது. அது இரகசிய நடவடிக்கைப் பிரிவு. தம்மை யாரும் கண்டால் கண்டவர்களை உயிருடன் விடமாட்டார்கள். ஆனாலும் சின்ன ரிஸ்க்காவது எடுக்காமல் வெற்றிகளைப் பெற முடியுமா என்ன? அந்த வழிகளினூடான எனது வரைபடம் மிகத்துல்லியமாக இருந்தது. சில மீற்றர்க் கணக்கில் பிசகலாமேயொழிய வேறு பிழைகள் பிடிக்கவே முடியாத ஏற்பாடு. ஒரு தேர்ந்த வரைபடம் வரைபவன் வரைந்த வரைபடம்.
நவம்பர் பதினெட்டு. பிரயாணத்திற்கான நாள் குறிக்கப்பட்டாயிற்று. முழங்காவிலில் அந்த இரகசிய முகவரை சந்திப்பதாக ஏற்பாடு. பயணம் ஆரம்பமானது. மோட்டார்சைக்கிளில் கிலோமீற்றர்க் கணக்கை மிக அவதானமாகக் கவனித்துக் கொண்டு சென்றேன். ஏற்னவே திட்டமிட்ட பாதைகளினாலேயே பயணம் சென்றேன். ஒரு பிரச்சனையுமில்லை. மிக வெற்றிகரமான முதற்கட்டப்பயணம். சரியான வரைபடம். எனது வழிகாட்டியை முழங்காவிலில் ஏற்றிக் கொண்டு சென்றேன். அவன் நல்ல வெறியில் இருந்தான். சந்தோசத்திற்கு குடிக்குமாறு என்னையும் வற்புறுத்தினான். நான் மறுத்துவிட்டேன். காரியத்தில் கண்ணாயிருக்க வேண்டும்.

வெள்ளாங்குளம் சந்தி கடக்க, மோட்டார்சைக்கிள் நூறு கிலோமீற்றர்களை கடந்து பயணித்துவிட்டதை காட்டியது. அது வெட்டைவெளியான பிரதேசம். நல்ல காற்றடித்தது. உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. சாத்திரியை நினைக்க சிரிப்புச் சிரிப்பாக வந்தது. பின்னாலிருந்தவனிடம் சொன்னேன். பின்பக்கமாக மோட்டார்சைக்கிளிலிருந்து எழுந்து இரண்டு கைகளையும் விரித்தபடி நின்று சத்தமாக சிரித்தான். பின்னர் காறித்துப்பினான். நான் எதுவும் கேட்கவில்லை. அனேகமாக சாத்திரியின் முகத்தில்தான் துப்பியிருப்பான் என நினைத்தேன்.

பாலியாற்றங்கரையிலுள்ள வீடொன்றில் இரவுவரை காத்திருந்தோம். ஏற்கனவே என்னைப்போல இன்னும் மூவர் காத்திருந்தனர். வீட்டில் புதிய மனிதர்கள் தங்கியிருக்கிறார்கள் என்ற தகவலெதுவும் அயலிலிருப்பவர்களிற்குத் தெரியக்கூடாது. ஏனெனில் அந்தப்பகுதியிலிருந்தவர்களில் கணிசமானவர்கள் முகவர்களாகவோ முகவர்களுடன் தொடர்புடையவர்களாகவோயிருந்தனர். ஆட்களைப் பிடித்துக் கொடுப்பவர்களிற்கு உரிய சன்மானமும் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது. அறையொன்றுக்குள் படுத்திருந்தோம். இடையிடையே கீழ்க்குரலில் கதைத்தும் கொண்டோம். அப்பொழுதெல்லாம் இதுவரை தான் எத்தனை சாகசம் பண்ணி ஆட்களை அனுப்பினேன் என காதுக்குள் கிசுகிசுத்துக் கொண்டிருந்தான். அப்பொழுதெல்லாம் யாராலும் வெல்லப்பட முடியாத ஒரு கடலோடி போன்றதான மிதப்பொன்று அவனது கண்களில் மின்னிக் கொண்டிருந்தது. இரவு பயணம் ஆரம்பம். இதற்கான சரியான வரைபடமெதுவும் என்னிடமில்லை. அதிலிருந்து கடற்கரைக்கு செல்வது, படகில் ஏறுவது, நேராகப் போய் இந்தியாவில் இறங்குவது என்பது மாதிரியான மேலோட்டமான ஒரு வரைபடத்தை வைத்திருந்தேன். கொலம்பஸ் கடற்பயணங்களை ஆரம்பிக்கையில் வைத்திருந்ததைப் போல அது அவ்வளவு மோசமான வரைபடமல்லத்தான்.

நேராகச் சென்றால் நாற்பது கடல்மைல்களிற்குள் இந்தியா உள்ளது. தவிரவும், ஒரு திறமையான வழிகாட்டியைக் கண்டடைவதே மிகச்சரியான வரைபடமொன்றை வரைவதற்கு ஒப்பானதுதானே.
முன்னிரவில் மூன்றாம்பிட்டிக்கு அப்பாலான பற்றைக்குள் சென்றோம். அதனை இப்படி ஒற்றை வார்த்தையில் சொல்ல முடியாது. ஏதோ களவிற்கோ, மற்றதுக்கோ போவபவர்களைப் போல இரவேறிய பின்னர் பதுங்கிப்பதுங்கி வீதிக்கரையினால் போனோம். ஏதும் அசுமாத்தம் தெரிந்தால் காட்டிற்குள் பாய்ந்துவிட வேணும். இரண்டொரு முறை சத்தம்கேட்டு காட்டிற்குள் இறங்கினோம். அப்பொழுதெல்லாம் வெறிகாரர்கள்தான் எதிர்ப்பட்டார்கள். கொஞ்சத்தூரம் நடந்ததும், வீதியிலிருந்து இறங்கி கடலைநோக்கி பற்றைகளினூடாக நடந்தோம். வெளிச்சம் பாவிக்கக் கூடாது. கடற்கரை முழுவதும் காவலரண் அமைத்து கண்காணிப்புப் படைகளிலிருந்தன. (பிரதேச மக்களைக் கொண்டு ஏற்படுத்தப்பட்ட படையது) ஆட்கள் வழிமாறாமலிருப்பதற்காக,முன்னால் சென்று கொண்டிருந்த ‘வெல்லப்பட முடியாத சாகசக்காரன்’ இடையிடையே பறவைகளைப் போன்ற ஒரு சத்தமெழுப்பினான். இருளுக்குள் சிரமப்பட்டுக் கொண்டிருந்த பொழுது அந்தச் சத்தம் ஒரு நூலைப் போலுதவியது. பிடித்து முன்னேற.

ஆளுயரக் கன்னாப்பற்றைகள். நன்றாக ஒளிந்து கொள்ளலாம். வேறு இடத்தில்; இருந்து இன்னும் இருவரும் வந்தனர். இரவில் முகங்களும் தெரியவில்லை. யாரும் எதுவும் பேசவுமில்லை. பேச்சுக்குரல்கள் கேட்டால் விசயம் தெரிந்து யாரும் வந்து விடுவார்கள். இந்தச் சூழல், கிட்டத்தட்ட இராணுவமுகாம்களிற்குள்ளிருக்கும் வேவுப்புலிகளது நிலைதான். வானத்தைப்பார்த்தபடி மல்லாந்து படுத்திருந்தோம். நூறு மீற்றரில் கடலிருந்தது. அலையடிக்கும் ஓசைகளைத் தவிர வேறெந்த ஓசையுமிருக்கவில்லை. சில இயந்திரப்படகுகள் ஓடிக் கொண்டிருந்தன. அந்தச் சத்தங்கள் மகிழ்ச்சியளிப்பனவையாகவும் அச்சமூட்டுபவனவையாகவும் மாறிமாறி விசித்திரமான தருணமொன்றை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. இந்த இரைச்சலுக்குக் காரணமான படகுகளில் ஏதோ ஒன்று நம்மை நோக்கி வந்து கொண்டிருப்பதான பிரமையிருந்து கொண்டிருந்தது. இருளுக்குள் எதுவும் தெரியவுமில்லை.

நாங்கள் படகேற வேண்டிய இடத்திற்கு நேராக ஒளிந்திருந்தோம். படகேறுமிடத்திற்கு இடது புறமாக ஐம்பது மீற்றர்களில் ஒரு காவலரணிருந்தது. ஒரு சிறுபுள்ளியாக சிவந்த ஒளி கனன்று கொண்டிருந்தது. காவல்காரன் புகைத்துக் கொண்டிருக்கலாம். அவன் சென்ரியை மாற்ற சரியாக ஒன்று இருபதுக்கு எழுந்து செல்வான். அடுத்த பத்து நிமிடத்தில் புதியவன் வருவான். இடைப்பட்ட பத்து நிமிடங்களும்தான் நமக்கான நேரம். மீன்பிடிப்படகைப் போல ஒரு படகு கரைக்குக் கிட்டவாக வலித்தபடி போகும். ஓடிச் சென்று ஏற வேண்டும். சாகசக்காரன் நன்றாக விளங்கப்படுத்தியிருந்தான்.

விரல்களினால் கடிகாரத்தைப் பொத்தி வெளிச்சம் வெளியில் தெரியாதபடி அடிக்கடி நேரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு மணியைக்கடந்ததும் ‘வெல்லப்பட முடியாத சாகசக்காரன்’ ஊர்ந்து ஊர்ந்து ஒவ்வொருரையும் தயார்படுத்தினான். யாராவது நித்திரை கொண்டு சொதப்பிவிடக்கூடாது. இவ்வளவு தூரம் வந்துவிட்டு திரும்பிச் செல்லவே முடியாது. படகேறித்தான் தீர வேண்டும். பாதுகாப்பாகத் திரும்பும் வழியற்ற பாதையிது. விடியும் வரை தாமதிக்கவும் கூடாது. இரண்டில் எது நடந்தாலும் எங்களுடன் சாகசக்காரனின் தலையும் உருளும்.

சரியாக ஒன்று பன்னிரண்டிற்கெல்லாம் காவலரணில் இருந்தவன் எழுந்து போனான். சரியான அவசரக்காரன். சாகசக்காரன் எழுந்து, குனிந்தபடி கடற்கரையை நோக்கி ஓடினான். சிறிய ரோச்லைட் ஒன்றை கைவிரல்களிற்குள் பொத்தி சின்னச் சின்ன ஒளிக்கீற்றுக்கள் தெரியத்தக்கதாக கடலை நோக்கி விட்டுவிட்டு மூன்று தரம் ஒளிரச்செய்தான். பிறகு கடற்கரையில் படுத்துவிட்டான். நான் எழுந்து சில அடிகள் நடந்து கடற்கரை வெளிக்கு வந்தேன். யாருமில்லாத வெளி. எனக்கு உடம்பெல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தது. பதட்டத்தில் விரல்களால் எதையும் உறுதியாகப்பிடிக்கக்கூட முடியவில்லை. பயமும் சந்தோசமும் கலந்த கலவையது. இருளும் ஒளியும் கலந்த கலவையது.

அடுத்த சில நிமிடங்களிNNயெ படகொன்று கரையை நோக்கி வரத் தொடங்கியது. படகு கரைக்கு வெகுஅருகாக வந்ததும், சாகசக்காரன் எங்களை நோக்கி குனிந்தபடி ஓடி வந்தான். ‘எல்லாம் ஓடிவா. எல்லாம் ஓடிவா’ என கீழ்க்குரலில் உறுமினான். அவனது குரலிலும் பதற்றம் நிறைந்திருந்தது.

அதே குரலில் ‘ஓடிப்போய் வோட்டில ஏறு’ என ஒவ்வொருத்தராக கடலை நோக்கி தள்ளிக்கொண்டிருந்தான். கரையிலிருந்து பதினைந்து இருபது மீற்றர்களில்தான் படகு நின்றது. பின்னால் யாரோ கடலிற்குள் இறங்கப் பயந்து கொண்டு நின்று,அவன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தான். இறுதியில் கெட்ட வார்த்தையில் திட்டி, ‘போய் ஏறடா’ என கடலிற்குள் தள்ளிவிட்டான். அவன் தடுமாறி தண்ணீருக்குள் விழுந்தெழும்பி ஓடிவந்து ஏறினான். பலருக்கு அதுதான் கடலிற்குள் இறங்கிய முதல் அனுபவமாக இருந்திருக்க வேண்டும். தண்ணீருக்குள் நடந்துவந்து, படகில் ஏறுவதற்குள் சாகப் போகின்றவர்களைப் போலத் தெரிந்தார்கள். இந்த அமர்களங்களில்தான் தெரிந்தது, அதில் ஒரு பெண்ணுமிருந்தது. யாரோ ஒருவனுடன் வந்திருந்தாள். அனேகமாக எங்களுடன் இறுதியாக இணைந்த இருவருமாக இருக்க வேண்டும். ‘எங்கள் கண்ணையே உன்னிடம் ஒப்படைக்கிறோம். எந்த தேசத்திற்காவது போய் நல்லாயிருங்கள்’ என பெற்றோர் ஒரு பொடியனைப் பார்த்து செய்து வைத்து அவனுடன் அனுப்பியிருக்க வேண்டும். அல்லது இந்தியாவிலேயே அறிந்த தெரிந்தவர்கள் யாருடைய வீட்டிற்காவது செல்லவும்கூடும். அவனும் அவளைக் கண்ணைப் போலத்தான் நடத்தினான். தண்ணீருக்குள் தத்தளித்தவளை, தூக்கி வந்து படகிலேற்றினான். தனியாக ஏற்றச் சிரமப்பட, படகோட்டியும் ஒரு கைகொடுத்து படகேற்றினான்.

படகிற்குள் எல்லோரும் குந்தியிருந்தோம். எனக்கருகில்தான் அந்தக் ‘கண்’ குந்தியிருந்தாள். கூட வந்தவனது தோளில் முகம் புதைத்து ஓயாமல் ஏதோ கிகிசுத்தபடியிருந்தாள். என்ன கேட்டாளென தெளிவாக விளங்கவில்லை. ஆனால் குரலில் தெரிந்த அச்சத்தைக் கண்டேன். சில நிமிடங்களிலேயே அவனுக்கு வெறுத்துப் போயிருக்க வேணும். சற்றே குரலை உயர்த்தி பேசாமல் வாறியா எனத் திட்டினான். அவனது சத்தத்தைக் கேட்ட படகோட்டி திட்டினான். பிறகு அந்த சத்தத்தை ஈடுகட்டவோ என்னவோ குரலை உயர்த்திப் பாடினான். எம்.ஜி.ஆர் பாட்டொன்று.

இன்னும் இயந்திரத்தை இயக்கவில்லை. நீந்தியபடி படகைத்தள்ளி மேலே மேலே கடலிற்குள் இறங்கிக் கொண்டிருந்தான். கரை சிறிதாகத் தெரியத் தொடங்க படகைத் திசைமாற்றி கரைக்கு சமாந்தரமாகச் செலுத்தினான். இப்பொழுது படகிற்குள் ஏறி வலித்துக் கொண்டிருந்தான்.

யாரோ ஒருவன்- ஒரு விசயம் தெரிந்தவனாக இருக்க வேண்டும். அவனுக்கும் வரைபடங்கள் தெரிந்திருக்க வேணும். அல்லது வரைந்து கொண்டுதான் புறப்பட்டிருக்க வேண்டும்- என்னை மாதிரி. ‘அண்ணை.. மன்னாருக்கில்லையண்ணை.. இந்தியாவிற்கு’ என்றான். ஏனெனில் அந்தத் திசையில் சென்றால் தலைமன்னார் வரும். இருபது நிமிட ஓட்டத்தில் பாதுகாப்பான இடத்தை அடைந்துவிடலாமென்பதை நானும் அறிந்துதானிருக்கிறேன். படகோட்டி அவனை கெட்ட தூசண வார்த்தைகளினால் திட்டினான். பிறகு அதற்கு விளக்கமும் தந்தான் -கரையைப்பிடித்து ஓடி நேவியின் பிரதேசத்திற்குள் போனால் கடற்புலிகள் துரத்த மாட்டார்கள். அதன் பின்னர் படகை இந்தியாவிற்கு திருப்பலாமென.

சிறிது நேரம் நடந்த இந்த இரகசிய நகர்வின் பின் ‘இனிச்சரி’யென்றபடி படகோட்டி இயந்திரங்களை இயக்கினான். இரட்டை இயந்திரங்கள். படகு சீறிக் கொண்டு பாய்ந்தது. பின்னால் நுரையைப் பீய்ச்சியடித்தது.
இயந்திரச்சத்தம் கேட்டதுமே கரையிலிருந்து சில வெடிச்சத்தங்கள் கேட்டன. சிவப்புத்தணலாக தோட்டாக்கள் வானத்திற்கு ஏறிக் கொண்டிருந்தன. இருள் பின்னணியில் அந்தக்காட்சி அழகாகத்தானிருந்தது. ஆனாலும் இரசிக்க முடியவில்லை. கரையிலிரந்து சில படகுகள் புறப்பட்டன. சத்தம் தெளிவாகக் கேட்டது. அணியத்திலிருந்தபடி முன்னுக்குப் பார்ப்பதும் பதட்டத்துடன் பின்னால் பார்ப்பதுமாகயிருந்த படகோட்டி திடீரென தூசணத்தினால் கத்திக் கொண்டு பின்பக்கம் ஒடி வந்தான். திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தேன். இதுவரை படகின் பின்பக்கமாக இரண்டு கோடுகளாக நுரையைப் பீச்சியடித்துக் கொண்டிருந்தது இப்பொழுது ஒரேயொரு கோடாக மட்டுமேயிருந்தது. பக்கத்திலிருந்த யாரோ பதட்டத்துடன் ‘ஒரு என்ஜின் வேலை செய்யில்லை’யென முணுமுணுத்தான். ‘கடவுளே கடவுளே கைவிடாதையுங்கோ’ என அவள் மந்திரத்தைப் போல தொடர்ந்து உச்சரித்துக் கொண்டிருந்தாள். படகோட்டி ஏதேதோ செய்து பார்த்தான். திரும்பத்திரும்ப இயந்திரத்தை இழுத்துப் பார்த்தான். எதுவும் நடக்கவில்லை. துரத்திக் கொண்டு வருபவை கடற்புலிகளின் விசைப்படகுகள். எங்களை அண்மித்துக் கொண்டிருந்தது தெரிந்தது.

படகோட்டி களைத்துப் போய் நிமிர ஒரு சினிமாப்படத்தில் மட்டுமே நடக்குமென நம்பும்படியான ஒரு சம்பவம் நடைபெற்றது. ‘புப் புப் புப்’ என ஒரு விசித்திர ஒலியெழுப்பியபடி மற்ற இயந்திரமும் நின்றது. ;என்ர அந்தோனியாரே’ என படகோட்டி கதறினான். அந்தக்குரலிலிருந்த நிராதரவும் நம்பிக்கையீனமும் என்னை தகர்த்தெறிந்தது. பலர் வாய்விட்டு அழத் தொடங்கினார்கள். நான் மெதுமெதுவாக செயலிழந்து சோர்ந்து போய் உட்கார்ந்தேன்.

இரண்டு மூன்று முறை தொடர்ந்து இழுத்துப்பார்த்தான். பதட்டத்தில் எதையும் சரியாகச் செய்ய முடியாமல் தடுமாறினான். நிராதரவும் பெற்றோல் வாசனையும் மட்டுமே அப்பொழுது நிறைந்திருந்தது.
துரத்தும் படகுகள் வெகு அருகாக வந்துவிட்டன. பலவிதக்குரல்கள் கேட்கத் தொடங்கின. எல்லாமே அதட்டும் குரல்கள்தான். துப்பாக்கியை லோட் செய்யும் ஓசைகளும் கேட்டன.அணியப்பக்கமாக ஓடிப்போன படகோட்டி குனிந்து எதையோ எடுத்துவிட்டு, ‘பிள்ளையள்… அந்தோணியார் என்னை மன்னிக்கட்டும். பிடிபட்டால் ஓட்டியளை சுட்டுப் போடுவாங்களடா’ என தழுதழுத்த குரலில் கூறிவிட்டு கடலிற்குள் பாய்ந்தார். அவர் கரையை நோக்கி நீந்தவில்லை. மன்னாரை நோக்கி நீந்தினார்.

அடுத்தடுத்த நிமிடங்களில் துரத்தி வந்த இரண்டு படகுகளும் எங்களைச் சுற்றி வந்தன. ஒரு படகிலிருந்து வானத்தை நோக்கி சரமாரியாகச் சுட்டார்கள். ‘ஐயோ எங்களைச் சுடாதையுங்கோ’ என பல அலறல்கள் எழுந்தன. விசைப்படகொன்றுடன் எங்கள் படகை கயிற்றால் பிணைத்தார்கள். மற்ற விசைப்படகு பின்பக்கமாக வந்தது. அணியத்தில் நின்றவன், எங்கள் படகின் இயந்திரத்தை நோக்கிச் சுட்டான். இயந்திரத்தை செயலிழக்கச் செய்வதற்காக இருக்கலாம். அதற்கு அவசியங்களிருக்கவில்லை. பிறகு, கரையை நோக்கி பயணத்தைத் தொடங்கினோம். நான் திரும்பிப் பார்த்தேன். இந்தியா தெரியவில்லை. மெதுவாக அசைந்து கொண்டிருக்கும் கடலும், தொலைவில் கரும் இருட்டும்தான் தெரிந்தது.

இப்படியாக அந்தக் கரைகாணும் கடற்பயணம் தோல்வியில் நிறைவடைந்தது. மிகச்சரியான அளவில், மிகச்சரியான அமைவிடங்களுடன் கீறியும் அந்த வரைபடத்தைக் கொண்டு சரியான இலக்கை அடைய முடியவில்லை. சரியான வரைபடத்துடன் செய்யப்பட்ட பிழையான பயணமாக அது அமைந்து விட்டது. எல்லோரும் கொலம்பஸ்கள் இல்லைத்தானே -பிழையான வரைபடங்களுடன் சரியான பயணங்களைச் செய்ய…..

௦௦௦௦௦

 

31 Comments

  1. gowry says:

    நீண்ட காலத்தின் பின் சிறந்த உயிர் ஓவியத்தை கனத்த மனதுடன் ரசித்தேன்.பதிவுகள் தொடரட்டும்.

Post a Comment