Home » இதழ் 03 » விம்பம்- குறுந் திரைப்படங்களை ஊக்கப்படுத்தல் படைப்பாளிகளை கௌரவித்தல்!

 

விம்பம்- குறுந் திரைப்படங்களை ஊக்கப்படுத்தல் படைப்பாளிகளை கௌரவித்தல்!

 

ஓன்பது வருடங்களாகத் தொடரும் பணி!
————————————————————–

நமது தமிழ்ச் சூழலில் குறுந்திரைப்படங்களில் உருவாக்கமும் அதன் தேடலும் பேசு பொருளும் நமக்கான காத்திரமான சினிமாவை நோக்கிய எதிர்பார்ப்பில் ஓரளவு நம்பிக்கையான மாற்றங்களை, வெளிச்சங்களை கோடிட்டு காட்டி வருகின்றது. ஆளுமைமிகு படைப்பாளிகளாக, சினிமா கலைஞர்களாக வளரவேண்டிய ஒரு புதிய தலைமுறை குறுந் திரைப்பட உருவாக்கத்தின் ஊடாக செழுமைப்படுத்தப்பட்டு, நல்ல சினிமாபற்றிய அறிவுடனும் புரிதலுடனும் சாதிக்க வேண்டும் என்ற இலட்சியக் கனவுடனும் களத்திற்கு வருகிறார்கள்.

தமிழில் குறுந் திரைப்பட வடிவமே, நமது வாழ்வையும், கலையையும் மெய்ப்பிக்க முனையும் கலைஞர்கள் படைப்பாளிகளுக்கான மாற்று வடிவமாகவே பார்க்கப்பட வேண்டியுள்ளது. தமிழில் நல்ல சினிமாவுக்கான அடித்தளமாகவும் இதனைக் கருதலாம். சினிமா என்கிற பரந்துபட்ட தாக்கம் செலுத்தும் கலை வடிவம், தமிழ் வணிக சினிமாவின் மேலாதிக்கத்தாலும் சீரழிவாலும் அதன் உன்னத பெறுமானத்ததை எட்டுவதில் பல நெருக்கடிகளை கண்டே வருகிறது. காதலும் மிகைப்படுத்தப்பட்ட வண்முறையும் பகட்டும் தமிழ்ச் சினிமாவை பெரிதும் ஆக்கிரமித்து இருக்கின்றது.

வணிக மயப்பட்ட தமிழ்ச் சினிமாவின் போக்கிலிருந்து தமிழ்ச் சினிமா, காத்திரமான தளத்தை நோக்கி பயணிப்பதற்கு சினிமாத் துறையில் பணியாற்றும், பணியாற்ற வருகின்ற கலைஞர்கள் மற்றுமல்ல, நல்ல சினிமா மீது அக்கறையும் ஆர்வமும் கொண்டவர்களும் கூட்டாக செயற்பட வேண்டிய தேவை உள்ளது. காத்திரமான சினிமா நோக்கிய உழைப்பிற்கும் ஆர்வத்திற்கும் நாமும் உந்துதலாகவும் கைகொடுப்பவர்களாகவும் இருத்தல் முக்கியமானது.

இந்த வகையில் புலம்பெயர்ந்த நாடுகளில் இந்த முயற்சிகளை ஆதரித்து ஊக்குவிக்கும் நிகழ்வுகள் வருடம் தோரும் நிகழ்ந்து வருகின்றன. இலண்டனில் இந்த முயற்சியினை “விம்பம்” அமைப்பு 2004ம் ஆண்டிலிருந்து முன்னெடுத்து வருகிறது. ஈழம், தமிழகம், புலம்பெயர்நாடுகளை இணைத்து விருது வழங்கும் விம்பத்தின் முதலாவது சர்வதேச விருது வழங்கும் நிகழ்வில் தமிழக முன்னணி இயக்குநர் தங்கர் பச்சன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். 2010ம் ஆண்டு விழாவில் அம்ஷன் குமார் அவர்களும் பிரதம விருந்தினராக கலந்து கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த வருட (2012) விம்பத்தின் சர்வதேச குறுந் திரைப்பட தேர்வும் விழாவும் தமிழக சினிமாத்துறை முன்னணி பாங்காற்றுனர்களின் வழிகாட்டுதலில் நடைபெறவுள்ளது. 7வது சர்வதேச குறுந் திரைப்பட விழாவினை இலண்டனில் நடாத்த முயற்சிகளை முன்னெடுத்துவரும் “விம்பம்” அமைப்பின் இணைப்பாளரான கே .கே ராஜாவுடன் உரையாடிய போது அவர் தெரிவித்த கருத்துக்கள்.

“குறுந் திரைப்பட முயற்சிகள் நமது சூழலில் பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. புதிய படைப்பாளிகளும் கலைஞர்களும் குறுந் திரைப்பட வெளிக்குள் வந்திருக்கிறார்கள். நானும் ஒரு சில நண்பர்களும் சினிமாத்துறையில் கொண்ட ஆர்வத்தினதும் ஈடுபாட்டின் காரணமாக இந்த முயற்சியில் கடந்த ஒன்பது வருடங்களாக ஈடுபட்டுவருகிறோம். இந்த ஒன்பது வருட செயற்பாட்டில் தவிர்க்க முடியாத காரணங்களினால் 2007, 2011ம் ஆண்டுகளில் மட்டும் இந்த நிகழ்வினை நடாத்த முடியாது போய்விட்டது. 2012இல் விம்பத்தின் 7வது சர்வதேச குறுந் திரைப்பட விழாவை பரந்தளவில் சிறப்பாக நடாத்தி முடிப்பதற்கு திட்டமிட்டிருக்கிறோம்! உலகெல்லாம் பரந்து வாழும் குறுந் திரைப்பட உருவாக்குனர்கள், தமது படைப்புக்களை எமக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்”

“நாம் இந்த முயற்சியை தொடங்கியதன் நோக்கமே சினிமாவில் ஆர்வமுள்ள, திறமைமிகு ஆற்றல்களை அடையாளம் கண்டு கௌரவிப்பதன் மூலம் அவர்களையும் நமது சினிமாவையும் படைப்பு ஆழமிக்க திறன் மிகு சினிமா வெளிக்குள் நம்பிக்கையுடன் பயணிக்க வைப்பதேயாகும். இது ஒரு சிறு கைகொடுப்பும் தட்டிக் கொடுப்பும்தான். குறுந் திரைப்படத் துறையில் இறங்கி வேலை செய்து கொண்டிருக்கும் நமது கலைஞர்கள், படைப்பாளிகள் நல்ல சினிமாவுக்கான அடித்தளத்தினை நமது தேடல்களின் ஊடே வெளிப்படுத்தி வருகின்றனர். புலம்பெயர் நாடுகளிலும் ஈழத்திலும் குறுந் திரைப்பட முயற்சியில் கடந்த பல வருடங்களாக பலரும் பெரிதும் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்”.

“ஒவ்வொரு வருடமும் எமக்கு தேர்வுக்கு வருகின்ற குறுந் திரைப்படங்களில் மிகச் சிறந்த உள்ளடக்கமும் கலைத்திறன் மிகு படைப்புகள் வருவது நம்பிக்கையை தருகிறது. எமது இந்த முயற்சிக்கு இந்தியா, இலங்கை, ஐரோப்பிய நாடுகள், கனடாவிலிருந்து கிடைக்கும் ஆதரவும் பங்களிப்பும், இந்தப் பணியில் நாம் தொடர்ந்து ஈடுபடுவதற்கான உந்துதலை எமக்கு தருகிறது.”

கே .கே ராஜா மேலும் தெரிவிக்கையில், திரைப்படத்தினை வெறுமனே பொழுது போக்கு சாதனமாக கருதி குறுந் திரைப்படங்களை உருவாக்கும் போக்கும் இன்று அதிகரித்திருக்கிறது. டிஜிடல் வீடியோ இருந்தால் ஒரு குறுந் திரைப்படத்தினை உருவாக்கி விடலாம் என பலர் கருதுவது போல் தெரிகிறது. எமக்கு போட்டிக்கு வருகின்ற படைப்புகளில் சில, தமிழ் வணிக சினிமாவின் அம்சங்களை அச்சொட்டாகக் கொண்டிருக்கின்றன. இந்த சூழலை மீறியும் ஆற்றல் உள்ள படைப்பாளிகளும் படைப்புகளும் நல்ல சினிமாவிற்கான அம்சங்களுடன் முன்னுக்கு வருவது மகிழ்ச்சியையும் மன நிறைவையும் தருகிறது.

“இம்முறை ஈழத்திலிருந்து வெளிவந்த சிறந்த குறுந் திரைப்படத்திற்கு விருதுடன் 1 இலட்சம் ரூபா பணப்பரிசினையும் கொடுக்க தீர்மானித்திருக்கிறோம். இதற்கான விசேட காரணம், ஈழத்தின் குறுந் திரைப்பட உருவாக்கமானது தமிழகம், புலம் பெயர்நாடுகளின் முயற்சிகளுடன் ஒப்பிடுகின்ற போது எண்ணிக்கை அடிப்படையில் குறைவாகவே இருக்கிறது. ஈழத்தில் குறுந் திரைப்பட உருவாக்கத்தினை ஊக்கப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. சுதந்திரமான நடுவர் குழுவே தேர்வுகளைச் செய்கிறது. குறுந் திரைப்படத் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் தமது படைப்புக்களை எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்கு முன் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.” என்கிறார் விம்பம் அமைப்பின் இணைப்பாளர் கே .கே ராஜா.

இதுவரை நடைபெற்ற விம்பத்தின் ஆறு குறுந் திரைப்பட விருது வழங்கல் நிகழ்வினைப் பார்த்தால், கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஈழம், இந்தியா போன்ற நாடுகளிலிருந்து வெளியான குறுந் திரைப்படங்களுக்கும் மேற்படி நாடுகளில் உள்ள கலைஞர்களுக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது.

• புலம் பெயர்ந்த நாடுகளில் தயாரிக்கப்படும் சிறந்த குறுந்திரைப்படம் –
• சிறந்த ஈழத்து குறுந் திரைப்படம் –
• சிறந்த இந்திய குறுந் திரைப்படம் –
• சிறந்த நடிகர்
• சிறந்த நடிகை
• சிறந்த நெறியாளர்
• சிறந்த ஒளிப்பதிவாளர்
• சிறந்த படத்தொகுப்பாளர்
• சிறந்த திரைப் பிரதி

என ஒன்பது விருதுகள் விம்பம் குறுந் திரைப்பட அமைப்பினரால் வழங்கப்படுகிறது. இத்துடன் விருதுவழங்கும் நிகழ்வில் கலந்து கொள்ளும் பார்வையாளர்களில் இருந்து, பார்வையாளர் தேர்வு – சிறந்தகுறுந் திரைப்படமும் – தேர்வு செய்யப்பட்டு நிகழ்வில் விருது வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.நமக்கான நல்ல சினிமாவை நோக்கிய தேடலிலும் உழைப்பிலும் ஈடுபடுகின்ற கலைஞர்களுக்கு எமது வாழ்த்துக்கள். விம்பம் அமைப்
பினர்களுக்கு எமது பாராட்டுக்கள்.

– வினோ

 

293 Comments

  1. நெடுதுயிலோன் says:

    எம் மக்களிடையே இருக்கும் பட்டனுபவங்களையும்,படிப்பினைகளையும்
    சிறந்த திரைப்படமாக உருவாக்கித்தர உழைக்கும் “விம்பம்” அமைப்பையும்,திரு.கே.கே.ராஜா அவர்களையும் மனதார வாழ்த்துகின்றேன்.

  2. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்படும் அஞ்சல்கள் அனைத்திற்கும் permanent failure notice வருகிறது அதனால் தொடர்பு கொள்ள வேறு முகவரி தருமாறு வேண்டுகிறேன்.

Post a Comment