Home » இதழ் 03 » வார இறுதி- சிறுகதை

 

வார இறுதி- சிறுகதை

 

அலுப்பு தட்டியது. தலைவலி பாடாய்ப்படுத்தியது. தில்லி போய்ச் சேர நான்கு மணி நேரம் இருக்கிறது என்று நினைக்கும்போதே களைப்பு கூடிய மாதிரி தோன்றியது. உஸ்மான்புராவில் இருக்கும் நட்சத்திர ஹோட்டலை காலை ஐந்தரை மணிக்கு செக்-அவுட் செய்து, 150 கி மீ பயணம் செய்து, பாலன்பூர் அருகில் இருக்கும் ஒர் உருளைக்கிழங்கு சிப்ஸ் நிறுவனத்தில் ஒரு முக்கியமான (ஆனால் எதிர்பார்த்த விளைவைத் தராத) மீட்டிங்கை முடித்துவிட்டு ஏமாற்றத்துடன் அகமதாபாத் திரும்பிக்கொண்டிருந்த வேளையில், ஐஸ்-க்ரீம் நிறுவனத் தலைவர் என்னை அவருடைய தொழிற்சாலைக்கு வரும்படி பணிக்க, காந்தி நகரைத் தாண்டியிருக்கும் மஹுடி என்ற ஊருக்குப் போய்விட்டு அகமதாபாத் விமான நிலையம் திரும்பியபோது மாலை ஆறு. இரும்பு மனிதர் சர்தார் படேலின் ஆஜானுபாகுவான சிலை இருந்த சதுக்கத்திலிருந்து வலப்புறம் திரும்பி விமான நிலைய வாயிலில் வந்து நின்றது கார். காருக்குள் நிலவிய அதீதமான ஏ சி குளிருக்கு நேர்மாறாக வெளியில் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது.

எட்டேகால் மணிக்கு தில்லி கிளம்பும் விமானத்தில் முன்பதிவு செய்திருந்தேன். டிக்கெட் ப்ரிண்ட்-அவுட் வாங்கிக் கொள்ள ஏர்லைன்ஸ் கவுண்டருக்குப் போனேன். மே ஒன்றிலிருந்து விமான நிலைய கவுண்டரில் ப்ரிண்ட்-அவுட் வாங்க ஐம்பது ரூபாய் தர வேண்டும் என்று புதிய நிபந்தனை. “இதை எப்போது சொன்னீர்கள்?” என்று கேட்டேன்.கவுண்டரில் உட்கார்ந்திருந்தவள் சுவரில் யாருக்கும் தெரியாபடி ஒட்டப்பட்டிருந்த நோட்டிசைக் காட்டினாள். சண்டை போடத் தெம்பில்லை. ஐம்பது ருபாயை செலுத்தி வாங்கிய ப்ரிண்ட்-அவுட்டைக் காட்டி உள்ளே நுழைந்தேன்.

செக்-இன் பண்ணி, பாதுகாப்பு பரிசோதனையை முடித்து, நிம்மதியாக ஏதாவது வயிற்றுக்கு ஆகாரம் போடலாம் என்ற எண்ணத்தை கைவிட வேண்டியதாகிவிட்டது.. புதிதாக செக்-இன் கவுண்டர்கள் இருந்த பகுதிக்கு நுழையுமுன்னர் இன்னொரு முறை என் டிக்கெட்டை காட்டுமாறு இன்னொரு பாதுகாவலன் கேட்டான். “விமானம் கிளம்ப இரண்டு மணி நேரத்துக்கு மேலிருக்கிறது. எனவே இந்த இடத்துக்குமேல் நீங்கள் உள்ளே வர முடியாது. இங்கு போடப்பட்டிருக்கும் இருக்கைகளில் உட்கார்ந்தபடியே காத்திருங்கள்” என்றான் காக்கி சீருடை அணிந்த செக்யூரிடி. ஒர் இருக்கையும் காலியாக இல்லை. நின்றுகொண்டே காத்திருக்க வேண்டியதாகி விட்டது. பசி வயிற்றைத் தின்றது, அந்த இடத்தில் ஒரு கடையும் இல்லை. வெளியே போய் விடலாமா என்று யோசித்தேன். மே மாத வெயில் உக்கிரமாய் இருந்தது. உள்ளே, ஏ சி யின் இதம். செக்-இன் பண்ணிய பிறகு ஏதாவது சாப்பிடலாம் என்று இருந்துவிட்டேன்.

உருளைக்கிழங்கு சிப்ஸ் நிறுவன மீட்டிங்கை முடித்துக்கொண்டு பனிரெண்டு மணிவாக்கில் அகமதாபாத் திரும்பி குஜராத்தி தாலி (தட்டு) சாப்பிடலாம் என்றிருந்தேன். இரு நாட்களாக சந்திக்க நேரம் தராதிருந்த ஐஸ்-க்ரீம் நிறுவன அதிபரின் தொலைபேசி வந்தவுடன், பசி என்ன பசி, கடமைதான் முதல் என்று அவரை சந்திக்கப் போய் விட்டேன். ஒரு மணி நேரம் காக்க வைத்தார். அரை மணி நேரம் உரையாடினார். ஆர்டரைப் பற்றி எதுவும் முடிவாகவில்லை என்று சொல்லிவிட்டார்.

நல்ல ஹோட்டலில் உணவருந்த சபர்மதி வரை செல்ல வேண்டும். நகருக்குள் செல்லாமல் நெடுஞ்சாலையிலிருந்து நேராக விமான நிலையம் வந்திருந்தேன்.
செல் போன் சிணுங்கியது. என் அதிகாரி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். “நேற்றிரவே நீ அனுப்பியிருக்க வேண்டிய மாதாந்திர விற்பனை ரிப்போர்ட் இதுவரை எனக்குக் கிடைக்கவில்லை” அவர் குறுஞ்செய்தியில் பயன்படுத்தும் சொற்களில்கூட நான் உன் அதிகாரி என்ற தோரணை மாறாமல் இருக்கும். இருபத்தி நாலு மணி நேரத்தில் ஒரு நிமிடங்கூட நான் அதிகாரியாக்கும் என்ற விஷயத்தை அவரால் எப்படி மறக்காமலிருக்க முடிகிறது?

ஒர் இருக்கை காலியானது. உடன் என் மடிக்கணினியைத் திறந்து வேலை செய்ய ஆரம்பித்தேன். முந்தைய நாளிரவு என்னால் அறிக்கை முழுதாகத் தயாரிக்க இயலவில்லை. பாதி அறிக்கையை முடித்தபோது அமெரிக்காவிலிருக்கும் எங்கள் நிறுவன தலைமை அலுவலகத்திலிருந்து வந்த அதிரடி மின்னஞ்சலுக்கு உடன் பதிலளிக்க வேண்டியிருந்தது. ஐந்து நிமிட தொலைபேசி உரையாடலில் தெளிவாகி விடக்கூடிய ஒரு விஷயத்தை குறைந்தது ஐம்பது மின்னஞ்சல் பரிமாற்றங்கள் செய்யாமல் தீர்ப்பதில்லை என்று எங்கள் நிறுவனத்தில் ஒர் எழுதா சட்டம். நான் பதில் போட, உடன் மறு முனையிலிருந்து மின்னல் வேகத்தில் பதில் மின்னஞ்சல். இவ்வாறாக எழுத்து யுத்தம் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தொடர்ந்தது. பனிரெண்டு ஆகி விட்டது ;அன்று பரோடா சென்று திரும்பிய களைப்பு வேறு ; அசந்து தூங்கி விட்டேன்.

அறிக்கையை முழுதாக டைப் அடித்து முடித்தேன். பின்னர் அதை மின்னஞ்சல் செய்ய நேரம் பிடித்தது. டேட்டா கார்ட்-டின் தகவல் வேகம் குறைவாக இருந்தது. ஒரு வழியாக மின்னஞ்சல் செய்து முடித்தவுடன், அவசர, அவசரமாக செக்-இன் செய்து, விமானத்தில் போர்ட் செய்ய வேண்டியதாகி விட்டது.
அதிகாரியின் குறுஞ்செய்திக்கு பதில் அனுப்பினேன். “அறிக்கையை அனுப்பி வைத்து விட்டேன்”
உடன் பதில். “வார இறுதியை முன்னிட்டு குடும்பத்துடன் மசூரியில் இருக்கிறேன். உன் அறிக்கையை திங்கள் கிழமை பார்க்கிறேன்” அப்போதுதான் எனக்கு நினைவுக்கு வந்தது – இன்று சனிக்கிழமை. அலுவலகத்தில் எல்லோருக்கும் விடுமுறை. எனக்கும்தான். உருளைக்கிழங்கு சிப்ஸ் கம்பேனிக்காரர்கள் எனக்கு சனிக்கிழமைக்குதான் அப்பாயிண்ட்மெண்ட் தந்திருந்தனர். நானும் ஏதாவது வியாபாரம் கிடைக்குமா என்ற எண்ணத்தில் வெள்ளிக்கிழமையே வீடு திரும்பாமல், சனிக்கிழமை வரை அகமதாபாதில் இருந்தேன்.
வெள்ளி மாலை மனைவிக்கு போன் செய்து சனிக்கிழமை இரவு ஊர் திரும்புவேன் என்று தெரிவித்தபோது “ரிது இன்று அவள் பள்ளி சுற்றுலா முடிந்து நாளை மாலைதான் வருகிறாள் ; அவள் சுற்றுலா கிளம்பிய அன்று அவசர வேலையாக குஜராத் செல்ல வேண்டியிருப்பதால் ரிதுவை பள்ளியில் விட்டு வர என்னைப் போகச் சொன்னீர்கள். அப்பா என்னை சீ-ஆஃப் பண்ணவில்லை என்று பஸ் கிளம்பும்வரை குறைபட்டுக்கொண்டிருந்தாள். அவளை அழைத்து வரவாவது நீங்கள் சென்றால் குழந்தை ஆனந்தமடைவாள் என்று பார்த்தால் வேலையைக் கட்டிக்கொண்டு அலைவதே உங்கள் வாடிக்கையாய்ப் போய் விட்டது” என்று கோபமாய்ப் பேசினாள்.

ரிதுவுக்கு பதினோரு வயதாகிறது. ஏழாம் வகுப்பு படிக்கிறாள். ஒரே மகள் என்பதனால் நானும் என் மனைவியும் மிகையாகவே அவளை செல்லம் கொஞ்சுவோம். எங்களுடன் சேர்ந்துதான் உறங்குவாள். ஒவ்வொரு வருடமும் அவளின் பள்ளியிலிருந்து சுற்றுலா அழைத்துச் செல்வார்கள். அவள் சுற்றுலா சென்று வருமாறு ஊக்கம் கொடுத்தும் ஒருமுறைகூட அவள் செல்ல இசைந்ததில்லை. ஆறாம் வகுப்பு முடிவில்தான் அவளுள் தைரியம் முளைத்தது போலும். “அப்பா, ஸ்கூலில் நைனிடாலும் ஜிம் கார்பெட்டும் எக்ஸ்கர்ஷன் கூட்டிண்டு போறாங்க..நானும் சேர்ந்துக்கட்டுமா?” என்று அவள் கேட்டபோது நானும் என் மனைவியும் ஆச்சரியப்பட்டோம். “ஆர் யூ ஷ்யூர்?” என்று என் மனைவி ரிதுவை பலமுறை கேட்டாள். “என் பெஸ்ட் ஃப்ரெண்ட் ஷ்ரேயாவும் போறாம்மா… அதனால நானும் போறேம்மா” பேரூந்திலோ காரிலோ பயணிக்கப் போகிறோம் என்று சொன்னவுடனேயே உடனுக்குடன் ரிதுவுக்கு வயிறு பிசைய ஆரம்பித்துவிடும். வாகனத்தின் கதவு திறக்கப்படுவதற்கு முன்பே வாந்தியெடுத்துவிடுவாள். நாங்களில்லாமல் அவள் பயணம் செய்யப்போவது இதுவே முதல் முறை. எனவே எங்களுக்குள் நீங்காத பதற்றம்.

ரிது டூரில் கிளம்ப இருந்த தினத்திற்கு ஒரு நாள் முன்னதாக எனக்கு குஜராத்துக்கு போக வேண்டிய நிலைமை உருவானது. ரிதுவின் முகம் வாடிப் போனது.
“அப்பா, நீ வந்து என்னை ஸ்கூலில் விட மாட்டியா?”
“அப்பா வெள்ளிக்கிழமை தில்லி வந்துடுவேன். சனிக்கிழமை காலையில நீ திரும்பி வரும்போது உன்னை ரிசீவ் பண்ண அப்பா கண்டிப்பா வருவேன்… நெஜம்மா!”

விமானம் கிளம்ப சில நிமிடங்கள் இருந்தபோது, மனைவியைக் கூப்பிட்டு பத்து மணிக்குள் வீட்டில் இருப்பேன் என்று சொல்லலாமென்று அவளை செல்போனில் அழைத்தேன்.அவள் போனை எடுக்கவில்லை. நான் டூரில் இருக்கும் நாட்களில் ஒரு நாளைக்கு ஐந்தாறு முறை போன் போடுபவள், இன்று முழுக்க ஒரு தடவை கூடக் கூப்பிடவில்லை. கோபத்தை சரியாக வெளிக்காட்ட அவளுக்கு தெரிந்திருக்கிறது. மவுனமாக இருப்பது, கோபத்தை வார்த்தைகளில் காட்டாமல் இருப்பது, அப்படிக் காட்டினாலும் எந்த வார்த்தைகளை வீசினால் கேட்பவரின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துமோ அவ்வார்த்தைகளை பயன்படுத்துவது என்று கோப வெளிப்பாட்டுக்கு பல அம்சங்கள் உண்டு.

விமானப் பணிப்பெண்ணிடம் ”சாப்பிட என்ன இருக்கிறது?” என்றேன். “சாரி சார், சில தவிர்க்க முடியாத காரணங்களினால், இவ்விமானத்தில் உணவெதுவும் ஏற்றப்பட முடியவில்லை. சரியான சமயத்தில் எங்கள் பயணிகளைக் கொண்டு போய்ச் சேர்ப்பதே எங்கள் ஏர்லைன்ஸின் முதல் குறிக்கோள் என்பதனால் உணவு ஏற்றுவதை ரத்து செய்துவிட்டு பயணிகளை விரைவில் ஏற்றி சமயத்தில் விமானத்தை கிளப்பிவிட்டோம்.” என்று உதட்டை லேசாக கோணிய வண்ணம் பஞ்சாபி அக்சென்டைப் போட்டு ஆங்கிலத்தில் பேசினாள்.
கத்தவேண்டும் போலிருந்தது. முடியவில்லை.பணிப்பெண் புன்முறுவலிக்கும்போது அவளின் இரு பக்கக் கன்னங்களிலும் சிறு குழிகள் தோன்றின. பணிப்பெண் குனிந்து என் தோளை இலேசாக உரசிய படி நீட்டிய தண்ணிர் பாட்டிலை வாங்கிக் குடித்துவிட்டு கண்ணை மூடி தூங்க முயன்றேன்.

தில்லி வந்திறங்கியபோது முகத்தில் குளுமையான காற்று வந்து மோதியது சுகமாய் இருந்தது. பரிச்சயமான 1D டெர்மினலை விட்டு வெளியே வரும்போது ஒரு ஸ்டாலில் பழரச பானம் வாங்கிக் கொண்டேன். இரண்டு மணி நேரம் முன் சுமார் அரை மணி நேரத்திற்கு நல்ல மழை பெய்ததென டாக்ஸி டிரைவர் சொன்னான். காரின் ஏ-ஸியை அணைத்து ஜன்னல்களை திறந்து விடுமாறு டிரைவரைக் கேட்டுக் கொண்டேன்.
வீடு திரும்பிய போது, ரிது பாசத்துடன் கட்டிக்கொண்டாள். மகளைப் பார்த்ததும் உற்சாகமானேன். ”டூர்ல நல்லா என்ஜாய் பண்ணினியாடா கண்ணு? என்று கேட்டேன்.

”ஆமாம்ப்பா…நல்லா ஜாலியா இருந்தது… இந்த ட்ரிப்ல ஒரு தடவைகூட நான் வாந்தியெடுக்கலே…தெரியுமா?..ஷ்ரேயா நாலு வாட்டி வாந்தி எடுத்தாள்” உதட்டை கைகளால் பொத்தி அழகாக சிரித்தாள்.
மனைவி “ட்ரெஸ் மாத்திட்டு வாங்க…சப்பாத்தி பண்ணியிருக்கேன் டின்னருக்கு” என்றாள்.
மனைவி தந்த சப்பாத்தி – தாலை சாப்பிடும் போது, ”அப்பா..கண்ணை மூடிக்கோ” என்றாள் ரிது.
“எதுக்கும்மா?”
“கண்ணை மூடு”
கண்ணை மூடிக் கொண்டேன். என் தலையில் ஒரு தொப்பியை அணிவித்தாள். பச்சை நிற தொப்பியில் “ஜிம் கார்பெட்” என்று எழுதியிருந்தது.

“ஜிம் கார்பெட் போனப்போ உனக்காக இந்த தொப்பியை வாங்கினேன்…வீக் என்டில் நாம வெளியே போகும்போது இந்த தொப்பியை போட்டுண்டுதான் நீ வரணும்…சரியா?”
“கண்டிப்பா”
“என்னை ரிசீவ் பண்ண வரேன்னு பொய் சொன்ன மாதிரியா இது?” என்று சொல்லி கண் சிமிட்டினாள்.
ரிதுவின் தலையை தடவிக் கொடுத்தேன். மனைவி சமையலறையிலிருந்து என்னைப் பார்த்து புன்னகைத்தாள்.
”இன்னும் எத்தனை சப்பாத்தி பண்ணட்டும்?”
“இல்லை…போதும்”
“இரண்டு தானே சாப்பிட்டீர்கள்?”
“போதும். வயிறு நிறைந்து விட்டது”

0000

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment