Home » இதழ் 03 » இன்றைய இலங்கை!

 

இன்றைய இலங்கை!

 

லங்கையில் அமைதியை அல்லது சமாதானத்தை எட்டுவதற்கான சாத்தியங்கள் தென்படுகின்றனவா? இன்றைய மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் இதயத்தில் சாமாதானத்தைக்குறித்த எண்ணங்கள் உண்டா? தமிழ் அரசியற் தலைவர்களிடம் அரசியற் தீர்வு குறித்துள்ள எண்ணங்கள் என்ன? அரசாங்கம் சமாதானத்தைக் குறித்துச் சிந்திக்க மறுத்தால் அடுத்த கட்டமாக எத்தகைய அரசியற் செயற்பாடுகளை மேற்கொள்வது என்ற தீர்மானங்கள் யாரிடமாவது உள்ளதா? ஒரு நிலையான சமாதானத்துக்கு எத்தகைய வழிமுறை பொருத்தமானது என யாராவது முறையாக ஆராய்ந்துள்ளனரா? தமிழ் பேசும் மக்கள் என்ற வகையில் தமிழ், முஸ்லிம், மலையக மக்களிடம் உள்ள ஐக்கியத்தன்மை – தங்கள் முன்னே உள்ள இனத்துவச் சவால்களை எதிர்கொள்ளும் திறன் எப்படியுள்ளது? எதிர்காலத்தில் இந்தச் சமூகங்களிடம் எத்தகைய ஒருங்கிணைவுத்தன்மை காணப்பட வேண்டும்? எது சாத்தியமுடையது? வடக்குக் கிழக்குப் பிரதேச மக்களின் அரசியல் ஸ்திரத்தன்மைக்குரிய அடித்தளங்கள் எவ்வாறு அமைவது பொருத்தம்? யார் அந்த அடித்தளங்களை நிர்மாணிப்பது? அதை எப்பொழுது நிர்மாணிப்பது? இலங்கையில் மிக உச்சமாக வளர்ந்து வரும் பொருளாதார நெருக்கடிகளை எப்படிக் கட்டுப்படுத்துவது? வறுமை, அவநம்பிக்கை, அச்சம், நிம்மதியின்மை போன்ற இருட்பிராந்தியத்திலிருந்து இலங்கையர்களை – குறிப்பாக போரினாற் பாதிக்கப்பட்ட மக்களை – மீட்பதற்கான பொறிமுறைகள் என்ன? இதையெல்லாம் செய்வதற்குரிய நிர்மாணிகள் யார்?

இத்தகைய கேள்விகளே இன்றைய இலங்கை குறித்து சராசரியான ஒவ்வொரு பொது ஆளிடமும் உள்ளது. எதிர்கால இலங்கையைக் குறித்த கேள்விகள் இவை. இந்தக் கேள்விகளுக்குப் பொருத்தமான விடையைக் காண்பதிலேயே இலங்கையின் சமகால, எதிர்கால நன்மைகளும் பாதுகாப்பும் மேம்பாடும் உள்ளன. மட்டுமல்ல இலங்கைச் சமூகங்களின் அமைதியும் அவற்றின் எதிர்காலமும் இந்தக் கேள்விகளுக்கான விடைகளிலேயே உள்ளன. ஆகவே இந்தக் கேள்விகள் நிராகரிக்கப்பட முடியாதவை. நிச்சயமாகப் பதில்காணப்பட வேண்டியவை.

இந்தக் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் பன்முக ரீதியான சிந்தனை மற்றும் விவாதங்களின் அடிப்படையிற் பதில்களைக் காண வேண்டும். அந்தப் பதில்கள் ஜனநாயக அடிப்படைகளைக் கொண்டிருக்குமிடத்தே அவற்றின் செயல் வடிவம் பாதுகாப்பாக முன்னெடுக்கப்பட ஏதுவாகும். அப்படி முன்னெடுக்கப்படும் ஜனநாயக மயப்பட்ட செயல் வடிவமே எதிர்காலத்தை நிர்மாணம் செய்யவல்லது. அதுவே நிகழ்காலத்தை உறுதிப்பாடுடையதாக்கும்.

எனவே இலங்கையர் ஒவ்வொருவரின் எதிர்காலமும் நிச்சயமாக இந்தக் கேள்விகளுக்கான விடைகளைக் காண்பதில் தங்கியுள்ளது. ஆகவே இந்தக் கேள்விகள் முழு இலங்கையர்களுக்குரியனவாகவும் உள்ளன. அதேவேளை இதிலுள்ள கேள்விகள் தனித்தனிச் சமூகங்களுக்குரியனவாகவும் உள்ளன. சில கேள்விகள் குறிப்பிட்ட அளவில் குறித்த சமூகங்களின் தீவிர கவனத்திற்குரியன. மேலும் இந்தக் கேள்விகள் அரசியற் தலைவர்களுக்கும் கட்சிகளுக்குமானவை. அத்துடன் சில, மத பீடங்கள், மதத்தலைவர்கள், சமூக சக்திகள் எனப் பலருக்கும் உரியவை.

ஐக்கிய இலங்கை, இலங்கைச் சமூகங்களிடையேயான ஐக்கியம் அல்லது இலங்கையர்களின் உறுதியான எதிர்காலம் மற்றும் அமைதி என்பவை எல்லாம் இந்தக் கேள்விகள் காணும் விடைகளிலேயே உருவாகக் கூடியன.

ஆனால், இந்தக் கேள்விகளுக்கான விடைகளைக் காண வேண்டிய பிரக்ஞைபூர்வமான சிந்தனையும் அணுகுமுறையும் யாரிடம் உண்டு? இலங்கைத் தீவில் அமைதிக்கும் சமாதானத்துக்கும் நீதிக்கும் ஜனநாயத்துக்குமாகச் செயற்படும் தரப்புகள் ஏதாவது உண்டா? ஒரு பேராளுமை மிக்க – மதிக்கத்தக்க ஜனநாயகத் தலைவரோ, அரசியற் தலைவரோ, மதகுருவோ, ஊடகத்துறையினரோ, படைப்பாளியோ, போராட்டத்தலைவரோ இன்றில்லை.

இருக்கின்றவர்கள், செயற்களத்தில் நின்றியங்குவோர் அனைவரும் ஏதோ வகையிற் காயடிக்கப்பட்டவர்களாகவே உள்ளனர். இதனால், கடந்த காலத்தின் நிழலைக் கடந்து பேராளுமையுடன் பொதுத்தளமொன்றில் இவர்களால் விரிந்து கொள்ள முடியவில்லை.

இதற்குக் காரணம், கனத்துத் தடித்த அரசியற் சூழல் என்று யாரும் வாதிடலாம். ஆனால், அத்தகைய அழுத்தம் மிக்க அரசியற் சூழலிற்தான் பேராளுமையோடு ஒரு மக்கள் தலைமை, ஜனநாயகத்தை முன்னெடுத்துச் செல்லும் ஆற்றலோடு வெளிக்கிளம்பும்.

ஆனால், இன்றைய இலங்கையில்?

அரசிடம் ஏராளம் பலவீனங்களும் அதிகாரத் திமிருமே மிஞ்சியிருக்கிறது. ஏனைய கட்சிகள் கடந்த காலத்தின் அணுகுமுறை வட்டத்தை விட்டு வெளியே வர முடியாமல் உள்ளன. பெரும்பாலும் கடந்த காலச் சேற்றுப் பரப்பிற்குள் அமிழ்ந்து போயுள்ளன. இதனால், எந்த ஒரு ஊடகத்திலும் ஒரு புதிய – நம்பிக்கையூட்டக்கூடிய செய்தியைப் பெறமுடியாமல் மக்கள் திணறுகின்றனர். கடந்த காலத்தின் உறைநிலையிலேயே நிகழ்காலமும் எதிர்காலமும் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இதை உடைத்து முன்னேறத்தக்க நிகழ்ச்சிகள் எதையும் காணோம். இருக்கின்ற கட்சிகளினதும் தலைவர்களினதும் நோக்கம் ஆட்சியைக் கவிழ்ப்பது? பதிலாகப் புதிய ஆட்சியை தாம் அமைப்பது. ஆனால், அது ஒரு மாற்று ஆட்சியாக நிச்சயமாக இருக்கப்போவதில்லை. முக்கியமாகத் தேர்தல்களினூடாகத் தங்களுடைய இருப்பைத் தக்க வைத்துக் கொள்வது. அது எவ்வகையிலேனும். அவ்வளவுதான்.

இதற்குத் தக்க பொறிமுறைகளை மிகச் செம்மையாக ஒவ்வொருவரும் வைத்துள்ளனர். அதற்கப்பால் அமைதிக்காகவும் நிரந்தர சமாதானத்துக்காகவும் இலங்கைச் சமூகங்களின் முன்னேற்றத்துக்காகவும் சிந்திக்கவோ செயற்படவோ அவை தயாராக இல்லை.

ஆகவே விடைகாணப்படாத கேள்விப்பரப்பு மேலும் அகலித்துச் செல்கிறது. இந்தக் கேள்விப்பரப்பு நிச்சயம் நாட்டையே மூழ்கடித்து விடக்கூடியது. ஒரு நாட்டின் சிறப்பென்பது, மக்களின் மனங்களில் எழுகின்ற கேள்விகளுக்கு விடைகளைச் சிறப்பாக – நடைமுறைக்குரிய வகையில் அளிப்பதிலேயே தங்கியுள்ளது. ஆனால், இலங்கையில் இது எதிர் மாறாகவே இன்னும் உள்ளது.

இதேவேளை, இலங்கையின் மீது வெளிச் சக்திகளின் தலையீடுகள் அதிகரித்துள்ள நிலையில் – பலவீனமடைந்துள்ள இலங்கையில் – அமைதியும் பொருளாதார ஸ்திரத்தன்மையும் இலகுவில் ஏற்பட்டு விட முடியாது. இந்தப் பிரதான கருதுகோள் பலரிடமும் காணப்படுகிறது. இது நிராகரிக்கப்பட முடியாத ஒன்றும் கூட.

வெளிச்சக்திகளின் நெருக்கடிகளாலும் உள் நெருக்கடிகளாலும் முழு இலங்கையுமே நெருக்கடிக்கும் சிதைவுக்கும் உள்ளாகிறது. கடந்த காலத்தில் நடந்ததும் இதுதான். இந்திய நெருக்கடி, இந்திய இராணுவ வருகை என்பது தனியே தமிழர்களை மட்டும் பாதிக்கவில்லை. அதன் விளைவான அரசியல் விளைவுகள் இலங்கை முழுவதும் வெவ்வேறு நிலைகளில் பிரதிபலித்தன. அன்று தமிழ்ப்பகுதிகளில் நடந்த கொலைகள், பலிகளுக்குக் குறைவில்லாமல் தென்பகுதியிலும் கொலைகளும் பலிகளும் அரசியல் நெருக்கடிகளும் நடந்தன.

இன்று இன்னொரு நெருக்கடியாக சர்வதேச அழுத்தங்கள் தென்படுகின்றன. இந்த அழுத்தங்கள் தீவிர நிலையில் வருமாக இருந்தால், அது முழு இலங்கையர்களுக்குமுரியதாகவே அமையும். அழுத்த வடிவங்களில் பிரதேச, இன வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், சுமை என்பது எல்லோருக்கும் ஒன்றே. யாரும் விதிவிலக்காகி விட முடியாது.

பிராந்திய ஆதிக்கப்போட்டி மிக உக்கிரமடைந்துள்ள காலகட்டம் இது. முன்னர் செல்வாக்குச் செலுத்திய இந்தியாவுக்கே இப்பொழுது பெரும் நெருக்கடிகள். சீனாவும் அமெரிக்கா சார்பான மேற்குலகமும் இலங்கையின் மீது அதிக செல்வாக்கைச் செலுத்த முயற்சிக்கின்றன. இதற்காக ஏகப்பட்ட பிரயத்தனங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

ஆகவே, இத்தகைய பாதகமான நிலைமைகளின் மத்தியில் இன்னும் விடையைக் காண்பதற்கான கேள்விகளை உருவாக்கும் போக்கை மக்கள் அனுமதிப்பது பொருத்தமானதல்ல. எத்தகைய அரசியற் செயற்பாட்டுக்கும் விளைவுகளை மக்களே செலுத்துகின்றனர். அல்லது அவர்களே பொறுப்பேற்கின்றனர். இந்த யதார்த்தத்தை கடந்த கால, நிகழ்கால அனுபவங்கள் தாராளமாகச் சொல்லும். ஆகவே அவர்களே விழிப்பு நிலையில் இருக்க வேண்டியுள்ளது. மக்களை விழிப்படைய வைக்கும் பொறுப்பு ஊடகங்களுக்குரியது. ஆனால், ஊடகங்கள் பலவும் சேற்றுப் பரப்பில் மிதக்கும் அரசியலுக்கு வர்ணம் பூசுகின்றன.

இது போர் முடிந்த பின்னரான காலம்.

போர்க்காலத்தின் எண்ணங்களுக்கும் போருக்குப் பிந்திய கால எண்ணங்களுக்குமிடையில் வேறுபாடுகள் உண்டு. போர்க்காலத்தில் போர் அபாயத்திலிருந்தும் போர் ஏற்படுத்தும் அழுத்தங்களிலிருந்தும் விடுபடும் நோக்கமே முன்னிலைப்பட்டிருக்கும். கூடவே போரை முடிவுக்குக் கொண்டு வருதல் அதன் தொடர்ச்சியாக அமைதியை உருவாக்குதல் என்பதை மனம் அவாவும்.

ஆனால், போருக்குப் பிந்திய காலத்தின் மனவேட்கை பல்நிலைப்பட்டது. போருக்குப் பிந்திய சூழலில் போரிலிருந்து விடுபட்ட ஆறுதற் தன்மையும் வெற்றி தோல்விகள் குறித்த மனப்பாங்குகளும் அழுத்தம் பெற்றிருப்பதனால், பின்னர் உருவாக்கப்பட வேண்டிய மாற்றங்களிலும் முன்னேற்றங்களிலும் செயற்பாட்டு வடிவங்களிலும் ஏகப்பட்ட முரண் அம்சங்கள் காணப்படும். அவையே தற்போது காணப்படுகின்றன. இந்த நிலையை மாற்றி, சமநிலைப்படுத்தக் கூடிய நிகழ்ச்சிகள் – சிந்தனைகள் – ஆளுமைகள் அற்ற வெற்றுப் பரப்பில் இலங்கையின் நிகழ்காலம் உள்ளது.

இலங்கையில் ஐக்கியத்துக்கும் இடமில்லை, பிரிவினைக்கும் இடமில்லை என்ற கசப்பான அனுபவப் பிராந்தியமே இன்னும் யதார்த்தமாக உள்ளது.

அந்நியரின் பிடியிலிருந்து விடுபட்ட பின்னுள்ள இலங்கை அல்லது சுதந்திரமடைந்த இலங்கை வரலாறு என்பது நெருக்கடியின் களமாகவே இருக்கின்றது. சுதந்திரத்துக்குப் பிந்திய இலங்கை இரத்தம் சிந்திய அரசியல் அரங்காகவே இருந்துள்ளது.

ஆகவே நாடு மேலும் மேலும் அக நிலையிலும் பௌதீக ரீதியாகவும் பலவீனப்பட்டே செல்கிறது. மக்களின் மனங்கள் இருளாலும் அச்சத்தினாலும் நிரப்பப்படுகின்றன. எதிர்காலத்தைக் குறித்துச் சிந்திக்கும் ஒரு இலங்கையரின் மனதில் கலகத்தைத் தவிர வேறெந்த ஒளிப்புள்ளிகளும் தெரியப் போவதில்லை. உங்களுடைய மனதில் என்ன நிரம்பியுள்ளது?

00

 

33 Comments

  1. நெடுதுயிலோன் says:

    கருத்தில் விஷயங்கள் தொனித்தாலும் குடுகுடுப்பைக்காரனின் நடுக்கம் இருக்கத்தான் செய்கிறது.

Post a Comment