Home » இதழ் 03 » துப்பாக்கிகளும் றோஜாப் பூக்களும் (guns and roses)

 

துப்பாக்கிகளும் றோஜாப் பூக்களும் (guns and roses)

 

– ஈவ்லின் அசாத் (Evelyne Accad) தமிழில் – சோ.பத்மநாதன்

இல்லினொய்ஸ் பல்கலைக் கழகத்தில் ஒப்பிலக்கியப் பேராசிரியராகப் பணியாற்றும் ஈவ்லின் அசாத் (Evelyne Accad) நாவலாசிரியரும் இசைப் புனைபவராகவும் விளங்குகிறார்.

———————————–

இந்நகரம்… இதை என்னவென்று சொல்வது? ஒரு வேசி! ஆயிரம் ஆண்களோடு படுத்த பின்பும் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு வேசியை யாரால் கற்பனை செய்யமுடியும்? இருந்தபோதும் ஆயிரம் குண்டுகளைப் பெற்றுக்கொண்டும் இந்நகரம் தன் இருப்பைத் தொடர்கிறது. இந் நகரத்தை இக் குண்டுகளால் சுருக்கிச் சொல்ல முடியும்… பெய்றூற்றை நாங்கள் அழித்த பிறகு, கடைசியாக அதை அழித்து விட்டதாக நாங்கள் நினைத்தோம்… ஆனால் போர் முடிந்துவிட்டதென்ற பிரகடனம் செய்யப்பட்டு பெய்றூற்றின் நம்பமுடியாத அழிவுக்காட்சி ஒளிபரப்பப்பட்ட போது நாம் அந்நகரை அழிக்கவில்லையென்று கண்டோம். அதன் சுவர்களில் நாங்கள் சில விரிசல்களை மட்டும் ஏற்படுத்தியிருந்தோம். அதை முற்றாக அழிக்க வேறு போர்கள் தேவைப்படும்.

அதிகம் பித்துப்பிடித்த, குடல் வெளியே தள்ளிய, முப்பது நாற்பது பேரால் வன்புணர்வுகளாகி மனநோய் மருத்துவமனைகளில் கிடக்கும் குடும்பங்களால் கைவிடப்பட்ட இளம் பெண்களின் பெருந்துயரம் போல் இருக்கிறது இந்நகரம்! ஞாபகத்தை ஒருவரால் எவ்வாறு குணமாக்க முடியும்? அந்தப் பெண்களைப் போல் இந்நகரமும் பலாத்கராத்துக்குள்ளானது. எல்லாப் பாலியற் போகங்களுக்கும் மையமான இந் நகரத்தில் ஏராளமான பணமும் முற்றுப்பெறாத பல நிர்மாண வேலைகளும் இருக்கின்றன. சீமெந்து மண்ணோடு கலந்து மெல்ல மெல்ல எல்லா மரங்களையும் மூக்கடைக்கச் செய்து விட்டது.

மேலேயுள்ள இரண்டு பந்திகளில், எது ஒரு பெண்ணால் எழுதப்பட்டது, எது ஒரு ஆணால் எழுதப்பட்டது என ஊகிக்கும்படி உங்களைக் கேட்டால் என்ன செய்வீர்கள்? பெய்றூற் பற்றிய இவ்விரு படிமங்களில், நேரெதிரான இரு உணர்ச்சிகள் வெளியிடப்படுகின்றன. முரண்படுகின்ற இரு தரிசனங்கள் வெளிவருகின்றன. முதலாவது எல்லாத் தீவினைக்கும் சீரழிவுக்கும் பொறுப்பான விபச்சாரியை வெளியே அனுப்ப விளைகிறது. விடுபட முடியாத இச் சூழ்நிலையிலிருந்து தப்புவதற்கு இளம் பெண்ணை வன்முறையாக அழிப்பதே ஒரே வழி என்கிறது. இரண்டாவது தரிசனம் மனிதனுடைய வன்முறைக்குப் பலியாகும் பெண்ணுக்காக, நகருக்காக பாலியல் வன்புணர்வுக்காளானவர்களுக்காக இரங்குகிறது. மத்தியதரைக் கடற்பிரதேசத்து வழக்காறுகள் மீது குற்றம் சாட்டப்படுகிறது. போலி ஆசாரமும் பெண் ஒடுக்குமுறையும் பைத்தியத்துக்கும் நகரின் அழிவுக்கும் மூலம் என்று காட்டப்படுகிறது. முதலாவது மேற்கோள் எலியாஸ் கடற் என்ற “சிறுமலை” என்ற நூலின் ஆசிரியரான ஓர் ஆண் சொன்னது. இரண்டாவது மேற்கோள் “சித்மாறி றோஸ்” ஐ எழுதிய எத்தேல் அட்னான் என்ற பெண்ணின் கூற்று.

பெய்றூற் பற்றிய ஓர் ஆணுடையதும் ஒரு பெண்ணுடையதுமான தரிசனங்களிலுள்ள வேறுபாடு 1987 இல் என் பெண் நண்பர்களை அவதானித்த போது தெளிவாகத் தெரிந்தது. வாரத்தில் இரண்டு மூன்று தடைவ பெய்றூற்றில் மிக ஆபத்து நிறைந்த பிரி கோட்டைக் கடந்து போகவேண்டியிருந்தது. (விசேட அனுமதி பெற்ற ஒரு சில கார்களே போக அனுமதிக்கப்படும்.) இந்தச் சமிக்ஞையால் லெபனானின் மீள் ஒருங்கிணைப்பு நிகழும் என்று நம்பினர். அவர்கள் சகல தர்க்கங்களுக்கும் அப்பால் தங்கள் ஆண் சகாக்களின் வியப்பு மிகு நோக்கின் மத்தியில் இதைச் செய்தனர். ஆயுதங்கள், போர்க்குழுக்கள், அரசியல் விளையாட்டுக்கள் ஆகியவற்றின் சட்டங்களை அவர்கள் மீறுகின்றனர் அந்தத் தலம் எவ்வாறு, ஒவ்வொரு நாட்களையும் தாம் சந்திக்கும் இடமாக ஊழி வெளியில் தாம் புன்னகைத்தபடி உலவும் இடமாக மாறிவிட்டதென என்னிடம் கூறினர். இந்த அணிவகுப்பு – இந்த எல்லை கடத்தல் லெபனானின் தாக்குப்பிடித்தலுக்கு அவசியமான ஒரு துணிச்சல்மிக்க செயலாகும்.

இந்த நகரம் – என்ன இது?

பால் வினையம் எவ்வாறு போரோடு தொடர்புபட்டுள்ளது என்பதை லெபனான் யுத்தம் பற்றி ப்ரெஞ்சிலும் அராபிய மொழியிலும் ஆண்களும் பெண்களும் எழுதியுள்ள நாவல்களில் காணப்படும் உதாரணங்களோடு விளக்குவதே இவ்வறிக்கையின் நோக்கம். சமூக, பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சனைகள் பற்றிய பகுப்பாய்வுகளில் பெரும்பாலும் பால் வினையம் விடுபட்டுப் போகிறதென்பதும், அது தீவிரமாக பரிசீலிக்க வேண்டிய அம்சம் என்பதும் என் வாதம். பால் வினையம் என்று கூறும் பொழுது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உடலியல் மற்றும் உளவியல் உறவுகளையே நான் கருதுகின்றேன். தவிரவும் பாலியற் செயல், லெபனானிய சமய வழக்காறுகளோடு தொடர்பு பட்டது. காதல், அதிகாரம், வன்முறை, மென்மை ஒடுக்குமுறையோடும் பொறாமையோடும் தொடர்புடைய ஆள்புலம் என்ற உணர்வுகள் சம்மந்தப்பட்டது. இத் தொடர்புகளின் முக்கியத்துவத்தை உணர்ந்த பல எழுத்தாளர்கள் இத் தொடர்புகள் பற்றி நோக்கத் தொடங்கியுள்ளனர். மிறாண்டா டேலிஸ் இன் “பெண்கள் இரண்டாம் பால்” என்ற தொகுப்பிலுள்ள “பெண்கள் போராட்டங்களும் தேசிய விடுதலையும்” என்ற கட்டுரை நல்லதோர் உதாரணம். தன் முன்னுரையில் அவர் சொல்கிறார் “தம்மீது பிரயோகிக்கப்படும் இரட்டை ஒடுக்குமுறையின் இயல்பை அடையாளம் காணத்தொடங்குகையில் மூன்றாம் உலகிலுள்ள பல பெண்கள் அவசியமேற்படும் போது கெரில்லா இயக்கங்களில் சேர்ந்து தம்மால் அரசியல் பொருளாதார நடவடிக்கைகளிலும் பங்குபெற்றவும் கூடுமென்று உணர்கிறார்கள். ஆனால் இவை எல்லாவற்றின் பின்னும் பெண்கள் என்ற வகையில் இரண்டாந்தரப் பிரஜையாகவும் ஆண்களிலும் தாழ்ந்தவர்களாகவும் பிள்ளைகளைச் சுமப்பவர்களாகவும் வீட்டு வேலைக்காரர்களாகவும் இருப்பதை உணர்கிறார்கள்’.

மேலும் அரசியல், விஞ்ஞானம் மற்றும் அறிவியல் வாதங்களுக்கு முகமூடியிட்டு தொழிற்படும் ஆண் தர்க்கத்தின் மீது எவ்வாறு வரலாறு கட்டியெழுப்பப்பட்டுள்ளதெனத் தெரிவிக்கிறார். ஐன் வில்லியம் லப்பியேர், தன் பகுப்பாய்வில் ‘வரலாற்றறிவு மக்கட்தொகுதியின் அரைவாசியிராகிய பெண்களைப்புறக்கணித்து வந்துள்ளதென்பதை மறுக்கககமுடியாது’ என்று குறிப்பிடுகிறார்.

முன்பு கருதப்பட்டதை விட சமூக மற்றும் அரசியல் பிரச்சனைகளின் மையத்தில் பால் வினையம் இருப்பதையும் அரசியல் புரட்சிக்குள் பாலியற் புரட்சி உள்ளடக்கப்பட்டாலொழிய சமூக உறவுகளின் உண்மையான மாற்றம் ஏற்படாதென்பதை வலியுறுத்த விரும்புகிறேன். “உலகை மாற்றுவதாயின் எங்கள் பாலியல் உணர்திறன்களின் சாராம்சத்தை மாற்ற வேண்டும். எங்கள் முழு வாழ்க்கையும் சம்மந்தப்பட்ட செயல் எதையும் எவ்வளவு பிரக்ஞை பூர்வமாகவும் விசுவாசமாகவும் செய்வோமோ அவ்வாறு நாம் செய்யவேண்டும்” என்கிறார் அன்ட்றியா டுவோர்கின்.

பாலியற் புரட்சியென்பது தன் சகபாடி, குடும்பம் பால்வினையம் மற்றும் சமூகம் பற்றி குறிப்பாக தனியாள் நிலை மற்றும் பால்நிலை ஒட்டுறவில் வியாபித்துள்ள ஆதிக்கம் செலுத்துபவர் – ஆளப்படுபவர் என்ற பாரம்பரிய உறவுகள் பற்றிய மனப்பாங்குகளில் ஏற்படும் மாற்றம் என்று கருதுகின்றேன். மக்களிடையே அன்பை, மென்மையை, பகிர்தலை, அடையாளங்காணுதலை நாம் வளர்க்க வேண்டும். இதனால் வாழ்வின் ஏனைய புலன்களாகிய அரசியல், பொருளாதார, சமய தேசியத் துறைகளிலும் மாற்றத்தை உண்டாக்கவல்ல உறுதியான அடித்தளம் இடப்படும். ஏனெனில் இத்துறைகளிலும் ஆதிக்க மனப்பாங்குகளே நிலவுகின்றன.
சமத்துவம் ஒத்த தன்மையை உண்டாக்கும். ஒத்ததன்மை போரை நிறுத்தும். மனித இனம் முழுவதும் தானே ஆக முனையும் நாயகர் ஒவ்வொருவரும் தன் இரட்டையாகிய மற்றவரை நன்றாகப்புரிந்து கொள்ள முடியும். ஊமைகளாகியுள்ள இந்தச் சோடியை ஒன்றிணைக்கும் உணர்வுகள் இயற்கையில்தான் மாறுதலடைய முடியும். அந்நியத் தன்மை மறைய நெருக்கம் உண்டாகிறது. ஆசையின் வேட்கையின் ஒரு பகுதியை நாம் இழக்கக்கூடும. ஆனால் ஒரு குடும்பத்தின் உறுப்பினர்களை ஒன்றுபடுத்தும் மென்மையையும் இணக்கத்தையும் நாம் ஈட்டலாம். ஈற்றில் எல்லோரும் தம் ஆயுதங்களை போட்டவர்களே.

அரசியற் புரட்சியென நான் கருதுவது காலனித்துவ, நவகாலனித்துவ சூழலில் தேசப்பற்றால் உந்தப்பட்ட போராட்டத்தையே. லெபனானின் ஒரு சின்னஞ்சிறு பிரதேசத்தை தம் ஆதிக்கத்திற்குட்படுத்தி லெபனான் எதிர்காலத்தில் எப்படி இருக்க வேண்டும் என்ற தம் கனவே அதன் மீது திணிக்க விரும்பும் எல்லா அரசியற்கட்சிகளும் ஒன்றிணைந்து தம் நாடு உடைமையாக்கப்பட்டு நுகரப்படும் ஒரு பண்டமல்ல, நேசிக்கப்படவும் மரியாதை செலுத்தப்படுதற்கும் உரியது என்று நம்புவார்களாயின் உள்ளக வன்முறையும் அழிவும் முரண்பாடுகளும் ஒழிந்து நாம் நேராக ஒரு தீர்வை நோக்கி நகர முடியும்.

இந்தச் சூழலில் தேசியம் – அதாவது ஒருவர் தன் நாட்டை நேசிப்பது – அவசியம் என்று படுகிறது. லெபனானின் ஒருமித்து நிற்றலும் வெவ்வேறு சமூகங்களிலேயே இருக்கும் இணக்கப்பாடுமே தேசிய ஒருமைப்பாட்டை உறுதி செய்யும். அதிகம் எழுதப்படும் தேசியம் என்ற கருத்தை இவ்வாறுதான் நான் விளங்கிக்கொள்கிறேன். கிழக்கிலும் மேற்கிலும் இப்பதத்தின் பழைய மற்றும் புதிய எண்ணக்கருக்களில் தேசியம் என்பது புரட்சிக் கருத்தாடலின் சிக்கலானதொரு கூறாகும். அரசியல் அதிகாரத்தின் பல்வேறு முகங்களிலும் அது நகரும். உதாரணமாக தேசியம் ஒரு தீவிர நிலையில் பாஸிஸம் ஆகலாம். தெரேஸா வியல் மனேசியரா மரியா அன்ரோனியற்றா மஸியோக்கியின் பாஸிஸ கருத்தியல் பற்றிய பகுப்பாய்வைத் தருகிறோம்.; எல்லா மனிதக் குழுக்களிலும் கூட்டுப்பகுத்தறிவின்மை தொழிற்படுகிறது. பிரக்ஞை பூர்வமான சக்திகளும் பிரக்ஞையில்லாத சக்திகளும் வெகுஜனத்தை தனியாள் நிலை கடந்து இத்தாயக தேசத்தின் பூரண விசுவாசிகள் ஆக்கின. இவ்வின வெறிக்கு முதலில் பலியான பெண்கள் சாத்தியமான எல்லாத்தியாகங்களுக்கும் தயார் என்ற சுயவதையை பின்பற்றுகின்றனர்.
00

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment