Home » ஆசிரியர் குறிப்பு » ஆசிரியர் குறிப்பு!

 

ஆசிரியர் குறிப்பு!

 

ஜனநாயக அடிப்படைகளை துஸ்பிரயோகம் செய்வதற்குப் பதில் பேணுவது முக்கியமானது !

———————————————————————————————————
அன்புள்ள நண்பர்களே,

அதிகமதிக அரசியல்,சமூக முரண்பாடுகளும், குழுவாதமும்,விடாப்பிடியான இறுக்கமும் ஒதுக்கமும் நிறைந்த அரசியல் சமூக பண்பாட்டு வெளி நம்மது .இங்கு பொதுத்தளத்திலான உரையாடல் என்பது “கல்லில் நார் உரிப்பதற்கு” சமமானதாக இறுகிக் கிடக்கிறது. இத்தகைய தளத்தில் நடைபெறுகின்ற விவாதங்களும் விமர்சனங்களும் நிதானமானவையாக இருப்பது மிகமிக அவசியம் என நாங்கள் கருதுகிறோம். அதையே நாம் பின்பற்றவும் வலியுறுத்தவும் விரும்புகிறோம். அதுவே ஆரோக்கியமானது என நாம் ஆழமாக நம்புகிறோம்.

கடந்த காலத்தின் தவறுகளில் இருந்தும் துயரங்களிலிருந்தும் பின்னடைவுகள், தோல்விகளிலிருந்தும் மீள்வதற்கு நிதானமும், சகிப்புணர்வும், புரிந்துணர்வும் மிக மிக அவசியமாக உள்ளன. அனைவருக்குமான சுய விமர்சனம்,அனைவருக்குமான மீள் பரிசீலனை என்ற அடிப்படை விசயங்களில் கவனத்தைக் குவிப்பதும் அதை நோக்கிய பண்பாட்டை வளர்ப்பதும் “எதுவரை”யின் நோக்கங்களில் முக்கியமானது.

தன்னிலைசார்ந்த சிந்தனையும் தன்முனைப்பும் பொதுத்தளத்திலான உரையாடல் வெளிக்கு பெரும் சவாலாகவும் கேடாகவும் உள்ளன.தான்/தாம் மட்டும்தான் சரியாக இருக்கிறோம்,மற்றவர்கள் சரியாக இல்லை என்கிற பார்வையும்,மனோபாவமும் இந்த நிலைமையை மேலும் சிக்கலாக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது.

“எதுவரை”யை மாதாந்த இணைய சஞ்சிகையாக நாம் மீள ஆரம்பிக்கும்போது பல்வேறு கருத்துநிலை கொண்டோர்களிடையேயும் ,பல்வேறு தளங்களில் தொடர்ந்து செயற்பட்டு வருவோரிடையேயும் வெளிப்படையான உரையாடல்களும் ,கருத்து பகிர்வும் ,ஜனநாயகக் கோட்பாட்டின் சாரத்துடன், பகிரங்கத்தளத்தில் புரிந்துணர்வுடன் மேற்கொள்ளப்படுவது நல்லது என்பதையும் தெரியப்படுத்தி வந்திருக்கிறோம்.

கருத்து தெரிவிக்கிறோம்,கேள்வி கேட்கிறோம் என்கிற கோதாவில் வருகின்ற அனைத்தையும்,பின்னூட்டங்களையும் நாம் அனுமதிக்கவில்லை என்பது ஒருசிலரின் குற்றச்சாட்டாக வருகிறது.எத்தகைய விவாதங்களும் விமர்சனங்களும் கருத்துக்களும் பகைமையை மேலும் கூர்மைப்படுத்தி முரண்நிலையை துருவமயப்படுத்திச் செல்ல இடமளிப்பதை நாம் விரும்பவில்லை. விவாதங்களுக்கும் கருத்துக்களுக்குமான உரையாடல் வெளியை உருவாக்குவதே எங்கள் நோக்கம்.அதனை பல்வேறு சந்தர்ப்பங்களில் தெளிவுபடுத்தி வந்திருக்கிறோம். ஜனநாயக அடிப்படைகளை துஸ்பிரயோகம் செய்வதற்குப் பதில் பேணுவது முக்கியமானது என்பதில் எமக்கு தெளிவான கருத்துநிலைப் பார்வைவுள்ளது .

“எதுவரை” இணைய தளத்திற்கு எழுதுவோர் ,விடயதானத்திற்கு வெளியில் நின்று பின்னூட்டம் இடுவோர்,பரபரப்பிற்காக கேள்வி எழுப்புவோர்,, எமது நோக்கையும் இன்றைய சிக்கலான நிலைமையையும் புரிந்து கொள்ள வேண்டுமென வினயமாகக் கேட்டுக்கொள்கிறோம். இந்த அடிப்படையில் நண்பர்களின் பங்கேற்பையும் ஒத்துழைப்பையும் புரிந்துணர்வையும் விரும்புகிறோம். இதற்கப்பால் துப்பாக்கி போன்று பேனாக்களையும் பகைமைக்கூறுகளோடு தூக்கி அலைவது , நெருப்பை மூட்டி கொண்டாட்டம் என வேடிக்கை பார்ப்பது, விடுப்பு மனதோடு அணுகுவது, போன்ற ஆக்கபூர்வமற்ற எதிர்நிலைகளோடு பயணிக்க முயல்வதைத் தவிர்ப்போம்.

விவாதங்கள்,கருத்து பகிர்வு என்பவை கருத்தியல் தெளிவையும் நட்பையும் செயல்களுக்கான ஊக்கத்தையும் உருவாக்கக் கூடியவாறு அமைவது அவசியமானது எனவும், அதற்கமைந்த ஒரு மன அமைப்பை நாம் உருவாக்க வேண்டும் என்றும் “எதுவரை” விரும்புகிறது.

ஆசிரியர் குழு சார்பாக….

பௌசர்

 

11 Comments

  1. பசறிச்சனை சஹிர் says:

    நல்ல வாசிப்பிற்கான சந்தர்ப்பத்தை வழங்கியமைக்கு ஆசிரியர் குழுவிற்கும் என் இனிய நன்றிகள். சில காரணங்களுக்காக மலேசியா வந்த எனக்கு நல்ல வாசிப்பிற்கான வாய்ப்புக்களை தேடுவதில் சற்று சிரமம் ஏற்ப்பட்டது. சுமார் இரண்டு வருடங்களாக இருந்த என் வாசிப்பிற்கான தாகத்தில், “எதுவரை” தண்ணீர் ஊற்றும் என்ற எதிர்பார்ப்போடு, இவ்விதழ் தொடர்ந்து வெளிவர வேண்டும் என்று வேண்டி வாழ்த்துகிறேன்.

Post a Comment