Home » இதழ் 04 » மரணத்தில் துளிர்க்கும் கனவு !

 

மரணத்தில் துளிர்க்கும் கனவு !

 

நுண்ணுணர்வின் வெளிப்பாடாக அமையும் கவிதை,சொற்களுக்குள் கட்டுண்ட அர்த்த உற்பத்தியை உள்வயப்படுத்திஅதன் கருத்துருவாக்கம்,வெளிப்பாட்டு முறைமை,வடிவஅமைப்பால் பன்முகத்தன்மைக் கொண்டு விரிந்த எல்லைகளைச் சாத்தியமாக்குகிறது.இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப்பின் மொழியின் உச்சபட்ச சாத்தியங்களை நிகழ்த்தும் ஈழத்து நவீன தமிழ்க்கவிதை, அதீத புனைவு, புதிய உத்திகளுக் கூடான  வடிவமைப்பு, குறியீட்டு முறைமைகளுக்கூடான பிரக்ஞை பூர்வமான முன்வைப்பு,முதலியவற்றால் செறிவிறுக்கம் கொண்ட நிகழ் கவிதையாகப் பரிணாமம் கொள்கிறது.
இரண்டாயிரத்துக்குப்பின் ஈழத்தில் எழுந்த கவிதைத் தொகுதிகளில் பெரும்பாலானவை தமிழரின் துன்பியல் வாழ்வியலையும் அது வேரூன்றிய பூர்வீகபூமியையும் அவாவுறுகின்ற கவிதைகளை உள்ளடக்கி தொகுக்கப்பட்ட பிரதிகளாகவே  காணப்படுகின்றன.தமிழர் வாழ்வில் நிலம் பற்றிய பதிவுகள், வரலாற்று ஆவணமாகவும் முதன்மையானதாகவும் முக்கியமானவையாகவும் கருதப்படுகின்ற இச்சூழலில் தமிழரின் வாழ்வியல் இருப்பியலின்; சுவடாகத்துலங்கும் இக்கவிதைகள், ஈழப்போராட்டத்தையும் சிதைந்துபோன போரியல் வாழ்வையும் அதன் வலிகளையும் வன்கொடுமைகளையும் பாடுபொருளாகக் கொண்டவை.

மரணங்கள் மலிந்த பூமியில் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் மையம் கொள்ளும் இக்கவிதைகள் பூர்வீக பூமியை இழந்து தவிக்கும் நலிவுற்ற மக்களின் வாழ்வியலை உயரோட்டமாகவும் உணர்வுபூர்வமாகவும் பதிவு செய்கின்றன. இடிபாடுகளுக்குள் சிதைவுண்டு அழிவுண்ட காலவெளிக்குள் அமிழ்ந்து நொந்து நைந்து போன துயரியின் அவலக் குரலாய் எழுந்து நிற்க்கும் இக்கவிதைகள் இராணுவ ஆக்கிரமிப்புக்களால் பலியாகிப் புதையுண்டு போன உறவுகளின் வலிகளையும் தொடர்ச்சியான இடம்பெயர்வுகளையும் இழப்புக்களையும் பயங்கரவாதத்தின் வன்கொடுமையை எதிர்கொண்ட வாழ்க்கைச் சூழலையும் பேசுகின்றன.இத்தடத்தில் முகம் கொள்ளும்“மரணத்தில் துளிர்க்கும் கனவு”அழிவென்ற பேரிலக்குடன் நடத்தப்பட்ட போரில் ஈழத்தமிழரால் தொலைக்கப்பட்ட – புதையுண்ட வாழ்வியலை ஆழமாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்யும் அதே வேளை மூடுண்ட வெளிக்குள் குரல்வளைகள் நெரிக்கப்பட்ட மக்களின் நிகழ்சார் இருப்பை ரணமும் வலியுமாக முன்மொழிகிறது.

ஈழத்து மக்களின் புரையேறிபோன வாழ்வை வெவ்வேறு கோணங்களில் பல்வேறு அனுபவங்களுக்கூடாகக் வெவ்வேறு காலகட்டங்களைக் காட்சிப்படுத்தும் இத்தொகுப்பு, கவிதைகள் வாயிலாக வடக்கு, கிழக்கு அப்பால் வடமேல்மாகாணத்தையும் ஒன்றிணைக்கிறது. அனார், அலறி, பஹிமா ஜஹான், சித்தாந்தன், துவாரகன், தீபச்செல்வன், பொன்.காந்தன், தானா.விஷ்ணு என எட்டு கவிஞர்களின் எண்பது கவிதைகளை உள்ளடக்கி வெளிவந்த இத்தொகுப்பின் தொகுப்பாசிரியார் கவிஞரும் ஊடகவியலாளருமான பாலேந்திரன் பிரதீபன் எனப்படும் தீபச்செல்வன் ஆவார்.
யுத்தபூமியின் மூடுண்ட நகரத்தின் வாழ்வியல் பொழுதுகளைப் பாடும் தீபச் செல்வனின் கவிதைகள் சமகால நிகழ்வுகளின் பதிவுகளாகத் தன்னைக் கட்டமைத்துக் கொள்கின்றன.துயர் மண்டிய மரணவாழ்வின் பொழுதுகளைக் கண்டு நொந்து புண்ணுற்றுப்பாடும் இக்கவிதைகள் ஈழத்தமிழரின் வாழ்வியலை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டுபவை.ஒரு கோயிலைக் கைப்பற்ற தொடங்கிய யுத்தம் பேரழிவாய், பெருஊழியாய் மாறி ஈழத்தமிழரை அழித்த கதையைச் சொல்லும் “போர்தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்”பொருட் பெறுமானமுள்ள  வரலாற்று நிகழ்வின் ஒரு பதிவை ஆவணப்படுத்துகிறது.
“போராளிகள் மடுவை விட்டுப்  / பின்வாங்கினர் /நஞ்சூரிய உணவைத் /
தின்ற  / குழந்தைகளின் கனவில் /நிரம்பியிருந்த  / இராணுவ
நடவடிக்கையிலிருந்து  / போர் தொடங்குகிறது.
நகர முடியாத இடைஞ்சலில்/நிகழ்ந்து வருகிற  /எண்ணிக்கையற்ற /
இடம் பெயர்வுகளில் /கை தவறிய  /உடுப்புப் பெட்டிகளை விட்டு /
மரங்களுடன் /ஒதுங்கியிருக்கின்றனர் சனங்கள்…”
(மரணத்தில் துளிர்க்கும் கனவு -88)

மனித வாழ்வின் உயிர்ப்பின் கணங்களை நிதர்சன வாழ்வுக்கூடாக இக்கவிதை  புடம் போட்டுக்காட்டுகிறது.
அச்சுறுத்தும் வன்முறைகளினதும் அவ்வன்முறைகளினால் நிகழ்த்தப்பட்ட மனிதப்படுகொலைகளினதும் கோரமுகங்களை இதயசுத்தியுடன் மென்னுணர்வுத்தளத்தில் வெளிப்படுத்தும் ‘தீபச்செல்வனின்’“எல்லாக் கண்களையும் இழந்த சகோதரியின் கனவு” நிகழ்வின் வழி மனிதம் ஏந்திய பெருந்துயரை தத்துருபமாகக் கண்முன் நிறுத்துகிறது.
“….குழந்தைகளின் குருதியால் ஊறியிருந்தபடி
பெருநிலத்தை அவள் இறுதியில் பார்த்திருக்கிறாள்
என்றும் தன்னால் தன் நிலத்தை
பார்க்க முடியாதபடி திரும்பியிருக்கிறாள்
கடலால் கொண்டு செல்லப்பட்ட நாளிலிருந்து
கனவிழந்து தன் உலகத்தை தேடிக்கொண்டிருக்கிறாள்
உடலெங்கும் ஷெல் துண்டுகள் ஓடியலைகின்றன
கண்களை இழந்த சகோதரி கனவுகளைப் பற்றியே பேசுகிறாள்…”
(மரணத்தில் துளிர்க்கும் கனவு -103)
யுத்தம் குழந்தையின் அகப் புற உலகைச் சிதைத்து நகரைச் சின்னா பின்னப்படுத்துகிறது.அழிவுண்ட நகரத்தில் இருந்து எழும் மனித பேரவலத்தின் குரல் தீபச்செல்வனின் கவிதைகளில் மனிதத்தின் வலியாய் ஒளிர்கிறது.
காயத்திலிருந்து கொட்டுகின்ற கனவுகளைக் கூடச் சிதைக்கின்ற இராணுவ நடவடிக்கையால், பதுங்கு குழிக்குள் பல்லாயிரக்கணக்கான துன்பங்களை வாழ்வின் வலிகளாகத்தாங்கி கூனிக் குறுகி வாழும் ஈழமக்களின் அவல வாழ்வைக் காட்சிப்படுத்தும் தீபச் செல்வனின் ‘கடல் நுழைகிற மணற் பதுங்கு குழி’ பெருந்துயர் பொதிந்த அழிவின் குறிகாட்டியாய் முகம் கொள்கிறது.காலவடுவின் நிகழ்ப் புற பொருண்மையில் உருக்கொள்ளும் இக்கவிதை போரினால் காவு கொள்ளப்பட் சூழலில் வாழ்தலுக்கான எத்தனிப்பின் சுவடுகளை உணர்த்தி நிற்கிறது.
குருதியின் பாரத்தையும் கண்ணீரின் உவர்ப்பையும் கொடுந் துயரின் அவலத்தையும் அகதி வாழ்வின் நீட்சியையும் இழப்பின் சுவடுகளையும் தீப்ச்செல்வனின் கவிதைகள் வரலாற்றின் வழி பதிவு செய்கின்றன. ஒருவிதப் பிரச்சாரத்தன்மை தீபச்செல்வனின் கவிதைகளில் ஒளிர்ந்திருந்தாலும் இக்கவிதைகளை ஈழத்து இலக்கியப்பரப்பிலிருந்து ஒதுக்கிவிட முடியாது.ஏனெனில் இவை காலத்தின் சாட்சியாய் நிற்பவை.யுத்த சன்னதத்தின் அழிவின் சிதைவிலிருந்து எழும் இக்கவிதைகள் வாழ்வுக்கும் சாவுக்கு மிடையிலான வலியிலிருந்து பிறப்பவை.

 


நவீன சிந்தனையை உள்வாங்கி பன்முகத்தளத்தில் இயங்கும் அனார் பெண்ணுக்குள்ளே முடங்கிக்கிடக்கும் அநுபவங்களைப் பெண்ணிலை, பெண்ணியநிலை  சார்ந்து நுட்பமாய் வெளிப்படுத்தும் இயல்புடையவர். இத்தொகுப்பில் இடம்பெறும் அனாரின் கவிதைகள் கண்டு கொள்ளப்படாத – வெளிப்படுத்தமுடியாத பெண்மொழிசார் அனைத்து கூறுகளையும் தனனகத்தே கொண்டு இயங்குகிறது.ஆணின் அனுபவக் குரலில் இருந்து வேறுபட்ட இக்குரல் அதீத குறியீடுகளையும் அனுபவ வெளிப்பாட்டுவழி கட்டமைக்கப்பட்ட நவீனகருத்தியலுக்கான மொழிசார் கூறுகளையும் கொண்டு இயங்குகிறது.
ஒரு சமூகப்பண்பாட்டு நடத்தைக்குள் சிக்குண்டு உள,உடல் ரீதியாக ஒடுக்கப்பட்ட பெண்ணின் குரலாய் வெளிப்படும் ‘ஓவியம்’ அனுபவப் பதிவின் மூலம் பெண்ணுக்கென்று எதுவுமில்லாத ஆண்மையச் சிந்தனையால் உருவாக்கப்பட்ட நலிவுண்ட நிஜவுலகைக் காட்சிப்படுத்துகிறது.
“ வெறும் ஓவியத்தின் வாழ்வில் / என்ன அர்த்தமிருக்க முடியும் /அசைய
முடியாக் கைகளும்/நகர முடியாக் கால்களும் /பேசமுடியா உதடுகளும்/
சந்தேகமே இல்லை/வாயில்லா ஜீவன் ஆடாதசையாது  /சுவரில் மாட்டப்
பட்டிருக்கிறது  /பல்லிகள் எச்சில் படுவதையும் எதிர்க்காமல்”
(மரணத்தில் துளிர்க்கும் கனவு -11)
சமூகநியதியைத் தகர்க்க முடியாது அத்தளைக்குள் சிக்குண்டு நலிவுற்று வாழ்வின் அர்த்தமின்மைக்குள் உழலும் குரூரவெளியை அனாரின் ‘யாருக்கும் கேட்பதேயில்லை’ கவிதையிலும் தரிசிக்கலாம்.
அதிக அலங்காரமில்லாத சொற்கள், நேர்த்தியானமொழியமைவு, எளிமையானபுனைவு நுட்பமாகக் கையாளப்படும் மொழிப்பிரயோகம் எனவிரியும் அலரியின் கவிதைகள் மிகைநிலை கவியாடலாக அமையாது அநுபவத்தை உள்வாங்கிய பகிர்தலாகவே அமைகின்றன. ராணுவ ஒடுக்குமுறையும் ஆயுதப் போராட்டமும் வலுப் பெற்ற யுத்த பூமியில் எவ்வித பிரக்ஞையும் ஏற்படுத்தாத மனித இறப்புக்களின் நிதர்சனத்தை, இயல்புற வாழ்வை ‘ஒருவன் கொல்லப்படும் போது’ என்னும் கவிதை மிக எளிமையாகப் பதிவு செய்கிறது.அதே சமயம் அக்கவிதை ஏற்படுத்தும் தாக்கம் அதீதமானது.
“ஒருவன் கொல்லப்படும் போது/பெரிதாக என்ன நடக்கப் போகின்றது.
குருதி பெருகி வடிந்து /பச்சை பசும் புல்தரை/செவ்வரத்தம் பூக்கள்
போலாகப் போகின்றது…./மல்லிகை மணம் கசியும் காற்று /பிணநெடி
சுமந்து வீசப் போகின்றது /அழும் குரல்கள் கணப் பொழுதில் /ஓய்ந்து
விடப்போகின்றன. /இவை தவிர/ஒருவன் கொல்லப்படும் போது /
பெரிதாக என்ன நடக்கப் போகின்றது…”
(மரணத்தில் துளிர்க்கும் கனவு -23)

இனப்படுகொலைகள் தீவிரமடைந்த சூழலில் குரூரத் தாக்குதல்களுக்குள்ளாகி வதையுண்ட மனிதர்கள் ஆழ்கடலிலும் ஆற்றங்கரையோரங்களிலும் பிணங்களாக மிதப்பர்கள்; ‘கடலில் மிதக்கும் சடலங்கள் யாருடையதென்று யாருக்கும் தெரியாது” எனத் தொடங்கும் ‘இனந்தெரியாத சடலங்கள்;’ கடந்த கால நிகழ்வெளியை அப்பட்டமாக எடுத்துரைக்கிறது.
“யாருடைய சடலங்கள் கடலில் மிதக்கிறதென்று
சடலங்களுக்கு தெரியாதது போலவே
கடலில் மிதக்கும் சடலங்கள் யாருடையதென்று
கடலுக்கு தெரியாது.”
(மரணத்தில் துளிர்க்கும் கனவு -26)
‘சொல் பொருள் பின்வரும் நிலையணியை நிகழ்கால இருப்புக்கு ஏற்ப வெவ்வேறு கோணத்தில் பயன்படுத்திய அலறி  ஒரு பொருட்படக் கையாளும் சொற்களைக் கொண்டு சொல்லின் வெளியைத் திறக்கிறார்.இவ் மீப்பொருண்மையில் கட்டுறும் பிறிதொரு கவிதையே சித்தாந்தனின் “பசியோடிருப்பவனின் அழைப்பு”.
“மலைகளை உண்ணும் நுட்பங்களைப் போதித்தாய்/பிறகு
மலைகளின் சுவை பற்றிய பாடல்களை/இசைத்துக் காட்டினாய்/
மழைப் பொழிவுகளுக்குள்/மலைகள் வளரும் அதிசயங்களை
வசியச் சொற்களில் சொன்னாய்/மலைகள் தீர்ந்து போகும்
ஒருநாள் வருமெனில் /அப்போது/மலைகளைத் தின்று
மலைகளாகிய நாம்/நம்மையே பகிர்ந்துண்டு/பசியாறலாம்”
(மரணத்தில் துளிர்க்கும் கனவு -57)
முழுக்கமுழுக்க கருத்தியலை உள்வாங்கி நவீன கதையாடல்வழி இயங்கும் இக்கவிதை பிரச்சினைக்குட்பட்டு மறைந்து போகும் யுகத்தில் கண்ணீர் வழி மனிதனால் மனிதன் காவு கொள்ளப்படும் துன்பியல் நிகழ்வைத் துக்கித்துக் காட்டுகிறது.சிதைவாக்கம் என்னும் பின்நவீனத்துவ களத்தில் இயங்கும் இக்கவிதை வெளிமாயையால் கட்டுண்ட அகவெளியைப் படிமத்துக்கூடாகக் காட்சிப்படுத்துவதுடன் அடக்கி ஒடுக்கப்பட்டு வேட்டையாடப்படும் மக்களின் வாழ்வை மலையென்னும் குறியீட்டுக்கூடாகவும் துல்லியமாக முன்வைக்கிறது.
ஈழத்தின் போரியல் வாழ்வை,அதன் வரலாற்றை, மரபை, தத்துவத்தை கதையாடல் வழி கட்டமைக்கும் சித்தாந்தன்கவிதைகள் ஆழ்ந்த பொருட் பெறுமானம் மிக்கவை.மொழிவழி இயங்கும் நுட்பமான சொல்லிணைகளால் உருவாக்கப்படும் இக்கவிதைகள் பன்முகத்தளத்தில் இயங்குபவை.மூடுண்ட நகரத்தின் இருண்ட வாழ்வின் ஆறாத ரணங்களையும் கொடுமையான மரணவெளிகளையும் காட்சிப்படுத்தும் ‘மூடுண்ட நகரத்தில் வாழ்பவனின் நாட்குறிப்பு’ குருதி சுவரப்பட்ட கடந்த காலத்தின் ஆவணப் பெட்டகம்.
“தெருமரங்கள்
சவத்துணி போர்த்தியுள்ளன
இரவுகள்
நாய்களின் குரல்வழி அவலமுறுகின்றன.;;;;;……
சட்டத்தால் கட்டப்பட்டிருக்கிறது இரவு
வாகனங்களின் இரைச்சல்
கனவுகளில் எதிரொலிக்கிறது
கபாலத்தில் எதிரொலிக்கிறது
கபாலத்தில் உதிரத்தின் நெடி தெறிக்கிறது
இந்த இரவை எப்படித்தாண்டப் போகின்றேன்
ஆசுவாசப்படுத்த எவருமில்லை.”
(மரணத்தில் துளிர்க்கும் கனவு -58)
கடந்த கால ஈழத்தின்சனநடமாட்டமில்லா  அச்சமூட்டும் இரவு பொழுதினைக் காட்சிப்படுத்தும் இக்கவிதை யதார்த்த நிகழ்வின் நிழற் பிரதி.தூக்கத்தை தொலைத்து விட்டு நடுநிசியில் மரணத்துடன் இறந்து இறந்து வாழும் உருச்சிதைக்கப்பட்ட தமிழ் ஆத்மாக்களின் இதயத் துடிப்பைப் பதிவு செய்கிறது.
உருமாறும் தேசத்து தலைமைகளால் மனிதப்படுகொலைகள் சப்தமின்றி அரங்கேற்றப்படுகின்றன.; ஒப்பாரிகளும் ஓலங்களும் நிறைந்த மலிந்த மரணவெளிக்குள் நாற்சிகளினல் உருவாக்கப்பட்ட மொத்ஹவுசன் முகாமை விட கொடூர வதைமுகாங்கள் வன்மங்கள் உறையும் கண்களுடன் ஒளிர்கின்றன.அச்சமே வாழ்வாய்ப் போன அசமந்த சூழலில் உயிரைக் கையில் பிடித்தபடி அலையும் மனிதவாழ்வைக் காட்சிப்படுத்தும் ‘கடவுளர்களின் நகரங்களில் வாழுதல்’ என்னும் கவிதை ஈழத்தின் உண்மையின் தோற்றத்தை  நகல் பிரதியாய் எடுத்துரைக்கிறது.

மக்களின் யதார்த்த வாழ்வியல் புறப்படிமங்களுக்கூடாக இக்கவிதையில் நன்கு காட்சிப்படுத்துகிறது.இப்பின்னனியில் எழும் ‘மகாஜனங்களின் அழுகை அல்லது அரசர்களின் காலம்’ கனவுகளால் நிரப்ப பட்ட வர்ணம் குழையாத வாழ்வை அவாவுகின்றது. குழந்தைகளை மகிழ்வூட்டாத பொழுதுகள்,குருதி,அச்சம், துயரம் முதலானவற்றுக்குள் உழன்று கொண்டு போலி வார்த்தைகளை உண்மையென நம்பி ஏமாறும் மக்கள், உணர்வுகளற்ற உறவுகளுடன் கழிக்கும் பொழுதுகள்  என விரியும் இக்கவிதை மனித வாழ்க்கை வாழ்வதற்;காக அன்றி அரசை சந்தோசிப்பதற்காகவும் அரசனை வாழ்விப்பதற்காகவும் உருவாக்கப்பட்டது என்னும் ஈழத்தின் இன்றைய நடப்பியல் நிலையையும் விளக்கி நிற்கிறது.
உயிர்ப்புடன் மேலான்மை செலுத்திய அரசியல் பின்னனியில் வன்மப்பட்டு சிதைக்கப்பட்ட வாழ்வைப் பாடும் சித்தாந்தன் கவிதைகள் மறைக்கப்பட்ட,மறுக்கப்பட்ட பகுதிகளை தன்னுள் இணைத்து இயங்குகிறது.உணர்வுகளுக்கப்பால் செறிவிறுக்கம் கொண்ட புதிய சொல்லாட்சி, புதிய சொல் முறைமைக்களுக்கூடாக நவீன கவிதைக்கான இயங்கு வெளியைச் சாத்தியமாக்கும் சித்தாந்தன் மீபொருண்மையில் இயங்கும் அசாத்தியமான படிமங்கள், குறியீடுகளுககூடாக நிகழ்கவிதைக்கான புதியவெளியைத் திறக்கிறார்.

 


சமூக அரசியல் பிரக்ஞையின் வெளிப்பாட்டுச்சாதனமாக விளங்கும் கவிதை கவிஞனின் அனுபவத்துக் கூடான அகப்புற உலகை கட்டமைக்கிறது.அக்கவிதை உணர்வு பூர்வமாகவும் உயிரோட்டமான முறையிலும் தான் வாழ்ந்த சூழலையும் அச்சூழலுக்குள் நிர்பந்திக்கப்பட்ட வாழ்வியலையும் அடையாளப்படுத்துகிறது. அவ்வகையில் உணர்வின் தடத்தில் எழும் பொன்.காந்தனின் கவிதைகள் போரினால் புண்ணுண்ட மக்களின் கோர இருப்பை ஆவணப்படுத்துகிறது.அகதி முகாம் என்னும் பெயரில் இயங்கிய சமகால வதை முகாம்களில் வாழ்ந்த மக்களின் மனங்களில் மேலெழும் விரக்தியையும் ஆபத்தையும் துயரையும் பேசும் இவரது கவிதைகள் தனித்துவமானவை.
“…நாம் மரணித்துக் கிடக்கையில்
எமது பிணம் எதிர்பார்க்கக்கூடிய
எமது குழந்தையின் மாபெரும் அழுகை
இல்லாதிருக்கும் சாபக்கேடு
எமை சிதையில் வதைத்தெரிக்கும்”
(மரணத்தில் துளிர்க்கும் கனவு -118)

 

மரணங்கள் மலிந்த யுத்த பூமியில் பிணங்களை எண்ணி உரத்து அழுவதற்கு கூட குழந்தைகளற்ற சூழலை முன்வைக்கும் ‘நமது கடன்’ ஈழத்தமிழனின் நாதியற்ற அவல வாழ்வின் நிகழ்தன்மையை விளக்குகிறது.
சமூக,அரசியல் பரிமாணங்கள் உள்ள ஒருவரது இலக்கிய ஆளுமை, அவரது படைப்பினுடாகச் சுவரப்படும் போது அப்படைப்பு யதார்த்ததன்மை கொண்ட கனதியான பன்முகப் படைப்பாக உருப்பெறும்.அவ்வகையில் வரலாற்று நிகழ்வின் உள்முக இயங்கியலை மனித வாழ்வியலுக்கூடாகப் பதிவு செய்யும் கவிதைகளே பொன்.காந்தன் கவிதைகள். வாழ்வதற்கு இடமற்று துரத்தப்படும் ஈழத்தமிழர் வீடிழந்து, வாழ்விழந்து அகதிமுகாமில் மந்தைகளைப் போல் அடைக்கப்பட்டு வாழ்வதனை தந்தையின் மரணத்துக்கூடாகக் காட்சிப்படுத்தும் ‘அப்பாவின் சுதந்திரம் பற்றிய குறிப்பு’ யதார்த்தவாழ்வின் இயல்புநிலையை எடுத்துகிறது.

“அகதிவாழ்வைவிடஅவருக்குச் சாவுமேலானது
அப்பா ! செத்துவிட்டார்
சந்தோசம்
இப்போதுஅப்பாமுதுமையோடுகால் கடுக்க
நிவாரணத்திற்காககாத்திருக்கத்தேவையில்லை
சிலவேளைநெரிசலில் சிக்குண்டு
தடக்கிவிழுந்து
எழமடியாமல் தவிக்கவேண்டியதில்லை
அகதிவாழ்வைவிடஅவருக்குச் சாவுமேலானது…”
(மரணத்தில் துளிர்க்கும் கனவு -120)

 

காலத்தின் சாட்சியாக நிற்கும் இக்கவிதை தான் வாழும் கொடிய சூழலின் மெய் உருக்காட்டியாக விளங்குகிறது.அப்பாவின்பாடல்,உன் எஜாமானின் மரணச்சான்றிதழ் முதலான கவிதைகளும் இத்தளத்திலேயே இயங்குகின்றன.
எதிர்காலம் பற்றிய கனவுகள் தொலைந்த நிலையில் போலிமைகளால் உள்ளமைக்கப்படும் வாழ்வே நிகழ்கால இருப்பாக கட்டமைக்கப்படும் ஈழச் சூழலில்,ஒளிமயமான காத்திருப்புக்கள் தொடர்கின்றன. ஆயினும் நம்பிக்கையிழந்து அல்லலுற்று ஏமாந்து வாழும் வாழ்வோ வேம்பெனக் கசக்கிறது.காருண்யம் மிக்க மனிதப்பண்புகள் மனிதனாலே வேட்டையாடப்படுகிறது.பொன்.காந்தனின் “காத்திருப்பின் கடைசிக்காலம்” என்னும் கவிதையும்  இப்பின்னனியில் புறப்பொருட் படிமங்களுக்கூடாக தன்னை முன்மொழிகிறது.
இன்றைக்கும் நாளைக்கும் இடையில் உயிர் வாழ்வதற்கும் உணவுக்கும் அல்லாடும் மனிதனின் உயிர்த்துடிப்பை  “ஆடை”  கவிதையில் தரிசிக்கலாம்.அகதி முகாமில் கொடும் நெருக்கடிக்குள்ளாகி வதைபட்டு நொந்து நொடிந்து வாழும் மனித வாழ்வியல் உணர்வுத்தளத்தில் காட்சிப்படுத்துகிறது.

“ஆடை வழங்கலாம் என அகதி முகாம் / ஒலி பெருக்கி அலறியது/
விழுந்தடித்து /நிவாரண அட்டையோடு ஓடிய / சனத்திரலில் /கலந்த
அவள் திரும்பி வரும்பொழுது / வெயிலை அணிந்து வியர்வை கொட்ட /
ஏமாற்றத்தை அணிந்து / ஆடைகள் முடிந்ததாம் / இனி அடுத்த முறையாம்
என்பதை ஃ/அணிய முடியாத முகத்துடன் / அணிந்து போன ஆடை நெரிசலில் /
கிழிந்ததும் தெரியாமல் நின்றாள்…”
(மரணத்தில் துளிர்க்கும் கனவு -123)
விதிக்கப்பட்ட வாழ்வைப்பாடும் பொன்.காந்தன் கவிதைகள் மரணத்தில் துளிர்க்கும் கனவாகவும் வதைக்கப்பட்டு சிதைக்கப்பட்ட வாழ்வின் மேலெழும் துன்பியல்குரலாகவும் எழுகிறது.
அடக்குமுறை,அதிகாரத்துக்கெதிரான குரலாக வெளிப்படும் ஃபஹிமா ஜஹனின் கவிதைகள் பெண் மொழிப்பிரக்ஞைக் கூடாகத் தன்னை விசாலித்துச் செல்கிறது.யுத்த சூழலுக்குள் வலியோடும் வாழ்வின் அனுபவங்களோடும் வெளிப்படும் இக்கவிதைகள் உள்ளடக்க முறையிலும் வெளிப்பாட்டு முறையிலும் தனித்தன்மையை பெற்றுள்ளன.
கதையும் கவிதையும் ஊடாடி ஒன்று கலக்கும் இடமாக ஃபஹிமாவின் ‘உயிர்வேலி’ அமைகிறது. ஆழ்பொருள் குறியீட்டுக் புனைவுக்கூடாக உயிர் பறிக்கும் வாழ்வின் நிகழ்வினைப்பாடும் இக்கவிதை பெருந்தேசியத்தின் வன்மத்தின் வெளிக்குள் உழலும் நிகழ் இருப்பைச் சித்திரிக்கிறது.
“குருவி குந்தியிருந்த மரத்தின் கீழே வீழ்ந்து கிடந்தது இற்றுப்போன ஒரு நிழல்
தொலை தூர ஆற்றுப்படுக்கையில் மறைந்து கொண்டிருந்தது கடைசிச் சூரியன்
அசைந்து வரும் கரிய யானைகளைப் பார்த்தவாறு கைவிடப்பட்ட தன் கூட்டை
எண்ணிக் கண்ணீர் உகுத்திடலாயிற்று அடைகாத்த முட்டைகளைப் பெருங்காற்றில்
போட்டுடைத்த கரங்களில் எல்லா அதிசயங்களும் இருந்தது “ஏன் செய்தாய்” எனக்
கேட்க முடியாத அடக்கு முறையில் காலம் சிக்கியிருந்தது…”
(மரணத்தில் துளிர்க்கும் கனவு -37)
போர் தின்னும் பூமியில், கையில் உயிரை பிடித்தவாறு இருண்ட சூன்யவெளிக்குள் அலையும் மனித வாழ்வு இக்கவிதையில் நுட்பமாகப் பதிவு செய்யப்படுகிறது.தேசத்து மானுடத்தின் பேரவலத்தையும், இடம்பெயர் வாழ்வையும்,  போரின் பிடிக்குள் சிக்குண்டு அல்லலுறும் மக்களின் வாழ்வையும் குறியீட்டு, காட்சிப் படிமங்களுக் கூடாக வெளிப்படுத்தி நிற்கும் பிறிதொரு கவிதை ‘அடவி 2007’ ஆகும். ஈழத்தின் வன்முறைச் சூழல்பற்றிய ஒரு மொத்தமான சித்திரத்தை தரும் இக்கவிதை எம்.ஏ நுஃமான் கூறுவதைப் போல ‘ஈழத்தின் அவலம் பற்றிய ஒரு முழுமையான குறியீடு’எனலாம்.
தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் தீவிரப் போக்கு தமிழ்,முஸ்லிம் உறவுகளுக்களுக்கிடையே விரிசலை ஏற்படுத்திய சூழலில் ஃபஹிமாஜஹனின் கவிதைகள் நட்புறவின் பாலமாக இருந்தன. போரளி மீது கொண்ட காதலின் தீவிர,மென் போக்குகளின் நுண் இழைகளை ஆழமாகவும் அதே சமயம் அழுத்தமாகவும் ‘ஒரு கடல் நீருற்றி’ என்னும் கவிதையில் ஃபஹிமா பதிவு செய்கிறார்.
“இன்று வீரர்கள் துயிலும் சமாதிகள் மீது
காலத்துயரின் பெரு மௌனம் கவிழ்ந்துள்ளது !
சமுத்திரத்தையே சமாதியாகக் கொண்டவனே !
இங்கு ஏதுமற்ற உன் கல்லறையில்
ஒரு கடல் நீரூற்றி நிரப்பிடவோ? “
(மரணத்தில் துளிர்க்கும் கனவு -36)
ஒடுக்கு முறைக்குள் உழன்று தவிக்கும் தமிழ் மக்களின் ஆதார சுருதியாக அமையும் இக்கவிதை தமிழ் தேசியத்தின் உரிமைக்கு உயிர் கொடுக்கும் குரலாகவும் ஒலிக்கிறது.அடக்குமுறை,வன்முறைக்கெதிரான கலகக் குரலாக ஒலிக்கும் ஃபஹிமாவின் கவிதைகள் தமிழ்த் தேசிய நோக்கு நிலையை வெளிப்படுத்தி நிற்கிறது.இப்பின்னனியில் எழும் ‘பாதங்களில் எழும் முற்ற வெளி’முகவரியற்ற நெருப்பு நிலவுக்கு’‘உங்கள் மொழியும் எங்கள் வாழ்வும் வேறாக்கப்பட்ட பின்’  முதலான கவிதைகளும் அரச வன்முறையின் உச்சபட்ச நிகழ்வுகளையும் இனத்துவ முரண்பாட்டின் மையத்தில் எழும் போராட்டச்சிந்தனையின் தார்மீக எழுச்சியையும் வெளிப்படுத்தி நிற்கினறன.
ஈழத்து சமகால வாழ்வியலை நுண் அரசியலோடு இணைத்து இயல்பான மொழியில் கவிதைகளுக்கூடாக மென் அதிர்வுகளை ஏற்படுத்தியவர் துவாரகன் ஆவார்.சிக்கலில்லாத வாழ்வின் அர்த்தங்களைத் தேடும் இவரது கவிதைமொழி வாழ்வின் அனுபவங்களுக்கூடாகக் கட்டுருபவை.அன்றாட வாழ்வில் எதிர்நோக்கும் வாழ்வின் அபத்தங்களை எழும் வலிகளை எளிமையாகவும் நேர்த்தியாகவும் அங்கதமாகவும் வெளிப்படுத்தும் துவாரகன் கவிதைகள் சமகால நிகழ்வின் பதிவுகள்.
குழந்தைகள் முதல் முதியோர் வரை யாவரையும் குருதியுமிலும் கோரப்பற்களுடன் காவு கொள்ளும் மரணம், எம் தேசத்தில் தெருவோரங்களிலும் வெளிகளிலும் பதுங்கியுள்ளது. பிணம் தின்னும் கழுகு போல் காத்துக் கிடக்கும் மரணத்தை எவ்வித பிசிரலுமின்றி ‘ஒரு மரணம் சகுனம் பார்க்கிறது’ என்னும்  இவரின் கவிதை தத்துருபமாகப் பதிவு செய்கிறது.
“நடந்து செல்லும் வயல் வரம்புகளில் /படுத்திருக்கும் பாம்புகள் போல் /
வீதிகளின் வெளியெங்கும் / பதுங்கியிருக்கிறது மரணம் / கலகலப்பான /
மழலைக்குரல்களையும் தம் நீண்ட பிரிவின் பின்னான உறவுகளையும்
தம் கடமை முடிக்க விரையும் எல்லோரையும் தோற்க்கடித்து வெடித்துச்
சிதறும் வெடிகுண்டைப் போல் காத்திருக்கிறது மரணம்…”
(மரணத்தில் துளிர்க்கும் கனவு -78)
இராணுவ அரண்களுக்கு அருகாமையில் நாம் செல்லும் போது மீண்டும் மீண்டும் எம்மை நாமே பரிசீலித்து வாழ வேண்டிய துர்ப்பாக்கிய  நிலைக்குள்ளாகிறோம். இவ்வலநிலையை அங்கதமாகவும் அதேசமயம் அழுத்தமாகவும் வெளிப்படுத்துகிறது ‘மீளவும் மரங்களில் தொங்கி விளையாடலாம்’.
“ஓடிய சைக்கிளில் இருந்து /இறங்கி நடந்து /ஓட வேண்டியிருக்கிறது /
போட்ட தொப்பி /கழற்றி போட வேண்டியிருக்கிறது/ எல்லாம் சரிபார்த்து
மூடப்பட்ட / கைப்பை / மீளவும் திறந்து திறந்து /மூடவேண்டியிருக்கிறது
என் அடையாளங்கள் அனைத்தும் /சரியாகவே உள்ளன / என்றாலும் /
எடுக்கவும்  பார்க்கவும் வைக்கவும் வேண்டியிழுக்கிறது…”
(மரணத்தில் துளிர்க்கும் கனவு -73)

அச்சத்துடனும் ஆற்றாமையோடும் ஒவ்வொரு ஈழக்குடிமகனும் கழித்த வாழ்நாட்களை கண்முன் நிறுத்தும் இக்கவிதை காலத்தோடு கருத்தூன்றி நிற்கிறது.நாதியற்று வெறுமனே கழியும் பொழுதுகள், எம்மை கேட்காமலே எம்மிடம் இருந்து பறிக்கப்படும் எம் உடமைகள், எல்லைகளின்றி காத்திருப்பின் நடுவே பழுத்துப்போன இலைகளாய் உதிரும் வாழ்வு என மூடுண்ட நகரத்தின் அகப் புறவெளிகளைக்காட்சிப்படுத்தும் துவாரகனின் கவிதைகள் மனித துயரின் பதிவுகளாய் அவற்றின் சாட்சிகளாய் விளங்குபவை.
அதிகார வன்முறையின் கீழ் இழைக்கப்பட்ட அநீதிகளையும் கடந்தகால நிகழ் பொழுதில் நடந்த கொடூரங்களையும் எடுத்துரைக்கும் இத்தொகுப்பு மரணத்துக்குள் விதிக்கபட்ட வாழ்வை வரையறுத்து நிற்கிறது.வாழ்வும் போரும் ஒன்றாகக் கலந்த சூழலில் எழுதப்பட்ட இக்கவிதைகள் மனித உணர்வுகளின் உள்வயத்தன்மையில் கட்டுறுபவை. ஆங்காங்கே அளவுக்கு அதிகமாகத் தென்படும் எழுத்துச், சொற்,பொருட் பிழைகள் தொகுப்பினை பலவீனமான பிரதியாக முன்மொழிந்தாலும் காத்திரமான எடுத்துரைப்பும் கனதியான வடிவமைப்பும் சமகாலப் பொருட்புலப்பாடும் சிறப்பான தொகுப்பாக இதனை முன்நகர்த்துகிறது.

ஈழத்து இளம் தலைமுறையினரின் ஆளுமைமிக்க கவிதைகளைத் தாங்கி வரலாற்றின் ஆவணமாகவும் காலத்தின் சாட்சியாகவும் நிற்கும் இத்தொகுப்பு சோகமும் அவலமும் நிறைந்த அநுபவத்தின் வாயிலாகவே முகம் கொள்கின்றது.மனிதப்படுகொலைக்குப்பின்னர் துயரத்தையும் அதன் வழி நிறையும் கண்ணீரையும் உள்ளார்ந்த தொனியில் வெளிப்படுத்தும் இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் தீவிரத்தன்மை கொண்டவை.மரணத்தில் துளிர்க்கும் கனவாகவும் ஒன்றாய் வாழ்தலுக்கான குரலாகவும் ஒலிக்கும் இக்கவிதைகள் அழிவுண்ட காலத்தில் கரையாமல் காலத்தைக் கடந்தும் தன்னை முன்நிறுத்தும் இயல்புடையவை.

௦௦௦௦௦௦௦

 

54 Comments

  1. தொகுப்பைக் கவனப்படுத்திய ரமேஸ் க்கு மிக்க நன்றி

Post a Comment