Home » இதழ் 04 » ஊர் திரும்புதல் – சிறுகதை

 

ஊர் திரும்புதல் – சிறுகதை

 

கிராமம் அசாத்திய அமைதியில் இருந்தது. பறவைகளின் சத்தம் மாத்திரம் விட்டு விட்டு ஒலித்துக் கொண்டிருந்தன. சூரியக்கற்றைகள் ஏற்கனவே படரத் தொடங்கிவிட்டன.
“தம்பி குகன்… வீடியோக்கமராவிலை நேரத்தையும் திகதியையும் செற் பண்ணும். கணேஷ் அவுஸ்திரேலியாவிற்கு போகேக்கை வீடியோக்கொப்பி கொண்டு போக வேணும்” மோட்டார் சைக்கிளை உருட்டியவாறே பாலன்மாமா தன்னுடன் வந்த குகனுக்குச் சொன்னார். பாலன்மாமா – திருவள்ளுவர் தாடி ; இழுத்து இழுத்து நடக்கும் விசிறினால்போன்ற நடை. பார்ப்பதற்கு வினோதமாக இருப்பார். குகனை எனக்கு முன்னாளில் அறிமுகமில்லை. உமாசுதன், நான் புலம்பெயர்ந்து 16 வருடங்கள் தொடர்பில் இருக்கும் நண்பர்களில் மிகவும் வேண்டப்பட்டவன்.

நேரம் : காலை 9.20,  திகதி : 25.05.2011

நாங்கள் நாலுபேரும் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்தோம். டச்சு றோட்டில் இருந்த உருப்படியான ஒரு வீட்டின் தாழ்வாரத்தில்  மோட்டார் சைக்கிளை வைத்துப் பூட்டிவிட்டு நடக்கத் தொடங்கினோம். இரண்டு பெரிய தண்ணீர்ப் போத்தல்கள், இரண்டு லீட்டர் கோக் போத்தல்கள் இரண்டு மற்றும்  நான்கு பேருக்குமான மதியச்சாப்பாடு, கத்திகள் பொல்லுகள் சகிதம் எங்கள் பிரயாணம் ஆரம்பமானது. ஏதோ அமேசன் நதிக்கரைக் காட்டுக்குள் நுழைகின்ற பிரயாணம் போல, 21 வருடங்களுக்குப் பிறகு நாங்கள் பிறந்து வளர்ந்த கிராமத்திற்குப் போகும் பயணம். கிராமம்  இத்தனை வருடங்கள் உயர் பாதுகாப்பு வலயமாகவிருந்து, தற்போது மீளக்குடியேற அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
“ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்… இந்த உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்…” வீடியோக்கமராவை ஆட்டிக் கொண்டே குகன் பாடத் தொடங்கினான்.

எந்தப்பக்கமிருந்து பார்த்தாலும் கிராமம் காடாகத்தான் தெரிந்தது. இன்று வீடுகள் இல்லாமல் மூளியாக இருக்கும் இந்தக் கிராமத்துக்குப் போகும் பாதைக்கு, முன்னொரு காலத்தில் ‘பொன்னு – சீமா’ ஒழுங்கை என்று பேர் இருந்தது. கார் ஓடிய வீதிகள் எல்லாம் மரம் முளைத்துவிட்டன.

 

“பாக்கியக்காவின் கிணறு இது” பெரிதாகச் சத்தமிட்டு, ஒரு பாழும் கிணற்றை சுட்டிக்காட்டி, வீடியோவிற்கு தன்னுடைய முகத்தைக் காட்டினார் பாலன்மாமா.
“கிணத்துக்குள்ளை மரம் முளைச்சிருக்கு” அவருடன் ஒட்டிக் கொண்டு நின்ற குகன் பிற்பாட்டுப் பாடினான்.
“மயிலப்பை அன்ரியின்ரை வீடு இது. இதுக்கு அங்காலை போகேலாமல் கிடக்கு. பாதை புளொக்.”
“வீடு… வீடெண்டு சொல்லுறியள் அண்ணை…. என்னத்தை வைச்சுக் கொண்டு சொல்லுறியள்?”
“குகன்…  ஒரு குத்துமதிப்பிலைதான் இஞ்சை சொல்ல வேண்டி இருக்கு.”

சில இடங்களில் பற்றைகளை வெட்டிக்கொண்டு முன்னேறவேண்டியிருந்தது. தண்டவாளமும் சிலுப்பைக்கட்டையும் இல்லாமல், ஒருகாலத்தில் புகையிரதம் சடசடத்து ஓடிய பாதை பெயரளவில் தொங்கிக் கொண்டிருந்தது.

“சுதன் அண்ணை, உங்களுக்கு ஆரேனும் ஒஸ்ரேலியாவிலை இருக்கினமோ? இந்த போர்ட்டுக்குப் பக்கத்திலை றெயினின்ரை வரவுக்காகாக் காத்து நிக்கிறமாதிரி நிண்டு ஒரு போஸ் குடுங்கோ… என்னண்ணை சிரியுங்கோ! சிரி… சிரி… சிரி… சிரி…” குகன் சுதனை வீடியோப் படம் பிடித்தான். முதலில் சிரிப்பது போல நின்ற சுதன் பின்னர் அழத் தொடங்கினான். அவனால் சிரிப்பது போலப் பாவனை செய்ய முடியவில்லை. அவன் கன்னங்களில் கண்ணீர் வடிந்தது.

“உந்த விளையாட்டுகளை விட்டிட்டு கெதியிலை நடவுங்கோ” பாலன்மாமா சூழ்நிலையைத் திசை திருப்பினார்.

மரங்கள்கூட ஒரு நேர்த்தியாக இல்லை. சில்லம்பல்லமாக சொத்தியும் வளைவும் நெளிவுமாக தமிழன்ரை வாழ்க்கைபோல இருந்தன. அவற்றை வெட்டிதள்ளிவிட்டுத்தான் நகர வேண்டியிருந்தது.

‘வீமன்காமம் இளைஞர் சங்கம் – 1944’ முகப்பு மாத்திரம் நிமிர்ந்து நிற்கின்றது.

“அண்ணை! பாலன் அண்ணை!! இதை ஒருக்கால் பாருங்கோ… இந்த வீடென்ன கட்டி முடிக்கப்படாமல் குறையாகக் கிடந்ததோ? கதவுகள் நிலையள் ஒண்டையும் காணேல்லை!” குகன் கேட்க,
“எனக்கு வாற கோபத்துக்கு…. என்ன பாத்துக்கொண்டு இவ்வளவு நேரமும் வாறாய்? எந்த வீட்டுக்கு கதவும் நிலையும் கிடக்கு?  எல்லாத்தையும் கொத்திக் கொண்டு போட்டாங்கள்” என்றார் பாலன்மாமா.

“கிச்சன், அற்றாச் பாத்றூம், கொமேட்…. அந்தக்காலத்திலைகூட அற்றாச் பாத்றூமும் கொமேட்டும் இருந்திருக்கு….” – குகன்.
“அந்தக்காலமாம்…. ஏதோ நூற்றாண்டு காலம் போனது போல” – பாலன்மாமா.

“லிங்கமாமாவின்ரை வீடு. லிங்கம்… கனடா” உரத்துச் சொன்னார் பாலன்மாமா. சுதன் இன்னமும் மௌனமாக கவலையுடன் வந்தான். பார்த்துப் பார்த்துக் கட்டிய வீடுகள் எல்லாம் பாளமாக வெடித்துக் கிடக்க, வீட்டுக்குள்ளிருந்து முளைத்த மரங்கள் வெளிச்சத்தைத் தேடி ஜன்னல்களுக்குள்ளால் புகுந்து வெளியே வானத்தை நோக்கின. கூரையில்லாத வீட்டுக்குள் முளைத்திருந்த மரங்கள் வளைவதற்கு அவசியமில்லாமல் நேரே கம்பீரமாக நின்றன.