Home » இதழ் 04 » ‘சிதழுறும் காயங்களின் மொழியில் என்னைப் பேசவிடுங்கள்’

 

‘சிதழுறும் காயங்களின் மொழியில் என்னைப் பேசவிடுங்கள்’

 

 

யோ. கர்ணனின் கதைகள் – சேகுவேரா இருந்த வீடு

————————————————————————

‘சிதழுறும் காயங்களின் மொழியில் என்னைப் பேசவிடுங்கள்’ என்று அஸ்வகோஸ் தன்னுடைய கவிதைகளில் குமுறுகிறார். அஸ்வகோஸ் மட்டுமல்ல, றஷ்மி, பா.அகிலன், வரதர், மு.தளையசிங்கம், தா.இராமலிங்கம், சு.வி, சிவரமணி, அனார், ஓட்டமாவடி அரபாத், இளைய அப்துல்லா, திருமாவளவன், கி.பி. அரவிந்தன், த.அகிலன், சித்தாந்தன், எஸ்போஸ், தாமரைச்செல்வி, கோவிந்தன், டொமினிக் ஜீவா, நந்தினி சேவியர், டானியல், சக்கரவர்த்தி, ஷோபாசக்தி, சண்முகம் சிவலிங்கம், சு.மகேந்திரன், மலைமகள், ஆழியாள், பானுபாரதி, சேரன், நட்சத்திரன் செவ்விந்தியன், சாந்தன் என்று ஈழத்தின் எந்த எழுத்தாளரும் எந்தக் கவிஞரும் காயங்களின் மொழியில்தான் தங்களுடைய கதைகளையும் கவிதைகளையும் எழுதியுள்ளனர்@ இன்னும் எழுதி வருகின்றனர். இதில் தலைமுறை வேறுபாடுகள், இட அமைவுகளின் வேறுபாடுகள் எதுவுமில்லை. அந்த அளவுக்கு ஈழத்திலக்கியப் பரப்புக் காயங்களாலும் வலியினாலும் நிரம்பியுள்ளது. ‘மரணத்துள் வாழ்வோம்’ கவிதைகள் இதற்கொரு சான்று.

ஈழத்தில் மட்டுமல்ல உலக இலக்கியத்தின் பெரும்பரப்பும் காயங்களினாலும் வலிகளினாலும் நிரம்பியதே. அதிலும் யுத்தம் நடந்த சூழலில், ஒடுக்குமுறைகள் மலிந்த தருணங்களில், அதற்கெதிரான போராட்டங்கள் நடந்த இடங்களில் இந்த வலியும் வேதனையும் இன்னும் அதிகம். எந்தக் காயமும் வலியைத் தரும். எந்தக் காயமும் இரத்தமும் சீழும் வலியும் முனகலும் நிரம்பியதே. இன ஒடுக்குமுறையினால், சாதியத்தினால், மதத்தின் பேரால், பால்வேறுபாடுகளினால், மொழியின்பேராலான முரண்களினால், புலப்பெயர்வினால் என எதன் நிமித்தமான காயமாகவும் இருக்கலாம்;.

ஆனால், ஒருவரின் காயங்களை மற்றவர் புரிந்து கொள்வதிலும் ஏற்றுக்கொள்வதிலும்தான் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. சாதி ரீதியாக ஒருவருக்கு ஏற்படுகின்ற காயம் – அவமானம் என்பதெல்லாம் அந்தப் பாதிப்பை அறியாதவர்களுக்கு அநாவசியமானதாகப்படுகிறது. பெண்கள் சந்திக்கின்ற வலிகளும் காயங்களும் பெண்ணின் நிலையை உணராதவர்களால் பெரிதாகத் தோன்றுவதில்லை. சிவரமணி எழுதியது காயங்களின் வலிகளையே. சிவரமணியைப்போல எழுதிய பிற பெண்களின் எழுத்துகளும் அவர்களுடைய  காயங்களைப் பற்றியவைகளே. அப்படியே முஸ்லிம்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளையும் உண்மைகளையும் அவர்களுடைய நியாயத்தைப் புரிந்து கொள்ள முடியாதோருக்கு அது அவர்களுடைய புலம்பல்களாகவும் குற்றச்சாட்டாகவும் தெரிகிறது. இதுதான் மலைய மக்களின் உணர்வுகளைப் பிற பொதுப்பரப்பினர் அணுகும் அடிப்படையும். இது இங்கு மட்டுமல்ல உலகம் முழுவதிலும் உள்ள பொதுக்குறைபாடு. கறுப்பர்களின் காயம் வெள்ளையர்களுக்கு வலிப்பதில்லை. பலஸ்தீனர்களின் கண்ணீர் இஸ்ரேலியர்களின் இதயங்களைக் கரைப்பதில்லை என்பது இதைத்தான்.

முஹமட் தர்விஷ், அன்னா அக்மத்தோவா, ஆத்மாநாம், அடோனிஸ், ஆன் ரணசிங்க, லாங்ஸ்டன் கியூஸ், ஆதவன் தீட்சண்யா என்று எந்த மொழியில், எந்தத் திசையில், எந்த இனத்தில் எழுதுவோராக இருந்தாலும் எவராலும் கண்ணீரைத் தவிர்த்து விட முடிவதில்லை. துயரத்தின் ரேகைகள் படராத இடமே இந்தப் பூமியில் இல்லை. அதனுடைய ரத்த ஓட்டம் நிகழாமல் எந்தக் கலையும் இல்லை. இலக்கியம், வரலாறு, வாழ்க்கை எல்லாவற்றுக்கும் கண்ணீரின் உப்புத்தான் சுவையூட்டுகிறது. வெற்றியைப் பற்றி, வீரத்தைப் பற்றிஅ அவை பேசினாலும் அவற்றின் அடியே வற்றாத நீரூற்றுப்போலக் கண்ணீர்ப்பரப்பிருப்பதைக் காணமுடியும். காப்பியங்கள், இதிகாசங்கள், மகத்தான திரைப்படங்கள், நாடகங்கள், ஓவியங்கள் எவையும் கண்ணீரின் உப்பை ருஸியாகக் கொண்டவையே அதிகம். எல்லாச் சுவையையும் விட அவலச் சுவையையே மனித மனம் அதிகம் விரும்புகிறது. கண்ணீருக்கும் வலிக்கும் அத்தனை குரூரமான ருஸியுண்டா? என்பதாற்தான் ‘துக்கப்படுபவனே பாக்கியவான்’ என்றுரைக்கிறது போலும் வேதாகமம்?

ஆனால், காயமென்பதும் வலியென்பதும் துக்கமென்பதும் எளிமையானதல்ல. அவை மிகமிகக் கடினமானவை. இந்தப் பூமியிலேயே கடினமானது காயத்தையும் துக்கத்தையும் வாழ்ந்து கடப்பதுதான். மனித வாழ்க்கை சதா துக்கத்தைக் கடக்க முடியாமற் தத்தளித்துக்கொண்டேயிருக்கிறது. ஆற்ற முடியாதிருக்கும் காயத்தையும் நிரந்தரத்துக்கத்தையும் குறித்த கேள்விகளிலிருந்தே உலகின் அத்தனை தத்துவங்களும் உண்டாகியிருக்கின்றன. ஆனாலும் புதிர்கள் இன்னும் தீரவில்லை. இதில் கவனிக்க வேண்டியது மனிதனிடமுள்ள அதிகாரத்தின் போதையே பெரும்பாலானவர்களின் காயங்களுக்கும் துக்கத்துக்கும் காரணமாக இருக்கின்றன என்பதை. மனிதனின் அறிவியலுக்கும் அறவியலுக்கும் சாவாலான விசயமாக இருப்பது இந்தத் தீராத துக்கமே.

யோ. கர்ணனும் காயங்களின் மொழியில், காயங்களினால் ஏற்பட்ட வலிகளின் மொழியில், அந்த வலிகளினால் ஏற்பட்ட வேதனையின் மொழியில், அந்த வேதனை ஏற்படுத்தும் சினத்தின் மொழியில் தன்னுடைய கதைகளைச் சொல்கிறார். ஆகவே கர்ணனின் கதைகளும் காயங்களின் கதைகளாகவே  இருக்கின்றன. இவற்றை வாசிக்கும்பொழுது இந்தக் காயங்களின் உள்ளே கொதித்துக் கொண்டிருக்கும் வலியை உணரமுடிகிறது. முக்கியமாக இந்தக் கதைகளில் அதிகமானவை ஈழப்போராட்டத்தின் இறுதிப் போர்க்காலத்தை மையப்படுத்திய – வன்னிப் போரின் காயங்களாகவுள்ளன@ காயக் கதைகளாக உள்ளன.

இறுதிப் போர்க்காலத்தில், போர் நடந்த சூழலில் – முள்ளிவாய்க்கால் வரையில் கர்ணனும் சிக்குண்டவர் என்றவகையிலும் பின்னர் ‘அகதி’, ‘சரணடைந்தோன்’, ‘கைதி’, ‘திரும்பிவந்தவன்’ எனப் பலவகையான கொடுமை நிறைந்த ‘வரலாற்று’ ப் பாத்திரங்களை ஒரு நெருக்கடிக் காலத்தில் வகிக்க வேண்டிய நிலைக்குள்ளானவர் என்ற வகையிலும் அந்த அனுபவங்களை அவர் எழுதும்போது அவை நிராகரிக்கவே முடியாத இலக்கிய சாட்சியமாகவும் முதன்மையான உண்மை சார்ந்த பதிவுகளாகவும் அமைகின்றன. மட்டுமல்ல, ஈழத்தின் பெரும்பாலான இளைய தலைமுறையினருக்கு நேர்ந்ததைப்போல, கர்ணனின் இளமைக் காலமும் துயரப் பரப்பிற்தான் சிக்கியது. எனவே அதையும் கர்ணன் தன்னுடைய கதைப் பரப்பிற்குள் கொண்டு வந்திருக்கிறார்.

வடலி வெளியீடாக 2012 மார்ச்சில் வந்திருக்கும் ‘சேகுவேரா இருந்த வீடு’ யோ. கர்ணனின் இரண்டாவது சிறுகதைத் தொகுதியாகும். ‘தேவதைகளின் தீட்டுத்துணி’ என்ற முதற்தொகுதி 2011 இல் வடலி வெளியீடாக வெளியாகி, அந்த ஆண்டின் சிறப்புச் சிறுகதைத் தொகுதிக்கான ‘ஆனந்த விகடன்’ விருதினைப் பெற்றிருந்தது. ஆனால், ‘தேவதைகளின் தீட்டுத்துணி’யையும் விட ‘சேகுவேரா இருந்த வீடு’ பொருட்பரப்பிலும் வெளிப்பாட்டு முறையிலும் அழகியல் பொறுத்தும் நிறைய முன்னோக்கிய மாற்றங்களைக் கொண்டுள்ளது. இந்தத் தொகுதியிலுள்ள 13 கதைகளில் ஏழு கதைகள் ஈழத்தின் யுத்த  சாட்சியத்துக்கான மிகச் சிறந்த இலக்கியச் சான்றுகள். இறுதிப் போர்க் காலத்தையொட்டிய நிகழ்ச்சிகளை மையப்படுத்திய கதைகள் இவை என்பதால், இவைக்கு இன்னும் அதிக முக்கியத்துவம் ஏற்படுகின்றன. யுத்தக் குற்றங்கள் குறித்த விவாதங்கள் சர்வதேச அளவில் கவனப்பட்டிருக்கும் சூழலில் இந்தக் கதைகள் யுத்த நிகழ்ச்சிகளின் – யுத்தத்துக்குப் பின்னரான நிலைமைகளின் இலக்கிய சாட்சியமாக இருப்பதால் இவற்றின் முக்கியத்துவம் இன்னும் அதிகமாகிறது. யுத்தத்தினால் ஏற்பட்ட வலியும் அவல நினைவுகளும் மங்க முன்னரே இந்தக் கதைகள் அந்த வலியுடனும் காயாத நினைவுடனும் வருவதால், இந்த முக்கியத்துவம் மேலும் கூடுகிறது. அதிலும் இந்தத் தொகுதியிலுள்ள ‘திரும்பி வந்தவன்’, ‘திரும்பி வந்தவள்’ ஆகிய இரண்டு கதைகளும் தமிழ்வாழ்வில் புதிய அனுபவத்தைப் பேசும் முக்கியமான கதைகளாக உள்ளன. போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகளின் சிதைந்த வாழ்வை வெளிப்படுத்துவதன் மூலமாக போராட்டத்தின் சிதைவைக் குறியீடாக்கி யதார்த்தத்தையும் உண்மையையும் உணரவைக்கிறார் கர்ணன். இதன்மூலம் தமிழ்ச்சமூகத்தின் சிதைவும் அவலமும் புலப்படுத்துப்படுகிறது. இந்தச் சிதைவுகளைச் சீர்ப்படுத்துவதற்கான மனிதாபிமானத்தை நோக்கிய ஒரு சிந்தனையைக் கோரும் உள்ளுணர்த்தலின் மூலம் அழைப்பை விடுத்து, இந்த நிலைமையை மாற்றவதற்கு இந்தக் கதையுரைப்பைக் கர்ணன் பயன்படுத்துகிறார் எனத் தோன்றுகிறது. அவல நிலையை அறியும் ஒரு மனிதாபிமானி அந்த நிலையை எந்த வகையிலும் அங்கீகரிக்கவோ அனுமதிக்கவோ போவதில்லை. ஆகவே, அதைத் தீர்ப்பதற்கான செயல் முனைப்பொன்றை அந்த மனிதாபிமானி நிச்சயம் கொள்வார். அதையே கர்ணனும் எதிர்பார்க்கிறார்; இந்தக் கதைகளின் வழியே.

இதேவேளை இவற்றைப் பொருட்படுத்தாமல் இருக்கும் தமிழ்ச் சமூகத்தின் பொது நிலைப்பெறுமானம், அதனுடைய அரசியற் பெறுமானம், அதனுடைய பண்பாடு பற்றிய சித்திரங்கள், அதனுடைய பெருமித உளவியல் போன்ற எல்லாவற்றையும் திறந்து ‘நடிப்புச் சுதேசி’களாக இயங்கும் நிலையையும் இந்தக் கதைகள் வெளிப்படுத்துகின்றன. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது பாரதிக்கு ஏற்பட்ட இந்த அவதானம் ஈழப்போரில் இன்று கர்ணனுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த நிலையைக் கண்டு கர்ணன் உள்ளே கொதிக்கிறார். இதையிட்ட சினம் அவரிடம் பொங்குகிறது. ஆனால், ஒரு படைப்பாளி உணர்ச்சி மையத்தில் மட்டும் நின்று செயற்பட முடியாது என்பதற்கிணங்க, கதைகளின் பாத்திரங்களின் இயல்பினாலும் நிகழ்ச்சிப் போக்கினாலும் எல்லாவற்றையும் எல்லாத்தரப்பையும் சமனிலைப்படுத்தி விமர்சனபூர்வமாகக் கேள்விக்குட்படுத்துகிறார். மட்டுமல்ல, ‘தேவதைகளின் தீட்டுத்துணி’, ‘சேகுவேரா இருந்த வீடு’ எனத் தன்னுடைய கதைத் தொகுதிகளைச் சுட்டுவதன் மூலமாக, இந்தப் பெயர்கள் சாராம்சத்தில் கொண்டிருக்கும் அர்த்தப்பாடுகளைச் சிதைத்து எல்லாவற்றையும் முழுமையாகவே கேள்விக்குள்ளாக்குகிறார். இதன்படி, தேவதைகள் என்ற சொல்லுணர்த்தும் படிமமான புனிதம், அழகு, இனிய கனவு என்ற அர்த்தங்கள் கலைகின்றன. அதேவேளை ‘தேவதைகளுடைய தீட்டுத்துணி’யைப் பற்றி வாசகர்கள் சிந்திக்க வைக்கப்படுகின்றனர். தேவதைகளுக்கும் தீட்டுத்துணி உண்டு என்ற அதிர்ச்சிகரமான ஒரு விசயம் இங்கே நமக்குப் புலப்படுகிறது.இதன்மூலம் அனைத்துப் பிம்பங்களும் புனிதங்களும் கலைந்து விடுகின்றன.

அதன் தொடர்ச்சியாக இப்போது ‘சேகுவேரா இருந்த வீடு’ என்று சொல்வதன் வழி இன்னொரு படிமக்கலைப்பை நிகழ்த்துகிறார் கர்ணன். (கவனிக்கவும் படிம உரிவாக்கத்திற்குப் பதிலாக படிமக் கலைப்பு நிகழ்வதை). அரசியல் வரலாற்றிலும் போராட்ட வரலாற்றிலும் ‘சே குவேரா’ என்ற பெயர் உருவாக்கும் படிமம் புரட்சிசார்ந்தது@ விடுதலைக்கான குறியீட்டை மையப்படுத்தியது. ஆனால், ஈழப்போராட்டம் உருவாக்கிய இந்தச் சேகுவேரா என்ற படிமத்தின் உணர்கை இதற்கு மாறானது. சேகுவேரா என்ற பெயரையுடைய போராளி அவனுடைய அணியோடு தங்கியிருந்த வீடு எப்படிச் சிதைந்து போகிறது, பின்னர், வீட்டின் உரிமைக்காரரர்களால் அதை மீட்க முடியாத சிரமங்களுக்குள்ளாகியிருக்கிறது, எப்படி அது ஆயுதந்தாங்கிய அதிகார மையங்களின் இருப்பிடமாக மாறிச் செல்கிறது என்பதையெல்லாம் சொல்லி சிதைந்த போராட்டத்தின் குறியீடாக்குகிறார் இங்கே கர்ணன். எப்படி சிதைந்த போராட்டமாக ஈழப்போராட்டம் மாறியதோ, அதைப் பற்றிய படிமங்களும் நம்பிக்கைகளும் எவ்வாறு உடைந்து நொறுங்கினவோ, அவ்வாறே இந்தப் படிமங்களின் சிதைவும் நிகழ்கின்றது என்பதை உணர்த்துவதே இந்தக் கதைகளின் இயக்கம். கூடவே, மக்களின் அவல நிலைமையையும்; இந்தக் குறிப்புணர்த்தலின் வழியாகச் சுட்டிவிடுகிறார்.

இவற்றையெல்லாம் கர்ணன் கேள்விக்குட்படுத்துவதை விட இவையெல்லாம் மெய்யாகவே நடந்த நிகழ்ச்சிகளினால் கேள்விக்குள்ளாகின்றன என்பதே உண்மையானது. அவற்றைக் கர்ணன் தன்னுடைய எழுத்துகளின் மூலமாக கவனப்படுத்துகிறார்@ இந்த அவலப்பரப்பின் மீது, இந்தச் சிதை மேட்டின் மீது ஒளியைப் பாய்ச்சுகிறார். அவ்வளவுதான். ஒரு தேர்ந்த படைப்பாளி இப்படித்தான் இயங்க முடியும்@ இப்படித்தான் இயங்குவார். இந்தக் கவனப்படுத்தும் உத்திக்கு கர்ணன் பொருத்தமான கதைகூறல் முறையைக் கொள்கிறார்@ அதற்கிசைவான மொழியிலும் மொழிதலிலும்.

இப்படிச் சொல்லும்பொழுது அவர் கையாளும் பொதுவான உத்தியாகக் காணப்படுவது அங்கதம். எல்லாவற்றையும் அங்கதமாக்கும், எதையும் கேலியாகவே பார்க்கும் ஒரு வகையான மனோநிலையினூடாக இந்தத் துயர்ப்பரப்பைக் கடந்து விட முயற்சிக்கிறார் அவர். அல்லது இந்தத் துயர்ப்பரப்பின் பின்னணியை விவரித்துப் பதிவாக்க முற்படுகிறார். அல்லது தன்னுடைய துக்கங்களையும் வலிகளையும் சொல்வதன் மூலமாக – தன்னுடைய பாரங்களை இறக்கி வைப்பதன் மூலமாக ஒரு சமனிலையைக் காண முற்படுகிறார்.

இதேவேளை அப்படிப் பார்ப்பதன் மூலமாகத் தன்னுடைய உளநிலையையும் சம நேரத்தில் இந்த நிகழ்ச்சிகளினால் பாதிக்கப்பட்டவரின் உளநிலையையும் சமனிலைப்படுத்துகிறார் கர்ணன். எல்லோராலும் நிராகரிக்கப்பட்ட தன்னுடைய துக்கத்தை தன் குதிரையிடம் சொல்லி மனமாறும் றிக்ஷா வண்டிக்காரனின் உளநிலையை அன்ரன் செக்கோ வெளிப்படுத்துவதைப்போல, இங்கே கர்ணன் செயற்படுகிறார். ஆனால், இங்கே கர்ணன் செக்காவைப் போலல்லாது, குதிரை வண்டிக்காரனைப் போல சொல்லத்துடித்துக்கொண்டிருக்கும் – பாரத்தை இறக்கத் துடித்துக் கொண்டிருக்கும் துக்கங்களோடிருக்கிறார் என்பதே கூடுதல் கவனத்திற்குரியது. எனவே கர்ணனுடைய கதைகள் பெரும் துக்கத்தினாலான அதிர்ச்சிக்குரியனவாகின்றன.

இங்கே ‘திரும்பி வந்தவன்’ என்ற கதையில் வரும் போராளி, போராட்டத்தில் ஈடுபட்டபோது, இயக்கத்தில் உறுப்பினராக இருந்த காலத்தில் தன்னைக் கட்டமைத்துத் தோற்றப்படுத்தும் பிம்பத்துக்கும் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பிறகு – இயக்கத்திலிருந்து விடுபட்ட பின்னர் இயங்கும் தோற்ற நிலைக்கும் இடைவரையான பரப்பைக் காண்பிப்பதன் மூலமாக கர்ணன் மேற்குறித்த விசயங்களை தெளிவாக்குகிறார். முன்னர் மகிமை குறித்த பிம்பமாகத் தோற்றம் காட்டிய அதே போராளி, போராட்டத்தின் வீழ்ச்சியை அடுத்து, சீரழிவு நிலையில் சிதைந்த தோற்றத்தைப் பெறுகிறான்.

‘திரும்பிவந்தவள்’ கதையில் இது மாறிக் காண்பிக்கப்படுகிறது. இங்கே பெண்போராளி திரும்பி வந்திருக்கிறாள். அவளை இன்றைய ஈழத்தமிழ்ச் சமூகம் எதிர்கொள்ளும் விதம் எப்படியாக மாறியுள்ளதென்பது காட்டப்படுகிறது. அதிலும் போராட்டத்தை ஆதரிக்கின்ற, ஒரு காலத்தில் போராளிகளை மதித்த ஆதரவாளர்கள் தங்களைத் திசைமாற்றி, அவளை அங்கீகரிப்பதற்குத் தவறுகின்றனர் என்ற நிலையைக் கர்ணன் அங்கதம் தொனிக்கச் சொல்கிறார். ச.தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டிருப்பதைப்போல ஈழத்தில் திரும்பி வந்தவன் அல்லது திரும்பி வந்தவள் என்பதற்கான அர்த்தங்கள் அதிகம். போராட்டத்திலிருந்து திரும்பி வந்தவன், அகதி முகாமிலிருந்து திரும்பி வந்தவன், சிறையிலிருந்து திரும்பி வந்தவன், காணாமற்போய்த்திரும்பி வந்தவன், போர்க்களத்திலிருந்து திரும்பி வந்தவன், போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பிறகு தடுப்பு முகாமிலிருந்து திரும்பி வந்தவன், புலம்பெயர்ந்து போய்த்திரும்பி வந்தவன், நாடு கடத்தப்பட்டுத்திரும்பி வந்தவன், இயல்பு வாழ்வுக்குத் திரும்பி வந்தவன் எனப் பல அர்த்தங்களில், பல நிலைகளில் இந்தத் திரும்பி வருகை நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதில் பெண்களின் திரும்பி வருதல் என்பது இன்னும் பல மடங்கு கொடுமையானது. பெண்களைப் பற்றிய பிம்பங்களைத் தன்னகத்திற் பெருமளவிற் கொண்டுள்ள தமிழ்ச் சமூகம் இந்தப் பெண்களைக் குறித்து எத்தகைய நிலைப்பாட்டுடன் இருக்கிறது என்பதை கர்ணன் கேள்விக்குட்படுத்துகிறார்.

கர்ணனுடைய கதையுரைப்பு முறையில் அங்கதம் முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறது என்று பார்த்தோம். இந்தப் பூமிப்பரப்புக்குக் கீழே இருக்கின்ற எல்லாவற்றையும் ஒரு விதமான நகைச்சுவையுணர்வுடன் பார்க்கின்ற போக்கைக் கர்ணன் கொண்டிருக்கிறார். துயரங்களைக் கடப்பதற்கான ஒரு உபாயமாக அவர் இதைக் கொண்டிருக்கிறார் என்றே தெரிகிறது. பெரும்பாலான போராளிகள் மிக நகைச்சுவையுணர்வுள்ளவர்கள். அவர்கள் தங்களுடைய இளைய வயதில் இழந்த பலவற்றையும் இந்த நகையுணர்வின் மூலம் கடக்க முயற்சித்தார்கள் என்றே நினைக்கிறேன். கர்ணனும் இத்தகைய அனுபவநிலையைப் பெற்றவர். இந்த நகையுணர்வு அல்லது அங்கதம் அவருக்கு எல்லாவற்றுக்கும் கைகொடுக்கிறது.

இந்த நகையுணர்வைத் தன்னுடைய கதையுரைப்பின் உத்தியாகப் பயன்படுத்தி,  ஈழப்போராட்டத்தில் செல்வாக்கையும் தாக்கத்தையும் ஏற்படுத்திய தரப்புகள் பலவற்றையும் கர்ணன் தன்னுடைய கதைப் பரப்பிற்குள் கொண்டு  வருகிறார். இதனால் இந்தத் தரப்புகள் அனைத்தும் கதைகளில் ஊடாட்டம் கொள்ளப்படுகின்றன. அவை எல்லாவற்றையும் அவர் இந்த நகையுணர்வின் மூலம் மெல்ல நிறமிழக்க வைக்கிறார். இதேவேளை ஒரு இலக்கிய சாட்சியாக நின்று இந்தச் சூழலின் மெய்யான நிறங்களைக் காண்பிக்க முற்படுகிறார். இப்படிப் பார்த்தால், கர்ணன் தொடர்ந்து கடைப்பிடித்து வரும் போராட்ட இலக்கிய சாட்சியம் என்ற பாத்திரத்தை இந்தத் தொகுதிக் கதைகளிலும் வெளிப்படுத்தியுள்ளார் என்றே கூறமுடிகிறது.

கர்ணன் வெளிப்படுத்துகின்ற இந்த அனுபவம் களத்திலிருந்தோருக்கே – போராட்டத்துடன் நெருங்கியிருந்தோருக்கே கிட்டியது. எனவே அவர்களே அதனுடைய சாட்களாகின்றனர். பொதுவாகவே சாட்சிகளின் நிலை மிகவும் நெருக்கடிக்குரியது. அதிலும் இந்த மாதிரி யுத்தகள – போராட்டக் கள நிலைவரத்தைப் பற்றிய சாட்சியமளித்தல் என்பது மிகச் சிக்கலுக்கும் அபாயங்களுக்குமுரியது. ஈழப்போராட்டத்தின் உள் நெருக்கடிகளை இலக்கிய சாட்சியமாக்கிய செழியன், கோவிந்தன், சக்கரவர்த்தி, சேரன், ஷோபாசக்தி, கலாமோகன், கற்சுறா, நட்சத்திரன் செவ்விந்தியன், ஓட்டமாவடி அரபாத், றஷ்மி, சிவரமணி, செல்வி போன்றோர் இத்தகைய நெருக்கடிகளை நேரடியாகவும மறைமுகமாகவும் சந்தித்தவர்கள். இன ஒடுக்குமுறையின் பாற்பட்ட நிகழ்ச்சிகளைப் பற்றிய சாட்சியங்களை அளித்த அத்தனை இலக்கியப் படைப்பாளிகளும் இன்னும் அத்தகைய நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியவர்களாகவே இன்னும் இருக்கின்றனர். சாட்சிகளை விசுவாசிகளும் பக்தர்களும் என்றைக்கும் விரும்புவதில்லை. அது அவர்களுடைய இருப்பிற்கும் விருப்பிற்கும் அச்சுறுத்தலானதாக அமைகிறது. சாட்சி உண்மையை வெளிக்கொண்டு வரும் ஒரு ஆயுதமாகத் தொழிற்படுவதால் உண்மையைக் கண்டு அஞ்சுவோர் சாட்சிகளின் குரல்வளையிற் கையை வைக்கின்றனர். சிலவேளை கத்தியையும் வைக்கின்றனர்.

எனவே ஒடுக்குமுறைக்கும் அடக்குமுறைக்கும் எதிரான இலக்கிய சாட்சியமளித்தல் என்பது மிகமிகக் கடினமானது. இங்கே கர்ணன் மிகக் கடினமான வாழ்க்கையொன்றை வாழ்ந்து கடந்து கொண்டிருப்பதுடன், இந்தச் சாட்சியமளித்தலின் மூலமாக மேலும் கடினமான பரப்பொன்றிலும் பயணிக்க வேண்டியவராகிறார். இது மிக நெருக்கடிக்குரியது. என்றாலும் இதை அவராற் புறக்கணிக்க முடியவில்லை. ஏனெனில், இத்தகைய அனுபவப் பரப்பொன்றை விட்டு நீங்கிப் புறநிலையில் நின்று சத்தியத்துக்கு மாறாக, தன் மனம் அறிந்தும் உணர்ந்தும் இருக்கின்றவற்றுக்கு மாறாக அவரால் இயங்க முடியவில்லை. அதனால், நெருக்கடிகளை எதிர்கொண்டவாறே தன்னுடைய எழுத்தியக்கத்தில் அவர் இயங்குகிறார். ஆகவே இன்றைய தமிழ்ச் சூழலின் பொது உளவியலுக்கு மாறாகவே கர்ணன் தெரிகிறார்.

இன்றைய தமிழ்ச் சூழல் ஈழப்போரின் வீழ்ச்சியோடு மிகச் சிதைந்த உளநிலையிற் காணப்படுகிறது. அதனால் அது பெரும் பதற்றத்துக்குள்ளாகியுள்ளது. குழப்பங்களும் கேள்விகளும் நிறைந்த ஒரு பரப்பாக அது நீண்டிருக்கிறது. போராட்;டத்தின் தோல்வியும் போராட்டத்தின் பால் செய்யப்பட்ட தியாகங்களும் செயலிழக்கப்பட்ட வீரமும் சிதைந்த நம்பிக்கையும் போரில் ஏற்பட்ட உயிரிழப்புகளுமே இந்தக் குழப்பங்களுக்கும் பதற்றத்துக்கும் காரணம். துக்கத்தையும் தோல்வியையும் சகித்துக் கொள்ள முடியாத நிலையில் தமிழ்ப் பொதுவெளி உள்ளது. இந்த நிலையில் கர்ணன் தோல்விகளுக்கும் துக்கத்துக்கும் காரணமான விசயங்களை மையப்படுத்தி, வரலாற்றுப் பாத்திரங்களை விசாரணைசெய்யும் கதைகளை எழுதியிருப்பதென்பது கடுமையான சர்ச்சைகளையே உருவாக்கும். இதுவே நடந்து கொண்டுமிருக்கிறது.

ஆனால், எல்லாவற்றையும் எதிர்கொண்டவாறு பயணம் செய்கிறார் கர்ணன். இதேவேளை கர்ணனால் இன்னும் முழுதாக அபாயவெளியைக் கடக்க முடியவில்லை. யுத்தம் முடிந்த பின்னரும், திரும்பி வந்தவனாக இருக்கின்றபோதும் அவரால் இன்னும் இயல்புச் சூழலுக்கு வரமுடியாமல் தளநிலை இறுகியே உள்ளது. இதில் அவர் ஒரு குறியீடு மட்டுமே. ஈழச் சூழலின் நிலவரம் இதுதான். ஆகவே இந்தக் கதைகளும் இந்த இறுகிய தளச் சூழலிலேயே முன்வைக்கப்பட வேண்டியனவாகின்றன. ஏனெனில், இன்னும் இலங்கையின் அரசியற் சூழல் இருண்மையானதாகவே உள்ளது. போர் முடிந்த பிறகும் ஜனநாயகத்தின் நரம்புகளில் இன்னும் ரத்தோட்டம் சீர்ப்படவில்லை. யுத்தகாலத்தில் நிலவியதை ஒத்த அச்ச நிழல் இன்னும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. ஆகவே பகிரங்கமாக எல்லாவற்றையும் பேச முனையும் கர்ணனைப் போன்ற ஒருவர் அபாயவெளியை எதிர்கொள்ள வேண்டிய நிலையிலேயே உள்ளார். இதனால் தலைமறைவுக்கொப்பான நிலையில் இருந்தே உண்மையைப் பேச வேண்டியுள்ளது. பகிரங்கத்திற்கு வரும்போது ஒன்றில் கடுமையாகச் சிந்திக்க வேண்டும். அல்லது வசையை ஏற்க வேண்டும். இதையெல்லாம் எதிர்கொண்டவாறே கர்ணனும் இயங்குகிறார்.

இதுவே  கவனத்திற்குரியது,வரலாற்றின் பதிவுக்குரியது.

 

௦௦௦௦௦

 

40 Comments

  1. karunyan says:

    ஈழத்து இலக்கியத்துக்கு புதிய ஒளி பாய்ச்சுகிறது கருணாகரனுடைய எழுத்து

Post a Comment