Home » இதழ் 04 » பெயரில் என்ன இருக்கிறது?

 

பெயரில் என்ன இருக்கிறது?

 

யூன் மாதச் சூரியன் கடுக்கண்ட இளந்தாரி. அடிக்கடி வீறுகொண்டெழுவதும் பிறகு வடிந்து தனிவதுமாக இருந்தான்.  நான் கிழட்டு மரங்களின் கீழே நடந்தேன். கிளைகளினூடே தூறிக்கொண்டிருந்தது வெயில். மார்ச் ஏப்பிரல் மாசங்களில் ‘டுலிப்ஸ்’ செடிகள் முகிழ்த்த மொட்டுக்களினால் நிறைந்திருந்தது நிலம். காலையில்  சின்னக் குழந்தைகள் நினைவிலோடியது.  மே மாசம் முழுவதும் ‘லைலாக்’ பூக்களின் மெல்லிய சுகந்தமும் ஊதாநிறமும் மனதை மயக்கும்.  அவ்வேளை உலகமே ஒருவித காமக்கிறக்கத்தில் இருப்பதாகவே உணர்வு எழும். இப்போ அதுவும் முடிஞ்சுது. இப்ப ரோசாச் செடிகள் பூத்துச் சிலிர்த்திருந்தன. மரங்களில் பிஞ்சும் காயுமாய் மெருகேறிக் கிடக்கிறது. செரிமரங்களில் சிவப்பும் கருமையுமாய் பழங்களும் பறவைகளும். ஒருவிதத்தில் உலகின் மீது கவிந்து கிடக்கிறது கர்ப்பிணி அழகு!

நான் கல்லறைத்தோட்டத்தினுள் நுழைஞ்சேன். நேரம் காலமை எட்டு மணியைத் தாண்டியிருந்தது. முன்னரைப் போல் இல்லை.   இப்ப இங்கை அடிக்கடி வருகிறன். ஏதோ ஒரு சாக்கில என்ர மனக்குருவி இங்கை இழுத்து வந்துவிடுகிறது. அதிக நாட்களில் உள்ளே நுழைஞ்சதும் சில நிமிடங்களில் தொலைந்து போய்விடுகிறேன். ஏதோவொரு மாயசக்தி உள்ளே என்னை அலைக்கழிப்பது போலவும் அதன் திசையில் நான் அலைஞ்சு மீள்வது போலவும் ஒரு பிரமை. முன்னரென்றால் மோகினியோ அல்லது துர்தேவதையோ என்னைக் கூட்டிச்செல்வதாகவும் அதனிடமிருந்து தப்பி வர பெரும்பாடு பட்டதாகவும் பேய்க்கதைகள் சொல்லியிருப்பேன். உண்மை அதில்லை. சிலந்தியின் வலைப் பின்னல் போலை நிறையக் கிளைப்பாதைகள் உள்ள ஒரு சின்னப்பட்டணத்தின் சிற்றொழுங்கைகளுக்குள்தான் நான் சிக்குண்டு போகிறன். எப்பிடி அலைஞ்சாலும் ஏதோ ஒரு பெரிய சாலையின் கதவுகள் எனக்காகத் திறந்திருக்கும் என்கிற நம்பிக்கை. இதனாலை எனக்கு அச்சத்தை விடவும் சுவாரசியம் தான் அதிகம் கிடைக்கிறது. வாரப்பத்திரிகையின் சிறுவர் பகுதியில் வெளிவரும் “சரியான வழித்தடத்தை கண்டுபிடியுங்கள்” என்ற படத்துடன் கூடிய விளையாட்டைப் போலை என்னை அறியாமலே மனசு இந்த ஆட்டத்துக்குள் நுழைந்துவிடுறன.

பராமரிப்பு ஊழியர்கள் தங்கடை கருமங்களிலை கண்ணாயிருந்தினம். மரக்கூட்டங்களைத் தாண்டி வெளிப்பிரதேசத்துக்குள் நுழைஞ்சன். காலமையென்டாலும் இன்றைக்கு சூரியத்தறுதலை கொஞ்சம் வீறாப்பாயிருந்தான். என்ரை தோள்ப்பட்டையோரம் வியர்வை அரும்பத் தொடங்கியிருந்தது. வழக்கம் போலல்லாது இன்று பறவைகள் பார்வைக்கு அரிதாயிருந்தது. அதுகள் ஆங்காங்கே நிழல்தேடி கொப்புகளுக்கிடையில் குசுகுசுத்துக்கொண்டிருந்தன. அவையின்ரை  கீச்சொலியாலை நிறைஞ்திருந்தது மனசு. நடைப்பயிற்சிக்கு வந்த ஒரு இளஞ்சோடி மெல்ல ஓடியபடியே என்னை முந்திச்சென்றனர்.  ஒரு நடுகல்லின் முன்னே ஒரு கிழவன் கையில் ‘சவள்’ளோடு நின்றார். அவர் நடுகல்லைப் பார்ப்பதும்  நாலடி பின்னால் வந்து சவளால் ஒரு அரை வட்டத்தை உருப்போட்டுவதுமாக இருந்தார். அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது அவரது வண்டி. உள்ளுக்குள் அழகிய பூங்செடிகள் இருந்தன. எல்லாம் வருசம் முழுவதும் பச்சையாக இருக்கக்கூடிய குட்டைத்தாவர இனங்கள்.. நான் அருகில் வந்ததும் அவருக்கு காலை வணக்கம் சொன்னேன். அவர் பதில் வணக்கம் சொன்னார். என்னை ஒருசாங்கமாய்ப் பார்த்தார். அந்த இடத்திற்கு சம்பந்தமே இல்லாதவன் என்று அவர் நினைச்சிருக்க வேண்டும். “உன் உறவினரின் கல்லறையைத் தரிசிக்க வந்தாயா? என்றார். ‘இல்லை உடற்பயிற்சிக்காக நடப்பதற்கு வந்தேன்’ என்றேன். உதடுகள் பதிலைக் கூறினாலும் என் பார்வை நடுகல்லில் எழுதியிருக்கும் வாசகங்களை உற்றுப்பார்த்தது. அடுத்தவர்களின் மன எண்ணங்களைப் படிக்கத் தெரிஞ்சவர் போலும். இது என் மனைவியுடைய கல்லறை என்றார். அவற்றை குரலிலை சற்று குழைவு இருந்தது.   நான் அந்த இடத்தில் கொஞ்சம் தாமதிச்சேன். என்னும் பேச விரும்பியவர் போலை “அவள் இங்கு குடியேறி நான்கு வருடங்களாகி விட்டது” என்றார்.

ஒரு தனி மனுசனா நிண்டு அந்த இடத்தை செப்பனிட்டு பூக்கண்டுகளை நாட்டுவதற்குரிய வலு அவர் உடலிலை இல்லை என்றே நினைச்சன்.  அந்த அளவுக்கு முதுமை அவர்மேல் முழுசாய்ப் படிஞ்சு கிடந்தது. இருந்தாலும் கடும் மனவலுக்கொண்டவராக தெரிஞ்சார்.. தன்னுடைய காதலியுடன் தன் நேரத்தை செலவழிப்பதே அவர் எண்ணப்பாடாயிருந்தது. அச்சிறு உரையாடலின் ஒவ்வொரு சொற்களிலும் பிரிவின் துயர் ததும்பி வழிந்தபடி இருந்தது. நான் அவர்க்கு இடைஞ்சலின்றி அகன்றேன்.

ஒவ்வொருவனும் தன்னுடைய முதுமையை வலிஞ்சுதான் கடக்கவேண்டியிருக்கிறது.  அவர்களின்ரை போரட்டம் பற்றியே என்ரை நினைவோட்டம் இருந்தது. நான் கலியானம் கட்டிய புதிசில் எங்கடை ஊரிலை ஒரு முதிய சோடியைக் கண்டன்.. ஒவ்வொரு நாளும் பின்னேரம் முற்றத்து மாவுக்குக் கீழே இருப்பார்கள். பெரிவர் சின்ன “வாங்கு” ஒன்றில் அமர்ந்திருப்பார். அந்த ஆச்சி நிலத்திலே குந்தியிருப்பா.  இரண்டுபேருக்கும் இடையிலை ஒரு வார்த்தை கூட பேச்சிருக்காது. அவர்கள் பார்வை எங்கோ தொலைதூரத்து புள்ளியில் அந்தரத்திலை தொங்கிக்கொண்டிருக்கும். கண்ணிலை சின்ன அசைவு கூட இருக்காது.  வாலை முறுக்கி சொடுக்கசொடுக்க வேகங்கொள்ளுற சவாரிமாடு போல முகத்திலை மட்டும் உணர்ச்சி ரேகைகள் மாறிமாறி ஓடும்.

நான் அப்ப கலியாணம் கட்டியிருந்தாலும் ஓரு சின்னப் பொடியன்தான். வெறும் வயசுதான் வளர்ந்திருந்தது.. மனசும் சின்னன். அறிவும் அப்படித்தான்.. இவையளைப் பார்க்க  எனக்கு வேடிக்கையாய் இருக்கும். “பெரிய லவ்வர்ஸ்” என்டு கிண்டல் பண்ணத் தோன்றும். இப்ப நினைச்சுப் பாக்கிறன். அவர்கள் இரண்டு பேரும் பேசிக்கொண்டிருந்திருப்பினம் எண்டுதான் தோணுது. அதுவெறும் சத்தங்களுக்கை அடங்காத பேச்சு. இரண்டு மனங்களின்ரை உரையாடல். சிலசமயம் இரண்டு மனங்களும் காதல்மொழிந்து கொண்டிருக்குமோ?

நாலைஞ்சு வருசத்துக்கு முதல் உறவினர் வழியில்  ஒருவர் நோயுற்றிருந்தார். அவரை நான் வருத்தம் பார்க்கப் போயிருந்தேன். புற்று நோய் மேஞ்சு மேஞ்சு அவர் ‘கோமா’ நிலைக்குப் போய்விட்டார். இரண்டு வருசத்துக்கு மேலை “கோமா” விலேயே படுத்த படுக்கையாய் கிடந்தார். அவரை ஒரு வைத்திய விடுதியிலை சேர்த்திருந்தினம். ஒவ்வொரு நாளும் கணவன் காலையிலே வந்துவிடுவார். பின்னேரம் மூன்றுமணி மட்டும் அவள் பக்கத்திலேயே இருப்பார். பிறகு அவருக்கு இரவு ஒருமணிவரை தொழிலக  வேலை. மனைவிக்கருகில் இருக்கும் வரையிலும் அந்த இடத்தைவிட்டு அசையமாட்டார். சௌந்தரராஜன் சுசீலாலா பாடிய பழைய பாடல்களை மட்டும் மெல்லிய சத்தத்தில் ஓடவிட்டிருப்பார். அதுதவிர இரண்டு பேருக்குமிடையில் எந்த பேச்சும் கிடையாது.. ஓரு நாளிலாவது அவர் சலிப்படைந்தது கிடையாது.  அவர் வருவது கோமாவிலிருக்கும் நோயாளிக்கு தெரியுமா?. அவர் தினமும் வரவேண்டிய அவசியம் கூட இல்லை.  இருபத்திதிநாலு மணிநேரமும் தாதியர் கடமையிலிருப்பர்.  இருந்தும் ஒருநாள்கூட அந்த ஒழுங்கைத் தவறவில்லை. என்னோடை பேசும்போது தன் மனைவி இருக்கும்வரை  தனது நேரத்தை அவளுடன் செலவிடவே மனம் அவாவுகிறதென்றார். தினமும் அவள் முகத்தைப் பார்த்தபடி அருகில் ஒரு கதிரையில் இருப்பார்.  அங்கே மௌனம் நிலவினாலும் அவர்களிடையே ஒரு உரையாடல் நிகழ்ந்து கொண்டிருக்கும் என்றே எண்ணத் தோன்றுகிறது. இப்போது அவள் இறந்து நான்காண்டுகள் ஆகிவிட்டன. இப்போதும் அவர் அவளுடன் நினைவுகளினூடாக உரையாடிக்கொடிருப்பார் என்று என் மனசு சொல்கிறது.

என்ரை குருவி ஒரு நடுகல்லின் மேலை குந்தியிருந்தது. அது அசைய மறுத்தது.  அப்படி அந்தக் கல்லிலை என்னதான் இருக்கு? ஓ… எங்கடை ஆக்கள் பார்த்தால் பிரமிச்சுப் போவினம். வழமையாக நடுகல்லில் சிலுவைக்குறி பொறிக்கப்பட்டிருக்கும். பாலகன் யேசுவைச் சுமந்தபடி மரியாளின் சித்திரம் இருக்கும். சீன இனத்தவரின் நடுகல்லென்றால் சிங்கத்தின் உருவம் கல்லிலை வரைஞ்சிருக்கும்  அல்லது கல்லில் செதுக்கின சிங்கம் இரண்டு பக்கமும் காவலிருக்கும். ஆனால் இந்த நடுகல்லிலை வரைஞ்சிருந்த படம் வித்தியாசமாயிருந்தது. சடாமுடியிருந்து கங்கை பாய புலித்தோலின் மேல் நிஷ்டையிலிருந்தார் உருத்திரன். எங்கடை தென் நாடுடைய சிவன்;  காடுடைய சுடலைப் பொடி பூசியன்.

இவனை கனடாவிலை ஒரு இடுகாட்டிலை பார்த்தால் என்னைப்போல ஒருத்தனுக்கு ஆச்சரியம் வருமா இல்லையா? இவனுக்கு இங்கை என்ன வேலை? இது யாருடைய கல்லறையாக இருக்கும்? இதையாரும் எங்கடை தமிழ்ஆக்கள் பார்த்தால் இதைவைச்சும் ஒரு புதுவியாபாரம் தொடங்கிவிடுவினம். பிறகு கல்லறைக்கு கல்லறை இந்த பனிக் குளிருக்குள்ளை சிவபெருமான் குந்தியிருப்பார்.  இங்கையும் ஒரு புதிய பாரம்பரியம் தொடங்கிவிடும்.

சரி.. இப்ப இது யாருடைய கல்லறையாய் இருக்கும் என்டு அறிய ஆசைவந்தது.  நடுகல் எழுதியிருந்த வாசகங்களை பார்த்தேன். ராஜ்கொமாரி  (rajcoomarei) என்று பெயர் இருந்தது. பெயருக்கு கீழே “அன்பான துணைவி பாசமிகு தாயார்’ என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. அடிக்குறிப்புப் போல ‘பத்துப் பிள்ளைகளுக்கு அன்னை’ என்ற தகவலும் இலவச இணைப்புப் போல கூடவே இருந்தது.

எம்மவர்கள் என்றால் ராஜ்குமாரி(rajkumari) என்றே அழைப்பார்கள்.  இது கயானா நாட்டு இந்திய வம்சாவழியினரின் நடுகல் என்பதை உணர அதிக நேரம் எடுக்கவில்லை. இப்போ முதுமையை கடத்தல் என்பதிலிருந்து என் சிந்தனை வண்டி பெயர்கள் விடயத்தில் தடம் மாறியது.

 

மகளுடன் ஒரு இந்திய மாணவி கல்லூரித் தோழியாக இருந்தாள்.. இருவரும் நல்ல நண்பர்கள். எனது மகள் அவளை “சாஸ்வாடி” என்று அவளின் பெயர் சொல்லி அழைப்பாள். எனது  குறுக்கு மூளை சும்மா கிடவாது. இந்தப் பெயரை கொண்டவள் இந்திய மொழிக்குடும்பங்களில்  எந்த இனத்தைச் சார்ந்தவளாக இருப்பாள்?  இதுவேயொரு மில்லியன் டாலர் கேள்விபோல எனனை நோண்டிக்கொண்டிருந்தது. பலமுறை யோசித்திருக்கிறேன். என் சிற்றறிவுக்குள் சிக்கவில்லை.

என் மகளின் பெயர் கன்னிகா. அவளை கன்னி என்றே அழைப்போம்.  ஒரு நட்சத்திரக்கவிஞன்  அவளோடு தொலைபேசியில் பேசும்போது உன் பெயருக்கு அர்த்தம் தெரியுமா எனக் கேட்டுவிட்டான். அவன் என்ன மன வக்கிரத்தோடு கேட்டிருப்னோ தெரியாது. ஆனால் மகள் தன் பெயருக்கு தவறான அர்த்தம் இருப்பதாக உணர்ந்தாள். அவளை நான் ஆசுவாசப் படுத்தவேண்டியிருந்தது. எனவே அப்பெயருக்கான பொருள் புதியவள் எனச் சொன்னேன். பெண் அடிமைத்தனம் மிக்க இச்சாக்கடை சமூகத்திலிருந்து நீ புதியவளாக முகிழ்க்க வேண்டும் என்பதே அப்பெயர் வைத்ததற்கான காரணம் என்றேன். தொடர்ந்து சிலபெயர்கள், அவற்றின் பொருள் தொடர்பாக பேசிக்கொண்டிருந்தோம்.  அப்பொழுதில் “சாஸ்வாடி” என்ற பெயரும் இதற்குள் சிக்குண்டு போனது. அவளது பெயரின் சரியான உச்சரிப்பு “ஸாஸ்வதி” என்றாள். ஓ… எங்கடை ‘சரசுவதி’யா என்றேன்.

எனது மூத்தவன் கனடா வந்து பாடசாலையில் சேர்ந்த முதன்நாள் வகுப்பில் ஆசிரியர் அவனது பெயரைக் கேட்டிருக்கிறார். ‘கரிகாலன்’. அவன் மீளமீள நான்குதடவை சொல்லியும் அவரால் அந்த உச்சரிப்பை  உருப்போட முடியவில்லை. இதுவொன்றும் பெரிய கஸ்டமான பெயர் அல்ல. தமிழில் ஐந்து எழுத்துக்கள் மட்டுந்தான். முடிவில் ‘ஹலி’ என அழைக்கலாமா? என்றாராம். இவனும் அலுத்துப்போய் சரி என்றிருக்கிறான். இன்று வரை அவன் நண்பர்களால் ‘ஹலி’ என்றே அழைக்கப்படுகிறான். இதுபோல் ஆசிரியரின் பெயரை தனக்கு ஏற்றால் போல் இவன் மாற்றி அழைக்க அந்த ஆசிரியர் அனுமதித்திருப்பாரா? ஊரில் என்றால் இது சாத்தியமா? இதை அவன் அனுமதித்திருப்பானா? அல்லது நான்தான் விட்டிருப்பேனா? பாடசாலை சென்று அந்த ஆசிரியரோடு சண்டை போட்டிருக்கமாட்டேன்? என்னதான் பல்கலாச்சாரம் என்று சொன்னாலும் கூட நாங்கள் இன்னொரு நாட்டின் அடிமை இனமாக மாறியதால் அல்லவா எல்லாவற்றிக்கும் பணிந்து போகிறோம்.

 

வெயிலின் மூர்க்கத்தை விட சிந்தையின் கோபமும் எனக்குள் ஏறியிருந்தது. நான் சற்று மரநிழல் ஓரமாய் நடக்கத் தொடங்கினேன். மரங்களிலிருந்து வெயில் பிசின்போல வழிந்துகொண்டிருந்தது. பறவை ஒன்று எனைக்கண்டதும் குரல் கொடுத்தது. அக்குரல் எனக்கானதோ அல்லது சிகேகமானதோ அல்ல.  எச்சரிக்கைக் குரல். தன் இனத்துக்கான எச்சரிக்கைக் குரல். அதனுடைய பேடை அருகிலெங்காவது அடை படுத்திருக்கக் கூடும். கல்லறை மீதிருந்து ஒரு அணில் தலையை சரித்து எனப் பார்த்தது. அது இங்கு அதிகம் காணப்படுகிற கறுத்த பெருத்த அணில் அல்ல. எங்கள் ஊரில் உள்ளதைப் போன்றது. முதுகிலே மூன்று கோடுள்ளது. சற்று மஞ்சள் பூசினாற்போல் நிறம்.  அளவிலே சற்று சிறியது. முகத்திலே சோபையிழந்து இருப்பதாக தோன்றியது. தத்திச்செல்லுகின்ற அளவுக்குத்தான் வேகம் இருந்தது.  ஊரிலென்றால் இவை எவ்வளவு கம்பீரமாக இருக்கும்.  துள்ளலும் பாச்சலுமாக,

கடந்த வாரத்தில் ஒருநாள் என் மைத்துனர் வீட்டுக்கு போயிருந்தேன். அங்கு மிகச் சுவாசியமான விடயம் ஒன்று பேச்சுவாக்கில் வந்தது. அவர்கள் வீட்டிலிருந்து ஐந்து வீடு தள்ளி ஒரு இளம் குடும்பம் குடிவந்திருந்தது. தினமும் அந்த வீட்டுப் பெண் இவர்கள் வீட்டைத்தாண்டி செல்வார். அதிக நாட்களில் தலைக்கு மொட்டாக்குப் போட்டிருப்பார். ஆனால் அது கட்டாய விதியாகத் தெரியவில்லை. சில சமயம் தலை மூடப்படாமலும்  இருக்கும். அவரது தோற்றத்தையும் செயல்பாடுகளையும் அவதானித்து இவர்கள் பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான் அல்லது அல்லது ஈரான் போன்ற இஸ்லாமிய நாட்டு குடும்பமாக இருக்கலாம் என நினைத்திருந்தனர். ஆறு ஏழு வருடங்களாகிவிட்டது. அவர்களுக்கு குழந்தைகள் பிறந்தன. வளர்ந்தன. இப்போ பாலர் பள்ளிக்கு போகத் தொடங்கிவிட்டனர். இருந்தும் ஒருநாளில் கூட இவர்களுடன் பேசும் சந்தர்ப்பம் வாய்த்ததில்லை. சில மாதங்களுக்கு முன் என் மைத்துனர் தன் பேரக்குழந்தையுடன் வீட்டின் முன் நின்றிருக்கிறார். அந்த பிள்ளைகள் இந்தக் குழந்தையைக் கண்டதும் குதூகலித்து குழந்தையுடன் விளையாடத் தலைப்பட்டிருக்கிறார்கள். பிள்ளைகளின் தாயார் விளையாடுங்கள். ஆனால் கொஞ்ச (முத்தங்கொடுக்க) வேண்டம் என கொஞ்சு தமிழில் சொல்லியிருக்கிறார். என் மைத்துனருக்கு அதிர்ச்சி.

‘நீங்க தமிழா?’

‘ஆமா’;

இவர் விடவில்லை. அடுத்த கேள்வியை வைத்தார். ‘இலங்கையா தமிழ் நாடா?’ இது எங்களிடம் முதலில் வருகிற வழக்கமான கேள்விதான். நல்லகாலம் “நீங்க யாழ்ப்பணத்தில் எவடம்?”  எனக் கேட்கவில்லை.  ‘இரண்டும் இல்லை’ என்றிருக்கிறாள் அவள். நாங்கள் எப்போதும் முன் முடிபுகளோடு வாழ்பவர்கள். நிட்சயமாக மைத்துனரின் மூன்றாவது கேள்வி ‘அப்படியாயின் மலேசியாவா’ என்பதாகவே இருந்திருக்கும். ஆனால் அந்தப் பெண்மணி அதற்கு இடங்கொடுக்கவில்லை. ‘இந்தோனேசியாவிலுள்ள சிறிய தீவு’ என்கிறாள். இவர் வெலவெலுத்துப் போனார்.

ராஜராஜன் படையெடுத்துச் சென்ற போது அவனுடன் போனவர்கள். இப்போ ஆயிரமாண்டுகள்கழிந்தது. தமிழே பேசுகிறார்கள். தமிழர்களா க வாழ்கிறார்கள். கனடா வந்தபின்பும் கூட இங்கு பிறந்த தங்கள் பிள்ளைகளோடு தமிழிலே பேசுகிறார்கள். அன்று நானும் தற்செயலாக அப் பெண்மணியை சந்தித்தேன். என் சகோதரி அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். ‘அருகிலா இருக்கிறீர்கள் அண்ணா?’ என்றார். அவரது தூயதமிழ் என்னை அதிசயிக்க வைத்தது. ‘இல்லை அரைமணி நேரத்துக்குள் நடக்கும் துரத்தில்’ என்றேன்.

என் வீட்டின் நேர் எதிரே வீட்டில் வசிப்பவர்  ஜெய்நாராயண்.  அடிக்கடி அவரோடு உரையாடும் சந்தர்ப்பம் கிடைக்கும். கயானா நாட்டின் இந்திய வம்சாவழியினர். இப்போ அவருக்கு அறுபதுவயதிருக்கும். அவரின் பாட்டனார் கூலித்தொழிலாளியாக நாடுகடத்தப்பட்டவர். அப்படியாயின் ஒரு இருநூறு ஆண்டுகளுக்குள்தான் அவர்கள் இடப்பெயர்வும் வாழ்வும் அடங்கும். இருந்தும் இவர்களுக்கு இந்திய மொழி எதுவும் தெரியாது. தாங்கள் இந்தியாவின்  எந்த மாநிலம்.? எந்த மொழிக்குடும்பம்.? தங்கள் முன்னோர் பேசிய மொழி என்ன? எதுவும் தெரியாது. அவரின் பிள்ளைகள் திருமண வயதை எட்டியவர்கள். அவர்களின் பெயர்களைக் கேட்டேன். மூத்தவள் பெயர் “அமலாதேவி” அடுத்தவள் ‘அஞ்சலிதேவி’. நான் அந்தப் பெயர்களை உச்சரித்தேன். எனது வாயிலிருந்து ‘தேவி’ என வந்ததை “டேவி” திருத்தினார். ‘கனகரட்னம்’ ‘ராஜரட்னம்’ போன்ற எம்மவர்களின் பெயர்களில் இரத்தினம் அல்லது ரத்தினம் என்றசொல் ‘ரட்னம்’ ஆனதை நினைத்துக் கொண்டேன்

ஆயிரம் வருடங்களுக்கு முன் ராஜராஜன் படைகளோடு இந்தோனேசியா வரை சென்று அந்த நாட்டை வெற்றிகொண்டான். அங்கு வாழ்ந்தவர்கள் இன்றும் தங்கள் மொழியை மறக்காமல் தமிழோடு வாழ்கிறார்கள். இருநூறு ஆண்டுகளுக்கு முன் கயானா சென்றவர்கள் எல்லாவற்றையும் இழந்து வெறும் இந்தியப் பெயர்களோடு மட்டிலுமே தொங்கி நிற்கிறார்கள். இதற்கான காரணம் என்னவாக இருக்கும். ராஜராஜன் இந்தோனேசியாவை வெற்றிகொண்டான். அதனால் அதிகாரம் பெற்றவனின் மொழி என்பதால் இன்றும் அங்கு தமிழ் அவர்கள் பேச்சுமொழியாக இருக்கிறதா? ஆங்கிலேயரால் வெற்றிகொள்ளப் பட்டு கயானாவுக்கு கூலிகளாக கொண்டுவரப்பட்டவர்கள் அதிகார மொழியான ஆங்கிலத்துக்கு மாறினார்களா? அப்படியாயின் எல்லாம் இழந்து அகதிகளாக புலம் பெயர்ந்த எம்மிடம் எவ்வளவு காலம் எங்கள் மொழி தங்கி நிற்கப் போகிறது? கயானாவுக்கு போனவர்களிடம் பெயர்களாவது எஞ்சியிருக்கிதே. ஆனால் எங்களிடம்?

என் சிந்தனையை முறித்தது ஒரு பெருவாயில் முகப்பு. நிமிர்ந்து பார்த்தேன். பேர்ச்மவுண்ட் சென்கிளயர்; சந்திப்பு. நான் வீடுதிரும்ப வேண்டிய திசைக்கு நேர் எதிர் திசையிலிருந்தது. வெளியே வந்து வீதியூடாக நடப்பதாயின் வீடுசெல்ல இன்னும் நாற்பது நிமிடங்கள் எடுக்கும். அதற்குள் வெயில் என்னை தின்றுதீர்த்துவிடும். மீண்டும் கல்லறைத்தோட்டத்தினூடாகவே ஓரளவு நேர் எதிர்த்திசையை குறிவைத்து குறுக்கறுத்து நடந்தேன். உள்ளே சனநடமாட்டம் குறைந்திருந்தது.

சில வருடங்களுக்கு முன் என் சகதொழிலாளி ஒருவனுக்கு பெண் குழந்தை கிடைத்திருந்தது. தனக்கு ஒரு சற்று வித்தியாசமான அழகான நல்லதமிழ்ப் பெயர் வேண்டும் எனறான். முதல் எழுத்து ‘த’ னாவாக இருக்கவேண்டும் என்றான். ஊர் மீது பற்றுக்கொண்டவன். எப்போ ஈழம் கிடைக்கும் எனக் கனவு கண்டுகொண்டிருப்பவன். சில சமயங்களில் என்னைத் துரோகி என்றுகூட வைதிருக்கிறான். தூயதமிழ்ப் பெயரில் அவன் ஆசைப்படுவதில் என்ன புதினம் இருக்க முடியும்? ‘தரங்கணி’ என்றேன். நாலுதரம் உச்சரித்துப் பார்த்தான்.  பொருள் கேட்டான். தமிழகத்தை பசுமைப்படுத்துகிற நதிகளில் ஒன்று என்றேன். ‘ஓ.. நன்றாயிருக்கிறது பெயர்’ என்றான். ஒருமாதம் கழிந்தது. நண்பர்கள் சிலரை வீட்டுக்கு அழைத்திருந்தான். போயிருந்தேன். குழந்தையை தூக்கிவந்து கையில் தந்தான். மிகப் பக்குவமாக என்மடியில் வைத்தேன். குழந்தைக்கு என் உடல்சூடு தெரிந்திருக்க வேன்டும். மெல்லச் சிற்றிதழ் நெழித்துச் சிணுங்கத் தொடங்கியது. நான் மீள தந்தேன். அவன் கையில். ‘தமிஜா குட்டி அழதையம்மா’ எனத் தேற்றத் தொடங்கினான். குழந்தை அழுகையை நிறுத்தவில்லை. தாயிடம் கொடுத்தான். சட்டென்று நின்றது அழுகை. தழிழ்பெயர் கேட்டானே இப்படியொரு பெயர் வைத்தானே என்ற வருத்தமோ அதிர்ச்சியோ எனக்கிருக்கவில்லை. ஒரு குழந்தைக்கு பெயர்வைப்பது ஒருவன் மட்டும் எடுக்கும் முடிவுமல்ல. அது குடும்பத்தினர் எல்லோரும் சேர்ந்து எடுக்கிற முடிபு.  இதற்குள் எத்தனை சிக்கல்கள். எத்தனை குறுக்கீடுகள். முதலில் சாத்திரியார் குறிப்பெழுதி “நட்சத்திரம்” பார்த்து பொருத்தமான முதலெழுத்து சொல்லவேண்டும். பிறகு பிறந்த தேதிக்கு பொருத்தமான எந்த இலக்கத்தில் பெயர் அமைய வேண்டும் என குறைந்தது ஒரு பத்துப் பேரிடமாவது தொலைபேசியில் அழைத்துக் கேட்க வேண்டும். வடமொழி எழுத்துக்கள் பெயரில் அமைந்தால்தான் அது பாஷனாக இருக்கும் என்ற இலவச ஆலோசனைகளுக்கு செவிகொடுக்க வேண்டும். ஆங்கிலத்தில் அதிக பட்சம் ஐந்து ஆறு எழுத்துகளுக்குள் பெயர்  அமைய வேண்டும். இத்தனை சிக்கல்களைத் தாண்டி எங்கனம் ஒரு பொருள் பொதிந்த தமிழ்ப் பெயரை குழந்தைக்கு சூட்ட முடியும். அது பெரும் போரட்டமல்லவா?  பாவம். அவன் என்ன செய்வான். இந்தப் பாதைகளையெல்லாம் கடந்துதானே வந்திருப்பான்.

நான் புகலிடம் பெற்ற கனேடிய நாட்டில் ஒரு பிள்ளைக்கு முதற்பெயர் நடுப்பெயர் குடும்பப்பெயர் அல்லது கடைப்பெயர் என மூன்று பெயர்கள் பதிவிலிடும் வாய்ப்புகள் உண்டு. மேற்கத்தைய இனத்தினருக்கு குடும்பப் பெயர் சந்ததி சந்ததியாக ஒன்றுதான். அது ஆண் வழியில் மாறாது.  தொடரும். எக்காலத்திலும் அவர்களது குடும்பப் பெயர் அவர்கள் மொழிக்குரியதாகவே இருக்கும்.  எங்கள் வழக்கில் அப்படி அல்லவே. பிறக்கிற குழந்தைக்கு தகப்பனின் முதல் பெயரே குடும்பப் பெயர். இந்தக் குழந்தை தந்தையாகிற போது இவனது பெயர் குழந்தையின் கடைப்பெயராகி விடும். அப்படியாயின் ஒரு நாலு சந்ததியின் பின் எங்கள் அடையாளம்….? மொழியிழந்து அர்த்தமிழந்து வாய்க்கிசைவான வெறும் ஒலியின் வடிவாகவல்லவா  எங்கள் பெயர்கள் மாறிவிடப் போகிறது.

பாரிஸ் நாகரில் இருக்கிற என் சகோதரர்களை நினைத்தேன். அது கனடா போலை பல்கலாசார நாடு இல்லை. அங்கே அந்த நாட்டு பூர்வமக்களுக்குரிய சட்டம்தான். வந்தேறு குடியள் தங்கடை கலாசார முறமைகளை முழுமையாக  பின்பற்ற முடியாது. அந்த நாட்டுக்குரிய கலாசர வழக்கங்களைத்தான் கைக்கொள்ள வேண்டும். இப்ப என் அப்பாவின் பெயரே  பிள்ளைகளின்டை குடும்பப்பெயராக மாறிவிட்டது. இனி இனிஅவர்கள் பேரன் பூட்டன கொப்பூட்டன் காலத்துக்கப்பாலும் அப்பாவின் பெயர்தான் அவர்கள் குடும்பப் பெயர்.    இதிலை அப்பாவின் பெயர் அவர்கள் வழி நிலைக்கப்போகிறது என்பதல்ல என்ரை சந்தோசம்.. அந்த தமிழ் உச்சரிப்பு அதன் அடையாளம் அழியப்போறதில்ல என்டது தான் இதிலை முக்கியமான விசயம்.  மெல்லத் தமிழ் இனிச்செத்தாலும் கூட சில புலம் பெயர் நாடுகளில் குடும்பப் பெயராக தமிழ் இனி பெயர்களில் மட்டுமாவது  நிலைக்கப்போகிறது.

தெருவோரம் குழிதோண்டும் எந்திரம் நின்றது. இரண்டு பேர் தோண்டிய கிடங்கின் நாலுபக்கமும் பச்சை கம்பளங்களை விரித்துக்கொண்டிருந்தனர்.  நடுவில் சவப் பெட்டியை உள்ளே மெல்லமெல்ல இறக்கிறத்துக்கான பொறியைப் பொருத்தப்பட்டிருந்தது. இன்னும் சில மணி நேரத்தில் யாரோ ஒரு புதியவர் இங்கு குடியேறப் போகிறார். நிரந்தரமாக. ஒருகணம் நின்று பார்க்கத் தோன்றியது. குழந்தையாய் பிறக்கிற போது வருகின்ற கருவறை வாயில் போலவே அக்குழிவாய் தோன்றியது, இப் போகிறவழியும். தாய்மடியில் பிறப்பதும் மண்மடியில் வீழ்வதற்கும் இடையேயான சொற்ப காலத்துக்குள் எதையெதையில்லாம் சந்திக்க வேண்டியிருக்கிறது? எதற்கெதற்கெல்லாம் போராடவேண்டியிருக்கிறது? ஒரு நீண்ட மானிடப் பயணத்தில் ஒருவர் வாழ்வு  ஒரு நாளைப் போல.  மிகச் சின்னக்காலம். நேற்றைக்கும் நாளைக்கும் இடையிலான பயணத்திலை ஒரு மனிசன்ரை கடமை என்னை? வெறும் பிள்ளைகளை உற்பத்திசெய்யிறது     மட்டுந்தானா? அல்லது வேறு கடமைகளும் இருக்கிறதா?

 

 

ஊரில் எங்க காலத்தில் வீட்டுப் பெயர் ‘டாப்புப்’ பெயர் என இரண்டு இருக்கும். டாப்பு என்ற சொல் இப்பவும் வழக்கத்தில் இருக்கிறதோவெண்டு தெரியல்லை.  பள்ளிக்கூடத்தில் மாணவரின் தின வரவு பதிவுப்புத்ததை டாப்பு எண்டு சொல்லுவினம்.. என்ரை காலத்தில ஊரிலை இதுதான் வழக்கமாயிருந்தது. நாங்கள் சின்ன வயசிலிருந்து அம்மாவின் ஊரிலைதான்  இருந்தோம். அப்பாவை எல்லாரும் கனகசிங்கம் எண்டு கூப்பிடுவினம். அவரது ஊர் எங்கடை வீட்டிலிருந்து ஒரு ஐஞ்சுமைல் தொலைவிலிருந்தது. எனக்கப்ப பதின்மூன்டு வயசிருக்கும். அப்பாவினூருக்கு போயிருந்தேன். அப்பாவுக்கு மச்சான் முறையிலுள்ள மாமா என்னை கோவிலுக்குச் கூட்டிப்போனார். அங்கை நிண்ட இன்னொருவர் ‘நீ யாருடைய மோன்’ என்றார். நான் அப்பாவின் பெயரைச் சொன்னேன். அங்கை அவரை யாருக்கும் தெரியவில்லை. என்ரை மாமாவிட்டை கேட்டினம். மாமா ‘காராளியின்டை பொடியன்’ என்றார். எனக்கு குழப்பமா போச்சு. வரும் போது ”மாமா எங்கடை அப்பாவின்டை பெயர் கனகசிங்கம் இல்லையா” என்டன்.

‘அவன்றை பேர் காரளசிங்கம். இங்கை எல்லாரும் காராளி என்டுதான் கூப்பிடுவினம். அவன் விடலையிலை சிங்கப்பூர்க்கு கப்பல் ஏறியிட்டான். அப்ப இரண்டாம் உலகச்சண்டை நடந்த காலம். இவன் அங்கை கொம்மினிஸ்ற் காரரோடை சேர்ந்து விடுதலைப் போராட்டம் எண்டு காட்டுக்குள்ளை போயிட்டான். இவன்ரை அக்கா, உன்ரை மாமி சண்டைக்குள்ளை இவனை தேடிப்போட்டு காணையில்லை என்டு ஊருக்கு வந்திட்டா. நாங்கள் ஆள் உசிரோடை இல்லை எண்டுதான் நம்பிக் கொண்டிருந்தோம். ஒருநாள் இளவாலையிலை ‘கொம்மினிஸ்ற் பார்ட்டி’யின்டை கூட்டம். மேடையிலை ஒருத்தன் நானும் இந்த ஊரிலைதான் பிறந்தவன். மாரிசன்கூடல் தான் என்ரை ஊர் என்று பேசிக்கொண்டிருந்தான். யோசிச்சு யோசிச்சு பாத்தேன். எனக்கு பிடிபடயில்லை. பக்கத்திலை இருந்தவரை ஆர் உதென்டு கேட்டேன்.. ஆரோ கனகசிங்கமாம் என்டினம். அந்தப் பேர்வழியிலை ஒருவரும் இந்த ஊரிலை இல்லை.  பிறகுதான்  ஓடிப்பிடிச்சன். இது ‘காராளி’ யாய்த்தான் இருக்கவேணும். கூட்டம் முடிய போய் ‘நீ காராளிதானே?’என்டு கேட்டன். ஓமெண்டு தலையை ஆட்டினான். ஆளே சரியாய் மாறிப்போயிட்டான். உன்ரை கொக்கா நீ உசிரோடை இல்ல என்டிலே நினைச்சுக்கொண்டிருக்கிறாள். வா வீட்டை எண்டு கூட்டியந்தேன்.

மாமா சொன்ன பதிலைப் புரிஞ்சுகொள்ள முடியல்லை. அப்பாவிட்டை சந்தப்பம் வரயிக்கை கேட்கவேணும் எண்டிருந்தேன். அதற்கிடையிலை அப்பா செத்துப்போனார். ஆனால் என்ரை பிறப்புக் கொப்பியிலை அப்பாவின்ரை பேர் ‘கனகசபை கனகசிங்கம்’ எண்டு தான் இருக்கு.

நான்பிறந்த போது அப்பா எனக்கு கருணாகரன் என்று பெயர் வைச்சார். ஆனால் ஊரிலை எல்லாரும் சிவம் என்டுதான் என்னைக் கூப்பிடுவினம். எங்கடை வீட்டில் எல்லாற்றை பெயர்களினதும் முதல் எழுத்தும் ‘க’ எண்ட எழுத்தில் தான் தொடங்கும். இதுக்கு என்ன காரணமெண்டு அம்மாவிட்டைக் கேட்டன்.

‘கொப்பர் தான் எல்லாருக்கும் பேர் வைச்சவர். கடைசியிலை கண்ணன் பிறந்தபோது நான் ‘காங்கேசன்’ என்று பேர்வைக்க விருப்பப்பட்டனான். அவர் கருணாமூர்த்தி எண்டு பதிஞ்சு போட்டு வந்திட்டார். நான் கேட்டதுக்கு காங்கேசன்லை முதல் எழுத்து கானா இல்லை. காவன்னா எண்டார்.’

‘நீங்கள் பெத்த பிள்ளையள் தானே நாங்கள். உங்கடை ஆசைக்கு இடமில்லையா?’ எண்டு கேட்டன்.

நீங்கள் என்ரை பிள்ளையள் எண்டது ஊரெல்லாம் தெரிஞ்சதே. அதுக்கு வேறை அத்தாட்சி வேணுமே.  பிறப்புக் கொப்பிப் பெயர்தான் அவர் வைச்சது. ஆனால் நான் வைச்சவீட்டுப் பெயரைத் தானே ஊரெல்லாம் கூப்பிடுகிது. ஆனால் உன்ரை வீட்டுப் பேர் மட்டும் நான் வைச்சதில்லை.’

‘அப்ப ஆர் வைச்சது’

‘கணேசையர்’

எனக்கு கணேசையரை நினைவில்லை. நான் பிறந்து இரண்டுமூன்று வரிசத்திலை செத்துப் போனார். எண்டாலும் அவரைப்பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறன். பெரிய மகான். தமிழிலை பண்டிதன். இந்தியாவிலை இருந்து கூட ஆக்கள் வந்து அவற்றை சமாதியை குப்பிற விழுந்து  கும்பிடுவினம்.  பாத்திருக்கிறன். இவர்தான் பேர்வைச்சதெண்டதும் எனக்கு கடும்புழுகமாய்ப் போச்சு. அதிலையும் அம்மா கதைசொல்லத் தொடங்கினாவென்டா சுருக்கமா சொல்லமாட்டா. ஆதியிலை இருந்து தொடங்குவா. நினைவை மீட்டிமீட்டி சொல்லுவா. அந்ததந்த சந்தர்ப்பத்துக்குரிய உணர்வுகள் எல்லாம் அவமுகத்திலை ஓடும்.

‘நீ பிறக்கிறதுக்கு முதல் உனக்கு இரண்டு அண்ணர் பிறந்து செத்துப்போச்சினம். அதாலை எங்களுக்குச் சரியான கவலை. கொப்பருக்கு ஊழ் மேலை நம்பிக்கை வரத்தொடங்கிச்சுது. அடிக்கடி கோயிலுக்கு போனோம். ஆளாளுக்கு சொன்ன விரதமெல்லாம் பிடிச்சோம். கந்தசட்டியிலை இருந்து பிள்ளையார் கதை மட்டும் ஒண்டும் தப்ப விடயில்லை. அப்பதான் நீ வயித்திலை தரிச்சாய். கொப்பாவுக்கு கணேசையரை நல்லாப் பிடிக்கும். நான் கர்ப்மாயிருக்கிற தகவலை அவருக்கு சொல்லியிருக்கிறார். கணேசையரும் ‘கனகசிங்கம் நீ ஒண்டுக்கும் கவலைப்படாதை. உனக்கு  பெடியன் பிறப்பான். எல்லாம் நல்லபடி நடக்கும் மருதடியான் கைவிடமாட்டான் எண்டிருக்கிறார்.

நீ பிறந்து மூண்டாம் நாள் முதல் வேலையாய் கோயிலுக்கு போயிருக்கிறார். கணேசையர் மரத்துக்குக் கீழை குளத்துப் படிக்கட்டிலையிருந்து இரண்டுமூண்டு பெடியளுக்கு வகுப்பெடுத்துக் கொண்டிருந்திருக்கிறார். அவரிட்டை தமிழ்ப்படிக்க வெளியூரிலையிருந்தெல்லாம் பெரியபெரிய ஆக்கள் வாறவை. கொப்பர் அவரைக் குழப்பக்கூடாதெண்டு கொஞ்சம் தூரமாய் தயங்கித்தயங்கி நிண்டிருக்கிறார்.

‘என்ன கனகசிங்கம் உதிலை நிண்டு மசுந்திறாய்? இஞ்சை வா. ஏதும் அலுவலே’

எண்டு கேட்டிருக்கிறார். கொப்பரும் நீ பிறந்த சேதியைச் சொல்லியிருக்கிறார். உடனை என்ன பெயர் வைச்சனி என்டு கேட்டாராம். இவர் கருணாகரன் எண்டிருக்கிறார். ஐயா கொஞ்ச நேரம் யோசிச்சிருக்கிறார். கொப்பர் பயந்து போனார். ஏன் ஐயா ஏதும் பிழையோ? எண்டிருக்கிறார். சீச்..சீச்..சி அப்பிடி ஒண்டும் இல்லை. ‘நீ வீட்டிலை அவனை சிவம் என்டு கூப்பிடு’ என்றிருக்கிறார்.

என்னை ஊரிலை எல்லாருக்கும் சிவம் எண்டுதான் தெரியும். எங்கடை வீட்டுக்கு முன் வீட்டிலையும் ஒரு சிவம் இருந்தவன். அன்னபாக்கிய மாமியின் மருமோன். அன்னபாய்க்கிய மாமிக்கு பிள்ளையள் இல்லை. புருசன் சிங்ப்பூரிலை செத்துப்போனார். சிங்கப்பூர் பென்சன்காசு சுளையாய் வந்து கொண்டிருந்தது. அவாவிடை தம்பியின் மகன் தான் சிவம். சிவநாயகம் முழுப்பெயர். என்னை சிவம் எண்டு கூப்பிடும் அன்னபாய்க்கியமாமி எப்பவும் அவனை தம்பி என்டுதான் கூப்பிடுவார். எங்கடை வீட்டுக்கு ஒரு வளவு தள்ளி பின் வீட்டிலையும் ஒரு சிவம் இருந்தவன்.  பரமேஸ்வரி மாமியின்ரை மகன்.  பின்வீட்டுச் சிவத்துக்கு முழுப்பெயர் சிவகுமாரன். இருந்தாலும் ‘வணங்காமுடி’ என்டு பட்டப் பெயர் சொல்லித்தான் கூப்பிடுவோம். இது கூட காரணப் பெயர்தான். வடிய வடிய எண்ணை வைச்சு வாரி இழுத்தாலும் அவனது தலைமயிர் படிஞ்சு நிற்க்காது. முள்ளம்பன்டி சிலிர்த்தது போல தலைமுடி சிலிர்த்தபடிய  இருக்கும். அதனாலை வந்தது அந்தப் பெயர். நாங்க மூண்டுபேரும் ஒருவயதொத்தவர்கள்தான். இருந்தாலும் எங்களுக்குள்ளை பெயர்க்குழப்பம் வந்ததில்லை.

எழுபத்தி ஒன்டிலை என்டு நினைக்கிறன். பண்டாரவன்னியன் நாடகம் போட்டோம். எனக்கு அதிலை பண்டாரவன்னியன் வேசம். எங்களுக்கு நாடகம் பழக்கக்கூட அப்ப ஒருத்தரும் இல்ல. நாங்கதான் எல்லாம். இளவாலை தம்பு மாஸ்டர் தான் மேக்கப். அவர் பெரியபெரிய கூத்துகளுக்கெல்லாம் மேக்கப் போடுறவர். எங்களை ஆள் அடையாளமே தெரியாதமாதிரி மாத்திப்போட்டார். நாடகம்முடிய ‘பண்டாரவன்னியனாக நடித்தவர் கருணாகரன்’ எண்டுதான் அறிவிச்சவை. அடுத்தநாள் பரஞ்சோதி மாமியின்டை கிணத்தடியிலை ஆரவாரம். அது ஐஞ்சாறு வீடுகளுக்கான பங்குக்கிணறு. காலமை ஏழுஎட்டுமணிக்கு எல்லைரையும் கிணத்தடியிலை காணலாம்.  யாரது கருணாகரன் எண்டதுதான் அடுத்தநாள் கிணற்றடிப் பேச்சு. ஒருவர் அது கட்டுவன் பெடியன் என்றாராம். என்னொருவர் இல்லை எல்லாம் ஊர்பெடியள்தான் நடிச்சது என்டு சொல்லிச்சினம் என்றாராம்.  கடைசியிலை ‘அது ஆச்சிப்பிள்ளையின்டை சிவம்’ என்டுசொல்லி பரஞ்சோதிமாமிதான் கதையை முடிச்சுவைச்சாவாம். அப்பிடி ‘சிவம்’தான் அறிமுகம். கருணாகரனைக் கனகாலம் ஊரிலை ஒருத்தருக்கும் தெரியாது.

உலகத்திலை உள்ள எல்லா இனத்தையும் போல தமிழரிட்டையும் ஒரு மரபும் தொடர்ச்சியும் இருந்தது.  முந்தி தகப்பன்ரை பெயரை தன்ரை மகனுக்கு வைக்கிறது எங்கடை வழக்கம். அதாலைதான் ‘பேரன்’ என்ட சொல்லு வந்ததாம். தன்ரை பெயரை உடையவன் என்ற அர்த்தமாம். நாங்கதான் எல்லாத்தையும் விட்டிட்டம். காலம் போகப்போக நாகரிகம் வந்திட்டுது. பாஷனாய் பெயர் வைக்க தொடங்கியிட்டினம்..  அப்பா தன்ரை தேப்பன்ரை பேர் முழுசாய் இல்லாட்டிலும் பறவாயில்லை. முதல் எழுத்தாவது மிஞ்சட்டும் என்று நினைச்சிருப்பார் போலை. பிறகு நாங்களும் அதையே தொடந்து செய்தோம்.

 

நான் கல்லறைத் தோட்டத்தின் வடகிழக்கு மூலைக்கு வந்துவிட்டேன். அதையொட்டி வெளியே செல்வதற்கு ஒரு சிறிய ஒற்றையடிப்பாதை இருக்கிறது. இப்போதெல்லாம் பிரதானவாயிலால் நுழையவோ வெளியேறவோ வேண்டிய அவசியம் வருவதில்லை. எங்கெங்கே சிறுசிறு பாதைகள் இருக்கின்றதென்ற விசயம் ஓரளவு தெரியும். கொடிகாமப் பக்கமிருந்து சுன்னாகம் சந்தைக்கு வரும் கிடுகு வண்டில்கள் போல். மனம் எங்கெங்கோ அலைய எப்படியோ கால்கள் வீடுபோய் சேர்ந்துவிடும்.

கனடாவுக்கு வந்ததும் முதலிலை மொன்றியலிலை இரண்டுவருடங்கள்  இருந்தேன். அங்கையும் என்னை சிவம் என்டுதான் கூப்பிடுவினம். இமிக்கிறேசன் காரனுக்கு மட்டும் தான் என்ரை முழுப்பெயர் தெரியும். பிறகு தொரன்ரோவிலை இருந்து வாற தமிழ்ப்பேப்பர்களிலை கொஞ்சம்கொஞ்சமாய் எழுதத் தொடங்கினன். “தொண்நூற்றிநாலு தை” எண்டு நினைவு.  மொன்றியாலிலை ஒரு  பொங்கல்விழா நடந்தது. அது தொடர்பாக ஒரு குறிப்பெழுதும்படி என்னைக் கேட்டினம். அப்பதான் முதன்முதலாக திருமாவளவன் எண்ட பெயரிலை எழுதத் தொடங்கினன்.

அப்புலிமாமா இதழ்களைத் தவிர்த்து நான் முதன் முதலிலை படிச்ச பெரிய புத்தகம் விக்கிரமாதித்தன் சரிதம். அப்படித்தான் எனக்கு நினைவு. பிறகு கல்கி அகிலன் சாண்டில்யன் என்று தொடர்ந்தேன். அது காண்டேகர் வரை தொடர்ந்தது. எனக்கு சரித்திர கதாபாத்திரங்களின் மீது ஒருவித ஈர்ப்பு இருந்தது. எங்கள் வீட்டில் பிறக்கும் முதல் மகனுக்கு கரிகாலன் என்று பெயர் வைப்பதென நினைத்திருந்தேன். பொடியன் பிறந்தான். நினைச்சிருந்த படி அப்பெயரையே அவனுக்கு வைச்சன்.

சரித்திரத்தில் சொல்லப்பட்ட கரிகாலனின் இயற்பெயர் திருமாவளவன். எனக்கு அந்தப் பெயரிலையும் கடும்விருப்பமிருந்தது. குறிப்பு அல்லது விமர்சனம் எழுதிறதெண்டால் ஆளைத்தெரியாமல் இருக்கிறது நல்லதென்டு அபிப்பிராயப்பட்டேன். உடனை எனக்கு திருமாவளவன் என்ட பெயர்தான் வாயிலை வந்திது. அப்பிடியே போட்டிட்டன். ஒரு மூன்டுநாள்தான் கழிஞ்சிருக்கும். ஒரு தொலைபேசி அழைப்பு. ஒரு நணபரிடமிருந்துதான்.

‘நீ பெயரை மாத்தி எழுதினால் தெரியாதெண்டோ நினைக்கிறாய். பெயரிலை என்ன இருக்கு. எழுத்திலையில்லா இருக்கு. அது சொல்லும் ஆர் எழுதினதென்டு”

குட்டு வெளிச்சுப் போச்சு. ‘இல்லை அண்ணை அதுவந்து…’ என்டு இழுத்து சமாளிச்சுப்போட்டன். இது நடந்து ஓரிரு மாதம் கடந்திது. அப்போ நான் எழுதிவந்த தொரன்ரோ பத்திரிகையில் ‘பிறந்த பதியில் சிறந்ததொன்றில்லை’ என்ற பொதுத் தலைப்பில்  வாராவாரம் ஒவ்வொருவரும் தங்கள் ஊர்பற்றி எழுதி வந்தினம்.

எல்லாமே பாடசாலைக் கட்டுரை போலச் மூன்டு கோவிலிருந்திது.. இரண்டு பள்ளிக்கூடம் இருந்து. நாலு வேப்பமரம் இருந்து என்ட வகையிலை தகவல்களாயிருந்திது. ஒன்றிலும் சுவாரசியம் இல்லை. சப்பென்றிருந்தது. என் விசனத்தை ஆசிரியரிடம் தெரிவித்தேன். பதிலுக்கு அவர் நீங்கள் உங்கள் ஊர்பற்றி எழுதலாமே என்றார். எழுதினேன்.  அப்போதிருந்த மனநிலையில் அதையும் திருமாவளவன் என்ற பெயரிலேயே அனுப்பியிருந்தேன்.

என்ஊர் பற்றிய குறிப்பு சற்று நீளமாக அமைந்ததால்  இரண்டு வாரங்கள் தொடர்ந்து வெளிவந்தன. இரண்டாவது வாரத்தில் ‘திருமாவளவனின் வருத்தலைவிழான்’ எனத் தலைப்பிட்டு பிரசுரமாகியிருந்தது. எனக்கும் கடும் சந்தோசமாயிருந்தது. சிலவாரங்கள் கழிந்தது. நான் தொரன்ரோ வந்திருந்தேன். நண்பர்கள் என்னை திருமாவளவன் என அழைக்கத் தொடங்கியிருந்தனர். இப்போ நான் தொரன்ரோ வாரப்பத்திரிகைகளில் எழுதுவதேயில்லை. ஆனாலும் ஒரு சுவடுபோல அந்தப்பெயர் என்னோடு ஒட்டிக்கொண்டுவிட்டது. இது நடந்து கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இப்ப இந்தப் பெயரின் சுவடுகளைப் பின்பற்றியே நான் எழுதத்தொடங்கிய ஆரம்ப கால நினைவுகளை மீட்டிக்கொண்டிருக்கிறேன்.

சில மாதங்களுக்கு முன் ஒரு நாடகவிழா முடிந்து திரும்பிக்கொண்டிருந்தோம். ஒருத்தன் திருமாவளவன் எண்டது உங்களது சொந்தப் பெயரோ புனைபெயரோ எண்டான். நான் புனைபெயர் என்றேன்.  அவனது கேள்வியில் ஒரு வித குதர்க்கம் குந்தியிருப்பதை உணர்ந்தேன். எனவே புனைபெயர்தான் அதில் என்ன சந்தேகம் இருக்கின்றதென்றேன். முன்னால் ஒரு திரு. அப்பால் மா. மா என்றால் பெரிய என்று அர்த்தம். பின்னால் வளவன். வளவன் என்றால் வெள்ளாளன். அதனால் கேட்டேன் என்றான். வளவன் என்றால் வெள்ளாளன் என்று எந்த அகராதியில் இருக்கிறதென்றேன். அவன் அடித்துச் சொன்னான் அப்படித்தான் அதற்கு  பொருள் என்றான்.

அப்படியாயின் தொல். திருமாவளவன் என்றேன். அவர் தலித். அவர் அப் பெயரை வைத்திருப்பது வேறு. நீங்கள் வைத்திருப்பது வேறு என்றான். நான் இப் பெயர் வந்ததற்கான காரணத்தை முதலில் சொன்னது போலவே விபரமாகச் சென்னேன். அவனால் ஒப்புக்கொள்ளவே முடியவில்லை. சாதியின் பெயரால் இனத்தின் பெயரால் மதத்தின் பெயரால், மொழியின் பெயரால் ஒதுக்குதல் என்பது தொடர்ந்து நடந்தவண்ணம்தான் இருக்கிறது. இதற்கு உயர்வு தாழ்வு கிடையாது.

தமிழ் தீவிர இலக்கிய வாதிகளும் அப்படித்தான் இருக்கிறார்கள். யார் அதிகாரம் செலுத்து முனையிறானோ அவன்சாதியை பயன்னடுத்த முனையிறான். பாப்பானன், வெள்ளாளன், தலித், என கூறுபோட்டு ஒருவனைஒருவன் ஒதுக்கிவைக்கவே முனையிறான்.

 

இப்போ எனக்குள்  கேள்விப் புழுக்கள் மண்டையை நோண்ட ஆரம்பித்தன. மனிதனுக்கு பெயர்கள் முக்கியமா? அது அவன் மொழி சார்ந்த அல்லது மதம் சார்ந்த பெயராக இருக்க வேண்டுமா? அல்லது நான் ஒரு மேலைத்தேய மொழிக்குடும்ப பெயரை வைத்துவிட்டால் நான் அந்தத் தேசத்துக்குரியவனாகி விடுவேனா? குறிப்பாக மனிதன் எந்திரமாகி விட்டதன் பிற்பாடு பெயர்கள் அவசியமா?  வாகன இலக்கத் தகடுகள் போல வெறும் இலக்கங்களை வைத்துவிடக் கூடாதா? ஒரு மனிதனுக்கு அடையாளம் முக்கியமா? ஒருமனிதனுக்கு அடையாளம் முக்கியமா? ஏன் இவ்வளவு போராட்டம்?. ஏன் இவ்வளவு உயிர்க் கொலைகள்? ஏன் இவ்வளவு ஏற்றத்தாழ்வு?. ஏன் இவ்வளவு குத்துவெட்டு? ஏன் இவ்வளவு போட்டி பொறாமை?

கேள்விப்புழுக்களை சுமந்தபடி வீடுவந்து சேர்ந்தேன். என்மகள் எனக்காகக் காத்திருந்தாள். அவளிடம் ஒரு கேள்வி இருந்தது. அது உண்மையில் கேள்வி அல்ல. செய்தி. அது என்னை முற்றிலும் திருப்பிப் போட்டது.

‘அப்பா என்கொரு நல்ல தமிழ்ப் பெயர் வேண்டும். முதலெழுத்து ‘க’னாவாக இருக்கவேன்டும். இருபால் பொதுப் பெயராக இருந்தால் நல்லது’ என்றாள்.

இப்பொழுது எனக்குள் இருந்த எல்லாக்கேள்விகளும் நொருங்கிச் சிதைந்தன. மனம் மகிழ்ச்சியில் கூத்தாடியது.

ஆமாம்.

கூடிய விரைவில்  நான் தாத்தாவாகப் போகிறேன்.

௦௦௦௦

 

 

44 Comments

  1. நெடுதுயிலோன் says:

    இதை ஒரு கதையாகப்படித்த பின் அறிவுரையாக ஏற்றுகொள்வோம்.

Post a Comment