Home » இதழ் 04 » நேர்காணல்-உளநல மருத்துவர் எஸ்.சிவதாஸ் -பகுதி இரண்டு

 

நேர்காணல்-உளநல மருத்துவர் எஸ்.சிவதாஸ் -பகுதி இரண்டு

 

 

எஸ்-சிவதாஸ்-உளநல மருத்துவ நிபுணராகக் கடந்த பத்து ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார் . உளநல மருத்துவ நிபுணர் தயா சோமசுந்தரத்துடன் இணைந்து பணியாற்றி, அவரிடம் பயிற்சிகளை பெற்றவர்.

கடந்த மூன்று ஆண்டுகளாக வவுனியா மாவட்ட பொது மருத்துவ மனையில் பணியாற்றி வருகிறார் . குறிப்பாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் உளவியற் பாதிப்புகளைப் போக்குவதற்கான பணியின் முக்கியத்துவம் கருதி, கொழும்பில் பணியாற்றிய இடத்திலிருந்து பணிமாற்றத்தினை எடுத்து வந்து ,அகதி முகாம்களில் உளவியற் சிகிச்சை செய்து வருகிறார். இந்தக் காலகட்டத்தில், இந்தப் பணியில் அவர் பெற்றுக் கொண்ட அனுபவங்கள் ஏராளம். இந்த அனுபவங்களின் காரணமாக சமூகங்களினதும்,தனி மனிதர்களினதும் மனச் சிதைவு தொடர்பில் ஆழமான பல கதைகள்  இவரிடம் உள்ளன.

இந்த இரண்டாம் பகுதி நேர்காணலை மிக விரிவாகவே பதிவு செய்ய திட்டமிட்டிருந்தோம், ஆனால் எஸ்.சிவதாஸ் அவர்களின் தாயாரின் திடீர் சுகவீனம் காரணமாக அது சாத்தியப்படவில்லை.

———————————————————————————————————————

-பகுதி-இரண்டு-

*போர் மற்றும் அரசியல் முரண்பாடுகளின் காரணமாக நீண்டகாலமாகச் சிறைகளில் இருப்போரின் உளவியல் மிகப் பாதிக்கப்பட்டுள்ளது. சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படாதிருக்கும் இத்தகைய கைதிகளின் மனநிலை நம்பிக்கை வரட்சியில் உள்ளது. இந்த நிலையை எப்படி நாம் எதிர்கொள்வது?
அண்மையில் பூசாவில் விசாரிக்கப்பட்ட பின்னர் ஒரு வருட புணர்வாழ்வு பெறுவதற்கு சிலர் மருதமடு முகாமிற்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் கூறியது இங்கு குறிப்பிட வேண்டும்.”இப்ப சரியாக எப்ப விடுதலையாவோம் என தெரியும் என்பதால் நம்பிக்க இருக்குது” என குறிப்பிட்டார்கள். இத்தகைய புணர்வாழ்வு என்பது காலவரையறை கொண்டதாகவே அமைய வேண்டும். இல்லாவிடில் நம்பிக்கை இழப்பு ஏற்படும். இன்னுமுள்ள மிக முக்கியமான தேவை நம்பிக்கையை விதைத்தல் என்ற விடயமே. அவர்களது புணர்வாழ்வில் மட்டும் நம்பிக்கையை விதைக்க முடியாது. அவர்கள் புணர்வாழ்வு முடிந்த பின்பு அச்சமற்று பாதுகாப்பு உணர்வுடன் வாழ்வதற்கான வழிவகைகளை அமைக்கப்படுவதன் மூலமே நம்பிக்கையூட்ட முடியும். அத்துடன் பொருளாதார நிலையில் ஓரளவு தன்னிறைவினை தரக்கூடிய வழிமுறைகளை ஏற்படுத்திக் கொள்வது முக்கியமானது. வெறுமனே கடன்களைக் கொடுத்து அவர்களை கடன்காரர்களாக மாற்றுவதன் மூலம் அதனை மீளச் செலுத்த முடியாத நிலைக்குச் சென்று துன்பப்படும் நிலையே ஏற்படும். எமது வவுனியா மனநலச்சங்கத்தால் ஒரு முன்னாள் போராளிக்கு ஒரு புகைப்படக் கருவி அன்பளிப்புச் செய்திருந்தோம். அவர் தனக்கு ஒரு தொழிலை ஆரம்பிக்க அது உதவியுள்ளது.
அத்துடன் அவர்கள் விடுதலையானதும் தேசிய அளவிலும் உள்ளுரளவிலும் பாதிக்கப்படாத பொறிமுறை ஒன்று தேவை. அத்துடன் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்குரிய சிகிச்சைகளும் அளிக்கப்பட வேண்டும். சுமார் 10,000இற்கும் மேற்பட்டவர்கள் இவர்களால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளனர். மிகக்குறைவாக 10  சத வீதமானோர் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தாலும் இது 1000 பேரிற்கு மேற்பட்டவர்களாகவே அமையும். எம்மைப் பொறுத்தவரையில் 300 இற்கு உட்பட்டவர்களை சிகிச்சைக்கு உட்படுத்தியுள்ளோம். எனவே தான் இன்னும் பலர் அடையாளம் காணப்படாது துன்பப்படுகிறார்கள். அவர்களையும் இதற்குள் உள்ளடக்க வேண்டிய தேவை இருக்கிறது.

*. போரின் காரணமாகவும் அரசியல் முரண்பாடுகளினாலும் காணாமற்போரைப் பற்றிய தகவல்களை அறிய முடியாத நிலையில் ஆயிரக்கணக்கானவர்கள் உள்ளனர். தாய்,துணை,பிள்ளைகள்,சகோதரர்கள் என்றவாறிருப்போர் தங்களின் உறவினரைப் பற்றிய தகவல்களைப் பெறமுடியாத நிலையில்,காணாமற்போனோர் இருக்கின்றனரா இல்லையா என்று தெரியாத நிலையில் உள்ளனர். இவர்கள் மிகப் பதற்றமாகவும் அலைச்சலோடும் உள்ளனர். உளப் பாதிப்புகளால் மருத்துவ மனைகளுக்கு வருவோரில் அதிகமானவர்கள் இத்தகையவர்களே என்று சொல்லப்படுகிறது,இதைக்குறித்து உங்கள் அனுபவம் என்ன?

காணாமல் போனவர்களில் பலரைப் பற்றிய விபரம் தெரியவில்லை. தெரிவதற்கான வாய்ப்பும் குறைவாக இருக்கிறது. இத்தகையவர்களின் பாதிப்பிற்கு பெரியளவில் ஒன்றும் செய்யமுடியாது. இவர்களுக்கு நம்பிக்கையூட்டலைச் சொல்வது மிகவும் கடினமானது. பலரும் அத்தகையவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையுடனே இருக்கிறார்கள். பொதுவாக மனித மனம் நல்லதையே எதிர்பார்த்து ஏங்கி நிற்கும். நம்பிக்கைக்கும் நம்பிக்கையீனத்திற்கும் இடையில் தள்ளாடிக் கொண்டிருக்கும் இவர்களின் வாழ்க்கை மிகவும் அவலமானது. முற்றுப்புள்ளியிட முடியாத முடிவில்லாத துயரில் வாழ்வது பரிதாபகரமானது.

 

மனநலத்துறையைப் பொறுத்த மட்டில் இதற்குப் பெரிய பரிகாரம் காணமுடியாது. அவர்களது வாழ்க்கையில் அன்றாடக் கடைமைகளிலும் வேறு நம்பிக்கை தரும் விடயங்களிலும் அவர்கள் கவனத்தை செலுத்தித் தங்களுடைய வாழ்க்கைத் தரத்தினை உயர்வானதாக வைத்துக் கொள்ளல் என்ற அடிப்படையில் உதவ முடிகிறது. ஆனால் இவர்களின் பிரச்சினைகளை ஆற்றுப்படுத்தலை மேற்கொள்வதில் சோதிடர்கள் பாரம்பரிய குருமார்கள் ஈடுபடுகின்றனர். இத்தகைய தேடுதலை தவறு என்று சொல்லமுடியாது. மாற்று வழியே இல்லாத போது இத்தகைய ஆற்றுப்படுத்தலை நான் ஆரோக்கியமாகவே பார்க்கிறேன்.
*.இலங்கைச் சமூகங்கள் ஒன்றை ஒன்று சந்தேகிக்கும் ஒன்றை ஒன்று அச்சத்துடன் பார்க்கும் நிலை பகிரங்கமாகவே தெரிகிறது. இந்த உளநிலை கடந்த காலம்இ நிகழ்காலம் இரண்டையும்  மிக மோசமாகப் பாதித்திருக்கிறது. இந்த நிலை தொடருமாக இருந்தால் எதிர்காலமும் மிக மோசமான பாதிப்புக்குள்ளாகலாம். ஆகையால் இதை மாற்றியமைப்பதற்கான அவசியத்தை எப்படி உணர வைப்பது? அல்லது இந்த நிலையில் இருந்து இலங்கைச் சமூகங்களை எப்பிடி மீட்டெடுப்பது?

சமூகங்களுக்கிடையிலான நம்பிக்கையீனங்களை முதலிட்டு அரசியலாக நடத்தப்படும் நாட்டில் இதற்கு உடனடித் தீர்வு கிடைக்குமென்று நான் நினைக்கவில்லை. இது பாமர அடித்தட்டு மக்களிடம் ஆரம்பிக்கப்பட்டு ஆரோக்கியமாக உருவாக்கப்படும் மீள்நல்லிணக்கம் மூலமே சாத்தியமாகும். இன்றுள்ள நிலைமை போர் இல்லாத நிலைமையே ஒழிய முரண்பாடுகளற்ற நிலைமை இல்லையே. போர் முடிந்தவுடன் இருந்த மீள்நல்லிணக்கத்திற்கான நல்ல புறச்சூழல் காணப்பட்டது. அது சரியாகப் பயன்படுத்தப்படவில்லை. இவ்வாறு அத்தகைய சூழல் காணப்படாத நிலையில் இது இன்னும் கடினமானதாக அமைந்துள்ளது. கடினமானது என்பதற்காக அதைக் கைவிடத் தேவையில்லை. வலிமையாக முயற்சித்து அதை அடைய வேண்டும்.
மீள் நல்லிணக்கம் என்பது சிங்கள- தமிழ் இனத்திற்கு மட்டும் பொருந்தக்கூடியதல்ல. எல்லா இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையினதாக அமைய வேண்டும்.  சாதிவேறுபாடுகளுக்கிடையிலும் ஏற்பட வேண்டியுள்ளது.
இதை உணர்த்த வேண்டிய புத்திஜீவிகள் பணி  மிகையானது. அத்துடன் கலைஞர்கள் பத்திரிகையாளர்கள் எனப்பட்டவர்கள் இதற்கு முன்வர வேண்டும். அரசியல் வாதிகளிடம் இதனை எதிர்பார்க்க முடியாது. அப்படி ஒரு நிலைமையில் அவர்களது அரசியல் பிழைப்பு முடிந்துவிடும். எனவே தான் அவர்களிடம் எதிர்பார்ப்பது முட்டாள்த்தனம். அவர்களை விட இராணுவத்திடம் எதிர்பார்ப்பது கூட ஆரோக்கியமானது. பல புனர்வாழ்வு முகாம்களில் இராணுவத்தினர் – முன்னாள் போராளிகள் புரிந்துணர்வு என்னை பல சந்தர்ப்பங்களில் வியப்பை உண்டுபண்ணும். அவர்களிடையே மன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது அரசியல்வாதிகளை விட இலகுவானதும் சாத்தியமானதும் என்பது என் கருத்து.

அடுத்து கலைஞர்களுக்கிடையில் மிக இறுக்கமான இணைப்பினை ஏற்படுத்தி, கலைகளுக்கூடாக மன நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். இதை ஒரு தேசிய இயக்கமாக கலைஞர்கள் ஏற்படுத்தல் ஒன்றே இன்றைய நிலையில் சாத்தியமானதாக எனக்குப் படுகின்றது.
*. யுத்தமும் சுனாமியும் வடக்குக் கிழக்குச் சமூகங்களை மிக மோசமாகப் பாதித்துள்ளன. சிலர் இரண்டு அனர்த்தினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால்,இந்தப் பாதிப்பை நிவர்த்தி செய்யும் அளவுக்கு உரிய உளநிவாரணம் செய்யப்படவில்லையே! இதில் உள்நாட்டின் கவனமும் போதாது. சர்வதேச சமூகத்தின் அக்கறையும் போதாது என்ற அபிப்பிராயம் உள்ளது. இதைக் குறித்து உங்களுடைய அவதானம் என்ன?

யுத்தத்திலும் சுனாமியிலும்  பருமனில் வேறுபாடுகள் இன்றி இவை எல்லா சமூகத்தையும் எல்லா வாழ்க்கைத் தட்டு மக்களையும் பாதித்திருக்கிறது. இதுவே எம் கண்முன்னே தோன்றும் விடயம். ஆனாலும் பாதிப்பின் விகிதம் மிகவும் வறிய மக்களிடையே கூடிய அளவிலும் நீண்ட அளவிலும் உள்ளது. அத்தகைய மக்களினைப் பற்றி யாருக்குத்தான் கவலை? ஓட்டுக் கேட்கும் போது மட்டும் அரசியல் வாதிகளுக்கு கவலையிருக்கலாம். இத்தகையவர்களை ஏமாற்றி ஓட்டுக் கேட்பதில் அவர்கள் கைதேர்ந்தவர்கள். எனவே அவர்களும் கவலைப் படப்போவதில்லை.
வர்த்தக நிறுவனங்களுக்கு அவர்களை சுரண்டி கடன்காரர்களாக்குவதே நோக்கம். அபிவிருத்தி என்ற பெயரில் அதைச் செய்து கொள்கிறார்கள். சில மதநிறுவனங்கள் மதமாற்றம் என்ற பெயரில் இவர்களை மேலும் பாதிப்படையச் செய்கின்றன. இத்தகைய மக்கட்கூட்டம் தங்களது சுயமுயற்சியினாலும் அவர்களுக்கேயுரிய தாங்குதிறனாலுமே முன்னுக்கு வரமுடியும். அதுதான் இப்பொழுது நடந்துகொண்டிருக்கிறது.
அபிவிருத்தி, வாழ்க்கை வசதிகளை மேம்படுத்தல் என்ற பேரில் அவர்களை பலவீனப்படுத்தாமல் விட்டாலே அவர்கள் தாங்களாகவே முன்வந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வார்கள். அதற்குக் கூட விடுகிறார்களில்லை. மீள்குடியேற்றம் நடைபெற்று வட்டக்கண்டல் பிரதேசத்திற்கு நான் சென்ற போது அங்கு முகாமில் இருந்த ஒரு வயதான அம்மாவை சந்தித்தேன். அவரை சந்தித்ததும், அம்மா உங்களுக்கு உதவிகள் கிடைக்கிறதா? நிவாரணம் கிடைக்கிறதா? எனக் கேட்டேன். அதற்கு அந்த தாய் “இந்த கட்டுக்கரை குளத்தை திறந்துவிட்டால் நான் ஒரு போகம் பயிர் செய்தால் யாரிடமும் கையேந்த வேண்டியதில்லை.” எனது உறுதிபடக் கூறியதை நான் குறிப்பிட விரும்புகின்றேன். இதை முன்னரும் குறிப்பிட்டிருக்கிறேன். எனவே தான் பாதிக்கப்பட்டிருக்கும் இத்தகைய மக்கள் பலப்படுத்தப்பட வேண்டும். வளப்படுத்தப்பட வேண்டும். அவையே தேவை.

௦௦௦௦

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment