Home » அஞ்சலி » விடியல் சிவா சில குறிப்புகள்

 

விடியல் சிவா சில குறிப்புகள்

 


————————————————–சிபிச்செல்வன் —————————————————–

 


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

விடியல் சிவா அவர்களோடு மிகநெருக்கமாக நான் பழகாததால் அவரது இழப்பின் முழுவலியையும் உணர்ந்து என்னால் எழுதமுடியவில்லை என்பதனை நான் இங்கு முதலில்  சொல்வது முக்கியமானது .  நண்பர் பௌசர் கேட்டுக்கொண்டதன் பின் என்னளவில் சிவா பற்றி தெரிந்ததை மட்டுமே வைத்து இச்சிறுகுறிப்பினை எழுதுகிறேன்.

அவர் பதிப்பித்த புத்தகங்கள் மிக முக்கியமானவை,நான் தேடி வாசிக்கும் புத்தகங்களாக அவை இருந்தன,அவருடன் முரண்பாடு கொள்வதற்கு என்னளவில் எதுவுமிருந்ததில்லை,நான் மதிக்கின்ற மனிதராக அவர் இருந்தார்,அவர் இறந்த பிறகு இப்போது தான் கேள்விப்படுகிறேன் அவர் பிறந்தது சேலத்தில் என, நானும் சேலம்தான் என்பதால் எனக்குள் ஒரு சின்ன பெருமிதம் தோன்றுகிறது

நான்அவரை முதன் முதலாக எப்போது சந்தித்தேன் என்பது நன்றாக ஞாபகம் இருக்கிறது.1994இன் பின்பகுதி. ஒருநாள் கோவை ஞானியை சுபமங்களா இதழுக்காக  நேர்காணல் எடுப்பதற்காக கோபாலகிருஷ்ணன் ( அப்போது சூத்ரதாரி ), கோவிந்தராஜ் மற்றும் நான் ஆகியோர் திருப்பூரிலிருந்து கிளம்பி கோவை சென்றோம்.அந்தப் பணியை முடித்துக்கொண்டு விடியல் சிவாவை சந்திக்க முடிவெடுத்து இரவு பத்து மணிக்குப் பிறகு காந்திபுரத்திலிருந்து கிளம்பி அவர் வீட்டிற்குப்
போனோம்.உப்பிலிபாளையத்தைச் சேரும்போது நள்ளிரவிற்குச் சமீபமாக ஆகிவிட்டது. அவர்
வீட்டைத் தேடிக் கண்டுபிடித்துப் போய்ச் சேர்ந்த போது அங்கே விடியல்சிவாவுடன் இருந்தவர் ரவிக்குமார்.அப்போது எங்களுக்கு எழுத்தாளர்கள்
அல்லது கவிஞர்கள் என்ற பிம்பங்கள் எதுவும் உருவாகியிருக்கவில்லை.
கோவிந்தராஜ் மட்டும் மனஓசை இதழில் கதைகள் எழுதியவர். இயக்க பணிகளில் கொஞ்சம் ஆர்வத்தோடு அப்போது இயங்கியவர். அவருக்கு  விடியல் சிவாவை
நன்றாகத் தெரியும். சிவாவுடன் ஒரு அறிமுகத்தை எங்களுக்கு ஏற்படுத்திக்கொடுத்தவரும் அவரே.
முதன்முதலாகச் சந்தித்தபோது என்ன உரையாடினோம் என்பது இப்போது நினைவில் இல்லை.ஏனெனில் எங்களுக்கு அது ஒரு அறிமுகத்தின் தொடக்கமாகத்தான்  முதல் சந்திப்புஇருந்தது.
அன்று மங்கலான வெளிச்சத்திலும் ஒரு பெரிய ஆங்கிலப் புத்தகத்தைக் கையில் வைத்துப் படித்துக்கொண்டிருந்தார் ரவிக்குமார்.அவர் ஒரு வார்த்தை கூட எங்களோடு பேசவில்லை. ஆனால் விடியல் சிவா பேசிக்கொண்டிருந்தார்.

இந்தச் சந்திப்பிற்குப் பிறகு அவரைப் பல இடங்களில் பல முறை சந்தித்திருக்கிறேன். குறிப்பாக ஈரோட்டில் நடக்கிற இலக்கிய சந்திப்புகளின் போது. ஈரோடு பகுதியில் 90களில் தீவிரமாகப் பல கூட்டங்களை நடத்தியவர் கண.குறிஞ்சி அவர்கள்.(பின் நாட்களில் கோவையில் புதுமலர் என்ற
பதிப்பகத்தைத் தொடங்கி நடத்திக் கொண்டிருப்பவர் )  அவர் விடியல் சிவாவிற்கு நண்பர் என்பதால் குறிஞ்சி நடத்துகிற பெரும்பாலான கூட்டங்களில்
சிவாவைப் பார்த்திருக்கிறேன்.20 அல்லது 30 பேர் கலந்துகொள்கிற கூட்டங்கள் என்றாலும் அவர் தவறாமல் பங்கெடுத்துக் கொள்வார். இதே போலதான் திருப்பூர்
பகுதியில் சுப்ரபாரதிமணியன் நடத்திய இலக்கிய கூட்டங்களிலும் விடியல் சிவாவைத் தொடர்ந்து சந்தித்து வந்திருக்கிறேன்.ஒவ்வொரு முறை பார்க்கிறபோதும் அவரை நலம் விசாரிக்கிறளவில்தான் தொடக்க
காலத்தில் இருந்திருக்கிறேன். பின்னாட்களில்தான் என்ன புத்தகங்கள் வெளிவரப் போகிறது என்பதை அறிந்து கொள்ளும் ஆவலில் விசாரித்திருக்கிறேன்.

அவரைப் பார்த்ததும் அவரின் சிரிப்புதான் நம்மை முதலில்
வரவேற்கும்.90களிலிருந்து அவர் உருவாக்கிய விடியல் பதிப்பகம் கொஞ்சம் கொஞ்சமாகப் பல நல்ல அரசியல் புத்தகங்களை ,அதிகளவில் மொழிபெயர்ப்புகளை வெளியிடுகிற பதிப்பகமாக மாறத்
தொடங்கியிருந்தது. மார்க்ஸிய நூல்கள்,புரட்சியாளர்களின் வாழ்க்கை வரலாறுகள்,சமூக மாற்றத்தினை கோரும் அறிவின் திரட்சிகள் ,தேசியம்,பெண்ணியம்,சூழலியம் என விரிந்த பரப்பை அவரது பதிப்பக வெளியீடுகள் கொண்டிருந்தன. பல முக்கியமான அரசியல் புத்தகங்கள் மட்டுமல்லாமல் பிற நாட்டு கலை இலக்கிய புத்தகங்களையும் வெளியிட்டார்.  பாப்லோ நெருடாவின் மச்சிபிச்சி கவிதை மொழிபெயர்ப்பை அவர்தான் கொண்டு வந்தார். பாவண்ணன் கன்னடத்திலிருந்து மொழிபெயர்த்திருந்த அரவிந்த மாளகத்தியின் தன் வரலாறு புத்தகம் தமிழில் நல்ல வரவேற்பைப் பெற்றது. விடியல் பதிப்பகத்தின் வழியாகச் சில முக்கியமான மொழிபெயர்ப்பாளர்கள் தங்கள் படைப்புகளை வெளிக் கொண்டுவந்தார்கள்.பின்னால்அந்த மொழிபெயர்ப்பாளர்களுக்கு , மொழிபெயர்ப்பு புத்தகங்கள் வழியாக ஒரு அடையாளத்தை அவர்களுக்கு உருவாக்கி தந்தவர் விடியல் சிவாதான்.அதுபோல பல தலித் புத்தகங்களை அவர் அடையாளம் கண்டுபிடித்துத் தமிழுக்கு மொழிபெயர்த்து வெளியிட்டார். 90களில் தமிழகத்தில் தலித் இலக்கியம் பரவலானதற்கும் தமிழ் நாட்டில் தலித் இயக்கங்கள் பெரும் எழுச்சியோடு இயங்கியதற்கும் விடியல் சிவாவின் பதிப்பக  பங்களிப்பு
முக்கியமானது.

இலங்கை தமிழர்கள் பலர் அவருக்கு நண்பர்களாக இருந்தார்கள் என்பதை பல சந்தர்ப்பங்களில் நேரில் காண முடிந்தது. சென்னையில் நடக்கிற புத்தக
கண்காட்சி, ஈரோடு புத்தக கண்காட்சியின் போது அவர் பங்குபெற்று தன் விடியல் புத்தகங்களை கடை பரப்பியிருக்கும்போது அவரோடு சில சமயங்களில்
இலங்கை அல்லது புலம்பெயர்ந்த நண்பர்கள் உரையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். ஈழ அரசியல் தொடர்பாக அவருக்கு ஈடுபாடும் இருந்தது.
அவரின் இறப்பு நிகழ்ந்ததைக்கூட பேஸ்புக்கில் ஈழ நண்பர்கள் பகிர்ந்தளித்ததன் வழியாகத்தான் எனக்கு உடனடியாக தெரிந்தது. அதன்பிறகு கோவை நண்பர்களுக்குத் தொலைபேசியில் பேசி தகவலை
உறுதிபடுத்திக்கொண்டேன்..

நான் மதிக்கிற பதிப்பாளரான விடியல் சிவா அவர் உருவாக்கி வழிநடாத்தி வந்த விடியல் பதிப்பகம், தமிழகத்தில் உள்ள எந்த பதிப்பகத்திற்கும் போட்டியானதாக இருந்ததில்லை.அவரது பதிப்பக வெளியீடுகள் தனித்துவமான தேர்வுகளாகவும், மற்றவர்கள் தேர்வு செய்யாத விடயங்களாகவும் இருந்திருக்கின்றன.சிவாவின் மறைவின் பின் பார்க்கின்ற போது,அவ்வகையான அரசியல் புத்தகங்களை வெளியிட வேறு யாரும் இல்லை என  சொல்லத் தோன்றுகிறது.அந்தப் புத்தகங்கள் உலகெல்லாம் வாழும் தமிழ் மொழி வாசிப்பாளர்களின் சமூக  அரசியல் அறிவினை விசாலமாக்கி இருக்கிறது.

புத்தக கண்காட்சிகளில் நான்பார்த்தவை ,அரசியல் புத்தகங்கள் வாங்குவதற்கு பெருமளவிலான வாசகர்கள் இருக்கிறார்கள் என்பதைத்தான்.புத்தகங்களின் விலையும் சற்று கூடுதலாக இருந்தாலும் (தரமான தயாரிப்பு) புத்தகங்களை வாரி நெஞ்சோடு அணைத்து செல்கின்றவர்களைப் பார்த்திருக்கிறேன், வருகின்றவர்கள் எல்லோருடனும் மிக உற்சாகமாகப் பேசியும் புன்னகைத்துக் கொண்டுமே சிவா அங்கிருப்பார். பல நல்ல புத்தகங்களை விடியல் சிவா வெளியிட்டுள்ளார் என்பது எல்லோருக்கும்தெரிந்த உண்மைதான். ஆனால் அவரின் பதிப்பக புத்தகங்கள் நல்ல அச்சில் ,நல்ல புத்தக கட்டமைப்புடன் ( பைண்டிங் ) வெளி வந்து அவற்றிற்கான ஒருஇடத்தைப் பெற்றிருந்தது .

அவரை மற்ற தமிழ் தமிழ் பதிப்பாளர்களும் போட்டியாக நினைத்ததில்லை.தமிழினி வசந்தகுமாருடன் விடியல் சிவாவிற்கு நல்ல உறவு இருந்தது. வசந்தகுமாரோடு விடியல் சிவாவை பல தடவை பார்த்திருக்கிறேன். அவர் கோவையில் இருந்தாலும் அவரின் புத்தகங்கள் சென்னையில்தான் அச்சானது. பல சமயங்களில் அவர் சென்னைவர முடியாதபோது அவருக்காக அந்தப் பணிகளைச் சென்னையிலிருந்து பார்த்துக்கொண்டவர் தமிழினி வசந்தகுமார்தான். , அதை ஒரு நாளும்
வசந்தகுமார் சொன்னதில்லை. அந்த அச்சக , பைண்டிங் உரிமையாளர்கள் சொன்னதுதான்.அப்படிப் பல நல்ல புத்தகங்களைப் பதிப்பித்த விடியல் சிவாவை தன் இறுதி நாட்களில் புற்று நோய் தாக்கிய வலியை விட அவர் அனுபவித்த வலி அவர் மீது ஒரு அவதூறை  வாரியிறைத்த  ஒரு எழுத்தாளர் கொடுத்த வலிதான்.

அவர் கடைசியாகப் பதிப்பித்த புத்தகங்களோடு ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஈரோடு புத்தக கண்காட்சிக்கு வருவார் . அங்கே விடியல் சிவாவைச் சந்திப்போம் என
நினைத்திருந்தேன். வழக்கம்போல இந்த முறையும் ஈரோடு புத்தக கண்காட்சி ஆகஸ்ட் 3 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 14 வரை நடந்து கொண்டிருக்கிறது. அந்தக் கண்காட்சிக்கு நானும் வழக்கம் போலப் போவேன். ஆனால் விடியல் சிவாவின் புன்னகை யாரையும் வரவேற்காது.

௦௦௦௦

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment