Home » இதழ் 04 » ஆங்கில மொழி நாவலாசிரியை- சுகி கணேசானந்தன்

 

ஆங்கில மொழி நாவலாசிரியை- சுகி கணேசானந்தன்

 

 

                                                                                                                                                                தமிழில்- நிர்மலா இராஜசிங்கம்

“லவ் மேரேஜ் “என்ற தனது முதலாவது நாவலோடு பிரபலமடைந்த சுகி கணேசானந்தன் அமெரிக்காவில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத்தமிழ் சமூகத்தின் இரண்டாவது தலைமுறையிலிருந்து வந்த அமெரிக்க எழுத்தாளர்.

ஹாவர்ட், கொலம்பியா ஆகிய முன்னணி பல்கலைக்கழகங்களில் தன் பட்டமேற்படிப்பை முடித்து  தற்பொழுது மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் புனைவிலக்கிய பேராசிரியராக பணியாற்றுகிறார்.
2008 ம் ஆண்டு வெளிவந்த இவரது நாவலைப்பற்றி “பொஸ்டன் குளோப்”, “வாசிங்டன் போஸ்ட்”, “சான் பிரான்சிஸ்கோ குரொனிக்கிள் இன்டிபென்டென்ட் “ஆகிய பத்திரிகைகளில் விதந்துரைக்கும் விமர்சனங்கள் பிரசுரிக்கப்பட்டன.  இவர் தொடர்ந்து “கிரான்தா”, “அட்லான்டிக் மன்த்லி”, “கிமால் சவுத் ஆசியன் “ஆகிய பத்திரிகைகளில் கதைகள் கட்டுரைகள் எழுதிக்கொண்டு வருகின்றார்.
———————————————————————-

கடந்த ஜூன் மாதம் தமிழ் மொழி சமூகங்களின் செயட்பட்டகத்தால்   இலண்டனில் நடாத்தப்பட்ட மாதாந்த சந்திப்பில் கலந்து கொண்ட சுகி,2011 ம் ஆண்டு “கிரான்தாவில் “வெளிவந்த “கிப்போகிரட்டீஸ் “என்ற கதையின் முன்பாதியை  கூட்டத்தில் வாசித்தார்.  வாசித்தபின் தன்னை எழுதத் தூண்டுபவை  எவை என்பது பற்றி ஒரு உரை நிகழ்த்தினார். அவ்வுரையின் சாராம்சமே இங்கு தரப்பட்டுள்ளது.    

———————————————————————————

எழுத்தென்பது பல்வேறு கருத்துக்களங்களிலிருந்து ஊற்றெடுக்கின்றது. பல்வேறு நிலைப்பாடுகளை பிரதிபலிக்கின்றது. இவ்வகையில் எல்லா எழுத்தும் தன்தன் அரசியலையுடையது.  ஆனால் எழுத்தாளர் ஒரு சமூகத்தின் பிரதிநிதியாக பேச்சாளராக இருக்கவேண்டுமென்று எதிர்பார்க்க முடியாது.

உலகின் பல்வேறு பாகங்களில் பெரும்பான்மை கலாசாரங்களிலிருந்து வருபவர்கள் இலங்கையை விளக்குமாறு என்னைக்கேட்பார்கள்.  இலங்கையை ஒரு காலத்தில் தாயகமாகக் கொண்ட வயதான இலங்கையர் ,நான் இளைய தலைமுறையினரான படியால் என்னை இளைய தலைமுறையினரை விளக்கக்கேட்பார்கள். சிங்களவர்கள் தமிழரை விளக்கச்சொல்லியும் மாற்றுக்கருத்து தமிழர், தேசியவாதித்தமிழரை விளக்கவும் தேசியவாதிகள் மாற்றுக்கருத்தாளரை விளக்கவும் கேட்பார்கள்.

 

இவை பற்றியெல்லாம் எனக்குப்பேச தகைமை உண்டெனில் நான் எழுத்தாளர் என்பதனால் அல்ல.  நான் எனது எழுத்துக்கு அப்பால் எனது எழுத்தின் பக்க விளைவாகவே  இவைபற்றித் தெரிந்து வைத்துள்ளேனேயொழிய எழுத்தாளர்கள் இவைபற்றியெல்லாம் பேச தகைமையுடையவர்கள் என்பதனால் அல்ல.

அமெரிக்காவில் இரண்டாம் தலைமுறையினரில் இலங்கை பற்றியும் புகலிட சமூகம் பற்றியும் எழுதும் முதல்  எழுத்தாளர்களில் ஒருவர் என்ற வகையில் அமெரிக்காவின் பெரும்பான்மைச்சமூகம் எனது எழுத்தை இலங்கை தமிழ் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு எழுத்தாக நினைக்க முற்படுகின்றது.  சிலவிடயங்களில் எனது எழுத்து அப்படியிருக்கலாம்.  பலவேளைகளில் அப்படியல்ல.

நான் எழுதும் கதாபாத்திரங்கள் தமிழராகவிருக்கிறார்கள். அவர்களுக்கென்று தனிப்பட்ட வரலாறு, நிலைப்பாடுகள் ,விசித்திர கிறுக்குகள் இருக்கத்தான் செய்கின்றன. அவை எனது கருத்துக்கள் நிலைப்பாடுகளை பிரதிபலிப்பவையல்ல. தமிழ்ச்சமூகத்தின் மாதிரிப்பிரதிநிதிகளாக நான் எனது கதாபாத்திரங்களை உருவகித்தால் அது நல்ல கதை சொல்லலுக்கு வழிவகுக்காது.  அதைவிட மோசம் சிறுபான்மையினங்களுக்குள்  உள்ளேயிருக்கும் விளிம்புநிலையினரின்
கதைகள் சொல்லப்படமாட்டாது.

உதாரணமாக மாற்றுக்கருத்தை உடைய தமிழரின் கதைகள் கூறப்படமாட்டாது.  என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது.  அத்துடன் எழுத்தாளர் என்ற வகையில் நான் சிறுபான்மையினத்தின் பிரதிநிதிப்பேச்சாளராக இருக்கவேண்டிய ஒரு அழுத்தம் நிர்ப்பந்தத்துக்கு நான் விட்டுக்கொடுத்ததாகவேயிருக்கும். இது சரியல்ல. நான் இந்தப்பதவிக்கு  வாக்குகளினால் தேர்ந்தெடுக்கப்படவில்லை.  நான் எனது பிரதிநிதி மட்டுமே. சிறுபான்மையினம் தனக்காகப் பேசிக்கொள்ளும் ஆற்றலுடையது.

அநேகமான வாசகர்கள் பெரும்பான்மையினராயிருந்தாலென்ன  சிறுபான்மையினத்தவராயிருந்தாலென்ன சிறுபான்மை கதாபாத்திரங்களை அவர்களின் சமூகங்களின் பிரதிநிதிகளாக அவற்றின் மாதிரி பிரதிகளாக கொள்கின்றனர். ஆனால் பெரும்பான்மை சமூகங்களைச் சேர்ந்த கதாபாத்திரங்களை தனிநபர்களாகக் கருதுகின்றனர்.  என்னைப்போன்ற சிறுபான்மை எழுத்தாளர்கள் தமது சொந்த சமூகத்தினரால் அழுத்தம் கொடுக்கப்படுகின்றனர் .வெளியாருக்கு சமூகத்தைப்பற்றி ஒருவகையான பிம்பத்தை வெளியுலகுக்கு தர நிர்ப்பந்தத்துக்குள்ளாகிறோம்.  நீங்கள் எங்களைச் சரியாக உலகுக்கு காட்டவில்லை: நன்றாகக் காட்டவில்லை.  ‘என்னுடைய  அனுபவத்தை பிரதிபலிக்கவில்லை’, என்றெல்லாம் என்போன்ற எழுத்தாளர்கள் எம் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் கேள்விக்கிலக்காக்கப்படுகிறார்கள்.  ஆனால் எழுத்தாளரின் குறிக்கோள்கள்  இவையல்ல.

எழுத்து, கலை என்பவை அவற்றின் சொந்த தாற்பரியத்தின் அடிப்படையிலேயே மதிப்பிடப்படவேண்டும்.  பெரும்பான்மை கலாசாரங்கள் சிறுபான்மையினரை எப்படி நோக்குகின்றனர், சிறுபான்மையிலக்கியங்கள் அச்சமூகங்களை பிரதிநிதிப்படுத்தவேண்டும் என்ற அவர்களின் எதிர்பார்ப்புகள் ஆகியவற்றுக்கு எதிரொலியாகத்தான் சிறுபான்மையினரிடமிருந்து மேற்கூறிய  கேள்விகள் எழுகின்றன. இத்தகைய தவறுதலான வாசிப்புக்களை கணக்குக் கேட்க ஒரு வழி இருக்கவேண்டும். சிறுபான்மை இலக்கியங்கள் சிறுபான்மை மக்களைப் பிரதிநிதிப்படுத்த வேண்டும் என்ற கருத்து பெரும்பான்மைவாத நோக்கிலிருந்து எழுவது தான் . இத்தகைய வாசிப்புக்களை நாம் கேள்விக்கிலக்காக்க வேண்டும்.  இதை எப்படி செய்வது?

எனது எழுத்துக்களைப்படித்தவர்களுக்கு நான் ‘புலிகள்’ என்ற உருவத்திலும், குறிப்பாக புலிகளைச்சார்ந்து கட்டமைக்கப்பட்டுள்ள பிம்பங்கள் இதிகாசங்களை ஆராய்வதிலும் கட்டுடைப்பதிலும் ஈடுபாடு கொண்டவள் என்பது புரிந்திருக்கும். தீவிர வாத அரசியலை, குறிப்பாக ஆயுதந்தாங்கிய ஒரு வாழ்க்கையை விட்டு நீங்கிய ஓருவருக்கு என்ன நடக்கக்கூடும் என்பதிலும் எனக்கு ஈடுபாடு உள்ளது.
இந்த பயணத்தை நான் ஒரு புனைவு இலக்கியகாரராகவே செய்ய விரும்புகிறேன், விமர்சகராகவல்ல. எனது ஈடுபாடு கறுப்பு – வெள்ளை சார்ந்த அரசியல் சர்ச்சையைல்ல .

அடிப்படையில் நான் இலங்கையைப்பற்றி எழுதுவது அங்கு நடப்பவை பற்றி எனக்கு ஈடுபாடு, அக்கறை உள்ளபடியால்தான்.  என் வாழ்க்கையின் வேறொரு கட்டத்தில் நான் இலங்கையை விட்டு வேறு விடயங்ளைப்பற்றி எழுதத்தொடங்கக்கூடும் .ஆனால் தற்சமயம் இலங்கை மிக வளமான கதைக்களமாக அமைந்துள்ளது.  எனக்கு விருப்பமான எந்தவொரு கருத்தையும் இலங்கையைப்பின்னணியாகக் கொண்டு ஆராய வாய்ப்புண்டு.   இதற்கு ஒரு காரணம் அடிப்படையில் நான் ஒழுக்கம் சார்ந்த விடயங்களில் ஈடுபாடு கொண்டுள்ளேன்.  இலங்யையைப்பற்றி நேர்மையுடன் எழுதுவதையும் ஒழுக்கம் சார்ந்ந விடயமாகக் கருதுகிறேன் ஏனெனில் இலங்கையின் வரலாறும் அரசியலும் மாற்றுக் கருத்துகளையும் விமர்சனக்குரல்களையும்  அடக்குவதிலேயே முனைப்பாகவிருந்துள்ளது.

அமெரிக்காவில் நான் வளர்ந்த படியால்  இலங்கையைப்பற்றிய எனது அறிவை சொந்தம் பந்தத்தினரின் கதைகள், புலிகளின் பிரச்சாரப்பிரசுரங்கள் ஆகியவற்றிலிருந்து நான் பெற்றுக்கொண்டேன். சொந்தம் பந்தத்தினரின் கதைகள் உயிரோட்டமாகவும் இழைநயம் கொண்டவையாகவும் இருந்தன.  கதைகளை சேகரித்துக்கொண்டு வரும் பொழுது அவை பல்வேறு வகையானவையாகவும்  பல பரிமாணங்களைக்காட்டுபவையாகவும் பல சிக்கல்களைக் கொண்ட கதைகளாகவும் இருக்கக் கண்டேன்.  புலிகளின் உறுப்பினர்களின் கதைகளோ ஒற்றைத்தன்மை வாய்ந்த் கதைகளாக இருப்பதைக்கண்டேன்.  ஆனால் இத்தன்மையை நான் உடனடியாக அடையாளம் கண்டு கொள்ளவில்லை.

இக்காலகட்டத்தில் நான் எனது முதல் நாவலான ‘”லவ் மேரேஜ் ” எழுதிமுடித்தேன்.  போரைப்பற்றிய சில விபரங்களை நான் நாவலின் ஓரங்களில் புனைந்திருந்தேன். நாவலை எழுதிக்கொண்டிருந்த அரைவாசியில் முன்னாள் புலி உறுப்பினராகயிருந்த ஒருவரைச்சந்தித்தேன்.  அவரின் கதையில் ஈடுபாடு கொண்டு அவரைப்போன்ற ஒரு கதாபாத்திரத்தை நாவலில் அறிமுகம் செய்தேன். இலங்கை அரசைப்பற்றி தீவிர விமர்சன நோக்கை ஏற்கெனவே கொண்டிருந்தேன்.  புலிகளைப்பற்றி  அறிய, அறிய அவர்களைப்பற்றியும் என்னுள் ஒரு விமர்சன நோக்கு வளர்ந்து  கொண்டது.

 

எனது தலைமுறையினரிடையே பல்வேறு அரசியல் சக்திகளை விமர்சன நோக்கோடு பார்க்கும் வேறு பலரையும் நான் சந்தித்தேன்.  இலங்கையினுள் பேச்சுச்சுதந்தரம் குறுகியது போன்று வெளிநாடுகளிலும் எமக்கு இருந்த பேச்சுச்சுதந்திரம் குறுகியதை நான் அவதானித்தேன்.  இதில் மோசமான விடயம் யாதெனில் பலர் இந்த போக்கைக் கண்டு கொள்வதாக இருக்கவில்லை.

நான் புனைந்த முன்னாள் புலி உறுப்பினரின் கதாபாத்திரத்தைப்போன்ற ஒருவருடன் பேசக்கிடைத்தது.  அவர் கனடாவில் வாழ்ந்து வந்தார்.  அவருடன் நான் தொலைபேசியில் சுருக்கமாக பேசினேன்.  அவருடைய  வாழ்க்கை வரலாறு எதுவும் எனக்குத் தெரியாது. உண்மையில் சொற்ப நேரம் தான் பேசியிருப்போம்.  எமது சம்பாசணையில் புலிகள் செய்து வரும் மோசமான விடயங்களுக்காக தான் எப்படியெல்லாம் வருந்துகிறார் எனக் கூறினார்.  அவருடைய மிக ஆழமான கழிவிரக்கம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அவருடைய அந்த உணர்வைத்தான் நான் துருவி ஆராய விரும்புகின்றேன்.  நாம் எதை வித்தியாசமாகச் செய்திருக்க வேண்டும், எங்கு நாம் தவறு விட்டோம், ‘நாம்’ என்பது எவ்வளவு பரந்ததாகவும் பல்வகையானதாகவும் இருக்கமுடியும், பல அதிர்ச்சியான அனுபவங்களின் பின்னும், நாம் வருந்தத்தக்க நடவடிக்கைகளுக்குப் பின்பும் எப்படி மாற்றமும் வளர்ச்சியும் நாம் அடையலாம்,  ஆகிய கேள்விகளைப் புனைவிலக்கிய வடிவங்கள் மூலம் ஆராய்வதே எனது விருப்பம்.

இத்தகைய கேள்விகளை புனைவிலக்கியத்தின் மூலம் ஆராய நான் முற்படுகிறேன்.  இம்முயற்சியில் நான் செய்த ஆராய்ச்சி, வாசிப்பு என்னை தமிழ் தேசியவாததத்தைப் பற்றிய பல விமர்சனங்களுக்கு இட்டுச் சென்றது. புலம்பெயர்ந்தசமூகத்தைப்பற்றியும்  தமிழ் தேசியவாதத்தில் ஈடுபாடுள்ள அதன் இரண்டாம் தலைமுறையையும் ஆராய்வதில்  ஈடுபாடு கொண்டுள்ளேன்.  நான் இவ்விளைய தலைமுறையின் பிரதிநிதியோ பேச்சாளரோ இல்லை என்பதை நான் மீண்டும் வலியுறுத்திச் சொல்கின்றேன்.

அந்தப்பட்டத்தை நான் விரும்பியணியவில்லை என்பது ஒருபுறமிருக்க ஒன்றுமே சொல்லாமலிருப்பதென்பது எனது தனிப்பட்ட கருத்துக்களை நான் கூறுவதற்கு எனக்கிருக்கும் உரிமையை மறுப்பதாகும். அத்துடன் இன்னுமொரு விடயத்தை நாம் குறித்துக்கொள்ள வேண்டும்-  புலிகளை ஆதரிக்காமல் தமிழ்தேசியவாதத்தை ஆதரிக்க முடியும் ஆதரிப்போர் இருக்கின்றனர் என்பதே.  புலம்பெயர்ந்தோர் மத்தியிலும் இலங்கையிலும் இதுபற்றிய நுண்ணிதான  சர்ச்சைகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதும் உண்மையே.  இதுபற்றி இங்கிருக்கும் அவையினர் நன்கறிந்திருப்பார் என நினைக்கிறேன்.

எனது தேடல்களின் மூலம் நான் என்னைப்போல்  சிந்திக்கும் இரண்டாம் தலைமுறையினரைச் சந்தித்தேன்.  எம்மில் சிலர் ‘லங்கா சொலிடாரிடி’ என்றதொரு அமைப்பை ஆரம்பித்தோம். நாம் எல்லா அரசியல் சக்திகளையும், அரசு, புலிகள், மற்றும் ஆயுதம் தாங்கும் குழுக்கள், புலம் பெயர்ந்த சமூகங்கள், சர்வதேச சமூகம்  – எல்லாவற்றையும் விமர்சன நோக்குடன் பார்க்கக் கூடிய அரசியல் வெளியொன்றை புலம் பெயர்ந்த நாடுகளில் இரண்டாம் தலைறையினர் மத்தியில் உருவாக்க விரும்பினோம்.

லங்கா சொலிடாரிட்டி 2009 ம் ஆண்டு போர் முடிந்தபின் வட அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது.
மேற்கத்தைய ஊடகங்கள் பெரும்பாலும் ஒரு ‘தமிழ் கண்ணோட்டத்தை’  உள்ளடக்க அல்லது ‘தமிழ் புலம் பெயர்ந்தோர்’ என ஒற்றைப்பட்டட அடையாளத்தை முதன்மைப்படுத்த முற்படுகின்றன.  புலம்பெயர் சமூகங்களில் மிர உரத்த சத்தமாக பேசும் பகுதிகளே  புலம்பெயர்ந்த சமூகங்களின் பேச்சாளர்களாக ,பிரதிநிதிகளாகக் கருதப்படுகின்றனர்.
……………..

 

4,218 Comments

 1. Nirmala Rajasingam says:

  To find out more about Sugi, please visit her website
  http://www.vasuki.com

  Also the URL to her short story ‘Hippocrates’ which she read at the meeting is http://www.granta.com/Archive/Granta-109-Work/Hippocrates/

  These links appear to have been left out.

  Nirmala

Post a Comment