Home » - கௌதம சித்தார்த்தன் » அன்னிய நிதியின் வேர்கள்! கௌதம சித்தார்த்தன்

 

அன்னிய நிதியின் வேர்கள்! கௌதம சித்தார்த்தன்

 

 

 தமிழ் மொழியின் இன்றைய தேவை அரசியல் மொழி என்று சொல்லும் கௌதம சித்தார்த்தன் கடந்த 20 வருடங்களாக நவீனத்தமிழ் இலக்கிய தளத்தில் கதை,கட்டுரை போன்ற தளங்களில் செயல்பட்டுக் கொண்டிருப்பவர். 1990 களில் நவீனத்துவம் மறைந்து பின்நவீனத்துவப் படைப்புகள் உலகளவில் பரபரப்பாகச் செயல்பட்ட தருணத்தில்தமிழ் மொழியின் ஆன்மாவுக்கேற்ற விதமாக பின்நவீனத்துவ எழுத்தை தமிழின் வேர்களைத் தேடும் விதமாக மாற்றி, தமிழ்ச்சிறுகதை தளத்தில் புதுவகை எழுத்து என்னும் ஒருசிந்தனைப் போக்கை உருவாக்கியவர்.  உன்னதம் என்னும் இதழை துவக்கத்தில் இலக்கிய இதழாக வெளியிட்டு மெல்லமெல்ல சர்வதேச அரசியல் இதழாக மாற்றி நடத்தியவர். (தற்போது இதழ் நின்றுவிட்டது) பலவருடங்களாக இலக்கியச் செயல்பாடுகளிலிருந்து விலகியிருந்த இவர் தற்போது மீண்டும் தீவிரமாக செயல்பட ஆரம்பித்திருக்கிறார்.

———————————————————————————

சமீபத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் தனது இணைய வலைத்தளத்தில் ‘மனச்சாட்சிச் சந்தை’ (ஜுன் 20) என்ற பதிவு மூலமாக ஒரு சர்ச்சையைக் கிளப்பினார். அன்னிய நிதியைப் பெற்று இங்கே இயங்கிக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படும்  எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், ஊடகச்செயல்பாடுகள், தன்னார்வக்குழுக்களில் இயங்கும் செயல்பாட்டாளர்கள் பற்றியெல்லாம் மிகவும் பரபரப்பான அதிர்ச்சியூட்டக்கூடிய விவாதங்கள் அவை. ஆனால், இந்தக் கருத்துக்களை காலங்காலமாகப் பேசி வருகின்றன மார்க்சிய – லெனினிய அமைப்புக்கள். தங்களது பத்திரிக்கைகளில் தொடர்ந்து இதுபற்றிய கருத்துக்களை விரிவாக முன்வைத்தார்கள். ஆனால், ‘இவர்கள் எதற்கெடுத்தாலும் இப்படித்தான் வறட்டுத்தனமாகப் பேசுவார்கள்’ என்பது போன்ற படிமத்தை அவர்கள் மீது சுமத்தி அவர்களது கருத்துக்களை மிக எளிதில் ஓரங்கட்டிவிட்டார்கள்.

இப்பொழுது இதுபற்றி விரிவாக நாம் ஆராய வேண்டிய தருணம் வந்திருப்பதாக உணர்கிறேன்.

லைஇலக்கியத்துறையிலும், சிந்தனைத்துறையிலும் செயல்படும் சிலர், அன்னிய நிதியைப் பெற்று அதற்கு பிரதியுபகாரமாக நமது நாட்டுப்பண்பாடுகளை, சிந்தனைகளை, மதிப்பீடுகளை, சமூகவாழ்வியல் தோற்றத்தைத் திரித்து வெளியிடுகின்றனர். அவைதான் பல்வேறு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பாடநூல்களாக மாறுகின்றன, அவை பின்னாளில், நமது தேசத்தைப் பற்றிய பார்வைகளுக்கான ஆவணங்களாகவும், செயல்பாடுகளாகவும் மாறுகின்றன. இது உலக அரங்குகளில் நமது தேசத்தைப் பற்றிய மோசமான கட்டமைப்பை உருவாக்கும் விஷமத்தனம். இதுதான் அன்னிய நிதியின் செயல்பாடுகள் என்பது ஜெயமோகனின் வாதம்.

 

இந்தியாவில் ஒரு மாபெரும் மக்கள் புரட்சி நடப்பதற்கான சூழலைச் சிதைத்து அமெரிக்காவின் காலனியக் கொள்கைகளுக்கேற்ப மார்க்சீயத்தைத் திரிப்பதும், மார்க்சியலெனினியப் போக்குகளைக் கொச்சைப்படுத்தி முடக்குவதுமான வேலையை, அமெரிக்கநிதி ஆதாரம் இந்தியாவில் செய்து கொண்டிருக்கிறது. அதற்கு எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், ஊடகச்செயல்பாடுகள், தன்னார்வக்குழுக்களில் இயங்கும் செயல்பாட்டாளர்கள் துணைபோகிறார்கள் என்பது காலங்காலமாகப் பேசி வரும் மார்க்சிய – லெனினிய அமைப்புகளின் வாதம்.

 

மேலும், மா.லெ.குழுக்களின் தொலைநோக்கு என்பது வர்க்கம் சார்ந்த ஒருமைப்பாடு. மக்களை வர்க்கரீதியாக ஒன்று திரட்டல் என்பது அதன் செயல்திட்டம். ஆனால் தொண்டுநிறுவனங்கள் வர்க்க ரீதியாக அவர்களைப் பிரித்து வைப்பதிலேயே கவனம் குவிக்கின்றன. விளிம்புநிலை மக்கள், பெண்ணியம், அரவாணியம், தலித்தியம், நவீனகல்வி, பழங்குடியினர் நலன், நாட்டார் வழக்காற்றியல், சூழலியல்… இப்படிப் பல்வேறு தளங்களில் தொண்டுநிறுவனங்களின் செயல்பாடுகள் வர்க்கரீதியான பிரிவுகளை மறைமுகமாக வளர்க்கின்றன.

 

ஆனால் தற்போது, கலைஇலக்கிய தளத்தில் செயல்படும் தொண்டுநிறுவனங்களின் செயல்பாட்டாளர்களுடைய பார்வையும், சிந்தனையும் இதிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது.

1970கள் மற்றும் 80களில் தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகள் என்பது மதமாற்றக் கருத்துக்களைத் திணிப்பது மட்டும்தான். ஆனால் இன்றைக்கு, கலை இலக்கியம் சார்ந்த துறைகளில் இவர்கள் வேரூன்ற ஆரம்பித்திருக்கின்றனர்.

 

விளிம்புநிலை மக்கள் நலன் சார்ந்து, பெண்ணியம் சார்ந்து, சமூகம் சார்ந்து இவர்களது செயல்பாடுகள் இயங்குகின்றன. கல்வி ரீதியாக, பாதிக்கப்பட்டோரின் வழக்கு விசாரணைகள் ரீதியாக, சாதிய ஆதிக்கத்தில் ஒடுக்கப்படும் போக்குகளுக்கு எதிராக, அருகிவரும் நாட்டார் கலைகளைப் பாதுகாக்கும் கலை பண்பாட்டு ரீதியாக… இப்படிப் பல்வேறு தளங்களில் இச்செயல்பாடுகள் செயல்படுகின்றன. இவர்கள் விளிம்பு நிலை மக்களுக்குப் பயனுள்ள விதத்தில் பல்வேறு உதவிகளைச் செய்வதாகவும், ஏழை எளிய மக்களின் வாழ்வில் நிறைய மாற்றங்கள் கொண்டுவரச் செயல்படுவதாகவும், சமூகவெளியில் மறைக்கப்படும் கலை பண்பாட்டுச் சின்னங்களைப் பாதுகாத்துப் போற்றுவதாகவும்… இன்னபிற மேன்மையான விஷயங்களாகவும் நவீனத் தமிழ் கலைஇலக்கிய தளத்தில் செயல்படுகின்றனர்.

 

1970களில், இதுபோன்ற அமைப்புகளுக்குப் பெயர் ‘வாலெண்டிர் ஆர்கனைசேஷன்’. அந்தக்கட்டத்தில், மாலெ.தோழர்கள் முழுக்க முழுக்க இந்தத் தன்னார்வக் குழுக்களைப் பற்றித்தான் பேசினார்கள். ‘அவர்கள் புரட்சியை மழுங்கடிப்பவர்களென்றும், அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்றும்’ அறிவுறுத்தப்பட்டது. புரட்சிகரமான கருத்துக்களைக் கொண்டவர்களிடம், அதே புரட்சிகரமான கருத்துக்களைத் திரித்துப்பேசி, புரட்சிக்கு விரோதமாகச் செயல்படும் போக்கை உருவாக்கி விடுவார்கள் என்று விளக்கினார்கள். ‘நம் நாட்டைக் காட்டிக் கொடுக்கும் துரோகிகள்’ என்கிற ரீதியில் அது பொதுவெளியில் பரவிற்று.

தன்னார்வக் குழுக்களைப் பற்றிய தோழர்களின் தொடர்ச்சியான பிரச்சாரத்தின் விளைவாக, இவர்கள் மீது ஒரு படிமம் படிய ஆரம்பித்தது. அதைப் போக்கும் விதமாக,

நாளடைவில் ‘வாலெண்டிர் ஆர்கனைசேஷன்’ என்ற பெயர் ‘என்.ஜி.ஓ’ என மாற்றம் பெறலாயிற்று. அரசு சாரா ஊழியர்களாகக் களம் இறங்கினர்.

 

1990களின் இறுதியிலும் 2000 களின் துவக்கத்திலும், அந்தப் பெயரும் மங்கி ‘தொண்டு நிறுவனங்களாக’ உருமாறினார்கள். அவைகளின் செயல்பாடுகள் பல்கிப் பெருகி வளர்ந்தன. இது எல்லாவற்றையும் விடப் பெரிய அதிர்ச்சி என்னவென்றால், அறிவுஜீவித் தன்மைகள் கொண்டவர்களும், எழுத்துச் செயல்பாடுகள் கொண்டவர்களும், போராட்டக்குணம் மிக்கவர்களும், இடதுசாரிச்சிந்தனை கொண்டவர்களாகத் தெரிந்தவர்களும் இதில் ஈடுபட்டதுதான்.

இவைகளின் கொள்கைச் செயல்பாடுகள் ஆபத்தானவை அல்ல; மாறாக, நல்ல கலை இலக்கியமுயற்சிக்கு தமது பங்களிப்பைச் செய்ய விரும்புகின்றன. அதன் பேரில் உதவுகின்றன என்பது இவர்களது வாதம். உலகநாடுகளில் இது போன்ற தொண்டு நிறுவனங்கள் செய்து வருகின்ற மிகமுக்கியமான செயல்பாடுகளை ஆதாரம் காட்டுகிறார்கள். இது போன்ற உதவி பெறுவது எதுவும் தவறில்லையென்பது, அறிவார்ந்த தளத்தில், கலைஇலக்கிய செயல்பாட்டு தளத்தில், சிந்தனைசார்தளத்தில் உள்ள பார்வை.

ஒருசில தருணங்களில் அந்தக் கருத்துக்களுக்கு ஒரு முக்கியத்துவமும், நிஜத்தன்மையும், மேன்மைத் தோற்றமும் ஒருசில தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகளால் ஏற்படுகிறது.

ஆனாலும், கலைஇலக்கிய வெளியில் வாதப்பிரதிவாதங்கள் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன.

அதேசமயம் வெகுஜனதளத்தில் இந்த அன்னியநிதி மீதுள்ள பார்வையைப் பார்க்கலாம்; கிராமங்களைப் பொறுத்தவரை, வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது என்றால் அவர் மிகப் பெரியமனிதராக, முக்கியத்துவம் வாய்ந்தவராகக் கருதப்படுகிறார். அந்தக் காரணத்திற்காகவே அதிகாரம் அவரை நோக்கிக் குவிகிறது. உள்ளூர் ஆட்சியதிகார அமைப்புகளிலிருந்து, சமூக வெளியில் செயல்படும் மாமனிதர்கள் வரை அவரைக் கொண்டாடுகிறார்கள். நீங்கள் விவாதிக்கும் இந்த நுண்ணரசியல் எல்லாம் பொதுவெளியில் எடுபடுவதில்லை.

 

முன்பெல்லாம் கிராமங்களில் இளைஞர் நற்பணி மன்றங்கள் ஆரம்பித்து பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்குவது, ஏழைகளுக்கு இலவச கண்சிகிச்சை முகாம் நடத்துவது போன்ற நல்ல விஷயங்களை நடத்துவார்கள். இப்போது, அவர்கள் அறக்கட்டளைகள் ஆரம்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எங்களூரைச் சேர்ந்த இளைஞரொருவர் என்னைத் தேடிவந்தார். ‘தான் ஒரு அறக்கட்டளை ஆரம்பிப்பதாகவும், அதைப் பதிவு செய்து, பதிவு எண் வாங்கவேண்டுமென்றும், கலெக்ட்ரேட்டில் உங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலமாக பதிவு எண் வாங்கித்தரமுடியுமா? என்றும்’ கேட்டார்.

 

‘நீங்கள் என்ன மாதிரியான தொண்டு செய்வதற்காக அறக்கட்டளை ஆரம்பிக்கிறீர்கள்?’ என்று வினவினேன்.

‘இந்த இலவச நோட்புக் கொடுக்கறது… இலவச கண்சிகிச்சை முகாம் நடத்தறது…’ என்றார்.

 

“செரி அதுக்கெதுக்கு அறக்கட்டளை… பதிவு எண்…? நீங்கபாட்டுக்குச் செய்ய வேண்டியதுதானே’ என்றேன்.

 

விஷயம் இதுதான்: அறக்கட்டளைகளுக்கு வெளிநாட்டிலிருந்து நிறையப்பணம் வருகிறதாம். பதிவு எண் இருந்தால் மட்டும்தான் அந்த அறக்கட்டளைக்கு பணம் வருமாம்… அதனால் தான் பதிவு எண் வாங்குவதற்குள் படாதபாடுபடவேண்டியிருக்கிறதாம்…

 

“பணம் நம்ம நாட்டுக்கு நிறைய வருது தெரியுமா சார்… ஏதோ நாட்ராயம் புண்ணியத்திலே கொஞ்சம் பொழச்சுக்கலாம்…” என்று குரலைத் தாழ்த்திச் சொன்னார்.

 

நாட்ராயன் மீது ஆணையாக எனக்கு யாரையும் தெரியாது என்று சொல்லி அவரை அனுப்பி வைத்து விட்டேன். ஆனால், அடுத்த ஒரு மாதத்தில், பதிவு எண்ணுடன் கூடிய ஒரு அறக்கட்டளையை விலை கொடுத்து வாங்கி இலவச கண்சிகிச்சை சேவை செய்ய ஆரம்பித்து விட்டார் அவர். இதுதான் இன்றைய கிராம இளைஞர்களின் மனப்போக்கு.

 

இன்னொரு நிகழ்வையும் உங்களிடையே பகிர்ந்து கொள்ள வேண்டும். விவசாயிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன், ‘பாரம்பரிய விதைகளைப் பாதுகாப்பது குறித்து’ உரையாடினேன். மான்சான்டோ என்னும் பன்னாட்டுக் கம்பெனி, மிகக்குறைந்த விலையில் விதைப்பண்டங்களைத் தந்து கொண்டிருந்த தருணம் அது. காலப்போக்கில் விவசாயிகளின் பாரம்பரிய விதைகளைப் பிடுங்கிக் கொண்டு தனது மலட்டு விதைகளைத் தருவது போன்றதொரு வலைப்பின்னலில் கட்டமைக்கப்பட்டிருந்த அந்த செயல்வடிவத்தின் பின்னணியை அவர்களிடம் விளக்கினேன்.

 

ஒருவாரம் கழித்து பக்கத்து ஊரைச்சேர்ந்த ஒருவர் என்னை அணுகினார். தான் கீழ்பவானி பாசன விவசாயிகளின் சங்கத்தில் பொறுப்பிலிருப்பதாகவும், தாங்கள் கூட்டம் ஒன்று போடப்போவதாகவும் தெரிவித்தார். “நீங்கள் ஏதோ சொன்னீர்களே. மான்ஸான்டோ கம்பெனியைப் பற்றி… அவர்களிடம் சொல்லி இந்தக்கூட்டத்திற்கு ஸ்பான்ஸர் வாங்கித்தர முடியுமா?” என்றார்.

இப்படித்தானிருக்கிறது கலைஇலக்கியவெளியும், சமூகவெளியும், சிந்தனைவெளியும்.

 

சரி. இப்போது மதிப்பீடுகள் எல்லாமே தகர்ந்து போய் பணம் என்கிற மாய யதார்த்தமே சர்வதேசம் முழுமைக்குமான சிந்தனையாக மாறிவருகின்ற சூழல் இது.

 

இதை ஜெயமோகனைப் போல மேலோட்டமான பார்வையில் பார்த்துவிட முடியாது. அல்லது மாலெ.குழுக்கள்போல ஒற்றைப் பார்வையிலும் பார்க்க முடியாது. அதேசமயத்தில், இதை அவ்வளவு லேசாக ஒதுக்கித் தள்ளிவிடவும் முடியாது. இந்த சர்வதேச வலைப்பின்னல் குறித்து ஒரு விரிந்த தளத்தில் ஆய்வு செய்து பார்க்கும் போது, அவ்வளவு எளிதில் இதுபற்றி ஒரு முடிந்த முடிவுக்கு வந்து விட முடியாது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. பின்நவீனத்துவச் சிந்தனையாளர்களான கில்லஸ்டெல்யூஸ் மற்றும் ஃபெலிக்ஸ்கத்தாரி ஆகியோரின் மிகப்பிரபலம் பெற்ற Rhizome என்னும் சிந்தனைப் பார்வையுடன் தான் இதை அணுகமுடியும்.

 

பெயர்சொல்லி மிரட்டுகிறானே என்று பயப்பட வேண்டாம். இந்தச் சிந்தனாமுறையை எளிமையாகப் பார்க்கலாம்: கண்ணுக்குப் புலனாகாமல், பல்வேறு தளங்களில், பல்வேறு வடிவங்களில், பல்வேறு பார்வைகளில் எல்லைகளற்றுப் பரவியிருக்கிறது இந்த விஷயம். இதன் வேர்த்தண்டுகள் ஒன்றுக்கொன்று அறியமுடியாத தரத்தில், ஒன்றையொன்று சார்ந்தும் சாராமலும், சிக்கலுடனும், ஒழுங்கமைப்புடனும் ஒரு பெரும் வலைப்பின்னலாய் முடிவற்றுப் போய்க் கொண்டேயிருக்கின்றன. ஒரு சல்லிவேரைக் கெல்லிப் பார்த்தால், ஆணிவேரின் முடிச்சுக்கள் குறுக்கிடுகின்றன. இது ஒரு பெரிய வேர்த்தண்டு அமைப்பு. இதை உருவாக்கிய நபர்களாலேயே நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பல்கிப் பெருகி வளரும் அமானுஷ்ய ஆற்றல் வாய்க்கப் பெற்றது.

 

பெரும்பான்மையான கலை இலக்கியவாதிகள் சொல்வது போல இது கலை இலக்கிய ரசனையை பண்பாட்டுச் சூழலை, சமூக வெளியை மேம்படுத்தவல்ல நிதிதான் என்றோ, மா.லெ.குழுக்கள் சொல்வது போல புரட்சியை மழுங்கடிப்பவர்கள் என்றோ, ஜெயமோகனின் தரப்பு சொல்வது போல, தேசத்தின் கலைப் பண்பாட்டு விழுமியங்களைக் காட்டிக் கொடுக்கும் துரோகிகள் என்றோ வகைப்படுத்திவிட முடியாது.

 

பல்வேறு உதவிகளாக, பல்வேறு செயல்பாடுகளாக, பல்வேறு அனுகூலங்களாக வியாபித்திருக்கின்ற அதே பார்வையின் வேறு பக்கத்தில், பல்வேறு திரிப்புகளாக, பல்வேறு துரோகங்களாக, பல்வேறு மாய்மாலங்களாகக் கட்டமைகின்றன. இதுகுறித்த ஒற்றைத் தன்மை கொண்ட பார்வையுடன் அணுகாமல், பன்மைத்தன்மையுடனேயே அணுக வேண்டும்.

 

இந்த வேர்த்தண்டின் வினோதவகையான வளர்ச்சி தன்னை எவ்வாறெல்லாம் வரித்துக் கொண்டது என்பதை அதற்குரிய சூழலைக் கணக்கிலெடுத்துக் கொண்டு அணுகலாம். முதலில், உலகமயமாக்கலின் அசுரத்தனமான வளர்ச்சிப் போக்கினூடாக இதுவும் அசுரத்தனமாக வளர்ச்சியடைந்திருக்கிறது என்பதை அவதானிக்கலாம்.

 

2000களின் துவக்கத்தில் உலகம் முழுமைக்கும் பரபரப்பாகப் பேசப்பட்ட பின்நவீனத்துவச் சிந்தனைகளின் பாதிப்பில் எல்லாத்துறைகளிலும் உயர் மதிப்பீடுகள் சரிந்தன. பின்நவீனத்துவம் எதைக்கட்டமைக்க நினைத்ததோ, அதற்கு எதிர்த்திசையில் சிந்தனையோட்டம் தாவியது. உலகெங்கும் பொருளாதாரத்தை முதன்மைப்படுத்தும் போக்கு பெரிதளவில் உருவாக ஆரம்பித்தது. பின்நவீனத்துவச் சிந்தனைகள் கலைஇலக்கியப் பண்பாட்டுத்துறைகளில் ஒரு தேக்கத்தையும் அயர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தன. வெகுஜனக்கலாச்சாரத்தின் பார்வையையும் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும் என்கிற பின்நவீனத்துவச் சிந்தனையாளர் ழான் போத்ரியா போன்றவர்களின் போக்கு மேலெழும்பி ஒலித்தது.

 

தமிழ்க் கலைஇலக்கியச் சூழலில், தீவிரமான அமைப்பியல் தளத்தில் இயங்கிய தமிழவன் ‘இங்கே இன்று’ என்ற வெகுஜன ரசனை கொண்ட இதழை இந்தவிதமான இலக்கிய நியாயங்களோடு ஆரம்பித்தார். சாருநிவேதிதா ‘சிறுபத்திரிகை நடத்துபவர்களை கூமுட்டைகள்’ என்று தனது கதைகளில் சிறுபத்திரிக்கை இயக்கத்தையே கேவலமாக அவமானப்படுத்தினார். அது மிகப்பெரிய அங்கதம் என்று போற்றப்பட்டது. ஸ்ரீராம் சிட்பண்ட்ஸ் மூலம் வெகுஜன இதழாக வெளிவந்து கொண்டிருந்த சுபமங்களாவை கோமல் சாமிநாதன் இலக்கிய இதழாக மாற்ற அதில் முட்டி மோதிக் கொண்டு எழுதிச் சன்மானம் பெற்றார்கள் எழுத்தாளப் பெருந்தகைகள்.

 

அதுவரை ஆறுமாதத்திற்கும் வருடத்திற்கும் அங்கொன்றும் இங்கொன்றுமாக வந்து கொண்டிருந்த இதழியல் தடத்தில் காலச்சுவடு மாதஇதழாகக் களம் இறங்கியது. தனது ‘தமிழினி 2000’ என்ற கருத்தரங்கின் மூலம் உலக எழுத்தாளர்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் அழைத்து வந்து மிகப் பெரும் ஆரவாரத்துடன் நடத்தப்பட்டது. சாதாரண இலக்கிய வாசகனுக்கு இதெல்லாம் மிகப்பெரிய மாந்திரீக யதார்த்த வாதமாகத் தோன்றியது. ஸ்ரீராம் சிட்பண்ட்சுடன் இணைந்து எழுத்தாளர்களை அவர்கள் ஆராதித்த விதம் இன்னும் அட்டகாசம். தனது கருத்தரங்குகளில் கலந்து கொள்பவர்களுக்குத் தங்கும் வசதியும், வந்து போகும் 2 ஆம்வகுப்புப் பயணச் செலவும், மூன்று வேளைச் சாப்பாடும் கொடுக்கப்பட்டது. அதுவரை குலைப்பட்டினியுடனும், பரிதாபமான பயணங்களுடனும் இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் எழுத்தாள ஜீவிகள் பிரமித்துப் போனார்கள்.

இந்தியாடுடே இதழை மலம் துடைக்கும் காகிதமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற குரல் எடுபடாமல், தலைகுப்புற அதிலேயே விழுந்து நீச்சலடித்தார்கள். உலக சினிமா பற்றி வியந்தோதிய எஸ்.ரா. ‘ரஜினிசாருக்கு’ வசனம் எழுதப் போனார். மசாலாகதைகள் என்று வெறுத்து ஒதுக்கிய ராஜேஷ்குமாரின் கிரைம் கதைகளை, அறிவுஜீவியான பிரீதம் சக்ரவர்த்தி தனது பதிப்பகத்தின் சார்பாக தொடர்ந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிட ஆரம்பித்தார். மசாலா திரைப்படப் பாடலாசிரியர் வைரமுத்து தரும் விருதை அறிய விருதாக வாழ்த்தி பணிவுடன் பெற்றுக் கொள்கிறார் கவிஞர் கலாப்ரியா.

 

காலச்சுவடு ,உயிர்மை இதழ்களின் வருகைக்குப்பிறகு படைப்புகளின் வேகம் கூடின. படைப்பை வருடக்கணக்கில் எழுதும் போக்கு காணாமல் போய் அவசரஅவசரமாக தீனி தரவேண்டிய சூழல் உருவாகியது. தரம் தரமற்றது என்று எதுவுமே கிடையாது; அதனதன் துறையில் அது முக்கியத்துவம் வாய்ந்த படைப்பு என்கிற போக்கில் அதுவரையிலான இலக்கிய மதிப்பீடுகள் சரிந்தன. காலச்சுவடு பதிப்பக வெளியீடொன்றின் தலைப்பை நாம் இங்கே நினைவு கூறலாம்: ‘அதற்கு மேல் அதில் ஒன்றும் இல்லை’. இலக்கியத்தன்மைக்கும் வணிகத் தன்மைக்கும் இடையில் அதுவரை இருந்த பெரும்இடைவெளி அழகியலாகப் பூசி மெழுகப்பட்டது. மசாலாத் திரைப்படப் பாடலாசிரியரான நா.முத்துக்குமார் இலக்கிய எழுத்தாளர்களுடன் ஜோடி சேர்ந்தார். காலங்காலமாக தீவிர இலக்கிய ஆசான்கள் பகடி செய்து வந்த சுஜாதா இலக்கிய அந்தஸ்து பெற்றார். விமர்சகர்களே இல்லாத நிகழ்வாக மாறிப்போன சூழலில், வாசகர் கடிதங்களே மதிப்புரைகளாக, விமர்சனங்களாக வலம் வந்தன.

 

காலச்சுவடு உயிர்மை இதழ்களின் வருகைக்குப்பிறகு தான் இதுநடந்தது என்று சொல்ல முடியாது. அவை ஒரு கருவிகள் மாத்திரமே. காலச்சுவடு ,உயிர்மை இல்லையென்றால் வேறு இருபத்திரிகைகள் அந்த இடத்தில் இருந்திருக்கும்.

இப்படியான Rhizome சிந்தனையுடன்தான் இந்தத் தொண்டு நிறுவனங்களிடையே புழங்கும் அன்னியநிதி விவகாரத்தைப் பார்க்க வேண்டும்.

 

ஒரு பழங்குடிச் சிறுவனுக்கு அடிப்படைக் கல்வியைக் கற்றுக் கொடுத்து ஆளாக்கினால், அவன் இச்சமூகவெளியில் தனது சாதியப்படிநிலை பற்றியும், தனது இருப்பைப் பற்றியும் கேள்வி கேட்கிறான்.

 

இதை மூன்று மனநிலைகளில் பொருத்தலாம்:

 

  1. 1.      விஷயம் தெரியாத ஒரு சிறுவனுக்கு விஷயங்களைக் கற்றுக் கொடுத்து இந்த அதிகார அமைப்பை, ஆதிக்கத்தை, பழமையான சிந்தனைகளைக் கேள்விக்குள்ளாக்குதல். (இது போராட்ட குணத்தை அவனிடம் ஏற்படுத்தும்; ஆக நாங்கள் செய்வது போராட்டத்தை நோக்கிய பார்வை இது முற்போக்குச்சிந்தனை கொண்ட தொண்டூழியம் செய்பவரின் தரப்பு.)

 

  1. 2.      சாதிகளின் வேற்றுமை, பண்பாட்டு விழுமியங்கள் சார்ந்த மாற்றுக் கருத்துக்களைச் சொல்லிச் சொல்லி அவனது மனதில் வன்மத்தை ஏற்படுத்தி இந்த நாட்டின்மீது அவனது பார்வையை கொச்சையாக மாற்றுதல். (பாரம்பரியம் வாய்ந்த சிந்தனைகளைத் திரித்துச் சொல்லுதல் மூலம் நம்தேசத்தின் மீதே ஒரு எதிர்ப்புணர்வு எழும்பும்; இது நம்நாட்டிற்குள் திட்டமிட்டுக் குழப்பத்தை ஏற்படுத்துவோர் செய்ய நினைக்கும் சதிச்செயல். ஆக அவர்கள் செய்வது நாட்டின் சிந்தனைச் செல்வங்களைத் திரிக்கும் வேலை, தேசத்திற்கு அவப் பெயரை ஏற்படுத்தும் செயல்பாடுகள் இது தேசியத்தன்மை கொண்ட ஜெயமோகன் தரப்பு.)

 

  1. 3.      எந்தவிதமான விஷயமும் தெரியாத பழங்குடிமக்களிடம் எளிதில் புரட்சிகரமான கருத்துக்களை கட்டமைக்க முடியும். உதாரணமாக, சட்டீஸ்கர் பழங்குடிமக்களின் எழுச்சி போன்றவை. இது போன்ற போராட்ட குணங்களைத் திட்டமிட்டு நவீனகல்வி, சாதிவேற்றுமை, பண்பாட்டு விழுமியம் போன்ற பல்வேறு விஷயங்களைப் பேசி பழங்குடிகளைத் திசைதிருப்பி விடுதல். (அமெரிக்கா போன்ற நாடுகள் தொடர்ந்து காலனியமாகவே வைத்திருக்க எதிர்ப்புரட்சியாளர்களின் மூலம் மக்களின் மனதில் உருவாகும் புரட்சியை மழுங்கடித்தல் இது மா.லெ.குழுக்களின் தரப்பு)

 

இப்படிப் பல்வேறு பரிமாணங்களில் அதனதன் சிந்தனைசார் கட்டமைப்பு வலிமையான தோற்றத்துடன் இயங்குவதை அவதானிக்கலாம். இந்தப் பின்னிப்பிணைந்து செல்லும் வேர்களுடன்தான் இதை அணுக வேண்டும்.

இந்த இடத்தில் ஜேம்ஸ்பெட்ரஸ் பற்றித் தெரிந்துகொள்வது நல்லது. லத்தீன் அமெரிக்க மற்றும் மத்திய கிழக்கு அரசியல் பிரச்னைகளைப் பற்றித் தீவிரமாக எழுதும் சமூகவியல் சிந்தனையாளரான இவர், லத்தீன் அமெரிக்கா, கரீபியன், புரட்சிகர இயக்கங்கள், வர்க்க பகுப்பாய்வு வெளிநாட்டு கொள்கை, புதிய இடது விமர்சனம்… போன்றவற்றைப் பற்றி விரிவான தரவுகளுடன் எழுதுபவர். உலகமயமாக்கல் கடந்த 100 ஆண்டுகளில் புதிய முதலாளித்துவ பொருளாதாரங்களை உலக அளவில் ஒருங்கிணைக்கும் போக்கின் முக்கியமான ஒரு புள்ளியாக இந்த அன்னியநிதி விவகாரத்தை முன்வைக்கிறார். முதலாளித்துவ கட்டமைப்பின் ஒரு பகுதியான உலகமயமாக்கல் என்பது கவனத்தைத் திசை திருப்ப பயன்படுத்தப்படும் ஒரு கருத்தியல் என்று தனது கட்டுரை ஒன்றில் விவரிக்கிறார். (petras.lahaine.org)

 

இப்படியான ஒரு தோற்றத்தில், இந்த வேரோட்டத்தின் பாதைகளைப் புரிந்து கொள்ளும் ஒரு வழியாக, இதுபற்றிய விஷயம் சம்பந்தப்பட்டவர்கள் ஒருதிறந்த மனதுடனான விவாதத்திற்குத் தயாராக வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

பல்வேறு துறைகளில், பல்வேறு செயல்பாடுகளில் இயங்கும் முத்தரப்பினரும் அவரவர் தர்க்க நியாயங்களுடன் – திறந்த மனதுடன் ஒரு கூட்டு விவாதத்தைக் கட்டமைக்க வேண்டும். இந்த விஷயங்களில் மிகுந்த தீவிரத்துடன் செயல்படுவர்கள், ஆய்வாளர்கள், அமைப்புத் தோழர்கள், ஊடகங்கள் என அனைவரும் ஒருமித்து இந்த விவாத அரங்கை ஒருங்கிணைக்க வேண்டும்.

 

அன்னியநிதி என்பது தற்காலத்தில் எந்த ரீதியாகக் கட்டமைகிறது? அதனுடைய தொலைநோக்குப் பார்வை என்ன?

இதுபோன்ற அன்னிய நிதி உதவியோடு இயங்கும் கலை இலக்கியச் செயல்பாடுகள்/ அமைப்புகள் எவை? அவை பூரணத்துவமாகத் தன்னிச்சையுடன்தான் இயங்குகின்றனவா?

கலைஇலக்கியவெளியில் அதன் செயல்பாடுகள்/ பொதுவெளியில் அதன் செயல்பாடுகள்/ என்ன?

தமிழ்ச் செம்மொழி மையத்தின் நிதி என்ன பலனை உருவாக்கியிருக்கிறது? இதுபோன்ற அமைப்புகளின் நிதியின் பலன் என்ன?

ஒரு அகராதி தயாரிப்புக்குக் கூட அரசு உதவி கிட்டாமல், அன்னிய உதவி கிட்டுவது ஏன்? அதில் கூட கருத்தியல் திரிப்புகளைச் செய்ய இயலுமா?

 

தமிழுக்கு வரும் அன்னிய நிதிகள் அரசு ஒப்புதலுடன்தான் வருகின்றனவா? இதை அரசு எப்படிப் பார்க்கிறது?

சர்வதேச அளவில் அரசியல் ரீதியாக தொண்டுநிறுவனங்கள் ஆற்றும் பங்கு குறித்து… அண்மையில் ஈழப்பிரச்னையில் தொண்டுநிறுவனங்கள் ஆற்றிய பங்கு குறித்து…

இது போன்ற ஒரு குடிமைச் சமூக விமர்சனமாக, நமது கூட்டு விவாதத்தை வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு புதிய தலைமுறையான உங்களைச் சார்ந்தது.

 

தனிநபர் தாக்குதல் கொள்ளாமல், ஆரோக்கியமான திறந்த மனதுடன் இது சம்பந்தமான எல்லாத்தரப்பினரும் ஒன்றிணைந்து வாதப்பிரதிவாதங்களை நடத்தினால், மிகமுக்கியமானதொரு வரலாற்றுப் புதிருக்கு விடை தேடும் விவாதமாக மலரும். உங்களுக்குக் கிடைக்கும் எல்லாவாய்ப்புகளிலும் இதைக் கட்டமைக்கலாம்.

 

இதை ஏதோ சிந்தனையாளனாக என்னை வரித்துக் கொண்டு பேசவில்லை. கடந்த 30 வருடங்களாக என் குருதிக்குள் உடையாத குமிழியாக மிதந்து கொண்டிருக்கும் இந்தப் புதிருக்கான விடையை நான் புரிந்து கொள்ளும் யத்தனம்தான் இது.

௦௦௦௦

 

 

 

31 Comments

  1. manikandan says:

    முற்போக்கு சிந்தனை ……….

Post a Comment