Home » இதழ் 04 » கதையல்லாத கதைகள்-01, யோ.கர்ணன்

 

கதையல்லாத கதைகள்-01, யோ.கர்ணன்

 

 

 

தோழர் சான் சடாட்சரத்தை நான் முதன்முதலாக சந்தித்த பொழுது எனக்குச் சரியாக இருபது வயதும் நாற்பத்தியெட்டு நாட்களும் சில மணித்துளிகளும் ஆகியிருந்தன. அப்பொழுது நான் விடுமுறையில் வந்திருந்தேன். நான் இயக்கத்தில் இருந்த காலத்தில் கிடைத்த ஒரே ஒரு விடுமுறை அதுவாகத்தானிருந்தது. எனக்கு அப்பொழுது வன்னியில் போவதற்கு ஒரு வீடும் இல்லாதிருந்தது. கதிர் தனது வீட்டிற்கு வரச் சொன்னான். அவன் திருகோணமலைப் பொடியன். அவனது வீட்டுக்காரர்கள் கன வருசத்துக்கு முதலே இடம்பெயர்ந்து யாழ்ப்பாணம் வந்திருந்தனர். பிறகு யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து விசுவமடுவிலிருந்தனர். சரி. ஏன் அபூர்வமாகக் கிடைக்கிற விடுமுறையை விடுவான் என அவனுடன் போனேன். பயணச் செலவாக ஆளுக்கு நூற்றியிருபது ரூபாய்கள் தரப்பட்டன. காசைக்கரியாக்காமல் ஒரு மண்லொறியை மறித்து ஏறிப் போனோம்.

அந்த விடுமுறையில் பெரிய பிரியோசனங்களெதுவுமிருக்கவில்லை. ஆக, வீட்டுச்சாப்பாடு சாப்பிட்டதும், தோழர் சான் சடாட்சரத்தை சந்தித்ததுமே பயனுள்ளவையாக இருந்தன. மற்றும்படி அந்தக் குடிசை வீட்டுக்குள்ளிருந்தபடி சினிமாப்பாட்டையே இடைவிடாமல் கேட்டுக் கொண்டிருந்தோம். நாங்களிருந்த பிரிவில் சினிமாப்பாட்டு கேட்பது மிகக்கடுமையாக தடை செய்யப்பட்டிருந்தது. சினிமாப்பாட்டுக் கேட்டாலும் சரி, இலங்கையரசிற்கு தகவல் அளித்தாலும் சரி. ஆளை ஜெயிலுக்கு அனுப்பிவிடுவார்கள். படையணியில் றேடியோ வைத்திருந்தவர்கள் அனைவரிடமிருந்தும் றேடியோக்களை வாங்கி, மத்திய அலைவரிசையை துண்டித்துவிட்டே கொடுத்திருந்தார்கள். அதை வைத்துக் கொண்டு புலிகளின் குரலும், லண்டன் பிபிசியும், ஐபிசியும், வெரித்தாசும், மாலையில் கரகரத்த சிங்கப்ப+ர் வானொலியும் மட்டும்தான் கேட்கலாம்.

இப்பொழுதிருப்பது மாதிரி அப்பொழுது பண்பலைகள் பிரபலமாக இருந்திருக்கவில்லை. சினிமாப்பாட்டு போடும் பிரபலமான வானொலி நிலையங்கள் எல்லாம் மத்தியஅலைவரிசையில்தான் இருந்தன. தென்றல், வானம்பாடி, தூத்துக்குடி என நீண்ட பட்டியலுண்டு. இலங்கை றேடியோவில் அல்லியின் ஹலோ உங்கள் விருப்பம் எனக்கு நன்றாகப்பிடித்திருந்தது. பகல் வேளையில்கூட பாயைப் போட்டு மல்லாந்து படுத்திருந்தபடி சினிமாப்பாட்டைக் கேட்டுக் கொண்டிருந்தோம். வாழ்வில் கிடைக்காத அற்புத தருணமொன்று வாய்த்திருந்ததை போல இடையிடையே ஆளையாள்ப் பார்த்து சிரித்தும் கொண்டோம்.

 

பக்கத்தில் யாரோ ஒரு பெட்டை சாமத்தியப்பட்டாள் என இரவு படம் போட்டார்கள். அதில் கமலஹாசன் படமொன்று ஓடியது. படம் பார்க்க வந்த இடத்தில், கதிர் சில பெட்டையளுடன் பகிடியாவது விட்டான். எனக்கு அதற்கும் பயம். இரகசியமாக அவர்களைப் பார்த்துக் கொண்டுமட்டுமிருந்தேன்.இந்த லீவில் ஒரு பெட்டையையாவது லவ் பண்ணிவிடுவேன் என கதிர் சொன்னதும் நடைபெறவில்லை. ஒரு பெட்டையுடனாவது கதைத்துவிடுவேன் என நான் சொன்னதும் நடைபெறவில்லை. யாராவது ஒருத்தியை காணும் பொழுதெல்லாம் எனக்கும் அவளுக்குமிடையில் ரட்ணம் மாஸ்ரரின் பிம்பம் வந்துவிடுகிறது. மற்றம்படி காலையும் மாலையும் பள்ளிக்கூடம் ரியூசனுகளின் முன்பாக சைக்கிள் மிதித்துத் திரிந்தோம்.

 

கொஞ்சம் இருட்டான ஒரு முன்னிரவு நேரம் ஒரு மனுசன் வந்தார். அவருக்கு ரகசியத்தை கூட மெதுவாக கதைக்கத் தெரியவில்லை. அடிக்கொருக்கால் கையிரண்டையும் தட்டி, வலது கையை எதிரேயிருப்பவரின் முகத்திற்கு நேராக ஆட்டிக் கதைத்தார். அவர் எதைக் கதைத்தாலும் அது ஒரு எதுகை மோனையான சாங்கத்தில் கேட்பதற்கு சுவாரஸ்யமாகயிருந்தது. கதிரின் அப்பா கூட இலேசுப்பட்ட ஆளாகயிருக்கவில்லை. சரிக்குச்சரி வாதம் பண்ணிக் கொண்டிருந்தார். அவர்கள் வாதம் பண்ணுவது கூட, ஏதோ சண்டை பிடித்துக் கொள்வது போலவேயிருந்தது. இந்த வாதத்தின் முடிவில் சண்டை பிடித்துக் கொள்வார்கள் என நான் எதிர்பார்த்த தருணங்களிலெல்லாம் அவர்கள் சிரித்தபடி புகைபிடிக்க ஆரம்பித்தார்கள். முன்பின் அறிந்திராத சொற்கள் எல்லாம் அவர்களது வாய்களிலிருந்து வந்து கொண்டிருந்தன. பாட்டாளி வர்க்கம், பூர்ஸ்வா பார்வை, வர்க்கச் சுரண்டல், நிதிமூலதனம், இயங்கியல் என எண்ணற்ற சொற்கள் வந்து கொண்டிருந்தன. என் வாழ்நாளில் அந்தச் சொற்களெல்லாம் அப்பொழுதுதான் முதன் முதலாக என் காதுகளில் விழுந்தன. அவற்றில் மிகுந்த கவர்ச்சியும் தெரிந்தது. நான் அவற்றை மனனம் செய்து வைத்திருக்க முயன்று கொண்டிருந்தேன்.

 

நாங்கள் இயக்கப் பொடியள் என்றதையறிந்ததும் வந்திருந்தவருக்கு நல்ல புளுகமாகிவிட்டது. எங்களிருவரையும் கட்டிப்பிடித்து முத்தம் தந்தார். அவரது வாயிலிருந்து புளித்த கள்ளு வாசனை வந்தது. எனக்கு வயிற்றைக்குமட்டியது.

 

எங்களது இயக்கப்பெயரைக் கேட்டுவிட்டு, உதெல்லாம் பெயர்களேயல்ல. உது செல்வநாயகம் தரவளி வைக்கிற பேர் என்று, தூசணங்களினால் செல்வநாயகத்தை திட்டினார். செல்வநாயகம் இப்பொழுது உயிருடனிருந்தால் தானே அவரைப் போடுவன் என உரத்த குரலில் ஆரம்பித்தவர், சத்தத்தைக் குறைத்து, ‘தலைவரிட்டப் பொமிசன் வாங்கி’ என முடித்தார். அவர் பாவித்த நல்ல வார்த்தைகள், தூசணவார்த்தைகளெல்லாம் எனக்கும் தெரிந்ததுதான். ஒரேயொரு சொல்தான் புதினமாக இருந்தது. ‘யாழ்மையவாதம்’ என்பது புரியவேயில்லை.  எங்களிருவருக்கும் தானே பெயர் வைக்கப் போகிறேன் என்றவர், எனக்கு லெனின் எனவும், கதிருக்கு மாவோ எனவும் பெயர் வைத்தார். லாம்பு வெளிச்சத்தை எங்கள் முகங்களிற்குக் கிட்டவாக கொண்டு வந்து, ‘யுகப்புரட்சி செய்ய வந்த மாவீரர்களே வாழ்க’ என்றார். நாங்கள் கொடுப்பிற்குள் சிரித்துக் கொண்டிருந்தோம். இந்த மனுசனிடமும் ஏதோ கொஞ்சம் விசயமிருக்கிறது போல எனக்குப்பட்டது. ஆனால் கடைசிவரை கதிர் அதனை ஏற்றுக் கொள்ளவேயில்லை. வெறிகாரன் புசத்திறான் என்றபடியிருந்தான்.

 

தம்பியவைக்கு என்னைத் தெரியுமா எனக் கேட்டார். இவர் பெரிய மாவட்டத் தளபதி. கண்ட உடனே தெரியிறதுக்கு என கதிர் மெதுவாகச் சொன்னான். தெரியாதெனச் சொன்னேன்.  எழுந்து நின்று கைகளால் நெஞ்சில் பலமாகத் தட்டி ‘நானொரு கொம்மியூனிஸ்ற்’ என்றார்.

 

 

சற்றும் எதிர்பாராத விதமாக, நான் என் வாழ்நாளிலேயே முதன்முதலாக ஒரு கொம்மியூனிஸ்றை நேரில் சந்தித்தேன். அது வரை ஒரு கொம்மியூனிஸ்ற் எனப்படுபவன் எப்படியிருப்பான் என்பதே தெரியாமல் குழம்பியிருக்கிறேன். குளிரால் விறைக்காமலிருக்க முழங்கால் வரை நீண்ட சப்பாத்துக்களுடனும், தோலாடைகளுடனும், சுக்கான்களுடன் கண்களில் ஒளி கொண்டலைவார்கள் என்றும், அப்படியானவர்களை என் சீவிய காலத்தில் காணவேமாட்டேன் என்றும்தான் நினைத்ருந்தேன். எல்லாம் சகாப்தம் படைத்த ஸ்ராலின்கிராட் புத்தகத்தை கலைக்கோன் மாஸ்ரர் வாசித்துக் காட்டியதால் வந்த வினை. ஒவ்வொரு நாளும் இரவு ஏழுமணி தொடக்கம் எட்டுமணி வரை அவர் இந்தப்புத்தகத்தை வாசித்துக்காட்டினார். நானும் நித்திரை தூங்காமலிருந்து கேட்டுக் கொண்டிருப்பேன். இதன் மூலம் ஒரு கற்பனையான கொம்மியூனிஸ்ற் சித்திரத்தையும் வரைந்து வைத்திருந்தேன். ஆனால் கொம்மியூனிஸ்ற் எனப்படுபவன் சாரத்துடனும் வருவான், முக்கியமாக வெறியில் கண்டதையும் புசத்துவான் என்பதை தோழர் சான் சடாட்சரம் மூலமாகவே கண்டு கொண்டேன்.

 

தன்னையொரு முழுமையான கொம்யூனிஸ்ற் என்று பெருமையாக அறிமுகம் செய்தவர், ஒரு உண்மையான கொம்மியூனிஸ்ற் அங்கம் வகிக்ககூடிய அமைப்பென்று இன்று உலகில் ஒரு இயக்கம் கூட இல்லை. தேசிய இனப்பிரச்சனையில் எங்கள் கொம்யூனிஸ்ற் இயக்கம் எடுத்தது மிகப்பிழையான முடிவு. அதில் ஒருதுளி நேர்மை கூடயில்லை. அவர்களிற்கு மனவிரிவிருக்கவில்லை. எவ்வளவு பெரிய பிணக்குவியலிருந்தாலும் அதில் கைவிட்டு சாதி இரத்தத்தைத்தான் அவர்களினால் எடுக்க முடியும். எங்கோ பெய்யும் மழைக்காகவெல்லாம் என்னால் இங்கே குடை பிடிக்கமுடியாது. அவர்களது இதுபோன்ற முட்டாள்த்தனங்களினால் நான் தீர்க்கமான முடிவெடுத்து அவர்களது பாதையை விட்டுப்பிரிந்து புலிகளை ஆதரிக்கிறேன் என்றார்.

 

உலகில் மிகச்சிறந்த கொம்மியூனிஸ்ற் யார் தெரியுமா எனக் கேட்டார்.
கதிர் சொன்னான், ரஸ்ய ஜனாதிபதி என்று.
அவர் கதிரை திட்டினார். பிரபாகரன் என்ன அரசியல் படிப்பிச்சவன் எனக் கேட்டார். இந்த தெளிவுகள் இல்லாமல் எப்பிடி தமிழீழத்தை அடைவியள் என்றார். அவர் உண்மையிலேயே கோபித்த மாதிரித்தான் தெரிந்தது.

 

தமிழீழத்தை அடைய சிறந்த வழி, யார் சிறந்த கொம்மியூனிஸ்ற் என்பதை அறிந்திருப்பதல்ல. மாறாக, ஒரு துவக்கை குறி பார்த்துச் சுடக் கற்றுக் கொள்வதே என்றேன்.ஒரு போராளியென்பவன் அறிவையும் ஆயுதத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டிருக்க வேண்டுமென்பதே எனது வேணவா. ரஸ்யாவை பார்த்தீர்களெனில் இது புரியும். நமக்கிப்போ தேவை ஆயுதப்படைகளல்ல. மாறாக ஒரு செஞ்சேனையே. அப்படியான ஒரு பெரும்படையணி என் கண்களில் தெரிகிறதென வானத்தைப் பார்த்து கண்கள் மின்னச் சொன்னவர், இது பற்றிய விளக்கமான கடிதமொன்றெழுதி விசுவமடு போர் எழுச்சிக்குழுத் தலைவரூடாக தலைவருக்கு அனுப்பியுள்ளேன் என்றார்.    பின்னர்,      பொக்கற்றுக்குள்ளிருந்து ஒரு கடிதத்தை எடுத்து என்னிடம் தந்தார். லாம்பிற்கு கிட்ட கொண்டுபோய்ப் பார்த்தேன். சான் சடாட்சரம் என்பவர் எல்லைப்படை ரெயினிங் எடுத்துள்ளார் என்பதை உறுதிப்படுத்தி பிரதேச அரசியல்த்துறை பொறுப்பாளர் கொடுத்துள்ள கடிதம். இவர் என்னத்திற்காக இப்பொழுது இந்த பிலிம் காட்டுகிறார். தனக்கும் ஒரு துவக்கை சுடத்தெரியும் என சொல்லவருகிறாரா அல்லது செஞ்சேனையொன்றில் தானும் அங்கத்தவனாகயிருக்கிறேன் எனச் சொல்ல வருகிறாரா, எல்லைப்படையை செஞ்சேனையென்கிறாரா என்பது விளங்கவில்லை. அறளை பெயர்ந்த வயதில் காட்டுற பிலிமை காட்டிவிட்டுப் போகட்டுமென பேசாமல் இருந்து விட்டேன். இப்பொழுதெல்லாம் எல்லைப்படை ரெயினிங் முடித்துவிட்டு வரும் வயதான கிழவர்களிற்கு படம் காட்டுதே வேலையாகிவிட்டது.

 

அவர் மறந்தாலும் நான் மறக்க தயாராக இல்லை. சிறந்த கொம்மியூனிஸ்ற் குறித்த கேள்விக்கு விடை சொல்லச் சொன்னேன்.
தொண்டையை செருமிவிட்டு வானத்தைப் பார்த்துச் சொன்னார்.
‘சேகுவேராவும், பிரபாகரனும்’
இந்தப்பதிலை நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் நான் இந்தப்பதிலை விரும்பினேன். தலைவரும் ஒரு கொம்மியூனிஸ்ற் தானென்பதை அறிந்து கொண்ட பொழுது சந்தோசமாகயிருந்தது.
அதன் பிறகு அவரை கனகாலம் சந்திக்க முடியவில்லை. இயக்க கடமைகளில் கண்ணாயிருந்த பொழுதுகளில் அவரையெல்லாம் நினைத்துக் கொண்டிருக்க முடியவில்லை. படிப்படியாக அவர் ஞாபகத்திலிருந்து காணாமல்ப் போய்க் கொண்டிருந்தார்.

 

மீண்டும் பல வருடங்களின் பிறகு, இயக்கத்தை விட்டு வெளியில் வந்த பிறகுதான் அவரை சந்தித்தேன். அதுகூட ஒரு சுவாரஸ்யமான சம்பவம்தான். இயக்கத்தைவிட்டு வெளியேறிய காலப்பகுதியில் பலரும் உணர்ந்து கொள்ளும் ஒரு தனிமையையும் வெறுமையையும் நானும் அந்த நாட்களில் அனுபவித்திருந்தேன். பேசுவதற்குகூட யாருமற்ற அனாதையாகிவிட்டேனோ என்று கூட அஞ்சினேன். எனக்கு பைத்தியம் பிடித்துவிடும் போலிருந்தது. அதிலிருந்து தப்பிப்பதற்காக இலக்கில்லாமல் அலைந்து கொண்டிருப்பதை அந்நாளைய வழமையாக கொண்டிருந்தேன்.

 

இப்படித்தானொருநாள். புதுக்குடியிருப்பு நகரிலிருந்து உள்ப்பக்கமாக சென்று கொண்டிருந்தேன். நேரத்தைக் கடத்துவது மட்டும்தான் என் ஒரே இலக்கு. ஒவ்வொரு ஒழுங்கையாக இறங்கியிறங்கி ஏறினேன். ஆட்கள் இல்லாத சமயங்களில் வீதிக்கரையிலிருந்த மரங்களின் கீழ் நின்று பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தேன். இப்படித் திரியத் தொடங்கிய பின்னர், கோம்பாவிலில் ஒரு பெட்டையில் விருப்பம் வந்திருந்தது. அவளது வீட்டைக்கூட கண்டுபிடித்திருந்தேன். அவளிற்கு இது தெரியுமா என்பது தெரியவில்லை. அடிக்கடி பின்னால்ச்சுற்றுவதை வைத்து அவளும் ஊகித்திருக்கலாமென்றே நம்பினேன். அவளது வீட்டின் முன்பாக நாலைந்து தடவைகள் சைக்கிளில் சுற்றிவிட்டு திரும்பவும் நகரிற்கு வர, நகரிலிருந்த பாடசாலையொன்றில் ஒலிபெருக்கியில் இயக்கப்பாட்டு போடப்பட்டிருந்தது. பொழுதைக் கழிப்பதற்காக பாடசாலைக்குள் புகுந்தேன். நிகழ்ச்சி நடந்த மண்டப வாயிலில் குத்துவிளக்கேற்றி, நிறைகுடம் வைக்கப்பட்டிருந்தது. கவிதைநூல் வெளியீடு என்ற நோட்டீசும் ஒட்டப்பட்டிருந்தது.

 

வாசலில் சிரித்தபடி தோழர் சான் சடாட்சரம் நின்றார். நிகழ்விற்கு வரும் எல்லோரையும் கைகுலுக்கி, தங்களின் நல்வரவால் நிகழ்வு மேன்மையுற்றது என நாடகப்பாணி வசனம் பேசி வரவேற்றார். இவ்விதமே என்னையும் வரவேற்றார். அவரால் என்னை உடனடியாக அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. என்னைத் தெரியுமா என மெதுவாக கேட்டேன். இயக்கத்திலிருக்கும் பொடியளில் அரைவாசி ஆட்களிற்கு தன்னை தெரியுமென்றும், தனக்கு சில தளபதிகளை மட்டுமே தெரியுமென்றும் குறை நினைக்காமல் அறிமுகப்படுத்திக் கொள்ளச் சொன்னார். நான் இயக்கப்பொடியன் என்ற முடிவிற்கு எப்படி வந்தார் என்பது புரியவில்லை. ஒரு வேளை உடுப்பை வைத்துக் கணித்தாரோ தெரியாது. அண்மைய வருடங்களாக இயக்க வழங்களில் சிறிய பெட்டியுள்ள சேர்ட்டுகளையே கொடுத்திருந்தனர். நானும் இப்படியானதொரு சேர்ட்டையே அணிந்திருந்தேன். விசுவமடுக் கதையைச் சொன்னதும் கட்டிப்பிடித்துக் கொண்டார். அவரது பிடியிலிருந்து தப்பிப்பது சிரமாகயிருந்தது. முன்வரிசையில் உட்காரச் சொன்னார். கடைசி வரிசையில் உட்கார்ந்தேன். அது அவரது நான்காவது கவிதை நூலின் வெளியீடு. அந்தப்புத்தகம் பற்றிய நயப்பு மற்றும் வியப்பு உரைகளை நிகழ்த்தியவர்கள் நூலிலிருந்த சமதர்ம தமிழீழம், பாட்டாளி எழுச்சியும் ஓயாதஅலைகளும், மண்ணின் மைந்தனொருவன் மார்க்சிற்கு எழுதும் கடிதம், சிங்கள தரகு முதலாளித்துவத்தில் கரைந்த முன்னாள் இடதுசாரித் தோழனே முதலான கவிதைகளை விதந்தோதினார்கள். இந்த கவிதைகளின் வழியாக கடந்த பல சகாப்பதங்காக தான் சார்ந்திருந்த இயக்கமொன்றின் கடந்த காலத்தை ஈவிரக்கமின்றி சுயவிமர்சனம் செய்து கொண்டிருக்கிறார் என்பதே அவர்கள் எல்லோரதும் ஏகோபித்த அபிப்பிராயமாகயிருந்தது.

 

இறுதியாக மேடையேறிய தோழர் சான் சடாட்சரம், உணர்ச்சி ததும்பும் ஒரு உரையாற்றினார். பாசறையை விட்டு ஏன் வெளியில் வந்தேன்;, இடதுசாரிச் சந்தர்ப்பவாதம், புதிய பாசறை கற்றுத் தந்த பாடங்கள், ரஸ்யாவில் பெய்யும் மழை, முதுகில் தொங்கும் துப்பாக்கிகளுடன் வன்னியின் பரந்த வயல்வெளிகளில் அறுவடை செய்யவுள்ள பட்டாளி வர்க்கத்தின் காட்சிகள் பற்றியெல்லாம் பேசினார். இதையெல்லாம் கேட்கக்கேட்க மெதுமெதுவாக நான் ஒரு பரசவ நிலையை நோக்கிச் செல்லத் தொடங்கினேன். இதுவரை புத்தகங்களில் மட்டுமே படித்த சொற்களையும், காட்சிகளையும் நேரடியாகக் கண்டேன். இப்படியொரு நாளை எதிர்கொள்வேன் என்றோ, இந்தக்காட்சிகளையெல்லாம் என் வாழ்நாளில் காண்பேன் என்றோ நான் கனவு கூடக் கண்டதில்லை. விபரிக்க முடியாத ஒரு அற்புத உலகிற்குள் என்னை மெதுவாகக் காலடி எடுத்து வைக்கச் செய்தார். அந்த உலகு பற்றிய நினைவே இனிமையாயிருந்தது. அந்த உலகிற்கு அழைத்துச் சென்ற தோழர் சான் சடாட்சரத்தை நான் மனதாரக் காதலிக்கத் தொடங்கினேன். மேடைக்கு கீழேயே வைத்து அவரது உரை குறித்து சிலாகித்துச் சொன்னேன். அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியாகயிருந்தது. இப்படியாக வழிதவறிய மந்தை போலலைந்து திரிந்த  நான் ஒரு குருவானவரையும், அவர் ஒரு நன் மாணாக்கனையும் கண்டடைந்த நிகழ்வமைந்தது. மறுநாள் புதுக்குடியிருப்பிலிருந்த அவரின் வீடு தேடிச் சென்றேன். அன்றுதான் அவரது இன்னொரு பரிமாணத்தையும் கண்டேன். தோழர் சான் சடாட்சரம் அந்த நாட்களில்தான் அந்தப்பகுதி போர் எழுச்சிக்குழுத் தலைவர் பதவியை ஏற்றிருந்தார். அந்தப் பொறுப்பென்பது, அவருக்கு ஒதுக்கப்பட்ட பிரதேசத்திலுள்ள சனங்களை பின்தளப்பணிகளிற்கு உபயோகிக்கும் அல்லது தயார்படுத்தும் பணியாகும். இந்தப் பொறுப்பை ஏற்றதிலிருந்து, நிற்க இருக்க நேரமில்லையெனவும், விடுதலை வேண்டும் சமூகம் சும்மா உட்கார்ந்திருந்தால் எதுவும் நடைபெறாது. அந்தந்த வயதிற்குத் தக்கதான தாயகக்கடமைகளை செய்தால், தாய்மண் அடிமை விலங்கொடித்து நிமிரும். சும்மாயிருந்து வாங்க சுதந்திரமென்ன சுக்கா மிளகா என்றார். மறுநாள் நடைபெறும் கூட்டமெதற்கோ உரையாற்றத் தயாராகிக் கொண்டிருந்தவரிடம் நான் மாட்டுப்பட்டுவிட்டேனோ தெரியவில்லை.

 

அவரது மேசையிலிருந்த மார்க்சின் மூலதனம் நூலை படித்துவிட்டுத் தருவதாகச் சொல்லி எடுத்தேன். இதனை மட்டும் படிப்பதால் ஒருவன் இடதுசாரித்துவத்தை பூரணமாக அறிந்து கொண்டுவிட முடியாதென்றவர், சமதர்ம தமிழீழம் என்ற சிறிய பிரசுரமொன்றையும் தந்து, இவைகளையெல்லாம் புதிய தலைமுறையினர் படித்தறிய வேண்டுமென்றார். சோசலிசத்தை புத்தகங்களில் கற்றுக் கொண்டவன் இடதுசாரி கிடையாது, அப்படியானவன்தான் ரஸ்யாவில் மழை பெய்ய குடையும் கையுமாக அலைவான். இடதுசாரித்துவம் சொல்லும் வாழ்க்கை முறையை அந்ததந்த நிலங்களிற்குத் தக்கதாக வாழ வேண்டும். நீ அதற்கான வாழ்க்கை முறையைக் கொண்டவன். இந்தா இளைஞனே. இந்தப் புத்தகங்களைப் படித்து யதார்த்த இடதுசாரியாகு என்றார். அனேகமாக இயக்கங்களிற்கு இந்தியா பணமும் ஆயுதங்களும் கொடுத்து வளர்த்த காலத்தில் ஏதோ ஒரு இயக்கத்திற்கு ஒரு ரோணியோ இயந்திரத்தையும் கொடுத்திருக்க வேண்டும். அந்த இயத்திரத்தைக் கொண்டு இந்தப்பிரசுரம் அச்சடிக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வளவு பழையது.

 

அவரிடம் தொடர்ச்சியாகப் புத்தகங்களை இரவல் வாங்கினேன். அந்த எழுத்துக்களின் வழி புதியபுதிய பாதைகளை கண்டடைய ஆரம்பித்தேன். அப்பொழுதுதான் புரிந்தது, மூடிய இருளில் என் முன்னால் ஏராளம் பாதைகள் மறைந்திருக்கின்றன என்பதை. அவற்றில் ஒரு பகுதியையாவது தோழர் சான் சடாட்சரமென்னும் ஒளிவிளக்கினருகிலிருந்து கண்டடைந்து விடுவதென்ற வெறியுடன் படிக்கத் தொடங்கினேன். இந்த வெறித்தனமான படிப்பின் விளைவாக, நான் ஒரு கொம்மியூனிஸ்ற் ஆனேனா அல்லது ஏற்கனவே அபிமானம் கொண்டிருந்த கொம்மியூனிஸத்திலிருந்து வெளியில் வந்தேனா என்பதை இப்பொழுதும் துணிந்து சொல்ல முடியில்லை. எல்லாம் ஒரு வரிசை கிரமமாக நடந்து கொண்டிருந்தது என்பது மட்டும் புரிந்தது.

 

காலையிலேயே அவரது வீட்டிற்கு வந்து விடுவேன். இரவு ஊரடங்கிய பிறகுதான் பெரும்பாலும் திரும்புவேன். புத்தகங்களைப் படிப்பதிலும், விவாதங்களில் ஈடுபடுவதிலும் இடைப்பட்ட பொழுதுகள் கழிந்தன. இதற்குள் இன்னொரு காரியத்திற்கும் நேரத்தை ஒதுக்க வேண்டியிரந்தது. அவரது வீட்டிற்கு வரும் இயக்கப்பொறுப்பாளர்கள் அனைவரிடமும் என்னை தன் சீடனென அறிமுகம் செய்து வைத்தார். என்னை யாரென தெரியாமல் அவர்கள் முகத்தை சுருக்கி பார்க்கும் போதெல்லாம், ‘ஆளும் முந்தி உங்கட ஆள்த்தான். என்னட்ட வேற ஆர் வாறான்… எல்லாம் நாட்டுப்பற்றுள்ள பொடியள்தானே வாறாங்கள்’ என்றார். அப்பிடியா, நல்ல விசயம். தம்பி எந்தப் பிரிவிலயிருந்தனீர் என அவர்கள் கேட்க, அதற்குப் பதிலளிப்பதும் தினக்கடமையானது.

இளைய தோழர் தமிழ்ப்புயல், கவியன்பு, யுகப்பிரளயன் முதலான தோழர்களிற்கு வாய்த்தது போல, அவருடனேயே தங்கிக் கற்கும் குருகுலவாசம் எனக்கு வாய்க்காவிடினும், நானும் அவரது முதல் மாணாக்கருள் ஒருவனாகியிருந்தேன். அவர்கள் அவருடன் தங்கள் வாழ்நாளில் பெரும்பகுதியை செலவிட்டுள்ளனர். குருகுலவாசம் வாய்ப்பதென்பது சாதாரண காரியம் கிடையாது.
இளையதோழர் தமிழ்ப்புயல் ஆரம்பத்தில் கொஞ்ச நாள் இயக்கத்திலிருந்திருக்கிறார். பின்னர் ஏனோ வெளியில் வந்துவிட்டார். அதற்கான காரணமென அவர் இப்பொழுது சொல்கிறார், போராட்டத்தை மக்கள் மயப்படுத்தாமையையும், சீனாவில் ஆயுதப்பயிற்சி பெறாமல் சீனாவின் விரோதியான இந்தியாவில் ஆயுதப்பயிற்சி பெற அவரை அனுப்பியமையும் அவரை விரக்தியின் விளிம்பிற்கே கொண்டு சென்றதாம். ஆனால் சிலர் வேறு கதைகளையும் சொன்னார்கள். அவருக்கு பொம்பிளைப் பிரச்சனையிருக்குது. அவருக்கு காசுப்பிரச்சனையிருக்குது. அவருக்கு இயக்கத்தைப் பிடிக்காதென. நான் இவையெதனையும் நம்பவில்லை. இயக்கத்தை விட்டு வெளியில வந்த பிறகு இப்பிடியான கதையள் எப்பிடித் தெரியாது வருகின்றன. இப்பிடித்தான் போன கிழமை என்ர காதுபடவே ஒரு பொடியன் கேட்டான்.
‘மச்சான் குறை நினைக்க மாட்டாய் என்றால் ஒன்டு கேப்பன்’
‘சொல்லு’
‘இப்ப எப்பிடியடா… அவளைத்தான் கட்டியிருக்கிறியோ’
‘ஆரை’
‘நீ  ஒரு பெட்டையோட பிரச்சனைப்பட்டதென்று சொல்லிச்சினம்.. பொறுப்பாளர் சொன்னதென்டுதான் பொடியள் கதைச்சாங்கள்’

 

நான் காறித்துப்பிப் போட்டு வந்தேன். ஆனால் தோழர் மாத்தேயு இரகசியமாக வேறொரு தகவலைச் சொன்னார். அதொரு அரியண்டமான கதை. சான் சடாட்சரத்தின் மனைவிக்கும்  தமிழ்ப்புயலுக்கும் ஒரு இரகசிய உறவிருக்கின்றதாம். இதென்ன கேவலங்கெட்ட வேலை. அம்மா வயதான ஒருவருடன் உறவு வைத்துக் கொள்ளுமளவிற்கு தம்ழ்ப்புயல் ஏன் இப்படித் தரம் தாழ்ந்தார் என வெப்பியாரப்பட்டேன். சித்தி சித்தி என அவர் ஒரு மார்க்கமாக திரிவதைப் பார்க்கும்போது அந்த தகவலும் உண்மை போலத்தான்பட்டது. தோழர் சான் சடாட்சரத்தின் சீடருள் என்னை தவிர்த்தால், இளையதோழர் மட்டும்தான் இயக்கத்தில் இருந்த ஆள்.

தோழர் கவியன்பு கூட ஒரு பழைய போராளிதான். ஆனால், அவர் இயக்கத்திலிருக்கவில்லை. ஈ.பி.ஆர்.எல்.எப் எனும் மாற்றியக்கத்தில்த்தானிருந்தார்; என ஒருவர் சொன்னார். நான் ஆச்சரியமாக அதனை கேட்டுக் கொண்டேன். ஆரம்பத்தில் இயக்கத்தினால் அவருக்கு பிரச்சனையிருந்ததெனவும், தோழர் சான்சடாட்சரத்திற்கு புலனாய்வுத்துறையிலுள்ள சில பெரியவர்களை தெரிந்திருந்ததினால் வெட்டியாடப்பட்டதாகவும் சொல்கிறார்கள். இயக்கக் காலம் பற்றி கேட்கும் சமயங்களில், அது தன் பதின்மங்களில் கண்ட கெட்ட கனவொன்றும், அது ஆயுதங்களை மோகிக்கும் வயதென்றும் இப்பொழுது சொல்கிறார்.       ‘கனவிலுதித்த ஏ.கே 47 என்னை தெருவிலிறக்கியது. நானும் அதனை தொடர்ந்தேன். தூக்கத்தில் மோகினியை தொடருமொருவனைப் போல’ என ஒரு கவிதை கூட எழுதியிருக்கிறார். இருண்மையான வார்த்தைகளைக் கொண்டு இந்தக் கவிதை எழுதப்பட்டுள்ளதாகவும், இருண்மை கலைந்தால் இயக்கம் நிச்சயம் தன்னை மண்டையில் போடுமென்றும் பயந்தபடி சொன்னார். இந்த வரிகளில் என்ன கவித்துவமிருக்கிறது என்பதைப் போலவே இதிலுள்ள இருண்மையையும் என்னால் இறுதிவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

 

பின்னாளில் மனம்மகிழத்தக்க சங்கதியொன்று நடந்தது. அவர் ஒரு இலக்கியக் கூட்டத்தில் உரையாற்றும் பொழுது மாத்தேயு, ஜேசேப்பு முதலான தன் முதன்மையான பன்னிரண்டு சீடருள் ஒருவனாக என்னையும் பகிரங்கப்படுத்தினார். கல்வி வேள்வி முதலானவற்றை கற்பதிலிருந்த எனது ஆர்வம் அவரை உவகை கொள்ளச் செய்திருக்க வேண்டும்.

 

இந்த நாட்களில்தான் நான் ஜீவாவை காதலிக்க ஆரம்பித்திருந்தேன். பெரும்பாலான காதல்கள் உருவாவது போலவே அதுவும் உருவாகியிருந்தது. காரணகரியங்களெதுவுமிருக்கவில்லை. அவள் மிகுந்த ஏழைக்குடும்பத்தை சேர்ந்தவள். வேலையின் நிமித்தம் யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிக்கு வந்திருந்தாள். வேலையிடத்தில் எழுதுவதற்கு பேனையில்லை என்றாலும் என்னிடம்தான் வந்தாள். அன்றைய திகதி மறந்தாலும் கேட்க என்னிடம்தான் வந்தாள். அப்படித்தான் அவளுடனான அறிமுகம் ஆரம்பித்தது. இந்த அறிமுகம் இறுக்கமாக தன்னுடைய திகதி மறந்தாலும் என்னிடம்தன் கேட்டாள். நகரிலிருந்த ரெஸ்ற்ரோரன்டுகளில் இருவரும் அடிக்கடி உணவருந்தச் சென்றோம். ஒருநாள் ரெஸ்ற்ரோரன்ட் முதலாளி கேட்டான், ‘தம்பி..ஆருது..உம்மட தங்கச்சியோ’ என. நான் இல்லையென்றேன். ‘கவனம் தம்பி.. கலியாணம் செய்ய முதல் இப்பிடிக் கூடித் திரிஞ்சால் கனபேருக்கு கண்ணுக்க குத்தும். காவல்த்துறை கேசுமாகும் கவனம்’ என்றான். அவனது கதை பெரிய புதினமாகயிருந்தது.

 

அவளை எனது நண்பியென எனது நண்பர்களிற்கும் அறிமுகம் செய்து வைத்தேன். ஆரம்பத்தில் பல நண்பர்களிற்கு இந்த வார்த்தை புரியவேயில்லை. ‘லவ்வரா’ என திருப்பி இரகசியமாகக் கேட்டனர். நான் மறுத்து, ‘இல்லை.. பிரண்ட்’ என்பேன். ஒருவனிற்கு அதுவும் விளங்கவில்லை. அவள் பார்க்காத சமயம் கண்ணடித்து மெதுவாக கேட்டான் ‘மற்றதோ’ என. இதற்குப் பின்புதான் எனக்கும் அந்த வார்த்தையில் குழப்பம் வரத்தொடங்கியது.
தோழர் சான் சடாட்சரத்திற்கும் அவளை அறிமுகம் செய்து வைத்தேன். மற்றவர்களை விடவும் அவர் அவளுடன் அதிகம் ஒட்டிவிட்டார். கொஞ்ச நாளின் பிறகு அவளை தன் மகளெனப் பகிரங்கமாகவே உரிமை கொண்டாடவும் ஆரம்பித்தார். அவளுக்கும் அதில் பிரச்சனையிருக்கவில்லை. அவளது தகப்பன் சிறுவயதிலேயே இறந்துவிட்டார். அவர் பற்றிய நினைவு மங்கலாகவே அவளிடமிருந்தது. அவளது இரண்டு வயதில் அவரைப் பறிகொடுத்திருந்தாள். அவளை மடியில் உட்காரவைத்து  விளையாடிக் கொண்டிருந்த சமயம் ஏதோ ஒரு இயக்கம் வந்து அவரைக் கூட்டிச் சென்றதாம். வந்த பொடியள், தமிழ் கதைத்தார்கள், ஆயுதங்கள் வைத்திருந்தார்கள் என்பதற்கு மேலதிகமாக அந்தச் சம்பவம் குறித்தோ, அவர் குறித்தோ அவளிற்கெதுவும் தெரிந்திருக்கவில்லை. காரணம், அதன் பின்னர் அவர் வீட்டிற்கே திரும்பியிருக்கவில்லை.
ஆரம்பத்தில் அவளின் மீது எனக்கிருந்த அனுதாபம் படிப்படியாக காதலாகிக் கொண்டிருந்ததை எதுவும் செய்ய முடியாமல் என்னை நானே வேடிக்கை பார்த்தபடியிருந்தேன். அப்பொழுதுதான் காதல்க்கவிதைகளை எழுதவும் ஆரம்பித்திருந்தேன். அந்த எழுத்துக்களிலிருந்து அவள் மீதான தாபம் உருகி வழிந்திருந்ததாக பலர் சொன்னார்கள். எனக்கும் அது உண்மை போலவேபட்டது.

 

ஒருநாள் தோழர் சான்சடாட்சரத்திடம் அவளை காதலிக்கும் விசயத்தை சொன்னேன். கண்களை மூடி மிக அமைதியாக இருந்தார். சிறிய அமைதியின் பின், ‘இப்பிடித்தான் ஒருக்கால் கார்த்திகேசு மாஸ்ரரிட்டயும் ஒருத்தன் தன்ர லவ்ப் பிரச்சனையை சொன்னான்……..’ என ஆரம்பித்தார். அவள் ஒரு வறிய பெண் என்ற அனுதாபமா அல்லது அவளது அழகா? எதற்காக அவளை காதலிக்கிறாய். இப்பிடித்தானடா இன்டைக்கிருக்கிற அவளுகளின்ர தோல் மினுப்பினுப்பை பார்த்து அலைவியள். நாளைக்கு தோல் சுருங்கினாப்பிறகு என்ன செய்வியள்? அவளின்ர தோலும் சுருங்குமடா. வடிவில்லாத ஒருத்தி ஏழையாக இருந்தால் காதலிப்பியா? இப்பொழுது முக்கியம் காதல்ல. புரட்சி. அதற்குத் தேவையான அலுவல்களைப்பார் என ஆவேசங் கொண்டு கதைத்தார். அவர் இப்படி இடக்குமிடக்காக கதைப்பார் என நான் எதிர்பார்க்கவில்லை. எனக்கும் கோபம் வந்தது.

 

‘நீங்கள் என்னத்துக்கு லீலாக்காவைக் கலியாணம் கட்டினீங்களோ அதுக்குத்தான் நானும் கட்டப் போறன். அழகா வறுமையா என்டதை அறியிறதென்டால் உங்கட கொம்மியூனிஸ்ற் பார்ட்டிகாரரை கொண்டு ஒரு பட்டிமன்றம் வைச்சுப்பாருங்கோ. உங்களுக்கு உதுகள்தான் லாயக்கு’ எனச் சொல்லிவிட்டு அவரது வீட்டைவிட்டு வெளியேறினேன்.

இதன் பின் ஒரு நாள்த்தன்னும் அவரது வீட்டு வாசல்படியை மிதித்திருக்கவில்லை. அப்படியொரு சபதமும் எடுத்திருக்கவில்லை. அந்த நேரம் கோபத்தில் அப்படியொரு முடிவுடனிருந்தேன். இப்பொழுது போவதில் எந்தப்பிரச்சனையுமில்லை. ஆனால், இன்றும் அவரது வீட்டக்காரர்களே அந்த வீட்டுப்படியை மிதிக்க முடியாத துயரம் நிலவுகிறது. காரணம் அந்த வீடிருக்கும் பகுதி இன்னமும் சனங்கள் குடியிருக்க அனுமதிக்கப்படவில்லை. இந்த மோதல்க்காலப்பகுதியில் அவரும் எனது முகத்தைப்பார்த்து ஒரு வார்த்தை பேசினாரில்லை. இருவரும் வன்மங் கொண்டலைந்தோம்.

 

ஆனால் யுத்தம் வேறு விதமாக நடந்தது. இலக்கியக்கூட்டங்களிலும் மேடைகளிலும் இருவரும் பூடகமாக ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசினோம். ஆறுமாதம் காட்டிற்குள் அடிப்படை ரெயினிங் எடுத்தது ஒன்றே இலக்கியம் பேச தகுதியாகுமா என அவரும், தாடி வளர்தவனெல்லாம் சேகுவேராவா என நானும் பேசினோம். இரண்டிற்கும் கூட்டத்திலிருந்தவர்கள் கைதட்டினார்கள். ஒருவர் பற்றிய செய்தியை ஒருவருக்கு, இடையில் நின்ற நண்பர்கள் காவிச் சென்றபடியுமிருந்தனர். ஒரு ‘சின்னப்பொடியனை’ எதிரியாக்கி இவ்வளவு மினைக்கெட்டு மோதவேண்டியதில்லை என விடுதலைப்புலிகளின் பிரதேச அரசியல்ப் பொறுப்பாளரொருவர் அவரிடம் நேரடியாகவே அபிப்பிராயப்பட்டதாகவும் தகவலுண்டு. விடுதலைப்புலியுறுப்பினர்கள் எதைச் சொன்னாலும் அந்தக்கருத்தை அவர் ஏற்றுக் கொண்டுவிடுவதுண்டு. அந்தப் பிரதேசப் பொறுப்பாளரின் அறிவுரையைக் கேட்டபின், மேடைகளில் என் மீதான தாக்குதல்களைக் குறைத்திருந்தார். ஆனால் நான் அப்படியல்ல. தூக்கிய வாளை அவ்வளவு சீக்கிரம் இறக்குவதேயில்லை.

 

அவருடனான மோதலைக் கைவிட்டு ஒற்றுமையாகும்படி சமாதானம் செய்ய சில நண்பர்கள் வந்தனர். நான் எதிரிகளை அவ்வளவு இலேசில் மன்னிப்பதில்லை என்ற நிலைப்பாட்டை மாற்றத் தயாராகயிருக்கவில்லை.
‘கோபத்தில கதைச்சால் திருப்பி வந்து மன்னிப்பு கேக்கிறது தானே. அவன் கேக்க மாட்டான். அவனுக்கு அப்பிடியே இயக்கப் புத்தி. இப்ப அவனிட்ட ஒரு துவக்கைக் குடுங்கோ. அவன் முதலாவது என்னைத்தான் சுடுவான். ஒரு மட்டுமரியாதையில்லை. தலைப் புத்திதானே வால் மட்டுமிருக்கும்’ என்று அபிப்பிராயப்பட்டவர், ‘ஐயோ… இப்பிடி பழிவாங்கிற எண்ணங்களோடயும் சிந்தனைகளோடயும் எங்கட இளைய சந்ததி வளருதே’ என அடிக்கடி புலம்பிக் கொண்டிருப்பதாகவும் பலர் சொல்லியிருந்தனர்
ஜீவா இறந்துவிட்டாள் என்ற தகவல் கிடைத்ததும் ஒரு இரவு முழுவதும் தூங்காமல் அரற்றியபடியிருந்தாராம். இதனை ஒருவன் சொன்ன போது, ‘அவற்றை அக்டிங்கும் அவரும். உந்த கொம்மியூனிஸ்ற்காரர் எல்லாரும் நடிப்பு மன்னனுகள். சிவாஜியை வெல்லுவாங்கள்’ என்றுவிட்டுப் போய்விட்டேன்.

 

நான் தன்னைப் போடத் திரிவதாக அவரும், இயக்கத்திடம் எங்காவது வகையாக என்னை மாட்டிவிட அவர் திரிவதாக நானும் காண்பவர்கள் எல்லோரிடமும் கதைத்துத் திரிந்தாலும் இதையெல்லாம் மறக்கவல்ல ஒரு காலம் வந்தது. அப்பொழுது இருவரும் கண்ட இடத்தில் கட்டிப்பிடித்துக் கொண்டோம். அது முள்ளிவாய்க்கால் பாதுகாப்பு வலயத்திற்குள் நடந்தது. ஒருநாள் வலைஞர்மடம் சேர்ச்சிற்குப் பக்கத்திலிருந்த அகிலனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தேன். உயிர் தப்புவதற்கு செய்யும் முயற்சிகள் போக, எஞ்சிய பொழுதுகளைக் கழிக்க நானும் அவனும் அடிக்கடி சந்தித்துக் கதைத்துக் கொண்டிருப்பதுண்டு. சேர்ச்சிற்குப் பக்கத்தில் ஒரு தெரிந்த முகம் நிற்பது மாதிரியிருந்தது. சட்டென யாரென்று தீர்மானிக்க முடியில்லை. மீண்டும் திரும்பிப் பார்க்க, அந்த உருவம் என்னை நோக்கி நடந்து வரத் தொடங்கியது. நான் நின்றேன். கிட்ட வரத்தான் தெரிந்தது, அது தோழர் சான் சடாட்சரம். அவரது தோற்றம் அதிர்ச்சியளிப்பதாகயிருந்தது. தலைமுடியும், தாடியும் நீண்டு வளர்ந்து, ஒழுங்கில்லாமல்க் கிடந்தது. சேர்ட் மேல்ப் பொத்தான்கள் போடப்பட்டிருக்கவில்லை. அவரை எப்படி எதிர்கொள்வதென்று தெரியாமல், நான் தலையைக் குனிந்து கொண்டு நிற்க, மெதுவாக என்னைக் கட்டிப்பிடித்தார். நானும் கட்டிப்பிடித்தேன்.
ஜீவாவைக் கேட்டு அழுதார். அவளிற்கு சாகிற வயதா. ஒரு வண்ணாத்திப்பூச்சி மாதிரி திரிந்தாளே. நானிருந்திருந்தால் அவளைக் கூட்டிக் கொண்டுபோக விட்டிருக்கவேமாட்டன். உங்களையெல்லாம் தள்ளி வைத்திருந்தேனே. அந்த நேரம் காலம் எங்களை பிரிச்சிட்டுது. என்ர புத்தி எங்க போனது என தலையில் அடித்துக் கொண்டிருந்தார். அதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. எனக்கும் துயரம் தாளமுடியாதிருந்தது. சிறிதுநேரம் மௌனமாக அழுது கொண்டிருந்துவிட்டுச் சொன்னார்.
‘என்ர மகளையும் ரெண்டு மாசத்துக்கு முன்னம் பிடிச்சிட்டாங்கள். அதுக்கு முதல்க் கிழமைதான்ரா அவளுக்கு விருப்பமில்லாமல் ஒரு கலியாணம் செய்து வைச்சனான். கடைசியில என்ன செய்தும் பிள்ளையை காப்பாத்தேலாமல்ப் போச்சுதேடா… அவளின்ர வாழ்க்கையைப் பாழாக்கிப் போட்டனடா’. அவர் குலுங்கிக் குலுங்கி அழுது கொண்டிருந்தார். நான் தரையில்க் கோடுகளை வரைந்து கொண்டிருந்தேன்.
என்ன பேசுவதென்றே தெரியாமல் வெகுநேரம் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தோம். கசப்புகளும், வனமங்களும் மெதுமெதுவாக கரைந்தபடியிருந்தன. அவரது மடியில் விழுந்து மனசெல்லாம் பாரமாய் நிறைந்திருக்கும் துயரம் கரையுமட்டும் அழவேண்டும் போலிருந்தது. சிரமப்பட்டு என்னைக்கட்டுப்படுத்திக் கொண்டிருந்தேன்.

 

வாழ்க்கை பற்றிய தெளிவுகளையும் அறிதல்களையும் இது போன்ற நாட்களே நமக்கு கற்றுத் தருவதாகவும், அபிப்பிராய பேதங்களும் கருத்து மோதல்களும் ஐந்து சதத்திற்கும் பெறுமதியற்றவை என்றும், எங்களது சவக்குழிகளினருகில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந் நாட்களில் பழைய சம்பவங்களிற்கெல்லாம் வருந்துவதாகவும் ஆண்டவர் தனது பாவங்களை மன்னிக்க வேண்டுமெனவும் வானத்தைப் பார்த்து சொன்னார். சிறிய மௌனத்தின் பின் என் கைகளை பிடித்துக் கொண்டார். தனக்கு இன்னும் சிறிது காலம் வாழ வேண்டுமென ஆசையிருப்பதாகவும், இப்படி வாழக்கிடைக்கும் காலத்தில் பாவங்களிற்கு பிராயச்சித்தம் செய்ய வேண்டுமென்றும் சொன்னார். தன் மீது கோபமிருக்கிறதா எனக் கேட்டார். நான் மறுத்தேன். இந்த நாட்களில் எனக்கு யார் மீதும் கோபமிருக்கவில்லை.

 

பிழையாக நினைக்கவில்லையெனில் தன்னுடன் சேர்ச்சிற்கு வர முடியுமா எனக் கேட்டார். நான்கூட இந்த வாரத்தில் மட்டும் மூன்று தடவைகள் இந்த சேர்ச்சிற்கு சென்றுவிட்டேன். அவரிடம் இதையெல்லாம் சொல்லவில்லை. செல்வதில் எந்த ஆட்சேபணையுமில்லை என்று மட்டும் சொன்னேன். பக்கத்திலிருந்த கடையில் இரண்டு மெழுகுவர்த்தி வாங்கிக் கொண்டு வலைஞர்மடம் செபமாலை மாதா கோயிலிற்குப் போனோம். தேவாலய வளாகத்திற்குள் நூற்றுக்கணக்கான பொடி பெட்டையள் தங்கியிருந்தனர். பாதிரிகளின் கண்காணிப்பிலிருந்த அந்த வளாகத்தில் மட்டும் இயக்கம் இன்னும் கைவைத்திருக்கவில்லை. ஏதோ ஒரு நம்பிக்கையில் இத்தனை பேரும் இந்த வளாகத்திற்குள் தங்கியிருக்கிறார்களே என்பதை நினைக்க ஆச்சரியமாகவுமிருந்தது. நிச்சயம் யேசுகிறிஸ்து மீதான நம்பிக்கையாக இருக்காது. பாதிரிகளின் மீதான நம்பிக்கையாக மட்டுமேயிருக்குமெனப்பட்டது.

 

தலையைக் குனிந்தபடி சேர்ச்சிற்குள் உள்நுழைந்தார். வளாக வாயிலைக் கடந்து உள்நுழைந்ததும், எண்ணற்ற பொடி பெட்டையளைக் கண்டோம். வீடுகளில் வைத்திருக்க முடியாமல் பெற்றோர் பிள்ளைகளை இங்கேதான் தங்க வைத்திருந்தனர். சிறுசிறு கூட்டங்களாக மரங்களுடனும், கட்டடங்களுடனும் சாய்ந்திருந்து வானத்தை வெறித்தபடியிருந்தனர். இளவயதான பொடியள் கொஞ்சம் விளையாட்டுத்தனமாகயிருந்த மாதிரித் தெரிந்தது. பெண்களைப் பார்க்கும் பொழுது அப்படித் தெரியவில்லை. எல்லோரது முகங்களிலும் ஏக்கம் பரவியிருந்தது. பெரும்பாலானவர்கள் தலையில் துவாயையோ, சாரத்தையோ போட்டு தங்களை மறைக்க முயன்று கொண்டிருந்தார்கள். ‘ஐயோ..எங்கட பிள்ளையள்.. எங்கட பிள்ளையள்.. எங்களைக் கண்டே எங்கட பிள்ளையள் பயப்பிடுதுகள்…. ஐயோ..ஆண்டவரே காப்பாற்றும்’ என முணுமுணுத்தபடி வந்தார்.

 

அவர் யாருக்கோ பயப்பிடுவது போல எனக்குப்பட்டது. குற்ற உணர்ச்சியாக கூடயிருக்கலாம். படியேற முடியாமல் தயங்கித்தயங்கி நின்றார். அவரைப் பார்க்க, அடுத்த கணத்தில் குற்றமொன்றைச் செய்யப் போவரைப் போலிருந்தது. அந்த நிலையில் அவரைக்காண்பது மிகுந்த சங்கடமாகயிருந்தது. தேவாலய வளாகத்திலிருந்த சனங்களில் ஒருவரது முகத்தைக் கூட அவர் பார்க்கவில்லை. தோவாலயவாசலில் நிமிரிந்து பார்த்தார். ஒரு மாதா சொரூபமிருந்தது. நடுங்கும் குரலில் ‘தாயே’ என்றார்.

 

படியேறி உள்நுழையும் பொழுது சொன்னார். ‘நாப்பது வருசத்துக்குப் பிறகு’. தேவாலயத்தினுள் பெரிய அளவில் சிலுவைப்பாதைப் படங்களிருந்தன. சிலுவை சுமந்தபடி யேசுகிறிஸ்து செல்வது மாதிரியும் வழியெல்லாம் அவரது இரத்தம் சிந்தியிருப்பது மாதிரியுமான ஒரு படத்தைப் பார்க்க, ஏனோ அது தோழர் சான் சடாட்சரம் என்று தோன்றியது. அவரை பார்க்ககூட யேசு கிறிஸ்து மாதிரியே தோன்றியது. எதேச்சையாக திரும்பிப் பார்த்தேன். நடந்து வந்த வழியெல்லாம் அவரது கண்ணீர்துளிகள் சிந்தியிருந்தன.

௦௦௦௦

 

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment