Home » ஆசிரியர் குறிப்பு » கொலைகளின் அரசியல்! -ஆசிரியர் குறிப்பு-

 

கொலைகளின் அரசியல்! -ஆசிரியர் குறிப்பு-

 

 

இலங்கை மண்ணில் யுத்தத்தின் வரமாக விளைந்த கொலைகள்    கொஞ்ச நஞ்சமன்று,     அது பல்கிப்பெருகிறது.அண்மையில் நடந்த “நிமலரூபன், டெல்ருக்ஷன் “ஆகியோரின் சிறைச்சாலைக் கொலைகள் இன்னும் நாடு முன்னோக்கிப் பயணிக்கவில்லை என்பதை நன்றாகவே நிரூபிக்கின்றன. அரசியல் எதிர்ப்புணர்வை எதிர்கொள்வதற்கு கொலைகளைத் தவிர்த்து வேறு மார்க்கமொன்றை  இலங்கை அரசு அறியவேவில்லை. அரச இயந்திரம் பழகிய வழிகளிலேயே தொடர்ந்தும் பயணிக்கிறது. வரலாற்றிற்கு எதிர்நிலைப் பயணம் இது. அனைத்து மக்களுக்கும் பொறுப்பாக இருக்கின்ற, ஜனநாயக விழுமியங்களை வளர்த்தெடுக்க விரும்புகின்ற எந்த அரசும் இப்படிச் செயற்பட முடியாது என்பதனை துணிந்து கூறமுடியும்.

இதேவேளை இந்தக் கொலைகளை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டே  அரசியற் கட்சிகளும் தலைவர்களும் துடித்தெழுந்து  கொலைகளுக்கு எதிரான கடைகளைத் திறக்கின்ற போது தங்களை ஒருமுறை உரசிப் பார்த்துக் கொள்ள வேண்டிய தேவையும் உள்ளதை மறந்து விட முடியாது. கொலைக்குப் பலியான பிணங்களை வைத்து   விற்பனைப் பொருளாக்குகின்ற ஊடகங்களும் ,தங்களது கடந்த கால ஊடக அறத்தினை மீள் நினைவிற்கு கொண்டுவருதல் வேண்டும்.

தன்னை எதிர்க்கின்ற தரப்புகளை ஜனநாயக வழிமுறைப்படி அணுகுவதை விட கொலைகளின் வழியாக அணுகவே அரசாங்கமும் விரும்புகிறது. தொடர்ந்தும் பேணப்படும் அச்சுறுத்தலின் வழியாக, பயத்தின் மூலம் உருவாக்கப்படும் உளவியலின் வழியாகவே தன்னைப் பலப்படுத்தவும் பாதுகாக்கவும் அரசு முயற்சிக்கிறது.  அதுவே அதன் இருப்பாகவும் இன்று மாறிவிட்டது.போரில் முழுவதுமாக தோற்கடிக்கப்பட்ட விடுதலைப்புலிகளும் அன்று இந்த வழிமுறையையும் தன்மையையும்  கடைப்பிடித்து செயற்படுத்துபவர்களாகவே இருந்தனர்.

தொடரும் இந்தக் கொலைகளின் அரசியலையும், அதன் தொடர்ச்சியான அறவீழ்ச்சியையும் கொணர்ந்து சேர்த்ததில் அரசியல் தலைமைகளுக்கும் ஊடகங்களுக்கும் பெரும் பங்குண்டு.

அரசியல்வாதிகள் தொடக்கம் ஊடகவியலாளர்கள் வரை கொலைகள் விழுகின்ற போது அக்கொலைகள் யாரால் செய்யப்படுகிறது என்பதனை வைத்துக் கொண்டே ஆதரித்தார்கள் ,எதிர்த்தார்கள் அல்லது மௌனமாக இருந்தார்கள். பல படி மேலே சென்று இக்கொலைகளுக்கான நியாங்களை சொன்னார்கள்,எழுதினார்கள்.கொலைகளின் அரசியலே கொலைகளை மேலும் ஊக்கப்படுத்தியது.தாங்கள் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருப்பதற்காகவும்,அதிகாரத்தினை அடைந்து கொள்வதற்காகவும் ,தமது இருப்பினை பாதுகாத்துக்கொள்வதற்காகவும் கொலைகள் இந்த தரப்பினருக்கு  ஏதோவொரு வகை அர்த்தத்தில் தேவைப்பட்டது..இன்றும் தேவைப்படுகிறது.

கொலைகளைக் கொண்டாடவும் கொலைகளைத் தொடரவும் ,கொலைகளை எதிர்ப்பதிலும்தான் இலங்கையின் ( கொலை) அரசியல்  செழித்து வளர்ந்து  கொண்டிருக்கிறது.இந்த கொலை அரசியலின் தேவை உள்நாட்டு அளவில் மட்டுமல்ல, இந்திய,தமிழக அரசியல்வாதிகள் தொடங்கி சர்வதேச அமைப்புகளுக்கு வரை தேவையாகி விட்டுள்ளது.

போர்க்காலக் கொலைகளைச் சிலர் கொண்டாடுகின்றனர். போர்க்காலக் கொலைகளை நினைவூட்டுவதன்மூலம் அரசியலை நடத்தலாம் என நம்புகின்றனர் இன்னொரு தரப்பினர். எதைப் பற்றிய புள்ளிவிவரங்களையும் விட கொலைகளைப்  பற்றிய புள்ளி விவரங்கள் மட்டும் தாராளமாக ஒவ்வொருவரிடமும் உள்ளன. சிந்தப்படும் இரத்தத்தின் பெறுமதியை ஒவ்வொருவரும் நன்றாகத்தான் உணர்ந்திருக்கிறார்கள்? அந்த இரத்தத்தை எப்படி விற்பனைப் பண்டமாக்க முடியும் என்று நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள். உயிர் ,மயிரையும் விடப் பெறுமதி குறைந்து விட்டது. இன்னும் ஒரு கொலை விழாதா? என்ற ஏக்கமே இத்தகைய தரப்பினரிடம் உள்ளது.  கொலைகளும் வன்முறையும் ஒடுக்குமுறையும் இல்லையென்றால், தீ எரியவில்லை என்றால்… அடுத்த கட்டம் என்ன என்று திகைப்படைகின்றன இந்தத் தரப்புகள்.

ஆனால், இப்படிக் கொலைகளை அதீதமாக விரும்பினால், அது எங்கே கொண்டுபோய் விடும் என்று வரலாற்றுக்குத் தெரியும். அது மயானமன்றி வேறிடமில்லை. கொலைகளை ரசிக்கும், அதை உள்ளுர விரும்பும் அனைவரும் அவர்களே அறியாமல் கொலைகளாற் சுற்றி வளைக்கப்பட்டிருக்கின்றனர். கடந்த காலத்தில் கொலைகளை விரும்பியவர்கள், அதை வளர்த்தவர்கள், அதற்கு ஆதரவளித்தவர்கள் யாருமே கொலைகளிலிருந்து தப்பவில்லை. அல்லது அதன் சுற்றிவளைப்பில்,அச்சத்தில் இருந்து தப்பவில்லை.

தொடரும் (கொலை) அரசியலின் விளைவாக,இலங்கை சூழலில் இனமுரண்களும் சமூக முரண்களும் மேலும் அதிகரித்துச் சிக்கலடைந்துள்ளன. ஜனநாயகத்துக்கான அச்சுறுத்தல் எல்லா முனைகளிலும் எல்லாத் தளங்களிலும் கூர்ப்படைந்துள்ளது. இனங்களுக்கிடையேயும் மக்களுக்கிடையேயுமான ஐக்கியத்தினை ஏற்படுத்துவதற்கு கணிசமான அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும், ஊடகங்களும் ஊடகவியலார்களும் பெரும் தடையாக இருப்பதுடன் குரோதத்தினையும் முரண்களையும் ஊட்டி வளர்ப்பதில் முன் கையெடுத்து செயற்பட்டு வருவதினை ஒவ்வொரு கணத்திலும் காணக் கூடியதாக உள்ளது. சமூக வாழ்விற்கு பெரும் கேடான இப்போக்கு, நிலைமைகளை மேலும் சிக்கலாக்கி வருகிறது.

நெருக்கடி நிலையைத் தணிக்க முற்படுவதற்குப் பதிலாக மேலும் மேலும் அதைத் தீவிரப்படுத்துவதிலே அக்கறை காட்டப்படுகிறது.இருந்த சில பிரச்சினைகள் பல பிரச்சினைகளாக உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும் அவற்றைச் சிக்கலாக்குகின்றன. பிரச்சினைகளையும் முரண்களையும் மேலும் மேலும் அகலப்படுத்தியும் கூர்மைப்படுத்தியும் , அவற்றிலேயே தங்கள் இருப்பைத் தக்க வைத்து அவற்றில் உயிர்வாழ்வதே நோக்கமாக இருக்கிறது என்பதனை துணிந்து கூறக்கூடியளவு நம்முன் ஆதாரங்கள் உள்ளன.

இது சமூகங்களின் கையறு நிலைக் காலமா? அல்லது மனிதர்களின் ஆற்றல் சிதறடிக்கப்பட்ட அரசியலின் விளைவான செயலின்மையா? அல்லது கொலைகளையே அரசியலாகவும் வாழ்வாகவும் கொண்டிருக்கும் உளநோய்த் தாக்கத்தின் விளைவா? அல்லது சர்வதேச வலைப் பொறியில் சிக்கிய பேதமைத்தனமா? அல்லது இனவெறிக்குப் பலியாகிய அநீதியின் குழந்தைமைத்தனமா? என்பதற்கு நாம் எல்லோரும் சேர்ந்து பதில்களை தேட வேண்டிய காலகட்டமிது!

0000

இந்த கொலை அரசியலின் வழியாக துயர் கொண்டுள்ள மனிதர்களின் பாடுகளையும்,அதன் அனைத்து விளைவுகளையும் பதிவாக்கவே நாம் விரும்புகிறோம். சார்பு அல்லது எதிர்ப்பு என்கிற கொலை அரசியல் அடையாளைத்தினையும்,தியாகி அல்லது துரோகி என்கிற கொலைவாளையும் நாம் பழிந்துரை செய்கிறோம்.முற்றாக நிராகரிக்கிறோம். இந்த (கொலை)அரசியல் இன்னும் எதுவரை?

ஆசிரியர் குழு

௦௦௦௦

 

34 Comments

 1. ஜெரா says:

  கொலைகள் மட்டும் இருந்திராவிட்டால் இந்தப் பிரதி பிறந்திருக்குமா? மனிதனால் நடத்தப்படும் அனைத்தும் கற்றுத் தேர்வதற்கான அனுபவப்பாடங்கள் என்று பார்த்தால், நாம் யாரும் இன்னமும் பரீட்சைகளில் சித்திபெறத் தவறியவர்கள்.ஊடங்களில் அந்தப் பிணங்கள் மட்டும் விற்பனையாகியிராவிட்டால் இன்று இந்தக் கட்டுரையில் உதாரணம் காட்டுவதற்கு நிமலரூபனும், டிருக்சனும் இருந்திருக்கமாட்டார். நம் அரசியல்வாதிகளுக்கு(ஈழம்) பழியாகும் அந்தப் பிணங்களைக் கூட சரியாகப் பயன்படுத்தத் தெரியவில்லை என்று குறிப்பிடலாமே தவிர, அவர்கள் விற்பனையாக்கி லாபம் அடைகிறார்கள எனக் குறிப்பிட முடியாது.ஏனெனில் அவர்கள் குறித்த பிண ஊர்வலத்தில் கலந்து கொள்வதோடும், தமக்குத் தெரிந்து ரிப்போட்டர்களுக்கு பணம் மற்றும் சலுகைகளைக் கொடுத்து புகைப்படம் எடுத்த மறுநாள் பத்திரிகைகளில் வரச் செய்வதோடும் கொலை அரசியலில் அல்லது பிண அரசியலில் திருப்தி கண்டுவிடுகின்றனர். அதனை வைத்து நீண்ட அரசியல் செய்வதற்கெல்லாம் அவர்களால் முடியாது. அந்தளவுக்கு அரசியல் ஞானமுடையவர்களாக கணிப்பிட முடியுமோ தெரியவில்லை.ஒருஇனம் தொடர்ந்தும் கொலை அரசியலையே செய்து கொண்டிருக்கும் போது, கொலை செய்யப்படும் இனம் கட்டுரையின் படி இயங்குவது எவ்வளவு தூரம் சாத்தியமாகும்?

 2. கொலை அரசியலுக்கு முடிவு கிடையாது உலகம் நிலைத்திருக்கும்வரை அது தொடரும். உலகின் எந்த நாடுகளும் அதற்கு விதிவிலக்காகிட முடியாது. ஆட்சியதிகாரம், செல்வம், பாலியல் மோகம், தன்னை நிலைப்படுத்தல் என்ற அடிப்படைகளில் தொடரும் கொலைகள் எந்தச் சட்டத்தாலும் தடுக்க முடியாதவை. யார் எதிர்த்தாலும் யார் மறுத்தாலும், யார் பழிந்துரைத்தாலும் கொலைகள் தொடர்வதை எப்போதும் நிறுத்த முடியாது, ஒவ்வொரு கொலைக்குப் பின்னாலும் ஒவ்வொரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது. சிலருக்கு சரியாகவும் சிலருக்குப் பிழையாகவும் படுகிறது. இந்த எழுத்துக்கள் ஒரு ஆதங்கத்திற்குச் சரி மற்றபடி எதையும் மாற்றிட வலுவற்றவை.
  உலகில் விடுதலை வேண்டிப் போராடும் எல்லா ஆயுதக் குழுக்களும் தாம் செய்யும் கொலைகளை வீரமிக்கதாகக் கருதுகின்றன. அது போல அரசாங்கங்கள் அதே கொலையை அதிகாரத்தின் நுனியில் செய்கின்றன அவற்றை உலக அளவில் நியாயப்படுத்த ஆயிரமாயிரம் காரணங்கள் அரசுகளுக்குண்டு. வீடு,கிராமம்,நகரம், நாடு என்று எல்லைகள் கடந்து பயணிக்கும் கொலைப்படத்தினை யாரால் நிறுத்த முடியும்?
  அரசுகள் செய்யும் கொலைக்கு சர்வதேச அங்கிகாரம் உண்டு உலகின் மிகப்பெரிய நிறுவனம் ஐக்கிய நாடுகள் சபை கூடக் கைகட்டிப் பார்த்திருக்க வேண்டுமே தவிர எதுவும் செய்துவிட முடியாது ஏதாவது எளிய நாடுகளும் நபர்களும் சிக்கிக்கொண்டால் கச்சை கட்டிக்கொண்டு நியாயாம் செய்யப்போய் தமது பலத்தை நிரூபித்துக் கொள்ள மட்டுமே முடியும்.
  சண்டியர்களின் கரம்தான் ஓங்கியிருக்கும், சண்டியர் சொல்வது நீதி நியாயம் தர்மம் எல்லாம். ஆக எழுத்ததாளர்கள் வேடிக்கை பார்க்கலாம் அல்லது மனங்குமுறி இப்படி ஒரு பத்தி அல்லது குறிப்பு ஒரு புத்தகம் இப்படி ஏதாவது எழுதலாம். அப்படி எழுதி அது சிறந்த படைப்பாகிற போது அதற்கு அரசாங்கம் என்ற ஆயிரமாயிரம் கொலைகளின் பங்காளி கொடுக்கும் விருதையும் பணத்தையும் பல்லிளித்துக் கொண்டு வாங்கி போட்டோவுக்கு போஸ் நிலைதான் அந்த எழுத்தாளனுக்கு…
  நமது தேசம் கொஞ்சம் வித்தியாசமானது கொலைகள் எப்படிப்போனாலும் பழியைப் போட்டு குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவதற்கு ஆயிரம் அப்பாவிகள் இருக்கிறார்கள்
  எல்லாம் எது வரை? அது உலகம் நிலைத்திருக்கும் வரை.
  முஸ்டீன்
  simproduction2002@gmail.com

Post a Comment