Home » இதழ்-05 » கவர்ச்சிக்கன்னிகளும் பாயும் தூசணங்களும்………….

 

கவர்ச்சிக்கன்னிகளும் பாயும் தூசணங்களும்………….

 

 

– இளமொட்டைச் சிறுபுழுதி

 

எப்போதும் என்னுள் விழிப்பாய் இருக்கும் ஒரு சோம்பேறியை எதுவரைதான் பொறுத்துக்கொள்ள முடியும்? ஏதாவது எழுதித்தான் ஆகவேண்டும் என்று கவுண்டமணியைக் கிணற்றுக்குள் தள்ளிவிட்டது போன்ற ஒரு கட்டத்தில் ஆத்மாநாம் கவிதை ஞாபகம் வந்தது. பொருள் சேர்த்து வார்த்தைகளாய்ச் செய்து ஒவ்வொரு வாக்கியத்திற்கும் கமா மற்றும் முற்றுப்புள்ளி வைத்து ஏதாவது சொல்லியாக வேண்டும் நமக்கேன் வம்பு.

 

அப்படியெல்லாம் இருக்க விட்டுவிடுகிறதா இந்த உலகம்? நட்பும் அன்பும் விரவிய உலகில்தானே நாமும் இருந்து தொலைக்கிறோம்! சயந்தனின் “ஆறாவடு” நாவலைப் படித்திருந்தார்கள் என்றால் யாரும் அவுஸ்ரேலியப் படகுப் பயணத்திற்குத் துணிய மாட்டார் என்று நண்பர் எழுதியிருந்ததைப் படித்தேன். நாவல்களுக்குள்ளிருந்து அது சொல்லும் ஆதார பிரச்சினைகளைக் கண்டுகொள்வது ஒரு கலைதான். நான் எப்பவும் படிக்கும், பார்க்கும், கேட்கும் எதிலும் பிரதான நரம்பைத் தவறவிட்டு வேறொன்றைப் பிடித்துத் தொங்குவேன். அதிலென்ன பிழையென்று மடக்கடியாகக் கேட்கவும் முடியாமல் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருப்பவன்.

பார்த்துக்கொண்டிருக்கும் சினிமாப் பாடல் காட்சியில் விஜய் த்ரிஷாவைத் தவறவிட்டு விடுவேன். பின்னணியில் பத்தாவதாக நின்று ஆடும் அந்த இடைசிறுத்த பெண்ணை இதற்கு முன் எந்தப் பாடல் காட்சியில் பார்த்திருக்கிறேன் என்று மனதை ஓடவிட்டிருப்பேன். ராம்கோபால் வர்மாவின் முதல் படமான ‘உதயம்’ பல வருடங்களுக்கு முன் பார்த்தது. அதுவும் அமலா, என் அதுவரைக்குமான கனவுக்கன்னிகளையெல்லாம் துரத்திவிட்டு அடாத்தாகக் குடியேறியிருந்த – இரகசியக் குற்றங்களை நான் நிறையச் செய்த – காலத்தில் பார்த்தது.

 

ரகுவரனின் பத்திருபது அடியாட்கள் ஒரு பஸ்ஸைத் துரத்திக்கொண்டு ஓடிவருவார்கள். சத்தியமாய்ச் சொல்கிறேன் அந்த ஓடும் பஸ்ஸில் ஏறித் தப்பிச் செல்வது அப்போதைய என் அமலாவா ,நாகார்ஜுனனா என்பது இப்போது சரியாக என் ஞாபகத்தில் இல்லை. ஆனால், அந்த பஸ் வேகமெடுக்கும்போது, துரத்திய அடியாட்களெல்லாம் ஒவ்வொருவராகப் பின்தங்கிவிட, ஒருவன் மட்டும் மிகுந்த விசுவாசத்தோடு சளைக்காமல் வெகுதூரம் பஸ்ஸைத் தொடர்ந்து ஓடிவருவான். அவன் போட்டிருந்த சிவப்புநிறச் சட்டை, கையில் இருந்த தடி, அந்த ஓட்டம், முகத்தில் தெரிந்த கடமையுணர்ச்சி இன்னும் எனக்கு மறக்கவில்லை. அதன்பிறகு அவனை, நான் பார்க்கும் படங்களில் துணைநடிகனாக எங்காவது வருகிறானா என்று தேடியிருக்கிறேன். கண்டதில்லை. நடிகனில் என்ன துணையும் முதலும் என்று கேட்டு, இம்முறை சிறந்த துணைநடிகருக்காக கொடுக்கப்பட்ட “பில்ம் பெயர்” விருதை வாங்க மறுத்த திலகன் உடனே ஞாபகத்துக்கு வருகிறார். அதைவிட்டு நான் ஆறாவடுவுக்குத் திரும்ப வேண்டும்.

 

“சண்டையென்று வந்துவிட்டால் என் துப்பாக்கியிலிருந்து ரவுண்ஸ்சும் வாயிலிருந்து தூசணங்களும் பாய்ந்துகொண்டே இருக்கும். ரவுண்ஸை அளவாகப் பாவிக்கச்சொல்லி இயக்கத்துக்குள்ளே விதிமுறையொன்றிருந்தது. தூசணத்திற்கு அப்படியொன்றும் இருக்கவில்லை.”….

“டைட்டானிக்கை அகிலாவோடு சோ;ந்து பார்க்க இவன் கொஞ்சக் காலத்திற்கு முன்னர் விரும்பியிருந்தான். ஒருநாள் அகிலாவிடம் கேட்டபோது அவளது வார்த்தைகளை இவனால் மறக்க முடியவில்லை. அவள் ஒரு சிணுங்கலோடும் நளினத்தோடும் சொன்னாள். ‘ஆளையும் ஆளின்ர ஆசையையும் பாரன்! அந்தப் படத்தில கெட்ட கெட்ட சீன் எல்லாம் வருகுதாம். அதுகளைப் பாத்துப் போட்டு வந்து என்னை ஒரு வழி பண்ண….’ இரவு முழுவதும் “என்னை ஒரு வழி பண்ண….“ என்ற அவளது சிணுங்கல் குரல் காதுகளுக்குள் கேட்டுக்கொண்டே இருந்தது.”….

நாவல் தொடங்கி இருபது பக்கங்களுக்குள் இந்த இரண்டு இடங்களும் வந்து விட்டன. “கணிப்புக்குரிய கதைஞன் ஒருவன் வந்துவிட்டான்” என்று சிவத்தம்பி மாதிரியும், “போய்ச்சேர்ந்தான் புதுமைப்பித்தன் வந்து நிற்கிறான் ஆறாவடு சயந்தன்” என்று விக்ரமாதித்யன் நம்பி மாதிரியும் சொல்லலாம் என்று தோன்றிவிட்டது.

 

“கனவுக்கன்னிகள்“ என்று மேலே எழுதியிருந்தது இத்தனை வரிகள் தாண்டிய பிறகும் நெருடுகிறது. பெண்களைப் பார்த்தால் நமக்கு ஏற்படும் கிளர்ச்சியை சொல்லாமலிருக்க வேண்டுமா. அதில் உண்மையில்லையே. வேண்டுமானால், ஆண்களிடம் ஏற்படும் கிளர்ச்சியை பெண்கள் வெளிப்படையாகச் சொல்ல முடியாதவாறு உள்ள சமூகநிலையை நாம் கண்டிக்கலாம் என்று பேசி, தோழி ஒருவரிடம் வாங்கிக் கட்டிக்கொண்டேன்.

எனக்கு அவர் எடுத்த வகுப்பு பின்வருமாறு இருந்தது. “ஆண்களுக்கு இதுமாதிரி அதீதமான அசட்டுக் கிளர்ச்சிகள் தோன்றுவதற்கு மரபுரீதியான காரணங்கள் இருக்கிறது. சமூக முதன்நிலையிலிருந்த பெண்ணை ஒடுக்கி இரண்டாம் பாலினராக்கிய பிறகு, திட்டமிட்டு காலகாலமாகப் பெண்ணின் அழகை வர்ணித்தும் மென்மையைப் புகழ்ந்தும் காமக்கிளர்ச்சியூட்டுபவளாகவும் கோடிக்கணக்கான வார்த்தைகளை எழுதி எழுதிப் பதிய வைத்துவிட்டார்கள். அப்படி உருவாகிவந்த மனதோடுதான் இப்படி ஓவராகக் கிளர்ச்சியடைந்து இன்னும் மானே தேனே அபத்தக் கவிதைகள் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். பெண்களுக்கு அப்படியான அபத்தமான கிளர்ச்சிகள் எல்லாம் எழுவதில்லை. அதையும் நீங்கள்தான் மிகையாகப் படங்களில் காட்டிக்கொண்டிருக்கிறீர்கள்.”

கொஞ்சநேரம் “ஙே’ என்று இருந்துவிட்டு, இப்ப “நீங்கள்“ என்று சொன்னது என்னை இல்லைத்தானே என்று அப்பாவியானேன். அழகாகச் சிரித்தார்… இல்லை இல்லை… சிரித்தார்.

பொதுவாக அடைமொழிகளையோ தற்குறிப்பேற்ற உணர்ச்சிகளையோ பொதியாமல் வாக்கியங்களை அமைப்பதே வழக்கம் என்னும் போது அசோகமித்திரன் ஞாபகம் வருகிறார். எவ்வளவு பாதுகாப்பான மனிதர்! பெண்களின் அழகைப் பற்றி எங்காவது சொல்லியிருக்கிறாரா! இருக்காது. கனவுக்கன்னிகளுக்கு வருவோம். கனவிலும் கூட கன்னிகளையே எதிர்பார்க்கும் தமிழ்மனம் என்று யார் எழுதியிருந்தது. ஆங்கிலத்தில் வெறுமனே Dream Girl-தானே! சரி, அவர்களுக்குக் கிளர்ச்சி வருகிறதோ இல்லையோ, சும்மாவேனும் ஆண்களில் சிலரைத் தேர்ந்து கவர்ச்சிக் காளைகளோ கனவுக் காளைகளோ என்று இடையழகு தொடையழகையெல்லாம் அவர்கள் ரசனைப்பாங்கில் வர்ணிக்க ஆரம்பித்துவிட்டார்களானால் நம்மில் பலர் பெண்களை வர்ணித்துக்கொண்டிருக்கும் அசட்டுத்தனத்திலிருந்து பின்வாங்கிவிடுவோம் என்றே நினைக்கிறேன். அதற்காகவேனும் அவர்கள் தொடங்க வேணும். இதைச் சொன்னால், நீங்கள் செய்யும் முட்டாள்தனங்களையேதான் நாங்களும் செய்யவேண்டுமா என்று தோழி நிச்சயம் கேட்பார். அதனால்தான் நண்பர் வற்புறுத்துகிறாரே என்பதற்காக இந்த வம்பில் இறங்கிவிட வேண்டாம் என்று ஆரம்பத்திலேயே நினைத்தேன். விதி விடுகிறதா! சமீபத்தில் பார்த்த, ம.மதிவண்ணனின் கவிதையைச் சொல்லாமல், என்னால் இதை முடிக்க முடியாது.

 

முகங்கள் தேவையற்றவையாய்ப் போய்விட்டன

உனக்கும் எனக்கும் எவருக்கும்

சுற்றியிருப்பவர் பாலுறுப்புகளை

விழிப்புடன் கண்காணித்திருப்பதோடு

முடிந்துவிடுகிறது

சகமனிதர் மீதான அக்கறைகள்.

௦௦௦௦

—————————————————————————————————————————————————

**************உங்கள் கருத்துக்களை உடனுக்குடன் பதிவிடுங்கள் (ஆசிரியர் குழு)************

—————————————————————————————————————————————————

 

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment