Home » இதழ்-05 » போகுமிடமெலாம்….! திருமாவளவன்

 

போகுமிடமெலாம்….! திருமாவளவன்

 


————————————————————————–02————————————————————————

நெருப்புத்தழல் மழைச் சாரல் போல் தூற்றிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்?. அது போலச் சொரிந்தது வெயில். இன்று வெள்ளிக்கிழமை. நான் வேலையில் விடுப்பு கேட்டிருந்தேன். வருடத்தில் ஒருமுறை பெரு நகரிலிருந்து விலகி எங்காவது தூர வாவிக்கரையோரம் போய் நண்பர்களுடன் கூடாரம் போட்டிருந்து வார இறுதியை களி(ழி)த்து வருவது வழக்கம். பயணத்துக்கான ஆயத்தங்ளோடு இருந்தபோது தொலைபேசி ஒலித்தது.

“அண்ணை! நீங்க இண்டைக்கு வர மாட்டியள் எண்டு சொன்னனான். எங்கடை(தமிழ்) ஆக்கள் இப்பிடித்தான் வெள்ளிக்கிழமை எண்டால் சுத்தப் போய்விடுவினம் எண்டு பேசுறார்.”

போன் செய்தவர் என்னுடைய வேலைத்தளத்தில் இந்த வாரம் மாலை நேரத்திற்கு பொறுப்பாக இருந்த மேற்பார்வையாளர். அவர் என் நண்பனும் கூட. பேசியவர் அல்லது கடிந்துகொண்டவர் தொழிலக மனேச்சர். இருவரும் தமிழர்கள்தான். நான் இந்தத் தொழிலகத்துக்கு மாற்றலாகி வந்து நான்கு வருடங்களாகிறது. முதலில் வேலை செய்த தொழிலகம் இதன் என்னொரு பிரிவு.

அங்கு ஒரு ஈரானியன் மனேச்சராக இருந்தான். உலகத்தில் பொருளாதாரச் சுனாமி வந்தது பல முதலாளிமாருக்கு வாய்ப்பாகிப் போய்விட்டது. நீண்டகாலம் ஒரே இடத்தில் வேலைசெய்து கொஞ்சம் சுமாரான வருவாய் பெறும் தொழிலாளரை பேரம்பேசி குறைந்த நேரப்படிக்கு மாற்றியதும் அல்லது தொழிலகத்தை மூடிவிட்டு வேறெங்காவது புதிய தொழிலகங்களை தொடங்கி ஆரம்ப நேரப்படிக்கு தொழிலாளர்களை வேலைக்கமர்த்தியதுமாக பல சம்பவங்கள் நாட்டில் நிகழ்ந்தது கொண்டிருந்தது. இந்த இடத்தில் நேரப்படி என்பது ஒருமணி நேரத்துக்கான கூலி எனப் பொருள்படும்.

நான் மாற்றலாகி வருவதற்கு முன் அங்கு வேலை செய்த கடைசி நாள் நன்றாக நினைவில் இருக்கிறது. முதலில் குறிப்பிட்ட நண்பன் தான் அங்கும் மேற்பாவையாளனாய் இருந்தான். எனது வேலை நேரம் மாலை நாலுமுப்பதிலிருந்து நள்ளிரவு ஒருமணிவரையிலானது. அதிகநாட்களில் “ஓவர்டைம்” மாக இரண்டு மணித்தியாலம் செய்யவேண்டியிருக்கும். அப்படியாயின் அதிகாலை மூன்று மணிவரை வேலைசெய்வோம். அதன்பின் வீடுவந்து உடலாறி படுக்கையில் விழ என் துணைவி வேலைக்கு புறப்படவேண்டி எழுவதற்காக வைத்த அலாரம் அடிக்கும்.

அன்று திடிரென தொலைபேசி அலறியது. நேரத்தைப் பார்த்தேன். காலை ஒன்பது முப்பதை தாண்டியிருந்தது.

“அண்ணை பக்டரியை பூட்டியிட்டாங்களாம். எல்லாரும் வெளியிலை நிற்கினமாம்;”

எனக்கு தூக்கக் கலக்கத்தில் ஒன்றும் புரியவில்லை.

ஏன்?

அவனுக்கு கோபம் வந்துவிட்டது. அவனது குரல் பதட்டத்தில் தடுமாறியது. அந்தப்பதட்டம் என்னிலும் தொற்றிக் கொண்டது.

‘கொம்பனியை மூடியிடாங்களாம் என்னுறன். செகிடு மாதிரி ஏன் என்னிறியள்’

கோபப் பட்டான். அன்றும் நான் அதிகாலை மூன்று மணிவரை  வேலை செய்து விட்டு காலையில் தான் வந்து படுக்கையில் வீழ்ந்தேன். அந்த அளவுக்கு தொழில்சாலை திடமாயிருந்தது.  திடீரென பூட்டிவிட்டார்களாம் என்றால்…. நம்பமுடியவில்லை.

‘பிளான்ட் மனேச்சரோடு கதைத்தாயா எண்டேன். `அவருக்குத்தான் முதலில் கடிதம் கொடுத்து இரண்டு செக்ருட்டிக் காட் வெளியிலை கொண்டுபோய் விட்டார்களாம்’

அதன் பின்பு எனக்கு தூக்கமே வரவில்லை. என் வாழ்நாளில் தொடர்ச்சியாக நீண்டகாலம் (ஒன்பது வருடங்கள்) வேலை செய்ததென்றால் இந்தத் தொழிச்சாலை ஒன்றி்ற்தான். அன்று பகல் முழுவதும் மன உழைச்சலில் கழிந்தது. மாலை வேலைத்தளத்துக்கு போயிருந்தோம். ஒரு மூன்று நான்கு பேரை அடுத்த தொழிலகத்திற்கு மாற்றலாக்கி பணியில் வைத்திருக்கப் போகிறார்களாம் என்ற அடிப்படையில் நான்கு பேரில் ஒருவனாய் மாற்றலாகி வந்தேன்.

இங்கு ஒரு தமிழ் மனேச்சர் இருக்கிறார் என்பது பெருமையையும் மகிழ்ச்சியையும் தந்தது. மிக நல்ல மனிதர். உயர்ந்த தோற்றமும் நிமிர்ந்த நடையும் கொண்டவர். என்னை விடவும் ஒரு ஐந்தாறு வயது இளையவர். எப்போதாகிலும் அரிதாய் “அண்ணை எப்பிடி இருக்கிறியள். என்ன நடக்கிது?” என குசலம் விசாரிப்பார்.

இவர் இருபத்தி நான்கு மணி நேரமும் கடமையிலிருப்பதாகவே தோன்றும். தூர நிற்பார். தூரத்தானே நிற்கிறார் என திரும்புவதற்குள் பக்கத்தில் என்னைக் கடந்து செல்வார். காலையில் முதல் ஆளாக சமூகம் கொடுப்பார். சிலசமையம் அதிகாலை நான்கு மணிக்கே வந்துவிடுவார். கையில் ஒரு லெதர் பாக் இருக்கும்.நான் அதை ஊரில்தான் பாத்திருக்கிறேன். இவர் இதை ஊரிலிருந்து கொண்டுவந்திருப்பாரோ என்று எண்ணுவதுண்டு. அவரைப் பார்த்ததும் ஊரில் ஒரு பாடசலை அதிபர் அல்லது அரச அலுவலர் காலையில் வேலைக்கு வருவது போன்ற தோற்றம் என் மனக்கண்ணில் விரியும். இரவில் எந்த நேரத்திலும் அவர் தொலைபேசியில் அழைப்பார். இவர் தூங்குவதில்லையா என நண்பர்களுடன் பேசி சிரிப்பதுண்டு.

பகலில் ஒன்று இரவில் ஒன்று என இரண்டு மேற்பார்வையாளர் உண்டு. அதற்கு மேலும் “பொட்டம்மான்கள்“ சிலபேர் இவருக்கு இருப்பதாக தகவல் உண்டு. நான் மாற்றலாகிச் சென்ற இந்த நான்குவருட காலத்தில் ஒரு நாளாவது இவர் விடுப்பில் நின்றதாக அறியேன். முள்ளிவாய்க்கல் வரை ஆமி நெருங்கிய பிற்பாடு தொரன்றோ தமிழர் வீதியில் இறங்கிப் போராடினார்கள். அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் ஒட்டாவா போய் வந்ததாக அறிந்தேன். இது தவிர எங்காவது சுற்றுலா சென்று வந்ததாககூட தகவல் இல்லை.

சிலசமயம் முதலாளியிடம் திட்டுவாங்கி நொந்து நூலாகி வருகையில் “என்ன விசர் வாழ்கையப்பா” என்பாராம். வேறொருசமயம் மகிழ்வாயிருக்கும்போது “நான் இந்த நிலமைக்கு வர எவ்வளவு கஸ்டப்பட்டிருப்பேன் தெரியுமா?” என்று பெருமிதம் கொள்வார்.

முதலில் வேலைசெய்த தொழிலகத்தின் மனேச்சரை (அந்த ஈரானியன் தான்) மாலை ஐந்து மணிக்கு மேல் கண்டதாக சரித்திரம் இல்லை. வருடத்தில் இரண்டு தடவை ஓரிரண்டு வாரம் ஓய்வெடுத்து வெளியூர் போய் வருவான். இரவில் அவனிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்புக்கூட வராதாம். ஏதாவது அவசரம் எனத் தொடர்பு கொண்டால் சரி நான் நாளை வந்து பார்க்கிறேன் என்பானாம். ஆனாலும் ஒப்பீட்டளவில் அந்த தொழிலகம் நன்றாகத்தான் இயங்கியது

இங்கே சிக்கல் என்னவென்றால் தொழிலகத்தில் தொழிலாளர் மீது மிக கண்டிப்பாக இருக்கும் ஈரானியன் மேலாளர் கூட்டத்தில் தொழிலாளர்களுக்காகவும் அவர்களின் சம்பள உயர்வுகள் வேண்டியும் சண்டைபோடுவானாம்.

முதலாளி யாரை விரும்புவான். இருபத்து நான்கு மணியும் தொழிலகத்திலை மாய்கிறவன் முதலாளி என்ன சொன்னாலும் “யெஸ்” எனத்தலையாட்டுபவன் ஒருவன் இருக்க சண்டை போடுபவனை வைத்திருப்பானா?

தொழிலகத்தை மூடிய சாக்கில் அந்த மனேச்சரையும் அனுப்பக் காரணமாக அமைந்த சூக்குமம் இதுதான்.

இது இவருக்கு மட்டுமே உரித்தான சுபாவம் என நான் கருதவில்லை. ஒவ்வொரு இலங்கைத் தமிழனுக்கும் உரிய குணம் என்றே எண்ணத் தோன்றுகிறது. இவரது இடத்தில் நான் இருந்தால்கூட இதைத்தான் செய்திருப்பேனோ? முன்னூறு வருடங்கள் காலனித்துவத்துக்குள் அடிமையாய் இருந்தவர்கள் நாம். குறிப்பாக தமிழர்கள் நிர்வாக சேவைக்கென்றே பயிற்றப்பட்டவர்கள். பச்சையாக சொல்வதெனில் துரைக்கு ‘யெஸ் சேர்’ போடுவதற்கென்றே வடிவமைக்கப்பட்டவர்கள். இன்னமும் எத்தனை ஆண்டுகள் எம்மோடு இந்த அடிமைக்குணம் ஒட்டிவரப்போகிறதோ தெரியவில்லை?

வழமையில் அடிக்கடி விடுப்பில் நிற்பவன் அல்ல நான். வருடத்தில் சிலசமயம் ஒரு நாள். அதற்கு மேல் இருக்காது. ஒருநாள் விடுப்பில் நிற்பதற்கு முன்னறிவிப்பு கொடுக்க வேண்டியகட்டாயமில்லை. அன்று நான் இல்லாவிடில் உற்பத்தியில் கூட எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

இவர் தன்னைப் போலவே அடுத்தவர்களும் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பவர். நான் இப்படி இத்தொழிற்சாலைக்குள் கிடந்து மாய இவங்கள் உல்லாசம் போகிறார்களே என்ற வெப்புசாரத்தின் வெளிப்பாடு என்பது எனக்குத் தெரியும். அதனால் இவர் மீது எந்தக் கோபமும் வரவில்லை. சற்று யோசித்துப் பார்த்தேன். பாவமாக இருந்தது.

நான் கவிஞன். புனைகதையாளன் அல்ல. சிறுகதையாக எழுதியவை கூட அனுபவித்தவை அல்லது பார்த்தவை என்பதிலேயே அடங்கும். அவற்றை வெறும் புனைவுகள் எனச் சொல்லிவிடமுடியாது. அப்படி எழுதிய சிறுகதைகள் கூட எண்ணிக்கையில் ஒருகை விரலுக்குள் அடங்கிவிடக் கூடயவை. நான் கனடா வந்தபின்பே எழுதத்தொடங்கினேன். என் முதல் கதை சூரியன் (கனடா) பத்திரிகையில் வெளிவந்தது. அதன் பிரதி என்னிடமிருந்து தவறிப்போய்விட்டது. நீட்டகாலமாக தேடியும் கிடைக்கவில்லை. கனடாவில் பத்திரிகைகள் குடிசைக் கைத்தொழில். பணம் ஒன்றைத்தவிர அதற்கு எந்த சமூகப்பார்வையும் கிடையாது.

திடீரென முளைக்கும். விளம்பரம் கிடைக்கும்வரை ஓடும். பின் காணாமல் போய்விடும். ஆய்வுக்கு கூட ஒருபிரதி தேடி எடுக்க முடியாது. என் நினைவிலிருந்து அக்கதையை மீட்டி எழுத பலகாலம் எண்ணியும் அது ஒரு போதும் கைகூடவில்லை.

அதிசயமாய் இப்போது வாய்திருக்கிறது.

00

நான் ஓடிக்கொண்டிருந்தேன்.

பலநூறு பரிவலுக் கொண்ட கனத்த எந்திரங்களுக்கும் மனுஷ சக்திக்கும் இடையிலை நடக்கிற ஓட்டப் பந்தயம் எண்டுதான் இதைச் சொல்லுவேன்.. பந்தையக் குதிரையை ஓடஓட விரட்டும் ஜொக்கியை போல இயந்திரங்களின் வேகத்தோடு தொழிலாளியை உசுப்பி சொடுக்கிவிட்டுப் போவான் முகாரி.

சொட்டு நேரம் மனிதன் எந்திரகதியை விட்டு முன்னேறி கொஞ்சம் ஓய்வெடுகிறான் என்று கண்டால் எந்திரத்தை முடுக்கி வேகப்படுத்திவிட்டுப்போவான் முகாரியின் உதவியாளன். நான் அங்கை வேலை செய்த எட்டுமாத காலத்தில ஒருநாளிலாவது மனிசன் எந்திரத்தை வெண்டதாய் சரித்திரமில்லை.

எட்டுமணித்தியால வேலை முடிய அடுத்த ‘ஷிப்ட்’க்கான புதியவர்கள் வருவினம். இண்டைக்கு எந்த மெசினோடை மல்லுக்கட்டப் போகிறமோ என்ற பயத்தோடை முகாரிக்குப் பின்னால் தயங்கித்தயங்கி நிற்பினம். அவன் மூஞ்சியைப் பார்த்து முகம் பார்த்து முகமன் பார்த்து ஒவ்வொரு மெசினிலும் ஒருவராக இணைத்து விடுவான். ஒவ்வொரு மெசினிலும்வேறுவேறு விதவிமான பிளாஸ்டிக் பொருட்கள் ஓடிக்கொண்டிருக்கும். அது சிறிய பிரஷ் கட்டையிலிருந்து பிளாஸ்டிக் கதிரைகள் வரையில் விதவிதமான பொருட்களாய் இருக்கும்.

இரவு முழுவதும் ஓடிக்களைச்சு சோர்ந்தவர்கள் இனி விட்டால் போதும் என்ற நிலையில் காலையிலை கடாசுண்டு வெளியே வருவினம். உடம்பு அசதியில் கனக்கும். வியர்வை மணக்கும். நடைப்பிணம் போல தள்ளாடித் தள்ளாடி நடப்பினம். இருந்தாலும் அந்த சோர்ந்த முகத்தில ஒருவித மலர்ச்சி துளிர்விடும். ஏதோ பெரிய விடுதலையை அனுபவிக்கிறதைப் போலை.

மொன்றியால் நகரில் தமிழர்கள் வாழுற புறநகர் பகுதி ஒன்டிலை இந்தப் பிளாஸ்டிக் தொழிற்சாலை இருந்தது. காணிய வித்து; தாலிய வித்து; அறாவட்டிக்கு பணமெடுத்து லச்சக்கணக்கிலை காசைவிட்டு எஜென்சிகாரனிட்டை ஏமாந்து தேசந்தேசமாய் அலைஞ்சு பிடிபட்டு ஜெயிலிலை கிடந்து ஒருமாதிரி தப்பிப் பிழைச்சு கனடாவிலை காலைவைச்சால் முதல் வேலை வட்டிக்கும் குட்டிக்குமாய் மாரடிக்கிறதிலை தொடங்கும். முதலிலை கடன்காரன் துரத்தத் தொடங்குவான். ஊரிலையிருந்து உறவுகள் துரத்தும். டெலிபோன் பில் ஏறும். வட்டி குட்டி போடும். இதில் அரசு தரும் சொற்ப உதவிப்பணம் எந்த மூலைக்குக் காணும்? அதையும் எடுத்துக்கொண்டு அவனுக்கும் தெரியாமல் களவாக இரண்டு மூன்று வேலை செய்தால்தான் மானஸ்தனாக வாழமுடியும். இந்த இடத்திலைதான் தமிழருக்கு பெருத்த உறுதுணையாய் இருந்த தொழிற்சாலைகளிலை இந்த பிளாஸ்டிக் ஆலையும் ஒன்று.

நான் முதல்முறை கனடாவுக்கு வெளிக்கிட்டு இரண்டு கிழமையிலை அந்தப்பயணம் தோல்வியிலை முடிஞ்சுது. இரண்டு வருடங்களின் பிறகுதான் திரும்பப் புறப்பட்டன். (இந்த இரண்டுவரிசத்தில நடந்த கதையை இன்னொருசமயம் சொல்லுறன்) கட்டுநாயக்காவிலை ஏறி ஒருவாரத்தில் நயாக்கரா நுழைவாசலில் கையை உயத்தி அகதி நிலை கேட்டேன்.

கனடாவுக்குள்ளை நுழைஞ்சதும் உனக்கு நல்ல காலபலன். அதிஸ்டம் என்றார்கள். இது அதிஸ்டம் இல்லை. ஏழரைச்சனியன் என்டு பிறகுதான் புரிஞ்சுது. அப்ப எனக்கு கைகொடுத்தது இந்த பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை.

ஒன்றின் பின் ஒன்றாக பிளாஸ்டிக் வாளிகளை தள்ளிக் கொண்டிருந்தது மெசின். கீழே விழுந்த வாளியை எடுத்து முதலில் ஏதாவது ஓட்டை ஒடிசல் மறு இருக்கிறதா என ஒரு கணம் நோட்டம் விடுகிறேன். பிறகு அதை சுழுவாய் திருப்புகிறேன். இப்போ வாளியின் அடிப்புறம். அங்கே வாளியின்ரை விறைச்ச ஆண்குறி போலை ஒரு நீட்டம் இருக்கிது. அதுதான் வாளி உருவாக இருந்த ஆதாரம். ஒரு சிசுவின்றை தொப்பூழ் கொடி போலை. உருகிக் கொதிக்கிற பிளாஸ்டிக் கூழ் அச்சு அமைப்புக்குள்போய் அது இறுகியதும் வாளி கீழ வீழும். அப்ப அதனோடை சேர்ந்துவாற தேவையற்ற பகுதி. பழங்களின் காம்பு போல. அதை அழுத்தமாக வெட்டிக்கழிக்கிறேன்.

பிறகு பக்கவாட்டில் திருப்பி அதன் முதுகுப்புறத்தில் இரண்டு ஸ்டிக்கர்களை ஒட்டவேணும். ஒன்று அழகான நிறத்தில் வடிவமைக்கப்பட்டது. கம்பனி விபரங்கள் அடங்கியது. மற்றது அதன் விலைக்கான கம்பியூட்டர் வரிகள் உள்ளவை. இரண்டையும் ஒட்டி வாளியை நிமித்துகிறன். இனிமேல்தான் அதனோடை கைபிடியைப் பொருத்த வேணும். அது அரைவட்ட வடிவான கம்பிக் கைபிடி. இரு நுனியிலும் கொழுக்கிப் பொறிமுறையிலை அமைஞ்சது. வாளி சூடாயிருக்கும் போதே பொருத்திவிட்டால் சரி. அது ஆறி கெட்டியாகிவிட்டால் முடியாது. பிறகு குப்பையிலே போடவேண்டியதுதான். ஒரு முனையை வாளியின் ஓரு காதுக்குள் நுழைத்து நிமிர்த்தி மற்ற முனையை அடுத்த காதுக்குள்ளை வைச்சு இரண்டு பெருவிரல்களாலையும் நெம்பி அழுத்தி கொழுவி கொஞ்சம் சூடாறவைச்சு நிமிர்கிறன். மெசின் அடுத்த குட்டியை தள்ளிவிட்டு போற சத்தம் கேட்கவும் என்னை அறியாது ஒரு எந்திரம்போல உடல் குனியவும் நேரம் சரியிருக்கிறது. இவ்வளவும் நடக்க இரண்டு அல்லது மூன்று நிமிசங்கள் எடுக்கும் என்று நீங்கள் நினைப்பியள். அது தவறு. அரை நிமிசம். அதாவது முப்பது நொடிக்குள் எல்லாம் முடிக்கவேண்டும்.

இது மட்டுமில்லை. ஆறு வாளிகள் சேர்ந்ததும் அதை ஒன்றுக்குள் ஒன்றாக அடுக்கி காட்போட் பெட்டியுள்ளை வைச்சு மூடி ஒட்டிவைக்க வேண்டியதும் இந்த முப்பது வினாடிகளுக்குள் செய்ய வேண்டிய கருமம். இது ஒன்று அல்லது இரண்டு மணிநேர வேலை இல்ல. எட்டு மணித்தியாலப் போராட்டம். அதிலும் சனி ஞாயிறு நாள் எண்டால் பன்னிரண்டுமணிநேரக் கடூழியம்.

நான் நாலுநாளாய் இந்த மெசினோடைதான் மாரடிச்சுக்கொண்டிருக்கிறன். இந்த ஓடர் முடிய ஒருவாராமோ அல்லது பத்துநாள் வரையிலை போகலாம். என்ரை ரண்டு பெருவிரல்களும் நீலம்பாரிச்சு கன்றிப்போய் வலி எடுக்கிது. ஒவ்வொருக்காலும் கைப்பிடியை வாளியின்ரை செவிக்குள்ளை நுழைச்சு அழுத்துற போதும் உயிர் போய் வாற அவஸ்தையிலை துடிக்கிறேன்.

ஆறுவாளிகள் சேர்ந்ததும் ஒருபெட்டியை மூடிவைத்துவிட்டு திரும்புற போது எதிரிலை ஓடிக்கொண்டிருக்கிற மெசினோடை மல்லுக்கட்டுறவன் கண்ணில் படுகிறான். அவன் நேற்றுத்தான் புதிசாய் வேலைக்கு சேர்ந்திருந்தான். அடுத்தவன் படுற துன்பத்தைப் பார்க்கிற போது நாங்கள்

எவ்வளவோ தேவலை எண்டு நினைச்சு மனம் ஆறுதல்படுமாம் இல்லையா? அதுதானே மனிச இயல்பும். நேற்றுக்காலமை வீடு திரும்புற போது அவனோடை கதைச்சன். ஊரிலை தானொரு பி.ஏ. பட்டதாரி என்றான். யாழ்ப்பாணத்திலை நல்ல அரசாங்க உத்தியோகத்தலை இருந்தாராம்.

‘நான் ஒரு களங்கட்டி கூட்டுக்கை அகப்பட்ட மீன் மாதிரி. என்ரை போதாக்காலம். தெரியாத்தமாய் கனடாவெண்டு வந்து மாட்டிக்கொண்டேன்’ எண்டு புலம்பினார். ஒவ்வொருநாளும் பின்னேரத்திலை நாலுமணித்தியாலம் ரெஸ்ரோரன்ட் ஒன்றிலை கோப்பை கழுவுகிறேன். அதை முடிச்சுக் கொண்டுதான் இரவு இங்கை வேலைக்கு வாறன் என்டு சொல்லையுக்கை என்ரை மனமும் சேர்ந்து வேதனைப்பட்டது.

இவ்வளவு கஸ்டத்திலையும் பச்சையில் (அரச உதவிப்பணம்) இருந்துகொண்டு தங்கடை பெயருக்கு பின்னாலை எம்.எ. பி.எஸ்சி. சிறப்பு எண்டு பட்டப்பெயர்களைப் போட்டு பந்தா காட்டுறவையை நினைச்சுப் பார்த்தேன். எரிச்சலா இருந்திது. பிறகு கொஞ்சம் யோசித்துப் பாத்தால் அவர்களை பரிகாசம் பண்ணவும் முடியல்லை. அவையின்ற இயலாமை மேலை இரக்கம் வந்திது. மனிசரின்ரை குண இயல்புகளை என்னவென்று சொல்லுறது?

அந்தப் புதியவன் எதிரிலை ஓடிக்கொண்டிருக்கும் மெசினோடை மாஞ்சுகொண்டிருந்தான். அவனுக்கு பின்னாலை அடுத்த தளம் போலை உயரமா இருந்த மேடையிலை நின்று முகாரியிடம் அவன் படுற அவஸ்தையை நடித்துக்காட்டி கேலி செய்துகொண்டு நின்றான் பசு. பசுபதி எண்டது அவன்ரை முழுப்பெயர். பசு என்றது அதன் சுருக்கமான வடிவம். ஆனால் பெயருக்கும் அவனுக்கும் எந்தப் பொருத்தமும் கிடையாது. சரியான நரி. மெக்கானிக்காய் பதவியில் இருக்கிறான். ஓரு ஓடர் ஓடி முடிந்ததும் மெசினை நிப்பாட்டி துடைச்சு துப்பரவாக்கி அடுத்த பொருளுக்கான அச்சுமாத்திறது அவன்ரை வேலை. மற்றும் படி எப்பவும் முகாரியோடு ஒட்டியபடியே திரிவான்.

கனகாலமாய் ஐந்து மெசினோடை ஓடிக்கொண்டிருந்த தொழிச்சாலை இப்ப இரண்டொரு வருசத்துக்குள்ளை வேகநடைபோட்டு இருபத்திரண்டு மெசினோடை ஓடக்காரணம் நாங்கள் அகதிகளாக வரத் தொடங்கியதுதான். இதை நான் சொல்லயில்லை. அங்கை கனகாலமாக வேலை செய்தவர்கள் சொல்லுகினம்.. இது உண்மை என்றுதான் நினைக்கிறன். அதிலையும் முதலாளி கொஞ்சம் சுழுவானவன். ஆக்களை இனங்காணிறதிலை வலு கெட்டிக்காரன். முதலிலை முகாரியாய் இருந்தவனை மனேச்சராக்கிப் போட்டு கொஞ்சம் ஆங்கிலம் பேசத்தெரிந்த எங்கட இரண்டுபேரை பதவி உயர்வு கொடுத்து முகாரியாக்கி விட்டான்.

அதற்குப் பிறகு அவன்றை வேலையிலை பாதி குறைஞ்து. பந்தம் பிடிக்கிறது கோள்சொல்லுறது என்ற எங்கடை பாரம்பரிய விசயங்களுக்கெல்லாம் அங்கை குறைவில்லை. தொழிலாளர்களை கசக்கிப் பிழிஞ்சதிலை தொழிலகம் கடும் முன்னேற்றம் கண்டது.

பொருட்கள் தரம் பார்க்கிறவன் முன்னைலை வந்து மேசையில் அடுக்கி ஆறவைக்கப் பட்டிருக்கிற வாளி ஒன்றை உயரமாய்த் தூக்கி அங்குமிங்குமாய் நாலு பக்கமும் பாக்கிறான். அதிலை ஏதாவது மறு இருக்கிறதா என்பது அவன் தேடல். ஒன்றும் இல்லாவிட்டாலுங்கூட ஏதும் சொல்லாமல் இடம் விட்டகலமாட்டான். அப்பிடிச் சொன்னால்தான் நான் வடிவாய் பாப்பன் எண்டது அவன்ரை நினைப்பு. ஒண்டும் சொல்லாட்டிலும் கூட இம்முறை தப்பிச்சிட்டாய். அடுத்தமுறை பார்க்கலாம் எண்டது போலை அவன் முகத்தோற்றம் தெரியும்.

இண்டைக்கு இந்த எந்திரத்தோடு அல்லாடுவது கூட எனக்கு தரப்பட்ட தண்டனைக்குரிய வேலைதான். குறிப்பிட்ட சில மெசினிலை மட்டுந்தான் அதனுடைய வேகத்தை முடுக்கி தொழிலாளியை வதைக்க முடியும். நான் இந்தத் தண்டணையைப் பெறுவதற்கு பெரிசாய் எந்தப்பிழையும் செய்திருக்கவில்லை. அதாலை எனக்கு எந்தவித வருத்தமும் இல்லை. போனகிழமை ஒரு பாகிஸ்தானி மெசின்ரை இந்த வேகத்தோட தன்னாலை ஈடுகொடுக்க முடியல்லை. கொஞ்சம் வேகத்தை குறைத்து வைக்கும் படி முகாரியிட்டை கெஞ்சினான்.

இதற்கு மேலை குறைக்க முடியாது. “விரும்பினால் செய்!. இல்லாட்டில் வீட்டை போ!” என்று சொன்னான் முகாரி. அதோடை விட்டிருந்தால் பறவாயில்லை. மெசினோடை வேகத்தை இன்னும் கொஞ்சம் முடுக்கிவிட்டுப் போனான்.

அன்றைக்கு நடுச்சாமம் வேலையின் நடுவிலை விட்டுப்போனவன்தான் பிறகு அந்தப்பக்கம் வரவே இல்லை. அவன் போனதுக்கு பிற்பாடு மெசின்ரை வேகத்தை நல்லாக்குறைச்சு வேறை ஒருவனை மாத்தி விட்டினம்.

‘சோனிக்கு சரியான திமிர். யாழ்ப்பாணத்தான்ரை குணம் தெரியவில்லை அவனுக்கு’

முகாரி ‘மெக்கானிக் பசு’ வுக்கு பெருமிதத்தோடு சொல்லிக் கொண்டிருந்தான். அடுத்த நாள் பாத்தேன். அதே முகாரியின் சிபார்சிலை புதிசாய் ஒருத்தன் வந்திருந்தான். அவன்ரை தமையன்; முகாரியின்ரை நண்பனாம். எனக்கு கொஞ்சம் மனச்சங்கடமாக இருந்தது. என்னதான் வேற்று நாட்டான் எண்டாலும் அவனும் மனிசன் தானே? எங்களைப் போல அவன்ரை தலையிலையும் எத்தினை சுமையளோ.

என்ரை கெட்டகாலம். மனங்கேட்கயில்லை. வாயைச்சும்மா வைச்சிருக்கத் தெரியாது. இடைவேளையின் போது கூட இருந்தவர்களோடு என்ரை அதிருப்தியைச் சொன்னேன். சும்மா என்ரை மன ஆறுதலுக்காகத்தான். இதெல்லாம் இங்கு சர்வ சாதாரணம் என்றான் ஒருவன். அதிலை இருந்தவையிலை இரண்டொருத்தர் எதிலுமே சம்பந்தமில்லாதவையள் போல எழும்பிப் போச்சினம்.. எனக்கு பக்கத்திலை இருந்தவன் என்ரை காலை தன்ரை காலாலை தட்டி கதையாதை எனக் குறிப்புணர்த்தினான்.

“அலைஞ்சுலைஞ்சு கடல் கடந்து இவ்வளவு தூரம் வந்திட்டம். இனியும் வேணுமே? நடக்கிறது நடந்திட்டு போகட்டும். கண்டும்காணாமல் இருக்கிறதுதான் புத்திசாலித்தனம். நீ பேசமல் கிட.”

என்னைவிட வயசிலை மூத்தவர் ஒருவர் எனக்குப் புத்திசொன்னார். எப்பிடித்தான் போச்சுதோ தெரியல்லை. ஆரோ ஒரு புண்ணியவான் முகாரியிட்டை போட்டுக் குடுத்திட்டான். அடுத்தநாள் அவன் என்னைப் பாத்த பார்வையிலையே எல்லாம் புரிஞ்சு போச்சு. இதுக்கு மேலையும் சொல்ல வேணுமோ? அந்தப் பலனைத்தான் இந்தக் கிழமை முழுவதும் அனுபவிச்சுக்கொண்டிருக்கிறன்.

ஓரளவுக்கு மெசின்டை முப்பது வினாடிக் கதியோடை ஈடுகொடுக்க உடம்பு பழகியிட்டுது. இப்ப ஒண்டுரண்டு நொடி ஓய்வு கிடைக்கிது. இந்த ஒவ்வொரு நொடி நேரத்தையும் நான் பொன் போலை அனுபவிக்கிறன். மனிசன் சந்தோசமாய் இருக்கையிக்கை மேலை மேலையெண்டு கற்பனையிலையே காலத்தை கடத்தியிடுறான். துன்பம் வரயிக்கைதான் கொஞ்சம் திரும்பி பழைசையெல்லாம் யோசிக்கிறான்.

நான் கனடாவுக்கு வருவன் என்டு கனவிலைகூட நினைச்சதில்லை. இளந்தாரியாய் வேலைவெட்டியில்லாமல் திரிஞ்ச காலத்திலை கஸ்டம் தாங்கேலாமல் அம்மா சிவமாலைப் பெரியம்மா வீட்டை போய் நான் வெலைவெட்டியில்லாமல் இருக்கிறதை சொல்லி கவலைப்பட்டிருக்கிறா. பெரியம்மா உன்ரை மூத்தவன்ரை குறிப்பை ஒருக்கால் கொண்டுபோய் சாத்திரியிட்டை காட்டு என்றிருக்கிறார். அம்மாவும் சும்மாயிருக்கயில்லை. எங்கடை வாயை வயித்தை கட்டி ஒரு பதினைஞ்சு ரூபாகாசை மிச்சம் பிடிச்சு சாத்திரிக்கு அளந்திருக்கிறா. அவன் உன்ரை பெடியனுக்கு கடல்கடந்து போற பலனிருக்கு. இந்தக் குறிப்பிலை மூண்டாம் வீட்டை அவன் பாக்கிறான். எட்டாம் வீட்டை இவன் பாக்கிறான் என்டு ஏதேதோ எல்லாம் புழுகியிருக்கிறான். அம்மாவுக்கு அவனைத்தெரியுமோ இவனைத்தெரியுமோ தெரியாது. தன்ரை மோன் வெளிநாட்டுக்கு போகப் போறான் எண்டு சொன்னது மட்டும் நல்லாய் விளங்கியிருக்கு. எல்லாம் ஒரு இரண்டுமூன்று மாசம்தான். பிறகு வயித்துப் பசி. எல்லாம் மறந்து போச்சு. இது நடந்து ஐஞ்சாறு வரியமாய் போச்சு. ஒண்டும் நடக்கயிலை.

என்னை அம்மாதான் பெத்தெடுத்தாள். இருந்தாலும் வளர்த்தெடுத்ததெல்லாம் ஊர்தான். ஊர்ப் புழுதியைக் குடிச்சுத்தான் வளர்ந்தேன். நல்லவடிவான ஊர். அந்த மண்ணிலை ஒருவிதமான ஈர்ப்பு இருந்தது. மண்ணிலை இருந்தளவுக்கு அந்த மனிசரிலை இல்லை. பசியும் பட்டினியும் எனக்குச் சர்வசாதாரணம். எல்லா வடுவும் பட்டிருக்கிறன். என்ன சொன்னாலும் கூட உறவுகளுக்கிடையிலை ஊடாடித்திரியிறதிலை ஒரு பிடிப்பிருந்தது. எப்பிடியும் ஒருநாள் அந்த ஊரிலை இந்த சனத்துக்கு முன்னாலை எழும்பி நிப்பன் என்றமாதிரி ஒருவிதமான ஓர்மம் இருந்தது. அப்பிடியெண்டால் நான் ஊரிலைதானே இருக்கவேணும்.

பிறகு இயக்கங்கள் வந்திது. சண்டை வந்திது. ஒரு சின்ன எலிக்குஞ்சைப் போலை முதன்முதலிலை ஆயுதத்தை பாத்தன். பிறகு நாய்குட்டி சைஸ்சிலை. வளந்து வளந்து டைனசோர் அளவுக்கு வந்திட்டுது. சும்மாயில்லை. பண்டி குட்டிபோட்டதைப் போல காலுக்கையும் கையுக்கையும் மிதிபடத் தொடங்கியிட்டுது. பிறகு மனிசரிலை ஏறி சவாரிவிட்டுது. நாலு ஐஞ்சு இங்கிலிசு எழுத்தை மாறிமாறிப் போட்டு இயங்கங்கள் வளந்திது. ஒரு காலத்திலை முப்பத்திரண்டு மூப்பத்திமூண்டு இயக்கம் இருந்திச்சிது. பெயர்கள் கூட நினைவிலை நிற்காது. பிறகு நான் பெரிசோ நீ பெரிசோ எண்டு இயக்கங்களுக்கை சண்டை. மனிசப் பிணங்கள் எல்லாம் சர்வ சாதாரணமாய் ரோட்டிலை கிடந்திது. சாவு மலிஞ்சுபோய் நாறிச்சிது. அந்தக் காலத்திலை எங்களை ஆமிசுட்டு செத்ததை விட பெடியள் சுட்டு செத்ததுகள்தான் கூட. பிறகு இந்தியன் ஆமி அமைதிப்படை எண்டு சொல்லிக்கொண்டு வந்தான். சனத்துக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்திது. எனக்குந்தான்.

அப்ப நான் காங்கேசன்துறை சீமெந்துப் தொழில்சாலையிலை வேலை செய்து கொண்டிருந்தன். ஊரிலை பாதிப்பேர் வெளிநாட்டுக்கெண்டு ஓடத் தொடங்கிச்சினம். என்ரை தம்பி ஆற்றையோ காலைக்கையைப் பிடிச்சு பிரான்சுக்கு போயிட்டான். அதுக்குப் பிறகு இளையவங்களும் போயிட்டாங்கள். நான் கலியாணம் கட்டி மூண்டு பிள்ளையளும் பிறந்திட்டினம். அம்மா இருந்தா. வயதானவள். தங்கச்சி குடும்பமும் இருந்தது. தங்கச்சியும் அவள் புரிசனும் வாய் பேச முடியாதவர்கள். அதாலை அவர்களுக்கும் உதவி வேணும். இதுகளுக்கு முன்னாலை வெளிநாட்டுப் பயணம் ஒண்டும் எனக்கு பெரிசாய் தெரியயில்லை. இனி எல்லாம் முடிஞ்சிடும் நிம்மதியாய் இருக்கலாம் என்டுதான் நானும் நினைச்சன். ஆனா எல்லாற்றை நினைப்பிலையும் மண்.

பிறகு இந்தியன் ஆமிக்கும் இயக்கத்திற்கும் சண்டை தொடங்கிச்சிது. பிறகு இயக்கம் எண்டால் புலி மட்டுந்தான் எண்டாச்சு. மிச்சம் இயங்கினதெல்லாம்; துரோகியள். அப்பிடித்தான் சித்தரிக்கப் பட்டினம். கொஞ்சக்காலம் துரோகியளும் புலியளுமாய் வேட்டையாட எங்கடை ஆட்களே சந்திக்கு சந்தி பிணமாய் கிடந்தினம்.

என்ரை கண்ணுக்கு முன்னாலை நடந்த அவலச் சாவு ஒண்டுதான் என்னை சரியாய்ப் பாதிச்சிது. அதுதான் என்னை முழிசாய் மாத்தி போட்டுது.

அண்டைக்கு மத்தியானம். ஒரு மணியிருக்கும். சாப்பாட்டுக்காக வேலைத்தளத்திலை இருந்து சைக்கிலில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தன். காங்கேசன்துறை ரோட்டிலிருந்து மாவிட்டபுரம் கோவில் வடக்குவீதியாலை திரும்பி மயிலப்பை ரோட்டிலை மிதந்து ரயில்வே கடவையை தாண்டி சில வினாடிகள்தான் இருக்கும். மின்னல்போலை என்னை முந்திக் கொண்டு ஒரு கார் போகுது. காரின் கதவுக்கண்ணாடிக்குளாலை துவக்கு முனைகள் வெளியே நீட்டிக்கொண்டிருந்தது. உள்ளே யாரையோ அமுக்கி வைத்திருப்பதைப் போலவும் அவர் திமிறுவது போலவும் ஒரு அசுமாத்தம். இதற்கு மேலும் நான் விலாவாரியாக சொல்லவேண்டியதில்லை. சைக்கிலை ஒரு நாலு மிதி உன்னி மிதிச்சிருப்பன். திடீரென கேட்கிறது வெடி. அடுத்தடுத்து ரண்டு சத்தம். அடைச்ச குரல். இது பயமுறுத்துவதற்கு வைச்ச வெத்துவெடிச் சத்தமில்ல. சன்னம் தைச்ச அடைச்சல் சத்தம். கண்மூடி முழிக்கிறதுக்கு முதல் கடும் வேகமாய் திரும்பி என்னைக் கடந்து போகுது கார்.

ஆரைச் சுட்டிருப்பார்கள். எந்தப் பாவி மனிசனோ? நேற்று வேலையிடத்தில் வந்து விசாரணை எண்டு ஒருத்தனை கூட்டிக் கொண்டு போச்சினம். அவனாயிருக்குமோ? மனசு பதறுது. உன்னி மிதிக்கிறன். மயிலப்பை வெங்காயச் சங்கத்தடி தாண்டியும் எந்த அசுகையும் இல்லை. சிலசமயம் என்ரை மனப் பிரமையாக இருக்கலாமோ? நினைத்து முடிக்கயில்லை. மயிலப்பை ரோட்டை ஊடறுக்கிற தெல்லிப்பளை ஊறணி ரோட்டுச் சந்தியில் கிடக்கிறது அந்த உடல். மண்டையில் ஒன்று. நெஞ்சில் ஒன்று. இரண்டு சூடு. நெஞ்சிலிருந்து ரத்தம் விட்டுவிட்டு பாயிது. என்ன செய்யிறது. ஒன்டுமே செய்ய ஏலாது. கண்ணுக்கு முன்னால் ஒரு கொலை நடக்க பாத்திருக்கிறதெண்டது எவ்வளவு துயரம். இயலாமை மனசைப் பிசையுது. அந்த இடத்திலை ஒருத்தரும் இல்லை. தனிச்சு நிக்கப் பயமாயிருந்திது. வீட்டை வந்தேன். சாப்பிடயில்லை. எப்பிடிச் சாப்பிடுறது? மனைவியிடம் சொல்லிப்போட்டு திரும்ப வேலைக்கு புறப்பட்டேன். “வந்தவழியால் போககாதையுங்கோ தெல்லிப்பளை சந்திகண்டு போங்கோ“ எண்டு மனைவி வலியுறுத்திறாள். நான் தெல்லிப்பளைச் சந்தி கடந்து தபால் கந்தோரடிக்கு வந்தேன். சனம் கூட்டமாய் நிண்டினம். கந்தோருக்கு எதிர் வீட்டிலை குளறிக் கேட்கிது. அது போஸ்மாஸ்ரர் வீடு. அவற்றை மகள் என்ரை மனைவியின்ரை தங்கச்சியோடை ஒரே வகுப்பிலை படிக்கிறவள். ஒரு காரில் வந்தாங்களாம். போஸ்ட்மாஸ்ரரை விசாரணைக்கெண்டு கூப்பிட்டாங்களாம். இவர் தொடுகிலும் மாட்டேன் எண்டிருக்கிறார்;. துவக்கைக் காட்டி கூட்டிக்கொண்டு போயிருக்கிறாங்கள். இப்ப நான் பார்த்த உடல் போஸ்ட்மாஸ்ரரின்டை எண்டு மட்டுக்கட்ட முடிந்தது. அந்தச்சாவை, அந்த ரத்தத்தைப் பார்த்த அதிர்ச்சி அவரை உடன் அடையாளங்காணக் கூட முடியவில்லை எண்டது இன்னும் வேதனையைத் தந்தது.

இத்தனைக்கும் அவர் பெரிதாக எந்தக் குற்றமும் செய்ததில்லை. ஒருகிழமைக்கு முன்னம் இந்தியன் ஆமி தெல்லிப்பளையிலை இருக்கிற முக்கியமான “புள்ளி“ யளை கூப்பிட்டு கூட்டம் வைச்சினமாம். அதிலை கடை முதலாளிமார் பள்ளிக்கூட பிறின்சிபல், அரசாங்கத்திலை பெரிய உத்தியோகத்திலை இருக்கிறவை, எண்டு அம்பிட்ட ஆட்களையெல்லாம கூப்பிட்டிருக்கினம். அதுக்கிளை போஸ்ட்மாஸ்ரரும் இருந்திருக்கிறார். அப்ப தாங்கள் வந்ததுக்கு பிறகுதான் நீங்கள் நிம்மதியாய் இருக்கிறியள். நாங்கள் புலியளை கலைச்சுப் போட்டம். ஆரும் புலியள் வந்தால் உடனுக்குடனை எங்களுக்கு சொல்லவேணும் எண்ட மாதிரிச் சொல்லிச்சினமாம்.

இந்தாளுக்கு வாய் சும்மா கிடக்கயில்லை. இவங்கள் வாறதுக்கு முந்தி எவ்வளவு நல்லாயிருந்தோம் எண்டு பக்கதிலை இருந்தவரோடை முணுமுணுத்திருக்கிறார். அதை யாரோ போட்டுக் கொடுத்திட்டாங்கள். அவங்கள் கூட இருந்த பெடியளிட்டை ஆளை தட்டச் சொல்லி ஓடர் போட்டிட்டாங்களாம். என்ன கொடுமை பாத்தியளே!

எதிருக்கெதிர் சன்டைபிடிச்சு சாகிறது கூடப் பறவாயில்லை. எப்பிடித்தான் ஒரு அப்பாவி மனிசனைக் கொல்ல மனம் வரும்? கொண்டவனுக்கு பிறகு எப்பிடித்தான் நித்திரை வரும்? அவன் சுடயுக்கை என்ன நினைச்சிருப்பான்? அவன்ரை கண்ணைப் பாத்திருப்பான்? இல்லையா? சாகிறதுக்கு முதலிலை சாகப்போறவன் உயிப் பிச்சைகேட்டு கெஞ்சியிருப்பான் இல்லையா? அப்ப இவனுக்கு தன்ரை தேப்பன் கூட நினைவுக்கு வந்திருக்க மாட்டானா? உண்மையில நாங்கள் மனிசர்தானா? அல்லது மிருகங்களைவிடக் கேவலமானவர்களா? ஆண்டபரம்பரை எண்டு மேடைக்கு மேடை வீரவசனம் பேசுறம். இந்த வசனத்துக்குப் பின்னாலை எத்தினை ஆயிரம் , எத்தினை லச்சம், எத்தினை கோடி கொலையள் நடந்திருக்கும்?????

இதுக்குப் பிறகு நினைச்சேன். இனி நான் இந்த நாட்டிலை இருக்கக் கூடாது. இது பாவியளுடைய மண். எங்கையாவது ஓடித் தப்பவேணும் தம்பியளிட்டை கெஞ்சிக் கூத்தாடி இரண்டு வரியமாய் அலைஞ்சு கனடவுக்கு வந்தன். நாய்க்கு நடுக்கடலிலை போனாலும் நக்குத் தண்ணிதான் என்பினம். இங்கை வந்ததுக்குப் பிறகுதான் விளங்கிச்சுது. நான் விட்டது பிழை எண்டு.

மெசின் மூச்சுவிடமல் ஓடுது. இப்ப எனக்குக் கிடைக்கிற ஒண்டுரண்டு செக்கன் ஓய்வுகூட உடம்பிலை ஒருவிதமான தெம்பைத் தருகிது. இதுதான் எனக்கு வாழ்க்கை எண்டாகிவிட்டால்! அதை சந்தோசமாய் ஏற்றுக் கொள்ள வேணும். திருப்பி உறுதியாய் நிக்கவேணும். அதுதானே மனிசனுக்கு அழகு. இல்லாவிட்டால் வாழவே முடியாது. ஆரோ என்னை உத்துக் பாக்கிறது போல ஒரு உறுத்தல் தெரியுது. என்னை அறியாமலே திரும்பிப் பாக்கிறன். எதிர மேலை பசு என்னைப் பாத்துக் கொண்டு நிக்கிறான்.

உன்னாலை இதுக்கு மேலையும் என்னை என்ன செய்துவிட முடியும்? ஒரு புழுவை பாக்கிறது போலை அலட்சியமாய் திரும்பி அடுத்த வாளியை எடுக்க குனியுறன். ஒரு ஐஞ்சு நிமிசந்தான் இருக்கும். முகாரி வந்தான். மேசையிலை ஆற வைச்சிருந்த வாளியை ஒண்டொண்டாய்த் தூக்கிப் பாத்தான். எதோபிழை திருத்திறதை போலை மெசின்டை கொம்பியூட்டரை திருகத் தொடங்கினான். ஒன்டு… ரண்டு … மூண்டு… ஓட்டையும் ஒடிசலுமாய் குறைச் சிசுக்கள் போல ஒரு பதினைஞ்சு வாளி விழுந்திருக்கும்.. எடுத்து குப்பையிலை போடச் சொல்லிவிட்டு ஏதோ கொம்பியூட்டரை கிண்டிக்கொண்டிருந்தான். இப்ப ஓரளவு நல்ல வாளிகளாக விழத்தொடங்கிச்சு.

அவன் இடத்தை விட்டுநகர்ந்தான். நான் வேலையைத் தொடர்ந்தன். ஆனா நான் ஒருவாளியை குனிஞ்சு எடுத்து முக்காவாசி வேலை முடியிறத்துக்கிடையிலை அடுத்த வாளி விழுகிது. என்னாலை முடிஞ்ச அளவுக்கு முயற்சி செய்து பாக்கிறன். முடியல்லை. இடையிலை என்னதான் நடந்திருக்கும்? நான்தான் சோந்துபோயிட்டேனோ? எதிரே ஓடிக்கொண்டிருக்கும் கொம்பியூட்டர் திரையைப் பாக்கிறன். ஓ! முப்பது செக்கனிலை ஓடிக்கொண்டிருந்த மெசின் இப்ப இருபத்தேழு செக்கனிலை ஓடுது. இதுக்கு மேலையும் எனக்கு பொறுமையாய் இருக்க முடியல்லை. நான் வாளியை எடுக்காமல் மெசினை பாத்தபடியே நிண்டன். வாளியள் விழுந்து மெசினுக்கு கீழை குவியிது. ‘மெக்கானிக் பசு’ கத்திக் கொண்டு ஓடியந்தான். உடனை மிசினை நிப்பாட்டினான். பின்னாலை முகாரி வந்தான். ஏதோ ஒன்டுமே தெரியாதது போலை என்ன நடக்கிதெண்டான். எனக்கு இந்த வேகத்திலை ஓட முடியாதெண்டன். வாக்குவாதம் பிலத்தது. முடிவு? அதைச் சொல்லவா வேணும்? அந்தப் பாகிஸ்தானிக்கு நடந்தது தான். “விருப்மெண்டால் வேலை செய். இல்லாட்டி வீட்டை போ? “

வெளியிலை இறங்கி நடந்தேன். விடியப்பறம் மூண்டு மணி. இரவு பஸ் சேவையும் முடிஞ்சுது. சில ரோட்டிலை இருபத்தி நாலு மணி நேர பஸ் சேவை இருக்கலாம். நான் ஊருக்கு புதிசு. ஒருநாளும் போனதில்லை. அதாலை எனக்கு வழி தெரியாது. பனி கொட்டிக் கொண்டிருந்தது. ரோட்டு கரையோரம் இருக்கிற எலட்ரோனிக் நேரங்காட்டியிலை குளிர் மைனஸ் இருபத்தி ரண்டு காட்டுது. ஆனால் எனக்கு பெரிசாய் குளிரயில்லை. ஒரு அரைமணி நேரம் நடந்தால் மெத்திரோ வரும். ஐஞ்சு மணிக்கு ஓடத் தொடங்கியிரும்.

மெத்திரோ சுவரோரத்திலை அழுக்கத் துணி மூட்டை போலை ஒண்டு குவிஞ்சு கிடக்கிது. நான் சினோ விளாத ஒதுக்குப் புறமாயிருந்த பெஞ்சிலை இருந்தன். இப்ப அங்கை என்ன நடக்கும் எண்ட நினைப்புதான் மனசிலை ஓடிச்சிது. பெரிசாய் என்ன நடக்கப்போகிது. மெசின் நல்லாய் வேகம் குறைக்கப்பட்டிருக்கும். புதிசாய் ஒருத்தன் மாஞ்சு கொண்டிருப்பான். போட்டுக்கொடுத்தவனுக்கு ஒரு பத்துநாள் சந்தோசம். கொஞ்சம் வேலை குறைஞ்ச மெசினை அனுபவிக்கலாம்.

பக்கத்திலை கிடந்த துணிமூட்டை அசைஞ்சுது. நான் பயந்து போனேன். உத்துப் பாத்தன். ஓ.. அதுக்குள்ளை ஒருத்தன் படுத்திருக்கிறான்.

பின்நேரம் வரயிக்கை பாத்தன். பிச்சைஎடுத்துக்கொண்டிருந்தான். பாவம் வீடற்றவன்

இந்த நாட்டின் ஆதிக்குடி.

௦௦௦௦

—————————————————————————————————————————————————

**************உங்கள் கருத்துக்களை உடனுக்குடன் பதிவிடுங்கள் (ஆசிரியர் குழு)************

—————————————————————————————————————————————————

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment