Home » இதழ்-05 » அவளுடலை தீண்ட வந்திராத மீன்கள்(சிறுகதை) —-குருசு.சாக்ரடீஸ்

 

அவளுடலை தீண்ட வந்திராத மீன்கள்(சிறுகதை) —-குருசு.சாக்ரடீஸ்

 

 

 

நிர்வாணமான பெண்ணின் உடலை கடலில் வீச அவர்களுக்குப் பயிற்சியொன்றும் இருந்திருக்கவில்லை. அவர்கள் பதினேழு பேர் இருந்தார்கள். மீன்பிடிடெக்கில் நின்றுகொண்டிருந்தவர்களைக் கண்டு மிரண்ட வெயில் மட்கத்துவங்கியது. தளதளத்த கடலின் மேனியை கிழித்தபடி நகர்ந்துகொண்டிருந்த தைவானி மீன்பிடிக்கப்பல் ஒரு சாயங்காலத்தை விரட்ட எந்த உபகரணங்களையும் கொண்டிருக்கவில்லை.

 

அவளுடல் கனத்திருக்கவில்லை. பிடிவாத உயிர் மிச்சமிருந்தது. கடல்நீரின் மகோன்னதக் குணங்கள் அவளது நீண்டகூந்தலை தொடர்ந்து சிதைத்திருந்தன. கூந்தலால் பின்புறமாகக் கட்டப்பட்டிருந்த கைகள் தோள்பட்டையிலிருந்து கழன்றுவிடும் சாத்தியம் தெரிந்தது. அவளுடம்பில் வழவழப்பு மறைந்துவிட்டிருந்தது. பரணில் வீசப்பட்ட ஒரு பிளாஸ்டிக் பொம்மையின் தோற்றத்தை மிச்சம் வைத்திருந்தாள்.

 

பதினேழுபேரும் நெடுங்காலக் கடற்கொள்ளையர்களின் தோற்றத்தை அடைந்திருந்தாலும் வேட்டையின் கண்ணியில் தொங்கிகொண்டிருக்கும் மீன்வேட்டையர்களைப் போலக் குணத்தை மிச்சம் வைத்திருந்தார்கள். பலநாட்டு முகச்சாயல் கொண்ட அவர்களைக் கடலின் முரட்டுமொழி அதிர்ஷ்டத்தின் கண்ணிகளால் பிணைத்திருந்தது. தெற்கத்திய முகமே அதிகமும் தென்பட்டன. அவர்கள் பயன்படுத்திய மீன்பிடி கப்பல்கூடத் தைவான் மீனவர்கள் மூழ்கடிக்கக் கொண்டுவந்த நவீனரக டிராலர்தான். நிரந்தரப் படகுகளை அவர்கள் சுமக்கும் வழக்கமில்லை. ஆறுமாத வேட்டை காலத்தில் கிடைத்த படகுகளைப் பயன்படுத்திக்கொள்வதையே விரும்பினார்கள். நிரந்தரப் படகுகளும் நிரந்தர வாழிடங்களும் அவர்களது கனவுகளில் கூட எட்டிப்பார்ப்பதில்லை.

 

தைவான் மீன்பிடிகப்பலை கைப்பற்றிக் கொள்ளச் சிறிய யுத்தம் செய்ய வேண்டியிருந்தது. யுத்தகணத்தில் கொள்ளையர்களில் நான்குபேர் கடலின் அடியில் தமக்கான சமாதியை தேடிப்போனார்கள். கணிக்கஇயலா யுத்தகணத்தில் பொருதிகொண்ட அவர்களை அதிர்ஷ்டமும் துரதிர்ஷடமும் கைவிட்டிருந்தது.

தைவான் மீனவர்களை வதைத்துகொல்லும் திட்டத்தைச் சீட்டுக்குலுக்கி அவர்கள் தேர்வு செய்தார்கள். எதையும் சீட்டுகுலுக்கி தேர்ந்தெடுப்பது அவர்களது வழக்கமென்றாலும் கைப்பற்றிய மீன்பிடிக்கப்பலில் அதற்கான பொருட்கள் இருந்திருக்கவில்லை. அவர்களால் கைவிடப்பட்ட பைபர் படகுகளில் அதற்கான வசதியிருந்தது. தைவான் மீன்பிடிக்கப்பல் யார்டிலிருந்து கிளம்பிய மேனிக்கே இருந்தது. வலைகளை வீச பயன்படுத்தும் ரோப்புகள் டிரம்மிலிருந்து முன்னோர்களால் உருவப்பட்டிருந்தன. மீன்பிடிவலைகளின் துண்டைகூட விட்டுவைத்திராத தைவானியமுன்னோர்களைக் கொள்ளையர்களால் வழிபடமுடியவில்லை. இன்சூரன்ஸிற்காக மூழ்கடிக்கக் கொண்டுவந்திருந்தாலும். மீன்பிடிக்கப்பலின் வெளிப்புற தோற்றத்தை தைவானிகள் சிதைத்திருக்கவில்லை.

 

அவர்கள் கொண்டுவந்த நான்கு பைபர் படகுகளும் திசை மாறியிருந்தன. பலதிசை நீரோட்டங்களும் முட்டிகொள்ளும் தாமிரா கிரவுண்டில் நீரோட்டத்தில் படகுகள் இழுபடுவது கவலைகொள்ளும் விஷயமல்ல. வேகமான நீரோட்டமென்றாலும் மேற்புறத்தில் அதைக் காண்பித்திருக்கவில்லை. ஆழ்கடலுக்குப் பொருத்தமான படகுகள் இல்லையென்றாலும் பெரும்பாலான தாக்குதலுக்கு அதைப் பயன்படுத்தியிருந்தார்கள். விரிக்கப்பட்ட வலைகளை அறுத்துக்கொண்டு நுழைய பெரும்பயிற்சியுள்ள படகுகள். மீன்பிடி காலங்களில் கொள்ளையிட பைபர் படகுகளே சௌகரியமானவை. திசைக்கொன்றாக வந்து தாக்கவும் தப்பிக்கவும் பயன்படுத்தியதை விட்டுபோகும் மனசை அவர்கள் கொண்டிருக்கவில்லை.

 

அதிலொன்றை கைப்பற்ற கடலில் குதித்த கொள்ளையன் சிறிது நேரத்திலேயே மீன்களிடம் கால் ஒன்றை பறிகொடுத்தான். அலறுவதற்கான சந்தர்ப்பத்தை அம்மீன்கள் அவனுக்கு வழங்கியிருக்கவில்லை.

 

அம்மீன்கள் எவ்வகையைச் சார்ந்ததென்று அறிந்துகொள்ள அவர்கள் பெருமுயற்சி எடுக்கவேண்டியிருந்தது. தாமிரா கிரவுண்டில் பயங்கரக் குணமுள்ள மீன்கள் கிடையாது. வங்காளவிரிகுடாவின் எப்பிரதேசங்களிலும் அம்மீன்கள் அவர்களது கண்களுக்குத் தென்பட்டிருக்கவில்லை. இனப்பெருக்கத்திற்காக இடம்பெயரும் வகையினமல்ல. பெருந்துக்கத்தில் கூட வாழிடங்களைக் கெட்டியாகப் பிடித்தலையும் கோளா வகையைப்போலத் தோன்றின.

 

அன்றைய உணவிற்காக அவனைக் குதறிக்கொண்டிருந்த மீன்கள் மேற்புறத்தில் தலைக்காட்டாமல் தங்கள் காரியங்களை நடத்தி கொண்டிருந்தன.

 

அவனை மீட்பதற்கான முயற்சிகளைக் கொள்ளைகுழு எடுத்திருக்கவில்லை. மரணத்திலிருந்து மீட்பதற்கான மருத்துவமுறைகளையொன்றும் அவர்கள் அறிந்துவைத்திருக்கவில்லை. சில கடலோடி மருத்துவங்களில் அவர்களுக்கு முறையான பயிற்சியொன்றுமில்லை. சிலவகைக் கடற்பாசிகள் சதைமுறிவுகளைக் குணமாக்குமென்றாலும் துரிதபயன்பாட்டிற்குப் போதுமானவையல்ல. கொப்பளிக்கும் ரத்தத்தைக் கடவுளாலும் நிறுத்தமுடியாதென்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள்.

 

மரண அலறல்களைக் கேட்டுப் பழகியிருந்தார்கள். வழக்கத்திலில்லாத விஷயங்களைக் கடல் பரப்பில் அவர்கள் முயற்சிப்பதில்லை. வேட்டைக்குக் கிளம்பிய சொற்ப நாட்களில் ஐந்துபேரை இழந்திருந்தார்கள். அதிர்ஷ்டம் பின்வாங்கியிருந்தது.

 

தாமிரா கிரவுண்டில் பெரும்பாலும் இரால்வகைகளே இனப்பெருக்கத்திலிருந்தன. அவைகளுக்குக் கொடூர குணமொன்றுமில்லை. உண்ணத் தோதான அவைகளை மனிதர்களும் சில மீன்வகைகளுமே விரும்பின.

 

கடலில் இனப்பெருக்கத்திற்கான கிரவுண்டுகள் பல இருந்தனவென்றாலும் மீன்பிடிக்கப்பல்களுக்கு வசதியான இடம் தாமிராகிரவுண்டுதான். கடலின் அடியாழம் வரை வலைகளை விரித்து இழுத்துகொண்டு நகரும் இழுவைகப்பல்களே அக்கிரவுண்டில் மேய்வது வழக்கம். அதிஆழமுள்ள அவ்வெளியில் பல விசித்தரங்களும் இன்சூரன்சிற்காக மூழ்கடிக்கப்பட்ட மீன்பிடிக்கப்பல்களும் இருந்தன.

 

மூழ்கடிக்கப்பட்ட பொக்கிஷகப்பல்களைக் குறித்த ஆர்வங்கள் அப்பிரதேசத்தின் மீது இருந்திருக்கவில்லை. தாமிரா கிரவுண்டு கடலில் தான் இருந்ததென்றாலும் அது நடைமுறை வாழ்கைக்கு வெளியே இருப்பதாகப் பல கற்பனைகள் உலாவந்தன. மீன்வேட்டை வரைபடங்களில் ஆபத்தற்ற வெளியாகவே குறிக்கப்பட்டிருந்தாலும் வேட்டைக்காலங்களில் திமிறிக்கொண்டிருக்கும் அதன் சுவாபத்தை வரைபடங்கள் கணக்கிலெடுத்துக் கொண்டிருக்கவில்லை.

 

அப்பெண்ணின் உடலை தாமிராகிரவுண்டில் எறிவதற்கு முன்னால் அவளது கைகளைப் பின்புமாகப் பிணைத்து நீண்ட கூந்தலால் கட்டினார்கள். நீண்ட கூந்தலுள்ள பழங்காலவகையைச் சார்ந்தவளென்றாலும் நவநாகரீக வழக்கங்களின் அடையாளங்களும் அவளுடம்பில் காணக்கிடைத்தன. விசேஷ எண்ணைவகைகளையே கூந்தலுக்குப் பயன்படுத்தியிருந்தாள். துருப்பிடித்த கட்டுகம்பியின் உருவத்தைக் கூந்தல் அடைந்திருந்தது. நீண்ட கூந்தல் வகையினத்தின் கடைசிபெண்ணாக இருந்தாள்.

 

அந்தரத்தில் வீசி எறியப்பட்ட உடல் கொஞ்சநேரம் காற்றில் மிதந்தது. கப்பலின் மீன்பிடி டெக்கில் நின்ற பதினேழு பேரும் அவ்வுடல் காற்றில் மிதப்பதை சிலகணங்களேனும் ரசித்திருக்கவேண்டும். ஒரு பறவையின் கதியை அடைந்துவிடும் சாத்தியங்கள் அவ்வுடலுக்கு இருந்திருக்கவில்லை. நிலைதடுமாறி கப்பலின் பக்கப்பலகையில் மோதிவிடும் சாத்தியங்களே தென்பட்டன.

 

நிர்வாண உடல் ஒரு கர்ணத்துக்குத் தயாரானதுபோல் ஆட்டம் கொடுத்தது. அவளுடலில் மிச்சமிருந்த உயிரைப்போலத் தளர்ந்து தண்ணீர் பரப்பை நோக்கி வேகமாக இறங்கியது. எலும்புகள் நொறுங்கிவிடும் வேகத்தை உடல் அடைந்திருந்தது.

அவளுடலின் பாரத்தில் தண்ணீர் வெடித்து வர்ணங்களைத் தூவியது.

 

அவள் உயிரை மிச்சம்வைத்திருந்தது அவர்களுக்கு வருத்ததைத் தந்திருந்தது. நெடுநேரம் நீடித்திராத வருத்தம் உப்புகாற்றில் கரையத்துவங்கியிருக்கவேண்டும். அவளது உடலை துண்டு துண்டாக வெட்டியெறியவே விரும்பினார்கள். சீட்டுகுலுக்கியதில் அதிர்ஷ்டம் அவள் பக்கமாகத் திரும்பிவிட்டது. அதிர்ஷ்டத்தின் எல்லாப் பக்கங்களையும் அவர்கள் ஆதரிப்பவர்களென்பதால் அவளுடலை சேதப்படுத்தியிருக்கவில்லை.

 

கணக்கற்ற நாட்களாக அவளுடலின் அங்கங்களைச் சுவைத்திருந்தாலும் அவள் ருசியை அவர்கள் கண்டடைந்திருக்கவில்லை. அவளது முலைகளில் கடலின் மூர்க்கத்துடன் பதிக்கப்பட்டிருந்த பற்களின் வடுக்கள் எண்ணிக்கையைத் தாண்டிருந்தன. அவளது முனகலுக்கு எற்ப கிழிந்திருந்த உதடுகளில் எந்த யாசிப்பும் இருந்திருக்கவில்லை.

 

அதிர்ஷ்டமும் துரதிர்ஷ்டமும் நிரம்பிய கடலில் கொள்ளையர்கள் அவளைக் கைவிட்டிருந்தார்கள்.

 

தொடர் மயக்கத்திலேயே அவளுடல் இருந்துவந்தது. நேரங்காலமற்று ஒரு பெண்ணைப் புணர்வதாகவே அவர்கள் நினைத்திருக்கவேண்டும். ரத்தம் ஒழுகிகொண்டிருந்த யோனியில் கடலின் இரைச்சலை அவர்கள் கேட்டிருக்கவில்லை. மீன்பிடி டெக்கில் உணர்வற்று வெளியேறிய மூத்திரத்தை கழுவிவிட அவர்களுக்கு எந்த வெட்கமும் இருந்திருக்கவில்லை.

அவர்களது கைக்குக் கிடைப்பதற்குமுன் அழகானவளென்று பெயரெடுத்திருந்தாள். கணிக்க இயலாத இளவயது பெண்ணான அவளுடம்பில் தத்தமது அடையாளங்களைப் பதிக்கப் போட்டியிட்டார்கள். அடையாளங்கள் அரூப ஓவியத்தின் அழகையிழந்து குரோதத்தின் வடிவை அடைந்திருந்தன. தறிகெட்ட பாய்ச்சலுக்கு எதிர்ப்பொன்றையும் அவ்வுடல் காண்பிக்கவில்லை.

 

ஹ_க்கிளி ஆற்றின் பொழிமுகத்திலிருந்து அவர்கள் வெளியேறிகொண்டிருந்தபோது சாகர் தீவின் தெற்கில் நடந்த சண்டையில் சிறிய சொகுசு படகிலிருந்து அவளைக் கைப்பற்றியிருந்தார்கள். அவளைச் சோனகஞ்சில் விற்பதற்காகச் சில வியாபாரிகள் அழைத்துபோய்கொண்டிருந்தார்கள். அரைமயக்கத்திலிருந்த அவளும் சிலஉயர்ரக மதுவகைகளும் டின்களில் பதப்படுத்திய உணவுகளும் கொள்ளையில் கிடைத்தன. குடிநீரை சேகரிக்க ஹ_க்கிளி பொழிமுகத்துக்குப் போய்விட்டு திரும்பும்பொழுது அதுபோன்ற பெரியவேட்டையை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.

 

சொகுசுப்படகிலிருந்தவர்கள் எதிர்பொன்றும் காண்பித்திருக்கவில்லையென்றாலும் அதிர்ஷ்டம் வியாபாரிகள் பக்கமிருந்திருக்கவில்லை. கொல்வதற்கு முன் அவளைப்பற்றிய விவரங்களை அவர்கள் சேகரித்திருக்கவில்லை. வியாபாரிகள் மரணபயத்தில் வார்த்தைகளை மறந்திருந்தார்கள். பேசுவதற்கான அவகாசமும் கிட்டவில்லை. சொற்ப நிமிடங்களில் யுத்தம் முடிவிற்கு வந்திருந்தது.

 

கொள்ளையர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் மழுங்கிப்போயிருந்தன. குண்டுகள் தீர்ந்த நாட்டுத்துப்பாகிகளே கைவசமிருந்தன. வியாபாரியின் தலையைத் துண்டிக்க இருபத்தி எட்டுமுறை மழுங்கிய வாளால் கொள்ளையர்களில் ஒருவன் கொத்திக்கொண்டிருந்தான். போதிய பயிற்சி அவனுக்கு இருந்தபோதிலும் பெரிய மீன்களை வெட்டிவிட்டு அதைச் சாணைபிடிக்க மறந்திருந்தான். சாணைபிடிக்கும் வசதிகளொன்றும் தைவான் மீன்பிடிக்கப்பலில் இல்லாதிருந்தது. கிச்சனிலிருந்த பல ரகக் கத்திகளும் மழுங்கிப்போயிருந்தன.

 

பலமாதங்களுக்குப் போதுமான டீசல் டாங்குகளில் இருந்தது. மீன்பிடிக்கப்பலின் டீசல் தீரும்வரை பயன்படுத்திவிட்டு இறங்கப்போகும் கரையோரங்களில் எலும்புகூடாகக் கைவிடுவதையே வழக்கத்தில் வைத்திருந்தார்கள். வேட்டைகுணம் நிரம்பிய அவர்கள் உறங்குவது குறைவென்றாலும் படுக்கைவசதி கொண்ட தைவான் மீன்பிடிக்கப்பலை விரும்பவே செய்தார்கள். இன்சூரன்சிற்காக மூழ்கடிக்ககொண்டு வந்திருந்தாலும் பழக்கவழக்கங்களை மாற்றிவிடும் வசதிகளை யாரும் குலைத்திருக்கவில்லை. பழங்காலத் தோற்றத்திலிருந்தாலும் உறுதியான மீன்பிடிக்கப்பலது. தைவானிய செய்நேர்த்தியை கொள்ளையர்களிலொருவன் தொடர்ந்து முணுமுணுத்து அலைந்தான்.

 

பாரத்தீபின் சந்துபொந்துகளில் தற்காலிக குடும்பங்கள் வாடகைக்குக் கிடைத்துவந்தன. பழந்துணிகளைப்போலச் சுருண்டுகொள்ள இடப்பரப்புள்ள கச்சிதமான வீடுகள். பிக்கலும் பிடுங்கலும் அனவாசிய வார்த்தைகளும் நிரம்பிய பெண்கள் புழங்க தோதான வரவேற்பை வைத்திருந்தார்கள். வேட்டை முடிந்து திரும்புகிறவனைக் குளிர்விக்கப் போதுமான வெப்பத்தை அப்பெண்கள் கைவசம் வைத்திருந்திருக்கவேண்டும். கொள்ளையிட்ட பொருட்களை வாங்கவரும் ஏஜென்றுகள் அப்பெண்களோடு தொடர் நட்பிலிருந்த பரசியத்தை யாரும் கண்டுகொள்வதில்லை.

 

அவள் கைப்பற்றபட்டபோது போதுமான உடைகளை அணிந்திருந்தாள். கல்லூரி மாணவிக்குரிய தோற்றம் தந்திராத அவ்வுடைகளின் நிறம் கொள்ளையர்களுக்கு மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. பளப்பளப்பான கிராமச்சாயல் கொண்ட பட்டுப்பாவடையை அணிந்திருந்தாள். மேற்புற சட்டையைப் பொதிந்த கோட் அவளை அழகானவளாய்க் காண்பித்தது. பாவாடையினுள் நீண்ட தொடைகளைக் கௌவிக்கொண்டிருந்த கால்சாராயை அவர்கள் அதற்குமுன் கண்டதில்லை. மயக்கத்திலிருந்தாலும் சூடான மூச்சுக்காற்றைப் படரவிட்டாள்.

 

நடன அரங்கிலிருந்து தூக்கி வரப்பட்டிருக்க வேண்டும். தூக்கி வந்தவர்கள் எந்த நகையையும் அவளிடம் விட்டுவைத்திருக்கவில்லை. அவளது காதுகளிலிருந்த பிளாஸ்டிக் அணிகலனை கொள்ளையர்களிலொருவன் கழற்றிப் பத்தரப்படுத்தினான். தெற்கத்திய நாட்டைச் சேர்ந்த அவனுக்கு அவளைப்போன்ற காதலி இருந்தாள். வடக்கிலிருந்து ஒன்பது டிகிரி முப்பத்தெட்டு மினிட் நாற்பது செகன்றுகளைப் பாகைமானியில் திசைவைத்தால் அவனால் காரங்காட்டையும் காதலியையும் அடைந்துவிட முடியும். தென்பகுதிக்குப் போய்ப் பலவருடங்கள் ஆகிவிட்டது. காதலிகுறித்த எண்ணங்கள் தொலைந்திருக்கவில்லை.

 

கடலோடிகளாய் இருந்தபோதும் கொள்ளையர்களின் தோற்றத்தை அவர்களால் மறைக்க இயலவில்லை. பெரும்பாலும் மீன்பிடிப்படகுகளையே பயன்படுத்திகொண்டிருந்ததால் கடற்படையின் ரடார்களில் அதிகப்பிரசங்கித்தனமான மீன்பிடிக்கப்பல்களைபோல உலவமுடிந்தது. பொதுவே கடல்ப்பரப்பில் கெடுபிடிகளுக்குப் பஞ்சமொன்றுமில்லை.

 

கொள்ளையடிக்கும் படகுகளின் இன்ஜின்களையும் மீன்பிடி வலைகளையும் வாங்கிகொள்ள விசாகப்பட்டணத்தில் ஏஜென்றுகள் இருந்தார்கள். சொற்ப விலைக்கே பொருட்கள் கைமாறினவென்றாலும் தொழிலில் நாணயமிருந்தது. வேட்டையொழிந்த காலங்களில் ஏஜென்றுகள் தாராள குணங்களைத் திறப்பதுண்டு.

 

சர்வதேச எல்லை கடந்துவரும் மீன்பிடிக்கப்பல்களைத் தாக்குவதே எளிதாக இருந்தது. எதிர்பற்ற அவர்களைத் தாக்குவதில் எந்தச் சுவாரஸ்யமும் இருப்பதில்லையென்றாலும் பறிகொடுத்த உடமைகளைக் குறித்த முணுமுணுப்பொன்றும் அதிகமாக எழுவதில்லை. வலைவிரித்துத் திணறிக்கொண்டிருக்கும் தருணத்திலேயே அவர்கள் தாக்குவது வழக்கம். தைவான் மீனபிடிகப்பலை தாக்க அவர்கள் எந்தவொரு முன்னேற்பாடுகளும் செய்திருக்கவில்லை. நான்குபுறமும் பைபர் படகில் வந்து சூழ்ந்துகொள்ளும்வரை மரணவாதைகள் மீன்பிடிக்கப்பலில் உறங்கிகொண்டிருந்திருக்கவேண்டும். எதிர்பாரா தாக்குதலுக்கு நான்கு பேரை பிணமாக்கிவிட்டுதான் தைவானிகள் அடங்கினார்கள்.

 

கைவசத்தில் கிட்டும் பொருட்களைப் பங்குபிரிக்கப் பெரும்பாலும் சண்டையிட்டுகொள்வதில்லை. அவளுடைய உள்ளாடைகளைச் சீட்டுக்குலுக்கியே பகிர்ந்துகொண்டார்கள். சீட்டுக்குலுக்கும் சடங்கிற்குப் பிரதான பொருட்களொன்றும் தேவையில்லை. துரதிர்ஷ்டத்தின் கண்ணிகளிலிருந்து விடபடவே தொடர்ந்து சீட்டுகளைக் குலுக்கிகொண்டிருந்தார்கள். எல்லாகட்டத்திலும் அதிர்ஷ்டம் நிரம்பிய ஒருவன் கூட்டத்தில் இருந்துகொண்டிருந்தான்.

 

சொகுசுப்படகிலிருந்த வியாபாரிகளைப் பரலோகராஜ்யங்களுக்கு அனுப்பிவிட்டுப் படகை பாகம்பாகமாகப் பிரித்து மீன்பிடிகப்பலில் ஏற்ற அதிக நேரமொன்றும் எடுத்திருக்கவில்லை. கிடைத்த மதுவகைகளும் போதுமான சுவையுடன் இருக்கவில்லை. சுட்ட மீன்கள் சுண்டகாய்ச்சிய சாராயத்தின் ருசியை அதிகப்படுத்திவிடுவதை அவர்களால் கற்பனை செய்யமட்டுமே முடிந்தது.

 

அவள் நிர்வாணமாக்கப்பட்டபோது எழுந்த கூச்சலை அவர்களாலேயே சகித்திருக்க முடியவில்லை. அவளைக் கடத்திவந்த சொகுசுபடகிலிருந்த மூவரும் போதுமான போதையை ஏற்றியிருந்தார்கள். அளவுகடந்த போதையால் அவள் தொடர் உறக்கத்திலிருந்தாள். உடலின் வேதனையில் அவள் முனகினாளவென்பதை யாரும் கவனித்திருக்கவில்லை. போதையில் எதுவும் அறிந்திருக்கமாட்டாளென்ற நம்பிக்கையிருந்தது. அவளைக் குளிப்பாட்டும் போது விழிப்பாளென்ற நம்பிக்கையைப் பலமுறை பொய்ப்பித்திருந்தாள். பதப்படுத்தப்பட்ட மீனின் கதியை அவள் அடைந்திருக்கவேண்டும்.

 

காலமற்ற வேட்டையை அம்மீன்கள் கொண்டலைந்தன. ஒரு காலின் பெரும்பகுதி சதைகளைத் தின்றுவிட்டிருந்தன. மீன்கள் ஆவேசத்தையொன்றும் காண்பித்திருக்கவில்லை. ருசித்து உண்ணவும் கூட்டத்திற்கு வழிவிடவும் மீன்கள் பயிற்சி பெற்றிருந்தன. மிகச்சோம்பேறியான மீன்கள் குழந்தை தவழுவதுபோல நரங்கி நீந்தின.

 

பைபர் படகுகளை இழக்க அவர்களுக்கு விருப்பமில்லாதிருந்தது. அதற்கான முயற்சிகளில் இன்னொருவனையும் பலியிட அவர்களது புத்திசாலித்தனம் தடுத்தது. மீன்கள் கொத்துவதை வேடிக்கைப்பார்க்க அவர்கள் விருப்பங்கொண்டிருக்கவில்லை.

 

அவனது அலறலுக்கு ஏற்ப தொற்றிக்கொண்டிருந்த பதற்றம் தண்ணீரெங்கும் பரவிக்கொண்டிருந்தது. ரகசியங்களிலிருந்து பிறப்பிக்கப்பட்ட மீன்வகைகளைக் குறித்துக் கொள்ளையர்கள் அறிய முயன்றார்கள். கடலின் மறைந்துவிட்ட குணாம்சங்களை மீட்டெடுக்க அம்மீன்கள் முயற்சித்திருக்க வேண்டும்.

 

மீன்பிடிக்கப்பலை திருப்பி நீரோட்டங்களில் பயணித்துக்கொண்டிருந்த பைபர்படகுகளை மீட்க அவர்கள் காண்பித்த கூத்துகளைக் கண்டு கடல் சிரித்தது. மீன்பிடி டெக்கில் வெட்டுபட்டுகிடந்த தைவானிகளை ஷவலால் கோரி வெளியே எறிந்தார்கள். கடல்பரப்பில் அநாவாசியமாக மிதந்துகொண்டிருந்த உடற்பாகங்களை மீன்கள் கண்டுகொள்ளவில்லை.

 

கொள்ளையர்கள் மறைந்து வாழ தோதாக நீர்விலகிய பவளத்தீவுகள் நிகோபாரின் அருகே இருந்தன. தற்காலிக ஓய்விற்கும் பதுங்கிப்பாயும் வேட்டைகளுக்கும் பவளப்பாறைகள் வசதியை தக்கவைத்திருந்தன. அங்கேயிருந்த நண்டு இன பழங்குடிகளும் அவர்களைத் தொந்தரவு செய்வதில்லை. நண்டு இன பழங்குடிகளுக்கு ஆராய்ச்சிகூடங்களில் நல்ல விலைகிடைத்து வந்தது. நண்டு இன பழங்குடிகளைப் பிடித்துபோக வரும் ஏஜென்றுகளின் கப்பல்களை வேட்டையாட கொள்ளையர்கள் கடல்பரப்பெங்கும் பொறிகளை வைத்திருந்தார்கள். மிருககாட்சிசாலைகளில் நண்டு இன பழங்குடிகளின் வித்தைகளைக் காட்சிபடுத்த முயற்சித்துகொண்டிந்த குழுக்கள் வந்துபோன கப்பல்கள் கசியவிட்டிருந்த எண்ணைபிசுக்குகள் பவளப்பாறைகளில் மினுமினுப்பை ஏற்றியிருந்தது. எண்ணைபிசுக்களை உறிஞ்சிவிடும் பாசிகள் தென்கடலில் இருந்தன.

 

நண்டு தீவுகள் அந்தமானுக்கு வடக்கே பர்மாவின் கடலோர கால்மாட்டிற்குத் தென்மேற்கே இருந்தன. நண்டுகளின் பழக்கவழக்கங்களைக் கொண்டிருந்த பழங்குடிகள் நீர் சூழும்காலங்களில் பாறை மாற்ற பெருங்கூட்டமாக வெளியே வருகிறபோது வேட்டைக்கு வாய்ப்பிருந்தது. சரக்குகப்பல்களின் நீர்தடங்களுக்கு வெளியே வெகுதொலையில் நண்டுதீவுகள் இருந்தன. வடக்கிலிருந்து பதினைந்து டிகிரி நாற்பத்தியொன்று மினிட்டுகளும் கிழக்கிலிருந்து எண்பத்தி ஒன்பது டிகிரி முப்பத்தி ஏழு மினிட்டுகளையும் பாகைமானியில் யாரும் வைத்தால் நண்டு தீவருகே சுற்றியலையும் கொள்ளையர்களின் வாயில்போய் விழவேண்டியிருக்கும். நண்டுஇன பழங்குடிகளைப் பிடிக்கவரும் ஏஜென்றுகளுக்குக் கொள்ளையர்களைத் தெரிந்தேயிருந்தது. தற்காப்பு ஆயுதங்களின் முன் கொள்ளையர்கள் நடனமிடவே செய்தார்கள். உயிரை மிச்சப்படுத்தவும் வழியற்ற வெறிகொண்ட யுத்தங்களை யாரும் விரும்புவதில்லை. வேட்டை எல்லாப் பக்கங்களிலும் மரணச்சுவையுடன் அலைந்தது. திசைமாறும் டாங்கர்களைக் கொள்ளையர்கள் நெருங்குவதில்லையென்றாலும் அவைகள் அடிக்கடி திசைமாறின. கொள்ளையர்களை நோட்டமிட சாத்தியமற்ற டாங்கர்கள் கசியவிடும் எண்ணையை மோப்பம்பிடித்து ஆராய்ச்சிபடகுகள் வந்துவிடுவதுண்டு.

 

தைவான் மீன்பிடிக்கப்பலில் இருந்த ரடார் செயலற்றுப் போயிருந்தது. உயிர் மிச்சமிருந்த எக்கோசவுண்டரின் உதவியுடன் மீன்களின் நடமாட்டத்தைக் கணிக்கமுடியவில்லை. அவ்வகை மீன்களைத் தாமிரா கிரவுண்டில் அதற்கு முன் யாரும் கண்டிருக்கவில்லை. இரால்கள் குஞ்சுபொரிக்கும் காலங்களில் வந்துபோகும் மீன்களாயிருக்கலாம். பருவசுழற்சி கடலின் நிரோட்டங்களை அடிக்கடி மாற்றிவிடுகிறது. நீரோட்டத்தில் இடம்பெயரும் மீன் இனம்போலத் தோற்றம் தந்திராத அவைகளைக் கண்டுகொண்டிருக்கக் கொள்ளையர்களுக்குத் துளியும் விருப்பமில்லை. அவன் முழுதாகச் சிதையுமுன்னே மீன்பிடிக்கப்பலை திசைமாற்றியிருந்தார்கள்.

 

தைவான் மீன்பிடிகப்பலின் விஹச்எப் ரேடியோ உயிரோடிருந்தபோதும் யாரும் தொடர்பு கொண்டிருக்கவில்லை. தைவானிகளைக் குறித்த அக்கறை கரையிலிருந்தவர்களுக்கும் இருந்திருக்கவில்லை. தகவலற்ற விஹச்எப் ரேடியோ தைவானிகளின் மேல் இனம்புரியாத பாசத்தைக் கசியவிட்டது. கொள்ளையர்களிலொருவன் பலவித்தைகளையும் விஹச்எப் ரேடியோவின் மேல் பிரயோகித்துப் பார்த்தான். சுக்குநூறாக்கப்பட்ட விஹச்எப் ரேடியோ கடலில் எறியப்பட்டதை மீன்பிடிகப்பலின் சுக்கானை இயக்கிகொண்டிருந்த இரவுகடவுள்கூட அறிந்திருக்கவில்லை. கொள்ளையர்கள் மூழ்கடித்த கப்பல்குறித்த தகவல்களைக் கசியவிடும் வழக்கத்தை வைத்திருந்தார்கள். தைவானிகளுக்கு அப்பாக்கியம் கிட்டியிருக்கவில்லை. தைவான் மீன்பிடிகப்பலில் இருந்த பொருட்கள் தந்த ஆசுவாசம் எல்லாவற்றையும் மறக்கவைத்தது.

 

மீன்பிடிபொருட்களையெல்லாம் தைவானிகள் ஏற்கெனவே காயலான்கடைக்குப் போட்டிருந்தார்கள். இன்ஜின் ரூமில் யாரும் கைவைத்திருக்கவில்லை. இரண்டு ஜெனரேட்டர்களும் நல்லநிலையிலேயே இருந்தன. மீன்களைப் பதப்படுத்தும் கூலர்களும் உயிரோடு இருந்தன. மெயின் இன்ஜினை பாகம்பாகமாகத்தான் பிரித்து வெளியே கொண்டுபோகமுடியும். செயின்பிளாக் வைத்து தூக்கிவிட வாய்ப்;புண்டென்றாலும் இன்ஜின் ரூமை உடைக்கவேண்டியிருக்கும். நெடுங்காலக் கடலோடிகளின் விருப்பங்களுக்கேற்ப வடிவமைக்கப்பட்ட இயந்திரங்கள். இன்ஜினை கூல் செய்ய வைக்கப்பட்டிருந்த பம்புகளே பெருந்தொகைக்குப் போகும். ஆறுமாதங்களுக்கு விற்றுதின்ன போதுமான புரபெல்லர் ராடு மரணபயங்களை விரட்டியிருந்தது. ராட்சஸ புரபெல்லரில் கொள்ளையர்கள் முகம்பார்த்துகொள்ளுமளவு பிரகாசத்தைத் தண்ணீரிலிருந்தபடி காண்பித்துகொண்டிருந்தது. உட்புறங்களில் தவிர்க்கஇயலா நீர்கசிவுகள் இருந்தன. ரசனையுள்ள யார்டில் போனால் அவைகளை ரிப்பேர் செய்துவிட முடியும்.

 

உறங்க சௌகரியமுள்ள கேபின் இருந்தது. மிகசிறிய கிச்சனில் வாழ்க்கையில் ஒருமுறையேனும் கழுவப்பட்டிராத ஸிங்கும் சில காஸ் சிலிண்டர்களும் தென்பட்டன. நண்டுஇன பழங்குடிகளைப் போல மீன்களைப் பச்சையாக உண்ண கொள்ளையர்கள் பழகியிருக்கவில்லை. வெண்ணைத் தடவிய அரைவேக்காட்டு மீன்களை மரணத்தின் முன் உண்ண தைவானிகள் விட்டுபோயிருந்தார்கள்.

 

மூழ்கடிக்கக் கொண்டுவரப்பட்ட தைவான் கப்பலில் இருந்தவர்கள் எதற்காக யுத்தத்தைத் துவக்கினார்களென்பதை கொள்ளையர்களால் கணிக்கமுடியவில்லை. உயிர்பயத்தின் துவக்கத்திலேயே யுத்தத்தில் குதிப்பது முறையல்ல. நெறியற்ற யுத்ததந்திரத்தின் முன் தைவானிகளின் உடற்பாகங்களே எஞ்சின. தைவானிகள் கொடூரசாவை குறித்து அறிந்தேயிருந்தார்கள். ஆயுதம் தீர்ந்துவிட்ட நிலையிலும் யுத்தம்செய்த அவர்களைக் கண்டு கொள்ளையர்களுக்கு ஆச்சரியமொன்றுமில்லை.

 

மீன்பிடி டெக்கில் அவளுடலை தொடர்ந்து வைத்திருக்கும் விருப்பம் வடியத்துவங்கியது. சீட்டுக்குலுக்கலில் பிழைத்த உயிரை மீன்களுக்கு ஊட்ட முயற்சித்தார்கள். அம்மீன்கள் தாமிரா கிரவுண்டிலேயே நிரந்தரமாகியிருக்கவேண்டும். மாறிவிட்டிருந்த நீரோட்டத்தின் முகங்களை நீர்ப்பரப்பு அறிவித்திருக்கவில்லை. சதையுண்ண காத்திருக்கும் மீன்கள் பதுங்கிய இடம் எக்கோசவுண்டருக்கு தெரிந்திருக்கவில்லை. எக்கோசவுண்டர் பச்சோந்திபோலக் காலை வாரியிருந்தது. மின்னணுப்பொருட்களோடு அவர்களுக்குப் போதுமான பயிற்சியுண்டென்றாலும் பதட்டம் சகோதரனைப்போல முன்நின்றது. தாமிரா கிரவுண்டு முழுவதும் பரவிய எக்கோசவுண்டரின் அலைகற்றைக்கு வெளியே மீன்கள் இருந்தன. சீட்டுகுலுக்கலில் தப்பிக்கும் அதிர்ஷ்டத்தின் உயிரை மீன்கள் விரும்பின.

 

கூந்தலால் அவளது கைகள் கட்டப்பட்டிருந்தாலும் வீசப்பட்ட வேகத்தில் கடலின் அடிப்பரப்பு வரை போய்விட்டு மேலே வந்திருந்தாள். போதம் தெளிந்திராத அவளுடல் கடலை கிழித்தபடி தண்ணீர் பரப்பிற்கு ஏறியிருந்தது. கொள்ளையர்களின் ஆச்சரிய முணுமுணுப்புகள் கடற்சாபத்தின் தன்மையை அடைந்திருந்தன. அவளது நுரையீரல்களில் தண்ணீர் ஏறியிருந்தாலும் மருத்துவ விதிகளுக்கு உட்படாமல் சுவாசித்துக்கொண்டிருந்தாள். சீழ்கையடித்து மீன்களைத் தருவிக்கும் முயற்சிகள் பலித்திருக்கவில்லை. கொள்ளையர்களின் சீழ்கை ஒலிக்கு புதிய அலைகளை எழுப்பும் சாத்தியமிருந்தாலும் மீன்களை வசீகரிக்கப் போதுமானதாயில்லை. கால்களை அகட்டியபடி மிதக்கும் அவளுடலை சபித்தபடி தாமிராகிரவுண்டிலிருந்து அவர்கள் விலகிக்கொண்டிருந்தார்கள். வெகுதூரம் வந்தபின்னும் அவளுடல் கொள்ளையர்களின் முன்னில் மிதந்துகொண்டிருந்தது. அவளுடலை தீண்ட எந்த மீன்களும் வந்திருக்கவில்லை.

௦௦௦௦௦

—————————————————————————————————————————————————

**************உங்கள் கருத்துக்களை உடனுக்குடன் பதிவிடுங்கள் (ஆசிரியர் குழு)************

—————————————————————————————————————————————————

 

 

5 Comments

  1. Keshayinie Edmund says:

    வாசித்து முடிந்ததும் மனசில் இனம் புரியாத பாரம்…..

Post a Comment