Home » இதழ்-05 » கதையல்லாத கதைகள் 02-யோ.கர்ணன்

 

கதையல்லாத கதைகள் 02-யோ.கர்ணன்

 

ரைகர்ஸ்” யாழ்ப்பாணத்திலிருக்கும் நாற்பதினாயிரம் சிங்களப்படைகளையும் உயிருடன் பிடித்து வைத்துக் கொண்டு பேரம் பேசி தமிழீழத்தையடையப் போகிறார்களா அல்லது நாற்பதினாயிரம் சிங்களச் சிப்பாய்களின் சடலங்களை வைத்துக் கொண்டு பேரம் பேசி தமிழீழத்தையடையப் போகிறார்களா என உலகின் திசையனைத்திலுமிருந்த தமிழ் ஆய்வாளர்கள் அனைவரும்  தலையைப்பிய்த்துக் கொண்டிருந்த பொழுதது.

உச்சபட்சமாக, வன்னியிலிருந்த ஆய்வாளரொருவர் ஈழநாதம் பத்திரிகையில் பின்வருமாறு எழுதியிருந்தார்- ‘நமது குறைநிர்வாக இராச்சியத்தை சில வல்லரசுகள் பயங்கரவாத இயக்கமாக தடை செய்துள்ளன. நல்ல கூடைப்பந்து விளையாட்டு வீரன்தான் பந்தை எப்பொழுதும் தனது கையில் வைத்திருக்க வேண்டும். சாணக்கியம் மிக்க இராஜதந்திரிகளல்ல. அவர்கள் எப்பொழுதுமே பந்து எதிர்த்தரப்பிடமிருக்குமாறு பார்த்துக் கொள்வார்கள். நாம் இப்பொழுது செய்ய வேண்டியதெல்லாம், பந்தை மேற்கு நாடுளிடம் தட்டிவிடுவதே. அதாவது இந்த இறுதி யுத்தத்தில் கைது செய்யப்படவுள்ள பல்லாயிரம் சிப்பாய்களையும் கொல்லாமல், நமது இதயங்களிலும் இரக்கத்தின் அலைகள் ததும்பும் நதியொன்று ஓடிக்கொண்டிருக்கிறதென்பதைக் காட்ட வேண்டும்’.


A9 வீதியில் செம்மணியிலிருக்கும் யாழ்ப்பாணம் வரவேற்கிறது என்ற வளைவின் கீழாக மாலதிபடையணிப் பிள்ளையளும், ஜெயந்தன் படையணிப் பொடியளும் நிற்கும் புகைப்படங்கள் ஈழநாதம் பத்திரிகையில் பிரசுரமாகியிருந்தன. படத்தின் கீழே ‘புலிகள் மீண்டும் யாழ்ப்பாணத்துக்குப் படையெடுப்பினம்’ என்ற வரியிருந்தது. எனக்கும்; அந்த வரி நல்ல விருப்பம். எத்தனைதரம் கேட்டாலும் அலுப்புத்தட்டாத பாட்டது. புலிகளின்குரல் றேடியோவில் அடிக்கடி இந்தப்பாட்டுப் போடப்படும். பொதுவாகவே ஆனையிறவுப்பக்கம் வெடிச்சத்தம் கேட்டாலே, உடனே புலிகளின்குரல்க்காரர் இந்தப்பாட்டை போட்டுவிடுவினம். இப்பொழுதும் அரைமணித்தியாலத்திற்கொருமுறை ஒலிபரப்பிக் கொண்டிருந்தினம். கன வருசத்திற்குப்பிறகு ‘பறக்குதடா யாழ் கோட்டையிலே எங்கள் புலிக்கொடி’ என்ற பாட்டையும் கேட்டேன். ஏனெனில் யாழ் நகரிலிருந்து போராளிகள் நின்ற அந்த வளைவு சரியாக ஐந்து கிலோமீற்றர்கள் தூரத்திலேயே இருந்தது. ஐந்து கிலோமீற்றர்கள் என்பது சாதாரண ஓட்டக்காரன் ஒருவன் பதினாறு நிமிடங்களில் அடையும் தூரம்.
ஓடிக்கொண்டிருக்கும் இராணுவத்தைத் துரத்தும் போராளிகளை உற்சாகப்படுத்தவும், இராணுவம் போட்டு விட்டு ஓடிப்போகும் ஆயுதங்களையும் பொறுக்கவுமே உங்களை அழைக்கிறோம் என அப்பொழுது விசுவமடுவில் நடந்த பிரச்சாரக் கூட்டமொன்றில் பாப்பா உரையாற்றியிருந்தார். சனங்களிற்கு இப்படியான அழைப்பெதுவும் அவசியமாகயிருக்கவில்லை. நிறையப் பொடியள் சைக்கிளிலேயே ஆனையிறவுக்குப் போனார்கள். களத்திற்கு வருபவர்கள் இராணுவ உபகரணங்களை வீடுகளிற்கு எடுத்துச் செல்வது தண்டனைக்குரிய குற்றமென இயக்கம் பகிரங்கமாகவே ஒலிபெருக்கியில் அறிவிக்க வேண்டிய சிற்றிவேசனெல்லாம் வந்தது.
எல்லாச்சனங்களும் இயக்கப் பொடியளும் காற்றில் மிதக்கிற ஒரு பீலிங்கிலதான் அந்த நாட்களில் திரிந்தினம். எல்லோருடைய கண்களிலும் பெரியதொரு கனவு விரிந்திருந்தது. பூமியை துளைத்துக் கொண்டு விரியும் மரக்கன்றொன்றுடன் அந்நாட்களை ஒரு ஆய்வாளர் ஒப்பிட்டிருந்தார். அது புரட்சி பிரசவமாகிறதைக் குறிக்கிறதா, தமிழீழம் பிரசவமாகிறதைக் குறிக்கிறதா என்பது எனக்குச் சரியாக விளங்கவில்லை. யாரிடமும் கேட்கவுமில்லை. வெட்கமாகயிருந்தது. இதெல்லாம் தெரியாமலிருக்கிறனே என நினைப்பார்கள்.
கிட்டத்தட்ட நாடே கொண்டாட்டமாகயிருந்தது. கனநாளைக்குப் பிறகு முகாமிற்கு நல்ல சாப்பாடு வரத் தொடங்கியது. சண்டை இறுகியிருந்த சமயத்தில் கஞ்சிதான் சாப்பாடாகயிருந்தது. இப்பொழுது கன்டோஸ் எல்லாம் தாராளமாகத் தந்தார்கள். இயக்க உடுப்புடன் வீதிக்கிறங்கினாலே ஒருவிதமான மிதப்பு தோன்றியது. அதுவும் சனங்களிற்குள் திரியிற அரசியல்துறைக்காரர் ஓவராக கலர்ஸ் காட்டுகிறார்கள் என்பது மாதிரியானதொரு எண்ணம் என்னிடமிருந்தது. காரணமேயில்லாமல் மோட்டார்சைக்கிளை முறுக்கிக் கொண்டு அங்குமிங்குமாகத் திரிந்தார்கள். வோக்கி சுப்பரொட்டை இழுத்துவிட்டுக் கொண்டு சும்மா தேவையில்லாமல் வீதியில் ஓடித்திரிகிறார்கள் என எனது பொறுப்பாளரிடமும் ஆட்சேபணை தெரிவித்திருந்தேன்.
அப்பொழுது தான் ‘இராணுவச்சமநிலை’ என்றொரு சொல் பரவலாக தமிழ்கூறும் நல்லுலகம் எங்கும் அடிபட ஆரம்பித்தது. அந்த நாட்களில் இலங்கையில் வந்த தமிழ்ப்பத்திரிகைகளின் முன்பக்கத்தில் இந்தச் சொல்லுடன் கூடிய செய்தி ஒன்றாவது இருக்கும் என்பதற்கு நிச்சயமான உத்தரவாதமிருந்தது. சில பத்திரிகைகளின் முதல் பக்கமிருந்த எல்லாச் செய்திளிலுமே இந்தச் சொல்லிருந்தது என்பதுடன், அனைத்துலகத்திலுமிருந்த எந்தத் தமிழ் ஆய்வாளரும் இந்தச் சொல்லைத்தவிர்த்து பொலிற்றிக்கல் கட்டுரையெழுதியிருக்கவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது. அவ்வளவு அரசியல் அர்த்தச்செறிவுமிக்க சொல்லாக மாறியிருந்தது.

அந்தநாட்களில்தான் அன்ரன் பாலசிங்கம் ‘மூழ்கும் கப்பலில் ஏற நாமென்ன முட்டாள்களா?’ எனக் கேள்வியை எழுப்பியிருந்தார். அந்தக் கேள்வியின் பின்னால் பொதிந்திருக்கும் அரசியல் சாணக்கியத்தை பொடியளிடம் சொல்லிச் சொல்லி வியந்து கொண்டிருந்தேன். என்றாலும்,  இந்தக் கேள்வியை வைத்தே ஒரு ஆய்வாளார் பதினைந்து கட்டுரைகள் எழுதியிருந்தது எனக்குத் துப்பரவாகப் பிடிக்கவேயில்லை.

அடிமேல் அடிவாங்கியபடியிருக்கும் சிங்களம் சில நயவஞ்சகச் செயல்களில் இறங்கலாமென நாங்கள் எதிர்பார்த்தோம். நேரடி மோதல் செய்ய முடியாதவர்கள் தலைவரைக் குறிவைப்பார்கள் என தளபதி அவசரக் கூட்டம் வைத்து எச்சரிக்கை விட்டார். மிக் 27 என்றொரு ஐயிற்றத்தை சிங்களவன் வாங்கியிருக்கிறான், சாலையிலுள்ள கடற்புலிகளின் தளங்களை அது முதல்முறையாக நேற்றுத் தாக்கியிருக்கிறது என்றவர், சாவிற்கு முன்னரான துடிப்பு பற்றியும் பிரஸ்தாபித்தார். மிக் பற்றி சில பத்திரிகைகள், சஞ்சிகைளில் நான் படித்திருக்கிறேன். ரஸ்யக்காரனின் ஐயிற்றம். யாருடைய ஐயிற்றமென்றால்த்தான் என்ன? உலகின் நாலாவது பெரிய வல்லரசையே துரத்திய எங்களிற்கு இதெல்லாம் ஒரு பிரச்சனையா என்ன?. இயக்கம் சரியான நேரத்தில் சரியான முடிவெடுக்குமென்பது எனக்குத் தெரியும். யார் கண்டது, நாளைக்கே இயக்கம் மிக்கை விழுத்தும் ஐயிற்றங்களை இறக்கலாம்.
நாங்கள் கண்ணிற்கு எண்ணை விட்டபடி இருந்தோம். அப்பொழுது எங்கள் முகாம் புதுக்குடியிருப்புச் சந்தியிலிருந்து ஒட்டுசுட்டான் செல்லும் வீதியிலிருந்தது. ஆழஊடுருவும் படையணிக்காரரும் முகாமிற்கு வெகு அருகில் வந்து மன்னாகண்டல் சந்தியில் சங்கரண்ணைக்கு கிளைமோர் வேறு அடித்து விட்டார்கள். எங்கள் முகாமிலிருந்து சரியாக நான்கரைக் கிலோமீற்றர்களில் அந்தச் சம்பவம் நடைபெற்றது.
உலக வல்லரசுகளின் மூக்கிலேயே விரல்விட்டு ஆட்டும் அண்ணையின்ர முற்றத்துக்கே சிங்களவன் வரத் தொடங்கி விட்டான் என்று பொடியளிற்கு பொல்லாத கோபம். முகாமைச் சுற்றியிருந்த காடுகளிற்குள் எங்கட ரீமும் இறக்கப்பட்டது. முகாமிருந்த பகுதி இறுக்கமான பாதுகாப்பாகத்தானிருந்தது. முகாமைச்சுற்றி முதல் மூன்றுவட்டப் பாதுகாப்பையும் நாங்களே கவனித்தோம். ஆனால் சிங்களவனை கிட்டவும் வரவிடக்கூடாது. இதுக்குள்ள முகாமிருக்கிற விசயமே தெரியவரக்கூடாதென்பதில் இயக்கமும் வலு கவனமாகயிருந்தது. எங்களது பாதுகாப்பிற்கு மேலதிகமாக, வெளிவட்டத்தில் சோதியா படையணிப்பிள்ளையளும் நின்றனர்.
ஓருநாள் காட்டிற்குள் கிடந்த சிட்டையொன்றை சோதியா படையணிப்பிள்ளையள் கண்டெடுத்திருந்தனர். அது புதுக்குடியிருப்புச் சந்தியிலிருந்த, பாண்டியன் சுவையூற்றின் சிட்டை. எல்.ஆர்.ஆர்.பி காரன் பாண்டியனிலேயே வந்து சாப்பிட்டுவிட்டுப் போயிருக்கிறான் என்ற முடிவிற்கு அவர்கள் வந்துவிட்டனர். அவ்வளவுதான். வோக்கிகள் அலறத் தொடங்கிவிட்டன. ஏதோ, காட்டிற்குள் வைத்து ஆமிக்காரரை பிடித்தது மாதிரி சோதியா படையணிக்காரர் நடந்து கொண்டார்கள்.
எங்களிற்கும் அலுப்புத் தொடங்கியது. அன்று முழுவதும் காட்டிற்குள் தேடுதல் செய்தோம். ஏற்கனவே கண்ணுக்குள் எண்ணெய் விட்டுக் கொண்டுதான் இருந்தோம். இனி எங்கள் கண்களில் எண்ணெய்க் கிணறுகளையும் தோண்டலாமென ஒருத்தன் பகிடிவிட்டான். நான் பகிடிவிடும் மனநிலையிலிருக்கவில்லை. நாங்கள் சண்டையில் நின்றாலும் பகிடிவிட்டு, பம்பலடித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் இது அசட்டையாகயிருக்குமிடமல்ல என அவனைத் திட்டினேன்.
அந்தத் தேடுதலின் முடிவில் எந்தத் தடயமும் கிட்டவில்லை. களிக்காட்டிற்கு பக்கத்திலிருந்த அருவியில் விசித்திரமான காலடித் தடமொன்றைத்தான் கண்டோம். அது மனிதர்களது காலடித்தடமாகவோ, சாதாரண மிருகங்களின் காலடித்தடமாவோ தெரியவில்லை. அந்தத் தடங்களிற்கு தொடக்கமுமிருக்கவில்லை. முடிவுமிருக்கவில்லை. அருவிக்கரையினால் சிறிது தூரம் நடந்திருக்கிறது. எல்லோருக்கும் கடும் குழப்பம். பிரச்சனை கடாபியண்ணை வரை போய் அவரும் ஆராய வந்துவிட்டார்.

தலைமைச்செயலகத்திலயிருக்கிற ஒரு பழைய மனுசன் காலடித்தடம் பிடிக்கிறதில விண்ணனென்றும், காட்டின் அசுமாத்தமெல்லாம் அத்துப்படியென்றும், ஆளைக் கூட்டிக்கொண்டு வரலாமா எனப் பொறுப்பாளர் கேட்டார். இந்தப்பிரதேசத்துக்குள் எங்களைத்தவிர வேறு யாரையும்- இயக்கக்காரரையும் கூட்டிக்கொண்டு வரேஇயலாததைச் சுட்டிக்காட்டி, என்ன பிரச்சனையென்றாலும் நாங்களே கவனிப்போம் என கடாபியண்ணை சொல்லிவிட்டார். அதுவும் சரிதான், எல்லாவற்றையும் தெரிந்து கொண்டா மனிதன் பிறக்கிறான் என பொறுப்பாளர் கடாபியண்ணைக்குப்பின்னால் நின்று பம்மினார்.
கடைசியில் அதனை கடவுளின் காலடித்தடமென்று ஒருவன் சொன்னான். அதற்குப்பிறகு மிகுந்த அவதானமாக இருக்கத் தொடங்கினோம். இங்கே காலடி வைப்பது கடவுளாக இருந்தாலும் கைது செய்ய வேண்டுமென கடாபியண்ணை பகிடியாகச் சொன்னார். இந்த காட்டுப்பகுதிக்குள் யாரும் நுழையக் கூடாதென்பதற்காக நாங்கள் நிறைய ஏற்பாடுகள் செய்து வைத்திருந்தோம். குறிப்பாக, காட்டின் கரையில் ஒட்டிசுட்டான் வீதிக்கரையில் தகரங்களில் எச்சரிக்கை வாசகங்களை எழுதி தொங்கவிட்டிருந்தோம்.

மண்டையோடு கீறி பெருக்கல்க்குறி வடிவில் இரண்டு எலும்பை வரைந்து ‘அனுமதியின்றி யாரும் உட்பிரவேசிக்க வேண்டாம்’ என எழுதியிருந்தது. அதனையும் பொருட்படுத்தாது விறகிற்கோ, அவசரங்களிற்கோ யாரும் ஒதுங்கலாமென்பதைக் கருத்தில் கொண்டு, காட்டின் உள்ளே, அதே மண்டையோடு, எலும்புப் படங்களுடன் எச்சரிக்கையை மீறி நுழைபவர்கள் சுடப்படுவார்கள் என்ற எச்சரிக்கையை தொங்கவிட்டோம். கடவுளுக்கு தமிழ் வாசிக்கத் தெரியாதா என்ன?  இந்தச் சம்பவங்களின் பின்பாக, களிக்காட்டுப்பக்கமாக மேலதிகமாகவுமொரு கண்ணை வைத்தோம்.
அப்படி நாங்கள் வைத்த மேலதிக கண்ணில் உடனடியாகவே ஒரு உருவம் தட்டுப்பட்டது. அந்த நாட்களில் களிக்காட்டுப்பக்கம் எங்களது சிறிய அணியொன்று தங்குவதை வழக்கமாக்கிக் கொண்டது. நடுமத்தியானப் பொழுதொன்றில், காட்டிற்குள் பதுங்கியிருந்தவர்களிடம் ஒருவன் அகப்பட்டுக் கொண்டான். நல்ல வேளையாக அது கடவுளாக இருக்கவில்லை. ஏனெனில் அவனது காலடித்தடங்கள் மனிதர்களுடையதைப் போலவேயிருந்தது.
அவன் தொலைவில் வரும்போதே நம்மவர்கள் அவதானித்து விட்டார்கள். இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க கறுத்தப் பொடியன் பதுங்கிப்பதுங்கி வந்து அருவிக்குள் தண்ணீர் குடிக்க இறங்கியிருக்கிறான். கோடைகாலமென்பதால் அருவிக்குள் அவ்வளவாகத் தண்ணீரிருக்கவில்லை. கைகளினால் சிறிய பள்ளம் தோண்டி, அதில் ஊறிய தண்ணீரைக் குடித்துவிட்டு நிமிர, நம்மவர்கள் அவனது முதுகில் துவக்கை வைத்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் பொடியன் குலுங்கிக் குலுங்கி அழுதிருக்கிறான். சற்றைக்கெல்லாம் அழுகையை நிறுத்திவிட்டு, பைத்தியக்காரன் மாதிரி நடந்திருக்கிறான். நம்மவர்கள் இலேசுப்பட்ட ஆட்களா?. பொடியனை மரத்துடன் கட்டிவைத்துவிட்டு, பொறுப்பாளரிற்கு அறிவித்தார்கள். பிறகென்ன முகாம் அல்லோலகல்லோலப்பட்டது.
எதைக் கேட்டாலும் அவன் முழுசி முழுசிப் பார்த்தானே தவிர வாய் திறந்து ஒரு வார்த்தை கதைத்தானில்லை. அவனது பார்வை சரியாயிருக்கவில்லையென்பதால், அவன் எல்.எல்.ஆர்.பிகாரன்தானென பரவலாக எல்லோரும் அபிப்பிராயப்பட்டோம். திரும்பவுமொரு தேடுதல் செய்தோம். எதுவும் அகப்படவில்லை.
உடனடியாகவே இரட்ணம் மாஸ்ரரைக்கூப்பிட்டு, ‘உண்மையைக் கண்டறியும்’ பொறுப்பை அவரிடமொப்படைத்தார் கடாபியண்ணை.
அவர் அன்றே உண்மையைக் கண்டறிந்து கடாபியண்ணையிடம் சொல்லியிருப்பார். ஆனால் உடனடியாக எங்களுக்கு தகவல் சொல்லப்படவில்லை. மூன்றாம் நாள்தான் விசயம் மெல்லமெல்ல கசிந்தது. அவன் எல்லைப்படையிலிருந்த உடையார்கட்டுப் பொடியன். யாழ்ப்பாணச்சண்டைக்காக கரைபுரண்டு போன சனங்களோடு சனமாகப் போய், ஒரு கிறனைட்டையும் கொண்டு வந்துவிட்டான்.

பெரியதொரு திட்டத்துடன்தான் கொண்டு வந்திருந்தான். அவனுக்கு ஊரில் ஒருத்தி மீது காதலிலிருந்தது. ஒருதலைராகமது. அவள் இவனை கணக்கிலுமெடுக்கவில்லை. நாயாய்ப் பேயாய் அலைந்திருக்கிறான். எனக்குக் கிடைக்காத மாணிக்கம் இன்னொருத்தனுக்கும் கிடைக்கக்கூடாது. மண்ணோடு போகட்டுமென்றது அவனின் பொலிற்றிக்கல் பார்வை. நள்ளிரவில் இரகசியமாகச் சென்று குடிசைக்குள் குண்டைப் போட்டுவிட்டான். நித்திரையிலிருந்த மாணிக்கமும் தாயும் மண்ணோடு போய்விட்டார்கள். இது போன்ற சம்பவங்களினால்தான், இராணுவ உபகரணங்களை பொதுமக்கள் வீடுகளிற்குக் கொண்டு வருவதை தண்டனைக்குரிய குற்றமென இயக்கம் அறிவித்தது.
குண்டடித்ததும் பொடியன் உடனடியாகவே காட்டிற்குள் இறங்கிவிட்டான். இரண்டுநாளாக பல இடங்களிலும் அலைந்துவிட்டு, இன்றுதான் இந்தப்பகுதிக்கு வந்திருக்கிறான். எங்கள் கண்காணிப்பிற்குட்பட்ட இந்தப்பரந்த காட்டிற்குள் ஒருவன் ஊடுருவிய உடனேயே பிடிக்குமளவிலிருந்திருக்கிறோமென்பது பொறுப்பாளரிற்கு நல்ல புளுகம். தான் பொறுப்பாகயிருக்கும் வரையில் அமெரிக்கன்கூட அண்ணையை நெருங்க முடியாதென பகிரங்கமாகவே கதைக்கத் தொடங்கினார்.

௦௦௦
அப்பொழுதுதான் மெய்ப்பாதுகாவலன் வேலையிலிருந்து நிர்வாக வேலைக்கு மாற்றப்பட்டிருந்தேன். இரண்டும் ஒன்றுதான். ஒரு நிமிடம் ஓயாத வேலை. முன்னரெனில் ஜக்கற் கோள்சர் கட்டியபடி தொடர்ந்து ஆறுமணித்தியாலச் சென்ரி வரும். இடையில் இரண்டு மணித்தியாலம் ஓய்வு. பிறகு சென்ரி. தொடர்ந்து ஜக்கற் கட்டுவதால் சிலருக்க சற்று கூன் வேறு விழுகிறது. இப்பொழுது ஜக்கற் கட்டத் தேவையில்லை. ஆனால் ஒரு நிமிடம் ஒயாமல் மோட்டார்சைக்கிளில் ஓட வேண்டியிருந்தது. முகாமிலுள்ள அனைவருக்கும் உணவு ஒழுங்குகள், பராமரிப்புப் பொருள் ஒழுங்குகள், ஆயுத உபகரண ஒழுங்குகள் என அனைத்தையும் நிர்வாக செக்சன்காரர் ஓடியோடி செய்ய வேண்டியிருந்தது.
இதிலிருந்த ஒரே நன்மையென்னவெனில், அடிக்கடி வெளியில் வர முடிந்தது. காட்டிற்குள் அடைந்து கிடப்பதிலிருந்து தப்பிய அளவில் சந்தோசமாகவேயிருந்தது.

 

 

காட்டைவிட்டு வீதிக்கிறங்குகையில் உடலெல்லாம் சிலிர்த்துக் கொள்ளும். புழுதிபறக்கும் வீதிதானெனினும், பயணம் செய்கையில் வானவெளியில் செல்லுமொரு உணர்வுண்டானது. பல கிலோமீற்றர்கள் சைக்கிளோடி வாடி வதங்கி வரும் பெண்களெனிலும், தேவதைகளாகத் தென்பட்டனர்.
யாழ்ப்பாணத்தில் யாரோ சண்டைபிடிக்க இங்கே அரசியல்துறைகாரர் காட்டும் கலர்ஸ் எதனையும் நாங்கள் காட்டக்கூடாதென்பதில் எங்களணி கவனமாகயிருந்தது. ஆனால் வீதிக்கிறங்கினால் சனங்கள் எங்களை உற்சாகமாகப் பார்ப்பதை நிறுத்தச் சொல்ல முடியாதுதானே. தேவதைகள் தந்த சிறகொன்றும், சனங்களின் உற்சாகப்பார்வை தந்த சிறகொன்றுமாக இரண்டு சிறகு கொண்டு நானும் அந்த வீதிகளில் பறக்கத் தொடங்கினேன்….
புதுக்குடியிருப்புச் சந்தி கடக்கையில், ஒரு கடையின் முன்னால் ஈழநாதம் பேப்பர்கள் தொங்கிக் கொண்டிருந்தது தெரிந்தது. ஈழநாதம் பார்த்தால் ஏதாவது தெரியாத புதினங்கள், படங்கள் இருக்கலாம். அப்படியொரு புதினம் இல்லையென்றால் கூட பரவாயில்லை. உள்பக்கத்தில் நல்ல நல்ல வெற்றிக்கவிதைகள் இருக்கும். புதுவை அண்ணையும், சா.வே ஐயாவும், பண்டிதர் பரந்தாமனும் கட்டாயம் எழுதியிருப்பார்கள். இருபதுரூபா கொடுத்து ஒரு பேப்பர் வாங்கினேன்.

 

கடைக்காரனிற்கு என்னைப்பார்த்ததும் இயக்கம் என்பது தெரிந்து விட்டது. நன்றாகச் சிரித்தான். மெதுவாகத் தலையாட்டினேன்.
‘தம்பி… ஆரோட நிக்கிறீங்கள்… ரவுணுக்க அடிக்கடி கண்ட முகமாத் தெரியயில்லை’
கவனிக்காதது மாதிரி சிரித்துக் கொண்டு, புத்தகங்களைத் தட்டினேன்.
கடைகாரன் விடுவதாகத் தெரியவில்லை. திரும்பவும் கேட்டான். அரசியல்துறையென பொய் சொன்னேன்.
‘அடட..அரசியல்துறையா.. முகிலன் பேஸா.. ஒருக்கால் உங்கட வோக்கியில பரிதியண்ணையை கூப்பிடுங்கோ. போன மாதப் பேப்பர் காசு இன்னும் தரயில்லை’ என்றார்.
எனக்கு என்ன செய்யிறதென்றே தெரியவில்லை. ‘நான் அந்த பேசில்லை’ என்றேன்.
விடாக்கண்டன், அந்த பேசில்லாவிட்டால் எந்த பேஸ், சிவநகரிலயிருக்கிற சஞ்சையண்ணையின்ர பேஸா எனக் கேட்டார். நான் சரியாக மாட்டுப்பட்டுவிட்டேன். எனக்கு சரியாகப் பொய் சொல்லத் தெரியவில்லை. ஒரு முன்னாயத்தமுமின்றியிருந்திருக்கிறேன். சிரித்துக் கொண்டு வெளிய வர முயல, ‘அப்ப தம்பி சைபர் போல’ என்றார். நான் தலையாட்டினேன்.
‘அடடடா.. அதுதானே பார்த்தன். வெளியால காணயில்லை என்டதும் நான் நினைச்சனான்.. ஏதோ பொறுத்த இடத்திலதான் இருக்கிறியள் என்டு. அதுசரி தம்பி, உங்களிற்குத்தானே வடிவாகத் தெரியும். அரசியல்துறைகாரரிட்ட கேட்டால் ஈழநாதம் பேப்பரில வந்ததைதான் வாசிச்சுப் போட்டு சொல்லுவாங்கள்.
தம்பி…என்ன மாதிரி உங்கால யாழ்ப்பாணத்துப்பக்க நிலைமை… கிட்டடியில ஊருக்கு போகலாம் போல’
‘ஓமண்ணை…எங்களிற்கு வரலாற்றில கிடைக்காத ஒப்பற்ற தலைவர் கிடைச்சிருக்கிறார்… அவற்ற தீர்க்கதரிசனமான வழிநடத்தலில கிட்டடியில தமிழீழம் கிடைக்கும்’
‘ஓம் தம்பி.. உப்பிடியே நீர் சொன்ன மாதிரியேதான் இன்டையான் பேப்பரிலயும் கிடக்குது’
வெளியில் வர, எங்கட பழைய ரெயினிங் மாஸ்ரர் சைக்கிளில் வந்தார். ஆள் இப்ப இயக்கத்திலயில்லை. இந்த மனுசன் முன்னால வருதே. இப்ப என்ன செய்யிறதென்ற சங்கடம் வந்தது. எப்படியாவது வெட்டிவிட்டுப் போக வேணும். இப்படியான உறண்டல்களுடன் கதை பேச்சே வைத்திருக்கக்கூடாது. இவர்களுடன் கதை பேச்சு வைத்திருப்பது தெரிந்தால் இயக்கம் எங்களையும் பிழையாக நினைக்கலாம். அப்பிடியொரு உறண்டல் வேலைதானே இந்தாள் செய்தது. அண்ணை குடிக்கிற தண்ணீருக்குள்ள குப்பி மருந்து கலந்த ஆளென்றால் பாருங்கோவன். கொஞ்சம் பிசகியிருந்தாலும் கதை கந்தலாகியிருக்கும். இந்த உறண்டல்களையெல்லாம் கூட பெரியமனது பண்ணி இயக்கம் மன்னித்து விட்டிருக்கிறதுதானே. இயக்கம் மன்னித்தாலும், இவர்களுடன் கதைப்பது முறையல்ல. இவர்களுடன் கூட்டு வைப்பதுமொன்றுதான். ரத்வத்தை ஆக்களோட கூட்டு வைக்கிறதுமொன்றுதான்.

‘என்ன மச்சான். யாழ்ப்பாண நிலமை என்ன’ என சிரித்தபடி வந்தார். ‘குறை நினைக்காதையுங்கோ மாஸ்ரர். அவசர வேலையாகப் போறன்’ என்றபடி புறப்பட்டேன்.
வழியெல்லாம் உற்சாகம் மிகுந்து கொண்டே சென்றது. மோட்டார்சைக்கிளின் முன் சில்லுகளை சற்றே தூக்கினாலும் ஆகாயத்தில் பறக்கலாம் போல் தோன்றியது. மெதுவாக சீட்டியடித்தேன். மனம் சிறகு கொள்ள, அக்சிலேற்றறை இன்னும் இன்னும் முறுக்கினேன். நடந்தும், சைக்கிளிலுமாக எதிர்ப்பட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரையும் யாழ்ப்பாண ஆமியாகவும், அவர்களை மிதித்தெறிந்தபடி மோட்டார்சைக்கிளில் ஆமி காம்பை உடைத்துக் கொண்டு செல்வது மாதிரியும் கற்பனை விரிந்தது. இந்த நினைப்பே ஒரு ஆவேசமான சுகத்தை உண்டு பண்ணிக் கொண்டிருந்தது.

உடையார்கட்டு வர, மாமாவின் நினைவு வந்தது. இப்படியான வெற்றித்தருணங்களை யாருடனாவது பகிர்ந்துகொள்ள வேண்டுமென்ற உந்துதல் எனக்குள்ளும் இருந்து கொண்டுதானிருந்தது. யாரும் ஆர்வமாகக் கேட்க, நான் நிதானமாகப் பதிலளிப்பது மாதிரியான கற்பனைகள் மனதிற்குள் இருந்தனதான். மாமா வீட்டிற்கு போகலாம் போல் தோன்றியது. ஆனாலும், வீடுகளிற்கு செல்வது எங்களிற்கு தடை செய்யப்பட்டிருந்தது. தெரியாமல்தான் போக வேணும். வழி தெருவெல்லாம் மாஸ்ரரின் புலனாய்வுப்பொடியள் நிற்பார்கள். அவர்களிற்கு பூச் சுற்றுவதுதான் பெரிய பிரச்சனை.
உடையார்கட்டு சேர்ச்சிற்கு பக்கத்து ஒழுங்கையில்தான் மாமாவின் வீடிருந்தது. அந்தப்பகுதியில் ஆளரவம் குறைவாகயிருந்தது. மாஸ்ரரின் பொடியள் தங்களுக்குத் தெரிந்த வீடுகளிற்குப் போய் சண்டைக்கதைகளைக் கதைச்சுக் கொண்டிருப்பாங்கள் போல. சந்தர்ப்பத்தை தவறவிட வேண்டாமென மனம் சொன்னது. சுற்றவரப் பார்த்துவிட்டு. ஒழுங்கைக்குள் திருப்பினேன்.

என்னைக் கண்டது மாமாவிற்கும் நல்ல சந்தோசம். நான் உள்ளடயே ‘அதுசரி.. முழுக்கப் பிடிச்சுப் போட்டுத்தான் நிற்பாட்டுவியள் போல’ என்றார். அவருக்கு சமகால அரசியல், இராணுவ விசயங்களை அலசுவதில் அதிக ஆர்வம் தெரிந்தது. நானும் அவை பற்றிய ஆழமான விவாதத்தில் இறங்கினன். இராஜதந்திரம், சாணக்கியம், ஒப்பற்ற தீர்க்கதரிசனம் போன்ற சொற்களை அடிக்கடி உபயோகித்தாலும், இராணுவச்சமநிலை என்ற சொல்லையே அதிகமாக உபயோகித்து உரையாடலை வளர்த்துச் சென்றேன். அண்மைநாட்களாக நான் இப்படியொரு உரையாடலில் ஈடுபட்டதேயில்லை. சில சொற்களை மட்டும் வைத்துக் கொண்டே கவர்ச்சியான உரையாடலொன்றை செய்து முடிக்கலாமென்பதை கண்டு கொண்டேன். தராசு எங்கள் பக்கம் நிற்கிறதென முடித்தேன். மாமா அந்தச் சொற்களை அதற்கு முதல் கேட்டிராதவர் போல ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.

 

மச்சாள் சிவாஜினி அறைக் கேட்டின் துணியைப் பிடித்தபடி, பாதி மறைந்தும் மறையாமலும் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். அடிக்கடி கண்களை நன்றாக விரித்து என்னை விழுங்கி விடுபவளைப் போல பார்த்தாள். கொஞ்சக்காலமாகவே அவள் இப்படியான ‘விழுங்கும்’ பார்வைகளைப் பார்ப்பதை நானும் கவனித்துக் கொண்டுதானிருக்கிறேன்.

ஏற்கனவே இங்கே ஓரிரண்டு இரகசிய விஜயம் செய்திருக்கிறேன். கடந்த முறை நான் வந்தபொழுது, ரியூசனிற்கு வெளிக்கிட்டவள், என்னைக்கண்டதும் நின்றுவிட்டாள். அன்று தனியாகயிருந்து நிறையக் கதைத்தோம். ஓரு பொம்பிளைப்பிள்ளையுடன் தனியாக இருந்து கதைக்கும் சந்தர்ப்பம் உருவாகியதும், என் மனம் அளவிற்கு மீறி அடிக்கத் தொடங்கிவிட்டது. அதற்கு முக்கிய காரணம், இயக்க இரகசியங்கள் பெரும்பாலும் இப்படியான சந்தர்ப்பங்களில்த்தான் கசிந்ததாக அடிக்கடி எங்களிற்கு வகுப்புகள் எடுக்கப்பட்டிருந்தது. எச்சரிக்கையாகயிரு என மனமடித்துக் கொண்டிருந்தது.
அவளும் பிரச்சனையான விசயங்களிற்குள் இறங்கியிருக்கவில்லை. அவளுக்கு இயக்கமென்றால், அரசியல்துறையென்றளவில்தான் தெரிந்திருந்தது. உடையார்கட்டு அரசியல்துறைப் பொறுப்பாளர் இயக்கத்தில எத்தனையாவது தளபதி, அவரக்கு மேல எத்தனை பேரிருக்கினம், அடுத்த வருசம் தமிழீழமென்று அரசியல்துறை அண்ணாக்கள் பள்ளிக்கூடத்தில சொன்னத உண்மையா என்றளவில் கதைத்தாள்.
கடந்தமுறை கதைத்த பொழுதுதான் அடுத்த வருடம் தமிழீழமென்ற கதை வந்தது. அடுத்த வருடம் தமிழீழம் கிடைக்க வேண்டுமென தான் பிள்ளையார் கோயிலில் நேர்த்தி வைத்துள்ளதாகச் சொன்னாள். அடுத்த வருடம் தனக்கு கம்பஸ் கிடைக்குமென்றும், ஆமி யாழ்ப்பாணத்திலிருந்தால் தான் கம்பசுக்குப் போமாட்டேன் என்றாள்.
இப்பொழுது மாமா கதைப்பதை சத்தமில்லாமல் கேட்டுக் கொண்டிருக்கிறாள். அவளையும் கதைக்குள் இழுத்துவிடுவதற்காக,
‘சிவாஜினிக்கு இனிப் பிரச்சனை வராது. சுதந்திரமாக யப்ணா கம்பசுக்குப் போய்ப் படிக்கலாம்’ என்றேன்.
சிவாஜினி சுவாரஸ்யமற்றவளாகச் சொன்னாள்.
‘ம்ம்….நீங்கள் அதைப் பார்க்கிறியள்… நாங்கள் இன்னொன்டையும் பார்க்க வேண்டியிருக்குது… நேற்று அண்ணா ரெலிபோன் கதைச்சவன். அவனுக்கு இன்னும் “காட் “கிடைக்காமல் இழுபடுது. பிரச்சனை வேளைக்கு முடிஞ்சால் காட் கிடைக்காமலே விட்டிடும் என்டு சரியா கவலைப்பட்டவன்’

௦௦௦௦

 

—————————————————————————————————————————————————

**************உங்கள் கருத்துக்களை உடனுக்குடன் பதிவிடுங்கள் (ஆசிரியர் குழு)************

—————————————————————————————————————————————————

 

19 Comments

 1. Karunyan says:

  கதையல்லாத கதைகள் ஒவ்வொன்றுமே சிறுகதைகளாக இருப்பதால் ஒவ்வொன்றுக்கும் தலைப்பிடுவது அவசியம் என்று படுகிறது.(எதிர்காலத்தில் மேற்படி கதைகள் குறித்து விமர்சனம் செய்யவும் அவை குறித்த கருத்துக்களை முன்வைக்கவும்)

 2. solomonJ says:

  Love your writing.Regards.
  //வீதிக்கிறங்கினால் சனங்கள் எங்களை உற்சாகமாகப் பார்ப்பதை நிறுத்தச் சொல்ல முடியாதுதானே. தேவதைகள் தந்த சிறகொன்றும், சனங்களின் உற்சாகப்பார்வை தந்த சிறகொன்றுமாக இரண்டு சிறகு கொண்டு நானும் அந்த வீதிகளில் பறக்கத் தொடங்கினேன்….//
  //காட்டைவிட்டு வீதிக்கிறங்குகையில் உடலெல்லாம் சிலிர்த்துக் கொள்ளும். புழுதிபறக்கும் வீதிதானெனினும், பயணம் செய்கையில் வானவெளியில் செல்லுமொரு உணர்வுண்டானது. பல கிலோமீற்றர்கள் சைக்கிளோடி வாடி வதங்கி வரும் பெண்களெனிலும், தேவதைகளாகத் தென்பட்டனர்//
  //வழியெல்லாம் உற்சாகம் மிகுந்து கொண்டே சென்றது. மோட்டார்சைக்கிளின் முன் சில்லுகளை சற்றே தூக்கினாலும் ஆகாயத்தில் பறக்கலாம் போல் தோன்றியது. மெதுவாக சீட்டியடித்தேன். மனம் சிறகு கொள்ள, அக்சிலேற்றறை இன்னும் இன்னும் முறுக்கினேன். நடந்தும், சைக்கிளிலுமாக எதிர்ப்பட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரையும் யாழ்ப்பாண ஆமியாகவும், அவர்களை மிதித்தெறிந்தபடி மோட்டார்சைக்கிளில் ஆமி காம்பை உடைத்துக் கொண்டு செல்வது மாதிரியும் கற்பனை விரிந்தது. இந்த நினைப்பே ஒரு ஆவேசமான சுகத்தை உண்டு பண்ணிக் கொண்டிருந்தது//

 3. நவஞானன் says:

  ரஷ்மியின் கோட்டொவியங்கள் மிகுந்த அர்த்தம் கொண்டவை. கர்ணனின் கதைகள் சொல்லாமல் சொல்லும் விஷயங்களை இன்னொரு பரிமாணத்தில் சிறப்பிப்பதாகவே அவரது ஓவியங்கள் அமைவதாக படுகின்றன. பாராட்டுக்கள் ரஷ்மி!

  ஒரு தனிநபரைச் சுற்றி ஒளிவளையங்கள் கட்டமைக்கப்பட்டதும், ஆய்வாளர் என்ற பெயரில் படித்தவர்கள் எனச் சொல்லிக் கொண்டவர்கள் முதுகு சொறியும் கட்டுரைகளை எழுதி தமது சொந்த நன்மைகளை கவனித்துக் கொண்டதும் அதே வேளை சாதாரண மக்களின் ஆசைகள் ஈழம், போராட்டம் என்ற கனவுகளிருந்து மிகத் தூரமாக விலகி நின்ற யதார்த்தத்தையும் கர்ணன் என்ற போராளியின் அனுபவங்களையும் அவர்- கர்ணன் என்ற கதை சொல்லியாக- நின்று வெளிப்படுத்தும் பாங்கு மிக அருமை.

Post a Comment