Home » இதழ்-05 » “ஷோபா சக்தியின் கேள்விகள் இத்துடன் முடிந்துவிட்டன!”.கண்ணன் பதில்கள் (பகுதி 04)

 

“ஷோபா சக்தியின் கேள்விகள் இத்துடன் முடிந்துவிட்டன!”.கண்ணன் பதில்கள் (பகுதி 04)

 

 

*.  காலச்சுவடு இதழும் பதிப்பகமும் அதன் சார்பு நிறுவனங்களும் இயங்குவதற்கான நிதி ஆதாரம் என்ன என்பதை அறிவிப்பீர்களா?

வா. மணிகண்டன்

காலச்சுவடு இதழும் பதிப்பகமும் 2010வரை என்னுடைய நிறுவனங்களாக இருந்தன. என்னுடைய முதலீட்டில்தான் செயல்பட்டன. வங்கிக்கடன் இருந்தது. அறிந்தவர்களிடம் பணம் பெற்று வட்டி செலுத்துவதும் தேவைக்கு ஏற்ப நடந்ததுண்டு. வேறு எந்த இந்திய, உலகளாவிய நிறுவனமும் காலச்சுவடில் முதலீடு செய்ததில்லை. என்.ஜி.ஓக்கள், தனியார் அறக்கட்டளைகள், மத்திய அரசு யாரிடமிருந்தும் உதவி பெற்றதில்லை.

என்ன என்ன உதவிகளைப் பெற்றிருக்கிறோம் என்பதையும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்.

1. விளம்பர உதவி

2. நிகழ்வுகளுக்கு ஸ்பான்சர்

3. காலச்சுவடு இதழில் பங்களிப்பவர்களுக்கு ஸ்ரீராம் சிட்ஸ் வழங்கும் சன்மானம்.

4. புதுமைப்பித்தன் படைப்புகள் தொகுப்புப் பணிக்கு ஸ்ரீராம் சிட்ஸ் வழங்கிய நிதி உதவி.

5. தமிழ் வளர்ச்சித் துறை அரிய நூல்களைப் பதிப்பிக்கும் திட்டத்தில் ‘தோட்டியின் மகன்’ முதல் பதிப்புக்கு வழங்கிய உதவித்தொகை.

6. இலக்கிய வளர்சிக்கான அயல் நிறுவனங்கள் மொழிபெயர்ப்புகளுக்காக வழங்கும் உதவி.

இவை எல்லாமே வெளிப்படையானவை. உரிய இடங்களில் குறிப்பிட்டு நன்றி தெரிவிக்கப்பட்டவை.

நான் வெளிப்படையாக அறிவிக்காத உதவி ஒன்று உண்டு. முதன்முதலில் நான் கேட்டுப் பெற்ற உதவி அது. புதுமைப்பித்தனின் ‘அன்னை இட்ட தீ’ பணியில் ஆய்வுக்காகப் பல இடங்களுக்குச் செல்ல வேண்டியிருந்தது. காலச்சுவடு அப்போது இரண்டு மூன்று நூல்களே வெளியிட்டிருந்த பதிப்பகம். ஆர்.எம்.கே.வி. விஸ்வநாதன் பண்பாட்டு அக்கறை உள்ளவர் என்று அறிந்து அவரைச் சந்திக்கச் சென்றேன். ரூ. 10,000 கொடுத்தார், நான் அதை வெளிப்படையாக அறிவிக்கக் கூடாது என்ற முன்நிபந்தனையுடன். இன்று அவர் இல்லை. நன்றிக் கடனை அறிவிக்கப் பொருத்தமான சந்தர்ப்பம் இது.

‘அன்னை இட்ட தீ’ நூல் வெளிவந்த பிறகு புதுமைப்பித்தன் குடும்பத்தினரிடமிருந்து அவரது முழுப்படைப்புகளையும் வெளியிட அனுமதி பெற்றோம். பல இடங்களில் சிதறிக்கிடக்கும் மூலத் தரவுகளைச் சரிபார்த்து பதிப்பாக்கும் செலவுகளை எவ்வாறு சரிக்கட்டுவது என்பது மலைப்பாகவே இருந்தது. இக்கட்டத்தில் India Foundation for Arts என்ற அமைப்பிலிருந்து காலச்சுவடுக்கு விளம்பரம் வந்தது. விளம்பரத்தை ஆங்கிலத்தில் அனுப்பித் தமிழ்ப்படுத்தி வெளியிட முடியுமா என்று கேட்டிருந்தார்கள். அந்தப் பணியை நானே செய்தேன். கலைகள் சார்ந்த பணிகளுக்கு நிதியுதவி பெற விண்ணப்பங்களைக் கோரும் அறிவிப்பு அது. அவர்களுடைய அழுத்தம் அதிகமும் நுண்கலைகள் சார்ந்து இருந்தது. புதுமைப்பித்தனின் மூலப் பிரசுரங்களை – இதழ்கள், நூல்கள், கடிதங்கள் – ஆவணப்படுத்தும் திட்டத்திற்கும் நிதியுதவி கேட்டுப்பார்க்கலாமே என்று தோன்றியது. பங்களூர் செல்லும்போது நேரில் சென்று பார்த்தேன். அவர்களுக்கு ஆர்வமிருந்தது. இன்று யோசித்துப் பார்க்கும்போது சலபதியும் நானும் உதவி கிடைக்காமல் போவதற்கான அனைத்து வேலைகளையும் செய்தோம் என்று தெரிகிறது.  கேட்டுச் சென்ற இடத்தில் நிதியுதவி பெறுவதில் இருக்கும் தயக்கங்களை வெளிப்படுத்தினோம். நிதி வழங்கும் நிறுவனங்களின் அரசியலை, மேட்டுக்குடித்தனங்களை விமர்சித்தோம். IFA, ஃபோர்ட் பவுண்டேஷனின் கிளை நிறுவனம் என்பது தெரிந்ததும் ஃபோர்ட் பவுண்டேஷன் நிதி வழங்கும் தேர்வுகளைக் கிண்டலடித்தோம். இந்த எல்லா அதிகப்பிரசங்கித்தனங்களையும் மீறி உதவி கிடைத்தது. எங்கள் திட்டத்தைக் கவனித்து, விவாதித்து, முன்வைத்து ஆலோசனைகள் வழங்கி எந்தச் சிறு பிசிறும் வராமல் நிர்வகித்த அஞ்சும் ஹெசனுக்கே – இன்று பிரபல ஆங்கில எழுத்தாளர் அவர் – நன்றி சொல்ல வேண்டும். தனியார் நிறுவனங்களுக்கு உதவி செய்ய முடியாது, அறக்கட்டளைக்கே உதவ முடியும் என்று அவர்கள் தெரிவித்ததாலும் ‘தமிழ் இனி 2000’த்தை நடத்தவேண்டியிருந்ததாலும் காலச்சுவடு அறக்கட்டளையைத் துவங்கினோம். பண உதவி கிடைப்பது உறுதிப்பட்டதும் முதல் வேலையாக அதைக் காலச்சுவடில் அறிவித்தேன்.

‘காலச்சுவடு’ ஜனவரி – மார்ச்  2000 இதழில் வெளிவந்த அறிவிப்பு இதோ,

இந்த அறிவிப்பையும் செய்தியையும் பார்த்துவிட்டுப் பலர் என்னைத் தொடர்புகொண்டார்கள். அனைவருக்கும் இயன்ற அளவு உதவினோம். சிலருக்கு நிதி உதவியும் கிடைத்தது.

இரண்டு ஆண்டுகளில் ‘புதுமைப்பித்தன் ஆவணத் திட்டம்’ பணி முடிக்கப்பட்டு கணக்கு தணிக்கை செய்யப்பட்டு திட்டம் நிறைவு பெற்றது. புதுமைப்பித்தன் மூல ஆவணங்கள் மைக்ரோ பிலிம் செய்யப்பட்டு அதன் பிரதிகள் முக்கியமான உலக நூலகங்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டன. மிச்சமிருந்த ரூ.15,000த்தை அவர்கள் எங்களுக்கே அன்பளித்துவிட்டார்கள். அந்தப் பணத்தில் 2008ஆம் ஆண்டு மதுரை பில்லர் ஹோமில் புதுமைப்பித்தன் ஆய்வரங்கை நடத்தினோம். இந்தப் பணியின் பின்புலத்திலிருந்தே புதுமைப்பித்தன் படைப்புகளின் செம்பதிப்பைக் காலச்சுவடு வெளியிட்டுவருகிறது.

நிதி உதவி செய்ய முன்வருபவர்களிடமிருந்து உதவிபெற எனக்குத் தயக்கம் இருந்ததில்லை. ஆனால் நானே வகுத்துக்கொண்ட நெறிமுறைகள் உண்டு.

1. பெறும் எல்லாப் பதிவு உதவியையும் வெளிப்படையாக அறிவித்தே பெற வேண்டும்.

2. நாம் செய்ய வேண்டிய பணிகளுக்காக நிதி உதவிபெறலாம். எந்தத் திட்டத்திற்குப் நிதி ஒதுக்கீடு உள்ளதோ அதை வலிந்து செய்யக் கூடாது.

3. நம்முடைய செயல்பாடு நிதி நிறுவனங்களால் வரையறுக்கப்படக்கூடாது, நம்முடைய ஆர்வங்களால் மட்டுமே வரையறுக்கப்பட வேண்டும்.

1999இல் உதவி பெற்ற பின்னர் இன்றுவரை எந்த நிதி நிறுவனத்தின் உதவியையும் காலச்சுவடு அறக்கட்டளை பெறவில்லை என்பது ருசி கண்ட பூனையாக நாங்கள் செயல்படவில்லை என்பதற்கான ஆதாரம்.

காலச்சுவடு பல இடங்களிலிருந்து – குறிப்பாக ஏகாதிபத்திய நிறுவனங்கள், தேச விரோத அமைப்புகள் (இந்துத்துவவாதிகளின் பார்வையில்) என்ஜிஓக்களிடமிருந்தெல்லாம் பண உதவி பெற்று செழித்திருப்பதாக நேரடியாகவும் மறைமுகமாகவும் ஜெயமோகன் குற்றஞ்சாட்டி வருவதாக அறிந்தேன். அவர் அனுப்பி வைக்கும் கணக்காளரிடம் காலச்சுவடின் ஆடிட் செய்யப்பட்ட கணக்கு விவரங்களைப் பரிசீலனைக்குக் கொடுக்கச் சம்மதிக்கிறேன். நிதி உதவி கிடைத்த விபரங்களைக் கண்டுபிடித்து ஃபோர்ட் பவுண்டேஷன் மற்றும் இன்னபிற என்.ஜி.ஓ. உதவிகளை அம்பலப்படுத்தட்டும்.

2010இலிருந்து காலச்சுவடு பிரைவட் லிமிடெட் கம்பனியாக மாற்றம் பெற்றுவிட்டது. சுமார் 15 நண்பர்கள் அதில் பண முதலீடு செய்து பங்குகளை வாங்கியுள்ளனர்.

 

*. தமிழில் இதழ் நடத்தும் நீங்கள்எஸ்.ஆர். சுந்தரம்என்று உங்கள் பெயரை இதழில் வெளியிடுகிறீர்கள். ‘எஸ்.ஆர்.’ என முன்னெழுத்துப் பயன்படுத்தும் மனோபாவம் சரியா? சுந்தர ராமசாமிசுராஎனத் தமிழில்தானே கையொப்பமிடுவார்?

பா. நன்மாறன், வேலூர்.

என்னுடைய சட்டபூர்வமான பெயர் எஸ்.ஆர். சுந்தரம். என்னுடைய தாத்தாவின் பெயரும் அதுதான். முதலில் பள்ளியில் பெயரை ஆர். சுந்தரம் என்றுதான் பதிவு செய்தார்கள். தாத்தாவின் உத்தரவின்படி எஸ். சேர்க்கப்பட்டது. முழுப்பெயர் ஸ்ரீவைகுண்டம் ராமசாமி சுந்தரம். ஸ்ரீவைகுண்டம், நெல்லை மாவட்டத்திலிருக்கும் ஊர், எங்கள் பூர்வீகம். அங்கிருந்து சு.ரா.வின் தாத்தா குடும்பம் ஆலப்புழா சென்றார்கள். என்னுடைய தாத்தா கோட்டயத்திற்குச் சென்றார். பின்னர் 1938இல் என் பாட்டியின் ஊரான நாகர்கோவிலுக்கு வந்தார்கள். 1956 வரை நாகர்கோவில் கேரளத்தில் இருந்தது.

காலச்சுவடு இதழில் சட்டபூர்வமான பெயரைக் குறிப்பிட வேண்டும் என்பதால் அங்கு மட்டும் எஸ்.ஆர். சுந்தரம் என்று குறிப்பிடுகிறேன். பிற இடங்களில் கண்ணன் என்றோ கண்ணன் சுந்தரம் (அதிகமும் ஆங்கிலத்தில்) என்றோ குறிப்பிடுகிறேன்.

முன்னொட்டுகளைத் தமிழில் எழுத வேண்டும் என்றால் ஸ்ரீ.ரா. சுந்தரம் என்றுதான் எழுதவேண்டும். இதில் இரண்டு பிரச்சனைகள் உள்ளன. ஒன்று, எனக்கு நானே ‘ஸ்ரீ’ அடைமொழி போட்டுக்கொள்கிறேனா என்ற சந்தேகம் ஏற்படும். ஸ்ரீ, திரு சர்ச்சையில் என் சார்பு ‘திரு’ பக்கம்தான். இரண்டாவது, ஸ்ரீ என்று லேசில் எழுத வர மாட்டேன் என்கிறது! அல்லது ‘சிரி’ என்று எழுதலாம். மொழிக் கொள்கையைப் பொருத்தவரை ஸ்ரீ என்று முன்னொட்டு வைப்பது அல்லது சிரிவைகுண்டம் என்று தமிழ்ப்படுத்துவது இரண்டிலுமே உடன்பாடு இல்லாத இரண்டுங்கெட்டான் நான். ஆங்கில முன்னெழுத்தைப் பயன்படுத்தக்கூடாது என்று நினைக்கும் தீவிரத் தனித் தமிழ்ச் சார்பும் எனக்கு இல்லை. இந்த இக்கட்டில் ‘எஸ்.ஆர்.’ என்று எழுதுவதே வசதியாக இருக்கிறது. என் பார்வையில் ஆங்கிலமும் ஓர் இந்திய மொழிதான் என்பதால் பெரிய உறுத்தலாக இல்லை.

*. காலச்சுவடுக்கு எதிரான அரசியலை முன்னெடுத்த நிறப்பிரிகையில் தீவிரமாக இயங்கிய ரவிக்குமார், பொ. வேல்சாமி ஆகியோரைக் காலச்சுவடுக்கு அணுக்கமாகக் கொண்டுவர உங்களால் முடிந்தது எப்படி? அதற்கு விலை கொடுத்தவர் எவர்?

பா. நன்மாறன், வேலூர்.

காலச்சுவடுக்கு எதிரான அரசியலை முன்னெடுத்த இதழாக நிறப்பிரிகையை நான் பார்க்கவில்லை. ஆளுமைகள் சார்ந்து சில முரண்பாடுகள் இருந்தன. அவர்கள் முன்னெடுத்த பெரும்பான்மையான விஷயங்கள் சார்ந்து அந்தக் காலகட்டத்திலேயே காலச்சுவடுக்கு முரண்பாடு இருக்கவில்லை. சில கருத்து வேறுபாடுகள் இருந்தன. வாஸந்திக்கு இந்தியா டுடே பக்கங்களை மலம் துடைத்து அனுப்பியது போன்ற தடாலடி செயல்பாடுகள், குடி-கலகம் போன்ற கோட்பாட்டு உருவாக்கம், ராமதாசை முன்னிறுத்திய அவர்கள் அரசியல் எல்லாம் நாங்கள் வேறுபட்ட விஷயங்கள். இருப்பினும் நிறப்பிரிகையை விமர்சித்து ஒரு சொல்கூடக் காலச்சுவடில் எழுதப்படக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம்.

நிறப்பிரிகை முன்னெடுத்த தலித்தியத்தின் தலைமகனாகக் கருதப்பட்டவர் ராஜ்கௌதமன். சு.ரா.வின் காலச்சுவடில் கணிசமாகப் பங்களித்தவர் அவர். அவரது ‘தமிழக தலித்தும் . . . தலித் இலக்கியமும் . . .’ (IDEAS, 1991) கட்டுரைத் தொகுதி சுந்தர ராமசாமியின் பரிந்துரையை அட்டையில் கொண்டே பிரசுரமாயிற்று. ராஜ்கௌதமன் மற்றும் ரவிக்குமாரின் இலக்கிய மற்றும் அரசியல் பதிவுகளைச் சாதகமாகவே பார்த்தோம், ஆர்வத்துடன் படித்தும் வந்தோம். ராஜ்கௌதமனின் ‘புதுமைப்பித்தன் எனும் பிரம்மராக்ஷஸ்’ நூலுக்காக ஆ.இரா. வேங்கடாசலபதியின் ஆய்வின் மூலம் கிடைத்த தரவுகளைப் பிரசுரத்திற்கு முன்னதாகவே ராஜ்கௌதமனுக்கு அனுப்பிவைத்தோம்.

அ. மார்க்சின் சில நூல்களுக்கும் காலச்சுவடில் நல்ல விமர்சனங்கள் வெளியிட்டோம். இதைப் பாராட்டி அவரும் காலச்சுவடுக்கு எழுதியிருந்தார்.

000

1999இல் ‘தமிழ் இனி 2000’ நிகழ்வுக்காக ரவிக்குமார், ராஜ்கௌதமன் ஆகியோரை நேரில் அழைக்க புதுச்சேரி செல்ல முடிவு செய்து இருவருக்கும் கடிதம் எழுதினேன். கடிதங்களைத் தபாலில் சேர்த்த அன்று மாலை ரவிக்குமாரிடமிருந்து சு.ரா.வை ‘மரண தண்டனை எதிர்ப்பு மாநா’ட்டிற்கு அழைத்து கடிதம் வந்தது. புதுச்சேரி சந்திப்பில் தொடங்கிய எங்கள் நட்பு பின்னர் காலச்சுவடு ஆசிரியர் குழுவில் அவர் இணைந்துகொள்வதற்கு இட்டுச்சென்றது. மனித உரிமை தளத்திற்கு நகர்ந்திருந்த ரவிக்குமார் பின்னர் அதிகம் எழுதியது காலச்சுவடில்தான். ஆசிரியர் குழுவில் இருந்த காலத்தில் பெரும்பாலான தலையங்கங்களையும் அவரே எழுதினார். படைப்பூக்கமும் கல்விப்புலம் சார் ஒழுங்கும் அவரிடமிருந்து கூர்மையான சிந்தனைகள் வெளிவரக் காரணமாயின. காலச்சுவடும் அவர் பங்களிப்பால் வலுப்பெற்றது. மிக இயல்பாகக் கூடிவந்த விஷயம் அது. வலிந்து எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.

பொ. வேல்சாமி காலச்சுவடில் எழுத முன்னெடுப்பு மேற்கொண்டவர் பெருமாள்முருகன். பொ. வேல்சாமி தஞ்சாவூரிலிருந்து தொழில் நிமித்தம் நாமக்கல்லுக்கு இடம் மாறவும் பெருமாள்முருகன் அங்கு பணிமாற்றம் பெறவும் இருவரும் நண்பர்களாகவும் நான் காரணமல்ல என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பின்னர் பெருமாள்முருகன் பொ. வேல்சாமியைப் பங்களிக்கக் கேட்போமா என்று என்னைக் கேட்டபோது அவசியம் எழுதச் சொல்லுங்கள் என்றேன்.

காலச்சுவடில் ஒருவர் எழுதுவதற்குக் கருத்துமுரண்பாடோ, தனிநபர் முரண்பாடோ  இடையூறாக இருக்க நான் அனுமதிப்பதே இல்லை.

நாங்கள் மூவருமே தனிநபர் முரண்பாடுகள், கசப்புகளைவிட செய்யப்பட வேண்டிய பணிக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பவர்கள் என்பதும் முக்கியமான காரணி என்று நம்புகிறேன்.

000

அ. மார்க்ஸ்கூடக் காலச்சுவடில் எழுதாமல் இருக்க அவருடைய தன்முனைப்பும் பொய் சொல்லும், மேற்கோளைத் திரிக்கும் பண்புகளே காரணி. பத்தாண்டுகளுக்கு முன்னர் சி. சிவசேகரம் ஒரு கடிதத்திலோ நூல் விமர்சனத்திலோ அ. மார்க்ஸ் பற்றிய விமர்சனமாகப் பாதி வாக்கியம் எழுதியிருந்தார். இதற்கு மறுப்பாக அ. மார்க்சிடமிருந்து ஒரு கட்டுரை வந்தது. இது பற்றி அவருக்கும் மென்மையான கிண்டலுடன் கடிதம் எழுதியிருந்தேன். காலச்சுவடின் அன்றைய விவாத வரையறைகளுக்குள் (750 சொற்கள் என்று நினைவு) எழுதுமாறு கேட்டிருந்தேன். தான் ஒன்றை அனுப்பிவிட்டால் கண்ணில் ஒற்றிக்கொண்டு இதழாசிரியர்கள் வெளியிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவருக்கு உண்டு. அதேபோலக் கிண்டல் செய்வதைத் தன்முனைப்பும் சகிப்பின்மையும் மிகுந்த அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. காலச்சுவடில் யாருக்கும் பிஸ்தா அந்தஸ்தெல்லாம் தருவதில்லை. இதுபோன்ற காரணங்களை மனதில் வைத்து இதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த ராமஜென்ம பூமி பற்றிய கட்டுரையைக் காரணம் காட்டி நாங்கள் காலச்சுவடைப் புறக்கணிக்கிறோம் என்று சொல்வதெல்லாம் பின்புத்தியின் சாமர்த்தியங்கள்.

000

எனக்கும் காலச்சுவடுக்கும் அ. மார்க்சுடன் இருந்துவரும் முரண்பாட்டில் ரவிக்குமாரையும் பொ. வேல்சாமியையும் ஈடுபடுத்த நான் முனைந்தது இல்லை. ரவிக்குமாரை 2000இல் காலச்சுவடில் நேர்காணல் செய்தபோது அவருக்கும் அ. மார்க்சுக்குமான பிரச்சனைகள் பற்றியோ நிறப்பிரிகையின் உள் அரசியல் பற்றியோ எந்தக் கேள்வியும் கேட்கப்படக்கூடாது என்று முடிவு செய்தேன். ரவிக்குமாரே முன்வந்து அ. மார்க்சைப் பற்றிய கருத்துகளை அந்நேர்காணலில் பதிவுசெய்தபோது அதை வெளியிட்டோம். அதேபோல பொ. வேல்சாமிக்கு அ. மார்க்சுடன் இருந்துவரும் ‘ஊடல் – காதல்’ உறவைப் பற்றி நான் அவரிடம் பேசியதே இல்லை.

 

*. ‘பிள்ளை கெடுத்தாள் விளையால் பட்ட பிறகும் காலச்சுவடில்மாப்புக் குடுக்கோணுஞ் சாமீகதையை வெளியிட்டதன் காரணம் என்ன? பார்ப்பனியச் சார்பின் நுட்பமான வெளிப்பாடுதானே இது?

சு. பலராமன், மதுரை

 

இலக்கியம் என்பது அரசியல் வாசிப்புக்கு அப்பாற்பட்டது என்ற ஒரு பார்வை இருக்கிறது. அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. படைப்பின் வழி வெளிப்படும் படைப்பாளியின் அரசியலை, சார்புகளை வெளிப்படுத்துவது அவசியமானதுதான். ஆனால் அத்தகைய விமர்சனம் இலக்கியத்தின் பண்புகளை உள்வாங்கியதாக படைப்பின் காலம், பண்பாடு, சொல்முறை, உத்தி, அழகியல் ஆகியவற்றை உணர்ந்ததாக இருக்க வேண்டும்.

‘பிள்ளை கெடுத்தாள் விளை’யில் நாங்கள் பட்டுக்கொண்டது உண்மைதான். சு.ரா.வின் மரணத்தைத் துரிதப்படுத்தியதில் இந்த வக்கிரமான சர்ச்சைக்கு முக்கிய இடம் உண்டு. இச்சர்ச்சையில் ‘முற்போக்காளர்’களின் வெறித்தனமான பேச்சுகளும், வன்கொடுமைத் தடைச் சட்டத்தில் சு.ரா.வைக் கைது செய்ய வேண்டும் என்ற தீர்மானமும், மத அடிப்படைவாதிகளின் கூட்டத்தில் கிளறப்படும் வெறிக்குச் சற்றும் குறைந்தது அல்ல முற்போக்கு வெறி என்பதற்கானச் சான்று. இச்செயல்பாடு வன்கொடுமைத் தடைச்சட்டம் ஆபத்தானது என்று விவாதிப்பவர்களின் கையில் கொடுக்கப்பட்ட ஆதாரம். தலித்துகளுக்கு இலக்கியப் புரிதல் இல்லை என்று பிழையாகக் குற்றஞ்சாட்டி வந்தவர்களுக்குக் கிடைத்த சான்று.

மேற்படி நிகழ்விற்குப் பிறகும் வன்கொடுமைத் தடைச்சட்டத்தின் நியாயத்தை ஆதரித்து காலச்சுவடில் எழுதினோம். தலித் இயக்கத்தின் மீது வீண் பழி சுமத்தப்படக் கூடாது என்ற எண்ணத்தில் ‘பிள்ளை கெடுத்தாள் விளை: கதை x விவாதம்’ என்ற தொகுப்பை ரவிக்குமார் தொகுத்தார். இமையம், ஜே.பி. சாணக்யா போன்ற தலித் படைப்பாளிகள் இலக்கியப் புரிதலுடன் இக்கதை பற்றிய தம் வாசிப்பை முன்வைத்தார்கள். அம்பை, ராஜமார்த்தாண்டன், க. பஞ்சாங்கம், சுகுமாரன், பழ. அதியமான், அ. ராமசாமி, பாவண்ணன், பி.ஏ.கிருஷ்ணன், நாஞ்சில் நாடன், பெருமாள்முருகன், ந. முருகேசபாண்டியன் ஆகிய எழுத்தாளர்கள் அதில் கதையை ஆதரித்து எழுதினார்கள். தொகுப்பில் வைக்கப்பட்ட வாதங்களை இதுவரை யாரும் எதிர்கொள்ளவில்லை. எந்தத் தருக்கமும் ஆதாரமும் இல்லாமல் கூறியது கூறும் கிளிப்பிள்ளைகளின் கூற்றுகள் பொருட்படுத்தத் தகுந்தவை அல்ல.

சில படைப்பாளிகளின் கருத்துகளைப் பார்ப்போம்:

அம்பை

ஒரு பெண்ணின் கல்வியும் நடத்தையும் எப்போதும் பிணைக்கப்பட்டே இருக்கின்றன. ஆரம்பக் காலத்தில் கல்வி கற்ற பெண் கள்ளக் காதலனுக்குக் கடிதம் எழுதுவாள் என்று வாதிட்டோர் உண்டு. நடத்தையைப் பற்றிக் களங்கம் கற்பிப்பது ஒரு பெண்ணின் எந்த வயதிலும் நேரலாம். ஒடுக்கப்பட்ட இனத்திலிருந்து ஒரு பெண் உயர்ந்து வந்தால் அந்த இனத்து ஆண்களே அவள் நடத்தை குறித்துப் பேசுவதும் உயர்சாதியினர் அவள் நடத்தை குறித்து விமர்சிப்பதும் இன்றும் நடக்கும் ஒன்று. சு.ரா.வின் கதையில் வரும் படித்த பெண்ணிடம் யாரும் என்னதான் நடந்தது என்று விளக்கம் கேட்கவில்லை. அந்த விடலைப் பையன் அவளிடம் தவறான முறையில் நடந்துகொண்டு அவள் அவனைக் கண்டித்திருக்கலாம். அதைத் தாங்க முடியாமல் அவன் அவளைப் பற்றி அவதூறு கூறியிருக்கலாம். அவன் ஏதோ வகையில் மனம் சோர்ந்திருக்கையில் அவள் அணைத்து ஆறுதல் கூறியிருக்கலாம். அவள் படித்தவள். தொடுகை என்பது ஓர் இயல்பான விஷயம் என்பதைத் தெரிந்துகொண்டவள். ஒருவேளை யாராலும் தொடப்படாத பையன் மிரண்டுபோய் அதைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கலாம். எல்லாவித சாத்தியக்கூறுகளும் இருந்தும் எல்லோருக்கும் எளிதாக இருப்பது அவள் நடத்தையைக் குற்றம் கூறுவதுதான். அவள் தன் இனத்தின் சட்டதிட்டங்களை உடைத்தவள். அவர்கள் தந்த தண்டனை அவள் தலையின் மேல் என்றும் தொங்கிய கத்தி.

ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தி முன்னுக்கு வர நினைத்தால் அவள் கதி இதுதான் என்று கொக்கரிக்கும் கதையாக இது எனக்குப் படவில்லை. மாறாக அவளுக்கு நேர்ந்த அவலம் இன்றும் தொடர்வது எனக்குக் கண்கூடாகத் தெரிகிறது. நடத்தையில் களங்கம் கற்பித்தல் என்பது ஒரு பசித்த, நாக்கைத் தொங்கவிட்டுக்கொண்டு அலையும் ஓநாய் போல் ஒரு பெண்ணைப் பின்தொடரும் ஒன்று. இந்த ஓநாய்க்குச் சாதி பேதம் கிடையாது. ஆனால் சாதியின் பெயரால் ஒடுக்குபவர்கள் இந்த ஓநாயை நன்கு பயன்படுத்திக்கொள்வார்கள். ஆண் என்ற பெயரில், இனம் என்ற பெயரில், ஆதிக்கம் என்ற பெயரில், அதிகாரம் என்ற பெயரில் வாழ்க்கையை நடத்துபவர்களுக்கு இந்த ஓநாய் ஓர் உற்ற நண்பன். இந்த ஓநாயால் வீழ்த்தப்பட்டவள்தான் கதையில் வரும் ஆசிரியை.

ராஜமார்த்தாண்டன்

தாயம்மா ஒரு ‘தலித் பெண்’ என்று கதையில் எந்த இடத்திலும் சொல்லப்படவுமில்லை. கதை நிகழும் காலகட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிராமணர், நாயர், பிள்ளைமார் சாதிகளைத் தவிர்த்த ஏனைய சாதியினர் அனைவரும் ‘தாழ்ந்த சாதி’யார்தான், அவர்கள் பார்வையில். இந்தக் கதையில் வரும் நிகழ்வுகளைப் பொறுத்தவரையில் மேற்குறித்த சாதியினரால் ‘தாழ்ந்த சாதி’ என்று கருதப்பட்ட நாடார் சமுதாயத்தைச் சார்ந்த பெண்ணாகத் தாயம்மா குறிப்பிடப்படுவதாகக் கொள்வதே பொருத்தமாகும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு கிறிஸ்தவ மதத்தைத் தழுவிய நாடார் சாதியினரிடையே ஏற்பட்ட கல்வியறிவும், அதன் காரணமாகச் சமூகத்தில் அவர்களுக்கேற்பட்ட அந்தஸ்தும், இந்து நாடார் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய வரலாற்று நிகழ்வைப் புரிந்துகொண்டு இந்தக் கதையை வாசிப்பவர்களுக்கு, இது ஒரு தலித் பெண்ணைப் பற்றிய கதை அல்ல என்பது புரியும். ஊர்ப் பெரியவர்களால் அவள் கொடுமைப்படுத்தப்படும்போது அவர்கள் வெளிப்படுத்தும் வசைச் சொற்களிலிருந்தும் இது உறுதிப்படும். மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் நாடார் சாதியைச் சேர்ந்தவர்கள் தாமரைப்பூ பறிக்கும் தொழிலை மேற்கொள்வது சாதாரணமாகக் காணக்கூடியதுதான். குமரி மாவட்டத்தில் விளை, தோப்பு என்று முடியும் ஊர்கள் பெரும்பாலும் நாடார் சமூகத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளையே குறிப்பனவாகும். இந்தக் கதையில் வரும் ‘தலைமையாசிரியை விளை’ என்று மாடக்குழியினர் சொல்லிக்கொண்டிருந்த ‘அந்தப் பகுதி’ பின்னர் ‘பிள்ளை கெடுத்தாள் விளை’ என்றானதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.

ரவிக்குமார்

மொழி என்பது ஒரு குறியீட்டு அமைப்பு (sign system) என்று மொழியியலாளர்கள் சொல்லியுள்ளனர். ஒரு பிரதியை வாசிப்பதற்கு அதற்குள் இருக்கும் குறியீடுகளை வாசிக்கவேண்டும். ‘விளை’ என முடியும் ஊரின் பெயரும், தாயம்மா, தங்கக்கண் என்பன போன்ற நபர்களின் பெயர்களும் சுட்டுகின்ற பண்பாடு எதுவெனெத் தெரிந்துகொள்ள நாகர்கோவில் பகுதியின் பண்பாட்டு வரலாறு நமக்குத் தெரிந்திருக்கவேண்டும். இக்கதையில் உள்ள குறியீடுகளை வாசிக்கும்போது இக்கதைக்கும் இப்போது தலித்துகள் என அறியப்படுபவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம். தாயம்மாவைத் ‘தாழ்ந்த ஜாதிப் பிள்ளை’ என்று கதையில்வரும் பாத்திரமொன்று குறிப்பிடுவதைக்கொண்டு அவள் இன்றைய தலித் சாதிகளில் ஒன்றைச் சேர்ந்தவள் என முடிவுக்கு வருவது கதையை வாசிக்கத் தெரியாத அறியாமையே ஆகும்.

திருவாங்கூர் பகுதியில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடந்த தோள்சீலைப் போராட்டத்தின் வரலாற்றின் பின்னணியிலும்; அப்படிப் போராடிய சமூகத்தவருக்குக் கல்வி கொடுக்க முயன்ற மிஷனரிமார்கள் பட்ட கஷ்டங்களின் பின்னணியிலும் வைத்து இந்தக் கதையை வாசிக்கவேண்டும். அப்போதுதான் இது அந்த மக்களுக்கு ஆதரவாகச் சொல்லப்பட்டிருப்பது புரியும்.

பேரா. அரச. முருகுபாண்டியன்,

மாநிலச்செயலர்விடுதலை கலை இலக்கியப்பேரவை,

விடுதலைச் சிறுத்தைகள்

தமிழ்நாடு.

அவரது (சுந்தர ராமசாமியின்) தலித் ஆதரவு நிலையைக் காலி செய்யவும் அவர் பார்ப்பனர் என்பதை மனதில் கொண்டும்தான் அவரது ‘பிள்ளை கெடுத்தாள் விளை’ கதை எதிர்மறையாகப் பார்க்கப்பட்டு அரசியலாக்கப்பட்டது. தமிழ்ச் சூழலில் இது ஒரு வெட்கக்கேடான விசயம்.

பிள்ளை கெடுத்தாள் விளை சிறுகதை மற்றும் 16 விவாத கட்டுரைகளையும் உள்ளடக்கிய ‘பிள்ளை கெடுத்தாள் விளை: கதை x எதிர்வினை’ முழு நூலையும் படிக்க விரும்பும் வாசகருக்காக அந்நூலை http://issuu.com/kalachuvadu2012/docs/pillai_kedutthal_vilai?mode=window&viewMode=doublePage  இந்த இணைப்பில் வலையேற்றம் செய்திருக்கிறேன்.

இலக்கியத்தின் மாறுபட்ட வாசிப்புக்கான சாத்தியங்களை இப்போதைக்கு ஒருபுறம் வைத்து, தகவல்களின் அடிப்படையில் கதையை அணுகுவோம்.

1. கன்னியாகுமரி மாவட்டத்தைப் பின்புலமாகக் கொண்ட கதை இது.

2. இந்தக் கதையில் தலித் கதாபாத்திரங்களே இல்லை.

3. கதை சொல்லியின் சொற்களிலிலோ கதாபாத்திரங்களின் சொற்களிலோ தலித்துகள் பேசப்படவோ சுட்டப்படவோ இல்லை.

கதை நூற்றாண்டிற்கு முன்னால் கன்னியாகுமரி மாவட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்களாக, தீண்டாமையை அனுபவித்த நாடார் சமூகத்திற்கும் அவர்களை ஒடுக்கிய உயர் சாதியினருக்குமான முரண்பாட்டை விவரிக்கிறது. விளை என்பது கன்னியாகுமரி மாவட்டத்தில் நாடார்கள் வசிக்கும் ஊரைக் குறிக்கும். கன்னியாகுமரி மாவட்டப் பண்பாட்டுப் பின்புலம் அறியாதவர்கள், அறியாதவற்றை அறிய எத்தனிக்காதவர்கள், அறியாமை தரும் தெளிவு, வெறி, ஆவேசம் சார்ந்து செயல்படுபவர்கள் நாடார் கதாபாத்திரங்களைத் தலித் எனத் தவறாக ஊகித்து, இதைத் தலித் விரோதக் கதையாகப் பேசியது, அபத்த வாசிப்பின் உச்சம். நாடார்கள் இங்கு நடத்திய தோள் சீலைப் போராட்டத்தை அறியாதவர்கள் உயர் சாதியினர் தாயம்மா ரவிக்கையையும் மேலாடையையும் வன்மத்துடன் கிழிக்கும் வருணனையை வக்கிரமாகப் பார்த்தார்கள்.

அடுத்த கேள்வி இக்கதை நாடார்களை இழிவுபடுத்துகிறதா என்பது. உயர்சாதி மனோபாவங்களைக் குத்திக்காட்டும் விதத்தில் வெளிப்படும் சொற்கள் சு.ரா.வின் கருத்தாகக் கொள்ளப்பட்டமை இலக்கிய வாசிப்பிற்கான அடிப்படைகளைக் கற்காதவர்களின் புரிதல்.

கன்னியாகுமரி மாவட்டம் நாடார்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மாவட்டம். இவர்களில் பலர் முக்கிய எழுத்தாளர்கள், விமர்சகர்கள். சு.ரா.மீது விமர்சனப் பார்வையுடன் இயங்கும் இடதுசாரிகள், இலக்கியவாதிகள் பலர் செயல்படும் மாவட்டம் இது. இவர்கள் எவரும் இக்கதை பற்றி எந்த விமர்சனத்தையும் முன்வைக்கவில்லை. முன்வைக்கப்பட்ட எல்லா விமர்சனங்கங்களுமே இக்கதையை கன்னியாகுமரி மாவட்டத்தின் தனித்துவமான பண்பாட்டு வரலாற்றுப் பின்னணியில் வைத்துப் படிக்கத் தவறியவர்களின் விமர்சனங்கள். அனைவருமே வடதமிழகத்தைச் சார்ந்தவர்கள். ‘பிள்ளை கெடுத்தாள் விளை’ சர்ச்சை பற்றி கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாடார் சமூகத்தினரான ராஜமார்த்தாண்டனின் கட்டுரை முழுமையான தெளிவுகளை உள்ளடக்கியிருக்கிறது. இக்கதை பெண்ணை இழிவுபடுத்துகிறது என்ற குற்றச்சாட்டை அம்பை தன் கட்டுரையில் தெளிவாக எதிர்கொண்டிருக்கிறார்.

இந்தச் சர்ச்சை தலித் இயக்கத்திற்கு எதிரான ஒரு புள்ளியாகிவிடக் கூடாது என்பதில் அதிகவனத்துடன் காலச்சுவடு செயல்பட்டது. இதே அக்கறையுடன் இக்கதை பற்றிய பல முக்கிய எழுத்தாளர்களின் நுட்பமான வாசிப்புகளைத் தொகுக்க ரவிக்குமார் முன்வந்தபோது அதை வரவேற்று தொகுப்பை வெளியிட்டோம். தம்மை முன்னிலைப்படுத்திக்கொள்ள சூழலின் அழுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்ட சில சந்தர்ப்பவாத எழுத்தாளர்களின் ‘கோப்பையில் வீசிய புயல்’ இது. சு.ரா.மீதும் காலச்சுவடுமீதும் வெறுப்பைச் சுமந்து கருவிக்கொண்டிருந்த குமுதம் இதழில் பணியாற்றிய தளவாய் சுந்தரம் என்ற சந்தர்ப்பவாதியின் நோக்கமும் வெகுஜனப் பண்பாட்டு விமர்சகராக செயல்பட்ட சு.ரா.வுக்கு எதிரான தமிழ்ப் பண்பாட்டு வணிகத்தின் அடையாளமான குமுதத்தின் அரசியலும் சூழலின் ஆவேசங்களுக்கு உடுக்கடித்த சந்தர்ப்பவாத எழுத்தாளர்களின் தன்முனைப்பும் இணைந்து இதைப் பொதுவெளிக்குக் கொண்டுவந்தன. தமிழ்ப் பண்பாட்டுத் தளத்தில் நடந்திருக்கும் விவாதங்களில் ஆக வக்கிரமான, வன்மமான, அபத்தமான விவாதம் இதுதான்.

‘பிள்ளை கெடுத்தாள் விளை: கதை x எதிர்வினை’ நூலின் பின் அட்டையில் இடம்பெற்ற ரவிக்குமாரின் பிரகாசமான வரிகள்:

“இலக்கியம் என்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட புனிதப் பொருள் அல்ல. ஆனால் அதை அரசியலாக மட்டுமே சுருக்கிவிட முடியாது. வாசிப்பின் அரசியல் என்ற வாள் சுழற்றலுக்குத் தப்பித்த இலக்கியப் பிரதி எதுவும் தமிழில் இல்லை என்ற அவலச் சூழலில், சமீபத்தில் அதிக தாக்குதலுக்கு உள்ளான சிறுகதைதான் சுந்தர ராமசாமியின் ‘பிள்ளை கெடுத்தாள் விளை’. பிரதியின் மரணம், ஆசிரியரின் மரணம் என்ற பின்நவீனத்துவக் கொடியை ஏந்தியவர்கள்கூட இப்படி வாள் வீசத் தவறுவதில்லை. இந்நிலையில் ஒரு இலக்கியப் பிரதியைக் காக்கும் கேடயத்தை ஏந்திவருகின்றன இக்கட்டுரைகள். வாசிப்பு என்பது மட்டுமன்றி, இலக்கியம் எது என்பது பற்றியும் ஆழமான வரையறைகளை இவை முன்வைக்கின்றன.”

(ரவிக்குமார், பிள்ளை கெடுத்தாள் விளை, 2006)

 

000

 


‘மாப்பு குடுக்கோணுஞ் சாமீ’ http://www.kalachuvadu.com/issue-150/page03.asp  கதையில் தலித் விரோதத்தின் எந்தக் கூறும் இல்லை. பிழையான இலக்கியவாசிப்பின் விளைவு இக்கேள்வி என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. இக்கதையைப் பலமுறை கவனமாக வாசித்துப் பார்த்தேன். பலதரப்பினருடன் உரையாடினேன். அவர்கள் சொன்ன விமர்சனங்களின் அடிப்படையில் கதையை மீண்டும் வாசித்துவிட்டு விவாதித்தேன். மீண்டும் சொல்கிறேன் இக்கதைத் தலித்துகளை அவமதிக்கவில்லை. பெருமாள்முருகனின் மொத்தப் படைப்புலகை அறிந்தவர்கள் இக்கதையை உரிய கவனம்கொடுத்து வாசித்து இக்குற்றச்சாட்டைப் புறக்கணிப்பார்கள்.

கதை கவுண்டர்களுக்கும் சக்கிலியர்களுக்கும் இடையிலான சமூக உறவை, ஆண்டான்-அடிமை உறவைப் பின்புலமாகக் கொண்டுள்ளது. காலம் வெளிப்படையாகக் கூறப்படவில்லை எனினும் பல பத்தாண்டுகளுக்கு முன்னர் நடக்கும் கதை என்பதை சமூக உறவுகளின் தன்மை உணர்த்துகிறது.

கவுண்டர்களின் மாடுகள் ஒவ்வொன்றாக இனம் புரியாத காரணத்தால் மரணிக்கின்றன. ஊரில் பெரும் துக்கம் பரவுகிறது. கவுண்டச்சியின் துக்கம் இறந்தது கணவரா மாடா என்று சந்தேகம் வரும் தீவிரத்தில் வெளிப்படுகிறது. ஏதோ சாபம், குடுகுடுப்பைக் காரனின் ஏவல், தெய்வக் குற்றம், காத்துக் கருப்பு என்று பல காரணங்கள் ஊகிக்கப்படுகின்றன. சுவடிகளைப் படித்து வைத்தியம் செய்பவரும் கைவிரித்துவிடுகிறார். விஷம் அல்ல என்பது நாக்கு நீலம் பாரிக்காததால் தெரிந்துவிடுகிறது. சாந்தி செய்தல், நேர்த்திக்கடன் செய்தல் எல்லாம் பொதுப்பணத்தில் நடக்கின்றன. இதற்கு மேல் செய்ய எதுவுமில்லை. மாடுகள் சாவது நிற்கவில்லை. அறியாதது பற்றிய பயமும் பீதியும் நிறைந்து உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருக்கிறது கவுண்டர் குடி.

அப்போது சக்கிலியக் குடியில் கொண்டாட்டம் நடக்கும் செய்திவருகிறது. மூன்று  வாரங்களில் பெருத்த உடல் கொண்ட ஆறு மாடுகள் அவர்களுக்குக் கிடைத்துள்ளன. சக்கிலியர்களின் குடியும் கொண்டாட்டமும் கண்டு ஆதிக்கசாதிக்கு ஒடுக்கப்பட்ட சாதியைப் பார்த்து பொறாமை ஏற்படுகிறது. செத்த மாட்டைத் தின்பது ராசபோகமாகத் தெரிகிறது. அந்த ராசபோகத்தைத் தாங்களும் அனுபவிப்பதை யாரும் தடுக்கவில்லை என்பதெல்லாம் உறைப்பதில்லை. கவுண்டர்களுக்கு ‘பிற’வாக இருக்கும் சக்கிலியர்கள் பற்றிய சந்தேகமும் பயமும், சக்கிலியர்களுக்கு செய்வினை, மந்திரம் தெரியும் போன்ற மூட நம்பிக்கைகளும் மாடுகளின் சாவு ஏற்படுத்தும் துக்கமும் இயலாமையும் ஆத்திரமும் வடிகால் தேடுகின்றன. மாடுகள் சாகும் முன்னர் சக்கிலியர்கள் மாட்டருகில் வந்துபோனதாக நினைவுகள் புதுப்பிக்கப்படுகின்றன. ‘அவர்கள் எப்பவுமே கட்டுத்தரக்கு வந்துபோறவங்கதானப்பா’ என்று நிதானமாக ஒருவர் சொல்வது உணர்ச்சிக் கொந்தளிப்பில் எடுபடவில்லை. மாடுகளின் நாக்கு நீலம் பாரிக்காததால் விஷம் அல்ல என்றும் ஏதோ நூதனமான நோய் என்றும் ஏற்பட்டிருந்த புரிதல் அவசரமாக மறக்கப்படுகிறது. ஊரைவிட்டு ஓடிய சக்கிலியரான ராசு பற்றிய பீதி கிளம்புகிறது. பொங்கிப் பெருகும் உணர்ச்சிக்கு வடிகாலாக சக்கிலியக் குடியைத் தாக்கும் திட்டம் உருவாகி நடைமுறைபடுத்தப்படுகிறது. சக்கிலியர்களைக் கவுண்டர்கள் தாக்கும் காட்சிகள், விரிவாக, ரத்தக்கொதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் விவரிக்கப்படுகின்றன. கொலைவெறித் தாக்குதலின் முன்னர் செய்யாத குற்றத்திற்காக மாப்புக் கேட்கின்றனர் சக்கிலியர்கள்.

கவுண்டர் சக்கிலியர் உறவில் காலமாற்றத்தால் ஏற்படும் விரிசல் ஒரு சிறு சம்பவத்தில் கோடி காட்டப்படுகிறது. கிணற்றில் குளித்ததற்காக சாட்டையால் அடிபடும் ராசு ‘டே கவுண்டா என்னய அடிச்சிட்ட இல்ல. உன்னையப் பாத்துக்கறண்டா’ என்று திட்டிவிட்டு ஊரைவிட்டு ஓடுகிறான்.

இக்கதையில் எங்கிருக்கிறது தலித் விரோதப் போக்கு? தலித்துகள் விரும்பும் தலித் எதிர்ப்பு அரசியல் இக்கதையில் இல்லாமல் இருக்கலாம். அப்படிப்பட்ட கதைகளும் எழுதப்பட வேண்டும். ஆனால் நான் விரும்பும் கதையை நீ எழுது என்று படைப்பாளியைக் கேட்க முடியாது. எனினும் ‘பிள்ளை கெடுத்தாள் விளை’ பிரச்சனை போல இதற்குக் கூட்டமும் சேராது கொழுந்துவிட்டும் எரியாது. ஏனெனில் பெருமாள் முருகன் பெரும்பான்மைச் சாதியைச் சேர்ந்தவர்.

 

*. நன்கு அறியப்பட்ட எழுத்தாளரும் செயற்பாட்டாளருமான அருந்ததி ராய் அவர்களின் அண்மைய இரு தமிழ்நாட்டுப் பொதுநிகழ்வுகளும் காலச்சுவடின் அழைப்பின்  பேரிலேயும் அதன் நிகழ்வுமாகவே இருந்தன. அவரது “The God of Small Things” என்கிற ஆங்கில நாவலைசின்ன விஷயங்களின் கடவுள்என்ற பெயரில் உங்கள் பதிப்பகம் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. இந்த நாவல் தொடர்பாகவும் காலச்சுவடு பதிப்பகத்துடன் அவர் இணைந்து பணியாற்றுவது குறித்தும் சில கருத்துகளைப் படிக்கக்கூடியதாக இருந்தது. இவை தொடர்பாக உங்கள் கருத்துகள் என்ன?

ஜெயன்

 

2003ஆம் ஆண்டு உயிர்மைப் பதிப்பகம் அருந்ததி ராயின் நாவலை வெளியிடுவதற்காக அவருடைய லண்டன் ஏஜெண்டுடன் உடன்படிக்கை செய்தது. உடன்படிக்கையின் நிபந்தனைகளில் ஒன்று நாவலை  18 மாத காலத்திற்குள் வெளியிட வேண்டும், தவறினால் முன்பணத்தை இழக்க வேண்டிவரும் என்பது. இந்த உடன்படிக்கை அமெரிக்க வாழ் எழுத்தாளர் உயிர்மை சார்பாக மேற்கொண்டதாக உயிர்மை தெரிவிக்கிறது. முன்பணமும் அமெரிக்க டாலரிலேயே ($960) கொடுக்கப்பட்டுள்ளது, பவுண்டிலோ இந்திய ரூபாயிலோ அல்ல. பணம் கொடுத்ததும் அமெரிக்க நண்பர்தானோ தெரியவில்லை. உரிய காலத்தில் உயிர்மை நூலை வெளியிடவில்லை. ஒப்பந்தம் காலாவதியாவதற்கு முன்னர் ஒப்பந்தக் காலத்தை நீட்டிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரியவில்லை. இது தொடர்பான ஆவணங்கள், கடிதப்போக்குவரத்து, சான்றுகள் எதையும் இதுவரை உயிர்மை வெளியிடவில்லை. உரிய காலத்தில் நாவலை வெளியிடத் தவறியதால் ஏஜென்சி உடன்படிக்கை ரத்தாகிவிட்டதையும் உயிர்மை முன்தொகையை இழந்துவிட்டதையும் அறிவித்து உயிர்மைக்குக் கடிதம் அனுப்புகிறது. (அருந்ததி ராய் வழியாக லண்டன் ஏஜென்சியைத் தொடர்புகொண்டு உடன்படிக்கையின் நகலையும் ஏஜென்சி உயிர்மைக்கு எழுதிய கடிதத்தின் நகலையும் பெற்றிருக்கிறேன்.) இந்தத் தகவல்களை எல்லாம் மறைத்துவிட்டு ஏதோ சூதினால் உயிர்மை அருந்ததி ராய் நாவலை வெளியிட முடியாமல் போனதாக ஏழு ஆண்டுகளாக நெஞ்சில் அடித்து, மண்ணை வாரித் தூற்றி ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒப்பந்தம் ரத்தாகி ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு காலச்சுவடு அருந்ததி ராயிடம் ஒப்பந்தம் செய்து நூலை வெளியிட்டிருக்கிறது.

மாலதி மைத்ரி  அருந்ததி ராயைச் சந்தித்து உரையாடியதை இவ்வாறு பதிவு செய்துள்ளார்.

“தமிழில் அவரது நாவல் வெளியாகுமென அறிவிக்கப்பட்ட நிலையில் ஏன் வெளிவரவில்லையென விசாரித்தேன். ‘என் தமிழக நண்பர் அந்தப் பதிப்பாளர் மாற்று அரசியல் சார்பானவர் அல்ல எனச் சொன்னார், அதனால் நிறுத்தி விட்டேன்’ என்றார்.”

(காலச்சுவடு, டிசம்பர் – 2010)

இதன் அடிப்படையில் உயிர்மை பற்றிய தவறான செய்தியை அருந்ததி ராயிடம் கூறி நாவல் வெளிவராமல் செய்துவிட்டதாக உயிர்மை தரப்பில் சொல்கிறார்கள். நாவல் வராமல் போனதற்கு உடன்படிக்கை காலாவதியானதே காரணம். உயிர்மை பற்றி அருந்ததி ராயிடம் யார் என்ன சொன்னார்கள் என்பது எனக்குத் தெரிய வாய்ப்பில்லை. 2011 மார்ச்சுக்கு முன்னர் எனக்கு அவருடன் தொடர்பு இல்லை, நூலை வெளியிட அனுமதிகேட்டு சில பதில் கிடைக்காத மின்னஞ்சல்களை அதற்கு முன்னர் அவருக்கு அனுப்பியிருக்கிறேன் என்றபோதிலும். ஆனால் உயிர்மை உடன்படிக்கை செய்த 2003ஆம் ஆண்டு வரை மாற்று அரசியலுக்கு வலுசேர்க்கும் நூல்களை வெளியிட்டதில்லை. ரவிக்குமாரின் நூல்களை வெளியிட்டதையே அருந்ததி ராய் நூலை வெளியிடுவதற்கான ஒரே தகுதியாக உயிர்மை சார்பாக குறிப்பிடப்படுகிறது. உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டு 2003. ரவிக்குமார் நூல்களை வெளியிட்டது 2008இல். இதைச் சான்றாகக் கூறும் ஆண்டு 2011. இது மாற்று அரசியல் நூல்களை தொடக்கத்தில் உயிர்மை வெளியிடவே இல்லை என்பதையும் இன்றுவரையிலும் அவர்களின் நூல் வரிசையில் மாற்று அரசியல் நூல்களுக்கு அதிக முக்கியத்துவம் இல்லை என்பதையும் காட்டுகிறது. (அவர்களுடைய கூற்றிலிருந்தும் பொதுவான அவதானிப்பிலிருந்துமே இதை எழுதுகிறேன். உயிர்மை நூல் பட்டியலை நான் ஆய்வு செய்யவில்லை.) 2003இல் உயிர்மை, ஆணாதிக்க மேட்டுக்குடிப் பார்வையையும் அரசு சார்பையும் வெளிபடுத்தும் சுஜாதா, தேசிய வெறியையும் இந்துத்துவத்தையும் முன்னெடுக்கும் ஜெயமோகன் படைப்புகளையே முக்கியத்துவப்படுத்தி வெளியிட்டுவந்தது. எனவே அருந்ததி ராயிடம் கூறியதாகக் கூறப்படும் செய்தி உண்மையெனில் அது உயிர்மை பற்றிய சரியான மதிப்பீடுதான். தமிழகச் சூழலில் பிறப்பின் அடிப்படையிலேயே ஒருவருடைய கருத்தியல் பிறரால் நிர்ணயிக்கப்படுகிறது. தமிழுக்கும் அப்பால் இருப்பவர்கள் அதைச் செயலின் அடிப்படையிலேயே நிர்ணயிப்பார்கள்.

யாரோ ஒருவர் தவறாகக்கூறும் செய்தியால் அருந்ததி ராய் மனம் மாறிவிடுவார் என்று கணிப்பவர்கள் தங்களைப் புத்திசாலிகளாகவும் அவரை முட்டாளாக அனுமானிப்பவர்களாகவும் இருக்க வேண்டும். இதுபற்றி விரிவாக  எழுதியிருக்கிறேன். www.kalachuvadu.com செப்டம்பர் இதழில் இல் இக்கட்டுரையை நீங்கள் வாசிக்கலாம்.

ஷோபா சக்தி கேள்விகள்:

8. சங்கரமடம் சீரழிகிறதே என வருத்தப்பட்டு மடத்தைக் காப்பாற்ற காலச்சுவடு தலையங்கத்தில் அடியார்களுக்குப் போராட்ட அழைப்பு விடுத்ததுபோல, மதுரை ஆதீனத்தை நித்தியானாந்தாவிடம் கைமாற்றிக் கொடுத்த பரபரப்புச் சம்பவத்திலும் சைவ அடியார்களை நோக்கிப் போராட்டத்துக்கு அழைப்புவிடும் எண்ணம் காலச்சுவடுக்கு உண்டா?

உங்கள் கேள்விகளைப் படிக்கும்போது வடிவேலு பாணியில் ‘மறுபடியும் மொதல்ல இருந்தா!’ என்று கேட்கத் தோன்றுகிறது. உங்கள் கேள்விகளில் பெரும்பாலானவை உங்களின் விமர்சனப் பார்வையில் உருவானவை அல்ல. பல ஆண்டுகளாகக் கேட்கப்பட்டு அவ்வப்போது விளக்கமும் தரப்பட்டுள்ள காற்றில் மிதந்துகொண்டிருந்த கேள்விகள். காலச்சுவடு தலையங்கத்தைப் படித்து அடிகளார்க்குப் போராட்ட அழைப்பு விடுத்ததாகப் பொருள்கொள்ளும் சாத்தியம் ஒரு அபத்த வாசிப்பில்கூட இல்லை. இப்பதிவின் பிற்பகுதியில் தரப்பட்டுள்ள இணைப்பில் தலையங்கத்தைப் படிக்கும் வாசகர்கள் உங்கள் பொய்யை உடனடியாகவே உணர்வார்கள். தமிழின் ஒரு முக்கியப் படைப்பாளியான நீங்கள் இவ்வாறு உங்களை இழிவுபடுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன? காலச்சுவடின் வாதங்களை உள்வாங்கி விவாதத்தைத் தொடராமல் ஆசான் கற்றுக்கொடுத்த சூத்திரங்களை ஒப்பித்துக்கொண்டிருப்பதைத் தவிர்க்கலாமே. உதாரணமாக சங்கராச்சாரியார் கைது பற்றி காலச்சுவடின் நிலைபாட்டை விளக்கி உயிரெழுத்து நேர்காணலில் (ஜனவரி 2009) விரிவாகப் பேசியிருந்தேன். பல ஆண்டுகள் காலச்சுவடு இணையதளத்திலும் அது இருந்தது.

டிசம்பர் 2004இல் சங்கராச்சாரியாரை ஜெயலலிதா அரசு கைது செய்தது. அவரின் இச்செயல் பற்றி காலச்சுவடு நண்பர்கள் அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சி தவிர வேறு எந்த உணர்வும் இருந்ததில்லை.

டிசம்பர் மாதத் தலையங்கம் ‘புழுதியில் புரளும் சுடர்கள்’. http://www.kalachuvadu.com/issue-60/page05.asp இத்தலையங்கத்தை இப்போது மீண்டும் படித்துப் பார்த்தேன். அதன் ஒரு சொல்லைக்கூட மாற்றவேண்டிய அவசியம் இல்லை. ரவிக்குமார், ஆ.இரா. வேங்கடாசலபதி ஆகியோரின் ஒப்புதலோடு பிரசுரிக்கப்பட்ட தலையங்கம் இது. ஏற்கனவே சங்கரமடத்துக்கு எதிர்நிலையில் இருப்பவர்களைக் குஷிப்படுத்தி, எங்களுக்கு முற்போக்கு ஒப்பனை செய்துகொள்ளும் தடம்பதிந்த பாதையைக் கைவிட்டு, சங்கரமடத்தின் பக்தர்களையும் கணக்கில் எடுத்து, சரியான பார்வையைப் பொருத்தமான தொனியில் முன்வைக்கும் சவாலான காரியத்தை மேற்கொண்டு அதில் வெற்றிகண்டது இத்தலையங்கம். சங்கரமடத்தில் கண்மூடித்தனமான பக்தர்கள் பலரை மறுபரிசீலனை செய்யத் தூண்டிய தலையங்கம் இது.

ஜனவரி 2005 இதழில் ‘சங்கர திக் விஜயம்’ என்ற சிறப்புப் பகுதியை வெளியிட்டோம். நல்லக்கண்ணு, சுந்தர ராமசாமி, ஞாநி, பிரபஞ்சன், அரவிந்தன், டி.என். கோபாலன், அம்பை ஆகியோர் பங்களித்தனர். இவற்றை இந்த இணைப்புகளில் படிக்கலாம்.

http://www.kalachuvadu.com/issue-61/page16.asp, http://www.kalachuvadu.com/issue-61/page19.asp, http://www.kalachuvadu.com/issue-61/page21.asp, http://www.kalachuvadu.com/issue-61/page22.asphttp://www.kalachuvadu.com/issue-61/page24.asp, http://www.kalachuvadu.com/issue-61/page30.asp, http://www.kalachuvadu.com/issue-61/page32.asp, http://www.kalachuvadu.com/issue-61/page33.asp,

இவற்றைப் படிக்கும் வாசகர் மனதில் சங்கரமடம் சார்பாகக் காலச்சுவடு எழுதியிருப்பதான எண்ணம் ஏற்பட வாய்ப்பே இல்லை.

பின்னர் இந்தக் குற்றச்சாட்டுகள் எழ என்ன காரணம்?

தமிழக முற்போக்கு அறிவுஜீவிகளின் பொதுப்பண்பு சுயசாதி விமர்சனத்தைத் தவிர்த்தல். அவர்கள் காலச்சுவடு இப்பிரச்சனையை விவாதிப்பதைத் தவிர்க்கும் என ஆவலோடு எதிர்பார்த்தனர். காலச்சுவடு பார்ப்பனப் பத்திரிகை என்பதை நிரூபிக்கும் வாய்ப்பு அண்மையிலிருக்கும் ஆவலோடு நாக்கில் எச்சில் ஊறக் காத்திருந்தனர். பார்ப்பனியம் பற்றிய இவர்களின் விமர்சனம், அது விமர்சனத்தை உள்வாங்கி மாற்றமடைய வேண்டும் என்ற உயரிய நோக்கில் முன்வைக்கப்படுவதல்ல. அது அவ்வாறே இருக்க வேண்டும், மாறிவிடக்கூடாது, அப்போதுதான் இவர்கள் சமூகப் பிளவுகளில் புகுந்து புறப்பட்டு முற்போக்குத் தொழில் சிறக்க முடியும். இருப்புநிலை மாறாது, மாறிவிடக்கூடாது என்பதே தமிழக முற்போக்கு அரசியலின் அடிப்படை. எனவேதான் சாதிய அமைப்பில் கட்டுண்டு கிடக்கும் பிராமணர்களைவிட மீறப் பல யத்தனங்கள் செய்பவர்களே முற்போக்கு அறிவுஜீவிகளால் அதிகம் தாக்கப்படுவார்கள்.

காலச்சுவடு இந்த வரையறைகளை மீறி சங்கரமடம்மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தமை இவர்களைப் பெரும் பதற்றத்திற்கு உள்ளாக்கியது. அதிலும் சுயசாதி விமர்சனத்தை வளர்த்தெடுக்கும் நோக்கில் பிறப்பால் பிராமணர்களான சுந்தர ராமசாமி, அம்பை, ஞாநி, டி.என். கோபாலன் ஆகியோரின் பார்வைகளைப் பிரசுரித்தமை முற்போக்குகளின் பதற்றத்தை மேலும் அதிகரித்தது. உண்மைக்கு முற்றிலும் புறம்பான உங்கள் கேள்வியும் இந்தப் பதற்றத்தின் வெளிப்பாடுதான்.

நித்தியானந்தா மதுரை இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டதைப் பற்றிய காலச்சுவடு தலையங்கம் இது: http://www.kalachuvadu.com/issue-150/page03.asp

இதழியல் நண்பர்களிடம் நித்தியானந்தா இப்பதவியைப் பெற என்ன காரணம் என்று கேட்டேன். காசும் காமமும் என்றார்கள். அப்படியென்றால் இளைய ஆதீனமாக அவரே பொருத்தமானவர் என்று எனக்குத் தோன்றியது. நித்தியானந்தா கார்காத்த வேளாளர் அல்ல என்பதால் அவர் அப்பதவிக்கு நியமிக்கப்பட முடியாது என்று வெளிப்படையாகவே மடாதிபதிகளும் சாதி சங்கத் தலைவர்களும் பேசினார்கள். நமது முற்போக்கு சாதி மறுப்பு அறிவுஜீவிகள் அறிதுயிலிலிருக்கிறார்கள். அடுத்ததாக ஜெயேந்திரர் ஏதேனும் உளறும்போது விழித்தெழுந்து குதிப்பார்கள்.

9. அணுசக்தி உடன்படிக்கையை முழுவதுமாக ஆதரித்து மாநிலங்களவையில் கனிமொழி ஆற்றிய உரையை முழுமையாக நீங்கள் காலச்சுவடில் வெளியிட்டதற்கான உண்மையான நோக்கம் என்ன? அதன்மூலம் ஊழல் திமுக அரசிடமிருந்து காலச்சுவடுக்குக் கிடைத்த சலுகைகள் என்ன? இல்லையெனில் கனிமொழியின் உரையை நீங்கள் ஏன் வெளியிட வேண்டும்? இவ்வாறான மாநிலங்களவை உரைகளைகாலச்சுவடுஅதற்கு முன்போ பின்போ வெளியிட்டதில்லையே? கனிமொழியோடு பகை ஏற்பட்டதன் பின்பாக, “கனிமொழியை அம்பலப்படுத்தவே அதை வெளியிட்டோம்என நீங்கள் எழுதியதை நம்புமளவிற்குத் தமிழ் இலக்கிய எழுத்தாளர்களும் வாசகர்களும் அடி முட்டாள்களாக இருக்கிறார்கள் என்றா நம்புகிறீர்கள்?

காலச்சுவடு வாசகர்கள் பற்றிய என் எண்ணம் பொதுவாக உயர்வானதுதான். இல்லையென்றால் அதன் உள்ளடக்கம் சிந்தனையையும் விவாதத்தையும் தூண்டுவதாக அமையாது.

நீங்களும் முட்டாள் என நான் நினைக்கவில்லை. 2006இலிருந்து காலச்சுவடு இதழ்கள் எல்லாமே இணையத்தில் உள்ளன. நிகழ்வுகளைக் கால வரிசையில் நீங்கள் வரிசைப்படுத்திப் பார்த்தால் உங்களுடைய ஊகங்கள் பிழை என்பது உங்களுக்கே விளங்கிவிடும். ஆனால் இந்த எளிய காரியத்தைச் செய்ய முடியாதபடி சாதி வெறுப்பும் சகவாசத் தாக்கமும் உங்கள் கண்ணைக் கட்டுகின்றன.

2006 தேர்தலில் சு. வெங்கடேசன், ரவிக்குமார், சல்மா ஆகியோர் தேர்தலில் போட்டியிட்டனர். ரவிக்குமார் மட்டுமே வென்றார். சட்டமன்றத்தில் அவர் முதல் உரையைக் காலச்சுவடில் பிரசுரித்தோம். இதன்வழி காலச்சுவடு சாதித்துக்கொண்டது என்ன என்பது பற்றிய ஊகங்கள் ஏதேனும் உங்களுக்கு இருக்கிறதா? ஏனெனில் அதற்கு முன்னரும் பின்னரும் எந்தச் சட்டமன்ற உரையையும் நாங்கள் பிரசுரித்ததில்லை. மேலும் காலச்சுவடு ஒவ்வொரு இதழிலும் முன்னர் செய்திராத, புதியதாக ஒன்று இடம் பெற்றிருக்கும். இவை எல்லாவற்றைப் பற்றியும் உங்களுக்கு ஊகங்கள் இருந்தாலும் வியப்படையமாட்டேன். கனிமொழி உரைக்கு முன்னர் வேறு பாராளுமன்ற உரையை வெளியிட்டதில்லை. ஏனெனில் அதற்கு முன்னர் நவீனத் தமிழ் இலக்கிய உலகிலிருந்து வேறு எவரும் பாராளுமன்ற உறுப்பினராகவில்லை.

கனிமொழியின் உரையை முதலில் காரியம் சாதிக்கவே வெளியிட்டோம், பின்னர் உறவு முறிந்ததும் ‘அம்பலப்படுத்தவே வெளியிட்டோம்’ என்று புதிய விளக்கம் தருகிறோம் என்ற உங்கள் ஊகத்திற்கு வருவோம்.

திமுக அரசு 2006 மே மாதம் பதவியேற்றது. அதையடுத்து 2008 ஜனவரியில் கனிமொழியின் உரையை வெளியிடும் வரை காலச்சுவடில் வெளிவந்த முக்கியமான விமர்சனப் பதிவுகளைப் பார்க்கலாம்.

1. ஜூன் 2006 இதழில் தேவிபாரதியின் ‘அண்ணாயிசத்தின் வெற்றி’ என்ற கட்டுரை வெளிவந்தது. (அதிமுகவின் இலவசங்களின் வழிமுறையை கருணாநிதி நகல் செய்து வென்றது பற்றிய விமர்சனம்.) http://www.kalachuvadu.com/issue-78/katturai1.htm

2. ஜூலை 2006 இதழில் என்னுடைய ‘கறுப்புக் கண்ணாடி தரிசனங்கள்’ என்ற கட்டுரை வெளிவந்தது. (டாவின்சி கோட் திரைப்படத்தைத் தடைசெய்தது மற்றும் ஒரு ஜைனத் துறவியை நிர்வாணகோலம் காரணம் தமிழகத்தைவிட்டு வெளியேற்றியது பற்றிய கண்டனம்.) http://www.kalachuvadu.com/issue-79/editorial2.htm

3. 2006 நவம்பர் இதழில் சென்னை மாநகராட்சித் தேர்தல் அராஜகத்தைக் கண்டித்து ‘வாக்காளரைப் புறக்கணித்த தேர்தல்’ என்ற தலையங்கம். http://www.kalachuvadu.com/issue-83/editorial01.asp

4. ரவிக்குமார் எம்.எல்.ஏ. தாக்கப்பட்டது பற்றிய சிறப்புப் பகுதி 2007 பிப்ரவரி இதழில் வெளிவந்தது. http://www.kalachuvadu.com/issue-86/ravikumar01.asp

5. சென்னை சங்கமம் பற்றிய அரசியல் தவிர்த்த பண்பாட்டு விமர்சன மதிப்பீடு ஏப்ரல் 2007 இதழில் வெளிவந்தது. ஜகத் கஸ்பார் இதை ‘அறிவுஜீவி பயங்கரவாதம்’ என வருணித்தார்.http://www.kalachuvadu.com/issue-88/chennai01.asp, http://www.kalachuvadu.com/issue-88/chennai02.asp,http://www.kalachuvadu.com/issue-88/chennai03.asp,http://www.kalachuvadu.com/issue-88/chennai05.asp, http://www.kalachuvadu.com/issue-88/chennai06.asp

6. மதுரை தினகரன் தாக்குதலை, ஊழியர்கள் படுகொலையைக் கண்டித்து என்னுடைய ‘பிறக்கும் ஒரு புது அழகு’ ஜூலை 2007இல் வெளிவந்தது. அழகிரியை ‘அன்பான மனிதர்’ என்று பேட்டி கொடுத்த கனிமொழியும் கண்டிக்கப்பட்டிருக்கிறார். http://www.kalachuvadu.com/issue-91/katturai01.asp

7. சேதுகால்வாய் திட்டத்தைச் சுற்றுச்சூழல் மற்றும் மீனவ சமூக பாதிப்புகளின் அடிப்படையில் கண்டித்து ‘அறவியலும் அறிவியலும்’ தலையங்கம் அக்டோபர் 2007இல் வெளிவந்தது. http://www.kalachuvadu.com/issue-94/page3.asp

8. ‘பாலைவனமாகும் தேரிக்காடும் கலைஞர் மறந்த திருக்குறளும்’ கட்டுரை அக்டோபர் 2007இல் வெளிவந்தது. http://www.kalachuvadu.com/issue-94/page72.asp

9. தேவிபாரதியின் ‘சேதுக் கால்வாய்: பாதையை மறிக்கும் பாலம்’ நவம்பர் 2007இல் வெளிவந்தது.  http://www.kalachuvadu.com/issue-95/page11.asp

10. ஞாநியைக் கண்டித்து தமிழச்சி, கனிமொழி & கோ நடத்திய கூட்டத்தைக் கடுமையாக விமர்சித்த என் கட்டுரை ‘வெந்து தணியும் அவதூறுகள்’ டிசம்பர் 2007இல் வெளிவந்தது. http://www.kalachuvadu.com/issue-96/page12.asp

கனிமொழியைக் காலச்சுவடு விமர்சிப்பதை விரும்பாத ரவிக்குமார் (ஆதவன்) டிசம்பர் 2006இல் ஆசிரியர் குழுவிலிருந்து விலகினார். ஜனவரி 2008இல் கனிமொழியின் மாநிலங்களவை உரையை வெளியிட்டோம். இரண்டு மாதங்களுக்குப் பிறகு காலச்சுவடு நூலகங்களில் திமுக அரசால் தடைசெய்யப்பட்டது.

எங்கள் வேண்டுகோளை ஏற்று கனிமொழி உரைக்கு சுப. உதயகுமார் மார்ச், 2008 காலச்சுவடில் எதிர்வினையாற்றினார். இதை அவரே இப்போதும் முகநூலில் அ. மார்க்ஸ் பக்கத்தில், மனித உரிமை தாதாக்களின் மிரட்டலைப் பொருட்படுத்தாது உறுதிப்படுத்திவிட்டார்.

கனிமொழி உரையை வெளியிட்ட ஜனவரி 2008க்கும் தடைசெய்யப்பட்ட மார்ச் 2008க்கும் இடையில் என்ன சாதகங்களைப் பெற்றோம் என்பது பற்றிய அந்தரங்கமான தகவல் எதுவும் உங்களிடமிருந்தால் தெரிவியுங்கள். இந்த வரையறையை விரிவுபடுத்தி திமுக ஆட்சியால் காலச்சுவடுக்கும் அரசுக்கும் இருந்த உறவு – முரண் பற்றி நான் பதிவு செய்யாத தகவல்கள் கிடைத்தாலும் தேடி வெளியிடுங்கள். எல்லா வெகுஜன ஊடகங்களிலும் குடிகொண்டிருக்கும் உங்கள் சகபாடிகள் அவசியம் உதவுவார்கள். முயன்றுதான் பாருங்களேன். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைக்கூட பயன்படுத்தலாமே. அண்டப்புளுகுகளை அவிழ்த்துவிடாமல் ஒரு மாற்றத்திற்காக ஆதாரபூர்வமாக எழுதித் துணியுங்கள்.

10. லண்டன் கூட்டத்தில் நீங்கள் வாசித்த கட்டுரையில், அனுராதபுரத்தில் 1985இல் புலிகள் செய்த கொலைகளால் நீங்கள் அதிர்ச்சியுற்றீர்கள் என்றும் அதன்பின்பு உங்களது அறையில் ஒட்டப்பட்டிருந்த பிரபாகரனது படம் கிழிந்து தொங்கியபோது அதை மறுபடியும் ஒட்டாமலேயே விட்டுவிட்டீர்கள் என்றும் 1990-91இல் முஸ்லீம்களுக்கு புலிகளால் இழைக்கப்பட்ட கொடுமைகளை 3 வருடங்கள் கழித்து நீங்கள் முழுமையாக அறிந்தபோது புலிகளுடன் உங்களுக்கிருந்த கொஞ்சநஞ்ச மானசீக உறவும் அற்றுப்போனது என்றும் அன்றிலிருந்து நீங்கள் புலிகள் மீது நம்பிக்கை இழந்தீர்கள் என்றெல்லாம் சொன்னீர்கள். இந்தச் செய்திகளையெல்லாம் மே 2009ற்கு பின்பாக அதுவும் தமிழகத்திற்கு வெளியே ஒரு கூட்டத்தில்தான் பேச வேண்டும் என அப்போதே முடிவு செய்திருந்தீர்களா? இல்லையெனில் புலிகள் மீதான உங்களது இத்தகைய விமர்சனங்களை மே 2009ற்கு முன்பாக உங்களால் ஏன் பொதுவெளியில் வைக்க முடியவில்லை?

ஒருவர் ஒரு செயலை இன்று செய்யும்போது இதற்கு முன்னர் அதை ஏன் செய்யவில்லை என்று கேட்பதும் அதற்குச் சமாந்திரமான இன்னொரு செயலையும் ஏன் செய்யவில்லை என்று கேட்பதும் ஆகப் பலவீனமான கேள்விகள். எல்லாச் செயல்பாடுகளும் அக புறச் சூழலாலும் வாய்ப்புகளாலும் நெருக்கடிகளாலும் கூடிவருகின்றன.

புலிகளை 2009க்கு முன்னர் விமர்சிக்காமல் அதன் பின்னர் விமர்சிப்பதில் சந்தர்ப்பவாதம் உள்ளது என்று நீங்கள் குற்றஞ்சாட்ட விரும்பினால் அந்த மௌனத்தால் காலச்சுவடுக்கோ எனக்கோ என்ன சாதகம் ஏற்பட்டது என்பதையும் நீங்கள் விளக்க வேண்டும்.

புலிகள் பற்றிய என் கருத்து 2009க்கு முன்/பின் என்று எந்த மாற்றத்தையும் அடையவில்லை. எனக்கிருக்கும் மிக விரிவான இலங்கை நண்பர் வட்டம் இதற்குச் சான்று பகிர முடியும். புலிகள் பற்றிய என் விமர்சனம் அவர்களின் ராணுவ ஆற்றல் தொடர்பானது அல்ல. 2001ஆம் ஆண்டிலிருந்து இலங்கையிலும் புலம்பெயர் சூழலிலும் அச்சிலும் காட்சி ஊடகங்களிலும் சுமார் 10 முறை நேர்காணல் செய்யப்பட்டிருப்பேன். புலிகள் பற்றிய என் கருத்து எப்போதும் கேட்கப்பட்டது இல்லை. இது சூழலின் வெளிப்பாடாக இருக்கக்கூடும். தமிழகத்திலும் இந்தக் கேள்வி எப்போதும் கேட்கப்பட்டது இல்லை. இதுவும் சூழலின் வெளிப்பாடாக இருக்கக்கூடும். மற்றபடி மேடைப்பேச்சு என்பது என்னுடைய இயல்புக்கு உகந்த விஷயம் அல்ல. என்னைப் பற்றி பல விமர்சனங்களை முன்வைக்க முடியும். நினைப்பதைச் சொல்லும் நெஞ்சுறுதி எனக்கு இல்லை என்பது அவற்றில் ஒன்றாக இருக்க முடியாது. நானே வலிந்து புலிகள் பற்றிய என் கருத்தைப் பதிவு செய்ய வேண்டிய தேவையை நான் உணரவில்லை. எல்லா விஷயங்களைப் பற்றியும் என் கருத்தைப் பதிவு செய்வதும் அவசியம் என்று நான் உணர்ந்ததில்லை. புலிகள் பற்றி மிக ஆழமாக விமர்சிக்கக்கூடிய சேரன் போன்றவர்களின் பார்வைக்கு, மிக எதிர்மறையான சூழலில், உறுதியான ஒரு களத்தை ஏற்படுத்திக்கொடுப்பதே முக்கியம் என்று நினைத்தேன்.

இன்னொரு முக்கியமான விஷயமும் இதில் இருக்கிறது. அது பொது இடங்களிலும் ஊடகங்களிலும் கருத்துக்கூற இயல்பாக எனக்குரிய இடம் திட்டமிட்டு அழிக்கப்படுவது பற்றியது. சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர் ஒரு இலக்கிய விவாதத்தில் இரண்டு இலக்கியவாதிகள் குடித்துவிட்டு அடித்துக்கொண்டதை அடுத்து இந்தியா டுடே என்னிடம் கருத்துக் கேட்டார்கள். ‘எனக்குக் குடிப்பதிலும் பிரச்சனை இல்லை. குடித்துவிட்டு விவாதிப்பதிலும் பிரச்சனை இல்லை. இவர்களுக்குக் குடிக்கவும் தெரியாது. குடித்துவிட்டு விவாதிக்கவும் தெரியாது’ என்று கருத்துக் கூறியிருந்தேன். இதையடுத்து கீழ்க்கண்ட காரியங்கள் நடந்தன.

1. கவிஞர் சங்கரராமசுப்ரமணியன் & கோ ‘இந்தியா டுடே’ அலுவலகம் சென்று, பெரும் எழுத்தாளர்கள் அரசு அநீதி இழைக்கும்போது அரச விருதுகளைத் திருப்பிக் கொடுக்கும் பாவனையில், இந்தியா டுடேயில் இருந்து விமர்சனத்திற்காக வாங்கிய நூல்களைத் திருப்பிக் கொடுத்தார்கள். இன்னும் ஒன்றோ இரண்டோ எழுத்தாளர்கள் அவரைப் பின்பற்றினார்கள் என்று நினைவு. பெயர் இப்போது நினைவில் இல்லை.

2. கவிஞர் விக்கிரமாதித்தியன் அதிகாலை இரண்டு மணிக்கு ஆசிரியர் வீட்டுக்குத் தொலைபேசியில் அழைத்து வசைபாடியதாக அறிந்தேன்.

3. சி. மோகன் முன்னெடுப்பில் சுமார் 50 எழுத்தாளர்கள் கூச்சத்தை ஏற்படுத்தும் ஆங்கிலத்தில், அபத்தமான கருத்துகள் அடங்கிய ஒரு புகாரை இந்தியா டுடேயின் தமிழ்ப் பதிப்பு ஆசிரியருக்கு எதிராக தில்லி மேலிடத்திற்கு அனுப்பினார்கள். யாருக்கும் ஆங்கிலம் தெரியாதது அல்ல பிரச்சனை. அறிந்தவர்களிடம் கேட்டு கோரிக்கையைத் தயாரித்திருக்கலாமே. அனுப்பியவர்கள் வெறும் குடிகாரர்கள் அல்ல, அதிகாரத்திற்கு எதிரான குடிகாரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உள்ளூர் ஆசிரியருக்கு எதிராக மேலிடத்தில் புகார் செய்வதுதான் அதிகாரத்திற்கு எதிரான செயல்பாடு. இது அனார்க்கிசம் பேசிய எக்ஸில் இதழில் லக்ஷ்மி – கலைச்செல்வனுக்கு எதிராக வக்கீல் நோட்டீஸ் விடுவதாக மிரட்டியது போன்ற நகை முரண். இந்தியா டுடேயில் இருந்து அதன் பின்னர் இன்றுவரை எப்பொருள் பற்றியும் என் கருத்தைக் கேட்டதில்லை. இந்தியா டுடே பக்கங்களை மலம் துடைத்து வாஸந்திக்கு அனுப்பிய உங்கள் ஆசானின் கருத்துகள் சுமார் 100 முறை இடம்பெற்றிருக்கின்றன.

அதேபோல வெகுஜன ஊடகங்களில் பணியாற்றுபவர்கள் யாராவது என்னிடம் ஏதேனும் ஒரு பொருள்பற்றிக் கருத்துக் கேட்டுவிட்டால் ‘காலச்சுவடு ஆள்’ என்ற பட்டத்தை முழு ஆயுளுக்கும் சுமக்க வேண்டியிருக்கும். இத்தகைய ஆயுள் தண்டனைக்கு எத்தனை பேர் தயாராக இருப்பார்கள்?

லண்டனில் இலங்கைத் தமிழர் பிரச்சனை பற்றிப் பேச வேண்டிய சூழல் ஏற்படவும் நான் காரணமல்ல. மே 17இன் உலகளாவிய பிரச்சாரத்தை அடுத்து அவ்வாறு தெளிவுபடுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. நமது அறிவுஜீவிகளின் பணி எப்போதும் எதிர் தரப்புக்கு ஆள் பிடிப்பதுதானே? ஆகவே நான் புலி என்றும் புலி எதிர்ப்பாளர் என்றும் இருதரப்பினரும் குற்றஞ்சாட்டிய சூழலில் இப்பொருளில் பேசும் வாய்ப்பு கிடைத்தது.

பெரும்பாலான சமயங்களில் மேடைப் பேச்சைத் தவிர்த்துவிடுவேன். ஆனால் இம்முறை எனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தலாம் என்று நினைத்தேன். ஏதோ நான் வந்து பத்திருபது நண்பர்களிடம் கருத்து கூறிவிட்டுப் போகிறேன் என்று உங்களால் விடமுடியவில்லை. இப்போது நான் லண்டனில் உரையாற்றிவிட்டமையில் என்ன பெரிய முன்னெடுப்பு அல்லது பின்னடைவு ஏற்பட்டுவிட்டது என்றும் தெரியவில்லை. நீங்களும் சில புலி ஆதரவாளர்களும் இணைந்து ‘எதுவரை’ நண்பர்களுக்குக் கொடுத்த பெரும் நெருக்கடி எனக்குத் தெரியும். அப்போது பாரிஸ் புத்தகச் சந்தைக்கான தயாரிப்பில் இருந்ததாலும் என்னுடைய லண்டன் உரையில் சர்ச்சைகளின் சாயல் படிவதை விரும்பவில்லை என்பதாலும் அவ்விவாதத்தைக் கவனிப்பதை முழுமையாகத் தவிர்த்துவிட்டேன். அக்கூட்டத்திற்கு வந்து என்னிடம் கேள்வி கேட்க (பௌசர் வழி) உங்களுக்கு விடுத்த அழைப்பையும் நீங்கள் ஏற்கவில்லை.

கூட்டத்தைக் குலைக்கும் உங்களுடைய சதித்திட்டம் நிறைவேறியிருந்தால் இலங்கைப் பிரச்சனை பற்றி இப்போதும் என் கருத்தை நான் பதிவு செய்திருக்க முடியாது. இப்போது நான் பேசி முடித்துவிட்ட நிலையில் அதில் முரண்பட உங்களுக்கு அதிகம் இல்லை என்பது தெளிவு. எனவேதான் பேசிய செய்திகளை விடுத்து முன்னர் இதை ஏன் பேசவில்லை என்று கேட்கிறீர்கள். எனது கருத்தைப் பேச உரிமை மறுக்கப்படுவதன் காரணம் பல சமயங்களிலும் இத்தகையதுதான். அது எதிர்நிலையில் நின்று பேசி விடுவேன் என்ற அச்சம் அல்ல. உடன்பட்டு எழுதிவிடுவேனோ என்ற பீதி. கருத்து வேறுபாடுகள் மட்டுப்பட்டுவிட்டால் எதிரிகளைக் கட்டமைப்பது எப்படி  என்ற பதற்றம்.

ஊடகங்களில் உரிய இடம் மறுக்கப்படுவதற்கு இத்தகைய அரசியல் மட்டுமே காரணம் என நான் நம்பவில்லை. தமிழக அரசியலிலும் அறிவுலகிலும் பெரும் மேலாதிக்கத்துடன் செயல்படும் திராவிட – இடதுசாரி கருத்தியல் பற்றி காலச்சுவடில் பிரசுரமாகும் விமர்சனநோக்கும் எல்லா மத அடிப்படைவாத எதிர்ப்பும் ஊடகங்கள் பற்றிய ஆழமான விமர்சனமும் அதிகாரத்திடம் உண்மையைப் பேச வேண்டும் என்ற எத்தனிப்பும் வெகுசன ஊடகங்களில் பணிபுரிபவர்களுக்கு காலச்சுவடில் எந்தச் சிறப்புச் சலுகையும் வழங்காமையும் தமிழகத்தில் எல்லா வெளிகளிலும் நீக்கமற நிறைந்திருக்கும் அரசியல்வாதிகள் மற்றும் சினிமாக்காரர்களின் ஆதிக்கத்திற்கும் ஈர்ப்பிற்கும் இணங்காத பண்பும்கூட காரணங்கள்தான். இங்கு ‘மாற்றுக் கருத்து’ என்று முன்வைக்கப்படுபவை தமிழக அதிகார மையங்களைச் சலனப்படுத்தாதவை. மாற்று என்ற ஈர்ப்பை வழங்கியபடி அதிகார மையங்களின் அடிமடியைப் பிடிக்காமல் இருப்பதுதான் சரியான சூத்திரம். இச்சூத்திரத்தில் பெரும் விற்பன்னரான உங்களுக்கு இது நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. உங்களைவிட தமிழ் வெகுஜனப் ‘பார்பனிய’ ஊடகங்களுக்கு அதிக நேர்காணல்கள் கொடுத்த தமிழ் எழுத்தாளர் எவரும் இல்லை, தமிழச்சி தங்கபாண்டியனைத் தவிர.

புலிகள் தம் பகுதியில் காலச்சுவடை 1998இலிருந்தே தடைசெய்திருந்தனர். உலகெங்கும் புலி ஆதரவாளர்கள் காலச்சுவடை எதிர்நிலை இதழாகவே கண்டனர், கண்டித்தனர். தமிழகப் புலி ஆதரவாளர்களின் கடுமையான விமர்சனத்தையும் எதிர்ப்பையும் எல்லா காலங்களிலும் காலச்சுவடு சந்தித்துள்ளது. நான் புலிகளை நேரடியாக விமர்சிக்கவில்லை என்பதால் எந்த ஆதரவோ சலுகையோ எங்களுக்குக் கிடைக்கவில்லை. புலி ஆதரவாளர்கள் காட்டிவந்த பகைமையும் மட்டுப்படவில்லை.

காலச்சுவடு புலி எதிர்ப்பு இதழாகவோ புலி ஆதரவு இதழாகவோ இயங்கவில்லை. எல்லா கருத்துகளுக்குமான இதழாக,விவாதத்திற்கான வெளியாக, உரையாடலைத் தொடரும் ஊடகமாகவே செயல்பட எத்தனித்தது. இந்நிலையில் இப்போதும் எந்த மாற்றமும் இல்லை. எப்பொருள் பற்றியும் எனக்கிருக்கும் தனிப்பட்ட பார்வையும் முரண்பாடுகளும் காலச்சுவடில் யாரும் பங்களிப்பதற்குத் தடையாக இராது.

பின் குறிப்பு:

ஷோபா சக்தியின் கேள்விகள் இத்துடன் முடிந்துவிட்டன. இன்னும் சில கேள்விகளே கைவசம் உள்ளன. காலச்சுவடு பற்றியும்  என்னைப் பற்றியும் எல்லாப் பக்கமும் கேள்வி எழுப்பிக்கொண்டிருந்தவர்கள் இப்போது என்னைத் திடீரென்று அனாதையாக விட்டுவிட்டதுபோல உணர்கிறேன். கேள்விகளே இல்லாமல், பெட்ரோல் இல்லாத வண்டிபோல, இந்தப் பகுதி நின்றுபோய்விடுமோ என்று அச்சமாக இருக்கிறது. தமக்குத் தாமே வாசகர் கடிதம் எழுதிக்கொள்வதும் தமக்குத் தாமே, கைவசம் இருக்கும் விடைகளுக்கு ஏற்ப, கேள்விகள் எழுப்பிக்கொள்வதும்தான் தமிழக  மரபு. கபர்தார்!

0000

 

கண்ணன் அவர்களிடம் கேட்க வேண்டிய கேள்விகள் இருப்பின், எதிர்வரும் அக்டோபர் 15ம் திகதிக்கு முன்,eathuvarai@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.இவ் உரையாடல் ,கேள்விபதில் தொடர்பான கட்டுரைகள்,எழுத்துக்கள் இருப்பின் அவற்றினை எமக்கு அனுப்பி வையுங்கள். அடுத்தடுத்த இதழ்களில் பிரசுரமாகும். மறுபிரசுரங்கள் சேர்த்துக் கொள்ளப்படாது! (ஆ-ர்)

—————————————————————————————————————————————————

**************உங்கள் கருத்துக்களை உடனுக்குடன் பதிவிடுங்கள் (ஆசிரியர் குழு)************

—————————————————————————————————————————————————

 

 

86 Comments

 1. K.N.Senthil says:

  கண்ணன் கேள்வி பதில்கள் படித்தேன்.ஏற்கனவே பல முறை கேட்கப்பட்டவைகளும் காற்றில் உலவியவைகளுமே கேள்விகளாக உள்ளன.அதற்கு கண்ணன் அங்காங்கே இணைப்புகள் கொடுத்து விரிவாகவே பதில் கூறுகிறார்.ஈழம் பற்றியும் இதழ் பற்றியுமே பெரும்பான்மையான கேள்விகள் இருக்கின்றன.சிந்தனையின் முகங்கள் எண்ணற்றவை.அவை அளிக்கும் மனவிரிவோ தொலைவானம் போல முடிவற்று நீளும் தன்மை கொண்டவை.அவ்வாறான உரையாடல்களும் விவாதங்களுமே சூழலை செழுமைப்படுத்தி உயிர்ப்புடன் வைத்திருக்கும்.இனி நண்பர்களின் கேள்விகள் அவ்வாறு அமையட்டும்.
  அன்புடன்
  கே.என்.செந்தில்.

 2. Rajan Kurai Krishnan says:

  கண்ணன் பொறுமையாகவும், விரிவாகவும் பதில் சொல்லியிருக்கிறார். பாராட்டுக்கள். பத்திரிகையில் எழுதும்போதும் எதிரிகளை வரிக்காமல், யாரையும் சீண்டாமல், தன்னை அவதூறு செய்பவர்களுக்கும் உரிய மதிப்பு கொடுத்து எழுதினால், தவறான அபிப்ராயங்களை அவ்வப்போதே தவிர்த்துவிடலாம் என்பதே என் எண்ணம். சூழல் மேம்பட, உரையாடல்கள் சிறக்க அவதூறுகளும், விரோத பாவங்களும் குறைய வேண்டும்.

 3. ராஜன் குறை அவர்களின் கருத்துகளுக்கு நன்றி. பல உயரிய பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். இன்னும் சாத்தியப்படவில்லை. கருத்து வேறுபாடுகள், கண்டனங்கள்,எதிர்ப்புகள்,போராட்டங்கள் எல்லாவற்றையும் ஏற்கும் சகிக்கும் பண்பு ஓரளவுக்கு இருக்கிறது. ஆனால் திட்டமிட்ட பொய்களை சகிக்க முடிவதில்லை.அத்தகைய சகிப்புத் தன்மை வேண்டுமா என்பதும் கேள்வியாகவே இருக்கிறது .

Post a Comment