Home » இதழ்-05 » மொழிபெயர்ப்புக் கவிதைகள்-ந.சத்தியபாலன்

 

மொழிபெயர்ப்புக் கவிதைகள்-ந.சத்தியபாலன்

 
——————————————————————————————————–ஆங்கில மூலம்: Don Morquis
அதுவும்  நானும்

அன்றொரு மாலையில்
விட்டிலொன்றுடன்
பேசிக்கொண்டிருந்தேன்
மின்குமிழொன்றை மோதிஉடைத்து
மின்கம்பியில் தன்னை ஆகுதியாக்கத்
தவித்துக்கொண்டிருந்தது அது
ஏனப்பா இந்த பகட்டு வித்தைகள்                                                                                          
உங்களுக்கெல்லாம் ?
விட்டில்களின் இயல்பே இதுதான்
என்பதனாலா?
ஒரு மின்குமிழாக இல்லாமல்
அது ஒரு பாதுகாப்பற்ற
மெழுகுவர்த்தியாய்
இருந்திருந்தால் இந்நேரம்
நீ ஒரு சகிக்கஇயலாத கருகிய பண்டமாகியிருப்பாய்
அறிவே இல்லையா உனக்கு?
நிறைய இருக்கிறது. பதிலளித்தது அது
ஆனாலும் அதனைப் பயன்படுத்துவதில்
நாம் சலித்துப் போகிறோம்
பழகிய தடத்திலேயே பயணிப்பதில்
அலுத்துப்போயிற்று
அழகின் மீதொரு
தீராத வெறி
ஆறாத தவிப்பு
அழகு நிறைந்தது
நெருப்பு
நாமறிவோம்
அளவு தாண்டி
அதனருகில் சென்றால்
அது நம்மைக் கொன்று விடும்
அதனாலென்ன ?
நீங்காச் சலிப்புடன்
நீண்டதொரு வாழ்வினை
வாழ்வதைக்காட்டிலும்
ஒருகணப்பொழுது களிப்பில் உச்சத்திலேறி
அழகுடன் சங்கமித்து
எரிந்தழிந்து போவது
எவ்வளவோ மேல்
இதனால்தான்
எமது வாழ்வினையே
ஒருதுணிப்பந்தாக்கி
அது எதன் பொருட்டானதோ
அதனை நோக்கி வீசி விடுகிறோம்
ஒருகணத்துளிப்பொழுதேனும்
அழகின் ஓர் அங்கமாயிருப்பது
இனிமையானது…………
அழகினையே அறியாது
உயிர்வாழ்ந்துமடிவதை விடவும்……
வாழ்தல் குறித்த எமது மனப்பாங்கே
வெறுமே வருதலும் போதலுமாயல்லவா
இருக்கிறது
நாம்ஒருவகையில்
மனிதர்களைப்போலிருக்கிறோம்
மிகவும் நாகரீகமுற்றுப் போய்
முன்பிருந்தது போல
 தமது வாழ்வை அனுபவிக்கத்
 தெரியாதவர்களாக………!
விட்டிலின் தத்துவம்பற்றி
அதனுடன் நான்
விவாதிக்கத்தொடங்கும்முன்னரே
எல்லா வகையிலும்
பாதுகாப்பானதென
உறுதிசெய்யப்பட்டிருந்த
சிகரட் லைற்றர் ஒன்றில்
அதுதன்னைப்பெசுக்கி
அழித்துக்கொண்டது!
அதனுடன் எனக்கு
 உடன்பாடில்லை
நான்எனில்
இருமடங்காய் நீண்டதொரு வாழ்வினையும்
அரைமடங்கான மகிழ்ச்சியோடு
ஏற்றுக்கொள்வேன்
இருப்பினும்….
மனதில் ஒரு ஆசை…..
தன்னைத்தானே எரித்தழிpத்துக்
கொள்ளும்படி மிகத்தீவிரமாய்
விட்டிலைத்தூண்டிய
ஏதோ ஒன்று போல்
எனக்கும் ஏதும் கிடைக்குமா ?
………………………………………………………………………………………………………………
02-09-2012
தமிழில்-ந.சத்தியபாலன்

From:Mary land

Mc Dougal Little Literature.

Classzone.com

 ௦௦௦௦௦
அடையாளம்

அவை என்றென்றைக்கும்
நீரூற்றப்படுகின்ற
பசளையிடப்படுகின்ற
பாதுகாக்கப்படுகின்ற
ரசிக்கப்படுகின்ற – ஆனால்
அழுக்குகள் பொதிந்த
சாடிகளினுள்ளே
நிரந்தரமாய்ப்பிணிக்கப்பட்ட
பூஞ்செடிகளாகத் திகழட்டும்
நான் ஒருஉயர்ந்து வளர்ந்த
அழகேயற்ற களைப் பூண்டாய்
இருந்துவிட்டுப்போவேன்!
நெடிதுயர்ந்த செங்குத்துப்பாறைகள்மீது
அமர்ந்திருக்கும் கழுகினைப்போல
காற்றுவந்து தடவிப்போகும்
கரடுமுரடான பாறைகளோடு!
கல்லின் மேற்பரப்பை மெல்லத்திறந்து
வேரூன்றியிருப்பேன்
வாழ்வின் பொருட்டாகவும்
திறந்த பரவெளியாய்க்கிடக்கும்
வானத்தின் கிறுக்குத்தனத்தை
நேரடியாய் முகங்கொண்டு உணரும்
பொருட்டாகவும்!
புராதனமான கடலொன்றின் காற்று
என்னை வந்து தாலாட்டும்
எனதுயிரான வித்துக்களை ஏந்திப்போய்
மலைகளுக்கப்பாலுள்ள
கால வெளியின் பாதாளத்தில்
தூவுமது!
எவராலும் கண்டுகொள்ளப் படாதவனாய்
யாவராலும் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டவனாய்
இருந்துவிட்டுப் போவேன்
இன்மணம் வீசும்பூவாய்
வளம்மிகு பள்ளத்தாக்கில்
கொத்தாய் மலர்ந்து
பாராட்டப்பட்டும்
மென்மையாகக் கையாளப்பட்டும்-பின்
பேராசைமிக்க மனிதக்கரங்களால்
பறிக்கப்பட்டு விடுவதைக்காட்டிலும்
நான்இ பச்சையான முடை நாற்றம் வீசுவேன்
இன்மணந்தரும் ஊதா மலர்களாய்
இருப்பதிலும் பார்க்க
ஏன்னாற் தனித்து நிற்க முடியுமெனில்
வலிமையுடன்
சுதந்திரமாய்
நானொரு
உயர்ந்துவளர்ந்த
அழகேயற்ற
களைப்பூண்டாய்
இருந்துவிட்டுப் போவேன்!
………………………………………………………………………………………………………………..
தமிழில் ந.சத்தியபாலன்
ஆங்கில மூலம்:Julio noboa
From:Maryland
Mc dougla LittelLiterature.
 

38 Comments

  1. Sharmila Seyyid says:

    தனித்துவம் நிறைந்த கவித் தேர்வு. சத்தியபாலன் இதுபோன்ற நல்ல கவிதைகளை மொழிமாற்றித் தாருங்கள். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

Post a Comment