Home » அன்ரன் அன்பழகன் » லயனல் போபஹேயின் கதை,தமிழில் – அ. அன்ரன் அன்பழகன். (பேராசிரியர் என். சண்முகரத்தினம்.)

 

லயனல் போபஹேயின் கதை,தமிழில் – அ. அன்ரன் அன்பழகன். (பேராசிரியர் என். சண்முகரத்தினம்.)

 

 

அமைதியை இழந்து போன காலங்களினூடே அமைதிக்கான ஒரு பயணம் – லயனல் போபஹேயின் கதை – நூல் விமர்சனம். ஆங்கில மொழிமூலம் – பேராசிரியர் என். சண்முகரத்தினம். தமிழில் – அ. அன்ரன் அன்பழகன்.

00
அரசியல் ரீதியாக உயர்வான ஒரு சமூக ஒழுங்கை ஏற்படுத்த கடுமையான அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஒரு அசாதரண மனிதனின் சுயசரிதையை இங்கே உரிய அணுகுமுறை மூலமும் கதையாடல் நுட்பத்தின் மூலமும் பாராட்டும் படியாக வெளிப்படுத்துவதில் Cooke வெற்றிபெற்றுள்ளார். இளம் போபஹே துணிச்சலுடன் உணர்வுபூர்வமாக புரட்சியில் ஈடுபட்டுள்ளார். நீதியற்றது என தான் கருதிய ஒரு சமூக முறைமையின் மாற்றத்திற்கான சவாலுக்காக சிறையடைப்பையும் சித்திரவதையையும் மட்டும் விலையாகச் செலுத்தவில்லை. தானும் தான் சார்ந்திருந்த ஜே.வி.பி கட்சியின் கடந்தகால அரசியல் நடவடிக்கைகளை  சுயவிமர்சனத்திற்கும் மீள்மதிப்பீட்டுக்கும் உட்படுத்த அவர் ஒருபோதும் தயங்கியதில்லை. தன்னுடைய இளமை நாட்களை முழுமையாக கட்சிக்கு அர்ப்பணிந்திருந்த நிலையில் கூட மாற்று வழிகளில் புரட்சியை தொடர்வதற்கு பின் நிற்கவில்லை. சிறிலங்கா சிறையில் அடைக்கப்பட்ட காலத்திலேயே அவர் தன்னுடைய பல்கலைக்கழக பொறியியற் கற்கையை பூரணப்படுத்தினார்.
ஒருவனின் வாழ்க்கைச் சரிதை வெளிப்படுத்துவது அவனின் தனி மனிதனது வாழ்க்கையை மட்டுமல்ல, அவனுடைய காலத்தையும் அவன் காலத்துச் சமூகத்தையும்தான். ஒருவனின் வாழ்க்கைக் கதையை பல்வேறு வழிமுறைகளில் சொல்ல முடியும்.

 

 

‘A  Biography by its very nuture’ போபஹேயின் கதைக்கான காட்சி உருவாக்கத்தில் மைக்கல் கொலின் கூக் (Michael Colin Cooke) இவ்வாறு எழுதுகிறார்.”கரந்துறைவதற்கு கட்டாயப்படுத்தப்பட்ட ஒரு காலத்தில் தான் பிறந்த நாட்டோடு தொடர்புகளைப் பேணிய ஒரு அரசியல் செயற்பாட்டாளராக, விமர்சகராக, அறிவு ஜீவியாகத் தனது வாழ்க்கையைத் தொடர்ந்தார். அவரது அரசியல், வாழ்வில் எந்த கணத்திலும் பிரிக்கப்படாத ஒன்றாகவே காணப்பட்டது. இந்த மனிதனின் கதையை கூறுவதற்காக  வாசகரை இலங்கையில் ஓரளவு வன்முறையும் ஒழுங்கீனமுமான அரசியல் வரலாற்றின் பல்வேறு கட்டங்களினூடாக Cooke அழைத்துச் செல்கிறார். இந்த புத்தகத்தின் தலைப்பு கூறுவது போல போபஹேயின் கதை என்பது சிறிலங்காவின் கிளர்ச்சி, அடக்குமுறை நீதிக்கான போராட்டம் என்பதாகவே அமைகிறது. இலங்கையின் இடதுசாரிய மாற்றத்திற்கான பாரிய சவால்களைப் பற்றியும் இலங்கையின் அரசியல் பற்றியும் ஆர்வமுடைய ஒருவர் தவற விடக்கூடாத கதையாக இது அமைகிறது. இந்தப்புத்தகம் சிங்களத்திலும் தமிழிலும் மொழிபெயர்க்கப்படவுள்ளமை மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.”
லயனல் போபஹே 1944இல் பிறந்தார். அப்போது இலங்கை பிரித்தானிய காலனியாக இருந்தது. சுரண்டலில் தமது பங்குதாரராக இருந்த மேட்டுக்குடியினரிடம் சுதந்திரத்தின் பெயரால் இலங்கை கையளிக்கப்பட்ட போது வெறும் நாலு வயதுடையவராக இருந்தார் போபஹே.
லயனல் தனது சிறு வயதிலேயே இடதுசாரிய அரசியலுக்குள் இழுக்கப்பட்டார். இவருடைய தந்தையாரோ சுலோக அட்டை தாங்கும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி அங்கத்தவர். லயனல் பாடசாலையில் இடதுசாரிய சிந்தனையுடைய ஆசிரியர்களாலும் ஆகர்ஷிக்கப்பட்டார். ஆனால் 1956 இல் உள்ளுர்த் தலைவர்  மற்றும் ஆதரவாளர்களுடன் பண்டாரநாயக்காவின் தலைமையிலான சுதந்திரக்கட்சிக்குத் தாவினார். அப்பொழுது “சிங்களம் மட்டும்” கோரிக்கையை  பௌத்த சிங்கள தேசியவாத மேடையில் ஐம்பெரும் சக்திகளான பௌத்த குருமார், சுதேச வைத்தியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களிடம் முன்வைத்தார்.
நானும் எனது தந்தையாரும் அப்போது சிங்கள அரசகரும மொழி பிரசாரத்தை ஆதரித்தோம். அப்பொழுது எங்கள் உடலும் மனமும் சிங்கள தேசியவாத உணர்வுகளால் பொங்கிப் பிரவாகித்தது. ஒரு சிறிய நீலப் பின்னணியிலான சுவரொட்டி ஒன்றில் பண்டாரநாயக்காவின் வாய்க்கருகில் காணப்பட்ட அவரது கை முஸ்டியின் ஒரு விரல் வானத்தைச்சுட்டி நின்றது. ஆட்சிக்கு வந்தால் 24 மணிநேரத்தில் சிங்களம் மட்டும் அரசகரும மொழியாக்கப்படும் எனும் சுலோகத்துடன் காணப்பட்டது இன்னும் நன்கு நினைவில் உள்ளது.
1956 காலத்தின் மனப்பதிவுகளை மேற்கண்டவாறு தனது சுயசரிதையில் லயனல் தெரிவித்துள்ளார். (பக்கம் 49-50)
1956 இனவாத அரசியலும் வன்முறையும் இளம் லயனலை சிந்திக்க வைத்தது. காலனித்துவத்தால் ஏற்படுத்தப்பட்ட அரசியல், பொருளாதார அமைப்புகளுக்கு எதிரான மாற்றத்திற்காக சிங்கள, தமிழ் தொழிலாளி வர்க்கத்தை அணிதிரட்டிப்போராட ஏன் இடதுசாரிகளால் முடியவில்லை என்னும் கேள்வி அவருள் எழுந்தது. இனமுரண் அரசியலின் எழுச்சி இனங்களிற்கிடையிலான உறவில் இடைவெளியையும் பதற்றத்தையும் அதிகரித்தன. அது வர்க்க அரசியற் போக்கில் நெருக்கடிகளை ஏற்படுத்தியது. பண்டாரநாயக்காவும் அவரது கூட்டாளிகளும் வினைத்திறனூடாக இன சமத்துவமின்மையை செயற்படுத்தியதனூடாக அபிவிருத்தியிலும் இனப்பாகுபாடு  தோன்றியதுடன் இடதுசாரிகளின் எதிர்ப்பும் போராட்டமும் கைவிடப்பட்டு “பண்டாரநாயக்காவின் புரட்சிக்குள்” கரைந்துபோக அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே ஒருவர் ஜே.வி.பியைப்பற்றி இப்புத்தகத்தினூடாக நிறையவே அறியமுடியும். ஆனாலும் சில கேள்விகளுக்குப் பதிலளிக்கப்படவில்லை. இச் சுயசரிதையின் ஆசிரியர் மிகச்சரியாக 1993 இல்  Moore இனால் உருவாக்கப்பட்ட “அரசியல் முயற்சியாண்மையில் (வணிகத்தன்மை) ஜே.வி.பியின் செயற்பாடுகள்” இன் பாத்திரப்படைப்புக்களை நிராகரிக்கின்றார். புரட்சிகர அமைப்புக்கள் பற்றிய இவ்வாறான படைப்புக்கள் பனிப்போர்க்காலத்தின் பின்னரான வருடங்களில் பணம் பெற்றுக்கொள்ளப்பட்டு உருவாக்கப்பட்டவையாகும். மேற்குறித்த தவறான கண்ணோட்டத்துடனான புத்தகங்கள் மீது Cooke இனுடைய இச்சுயசரிதை ஓரளவு ஜே.வி.பியின் தோற்றம் வளர்ச்சிக்கான சமூக அரசியல் வெளியின் மீது பயன்மிகு பார்வையை றோகண விஜேயவீரவின் உள நோய்க் கூறுகளுக்கு அப்பாலும் சென்றது.

நேர்மையான விமர்சனத்தை வைப்பதற்கு ஜே.வி.பி என்பது சுதந்திரக்கட்சியைப் போன்று, கிராமப்புற சிங்கள மக்களுடைய கட்சியே என்னும்Jupp (1978) இன் கருத்துடன் உடன்படும்  Cooke ஜே.வி.பி 1956 இல் வந்த வெற்றியினுடைய உண்மையான குழந்தை என்பதையும் உணர்த்துகிறார்.
ஜே.வி.பி தலைமை தம்மை மர்கஸிஸ்ற் – லெனினிஸ்ற் புரட்சியாளர்கள் என உரிமை கோருவதையும் நிராகரிக்கிறார். ஜே.வி.பியின் பல்வேறு மட்டங்களைச் சேர்ந்த ஆரம்ப முக்கிய உறுப்பினர்கள் பலரின் அரசியற் பாடசாலையாக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் சீன சார்பு பிரிவு விளங்கியது. ரஸ்சிய சீன கம்யூனிஸ்ற் கட்சிகளிடையில் ஏற்பட்ட கருத்தியல் பிளவு இலங்கைக்கம்யூனிஸ்ட் கட்சி மீதும் எதிரொலித்து பிளவுபட்டது. ஆனால் ஜேவிபியினர் மாக்கிஸ்ற் – லெனினிஸ்ற் புரட்சியை உயர்த்திப் போராடுவதற்காகவே தோழர் சண்முகதாசன் தலைமையிலான மாக்கிஸ்ற் – லெனினிஸ்ற் கம்யூனிஸ்ற் கட்சியில் இருந்து வெளியேறுவதாக தமது வெளியேற்றத்திற்கு காரணம் தெரிவித்திருந்தனர்.
இந்த இளைஞர்கள் சிறீலங்கா சுதந்திரக்கட்சியை விட்டு வெளியேறவில்லை. ஆனால் சோசலிச கருத்தியலின் செல்வாக்கிற்கு உட்பட்டவர்களாகவும், கியூப புரட்சியினால் ஆகர்ஷிக்கப்பட்டவர்களாகவும் இருந்தனர்.
1956 சிங்கள பௌத்த கருத்தியல், எழுச்சியின் குறியீடாயிருந்தது. இந்த சிங்கள பௌத்த கருத்தியல் எழுச்சி அனைத்து பொது நிறுவனங்கள் ஊடாகவும் ஊடகங்கள் ஊடாகவும் குறிப்பாக சிங்கள ஊடகங்கள் ஊடாகவும் கூட்டு சிங்கள பௌத்த அடையாளத்தின் நிர்மாணம் ஏற்படுத்தப்பட்டது.
இது சிங்களதேச உருவாக்கத்திற்கான ஒரு இன கலாச்சார கருத்தியல் நிர்மாண செயற்பாடாக அமைந்தது. இதேவேளை சிங்கள மக்களின் மொழிக்கும் மதத்திற்கும் முன்னிலை வழங்கப்பட்டிருந்த போதும் மறுபுறத்தே வேலைவாய்ப்பு மற்றும் வாழ்க்கை ஏற்றத்திற்கான சந்தர்ப்பம் என்பவற்றை பண்டாரநாயக்காவின் “சிங்கள பௌத்த சோசலிசம்” வழங்கமுடியாமலிருந்ததை கிராமப்புற இளைஞர்களும் ஏழைகளும் உணராதிருந்தனர்.
பாரிய இரண்டு இடதுசாரிக் கட்சிகளும் ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் முற்போக்கு அடிப்படையில் என சிறீலங்கா சுதந்திரக்கட்சியுடன் கூட்டிணைந்திருப்பதாக தெரிவித்தன. ஆனால் புரட்சிகரமான மாற்றங்களை வேண்டி  நின்ற புதியவர்கள், பாட்டாளிவர்க்கம் தலைமையிலான புரட்சியை வேண்டிநின்ற பெரும்பான்மை பௌத்த சிங்கள பேரினவாதத்தை நிராகரித்தனர். ஆனாலும் அவர்கள் உழைக்கும் மக்களின் அடித்தளத்தைப் பெற்றுக்கொள்வதில் வெற்றியடையவில்லை. பாரம்பரிய இரண்டு இடதுசாரியக் கட்சிகளும் லங்கா சமசமாய மற்றும் மாஸ்கோ ஆதரவு கொம்யுனிஸ்ற் கட்சி தமது பலமிகு தொழிற்சங்க தளங்களை சிறீலங்கா சுதந்திரக்கட்சி, யூ. என். பி என்பவற்றிடம் இழந்துவிட்டன.
ஜே.வி.பி தலைவர்கள் பாட்டாளி வர்க்கம் பற்றிப் பேசிக்கொண்டு தமது கட்சிக்கான ஆட்சேர்ப்பில் மாணவர்களையும் கற்றறிந்த வேலையில்லா இளைஞர்களையுமே இணைத்துக்கொள்வதில் இலக்காக இருந்தனர்.
ஜே.வி. பி தெரிவுசெய்த இந்த ஆட்சேர்ப்பு தந்திரோபாயத்தை அதாவது பாட்டாளிவர்க்க உழைக்கும் மக்களிடையே இருந்து கட்சிக்கான ஆட்சேர்ப்பை மேற்கொள்ளாது மாணவர் மற்றும் வேலையற்ற இளைஞர்களிடையே இருந்து தெரிவுசெய்யப்படுவதை விருப்பமின்றியே ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு லயனல் தள்ளப்பட்டார்.
பாரம்பரிய இடதுசாரிகளிடமிருந்து உருவாகிய புரட்சிகர குழுக்களோ அன்றி ஜே.வி.பி யோ ஏன் நீடித்து பலமாக நிற்கக்கூடிய உழைக்கும் மக்கள் அடித்தளத்தின் மீதான கட்டுமானத்தை ஏற்படுத்தவில்லை என்ற கேள்விக்கான பதிவை இந்தப்புத்தகத்தில் போதுமான அளவில் தெளிவுபடுத்தவில்லை என்ற குறையும் உள்ளது.
உழைக்கும் வர்க்கம் என்பது மாற்றத்திற்கான சக்தி மீதான கூட்டுப் பிரக்ஞை என கருத்துருவாக்க லயனல் விரும்பினார். இது ஒரு அரூவமான சிந்தனையாகவே அமைந்திருந்தது. இன மத வேறுபாடுகளுக்கு அப்பால் வர்க்க ரீதியாக அரசியல் மயப்படுத்தல் என்பது மிகக் கடினமான யதார்த்தமாக அமைந்திருந்தது என்பதோடு அரசின் கடுமையான நடவடிக்கைகளைக் கடந்த வர்க்கமயப்படுத்தப்பட்ட கூட்டு நடவடிக்கை மிகப்பெரிய சவாலாகவும் அமைந்திருந்தது.
இனவாத அரசியல் கலாச்சாரம் சிறீலங்காவின் அதிகாரத்தை தீர்மானிக்கும் அரசியல் பரிணாமமாக மாற்றமடைந்தது. இந்நிலையில் ஒரு அரசியல் இயக்கமாக மாக்ஸிஸ நிலைப்பாட்டில் சவால்களுக்கு முகங்கொடுக்க ஜே.வி.பி தயாராக இருக்கவில்லை. லயனலும் ஏனைய ஜே.வி.பி தலைவர்களும் இளஞ்செழியன் தலைமையிலான இளம் சோசலிஸ்ட் முன்னணியூடாக மலையக தமிழர்களான பெருந்தோட்ட தொழிலாளருடனும் ,பாலாதம்பு தலைமையிலான மாற்று லங்கா சமசமாயக்கட்சியின் நகர்ப்புற தொழிலாளர்களையும் தொடர்பு கொள்ள முனைந்தார். இந்த நிறுவனங்களுடன் தொடர்புகளை மேம்படுத்த இதயசுத்தியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதா? என்றும் இந்த முயற்சிகள் ஏன் தோற்றுப்போனது என்பது பற்றியும் தெளிவான விபரங்கள் முன்வைக்கப்படவில்லை.
மறுபுறத்தில் தமிழ் பெருந்தோட்ட தொழிலாளர்கள் இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் ஏஜென்டுகளாக ஜே.வி.பி யினரால் நோக்கப்பட்டது நன்கு அறியப்பட்ட விடயமாகும். ஜே.வி.பி யின் ஐந்தாம் விரிவுரையில் இவ்விடயம் அவர்களால் தெளிவாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த விரிவுரை இனவாத கருத்தியல் பொறியிலிருந்து அவர்களால் விடுபட முடியாத இயலாமையை வெளிக்கொணர்வதோடு இலங்கையில் உழைக்கும் வர்க்கத்தின் புரட்சி வரலாற்றைப் பற்றிய அறிவின்மையையும் வெளிப்படுத்தி நிற்கிறது. இந்த உண்மைகள் ஜே.வி.பி ஒரு குட்டி முதலாளித்துவ கருத்தியல் அடிப்படையை கொண்டிருந்ததோடு சோசலிச புரட்சிக்கான அவசரத்தையும் கொண்டிருந்தது என உணர்த்துகின்றன.

சமூகத்தின் அநேக முற்போக்குப்பிரிவினர் இணைத்துக்கொள்ளப்படாத ஆயுதக்கிளர்ச்சி தோல்வியில் முடிந்தது என எழுதுகின்றார் Cooke.
பல குழுக்களாகப் பிரிந்த கட்சியினால் அனுபவமற்ற இளம் புரட்சியாளர்கள் இறுதியில் அரசினால் ஒடுக்கப்பட்டனர். தலைமையை சிறையில் அடைக்கவும் பத்தாயிரம் உறுப்பினர்கள் கொல்லப்படவும், ஆயிரக்கணக்கில் சிறை, சித்திரவதைகளுக்கு உட்படும் நிலைக்கு உருவாகிய இந்தக் கிளர்ச்சியின் அனர்த்தம் அவலமானது. விலை மதிக்க முடியாத இழப்பின் ஊடே ஜே.வி.பி பாடத்தைக் கற்றுக்கொண்டது.

லயனல் ஒரு கோட்பாடு வகைப்பட்ட அரசின் நிலைப்பாட்டை கட்சிக்குள் எடுப்பதற்கு கிளர்ச்சியை ஆரம்பிப்பதா கைவிடுவதா என்ற கேள்விக்கு விடை காண்பதற்கு முன் குழு நிலைப்போக்குகள் களையப்படுவதற்கு முன், பாரம்பரிய இரண்டு இடதுசாரிக்கட்சிகளின் பங்காளியான அரசு கிளர்ச்சியின் எழுச்சியை மிக மோசமாக நொருக்கிவிட்டது.

1971 ஏப்ரல் கிளர்ச்சிக்கு முன்பதாக ஆயிரக்கணக்கான ஜேவிபி உறுப்பினர்களைச் சிறையில் அடைத்துவிட்டது. அரசின் புரட்சிக்கெதிரான நடத்தை பற்றிய பெறுமதி மிக்க ஆவணத்தை இந்தப்புதத்கம் வழங்குகின்றது.

விஜயவீர கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்கப்பட்டார். 16.03.1971இல் அவசர நிலை அரசினால் பிரகடனப்படுத்தப்பட்டது. விசாரணையின்றி ஆட்களைக்கொல்வதற்கும் கொல்லப்பட்ட சடலங்களை அப்புறப்படுத்தவும் பொலிசாருக்கும் படையினருக்கும் அனுமதி வழங்கப்பட்டது. இதேபோன்ற ஒரு காட்டுமிராண்டித்தனமான ஒரு சட்டத்தையே பிரித்தானியரும் 1818, 1848 இல் கண்டியக்கிளர்ச்சியை அடக்குவதற்குப் பயன்படுத்தினர். 1971இல் ஐக்கிய முன்னணி அரசு ஜேவிபியினரையும் ஜேவிபி என சந்தேகிக்கபட்டோரையும் ஒடுக்குவதற்குப் பயன்படுத்தியது. சுதந்திர இலங்கையிலும் காலனித்துவக்கால கொடூரங்கள் சட்டத்தின் பெயரால் இரத்தக்கறையில் மாற்றங்கள் இன்றித் தொடர்ந்தன.

 

ஏப்ரல் 5 கிளர்ச்சி தொடர்பான தீர்மானங்கள் ஜேவிபியின் முக்கிய இரண்டு குழுக்காளால் தீர்மானிக்கப்பட்டு முரண்பாடான ஒழுங்கற்ற முறையில் சிறையிலிருந்த விஜயவீரவுக்கு தகவல் அனுப்பி வைக்கப்பட்டது. குழுக்களுக்கிடையே காணப்பட்ட நம்பிக்கையீனம், உறுப்பினர்களின் கைதும் கொலையும் ,அமைப்புக்குள்ளேயே பொலிஸ் உளவாளிகள் ஊடுருவல் எனப்பல்வேறு  நெருக்கடிகளுக்கு மத்தியில் கொழும்பில் தாக்குதல் மேற்கொள்ளக்கூடிய ஆயுதங்களும் ஆளணியும் இல்லை எனபதை தமது குழுவினருக்குத் தெரிவித்தார்.

அத்துல – சனத்குழுவினர் திட்டப்படி கிளர்ச்சியை ஆரம்பித்தனர். பொலிஸ் நிலையங்களைத்தாக்கி ஆயுதங்களைப் பெற்றுக்கொள்ளளும் ஏற்பாடு வெற்றியளிக்கவில்லை. பொலிசார் இவர்களின் ஏற்பாட்டை முற்கூட்டியே அறிந்திருந்து முன்னேற்பாடுகளுடன் இருந்தனர்.

குறைவான நேரத்தில் அதிகளவு ஆயுதங்களைக் கைப்பற்றுவதை இலக்காகக் கொண்டே இந் நடவடிக்கை திட்டமிடப்பட்டது. வெகுஜன ஆதரவு இல்லாத நிலையில் இக்கிளர்ச்சி திட்டமிட்டபடி வெற்றியடையவில்லை. சிறீலங்கா அரச படையினருக்கு ஆதரவாக இந்தியா, பாகிஸ்தான், சிங்கப்பூர், சோவியத் யூனியன், அமெரிக்கா, சீனா என விரைந்து கிடைத்த உதவிகளால் இளைஞர்களின் இரத்தக் குளியல் நிகழ்ந்தது.

1971 ஏப்பிரலில் லயனலும் ,மஹத்தையாவும் பாணந்துறையில் உள்ள பௌத்த விஹாரை ஒன்றில் அடைக்கலம் பெற்று இருந்தபோது, ஒருநாட் காலை நூற்றுக்கணக்கான பொலிசாரினால் சுற்றி வளைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஜே.வி.பியின் முக்கிய உறுப்பினர்கள் என்பதை பொலிசார் அறிந்திருக்கவில்லை. கைது செய்யப்பட்ட லயனல் ஏனைய ஆயிரக்கணக்கான ஜே.வி.பி உறுப்பினர்களைப் போலவே சித்திரவதைக்குட்படுத்தப்பட்டார். சித்திரவதை என்பது பல்வேறுவகையான உடலியற் துன்புறுத்தல்களுடன் அவருடைய பாலுறுப்பில் மின்சாரம் பாய்ச்சப்படுவதுவரையாக அமைந்திருந்தது.

அவருடைய (லயனல்) மொழியிலேயே அவரால் பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது.

‘எங்களுடைய பாதங்களில் மிக மோசமாக அடிக்கப்பட்டோம். உடம்பெல்லாம் வலி பரவியது. படிகளில் ஏறி மேலே சென்ற பலர், திரும்பி நேராக வருவதில்லை. மற்றைய வகைத் தாக்குதல் துப்பாக்கிப் பிடிகளால் தாக்குவது. நாலுகாலில் திரும்பி வருவதே வழக்கமாகும். இன்னொரு தோழரைக் காட்டிக் கொடுக்கும் வரை தாக்குதல் தொடரும்.

அரசாங்கத்தினுடைய காட்டு மிராண்டித்தனம் உள்ளுர் முற்போக்குச் சக்திகளையும் வெளிநாட்டு மனித உரிமைகள் அமைப்புகளையும் திடுக்கிட வைத்தது’ என ஆசிரியரால் குறிப்பிடப்படுகிறது.

ஆயுதப்படைகளின் மோசமான நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்தது. அரசோ இதனைக் கருத்தில் எடுக்காதது மட்டுமல்ல, சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரித்தானிய அவதானிப்பாளர்களையும் நாட்டைவிட்டுத் துரத்தியது.

விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்ட குற்றவியல் நீதிமன்ற ஆணைக்குழு (criminal justice commission) முன் விசாரணைக்குட்படுத்தப்பட்டனர். இந்த ஆணைக்குழுவின் முன்னால் உரையாற்றியபோதே விஜேவீர தன்னை ஒரு போல்ஸோவிக் (Bolshevik) ரஷ்யப் புரட்சியின் போது லெனின் சார்ந்திருந்த கட்சியின் பிரிவு எனவும் இந்தக் கிளர்ச்சிக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அரசின் மிக மோசமான அடக்குமுறையினாலேயே இந்த நிலைமை தோன்றியது எனவும் தெரிவித்தார். ஏப்ரல் 1971 புரட்சிக்கான காலமாக கனிந்திருக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

விஜேவீரவுக்கு ஆயுட்காலச் சிறைத்தண்டனையும் லயனலுக்கு 15 சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.  இதற்குள் இளம் கிளர்ச்சியாளர்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டதுடன் அது லங்காவின் இளம் கிளர்ச்சியாளர்களுக்கு முடிவாக அமையவில்லை. லயனலும் அவருடைய தோழர்களும் சிறையில் இருந்தபோது வடக்கின் இளம் கிளர்ச்சியாளர்களைச் சந்திக்கிறார். 1970 அரசுக்கெதிரான நடவடிக்கைகள் தொடர்பிலான தமிழ் இளம் தலைவர்களைச் சந்திக்கிறார். சிறிலங்காவின் தேசியம் தொடர்பான தேசியம் தொடர்பான கேள்வியில் ஈர்ப்பு ஏற்பட அது பற்றி ஆழமாகக் கற்பதற்கு தீர்மானிக்கிறார்.

தேசியப்பிரச்சினையில் ஒரு மாக்ஸிய ஆய்வு’ எனும் லயனுடைய நூல் 1977 இல் சிறிலங்காவில் வெளியிடப்படுகிறது. ‘தேசியப் பிரச்சினையும் சிறிலங்காவும் அரசியல் அமைப்புச் சட்டமும்’ எனும் அவருடைய பிரசுரம் அதே ஆண்டு லண்டனில் ‘கிளிப்புர’ குழுவினரால் வெளியிடப்படுகின்றது. தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமையை ஆதரித்து, மதச்சார்பற்ற அரசு சிறிலங்காவில் உருவாக வேண்டும் எனும் கருத்தை வலியுறுத்துகிறார். தேசிய இனப்பிரச்சினையில் தன்னுடைய நிலைப்பாட்டையே ஜே.வி.பி அமைப்பினுடைய நிலைப்பாடாகக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறார்.

1983இன் பின் ஜே.வி.பி அந்த நிலைப்பாட்டைக் கைவிட்டதுடன் 1987 இந்திய – இலங்கை ஒப்பந்தத்தையும் எதிர்க்கிறது. அரசியல் அமைப்பில் 13 ஆம் திருத்தத்தையும் எல்லா வகையான அதிகாரப் பகிர்வையும் எதிர்ப்பதோடு இராணுவ ரீதியான தீர்வையே வலியுறுத்தி வந்திருக்கிறது.

 

1977 நவம்பரில் ஜே.வி.பி தலைவர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டபின் நாட்டில் இரத்தம் சிந்துதல் அதிகளவாகின்றது. இனவெறி அதிகாரமிகுந்ததாகிறது. 1983 தமிழருக்கெதிரான இனக்கலவரத்தின் பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இருந்தபோதும் ஜே.வி.பி நவசமசமாஜக் கட்சி, கம்யுனிஸக் கட்சி என்பன பலியாடுகளாக்கப்படுகின்றது.

அரசின் பிரசாரத்தை ஒருவரும் நம்பாத போதும் லயனல் மற்றும் ஜே.வி.பி உறுப்பினர்கள் கைது செய்யப்படுவதை யாராலும் தடுக்க முடியவில்லை. அவர்கள் சில மாதங்களில் விடுவிக்கப்படுகின்றனர்.

ஜே.வி.பிக்குள் கருத்தியற் தளத்தில் வெற்றிபெற முடியாத ஒரு யுத்தத்தையே லயனல் நடத்திக் கொண்டிருந்தார்.

தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் கருத்தியற் போராட்டத்தை நடத்திக்கொண்டும் இடது சாரிய தமிழ் இளைஞர்களுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். தனித் தமிழ் அரசாகப் போராடுவதை விட ஐக்கியப்பட்ட புரட்சி ஒன்றின் ஊடாக, தேசிய இனப்பிரச்சினைக்குரிய சுய நிர்ணய உரிமையிலான தீர்வு என்பதைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதைத் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தார்.

கட்சியின் இனவாத நிலைப்பாட்டை மாற்றமுடியாது என உணர்ந்த லயனல் கட்சியில் இருந்து விலகுவதற்கு 1989 இல் தீர்மானித்தார். தேசிய இனப்பிரச்சினை தொடர்பிலான லெனினின் பார்வையை விஜேவீர தவறான வியாக்கியானங்களினூடே இனவாத நிலைப்பாட்டுக்குத் தீர்வு படுத்தியிருந்தார்.

எல்லாச் சமூக அங்கத்தவர்களிடையே இனவாதத்துக்கெதிரான நிலைப்பாட்டை எடுக்கும் வலுவான அரசியல் மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான பார்வையோ, பொறுமையோ அல்லது பலமோ ஜே.வி.பிக்கோ அல்லது பாரம்பரிய இடதுசாரிக்கட்சிகளுக்கோ அல்லது விடுதலைப்புலிகளிடமோ காணப்படவில்லை என Cooke தனது அவதானத்திற் குறிப்பிட்டுள்ளார்.

லயனலுடைய ஒழுங்கமைக்கப்பட்ட தேசியப் பிரச்சினைகள் பற்றிய பார்வை, மதச் சார்பற்ற, இனச் சமத்துவமுடைய சிறிலங்காவுக்கான ஐக்கியப்பட்ட போராட்டம் பற்றிய கருத்து மேம்பட்டதாக இருந்தது.

தமிழ் மக்களுடைய போராட்டம் பிரிவினை மற்றும் இராணுவ மயப்பட முன்பாக எழுபதுகளினதும் எண்பதுகளினதும் தொடக்கத்தில் ஐக்கியப்பட்ட புதிய இடது முன்னணி ஒன்று உருவாகுவதற்கான வாய்ப்பு இருந்தமையைக் குறிப்பிட்டே ஆகவேண்டியுள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன் வடகிழக்கில் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறையின் பின்பாக தமிழ்த்தேசியம், சிங்களத் தேசியவாதத்தின் கண்ணாடி விம்பமாக மாறியிருந்தது. (இக்குறிப்பு கட்டுரையாளர் சண்முகரத்தினத்தினுடையது. 1990 தமிழ் ரைம்ஸ், பொருளியல் அரசியல் வார ஏடு).

இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் நன்மை பயக்கும் ஐக்கியப்பட்ட நாட்டிற்குள் தேசிய இனப்பிரச்சினைக்கான (மதச்சார்பற்ற, இனங்களுக்கிடையேயான சமத்துவம் வேண்டும்) தீர்வு பெறும் லயனலுடைய கருத்து உறுதிப்பாட்டுப் பார்வையை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நான் நினைக்கிறேன், பலர் இதே பார்வைக் கொண்டிருக்கிறார்கள். இதே நிலைப்பாட்டை சிறிலங்காவில் சில சிறிய இடதுசாரி அமைப்புகளும் ஏற்றுக்கொள்ள முடியும். ஐக்கியப்பட்ட நீடித்து நிலைக்கக் கூடிய அமைப்பொன்று யுத்தத்தின் பின்னரான சிறிலங்காவில் உருப்பெற உள்ளதை நாம் பார்க்கப்போகிறோம்.

இனங்கள் துருவமயப்பட்ட, பெரும்பான்மை இன இராணுவ வெற்றிக் களிப்பையும், பயம் ஊடுருவிய சூழலையும்தான் இப்போதும் நாம் காண்கிறோம்.
௦௦௦

————————————————————————————————————————————————

**************உங்கள் கருத்துக்களை உடனுக்குடன் பதிவிடுங்கள் (ஆசிரியர் குழு)************

—————————————————————————————————————————————————

 

 

5 Comments

  1. Ks Sivakumaran says:

    I EXCERPTED SOME OF THE KEY POINTS IN PROF. N SHANMUGARATNAM’S ARTICLE AND EXPRESSED MY APPRECIATION IN A REVIEW PUBLISHED IN CEYLON TODAY.

Post a Comment