Home » இதழ்-05 » 90 சுவிஸ் பிராங்குகள்-சயந்தன் (சிறுகதை)

 

90 சுவிஸ் பிராங்குகள்-சயந்தன் (சிறுகதை)

 


அபிதேமி ஆபிரிக்காவிலிருந்து எனக்குப் பின்னதாகவே வந்திருக்க வேண்டும். அப்படியில்லையாயினும் இரண்டொரு மாதங்களே முன்னராயிருக்கும். கரித்தாஸ் நிறுவனம் அகதிகளுக்கென ஒழுங்குபடுத்தியிருந்த ஜெர்மன் மொழி வகுப்பின் முதல் நாள் மழையில் நனைந்து சுவரோரம் ஒதுங்கிய ஒரு கோழிக்குஞ்சினைப் போல சுவரின் அருகே அவள் ஒடுங்கியிருந்ததைக் கண்டேன். நான் நுழைந்தபோது பதினைந்து பதினாறு பேரளவில் அங்கிருந்தார்கள். ஒருமுறை நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் தலையைக் குனிந்து கொண்டார்கள். சூடானியர்கள், எரித்திரியர்கள், ஈராக்கியர்கள், சேர்பியர்கள் என அவர்களிருந்தாலும் என்னால் அடையாளப்படுத்த முடிந்தவர்கள் இரண்டேயிரண்டு பேர்தான். கறுப்பர்கள் மற்றும் வெள்ளையர்கள். உண்மையைச் சொல்வதெனில் அப்படியும் அல்ல, காப்பிலிகள் மற்றும் வெள்ளைகள். வெள்ளையர்களும் அகதிகளாவது ஏனோ புதினமாயிருந்தது.

கிடைத்த இடமொன்றில் உட்கார்ந்தேன். அருகிருந்தவன் வாட்டசாட்டமாக இருந்தான். வெள்ளை முகத்தில் இரண்டு மூன்று நாள் தாடி அரும்பியிருப்பது நன்றாயிருந்தது. மெதுவாகச் சிரித்து வைத்தேன். அவன் முகத்தின் தசைகளில் கூட சிரிப்பினை உணர்த்தாமல் வினோதாகப் பார்த்தான். வேண்டத்தகாதவனைப் பார்ப்பது போன்றிருந்தது. தலையை மெதுவாகத் திருப்பிக் கொண்டேன். ஒன்றிரண்டு ஆபிரிக்க நாட்டினர் அப்பால் தள்ளியிருந்தார்கள். அழுத்தமான கறுப்பு நிறம். அதிகம் வளராத, பின்னலிட்டதுபோன்ற சிறிய சுருள் சுருளான தலைமயிர், இயற்கையாகவே இப்படியா அல்லது அலங்கரித்துக் கொள்கிறார்களா என்பது ஐமிச்சமாயிருந்தது. அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் தனபாலன் வாத்தி படிப்பித்த ஆபிரிக்க ஒரு இருண்ட கண்டம் என்பதுதான் நினைவுக்கு வருகிறது.

வகுப்பு அமைதியாக இருந்தது. யாரும் யாருடனும் பேசவில்லை. மீண்டுமொருமுறை தலையைத் திருப்பி அறையைச் சுற்றினேன். “உலகெங்குமிருந்தும் ஒடுக்கப்பட்டவர்கள்” எனத் தோன்றிய நினைப்போடு திரும்பவும் “வெள்ளைத்தோல் எப்படி அகதி ஆக முடியும்” என்ற கேள்வியும் ஒட்டிக்கொண்டது.

ஜெர்மன் மொழி ஆசிரியை மார்ட்டினுக்கு நல்ல வயதாயிருந்தது. பென்சன் எடுத்துவிட்டு பிரைவேட்டாக படிப்பிக்கிறார் என்று நினைத்துக் கொண்டேன். குத்தேர்ன் மோர்கன் என ஆரம்பித்ததிலிருந்து மார்டின் ஜெர்மனில்தான் பேசினார். அவற்றிலிருந்து ஒன்றிரண்டு தெரிந்த சொற்களைப் பொறுக்கியெடுக்க முடிந்ததே தவிர, மற்றபடி எதுவும் புரிந்திருக்கவில்லை. மார்டின் என்னருகாக வந்தார். எழுந்து நின்றபோது தேவையில்லை என இருத்தினார். பெயரைக் கேட்கிறார் என்பது புரிந்தது. ஜெர்மன் மொழியில் “நாமெ” என்பது ஆங்கிலத்தின் “நேம்” என்பதற்கு அருகாக இருந்தது. அட, அதைவிட நெருக்கத்தில் நாமம் என்பதோடு இருக்கிறது. பெயரைச் சொன்னேன். அதற்குப் பிறகு அவர் பேசிய எச்சொற்களும் ஆங்கிலத்திற்கோ தமிழிற்கோ அருகிலிருக்கவில்லை. மெதுவாக “இங்கிலிஸ் ப்ளீஸ்” என்றேன். உண்மையில் அவரிடம் சுவிஸிற்கு வந்து இரண்டே மாதங்கள்தான் ஆகிறது என்றும், சுவிற்சர்லாந்தில் ஜெர்மன் மொழியைத்தான் பேசுகிறார்கள் என அறிந்து ஒருமாதமும் இருபத்தொன்பது நாட்களும்தான் ஆகிறதென்றும் சொல்ல ஆசைப்பட்டிருந்தேன். துரதிஸ்டவசமாக மார்ட்டினுக்கு தமிழ் தெரிந்திருக்கவில்லை.

“வயது என்ன”

“பத்தொன்பது..” இருபத்தொன்று ஆகிறது. இருந்தும் பத்தொன்பதென்றுதான் தஞ்சக் கோரிக்கையில் கொடுத்திருக்கிறேன்.

மார்ட்டினின் ஆங்கிலம் இலகுவாகப் புரிந்தது. புதுக்குடியிருப்பில் ஒரு செஞ்சிலுவைச் சங்கக்காரன் இருந்தான். மெஷின் அரைப்பது போல ஆங்கிலத்தை பற்களில் அரைத்து கடித்துத் துப்புவான். ஒருநாள் பாண்டியன் கடையில் நின்று தஸ் புஸ் என்று அவன் துப்பியபோது சாமான் வாங்கப்போயிருந்த என்னிடம் கடைக்காரர் “தம்பி ஒருக்கா என்னெண்டு கேட்டுச் சொல்லும்” என்றார். நானும் தொண்டையைச் செருமி “யெஸ் சேர்” என்றேன். அதற்குப் பிறகு அங்கு நடந்தவையெல்லாம் ஒரு நீதிமன்றத்தில் வக்கீலுக்கும் குற்றவாளிக்கும் இடையிலான விசாரணைக்கும் பதில்களுக்கும் ஒப்பானவை. இறுதியில் செஞ்சிலுவைச் சங்கக்காரன் தனது கையில், தோளில், முதுகிலெனத் தேய்த்து “க்ரீம்” என்றபோது நான் அவனை வினோதமாகப் பார்த்தேன். முடிவாக கடைக்காரனிடம் “அவர் கடி சொறிக்குப் பூசுற கிரீம் ஏதோ கேட்கிறார்” என்று மொழிபெயர்ப்பை முடித்தேன்.

அவனைப் பார்மஸிக்கு அனுப்ப கடைக்காரருக்கு மனமொப்பவில்லை. காலாவதியாகாத வீக்கோ கீரீமொன்றை எடுத்து நீட்டினார். அதன் மூடியைத் திறந்து ஒரு தடவை முகர்ந்து பார்த்த செஞ்சிலுவைச் சங்கக்காரன் தலையை ஒரு அடிக்குப் பின்னால் இழுத்து முகத்தைச் சுழித்து “நோ நோ” என்றான். கடைக்காரர் திரும்பவும் என்னைப் பார்த்தார். விசாரணை மேலும் தொடர்ந்தது.

பெயர் அன்ட் லவ்லி, பெயர் எவர் என எண்ணி எட்டே நாட்களில் சிவப்பழகு தரும் எல்லாக் கிரீம் வகைகளையும் கொடுத்துப் பார்த்தாயிற்று. எனக்கு கூட வெள்ளைக்காரனுக்கு எதற்கு இந்தக் கிரீம்கள் என்றொரு சந்தேகம் இலேசாக இருக்கத்தான் செய்தது. நானும் செஞ்சிலுவைச் சங்கக்காரனும் நன்றாக களைத்த பிறகு, கடைக்கு வந்த புலி அக்கா ஒருவரே செஞ்சிலுவைச் சங்கக் காரன் குளிப்பதற்கு கிரீம் கேட்கிறான் என்றுரைத்தார். கடைசியாக அவன் ராணி சோப் ஒன்றினை வாங்கிப் போனான். ஒன்றிரண்டு வருடங்களில் ஓரளவுக்குப் புரிவதுபோல தமிழ் கதைத்துத் திரிந்தான்.

மார்ட்டின் என்னுடைய பெயர் மிக நீளமானது என்றார். அதற்கு அர்த்தம் ஏதுமுண்டா என்றும் கேட்டார். அறிந்தவரையில் அப்படியொன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. எதற்கும் இருக்கட்டுமென்று இந்த பூவுலகின் தீய சக்திகளை அழிக்கப்பிறந்தவன் என்றேன்.  மார்ட்டின் விழிகளை அகல விரித்து “ஓ” என்றபடி நகர்ந்தார்.

அன்றைக்கு மார்ட்டின் ஒவ்வொரு பெயர்களினதும் அர்த்தங்களைக் கேட்டறிந்தார். ஒளி பொருந்தியவன், பயணத்தில் பிறந்தவள், மகிழ்ச்சியை கொண்டு வந்தவன் என ஒவ்வொரு அர்த்தங்கள் அங்கிருந்தன. உண்மையாகவே சொல்கிறார்களா அல்லது என்னைப்போல எடுத்து விடுகிறார்களா எனத் தெரியாதிருந்தது.

மார்டின் அந்தப் பெண்ணருகே நின்றார். அவளுக்கு என்னொட்டு வயது இருக்கலாம். கண்களைச் சிமிட்டி மார்டினை சிநேகமுடன் பார்த்தாள். அப்பொழுதே அவள் சொன்னாள்.

“அபிதேமி”

ஆபிரிக்காவில் அவளது மொழியில் அபிதேமி என்றால் அப்பா இல்லாதபோது பிறந்தவள் என்று அர்த்தமிருந்தது.

0    0    0

ஜெர்மன் ஓரளவுக்குப் புரிபடத்தொடங்கியிருந்தது. தினமும் நடக்கும் வகுப்புக்கள் அதனைச் சாத்தியப்படுத்தியிருந்தன. வகுப்புக்களை நான் தவறவிடுவதில்லை. வேலையேதும் கிடைக்கும் வரை மொழியைப் படிக்கலாம் என்றிருந்தேன். படித்தும் ஒன்றும் ஆகப்போவதில்லை என்று தெரிநிதிருந்தது. ரெஸ்ரோரன்ட் ஒன்றில் நல்ல வேலை தேடிக்கொள்வதற்கு சரியான விசா இருந்தால் போதும். என்னிடம் அது இருந்தது.

இங்கு இறங்கிய மூன்றாவது மாதம் என்னுடைய வழக்கை நிராகரித்த சுவிஸ் அரசு, சிறிலங்காவில் எனக்குத் தனிப்பட பிரச்சனைகள் எதுவும் இல்லையென்றும், ஆனால் பொதுவாக தமிழர்களுக்கு இருக்கிற பிரச்சனைகளை கருத்திற்கொண்டும் மனிதாபிமான ரீதியிலும் தற்காலிக விசாவினை வழங்கச் சம்மதித்தது. சிறிலங்காவில் நிலைமைகள் சீராகும்போது சுவிஸை விட்டு வெளியேற வேண்டுமெனவும் கோரியிருந்தது. அப்படியெதுவும் நடந்துவிடாது என்ற நம்பிக்கையில் அந்த டீலுக்கு நான் உடன்பட்டிருந்தேன். வேலையொன்றே தேடவேண்டியிருந்தது.

நாங்கள் நான்கு பேர் ஒரு வீட்டிலிருந்தோம். அகதிகள் பராமரிப்பு நிலையத்தினால் அந்த வீடு அளிக்கப்பட்டிருந்தது. எங்களில் றமணன் அண்ணன் மட்டும் ஒரு உணவு விடுதியில் வேலையிலிருந்தார். மதியம் இரண்டு மணிக்குத் தொடங்கி இரவு பதினொரு மணிக்கு முடிகிற வேலை. கோடை காலங்களில் சமயங்களில் இரவு ஒரு மணிக்கும் அது முடியும்.

அதிகமான காலை நேரங்களில் டிவி அறையின் பழைய கதிரையில் உடையையும் தோளில் மாட்டிய பையையும் கழற்றாமல் றமணன் அண்ணன் படுத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். அதிகமாக அவரோடுதான் எனது பேச்சுவார்த்தைகள் இருந்தன. மற்றவர்கள், அதிலும் கிருஸ்ணா அண்ணன் யாரோடும் நெருங்குவதில்லை. தனக்கென சமையல், தனக்கென மேசை, தனக்கென றேடியோ என்று எப்போதும் தனித்திருந்தார். ஒரு கள்ளப் பூனையைப்போல யாருமற்ற வேளைகளில் டிவியில் அவர் செக்ஸ் படம் பார்க்கிறாரோ என்ற ஆரம்பத்திலிருந்த சந்தேகம் பின்னர் உறுதியானது. மட்டுமன்றி அவருக்கு வேறும் பழக்கங்கள் உண்டென்பதை பின்னாட்களில் அறிந்திருந்தேன். அவரது மேசை லாச்சியில் புதிய ஆணுறைப் பைக்கற்றுக்கள் நிறைந்திருந்தன. ஸ்டாபெர்ரி, வனிலா முதலான ப்ளேவர்களில் அவையிருந்தன.

எப்போதேனும் பகற்பொழுதில் கிருஸ்ணா அண்ணன் வீட்டிலிருப்பார். தமிழ்க்கடையில் வாங்கிவந்த தொலைபேசி அட்டைகள் தீரத்தீர ஊரிலிருக்கும் மனைவியோடும் பிள்ளைகளோடும் பேசுவார். “எடியே, குஞ்சு, அப்பாவைத் தெரியுதோடி..” என்று அவர் குழைந்தால் எதிர்முனையில் அவரது இளைய மகளாயிருக்கும். அவள் பிறந்து இருபத்தொன்பதாம் நாள் வீட்டைவிட்டுப் புறப்பட்டிருந்தாராம். தொலைபேசிச் சத்தத்தை பொதுவில் வைத்து “பாருங்கோடா, மகள் எப்பிடிக் கதைக்கிறாள்..” என்பார்.

“அப்பா, சொக்கா கொண்டு வாங்கோ..” என்ற மழலைச் சொற்கள் கிருஸ்ணா அண்ணனை கண்கலங்கச் செய்யும். எனக்கும் இலேசாக அந்தரமாயிருக்கும். அன்றைக்கு எல்லா ஆணுறைகளையும் கொண்டுபோய் கிருஸ்ணா அண்ணன் குப்பையில் கொட்டுவார். ஒன்றோ இரண்டு வாரங்கள்தான். மீண்டும் மேசை லாச்சியில் ஸ்டாபெரியும் வனிலாவும் மணம் வீசத்தொடங்கும்.

நான் அதிகமாக றமணன் அண்ணனிடம் வேலையொன்றுக்காக நச்சரித்தபடியிருந்தேன். “நீ, சின்னப்பெடியனடா.. குசினுக்குள்ளை அந்த வேலைகள் உனக்குச் சரிப்பட்டு வராது” என்று அவர் மறுதலித்தபடியிருந்தார்.

“அப்ப, அதே ரெஸ்ட்ரோரன்டில வெளியில ஏதாவது வேலை எடுத்துத்தாங்கோ”

றமணன் அண்ணன் சிரித்தார். “எங்களைமாதிரி ஆக்களுக்கு குசினிதான் கதி, முந்தநாத்து குசினிக்கை இருந்து ஒரு அலுவலா வெளிய வந்திட்டு திரும்பினன். வெளிய சாப்பிட்டுக்கொண்டிருந்த ஒரு வெள்ளைக்கார குழந்தைப்பிள்ளை, நாலு வயசும் இருக்காது.  ஏ.. கறுப்பு மனிதன் என்று கையைத் தட்டிச் சிரிக்கத் தொடங்கிட்டாள். எனக்கு வேட்டி உரிஞ்சமாதிரிப் போச்சு.. பரவாயில்லை. அந்தக் குழந்தை, ஐயோ கறுப்பு மனிதன் என்று பயந்து குழறியிருந்தா முதலாளி என்னைத் தின்றிருப்பான்.”

இப்படி பல கதைகளை றமணன் அண்ணா சொல்லியிருந்தார். பஸ்சில் ஒரு சம்பவம் நடந்திருந்தது.

வேலைக்கு சற்றுப் பிந்திவிட்டது. அவசர அவசரமாக பஸ்சில் ஏறியவர் காலியாய் கிடந்த இருக்கையொன்றில் அமர்ந்து தோளில் மாட்டியிருந்த பையை மடியில் வைத்துக் கொண்டார். அருகாக வயதான வெள்ளை மூதாட்டியொருத்தி இருந்தாள். றமணன் அண்ணா அவளிடத்தில் மெதுவாகத் தலையை அசைத்து “குத்தெர்ண் மோர்ஹன்” என்றார். அவள் கண்களை இடுக்கி ஒரு அருவருக்கத்தக்க பிராணியைப் பார்ப்பது போல றமணன் அண்ணாவைப் பார்த்தாள். முகத்தின் தசைகள் கோணின. சட்டென்று எழுந்தாள். “ஸைச அவுஸ்லான்டர்” என்றவாறு இருக்கையை விட்டிறங்கி தள்ளி நின்று கொண்டாள். ஸைச அவுஸ்லான்டர் என்றால் மிகக் கேவலமான வெளிநாட்டுக்காரர்கள் என புரிகிற அளவிற்கு றமணன் அண்ணாவிற்கு ஜெர்மன் தெரிந்திருந்தது. பஸ்சில் அத்தனை பேருக்கும் மத்தியில் நிர்வாணமாக உடல் ஒடுங்கி கைகள் குறண்டியிருந்ததாய் அவர் உணர்ந்தார்.

எனக்கு நம்புவதற்கு கஸ்டமாக இருந்தது. இப்போதெல்லாம் வெள்ளைக்காரர்கள் மீது மதிப்பும் மரியாதையும் அதிகரித்தபடியிருக்கிறது. மார்டின் என்ன மரியாதையாகப் பழகுகிறார். அவரைப்போலவா ஊரில் வாத்திமார் இருந்தார்கள்.. எப்பொழுது பார்த்தாலும் வாயில் “சனியனே, மூதேவி, நாயே, பேயே” என்ற வார்த்தைகள்தானே அவர்களிடத்தில் இருந்து வந்தன. கொப்பியை விசுக்கி எறிவது, புறங்கையை புற்றுால் மட்டையால் முறிப்பது, பின்குண்டியில் பிரம்பால் விளாசுவது.. கொடுமைக்காரப் பாவிகள் அவர்கள்.

அகதிகள் அலுவலகத்தில் இருக்கின்ற பெண் எவ்வளவு அக்கறையோடு கனிவாகப் பேசுகிறார். மாதமொரு முறையேனும் கலந்துரையாடல் இருக்கும். அப்பொழுதெல்லாம் ஏதேனும் பிரச்சனைகள் இருக்கின்றனவா.. எதுவாயினும் தயங்காமல் சொல்ல வேண்டுமென்பார். கடந்த முறை “நீங்கள் உங்களது நாட்டுக்குப் போக விரும்பினால் தயங்காமல் கூற வேண்டும். எல்லா ஏற்பாடுகளையும் செய்து தருவதோடு, உதவியாக ஐந்து லட்சம் ரூபாக்களும் பெற்றுத்தருகிறோம்” என்றார். நான் வழமையான குசும்புடன் “அதனை இங்கேயே தந்தால் நன்றாயிருக்குமே” என்றபோது கூட கோபப்படாமல் சிரித்தபடியிருந்தார். வெள்ளைக்காரர்களுக்கு கோபம் வருவதில்லைத்தான். அவர்கள் உணவில் வறுத்த மிளகாய்த்துாள் சேர்க்காதபடியால்தான் அப்படியிருக்கிறார்கள் என்று யாரோ சொன்னதும் நினைவுக்கு வருகிறது.

ஒரு கலந்துரையாடலின் போது ஒவ்வொரு மாதமும் வீட்டிற்கெனவும், மருத்துவ காப்புறுதிக்கெனவும், மாதாந்த செலவுக்கெனவும், உடுப்புக்களுக்கெனவும் ஆயிரம் சுவிஸ் பிராங்குகளைச் செலவழிப்பதாகச் சொன்னபோது எனக்கு குரலடைத்துக் கொண்டது. பின்னர் “நீங்கள் வேலையொன்றைச் செய்யத்தொடங்கும்போது சம்பளத்திலிருந்து பத்து வீதத்தினை இதற்காகப் பிடித்துக் கொள்வோம்” என்றபோதே அடைப்பு நீங்கியது.

அன்றைக்குப் பின்னர் பார்க்கிறவர்களிடத்தில் வெள்ளைக்காரர்களைப் பற்றி அதிகமதிகம் புகழத்தொடங்கினேன். அபிதேமியிடத்திலும்..

0    0    0

அபிதேமி அதிகமாகப் பேசுவதில்லை. நீள்வட்ட முகத்தின் தடித்த உதடுகள் எப்பொழுதும் சுமந்து திரியும் புன்னகை துயரம் ஏறியதா அல்லது இயல்பானதா எனத் தெரியாதிருந்தது. வகுப்பறைகளில் பக்கவாட்டாகப் பார்க்கும்போது, வெள்ளி நிறத்தாலான தோடும், கூரிய மூக்கும் பவானியை நினைவுபடுத்தின. பத்துப் பதினொரு வயதுகளில் பவானி என்னோடு படித்திருந்தாள். அவளது மினுங்குகிற கறுத்த நிறத்தினை கேலி செய்து திரிந்தாலும் ஒரு ஈர்ப்பு அதில் இருக்கத்தான் செய்தது. அப்படியான சமயங்களில் “காகம் கரிச்சட்டியைப் பாத்துச் சொன்னதாம், இது கறுப்பு எண்டு” என தெத்துப்பல் தெரிய நெளிப்புக் காட்டி பவானி சிரிப்பாள். அபிதேமி அப்படிச் சிரிப்பதில்லை. எப்படியான பகிடிக்கும், பற்கள் தெரியாத சிரிப்பு. ஒன்றிரண்டு பதில் வார்த்தைகள். அவ்வளவும்தான் அவளது எதிர்வினைகள்.

அபிதேமியை நான் அதிகம் விசாரித்ததில்லை. ஆயினும் அவள் ஆபிரிக்க தேசமொன்றின் யுத்தத்தின் குழந்தையாயிருந்தாள். இங்கே அப்பாவும் அம்மாவுமற்று உறவினர்களோடு தங்கியிருந்தாள். நானுமொரு யுத்தத்தின் குழந்தையா என நிறைய நாள் யோசித்திருக்கிறேன். அதில் சந்தேகமிருந்தது. இருபதாவது வயது தொடங்கியபோது, மன்னார் இலுப்பைக் கடவையிலிருந்து இராமேஸ்வரத்தில் சேர்ந்து, அங்கிருந்து சென்னையில் தரித்து, பின்னர் மும்பையில் காத்திருந்து, பெயரறிய முன்னரே புறப்பட்ட இன்னோரன்ன தேசங்களில் விழுந்து, போலந்தில் இறங்கி ஜெர்மனியைக் கடந்து சுவிஸிற்குள் நுழைந்தபோது இருபத்தோராவது வயது முடிந்திருந்தது. அகதிக் கோரிக்கையில் யுத்தத்தின் குழந்தை என்றேன். குழந்தைகளை இவர்கள் நன்றாகப் பராமரித்தார்கள். அபிதேமியையும் அவ்வாறே கவனித்துக் கொள்கிறார்கள் என நம்பினேன்.

0    0    0

வகுப்புக்களிற்கு அருகேயான பூங்காவில் உட்கார்ந்திருந்தோம். எல்லோருமாகத்தான் வந்திருந்தோம். சாப்பிடவென, சிகரெட் புகைக்கவென அவர்கள் போயிருந்தார்கள். அபிதேமி இருக்கையின் ஓரமாக உட்கார்ந்திருந்தாள். இன்னும் ஒரு மணி நேரமிருந்தது. எதையாவது பேசலாமென்று “உனது நாட்டுக்கு நீ போக முடியுமா” என்று கேட்டேன். தலைகளை அசைத்து இல்லையென்றாள்.

“போக விருப்பமா..”

அபிதேமி கண்களை என்னை நோக்கித் தாழ்த்தி அர்த்தம் பொதியப்பார்த்தாள். அது “என்ன முட்டாள்த்தனமான கேள்வி, யாருக்குத் தான் ஆசையிருக்காது” என்றிருந்தது. பதிலுக்கு என்னைக் கேட்பாள் என்றிருந்தேன். கேட்கவில்லை. எனக்கந்த ஆசையில்லையா..எனத் தோன்றியது. நாளாக நாளாக அது அறுவது போலிருந்தது. அம்மாவை இங்கே அழைத்துவிட்டால் போதும். அம்மா எப்படி என்னைத் தனியே அனுப்பினாள் என்று நினைக்க ஆச்சரியமாயிருந்தது. எவருமற்ற ஒரு அனாதைச் சிறுவனாய் அகதிகள் முகாமிற்குள் நுழைந்த அந்த நாளை மறக்கமுடியவில்லை.

முதல் நாள் காலை. குளிர் விலகாத பொழுதாயினும் வெம்மை தகிக்கிற பாலைவனத்தில் தனித்து விடப்பட்ட ஆட்டுக்குட்டியைப் போல உணர்ந்தேன். ஆஸ்பத்திரியைப் போன்ற பெரிய முகாம் அது. ஒவ்வொரு அறையிலும் பத்துப் பேரளவில் படுக்கக் கூடிய அடுக்கடுக்கான படுக்கைகள் இருந்தன. இரவு மூன்றாவது அடுக்கில் ஏறிப்படுத்துக் கொண்டேன். அதனாலேயோ என்னவோ அந்தரத்தில் மிதப்பதுபோலயே இரவு முழுதும் நீண்டது. நித்திரைக் கண்களுடன் காலையில் குளிக்கப்போனேன். பொதுவான குளியலறை. வரிசையாக நின்று குளித்துக்கொண்டிருந்தார்கள். குழாயின் கீழ் நின்று வெந்நீரையும் குளிர்நீரையும் சரியாகக் கலப்பதற்குள் போதும் போதும் என்றாகியது. தலைக்கு சம்பூ இட்டு நுரையினாலே முகத்தை மூடி வழித்துத் துடைத்தபோது அருகில் அண்ணாந்து பார்த்தாக வேண்டிய உயரத்திலிருந்த தடித்த இளைஞன் உடலில் ஒட்டுத் துணியுமின்றி என்னைப் பார்த்தபடி குளித்துக் கொண்டிருந்தான். சட்டென்று ஷவரைத் திருகி நிறுத்திவிட்டு துவாயைப் போர்த்துக் கொண்டு ஓடிவந்துவிட்டேன்.

காலைச் சாப்பாட்டிற்காக ஒரு தட்டினை ஏந்தி வரிசையில் நின்றபோது மெதுவாக அழுகை வரும்போல் இருந்தது. வரிசை நீண்டிருந்தது. திரும்பிப்பார்த்தேன். நான்கைந்து தமிழ் இளைஞர்கள் கோப்பையில் தாளமிட்டபடி நின்றிருந்தார்கள். சிநேகமுடன் சிரித்தார்கள்.

பாணும், வெந்தும் வேகாததுமாகிய ஒரு இறைச்சித்துண்டும் கொஞ்ச இலைகுழைகளின் மேல சோளமும் கரெட்டும் துாவித் தந்தார்கள். இறைச்சியை வாயில் வைக்க முடியவில்லை. பாணையும் சோளத்தினையும் மட்டும் சாப்பிட்டேன்.

பத்து மணிக்கு, வந்து அழைத்துச் சென்றார்கள். புகைப்படங்களும், விரல் அடையாளமும் எடுக்க வேண்டியிருந்தது.  கட்டைவிரல்களைத் தனியாகவும் பின்னர் முழுவிரலடையாளத்தைத் தனியாகவும் எடுத்துக்கொண்டார்கள். மற்றுமொரு அறைக்கு போகச் சொன்னார்கள். அங்கு ஏற்கனவே அமர்ந்திருந்தவர்கள் நேற்றைய தினம் முகாமிற்கு வந்தவர்கள். அவர்களோடு அமர்ந்து கொண்டேன். பின் வரிசையில் தமிழ் யுவதி ஒருவரும் இருந்தார். இருபத்தாறு வயது இருக்கலாம். சிரித்தேன்.  தலையை சட்டென்று வேறுபக்கம் திருப்பிக் கொண்டார்.

தொலைக்காட்சியில் பத்து நிமிட விளக்கப்படமொன்று ஒவ்வொரு மொழிகளிலும் ஓடியது. அப்பொழுதே ஓரளவுக்குப் புரிந்திருந்தது. பின்னர் தமிழ் மொழியில் ஆரம்பித்தபோது கீழ்வரும் எழுத்துக்கள் திரையில் ஓடின.

பாதுகாப்பற்ற உடலுறவு எயிட்ஸை உருவாக்கும்.

முடிவில் இரண்டு ஆணுறைப் பைக்கற்றுக்களை எல்லோருக்கும் விநியோகித்தார்கள். சாப்பாட்டிற்கு வரிசையில் நின்றது போலயே அதற்கும் நின்றேன். படங்களில் கேள்விப்பட்டிருந்தாலும் நண்பர்களோடு அது பற்றிப் பேசியிருந்தாலும், வாழ்க்கையில் முதற்தடவையாக ஆணுறையொன்றைப் பார்த்தேன். வாங்கிக் கொண்டு வெளியேறிய சற்றைக்கெல்லாம் கண்களைக் கசக்கியபடி சிறிதான விசும்பல் ஒலியுடன் அழுதவாறு தமிழ் யுவதி, என்னைக் கடந்து ஓடினார்.

வெள்ளைக்காரர்களின் முதல் அன்பளிப்பு அந்த ஆணுறைதான். அன்றிலிருந்து இதோ இந்த குளிர்ச்சப்பாத்தினை வாங்குவதற்குரிய பணத்தினை நேற்றுத் தந்ததுவரை, கவனித்துக் கொள்கிறார்கள். எந்த ஜென்ம சம்மந்தமும் இல்லாதவனுக்காக, தங்கள் மொழியைப் பேசாதவனுக்காக, தங்கள் நிறத்தில் இல்லாதவனுக்காக, அவர்கள் இதுவரை பன்னிரெண்டாயிரம் சுவிஸ் பிராங்குகளைத் தந்திருக்கிறார்கள்.

“ஏன் அபிதேமி, உனக்கு மாதம் எவ்வளவு பிராங்குகள் தருகிறார்கள்..” என்றேன். அவள் அசிரத்தையாக “தருகிறார்கள்” என்றாள். எதிலும் பற்றதுமாதிரியான அவளது பேச்சு சமயங்களில் எரிச்சலைத் தருகிறது.

“கடந்தவாரம் இதோ இந்த குளிர்ச் சப்பாத்தும் குளிர் உடுப்பும் வாங்க வெள்ளைக்காரர்கள் எழுபது பிராங்குகள் தந்தார்கள். உனக்குத் தரவில்லையா.. ”

அபிதேமி சட்டென்று கோபமுற்றாள். கண்களிலும் முகத்தின் தசைகளிலும் சினம் படர்ந்திருந்தது.  வார்த்தைகளைச் சீரின்றி வெட்டிக் கொத்தியது போல பேசினாள். “என்னை ஏன் தொந்தரவு செய்கிறாய், ஏதோ எழுபது பிராங்குகள் தந்த வெள்ளைக்காரர்கள் என புழுகுகிறாய்.. எனக்கும் கடந்தவாரம் தொன்னுாறு பிராங்குகள் தந்தார்கள். உனது வெள்ளைக்காரர்கள்தான் தந்தார்கள். வெள்ளைக்கார பொலிசார் தந்தார்கள். உனக்கு உடுப்புக்கள் வாங்குவதற்காக தந்தார்கள் என்றாயா.. எனக்கு எதற்கு தந்தார்கள் தெரியுமா..”

அபிதேபி வெள்ளைக்காரர்கள் என்னும் ஒவ்வொரு வார்த்தையையும் உதடுகளைச் சுழித்து ஏளனமாக உதிர்த்தாள். எனக்கு றமணன் அண்ணா சொன்ன கதைகள் நினைவுக்கு வந்தன. பஸ்சிலோ அல்லது தொடரூந்திலோ, அபிதேமிக்குப் பக்கமாக யாரேனும் வெள்ளைக்கார கிழவி இருக்கப்பிடிக்காமல் எழுந்து போயிருக்கலாம். வெள்ளைச் சிறுபிள்ளையொன்று அவளைப் பார்த்து, “ஏ, கறுப்புப் பெண்ணே..” என கைதட்டிச் சிரித்திருக்கவும் கூடும். நான் எதுவும் பேசாதிருந்தேன். அபிதேமி தலையை நிமிர்த்தி வானத்தைப் பார்த்தபடியிருந்தாள். கழிந்த அமைதியின் பிறகு, “இருபது நாட்களாயிருக்கும்.. அது நடந்தபோது” என்றாள்.

அபிதேமி சொன்ன கதை

இதைப் போன்றதொரு பூங்காதான். விடுதிக்கு அருகேயிருந்தது. அன்றைக்கு நீண்ட நாட்களின் பிறகு வெயிலடித்த ஒரு நாளாகவிருந்தது. அதனாலேயே சனங்கள் நிறைந்திருந்தார்கள். குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். நான் எதையோ படித்துக்கொண்டிருந்தேன். சட்டென்று ட்ரக் ஒன்றில் பொலிஸார் வந்து இறங்கினார்கள். சனங்கள் யாரும் கலவரமடையவில்லை. எனது ஊரென்றால் பெரும் களேபரமாகியிருக்கும். பொலிஸார் பூங்கா முழுவதிலும் குவிந்து நின்றனர். அகப்பட்ட ஒன்றிரண்டு கறுப்பு இளைஞர்களிடம் துருவித் துருவி விசாரித்தார்கள். பின்னர் அவர்களது கைகள் முதுகுப்பக்கமாக விலங்கிட்டு தள்ளிச் சென்று வாகனத்தில் ஏற்றினார்கள்.

சற்று நேரத்தில் பொலிஸார் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள். அப்பொழுது வெளிச்சம் மறைந்து என் மீது இருள் நிழல் படர்வதைப் போலிருந்தது. விபரீதமொன்றிற்கான தொடக்கமென மனதில் தோன்றியபோது எனது விசாவினை எடுத்து நீட்டினேன் அவர்கள் கேட்காமலேயே. வாங்கிப்பார்த்தவன் அது, இன்னும் வழக்கு முடிந்துவிடாதவர்களுக்கான தற்காலிக விசா. எந்தப் பொழுதின் கணத்திலேனும் நான் நிராகரிக்கப்படுகிற நிலையிலிருந்தேன்.

கால்கள் முடமான சிறு குருவியொன்று வல்லுாறுகளின் நடுவில் மலங்க மலங்க விழித்தபடி நின்றிருந்தது. வல்லுாறுகளில் ஒன்று கேட்டது. “போதைப் பொருளை எங்கே மறைத்து வைத்திருக்கிறாய்..”

நான் பலமாகத் தலையினை ஆட்டி மறுத்தேன். “தவறான தகவலில் என்னிடம் விசாரிக்கிறீர்கள்” என்றேன். அதற்குப் பிறகான அவர்களது கேள்விகளைக் கிரகித்துக் கொள்ளமுடியாமல் மூளை கரிய திரவத்தின் ஆழத்தில் மூழ்கியதைப்போலிருந்தது. தலை மட்டும் இல்லை இல்லையனெ மறுத்தபடியிருந்தது.

திடீரென்று பெண் பொலிஸ்காரியொருத்தி அவர்களினிறும் முன்னேறி இறுக்கமாக அழுத்தி என்னைத் துாக்கி நிறுத்தி எனது கைகளை தலைக்குமேல் பிடித்து நிறுத்தினாள். எனது கால்கள் நடுங்கத் தொடங்கின. எனது தேசத்திலும் இப்படித்தான், திடீர் திடீரென்று ஆயுததாரிகள் வீதிகளிலும் சந்தைகளிலும் குவிந்து கொள்வார்கள். நாங்கள் வரிசைகளில் கைகளைத் தலைக்கு மேல் பிடித்துக் கொள்வோம். பிறகு அவர்கள் எங்கள் உடல்களில் குண்டுகளைத் தேடத்தொடங்குவார்கள். இங்கு குண்டுகளுக்குப் பதிலாக ஹெரோயின். அங்கு மொழியும் மதமும் எங்கள் கைகளை மேலே துாக்கின. இங்கு… நிறம்.. கறுப்பு என்கிற நிறம் எனது கைகளை உயர்த்துகிறது.

இரண்டு பொலிஸார் என் கைகளைப் பிடித்து வாகனத்தில் ஏற்றினார்கள். அவர்கள் என்னைத் தள்ளிச் சென்றபோது அருகில் குழந்தையை ஊஞ்சலில் ஆட்டிய வெள்ளைப்பெண்ணொருத்தி எந்தச் சலனமும் அற்று தொடர்ந்தும் ஊஞ்சலை ஆட்டியபடியிருந்தாள். அப்பொழுது அவள் பாடலொன்றையும் இசைந்திருந்தாள். பின்னர் அவள் தன் குழந்தையிடம் “நன்றாகப் பார்த்துக்கொள், தீயவர்களின் முடிவு இப்படித்தான் அமையும்” எனச் சொல்லியுமிருக்கலாம்.

நான் கால்களில் தலையைப் புதைத்து குந்தியிருந்தேன். பொலிஸார் எதுவும் என்னோடு பேசவில்லை. விசாவினை வாங்கியிருந்தவன் அது உண்மையானதுதான் என்பதை தொலைபேசியில் உறுதிப்படுத்திக் கொண்டான். பொலிஸ்நிலையத்தின் விசாரணைப் பகுதிக்கு பெண்பொலிஸார் என்னை இலேசாக முதுகில் தள்ளுவதைப் போல அழைத்துசென்றனர்.

நான் கற்பனை செய்து வைத்திருந்ததைப்போல விசாரணைப்பகுதி இருக்கவில்லை. பளிச் என்று சுத்தமாக இருந்தது. அப்படி இருந்தென்ன.. இருண்டதும் கொடிய ஆயுதங்கள் நிறைந்ததும் துருவேறியிருந்ததுமான சிறு நில அறையில் மனது ஒரு பந்தினைப்போல நச் நச் என்று சுவர்களில் எறியப்பட்டு இரத்தம் கசிந்தபடியிருந்தது. நான் “தண்ணீர் வேண்டும்” எனக்கேட்டேன். பெரிய க்ளாஸில் வார்த்துத் தந்தார்கள். தரும்போது “ஆடைகளைக் களைந்து விட்டு இந்த மேசையில் ஏறிப்படு, சோதனை செய்ய வேண்டும்” என்றாள் ஒருத்தி. நான் தண்ணீரைக் குடிக்காமல் அப்பால் தள்ளி வைத்தேன். சுவர் மூலையில் ஒடுங்கியிருந்து மீண்டும் இல்லை இல்லையனெ்று தலையினைப் பலமாக ஆட்டலானேன்.

அவர்கள் கடுமையுற்றார்கள். தண்ணீர் தந்தவள் காலால் நிலத்தில் ஓங்கிக் குத்தினாள். இரண்டாவது முறை பலங்கொண்டு தண்ணீர் க்ளாசினை உதைந்தாள். அது ஆளுயரத்தில் எழுந்து எதிர்ச் சுவற்றில் மோதி உடைந்து சில்லுச் சில்லாகக் கொட்டியது. சிலவேளைகளில் ஒவ்வொரு விசாரணை முடிவிலும் இந்த அறை இப்படிப் பளிச்சென இருப்பதில்லையோ எனத் தோன்றியது. மற்றவள் எட்டி நடந்து வந்து என் பின் கழுத்தைப் பிடித்தாள். அது வழுக்கியபோது தலைமயிரைக் கொத்தாகப் பற்றித் துாக்கினாள். அவள் ஒரு கையால் என்னைத் துாக்குகிற பலம் கொண்டிருந்தாள். துாக்கிச் சென்று மேசையில் கிடத்தினாள்.

இரண்டு பொலிஸ்காரிகளும் சேர்ந்து என்னைச் சோதனையிட முயன்று கொண்டிருந்தார்கள். நான் கால்களையும் கைகளையும் உதைத்தவாறு இருந்தேன். “நீங்கள் நினைப்பது மாதிரியான ஆள் நான் இல்லை” என்று கத்தினேன். “என்னுடைய வயது வெறும் பத்தொன்பதுதான் என்பது உங்களுக்குத் தெரியாதா” என்று சத்தமிட்டேன். மேசையில் படுக்கவைத்த ஒவ்வொரு முறையும் வாளினைச் சுழற்றுவதுபோல கைகளைச் சுழற்றி அவர்களை விலகச் செய்து எழுந்து உட்கார்ந்தேன். மீண்டும் மீண்டும் அவர்கள் என்னைத் தள்ளி விழுத்தினார்கள். என் தலைப்பக்கமாக நின்றவள் என் திமிறலையும் தாண்டி மேலாடையை இழுத்து கழற்ற முயற்சித்தாள். மூச்சைத் திரட்டி உண்ணி எழுந்தபோது ஆடை கிழிந்து அவள் கையோடு போனது. அப்பொழுது எனது நினைவுகள் குழம்பத்தொடங்கின. ஒரு பூனைக்குட்டியைப்போல அறையின் சுவர்க்கரையாக ஓடத்தொடங்கினேன். உடைந்த க்ளாஸின் துண்டுகள் சப்பாத்துக்களின் அடியில் மேலும் நொருங்கின.

பொலிஸாரில் ஒருத்தி கதவினைத்திறந்து சடார் என்று அடித்து மூடி வெளியேறினாள். நான் ஓட்டத்தை நிறுத்தினேன். மூச்சு வாங்கியது. ஓடிச்சென்று மேசையில் கிடந்த மேலாடையை அணிந்தேன். அது பக்கமாகக் கிழிந்திருந்தது.

கதவு திரும்பவும், பெரும் ஓசையுடன் திறந்தது. அந்த அறையில் ஒவ்வொரு சத்தமும் அதிர்ந்தே கேட்டன. வெளியேறிய பொலிஸ்காரியோடு திபு திபுவென ஏழெட்டு பொலிஸார் உள்நுழைகிற காலடிச்சத்தமும் அதிர்ந்து ஒலித்தது. அத்தனைபேரும் ஆண் பொலிஸார். வந்தவேகத்தில் அவர்களில் ஒருவன் என் கன்னத்தில் அறைந்தான். அப்பொழுது ஜெர்மன் மொழியின் மிகக் கேவலமான வசைச் சொல்லொன்றை அவன் சொன்னான். சமநிலை குழம்பிச் சரிந்தேன். தாடை எலும்பு நொருங்கியது போலிருந்தது. நாலைந்து பேர் என்னைத் துாக்கியபோது, உடல் பஞ்சானதாய் உணர்ந்தேன். அழத்தொடங்கினேன்.

அவர்கள் என்னை மேசையில் கிடத்தினார்கள். கணத்தில் ஆடைகள் உருவப்பட்டன. என் கறுத்த உடலில் மறைத்து வைத்திருப்பதாய் அவர்கள் நம்பிய போதை வஸ்துவை தேடத் தொடங்கினார்கள். உடலை சரித்து குப்புறக் கிடத்தினார்கள். தசைகள் வலியெடுக்கிறமாதிரி கால்களை இழுத்து விரித்தார்கள். தடித்த க்ளவுஸ் போட்ட கை விரல்கள் அங்கே தோண்டித் துழாவின. வலி தாங்கமுடியாதிருந்தது. கைவிரல்களை இறுக்கப் பொத்தி பற்களை கடித்துக் கொண்டிருந்தேன்.

கடைசியாக, தேவையற்ற போத்தலொன்றை உருட்டிவிடுவது போல அவர்கள் என் உடலைக் கைவிட்டார்கள். தடதடவென்று வெளியெறிப் போனார்கள். நான் அப்படியே படுத்திருந்தேன். பெண் பொலிஸார் மட்டும் அறையில் நின்றார்கள். அவர்களில் ஒருத்தி ஆடைகளை என் மீது போட்டாள். எழுந்து அவள் காட்டிய கோப்பில் கையொப்பம் இடச் சொன்னாள். மேசையினின்றும் மெதுவாக கால் ஊன்றி இறங்கி உடைகளை அணிந்தேன். கையெழுத்திட்ட பிறகு போகலாம் என்றார்கள். வெளியேறியபோது அவர்களில் ஒருத்தி சிரமத்திற்கு மன்னித்துக்கொள் என்றாள்.

நான் மன்னிப்பதாக இல்லை. நெஞ்சுக்குள் கோபம் பெரும் அலையாக மூசியபடியிருந்தது. உடுப்புக் கடையொன்றுக்குள் போக வேண்டியிருந்த நினைப்பைக் கைவிட்டு கரித்தாஸ் நிறுவனத்திற்குள் நுழைந்தேன். எனக்குப் பொறுப்பான பெண்மணியிடம் நடந்த அனைத்தையும் விடாமல் ஒப்பித்தேன். முடிவில் அழத்தொடங்கினேன். பொலிஸாரின் செய்கையினால் அவரும் கோபமுற்றிருந்தார். என் முதுகில் வருடியபடி சொன்னார். “உனக்கு விருப்பமானால் வழக்குப் பதிவு செய்ய முடியும்.” நான் பலமாக ஆம் என்பதைப்போல தலையினை ஆட்டினேன்.

அவர் கரித்தாஸ் நிறுவனத்தின் வழக்கறிஞர் ஊடாக வழக்கினைத் தாக்கல் செய்தார்.  நீண்டநாட்கள் எடுத்துக்கொள்ளவில்லை. தீர்ப்பு கடிதத்திலேயே வந்தது.

தகவல்களது அடிப்படையிலான பொலிஸாரது விசாரணைக்கு அபிதேமி உடன்பட மறுத்தது தவறானதாகும். பொதுவாக இவ்வாறான விசாரணைகளை சுமுகமாக முடித்துக்கொள்ள முடியும். ஆயினும் அவரது நாட்டின் கலாச்சார பின்புலம் மற்றும் வயது ஆகியவற்றின் அடிப்படையில் அவரது தயக்கத்தினை புரிந்து கொள்ள முடிகிறது. இந்நிலையில் விசாரணையின் பொது ஆண் பொலிஸாரின் பிரசன்னம் வேண்டத்தகாதது. அவாகளது முன்னிலையில் ஆடைகள் களையப்பட்டு விசாரிக்கப்பட்டமையானது மனிதப் பண்புகளுக்கு மாறானதும் கூட. இதுபோன்ற சம்பவங்கள் மேலும் தொடராது பார்த்துக் கொள்ள வேண்டும். அபிதேமிக்கு இழப்பீட்டுத் தொகையாக தொன்னுாறு சுவிஸ் பிராங்குகள் வழங்கப்பட வேண்டும்.

தீர்ப்பினைப் படித்துவிட்டு நான் கரித்தாஸ் பெண்மணியைப் பார்த்தேன். அவர் தலையினைக் குனிந்து கொண்டார். பின்னர் கிடைக்க இருக்கிற தொன்னுாறு பிராங்குகளில் இரண்டு உடுப்புக்கள் வாங்கச் சொன்னார்.

0    0    0

எனக்கு வகுப்பிற்குப் போகப் பிடிக்கவில்லை. “அபிதேமி எனக்குத் தலையிடிக்கிறது” என்று சொல்லிவிட்டு வெளியேறினேன். அவளின் கதையில் மனது பாரமுற்றிருந்தது. முகத்தைத் தொங்கப்போட்டுவிட்டு நடந்தேன். றமணன் அண்ணன் தோளில் மாட்டிய பையுடன் எதிரில் நின்றார். என்னையும் அபிதேமியையும் மாறி மாறிப்பார்த்தார். பிறகு கேட்டார்.

“கள்ளக் கறுவல் நாய்களோடு உனக்கென்ன கதை வேண்டியிருக்குது..”

00000

 

 

————————————————————————————————————————————————

**************உங்கள் கருத்துக்களை உடனுக்குடன் பதிவிடுங்கள் (ஆசிரியர் குழு)************

—————————————————————————————————————————————————

 

 

 

1,677 Comments

  1. mca fareed says:

    அருமையான சிறுகதை மீண்டும் மீண்டும் படிக்கவேண்டும்போல் இருந்தது

Post a Comment