Home » இதழ்-05 » வட மாகாணத்தில் முஸ்லீம்களின் மீள்குடியேற்றமும் ஆதரவு/வரவேற்பு சமூகம்(Host Community) எதிர்கொள்ளும் நெருக்கடியும்…

 

வட மாகாணத்தில் முஸ்லீம்களின் மீள்குடியேற்றமும் ஆதரவு/வரவேற்பு சமூகம்(Host Community) எதிர்கொள்ளும் நெருக்கடியும்…

 

-முஹம்மத் எஸ்.ஆர். நிஸ்த்தார்.

 • இன்றையஇலங்கையின் அரசியல் நிலைவரங்கள் பற்றிக் கதைப்பவர்கள், அதில் குறிப்பாக கடந்த 30 வருட ஆயுத மோதலால் பாழ்பட்டுப்போன இன ஐக்கியம் பற்றி பேசுபவர்கள்; அது இலங்கைப் பிராஜைகளாகட்டும், இலங்கை அரசாங்கமாகட்டும், வெளி நாட்டு அரசாங்கங்களாகட்டும், வெளி நாட்டு நிறுவனங்களாகட்டும் அனைவரும் கதைக்கத் தவறாத ஒரு விடயம் தான் இந்த ” மீள் குடியேற்றம்” என்ற அம்சம்.இதைவிட ஒரு படி மேலே சென்று இலங்கையின் இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு நோக்கி நகர்வதில் இந்த “மீள் குடியேற்றம்” என்பது மிக முக்கியமான விடயமாகும் என்பது தமிழ் அரசியல் வாதிகளின் இன பிரச்சினை நோக்கிய முதல் நிபந்தனைகளில் ஒன்று. இது ஒரு புறமிருக்க ஏதோ ஒரு காலத்தில் அகதி என்ற நிலையில் இருந்த நம்மில் பலபேருக்கு அகதியாய் இருப்பதின் அல்லது ஆகக் குறைந்தது அந்த பெயரை தாங்கி நிற்பதின் சிக்கல்கள் நன்றாக புரிந்து கொள்ள முடியும் என்பதால் நாம் கூட எந்த வித பின்னடிப்பும் இன்றி இந்த “மீள் குடியேர்றம்” என்ற வார்தையில் அதிக ஆர்வம் கொண்டிருப்போம்.
 • இவை அத்தனையும் “மீள் குடியேற்றம்” என்ற சொல் தனியாகப் பயன்படுத்தப்படும் போது மட்டுமே.ஆனால் அந்த சொல்லுக்கு முன்னால் முஸ்லிம்/முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் என்று வந்தவுடன் நம்மில் பலருக்கு புதிய சில கேள்விகள் பிறக்கின்றன.1. இவர்களும் கடைசி யுத்தத்தில் பாதிக்கப்பட்டார்களா/அகதிகளாக்கப்பட்டார்களா?2. அப்படி இல்லை என்றால் இந்தக் கட்டத்தில் இவர்கள் ஏன் இதில் சேர்த்துக் கொள்ளப்படவேண்டும்? என்பனவே.இதைவிடவும் கடுமையான தொனியில் பிறக்கும் கேள்வி யுத்தத்தில் பார்வையாளர்களான இவர்கள் அல்லது காட்டிக் கொடுப்பில் ஈடுபட்ட இவர்கள் என்ன உரிமையில் இந்த மீள் குடியேற்றத்தில் பங்கு கோறுகின்றனர் என்பதாகும்.இவர்களைப் பொறுத்தவரை அகதிகள் என்ற வார்த்தை பிரயோகத்திற்குள் இனங்கானப்படுவோர் 18.05. 2009ல் இருந்து வன்னி/வவுனியா பிரதேசங்களின் அகதி முகாம்களில் அடைக்கப்பட்டோர் அல்லது அடைக்கலம் அடைந்தோர். இவர்கள்தான் மீள் குடியேற்றம் என்று எங்கெங்கு பேசப்படுகின்றதோ அங்கெல்லாம் உள்வாங்கப்படவேண்டியவர்கள்.இந்த “புதிய அகதிகள்” என்போர் மட்டுமே நாம் ஆரம்பத்தில் கூறிய சம்பந்தப்பட்டோர்களின் கவனத்திலும் உள்ளவர்கள். ஆகவேதான் கடந்த 22 வருடங்களாக “பழைய” அகதிகளாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் ஒரு சமூகம் எந்தவித தார்மீக காரணங்களுமின்றி புறக்கணிக்கப்படுகின்றது அல்லது இதுவரை புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளது. இப்படி கண்டு கொள்ளப்படாதவர்கள் பத்தல்ல, நூறல்ல, ஆயிரமுமல்ல சுமார் ஒரு லட்சம் மக்கள், ஆண்கள். பெண்கள், சிறுவர், வயோதிபர், நோயாளிகள், நடக்கவே முடியாதோர் என்று பலதரப்பட்டோர். அத்தனை பேரும் சந்தர்ப்பவசத்தால் முஸ்லிம்கள். நோர்வே அகதிகள் அமைப்பின் (Norwegian Refugee Council) கணக்கெடுப்பின் படி இந்த அதிகளின் எண்ணிக்கை சரியாக 95,000.

  இந்த அகதிகளை வர்ணிக்கும் ஆதரவு/வரவேற்பு சமூகம்(Host Community) பலாத்காரமாக வெளியேற்றப்பட்டோர்(Forcibly Evicted Persons) என்று கூற; ஏதோ ஒன்றை மறைக்கும் முகமாக அவர்களை உள்ளகவாரியாக இடம்பெயர்தோர் (Internally Displaced Persons) என்ற ஒரு வரையறுப்புக்குள் அடக்குகின்றனர் ஏனையோர். அவர்களுக்கு வழங்கப்பட்ட பெயர் எவ்வாறிருப்பினும் மீள்குடியேற்றம் என்று வரும் போது இவர்கள் மிக முக்கியமானவர்கள் என்பது எல்லாரோலும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய விடயமாகும். துரதிஸ்டவசமாக நிலைமை அப்படியல்ல.

  இந்த வகையில் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட அகதி முஸ்லீம்களின் மீள்குடியேற்றம் பற்றி பேசும் போது அதனோடு இறுக பின்னிப் பிணைந்த மக்கள்தான் இந்த ஆதரவு/வரவேற்பு சமூகம்(Host Community). அவர்களை பற்றி கதைக்காமல் இந்த அகதிகளின் பின்னணி பற்றியோ, மீள் குடியேற்றத்தின் அவசியம் பற்றியோ கதைப்பதில் அர்த்தமில்லை. அவர்களை மறந்து எடுக்கப்படும் தீர்வு நீண்டு நிலைத்திருக்கும் (durable) பரிகாரம் என்பதை கேள்விக் குறியாக்கிவிடும்.

  இப்படி பலாத்காரமாக அகதி நிலைக்கு உள்ளான இந்த முஸ்லீம்கள் எங்கிருந்து வந்தார்கள்? கடந்த 22 வருடங்களாக எங்கு அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்? என்பது முக்கியம். இவர்கள்தான் ஒக்டோபர் மாதம் 1990ல் யாழ்,முல்லைத்தீவு,மன்னார்,கிளிநொச்சி பகுதியில் இருந்து தமிழ் புலிகளால் இரண்டு மணி நேர கால அவகாசத்தில் ரூபா 500.00க்கு மேலாக பணமாகவோ, பொருளாகவோ எடுத்துச் செல்ல அனுமதிக்கபட்டவர்கள். தாம் பிறந்து வாழ்ந்த மண்ணில் தொடர்ந்தும் வாழஅனுமதிக்கப்படாதோர். தப்பிச்செல்லும் காலக் கெடு முடியமுன் உயிர் உத்தரவாதம் தேடி அனைத்தையும் இழந்து இரவோடிரவாக வள்ளங்கள் மூலம் இந்து கடலோரத்தின் ஊடாக புத்தளத்தில் வந்திறங்கியவர்கள்.

  எந்த வித முன்னறிவித்தலோ அல்லது அழைப்போ இல்லாமல் போகிறோம், ஆனாலும் தாங்கள் எந்தவித பிரச்சினையும் இன்றி வரவேற்கப்படுவோம் என்ற நம்பிக்கை “அவர்களும் சகோதர முஸ்லீம்கள்” என்ற அடிப்படையில் மட்டுமே அவர்களுக்கு அன்று இருந்திருக்க வேண்டும் புத்தளத்தினை நோக்கி வந்த போது…..

  அவர்கள் எதிர்பார்த்ததற்கும் மேலாக ஒரு சில மணிப் பொழுதுகளில் வரவேற்பு சமூகம் அவர்களை அப்படியே உள்வாங்கிக் கொண்டது. இப்படி ஆதரவு சமூகமாக இரவோடுயிரவாக தங்களை சுயவிருப்பதில் மாற்றிக் கொண்டவர்கள் புத்தளம் பிரதேச மக்கள். புத்தளத்தில் உள்ள அமைப்புக்கள், விளையாட்டுக் கழகங்கள்,பள்ளிவாசல்கள் எல்லாம் ஓய்வின்றி செயற்பட்டன அந்த மக்களை ஆதரவுடன் வரவேற்பதற்கு. பாடசாலைகள், பொருட் களஞ்சியங்கள் எல்லாம் தங்குமிடமாக்கப்பட்டன. எல்லா வீடுகளில் இருந்தும் ஆகக்குறைந்தது ஒரு சாப்பாட்டு பொதி தினம்தினம் பெறப்பட்டது. சட்டி,பானை, பாய்கள்,உடுதுணி என்று உடனுக்குடன் பொருட்கள் சேர்க்கப்பட்டன. அரசாங்க உதவிகள் கிடைக்கும்வரை பல மாதங்கள் இப்படியே அகதிகள் பராமரிக்கப்பட்டார்கள். புத்தளம் மாணவர்கள் கல்வியை இழந்தார்கள். பரீட்சைக்கு தயாராக்க வடபகுதிகள் போல் அங்கு கல்விக் கடைகள்(Tutories) இல்லை. ஏற்கனவே கல்வியில் பின் நிலையில் இருக்கும் இப்பிரதேசம் பாதிக்கப்படுவதை வரவேற்பு சமூகம் தெரிந்துகொண்டே ஏற்றுக்கொண்டது.

  இப்படியாக அங்கு வாழ்ந்த அகதி சமூகமும், ஆதரவு சமூகமும் பெரு அளவிலான ஐக்கியத்தை தங்கள் சமய நம்பிக்கையூடாக ஏற்படுத்திக் கொண்டபோதிலும் சில ஆண்டுகளின் பின்னர் அப்பிரதேசத்தின் மட்டுப்படுத்தப்பட்ட வளப் பகிர்வு மெதுமெதுவாக அவர்களுக்கிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தியது. இரண்டு சமூகங்களிலும் இயற்கையாக ஏற்பட்ட சனத்தொகை அதிகரிப்பு, எந்தவித வள விருத்திக்கு சந்தர்ப்பம் இலாத நிலையில் காணிப் பங்கீடு, நீர் பங்கீடு ஏனைய வளப் பற்றாக்குறை என்பன முக்கிய பிரச்சினையாக உருவெடுத்தது. இந்த நிலை அவர்களிடையே முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளது என்பதில் எந்த சந்தேகமுமில்லை. இந்த பிரச்சினை இப்போது ஒரு பெரிய பிரச்சினையின் உபபிரச்சினையாகி,இப்போது இதுவும் ஒரு முக்கிய பிரச்சினையாக வளர்ந்துள்ளது. இந்த விடயத்தில்,இதன் சிக்கல் ,விளைவு,முரண்பாடுகள் தொடர்பாக கவனத்தினை குவிப்பதும் அவசியமாகி உள்ளது.

  புத்தளம் மாவட்டம் அங்குள்ள சிங்கள பாடசாலைகளின் தர அடிப்படையில் முன்னேறிய மாவட்டமாக கருதப்பட்டாலும், தமிழ் மொழி பாடசாலைகளைப் பொருத்தவரை சுமார் 750 ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை நிலவுகிறது. கட்டிட வசதிகள் போதியளவு இல்லை. ஒப்பிட்டு ரீதியில் கல்வியில் பின்னிக்கின்றது. அதே நேரத்தில் அகதி சமூகமானது தங்களுக்கு அளிக்கப்பட்ட சில விசேட பாராளுமன்ற பிரதி நிதித்துவ அடிப்படையில் கல்வியிலும், தொழில் பெறுதலிலும் ஆதரவு சமூகத்தை விட முன்னேறிய நிலையில் காணப்படுகின்றது என்பது மட்டுமல்ல, இது இரண்டு சமூகங்களுக்கிடையே தொடர்ச்சியான போட்டியாகவே அரசியல் பிரதிநிதித்துவம், வளப்பங்கீடு இருந்து கொண்டிருக்கின்றது. 1989ல் இருந்து புத்தளம் முஸ்லிம்கள் தங்களது பாரளுமன்ற பிரதி நிதிக்கான உரிமையை புதிய பிரதேவாரி தேர்தல் முறையால்( proportional representation) இழந்து நிற்கின்றனர். இன்றுவரை புத்தளம் மக்கள் அரசியல் அனாதைகளாகவே இருப்பது கவலைப்பட வேண்டிய விடயம். இதுவும் இந்த அகதிகள் விடயத்தில் அல்லது அவர்களின் மீள் குடியேற்றம் சம்பந்தமான விடயத்தில் சில எதிர்த் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளதையும், ஏற்படுத்தி வருவதையும் நாம் மறுப்பதற்கில்லை.

  2002 இல், MRRR, UNHCR, WORLD BANK ஆகியவை நடத்திய ஆய்வில்/கணக்கெடுப்பின் படி ஒவ்வொரு சதுர கீ.மீலும் 900 அகதிகள் வாழ்கின்றனர். இது அப்பிரதேச மக்கள் தொகையின் 100% அதிகரிப்பு. இப்படியாக 141 அகதி முகாம்/கிராமங்களில் வாழும் இந்த மக்களிடம் 2004ல் பெறப்பட்ட கருத்து கணிப்பின் படி , அதாவது சமாதான பேச்சு வார்த்தைகள் முன்னெடுக்கப்பட்ட வேளையில், 4% அகதிகள் உடனடியாக தங்கள் சொந்த இடங்களுக்கு செல்ல ஆசை கொள்வதாகவும், 60% மானவர்கள் ஏதாவது ஒரு கட்டத்தில் மீள திரும்ப இருப்பதாகவும், 36% புத்தளத்தையே தமது எதிர்கால வாழ்விடமாக நிர்ணயித்துவிட்டதாகவும் கண்டறியப்பட்டது.

  இந்த கால கட்டத்தில் புலிகள் முஸ்லீகளை மீள அனுமதிப்பதாக நோர்வையூடாக அறிவித்தபோதும் நோர்வேயின் அறிக்கயின் படி இவர்கள் முஸ்லீம்களாக அல்லாமல், அதாவது அவர்களின் அடிப்படை சமய உரிமையில் ஆதிக்கம் செலுத்தும் பாணியில், தமிழர்களின் ஒரு பகுதியாக, மிகத்தெளிவாக சொல்லப்போனால் “இஸ்லாமிய தமிழர்களாக” வரவேண்டும் என்பதே புலிகளின் தேர்வாக அமைந்ததாம். அப்படி இருந்தும் இந்த ஆழமறியா அச்சுறுத்தலை தாண்டி அங்குள்ள நிலவரங்களை நேரில் சென்று பார்வையிட்ட அகதிகளுக்கு அதிர்சியே காத்திருந்தது. இதுவும் நேர்வேயின் தகவல் படியே. அதாவது முஸ்லீம்களின் இருப்பிடங்களில் சம்பந்தமில்லாதவர்கள் குடியிருந்ததும், அவர்களின் பள்ளிவாயில்கள் ஆடு, மாடு தொழுவங்களாகக் காணப்பட்டதும், சில பள்ளிவாயில்களின் மூலஸ்த்தானம் மலசலம் கழிக்கப் பாவிக்கப்பட்டிருந்ததற்கான திடமான தடயங்கள் இருந்ததும் அவர்களை மீள் குடியேறுதலிலும், புலிகளின் வார்த்தைகளிலும் நம்பிக்கை இழக்கச்செய்தன. அதே நேரத்தில் கிழக்கில் முஸ்லீம் வர்த்தகர்கள் புலிகளால் அழைக்கப்பட்டு மிக மோசமான வரிசெலுத்துதலுக்கு உற்படுத்தப்பட்டதும், மீறியோர் முகம் கொடுத்த பயங்கர தண்டனையும் இவர்களை மேலும் பயங்கொள்ளவும், விழிப்படையவும் செய்தது.

  இந்த நிலையில் 2006 ஆண்டு அகதிகளுக்கிடையே செய்யப்பட்ட மேலுமொரு கேள்வி கொத்து சேகரிப்பில் கிடைத்த தகவல் நிலைமையை முற்றும் முழுதாக மாற்றியமைத்தது. அதாவது 96% அகதிகள் புத்தளத்தை தமது நிரந்தரவதிவிடமாக ஆக்கிக் கொண்டதும், 4% மக்களே மீண்டும் தமது செந்த இடங்களுக்கு திரும்பிச்செல்ல விரும்புவதும் கண்டறியப்பட்டன. இந்த 96% த்தில் சுமார் 75% மக்கள் புத்தளப்பிரதேசத்தில் காணி உரித்தாளர்களாக மாறிவிட்டனர். இது புத்தளத்தின் சொந்த பிரஜைகளின் பிற்கால காணித்தேவையை கேள்விக்குறியாகியுள்ளது. காணிகளுக்கான புதிய செயற்கை விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இடப் பற்றாக்குறை, ஏனைய வளப்பற்றாக்குறை, தொழில் போட்டி என்பவற்றுடன் இந்த புதிய காணிப்பிரச்சினையும், நீர் பங்கீடும் பாரிய பிரச்சினையாக இருக்கின்றது.

 • ஆகவே அகதிகளுக்கான நிவாரணம், மறுவாழ்வு, மீள் குடியேற்றம் பற்றி தீர்மானங்கள் எடுக்கப்படும் எல்லா சந்தர்பங்களிலும் மிகவும் பாதிக்கப்பட்ட இந்த புத்தளம் ஆதரவு சமூகம் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும் என்பது நோர்வேயின் நிலைப்பாடு, புத்தள மக்களின் தீர்க்கமான நிலைப்பாடு. இதே கருத்தே 2005 ல் நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் குழுவினருக்கும்- புத்தளம் பெரிய பள்ளிவாயில்/பொது மக்கள் குழுவினருக்கும் இடையே நடை பெற்ற பேச்சுவார்த்தையில் கையெழுத்திடப்பட்ட அறிக்கையிலும் மிக முக்கியமாக சுட்டிக்காட்டப்பட்ட விடயமாகும்.
 • ஆனால் காலங்கள் மிக வேகமாக உருண்டோட விடயங்கள் மட்டும் முன்னேறிச்செல்ல மறுக்கின்றன. இன்றும் கூட சம்பந்தப்பட்டோர் புத்தளம் ஆதரவு சமூகம் பற்றியோ அகதி சமூகத்தின் வருகையாலும், அவர்களின் தொடர் இருப்பினாலும் ஆதரவு சமூகம் முகம்கொடுக்கும் சமூக, அரசியல், பொருளாதர பினடைவுகளை பற்றியோ ஏற்கனவே உள்ள வளப் பற்றாக்குறையும் வேகமாக குறைந்துவரும் வளங்களினால் எதிர்காலத்தில் ஏற்படப்போகும் பிரச்சினைகள் தொடர்பாகவோ ஏதும் திட்டங்கள் இருப்பதாக தெரியவில்லை.அகதிகள் தாங்கள் மீள் குடியேற தடையாக உள்ளதாக 18 காரணங்களை முன்வைக்கின்றார்கள் அது தமது பாதுபாப்பு என்பதில் இருந்து தொழில் வாய்ப்பின் நிச்சயமற்ற தன்மைகள் வரை செல்கின்றன. புத்தளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு(Integration) புத்தள பிரசைகளாக வாழ்வதற்கும் இதே 18 காரணங்கள் தடையாக உள்ளதாகக் காணப்பட்டாலும் அதன் தரவரிசை மாறிக்காணப்படுகின்றன. இந்த மீள் குடியேற்ற விடயங்களில் தம்னை ஈடுபடுத்திபுள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்( NGOs) அகதிகளின் மீள் குடியேற்றத்தைவிட உள்ளூரில் ஒருங்கிணைக்கப்பட்ட திட்டமே சாத்தியமானது என்று கூறிவருகின்றன. இதில் அவர்கள் செயல்பாட்டு நலனும் தங்கியுள்ளதை காணக்கூடியதாக உள்ளது. அதாவது அவர்களின் தடைபடாத நடவடிக்கைக்கும் வடக்கை விட எல்லாவிதத்திலும் பாதுகாப்பான, பயண சுலப இடமாக புத்தளம் காணப்படுகின்றது . இது 2009 வரை உண்மை எனினும் இப்போது அவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக புலிகள் காரணமாக இருக்க முடியாது. ஆகவே தன்னார்வ நிறுவனங்களின் சொகுசுக்காக புத்தளம் ஆதரவு சமூகம் நிர்க்கதி நிலைக்கு தள்ளப்படலாகாது.இந்த அடிப்படையில் தான் இந்த முஸ்ளீம்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக, இந்த பிரச்சினைக்கான நீண்டு நிலைபெறும் தீர்வுக்கான அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? என்ற முதல் கேள்வி எழுகிறது. அதை தொடர்ந்து NGO களின் நிலை என்ன ? அதை தொடர்ந்து தமிழ் தரப்பினரின் நிலை என்ன ? அத்துடன் ஏனைய மாவட்ட முஸ்லீம்களின் பங்களிப்பு என்ன என்பது? இத்துடன் முக்கியமானது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லீம் அரசியல் தலைமைகளின் நிலை பாடுபற்றிய கேள்வியும் , அவர்கள் மேல் எழும் சந்தேகங்களும்.இது இவ்வாறிருக்க, Norway Refugee Council பின் வரும் முன்மொழிவுகளை செய்தது.* அரசாங்கம் இந்த அகதிகளினது விடயத்தை முன்னிலைப்படுத்தி காரியமாற்ற வேண்டும்.* உள்ளூர் ஒருங்கிணைப்பு பற்றி அதில் சம்பந்தப்பட்டள்ள இரண்டு சமூகங்களின் நிலையை புரிந்து கொள்ளலும், அறிந்துகொள்ள முயல வேண்டும்.* அகதிகளுக்கு நீண்டு நிலைத்து இருக்ககூடிய தீர்வு தொடர்பாக அவர்களின் தேர்விற்கு போதியளவு அறிவித்தல் கொடுப்பது.

  * காரியாலயங்களில் முடிவுகள் எடுக்கப்படாமல், அகதிகளுடன் கலந்துரையாடி முடிவுகள் எடுப்பது.

  * அகதிகளை புதிய அகதி, பழைய அகதி என்று தரம்பிரிக்காதிருப்பது. அகதிகளுக்கு ஒதுக்கப்படும் உதவிகள் சரியாக அவர்களுக்கும், பாதிக்கப்பட்ட ஆதரவு சமூகத்துக்கும் சரியான முறையில் பங்கீடு செய்வதை உறுதி செய்வது போன்றவை இவற்றில் சில.

  இந்த பிரச்சினையில் கடைசியாக முகம் கொடுத்த குழுதான் LLRC ,அவர்களின் அமர்வுகளில் ஆதரவு சமூகம் பலகட்டங்களாக சாட்சியங்கள் கொடுத்து நல்ல முடிவுக்காக காத்திருந்த வேளையில் அவர்களின் எதிர்பார்ப்பில் மண்ணைவாரி போட்ட கதையாக அமைந்தது LLRC கடைசி அறிக்கையின் பின்வரும் ஒற்றை வரிப் பதிவு;” புத்தளம் சமூகம் இடம்பெயர்ந்தோரின் பிரசன்னத்தால் பிரச்சினைகளை எதிர்நோக்குகிறது”.

  ௦௦௦௦௦௦
  (இலண்டனில் கடந்த 15,09,12 ,தமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் நடாத்திய கருத்தமர்வில் கட்டுரையாளரால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் சுருக்கிய வடிவம்)

—————————————————————————————————————————————————

**************உங்கள் கருத்துக்களை உடனுக்குடன் பதிவிடுங்கள் (ஆசிரியர் குழு)************

—————————————————————————————————————————————————

 

 

19 Comments

 1. Mohamed Razmi says:

  இது பிரதேசவாதமல்ல. ஆதங்கம்.!!
  வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து நம்மோடு இரு தசாப்தங்கள் தாண்டியும் பாதுகாப்பாக வாழும் வடக்கு முஸ்லிம் மக்கள். அவர்கள் வரவேற்பு சமூகத்தை நசுக்கும் அளவுக்கு சென்று விட்டனர் என்பது பரவலான குற்றச்சாட்டு. அதற்கு வலுவூட்டும் ஏராளமான நிகழ்வுகளை வடக்கு முஸ்லிம்களை அரவணைத்துக் காத்த புத்தளம் முஸ்லிம் சமூகம் சகிப்புத் தன்மையுடன் கடந்து போய் இருக்கிறது.

  தொடர்ந்தும் இருட்டடிப்பு செய்யப்பட்டு வரும் புத்தளம் வரவேற்பு சமூகத்தின் நலன்களை சர்வதேச அரங்குக்கு கொண்டு செல்ல….. நிஸ்தார் அவர்களின் இக்கட்டுரைஒரு நம்பிக்கை !

 2. Nice post. I was checking constantly this weblog and I am inspired! Extremely helpful information particularly the ultimate section 🙂 I maintain such information a lot. I was seeking this certain information for a long time. Thank you and good luck.

Post a Comment