Home » இதழ்-05 » நேர்காணல்- நோயல் நடேசன்.

 

நேர்காணல்- நோயல் நடேசன்.

 

நோயல் நடேசன் அல்லது என். நடேசன் இன்றைய ஈழத்தமிழ்ப்பரப்பிலும் புலம்பெயர் பரப்பிலும் அதிக சர்ச்சைக்குள்ளானவர்.  பல நெருக்கடிகளையும் கடினமான விமர்சனங்களையும் மிக மோசமான அவதூறுகளையும் சந்தித்தவர். இன்னும் நடேசனைப் பற்றிய எதிர்ப்பலைகள் முற்றாக ஓய்ந்து விடவில்லை. இந்த ஓயாத அலைகளுக்கு மத்தியிலும் தன்னுடைய படகினை வலிமையோடும் ஓர்மத்தோடும் ஓட்டிச் சென்று கொண்டிருப்பவர். நீண்டகாலமாகவே விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்கு எதிரான நிலைப்பாட்டையும் விமர்சனத்தையும் கொண்டிருந்த நடேசன் தமிழ்ப் பெரும்பான்மை மனநிலைக்கு அப்பாலான இலக்கிய, ஊடக இயக்கத்தில் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறார்.

புலம்பெயர்ந்து அவுஸ்ரேலியாவில் வாழ்ந்து வரும் நடேசனின் ஊடக, இலக்கியச் செயற்பாடுகள் இதுவரையிலும் புலம்பெயர் சூழலிலேயே நடந்தன. அவுஸ்ரேலியாவில் 12 ஆண்டுகளாக ‘உதயம்’ என்ற பத்திரிகையை தமிழ் – ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியிட்டார். கூடவே ‘வாழும் சுவடுகள்’ என்ற இரண்டு புத்தகங்களையும் ‘வண்ணாத்திகுளம்’ என்ற நாவலையும் எழுதி வெளியிட்டுள்ளார். தற்போது ஒரு நாவலை எழுதிவருகிறார். அண்மையில் இது வெளியாகவுள்ளது. ‘வண்ணாத்திகுளம்’ ஆங்கில மொழியில் வெளியாகி, அமெரிக்காவின் பல்கலைக்கழகங்களில் ‘தெற்காசிய இலக்கியம்’ என்ற தலைப்பில் வைக்கப்பட்டுள்ளது.

இலங்கைப் போரின் பின்னர் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிப் பணிகளை ‘வானவில்’ என்ற அமைப்பின் ஊடாகச் செய்து வருகிறார் நடேசன். இந்தப் பணியில் அவர் புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும் பிற நண்பர்களையும் இணைத்துள்ளார்.நடேசனுடன் நடத்தப்பட்ட நேர்காணலின் ஒரு பகுதி இங்கே தரப்படுகிறது. மற்றைய பகுதி அடுத்த இதழில் வெளியாகும்.

சந்திப்பும் பதிவும்- கருணாகரன்

—————————————————————————————————————————————————–

 

உங்களுக்கு இலக்கிய ஆர்வம், எழுத்து மீதான ஈடுபாடு எப்படி ஏற்பட்டது?

எனது ஊரான எழுவைதீவில் எங்கள் வீட்டுக்கு மாத்திரம் வீரகேசரியும் கல்கியும் வரவழைக்கப்படும். எனக்கு தமிழ் படிக்கத் தெரிந்த காலத்தில் இருந்து பார்வை மங்கிய எனது பாட்டனாருக்கு வீரகேசரிச் செய்திகளையும் கல்கியில் வரும் தொடர்கதைகளையும் சத்தமாக வாசிப்பேன். இதற்காக தலைமை ஆசிரியாராக இருந்து இளைப்பாறிய எனது பாட்டன் காசு தருவார். இந்தக் காலம் எட்டு வயதிற்கும் பத்து வயதிற்கும் இடைப்பட்டகாலம். எனது அம்மாவும் கல்கியின் தீவிர வாசகி. எனது தம்பிக்கு சபேசன் என பேர் வைத்த போது அது அக்காலத்தில் வந்த கல்கியில் வந்த ஒரு தொடர்கதையின் கதாபாத்திரத்தின் பெயர் என நினைக்கிறேன். இதன் பின்பு நயினாதீவிற்கு படிக்கச் சென்றபோது அங்கு எனது மச்சாள் ஜெயகாந்தனின் ரசிகை. இப்படியானவர்களால் விதைக்கப்பட்டு முளையாகியது எனது வாசிப்பு ஆர்வம்.

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி ‘லைபிரரி’ அதன்பின் யாழ் பொது நூல்நிலையம் என்பன வாசிப்பு ஆர்வம் செடியாக வளர உரமிட்டன. யாழ்நூல் நிலையத்தில தமிழில் உள்ள கதைப்புத்தகங்கள் பெரும்பாலானவற்றையும் அந்த நூல்நிலையம் எரியுமுன்பு வாசித்து முடித்துவிட்டு ,ஆங்கிலத்தில்  வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் அந்த துன்பகரமான நிகழ்சி நடந்தது.

 

நான் விளையாட்டுகளில் பங்கு பற்றாத ஒரு நோஞ்சனான உடம்பை கொண்டு இருந்ததால் வாசிப்பு எனது முக்கிய பொழுதுபோக்கு.  அதன் பின்பு, இரண்டாவதாக சினிமா வந்து சேர்ந்தது. சிறுவயதில் நடந்தபடி வாசிக்கும் பழக்கம் கொண்டவன் நான். இரவு தொடங்கி தூங்காமல் விடியும்வரை படித்த நாட்களும் உண்டு. நான் வாசிக்காத காலம் பேராதனையில் மிருகவைத்தியம் படித்தகாலம் மட்டுமே. இலக்கிய ஆர்வம் என்று இதைப் புதுப்பேரால் அழைத்தாலும் என்னைப் பொறுத்தவரையில் மனமகிழ்வை தந்த விடயம் இந்த வாசிப்பு. அத்துடன் இந்த வாசிப்பால் எனக்கு பிடித்தமான கற்பனை உலகத்தை சிறுவயதில் இருந்தே என்னால் சிருஸ்டிக்க முடிந்தது. இந்தக் கற்பனை உலகம் சிறுவயதிலே எனக்கு பித்தியேகமானது. கண்டிப்பாகவும் முரட்டுத்தனமாக நடந்துகொள்ளும் தந்தையோ மற்ற நண்பர்களோ ஊடுருவ முடியாத உலகம். சிறுவயதில் கதைப்பாத்திரங்கள் மட்டும் இருந்தகாலம் போய் பின் பாலியல் பருவத்தில் அழகிய பெண்கள் நிரம்பி சிறகடிக்கும் உலகமாக மாறியது. இந்த கற்பனை உலகத்தை மேன்மைபடுத்தி  செதுக்குவதற்கு எனது வாசிப்பு உதவியது.

 

நீங்கள் எழுதத் தொடங்கிய சூழல், எழுதவேண்டிய சந்தர்ப்பம் என்ன? அல்லது எவ்வாறிருந்தது?

எந்தக்காலத்திலும் எழுதவேண்டும் என்ற ஆசை இருந்ததில்லை. எழுத்தை ஒரு சுமையாகக் கூட நினைத்தேன். யாழ் இந்துக்கல்லூரியில் படிக்கும்போது ஹொஸ்டலில் இருந்து கடிதம் எழுதுவதில்லை. ஆனால் தபால் அதிபராகிய அம்மா ஒரு தபால் அட்டையில் ‘நலமாக வந்து சேர்ந்தேன்’ என எழுதி விலாசம் இட்டுத் தரும் போது, அதை இந்துக்கல்லூரி உள்ளே உள்ள தபால்பெட்டியில் போடுவதுதான் எனது வேலை. அப்படிக் கடிதம் எழுதுவதை சுமையாக நினைத்தேன். பின்பு எனது காதலிக்குக் கடிதம் எழுதினேன். இதற்கப்பால் எனக்கு எழுத விருப்பமில்லை. எனது வேலையும் மிகக் குறைந்த அளவில்தான் எழுதவேண்டியிருந்தது. மிருக வைத்தியம் உடலும் மூளையும் சம்பந்தப்பட்டது.பிற்காலத்தில் எழுத முயலாததற்கு வேறு ஒரு காரணமும் உண்டு. விஞ்ஞானம் படித்து நல்ல தமிழ் எழுதும் ஆற்றலை இழந்தேன்.  தமிழ்மொழியில் விஞ்ஞானம் படித்ததால் நல்ல ஆங்கில அறிவைப்பெறவும் தவறினேன். இதனால் இரண்டு மொழிகளும் எனக்கு அன்னிய மொழியாகி  குறைவான உபயோகத்திற்கு மட்டும் பாவிக்கப்பட்டது. இது எமது காலத்திலிருந்த பலருக்கு உரித்தான பிரச்சினை.இந்தியாவில் இருந்து  அவுஸ்திரேலியாவுக்கு வந்தபோது விடுதலைப்புலி எதிர்ப்பாளராக வந்து சேர்ந்தேன்.  இங்கு வந்ததும் மெல்பேர்னில் நண்பர் முருகபூபதியும் மற்றவர்களும் ‘மக்கள் குரல்’ என்ற அரசியல் கையெழுத்துப் பத்திரிகையை  நடத்தினார்கள். ஆரம்பத்தில் நான் இதில் பங்கு பற்றினாலும் படிப்பதற்காக சிட்னிக்கு சென்றுவிட்டதால் அங்கிருந்து மலையகத்தமிழ் பற்றியதும் இந்திய அரசின் தன்மை பற்றியதுமாக இரண்டு கட்டுரைகளை  ஆங்கிலத்தில் எழுதினேன். இவையே பத்திரிகையில் வெளிவந்த எனது முதல் எழுத்துகள்.

 

நீங்கள் எழுத்தை ஒரு ஆயுதமாக, உங்கள் செயற்பாடுகளுக்கும் எண்ணங்களுக்குமான ஒரு கருவியாக பாவிக்க வேண்டியிருந்ததாக வேறு இடங்களில் சொல்லியிருக்கிறீர்கள். இதைப்பற்றிச் சற்று விளக்கமாகக் கூறுங்கள்.

‘மக்கள் குரல்’ என்ற அந்த பத்திரிகையை எனது நண்பர்கள் சேர்ந்து நடத்தினார்கள். அப்படி நடத்தியவர்களுக்கிடையே ஏற்பட்ட ஒற்றுமையின்மையால் அது நின்று போனது. நான் மீண்டும் மெல்பேனுக்கு வேலையை எடுத்துக் கொண்டு வந்தபோது இங்கு பத்திரிகை என்ற  ஊடகம் தமிழில் இல்லை. ஆனால் பல தமிழ் வானெலிகள் இயங்கின. அவற்றை   விடுதலைப்புலி ஆதரவாளர்கள் நடத்தினார்கள். அதிலும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் உதவிப்பணத்தில் நடத்தப்படும் வானொலிகளை   விடுதலைப்புலி பிரசார ஊடகங்களாக மாற்றி முழு சமூகத்தின் குரலாக ஒலித்தார்கள். முக்கியமாக அரசாங்கத்தின் வானொலியான விசேச ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் திரு. ஜோய் மகேஸ் என்பவர் செய்யும் போது மாற்றுக் கருத்துகள், மற்றவர் நிகழ்சிகள்  முற்றாக புறக்கணிக்கப்பட்டது. ஆக முடிந்தால் எங்களுக்கு இடையே  தொலைபேசியில் மட்டும் பேசலாம், கருத்துகள் பரிமாறலாம் என்ற நிலையை எங்கள் மேல் திணித்தார்கள். அவைகள் மகிழ்ச்சியைக் கொடுக்காத போதும் பொறுத்துக்  கொள்ளக் கூடியவையாக இருந்தது.
இங்கு வந்த அகதிகளுக்கு குரல் கொடுக்க இலங்கைத் தமிழ் அகதிகள் கழகம் என ஒன்றை தொடக்கியதில் எனது பங்கு இருந்தது.   நாலு வருடங்கள் சிட்னி அடிலயிட், வாணம்பூல் என படிப்பு, தொழில் நிமித்தம் சுற்றிவிட்டு மீண்டும் மெல்பேன் வந்துபோது அந்த அகதிகள் அமைப்போடு சேரந்தியங்கினேன்.  கமிட்டி உறுப்பினர் ,செயலாளர், உபதலைவர் என  ஐந்து வருடங்கள்  இயங்கி விட்டு பின்பு சொந்தத் தொழில் தொடங்க விரும்பியதால் விலகி இருந்தேன்.இதன்பின் இரண்டு வருடத்தில் அதன்தலைவாக இருந்தவர் தான் விலகுவதாக கூறி அதை பொறுப்பேற்று நடத்தும்படி என்னை அழைத்தபோது மீண்டும் சேர்ந்தியங்க நினைத்தபோது விடுதலைப்புலிகளின்  பொறுப்பாளரான தில்லை ஜெயக்குமார் பலரைச் சேர்த்துக்கொண்டு அந்தத் தலைமை பொறுப்பில் இருந்து என்னை வெளியேற்றினார். இதற்குப் பல விடயங்கள் அவர்கள் செய்தார்கள். ஆனால் அது இப்பொழுது தேவையில்லை. மொத்தத்தில் அதுவரையும் நான் அவர்களுக்கு அல்லது அவர்கள் சார்ந்த நோக்கத்திற்கு ஆதரவு கொடுக்கவில்லை என்பதைத் தவிர பொது இடத்தில் எனது  கருத்துகளை வைத்தோ சங்கம் நடத்தியோ எழுதியோ முரண்பாடகவே இருக்கவில்லை.

எனது மனதில் விடுதலைப்புலிகளின் நடத்தைமேல் எதிர்ப்பு இருந்தது. அந்த எதிர்ப்பு இந்தியாவில் அவர்களைப் பார்த்து பழகியதாலும் நேரடியாக முரண்பட்டதாலும் உருவாகியது. மெல்பேனில் கூடிய பட்சம் சில நண்பர்களிடத்தில் விடுதலைப்புலிளைப்பற்றி விமர்சித்திருப்பேன். ஆனால் இப்படியான சிறிய  எதிர்ப்பைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாதவர்களாக இந்த அவுஸ்திரேலிய புலி ஆதரவாளர்கள் எனது சிந்தனைக்காக (எனது செயலுக்காக அல்ல) என்னைப் பழிவாங்க அந்த அகதிகள் கழகத்தில் இருந்து என்னைத் தூக்கி வீசினார்கள். இந்த நிலை படித்தவர்கள் மட்டும் குடிபெயர்ந்த  அவுஸ்திரேலியாவில் நடந்தது என்றால் உலகின் மற்ற பகுதியை எண்ணிப்பார்க்க முடியுமா?  இதில் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் பலர், வைத்தியர்கள் கணக்காளர் பொறியியலாளர் என பல படிப்புகள் படித்தவர்கள்.  மட்டுமல்ல, அந்த இயக்கத்தின் பிரதிநிதியாக இதை நடத்துபவர் இங்கிலாந்தில் படித்தவர்.
இதைப் பற்றிச் சிந்தித்த போது புலம் பெயர்ந்த தமிழ்ச்சமூகம் ஊனம் உள்ள வாமனர்களால் நிறைந்திருப்பது புரிந்தது. இந்த வாமனர்கள் மற்றவர்களையும் தங்களது உயரத்திற்கு வெட்டுவதில் தங்களது சகல சக்தியையும் பிரயோகிக்கத்  தயங்கமாட்டார்கள் என்பதும் புரிந்தது. ஐரோப்பா மற்றும் கனடா போல் பெரிய வன்முறைகள் கொலைகள் நடக்காத காரணம் இவர்களுக்கு விருப்பம் இல்லை என்பதல்ல. கடல் சூழ்ந்த கண்டமாக இருப்பதால் தப்பி போகமுடியாது என்பதே முக்கிய காரணம். வன்முறையைத் தூண்டுவதற்குப் பலதடவை பலர் ‘இன்பத் தமிழ்’ ரேடியோவை(யாரும் எதுவும் பேசுவதால் அதை பொதுக்கழிப்பறை எனக்கூறுவோம்) என்ற ஊடகத்தை பிற்காலத்தில் பயன்படுத்தினார்கள்.

இலங்கையில் உள்ள தமிழ்ச் சமூகம் மட்டுமல்ல புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகமும் சரியான வழியில் செல்லவில்லை எனத் தெரிந்தபின் அதை வெளிப்படுத்துவது எமது தார்மீக கடமை எனப் பலரும் உணர்ந்தோம். எழுத்தை விட சக்திவாய்ந்த ஆயுதம் உலகில் இல்லை என்பது எங்களுக்குத் தெரிந்தது.  இப்படிப்பட்ட இருபது பேர் ,பல மாதங்கள் ஆலோசித்து  இருமொழி பத்திரிகையைத் தொடங்கி மாதமொருமுறை வெளிவிடுவோம் என முடிவு செய்தபோது அதை நடத்தும் நிர்வாகப் பொறுப்பு என்னிடம் வந்தது. ஆரம்பத்தில் இரண்டு மொழிகளிலும் தேர்ந்த மாவை நித்தியானந்தன் அதன் ஆசிரியர் என்று இயங்கிய காலத்தில் நான்; ஒரு பரிணாமம் சம்பந்தமான  கட்டுரையை எழுதிக் கொடுத்தேன். அப்போது அவர் அதை கிழித்து எறிந்துவிட்டார்.  மிருக வைத்திய அனுபத்தை மட்டும் கொண்ட கதையை எழுதிக் கொடுக்கும்போது நித்தியானந்தன் அதை முருகபூபதியிடம் கொடுத்து திருப்பி எழுதும்படி கூறினார். அதன் பிரகாரம் ஆரம்பகால கதைகள் பல எழுவாய் பயனிலை போன்றவற்றை எல்லாம் திருத்தி முருகபூபதியால் எழுதப்பட்டது. இந்தக் காலத்தில்; ‘உதயத்தின்’ நிர்வாகி என்றதால் பல எழுதக்கூடியவர்களது நட்புக் கிடைத்தது. சரியாக மூன்றுவருடங்களில் மாவை நித்தியானந்தன் முற்றாக உதயத்தை விட்டுவிலக ஆசியர் பொறுப்பு முக்கியமாக ஆங்கிலப்பகுதியை மேற்பார்வை செய்வது எனது பொறுப்பாக இருந்தது. அதேவேளையில் முருகபூபதி இலக்கியப் பகுதிகளை மட்டும் பார்ப்பதாகச் சொன்னதால் அரசியல் சார்ந்த பகுதிகள் எனக்கு வந்து சேர்ந்தது.

 

ஆரம்பத்தில் மிருகவைத்திய கதைகளும் பின்பு அரசியல் கட்டுரை,  கதை என்பன எழுதத்தொடங்கினேன். எனது அரசியல் கட்டுரைகள் நேரடியானதாகவும் பூடகத்தன்மையற்றும் சாதாரணர்களுக்கும் விளங்கிவிடும். இதனால் ஏற்பட்ட எதிர்ப்புகள் என்னை மேலும் ஊக்கமூட்டி எழுதவைத்தது.எதிர்ப்பைப் போன்ற ஊக்கச் சக்தி உலகத்திலில்லை. ஒருவனில் இருக்கும் சக்தியை வெளிப்பட்டு வரும் அதே நேரத்தில் அவனே அறியாத ஆற்றலை மேலும் வெளிக்கொணரும்.  குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவுக்கு மொழி அறிவற்ற ஒருவனை எழுத்தாளனக்கியது இவர்கள் பெருமை.

நான் நினைக்கிறேன் இவர்களால் தமிழ்சமூகத்திற்கு ஏதாவது நன்மை உருவாகினது என கருதினால் இப்படி ஒரு சிலதான் என கணக்குப் பார்க்கலாம்.  இலங்கையில் தமிழ்த்தேசியம் பல நல்ல இலக்கியகாரரின் உயிரை காவு கொண்டது மட்டுமல்ல சிந்தனையை இடுக்கியடித்து மலட்டுத்தன்மையை உருவாக்கியதோடு ஒப்பிட்டால் நன்மைகளை பொருட்படுத்த முடியாது. ஆனால் என்னைப்பொறுத்தவரை இங்குள்ள விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களே எனது பெற்றோர்கள் போல் எழுத்தறிவித்தவர்கள்,
இவர்களைப் பொறுத்தவரை அது நன்மையில்லை. இப்படித்தான் அவர்கள் பிடித்த பல பிள்ளையார்கள் குரங்காக மாறியது. மற்றைய பல எழுத்தாளர்கள் பத்திரிகைக்கு எழுதுவார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை  நான் நடத்தும் பத்திரிகைக்கு எழுதவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன்.

 

அவுஸ்ரேலியாவில் உதயத்தின் ஆரம்பம், அதனோடு இணைந்து செயற்பட்டவர்கள், அதை நீங்கள் வெளியிட்ட அனுபவம், சவால்கள் எல்லாம் எப்படி?

ஆரம்பத்தில் இந்தச் சுமையைத் தூக்கப் பலர் வந்தார்கள். இவர்களிற் பெரும்பாலனவர்கள் இடதுசாரிப் போக்கையும் விடுதலைப்புலிகள் சாராத இயக்கத்தை ஆதரிப்பவர்களாகவும் இருந்தர்கள். மெல்பேன் மட்டுமல்ல சிட்னி, பேர்த், கான்பெரா என்று இருந்தார்கள். இவர்களில் முருகபூபதி, மாவை நித்தியனந்தன், சிவநாதன், ரவீந்திரன், முருகையா சிட்னியில். கேதாரநாதன் பேர்த்தில் இராம்குமார் என்பவர்களோடு பெயரைச் சொல்ல விருப்பமில்லாதவர்களும் இருந்தார்கள். சிலரது உழைப்பு இராமர் அணையில் அனுமான் போலவும் மற்றவர்கள் அணிலாகவும் இருந்தார்கள். இங்கே முக்கியம் அணைகட்டி முடித்தது போல் பன்னிரண்டு வருடத்துக்கு மேலாக பத்திரிகையை நடத்தினோம்.

இதில் உள்ளவர்களோடு ஏற்பட்ட அனுபவத்தை கூறாது புற அனுபவத்தை மட்டும் கூறவிரும்புகிறேன். ஒரு பத்திரிகை நடத்துவதற்கு முதல் பிரச்சனை பணப்பிரச்சனையே. அது எங்களுக்கும் இருந்தது. 8000 – 10000 இடையான பத்திரிகையை அடித்து இலவசமாக முழு அவுஸ்திரேலிய தமிழர்களுக்கும்  கொடுப்பதற்கு மாதம் 2500 டாலர் தேவை.  போட்ட முதலே 4000 மட்டும் தான். இதன் பின் துவங்கியது நமது நண்பர்கள் பிரச்சனை. பத்திரிகைக்கு விளம்பரம் கொடுக்கும் வியாபாரிகளை பயமுறுத்துவது, அவர்கள் கடைகளில் இருந்து பத்திரிகைகளை தூக்கி எறிவது,  இவை ஒவ்வொரு மாதமும் நடந்தது. அதை நடத்தும் போது வன்னியில் இருந்து கட்டளை வந்ததாகச் சொல்லி நடத்துவார்கள். இதைச் செய்தவர்கள் சாதாரணமான படியாதவர்கள் அல்ல. இங்கிலாந்தில் பொறியில் படித்துவிட்டு பொறியலாளரக வேலை செய்த ஒருவர் சிட்னியில் செய்தார்.   இதை ஒரு அக்கவுண்டன்ட் நியாயப்படுத்துவார். விடுதலைப்புலி ஆதரவாளரான புழுக்களில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றவரிடம் கேட்டேன். ‘இதுமாதிரி உங்கள் ஆட்கள் செய்கிறார்களே சரியா?’ என்றபோது அவர் சொன்ன பதில் என்னை திடுக்கிடவைத்தது.

இப்படி எழுதினால் அப்படித்தான செய்வார்கள்’

மெல்பேன், லண்டன் அளவு விஸ்தாரமான நகரம். மற்ற மாதிரிச் சொன்னால் மத்தியில் இருந்து மூன்று திசைகளில் 35 – 40 கிலோமீட்டர் விரிந்த பிரதேசம். இந்தப் பகுதிகளில் இந்தியர்களின் கடைகள் அந்தகாலத்தில் 77 இருக்கும். பத்திரிகை தூக்கும் கள்ளர்களில் இருந்து பாதுகாக்க இந்தியர்கள், சிங்களவர்களின் கடைகளைத் தேடி நான் மட்டும் 50 கடைகளுக்கும் முருகபூபதி 25 கடைகளுக்கும் வினியோகிப்போம். இதைச் செய்ய 2 – 3 நாட்களாகும். விடுதலைப்புலிப் பொறுப்பாளரை இந்த திருட்டை நிறுத்தாவிடில் அவுஸ்திரேலியப் பாராளுமன்ற அங்கத்தவர்கள் 225 பேருக்கும் இதைக் கடித மூலம் தெருவிப்பேன் என கடித மூலம் பயமுறுத்தினேன். தனிப்பட்ட முறையில் என்மேல் அவதூறு எழுதியவர்களுக்கு வக்கில் நோட்டீஸ் அனுப்பினேன். இப்படி இயக்கம் சார்ந்தவர்கள் செய்யும் அநியாயத்தோடு மட்டுமல்ல சில தனிப்பட்டவர்களும் பத்திரிகையைத் துக்கி வீசுவார்கள்.

இதில் ஒரு சுவையான சம்பவம் நடந்தது. ‘டண்டினோங்கில் சன் அன்ட் வீனஸ்’ எனப்படும் ஒரு கடையில் பத்திரிகையை வைத்துவிட்டு எனது காரில் சிறிது நேரம் இருந்து பார்த்தேன். ஒரு அறுபது வயதான மனிதர் ஒரு பத்திரிகைய எடுத்து வெளியே கொண்டு வந்து கடையின் முன்னே உள்ள குப்பைக் கூடையில் போட்டார். அதைக் கண்டதும் நான் இறங்கி அவரிடம் நெருங்கிப் போய் ‘ஏன் ஏறிந்தீர்?’ என்றேன்;.

‘பழைய பத்திகை’ என்றார்.

நான் ‘இப்பத்திரிகையை இப்பொழுதுதான் வைத்துவிட்டு வந்தனான். என்ன பேக்கதை கதைக்கிறீர்?’ என நெருங்கியபோது மனிதர் நடுங்கிவிட்டார்.

மனைவி வந்து ‘என்ன?’ என்று கேட்போது நான் திரும்பி விட்டேன்.

மொத்தத்தில் புலிவாலைப் பிடித்திருந்த கோழைகளால் பத்துவருடங்கள் மிகவும் கஸ்டமாக இருந்தது. கடைசி இரண்டு வருடங்கள் விடுதலைப்புலிகளில் முக்கியமாக பத்திரிகை தூக்கியவர்கள் பணம் சேகரித்தது விடயத்தில் கைது செய்யப்பட்டதாலும் இலங்கையில் போர் துவங்கியதாலும் பத்திரிகை சுமுகமாகவும் கையை கடிக்காதும் நடந்தது. தமிழ் பத்திரிகை நடத்துவதில் இப்படி ஒரு முரண்நகை.

 

உதயத்தின் பங்கு, விளைவு, வாசகர்கள், ஆதரவாளர்கள் என்ற வகையில் ஒரு மதிப்பீட்டை இப்பொழுது செய்யும்போது உங்களுடைய உணர்வு எப்படியிருக்கிறது?

‘உதயம்’ அரசியல் பத்திரிகை மாத்திரமல்ல, இலக்கியம் மற்றும் சமூக விடயங்களைப் பேசியது. சிறுவியாபாரிகளை ஆதரித்தது. முக்கியமாக அவுஸ்திரேலியாவில் தென்னாசிய சமூகத்தின் பத்திரிகையாகவும் சமூக கண்ணாடியாகவும் இருந்தது மட்டுமல்ல.  சமூகம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றும் சிந்தித்தது.
‘உதயம்’ அவுஸ்திரேலிய மைய நீரோட்டத்திற்கும் தென்னாசிய மக்களுக்கும் ஒரு பாலமாக இருந்தது. அவுஸ்திரேலியாவின் பல முக்கிய நூல்நிலையங்களுக்கு செல்லும் போது தென்னாசிய மக்களின் பிரதிநிதியாகச்  உதயன்சென்றது. எந்த ஒரு அடக்குமுறைக்கோ அல்லது அதிகாரத்திற்கோ கட்டுப்படாமல் இருந்ததன் மூலம் பலர் தங்கள் பிரச்சனைக்கு உதவியாக உதயத்தைத் தேடினார்கள். உலகம் முழுவதும் பயங்கரவாத சூழல் இருந்த காலத்தில் மிதவாதப்பத்திரிகையாகவும் பலரால் பார்க்கப்பட்டது. சமூகத்தில் பலமுறை பலவீனமானவர்களுக்கு ஆதரவாக நின்றது. இந்தியாவில் இருந்து சிற்பாச்சாரியார்களுக்கு அவுஸ்திரேலிய வேதன வசதிகளை சிட்னி கோயிலை நடத்தியவர்கள் செய்யாத போது அதை எடுத்து விவாதித்து, அவுஸ்திரேலிய தொழிற்சங்கத்தைத் தலையிடவைத்தது. பிள்ளையார் கோவில் அர்ச்சகரான பிராமணர் ஒருவரை பொய்க் கேசில் மாட்டியபோது அவரது விடயத்தை வெளிகொண்டுவந்து கடைசியில் பலர் அவருக்கு உதவ முன்வந்தது.இலக்கியரீதியல் தமிழநாட்டு முக்கிய இலக்கிய கர்தாக்களான ஜெயமோகன், எஸ்.  ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா, பாவண்ணன் போன்றவர்களை சாதாரண தமிழர்களுக்கு பத்தி எழுத்து மூலம் அறிமுகப்படுத்தியது. 12 ஆவது வருட உதயத்தின் வெளியீட்டையிட்டு ஜெயமோகனை அவஸ்திரேலியாவுக்கு அழைத்தது. அவர் ‘புல்வெளிதேசம்’ என அவுஸ்திரேலியப் பயணத்தை எழுதியதற்கும் உதயத்திற்குப் பங்குண்டு.
தற்பொழுது  உதயம் வெளிவராது விட்டாலும் அதனது அளவு கோல் அவுஸ்திரேலியாவில் வெளிவரும் எந்த தென்னாசிய பத்திரிகையும் தொடாத நிலையே இன்னமும் உள்ளது.விடுதலைப் புலிகளின் யுத்தம் மற்றும் தமிழ் இனவாதத்திற்காக எதிராக பலகாலமாக குரல் கொடுத்தது மட்டுமல்ல அதற்கு மாற்று செயல்பாடுகளாக சிங்கள இஸ்லாமிய அறிவாளிகளை மேடையேற்றியது. டாக்டர் அமிர் அலி, லயனல் போபகே போன்றவர்களை வருடாந்த நிகழ்ச்சிகளில் பேசவைத்து இன நல்லெண்ணம், ஒற்றுமையாக வாழ்வதே சிறந்தது என செயலில் காட்டினோம்.

உதயம் பல வாசகர்களைக் கொண்டிருந்த போதும் ஆதரவாளர்களைச் சேர்க்க எத்தனிக்கவில்லை. ஊடகமும்  ஊடகவியலாளர்களும் சமூகத்திற்கு பிடிக்காவிட்டாலும் கசந்தாலும் உண்மையை சொல்வோம் என்ற கர்வத்தோடு இந்தப் பத்திரிகையை நடத்தியதால் ஆதரவாளர்களையோ அபிமானிகளையோ சேர்க்கவில்லை.உதயத்தின் மதிப்பை நான் சந்திப்பவர்களெல்லம் மீண்டும் நடத்தும்படி கேட்பதின் மூலம் புரிந்து கொள்ளமுடியும்.  நான் உட்பட சில  எழுத்தாளர்களை  உதயம் அவுஸ்திரேலியாவில் உருவாக்கியது.

என்னைப்பொறுத்தவரை இணையம் இல்லாத அல்லது குறைந்தவர்களே இணையத்தைப் பார்க்கும் வசதியுள்ள காலத்தில் முக்கியமாக இலங்கைத்தமிழர்கள் சிந்திக்க மறுத்து பயங்கரவாதத்தையும் வன்செயலையும் உணர்சிகளின் அடிப்படையில தங்களது இலட்சியத்தை பெறும் வழிமுறைகள் என நினைத்திருந்த காலத்தில் உதயம் தேர்ந்த வழிகாட்டியாக நிற்க முனைந்தது.

அவுஸ்திரேலியாவைப் பொறுத்தவரை பலவிடயத்தில் நல்ல போக்கு இருந்தது. நாங்கள் விடுதலைப்புலிகளை எதிர்த்த போதும் முற்றும் ஜனநாயகமாகவும் தனிப்பட்ட குரோத உணர்வில்லாமல் நாகரீகமாகவும் பழகினோம். தொடர்ச்சியாக பேசிப்பல விடயங்களைத் தீர்த்தோம். இப்படியான விடயங்கள் கனடாவிலோ  ஐரோப்பாவிலோ நடந்தாகத் தெரியவில்லை.

இதற்கும் ‘உதயம்’ காரணமென்பேன். வன்முறையை ஆதரித்தும் அதை புலம் பெயர்ந்த சமூகத்தில் பிரயோகிக்கவும் விரும்பிய தமிழர்களை  எழுத்தால் எதிர்த்து நின்று எம்மை மட்டுமல்ல முழு சமூகத்தையும் காப்பாற்ற முனைந்தோம். அதே நேரத்தில் தற்போது உதயத்தின் தேவை பெரிய அளவில் இல்லை என்பதால் அதை விட்டு முன்னகர்ந்தோம்.

 

பெரும்பாலானவர்கள் எதிர்த்திசையில் நிற்கும்போது நீங்கள் அதற்கு எதிரான திசையில் நின்று செயற்படுவதையிட்டு உங்களுக்கு ஏற்பட்ட மனநிலை எப்படியானது? இன்றைய மனநிலை என்ன?

இதில் இரண்டு விடயங்கள் உண்டு. நம்மை சுற்றி நடக்கும் விடயங்களை புரிந்து கொள்ளும் அறிவு மற்றது அதையிட்டு ஒரு செயல்பாட்டாளராக நின்று செய்வது.
முதலாவது எனது பேராதனை பல்கலைப்படிப்பு. பின்பு நாலுவருடம் சிங்கள மக்களுடன் வேலை செய்தது. பின்பு இந்தியாவில் சகல விடுதலை இயக்கத்தலைவர்கள், தொண்டர்கள் என பழகியது எல்லாம் என் அறிவை விருத்தி செய்ய உதவியது. என்னைவிட எமது சமூகத்தில புரிதல் உள்ளவர்கள் பலர் இருந்திருக்கிறார்கள். அவர்களுடன் நான் பழகி இருக்கிறேன். ஆனால் அவர்களில் பாதிப்பேர் ஏன் பிரச்சனை என மவுனமாக இருந்து விட்டார்கள். அடுத்த பாதிப் பேர் சுயலாபம் தேடி தங்கள் புரிதலை ஒதுக்கி வைத்துவிட்டு அநியாயத்தின் சேவகனாகி விட்டார்கள்.  மற்றச் சமுகத்தில அரசியல்வாதிகள் மட்டும்தான் சந்தர்ப்பங்களைப் பார்த்து செயல்படுவது வழக்கம். ஆனால் நமது தமிழ்ச்சமூகத்தில் புத்திஜீவிகள், எழுத்தாளர்கள், பேராசியர்கள், பத்திரிகையாளர் எல்லோரும் அரசியல்வாதிகளாகிவிட்டார்கள். இதனாலே சாதாரண மக்களுக்கு கஸ்டம் வந்தது.


யோசித்துப் பாருங்கள். சண்டியன் ஒருவனுக்கு எயிட்ஸ் நோய் வந்தது. ஆனால் வைத்தியர் அவனுக்கு பயந்து நோயை மறைத்து பொய் சொன்னால் எப்படி இருக்கும்? ஊருக்கே நோய் வந்து விடாதா?
இரண்டாவது விடயம், நான் பெரிய அளவில் செயற்பாட்டாளராக வேண்டுமென்று நினைத்தவன் அல்ல. எனது கல்வி, உத்தியோகம், சமுக அந்தஸ்த்து என்பவை மிக எளிதாகக் கிடைத்தவை. வாழ்க்கையில் ஒரு நாளாவது நான் பசியை அனுபவித்தவனல்ல. சகல விடயங்களும் அதிக கஸ்டப்படாமல் கிடைத்தது. சிறுவயதில் எங்கள் ஊரில் நாங்கள் வசதியாக இருந்ததால் பலருக்கு பல உதவிகளை செய்வது என்பது என்னோடு வந்த பழக்கம். இதனாலே இந்தியாவில் அகதிகளுக்கும் ,பின்பு அவுஸ்திரேலியவிலும் உதவுவதில் ஈடுபட்டேன். இந்தியாவில் ஐந்து இயக்கங்களையும் ஒருங்கிணத்து உருவாக்கிய அமைப்புக்கு செயலாளராக இருந்து தமிழர் நல மருத்துவ நிலயத்தை நடத்தும்போது இயக்க வன்முறைகள், குத்துவெட்டுகள், கொலைகள் என்பவற்றைப் புரிந்து கொண்டேன்.

இலங்கையில் மட்டுமல்ல, இந்திய மண்ணிலும் தமது இயக்கம், சகோதர இயக்கம் என்று  கொலைகள் நடந்தது. இப்படிப் பட்ட இயக்கத்தினர் மக்களுக்காக போராடுவார்கள் என நம்புவற்கு என்னால் முடியவில்லை. அடிப்படையில் வன்முறையாளர்களை கொண்டு எல்லா இயக்கங்களும் இருந்தன. அதே நேரத்தில் மிகச் சிறந்த சிந்தனையாளர்கள், மேன்மையான குணவான்களையும் இயக்கங்களில் சந்தித்தேன்.

மற்ற இயக்கங்கள் விடுதலைப்புலிகளால் அழிக்கப்பட்டபோது இவர்கள் ஊர் போய் சேராதவர்கள் என்பதை உணர்ந்ததாலும்  இலங்கை அரசாங்கத்தின் வன்முறையால் இவர்களை வெளிப்படையாக எதிர்க்க முடியாத பலரில் நானும் ஒருவன் ஆனேன். அவுஸ்திரேலியாவில் வந்தும் அகதிக் கழகமும் மற்றைய தாய் தந்தை இழந்த குழந்தைகளின் உதவி திட்டத்தோடும் இருந்த என்னை எதிர்ப்பு  நிலைக்கு தள்ளியது இங்குள்ள தமிழ் ஒருங்கிணைப்பு குழுவை சேர்நதவர்களே. மேலும் இவர்களோடு போராட நான் தேடிய ஆயுதம் இவர்களால் கையாளமுடியாதது. மட்டுமல்ல பாரிய வீச்சுக்கொண்டது. இந்தப் போராட்டத்தால் தனிப்பட்ட ரீதியல் பாதிப்பு அதிகம். புத்திரிகையைத் தொடங்கிய அடுத்த மாதம் எனது சொந்த ‘கிளினிக்’கையும் தொடங்கினேன். ஆனால் எனது கவனம் பத்திரிகையில் இருந்ததால் தொழில் முறையில் முன்னேற்றம் பலமடங்காக தடைப்பட்டது. இதை பணத்தில் கணக்கு பண்ணினால் பன்னிரண்டு வருடத்தில் மில்லியன் டாலருக்கு மேல் இருக்கும். பாடசாலை நண்பர்கள்  உறவினர்களோடு  பிரிவு ஏற்பட்டது. என்னை, எனது மனைவியை, எனது தொழிலை இழிவாகப் பேசுவதில் இன்னும் சிலர் இன்பமடைகிறார்கள். ஒரு வைத்தியரே சிலரிடம் மருத்துவரான எனது மனைவியிடம் வைத்தியத்திற்கு போகவேண்டாம் என கூறியதை அவர்களே வந்து கூறினார்கள். பொதுவான சமூகவிடயங்கள் பலவற்றில் புறக்கணிக்கப்படுவது ஆரம்பத்தில் கஸ்டமாக இருந்தாலும் பின்பு பழகிவிட்டது.நானும் எனது அரசியல் அறிவு என்ற கர்வத்தால் எனக்கு பாதுகாப்புப் தேடிக்கொண்டேன்.

 

பொதுவாகத் தமிழ் ஊடகங்களின் பொதுப்போக்குப் பற்றிய உங்களுடைய அவதானம்?

 

 தமிழ் ஊடகங்கள் என்று சொல்லும் போது அது பாரிய வெளி. இலங்கை வானொலியில் இருந்து தற்போதைய இணையங்கள்வரை அடங்கும். பொதுவாகப் பேசினால் தமிழ் ஊடகங்கள் இந்த நாட்டுக்கோ இந்த மண்ணில் உள்ள மக்களுக்கோ விசுவாசமாக இருந்தவர்களில்லை. பிரதேசம் மொழி என்று  வித்தியாசமாக இருந்தாலும் ஊடகத்தின் உண்மையான விசுவாசம் மக்களின் மேல் இருக்க வேண்டும். இலங்கையில் தமிழ் ஊடகங்களுக்குக் காலம் காலமாக இந்தச் சிந்தனை இருக்கவில்லை. வெவ்வேறு சக்திகளுக்கே விசுவாசமாக இருந்தார்கள். கடந்த காலங்களில் விடுதலைப்புலிகளின் தலைவரை தலையில் தூக்கி வைக்காத ஊடகம் உள்ளதா? இந்த நிலைமை இலங்கையில் சிங்கள ஆங்கில ஊடகங்களுக்கு இல்லை. இப்பொழுது வெளிநாட்டு தமிழருக்கு விசுவாசமாக இருக்க முயற்சி நடக்கிறது. இதற்கு மேல் இவ்வளவு காலத்தில் இலங்கையில் ஆளுமையான பத்திரிகை ஆசிரியர் என  பேரசிரியர் கைவாசபதிக்கு பின்பு யாராவது உருவாகியதாக தெரியவில்லை. இதைவிட முக்கிய குறைபாடு தமிழ் பேசும் மக்களை இலங்கைத் தமிழர், மலயகத்தமிழர், இஸ்லாமியர் என பிரித்து பத்திரிகையில் போடுவது. அரசியல்வாதிகள் செய்த அதே பிழையை செய்து சிறுபான்மை இனங்கள் மத்தியில் ஒருவர் மீது ஒருவரின் கசப்புணர்வை வளர்த்ததும் இந்த ஊடகங்களே.
இலங்கையில் நிலவும் பிரச்சனைகளுக்கு இந்த ஊடகங்கள் பொறுப்பு எனக் கூறவில்லை. ஆனால் அந்தப் பிரச்சனைகளில் இவர்கள் சீவிக்கிறார்கள். அரசியல்வாதிகள் தெருவில் மலங்கழித்தால் இவர்கள் அதைக்கிழறி உண்ணும் கோழிகளாக அறுபது வருடங்கள் நீவித்திருக்கிறார்கள்.  ஒரு நாட்டில் போர் மற்றும் பகைமை இருந்தால் அதைத்தூண்டுவது சரியானதா என்ற கேள்வியை இந்த ஊடகங்கள் இனியாவது கேட்க வேண்டும்.

வெளிநாட்டிலோ அல்லது இலங்கையின் ஆங்கில பத்திரிகைகளோ செய்திகளுக்கு முன்னுரிமை கொடுத்து பல பக்கங்களிலும் பிரசுரித்தபின் ஆசிரியர் கருத்துடன் முக்கியமாகச் சிலரது கருத்தை இரண்டு பக்கத்துக்கு பிரசுரிப்பார்கள். கருத்துகளை எழுதும் போது வித்தயாசமான கருத்துள்ளவர்களை அழைத்து எழுதச் சொல்வார்கள். ஆனால் தமிழில் இது இல்லை. முதல் பக்கத்திலே கருத்துகளை போடுவதும் பிறகு பல பக்கத்தில் அதேபோல ஒரேவிதமான கருத்துகளைப் போட்டு நிரப்பி அந்தகாலத்துச் ‘சுதந்திரன்’போல் இந்தக் காலத்து தினசரிகள் செயல்படும்போது மக்களுக்கு வித்தியாசமான சிந்தனை ஏற்படாது.
சிலபத்திரிகைகளில் வார இறுதியில் நாலு வெளிநாட்டவர் அரசியல் கருத்து எழுதுவார்கள். இதன்மூலம் பத்திரிகை யார் மீது விசுவாசம் காட்டுகிறது என்பது தெரியும். அரசாங்கத்தால் நடத்தப்படும் ‘லேக்கவுஸ்’ பத்திரிகைகளை முன்னுதாரணமாக கொண்டால் இதற்கு மேல் போகமுடியாது.பத்திகை சுதந்திரம் என்பது பத்திரிகையாளர் நினைத்ததை எழுதுவது மட்டும் என்பது தவறு.  பல விதமான கருத்துக்கள் சிந்தனைகள் மக்களை சென்று அடைவதும் ஊடக சுதந்திரமே. அதைத் தடைசெய்வது எப்படிச் சரியாகும்? இதற்கு மேலாக மக்கள், நாடு, உயிர் என்பன கருத்தில் கொண்டு பத்திரிகைகள் செயல்பட வேண்டும்.

மாற்று ஊடகங்கள், மாற்று எழுத்துகள், மறுகருத்தாளர்கள் தொடர்பாக?

மாற்று ஊடகங்கள் தமிழ்நாட்டில் சிறிய குழுவாகவாவது இயங்க முடியும். ஆனால் நமது சமூகத்தில் இவ்வளவு காலமும் அது கடினமானதாக இருந்தது. ஆனால் தற்போது இணையங்கள் இருப்பதால் அதற்கான வாய்ப்பு உள்ளது. இத்துடன் சமூக ஊடகங்கள் வந்ததால் முகநூல், வலைப்பூ, யூரியுபு என்பதன் மூலம் கருத்துகளை வெளி கொணர முடிகிறது. ‘டீஜிரல் ரெக்னோலஜி’ மூலம் சமூக ரேடியோக்கள் மேல் நாடுகளில் உள்ளன. இவையும் கருத்துகளை மக்கள் மத்தியில் சேர்ப்பதற்கு துணைபுரியும்.

உங்களுடைய எழுத்துகளில் பெரும்பாலும் சொந்த அனுபவங்களையும் அரசியல் வரலாற்றையும் சாராம்சப்படுத்தி எழுதும் உத்தியைக் காணலாம்.  இதை இலக்கியமாகவும் பதிவாகவும் பார்க்கக்கூடிய நிலையே தெரிகிறது. இத்தகைய ஒரு வகை அல்லது போக்கு இயல்பாகவே உருவானதா அல்லது இதை நீங்கள் தீர்மானித்தே உருவாக்கினீங்களா?

இலக்கியம் என்பது தனிமனிதனின் அனுபவவத்தை, கற்பனையை பொதுவாக்குவது தானே. எனது எழுத்து, சிந்தனை, நான் கடந்துவந்த பாதை என்பன நான் நிற்கும் தளத்தில் நிற்கும். இலங்கை அரசியல், மிருகவைத்தியம் இரண்டும் நான் அறிந்த துறைகள். இதைப்பற்றி பேச எழுத முடிகிறது. இதில் இலங்கை அரசியலில் பலதரப்பில் நிற்கும் பலபேரை சந்தித்து அவர்களுடன் பேசக்கூடிய வாய்ப்பு இந்தியாவில், இலங்கையில், அவுஸ்திரேலியாவில் கிடைத்தது. ‘உதயம்’ இதற்கு மிகவும் உதவியது. சாதாரண சிங்கள விவசாயி, இந்திய முகாம் அகதி, சிறிசபாரட்னம், பத்மநாபா, ராஜபக்ச சகோதர்கள் இதை விட அவுஸ்திரேலிய தொழிற் கட்சியில்  பதினைந்து வருடம் இருந்த பலரை சந்தித்தேன். இப்படியான சந்தர்ப்பம் எல்லோருக்கும் கிடைக்காது.

இதே போல் மிருக வைத்தியம் சாதாரணமானதல்ல. மிருகங்களுடனான மனித உறவு 15000 வருடங்களானது. மனிதர்கள் இறைவன் என்ற பொருளைத்தேடி 5000 வருடங்களே ஆகின்றன. ஆனால் தனக்கு தோழமை உதவிக்காக நாய்களை 15000 ஆண்டுகளாகத் தேடியுள்ளான்.இந்த மிருக – மனித உறவுகள் மனிதர்களின் கலாச்சாரத்தில் பின்னிப்பிணைந்தவை. அவர்களது காலச்சாரத் தன்மையை  உணராமல் நான் வைத்தியம் செய்யமுடியாது. 1980 ஆம் வருடத்தில் இருந்து இந்த மிருக வைத்திய பயணம் மிகவும் நீண்டது.  நாடுகள், பிதேசங்கள், நகரங்கள் என கடந்து வந்துள்ளேன். என்னை பதவியாவில் வசிக்கும் சிங்கள விவசாயி,  செங்கல்பட்டில் மாடு வளர்க்கும் கோனார்கள்,  தென்அவுஸ்திரேலியாவின் இறைச்சி மாடுவளர்க்கும் விவசாயி, மெல்பேனில் நாய் பூனை வைத்திருக்கும் சகலமட்டத்தவர்களுடன் எல்லாம் பேசும் போது அவர்களது நிலையைப் புரியவேண்டும்.

இலங்கையில் றாகலையில் மலைநாட்டு தொழிலாளியிடம் ஒரு கறவை மாடு அவனது சீவனத்திற்கு மட்டும் போதுமானதாக இருக்கும். அதே வேளையில் தென் அவுஸ்திரேலயாவில் ஆயிரம் மாடுகள் உள்ள பண்ணை விவசாயியையும்  பார்த்துள்ளேன். பலவகையான சமூக கலாச்சார தனிமனித உறவுகளை அறிந்து கொள்ள, புரிந்து கொள்ள இந்த வைத்தியத்துறை உதவுகிறது. நான் எழுதிய ‘வாழும்சுவடுகள்’ என்ற இரண்டு புத்தகமும் பல புத்தகமாகாத கதைகளும் நான் கண்ட தனிமனிதர்கள், தங்களது மிருகங்களுடன் வைத்துள்ள உறவுகளின் குறுக்கு வெட்டுப்பரிமாணமாகும்.

 

அரசியலிலும் மிருகவைத்தியத்திலும் நான் அறிந்தவை, புரிந்தவையை எழுதவே எனக்கு வாழ்நாள் காணாது. இவைகளுக்கு தமிழ் இலக்கியத்தில் எந்த இடம் உள்ளது என்பது எனக்குத் தெரியாது. தமிழ் இலக்கியத்திலும் ஒரு விடயத்தைச் சொல்லவேண்டும். கவிதை சார்ந்துதான் எமது ஆரம்ப இலக்கியம். அதனால்  இங்கே சொல்லப்படும் மொழிக்கு கொடுக்கப்படும் மரியாதையில் பத்திலொன்று கூட உட்பொருளுக்கு கொடுப்பதில்லை. இதனால்தான் தமிழ் இலக்கியங்கள் பல மொழிமாற்றம் செய்தால் யானை உண்ட விளாம்பழங்களாகி விடுகின்றன.

தமிழ்நாட்டில் சமூக உறவுகள் சாதி என்ற வட்டத்திற்குள்ளும் இலங்கையில் பிரதேச வட்டத்திலும் நின்று விடுவதாலும் இலக்கிய வெளிப்பாடுகள் நில அமைப்பு கலாச்சாரத்திற்கு அப்பால் போகவில்லை. அத்துடன் காதல், காமம் என்பன புனிதமாகத் தொட்டுப் பார்க்கும் தன்மைதான் இலக்கியப் பரப்பில் இன்னமும் இருக்கிறது. கலாச்சார அதிர்வுகளை உருவாக்கும் படைப்புகள் வருவதை தமிழ் சமுகம் வரவேற்காதது மடடுமல்ல அவற்றை புறக்கணித்து விடவும் முயலும்.

 

பெரும்போக்கொன்றிலிருந்து விலகியிருக்கும்போது குடும்பம், உறவினர், சூழல் என்ற வளையங்களுடனான உறவில் பாதிப்பும் தாக்கமும் ஏற்படுமே. இதை எவ்வாறு எதிர்கொண்டு வருகிறீங்கள்?

அவுஸ்திரேயாவில் ஒரு ……பயல் நடத்தும் வானெலியில் என்னையும் எனது குடும்பத்தையும் இனங்கண்டு பகிஸ்கரிக்க சொல்லி ஒரு அறிவழகன் பிரகிருதி வெள்ளிக்கிழமையும் சொல்லி வந்தான். இப்பொழுது கொஞ்சம் ஓய்ந்து விட்டார்கள். நான் இந்த நாட்டில் இவர்களிடம் வாக்கு கேட்பதில்லை.அவுஸ்திரேலியாவில் தொழில் இல்லாமல் அரசாங்க உதவிப்பணத்தில் வாழ்பவனும் மற்றவர் தயவின்றி வாழலாம். என்னிடம் வைத்தியத்திற்காக நாய், பூனையை கொண்டு வருபவர்கள் சாதாரண அவுஸ்திரேலிய மக்கள். அந்தப்பணத்தில்தான் எனது ஜீவிதம் ஓடுகிறது. இதைவிட எனது நண்பர்கள், உறவினர்கள் என்று பலரும் இருக்கிறார்கள். பொது விடயத்தில் கருத்தை வைக்கும் போது தேவையற்ற வசை மொழி… அதுவும் அடிப்படையில் அறிவோ அல்லது திறமையோ இல்லாத இரண்டும் கெட்டான்கள் கேட்கும் போது சில நேரம் கஸ்டமாக இருந்தாலும் அவர்களைப் பொருட்படுத்தாமல் இருக்கப் பழகிக் கொண்டேன்.

 

*  ‘வண்ணாத்திகுளம்’ நாவலை எழுதிய நோக்கம்?

‘வண்ணாத்திக்குளம்’ நாவல் 80 – 83 காலப்பகுதில் நடந்தவைகளையும் நினைவிலும் குறித்தும் வைத்திருந்ததைக் கொண்டு எழுதியது. இந்தப் போராட்டத்திற்கான ஆரம்பகாலம் அது. அந்தக் காலத்தில் சாதரண சிங்கள மக்களிடம் தமிழர்கள் மேல் எந்த இன வெறுப்பும் அற்ற மனநிலையை பார்த்தேன். அதே நேரத்தில் தமிழ்ப் பிரதேசங்களில் இளைஞர்கள் வன்செயலுடன் யாழ்ப்பாணம் மற்றும் தமிழ்ப் பிரதேசங்களில் இனத் துவேசத்துடன் கொலைகள் கொள்ளைகளில் ஈடுபட்டார்கள்.

அதேகாலத்தில்  சிங்கள அரசியல் தலைவர்களும் தமிழ் அரசியல்வாதிகளும் குட்டையை ஒருவருக்கொருவர்  போட்டியாக குழப்பினாலும் அதன் பிரதிபலிப்பாக பின்னால் வரும் பயங்கரமான போரை எதிர்பார்க்கவில்லை. குடித்துவிட்டு தெருவில் வாய்த்தர்க்கம் செய்யும் சாதாரண குடிகாரனின் நிலையில் இருந்தார்கள். இந்தக்காலத்தில் நடந்தது எல்லாவற்றிற்கும் சிகரமாக  83 இல் கலவர நிகழ்ச்சி. இந்தக் குடிகாரர்களிடம் இருந்த அரசியல் வன்முறைச் சண்டித்தனம் செய்த இளைஞர்கள் கைகளில் கொண்டுவந்தது. இந்த விடயங்கள் வண்ணாத்திக்குளத்தில் வந்துள்ளன.

83 கவவரத்தின் பின்பு தமிழர்கள் சிங்களவர்கள் ஒன்றாக இருப்பது என்பது வெளிநாட்டில்தான் முடியும் என்பதே எனது சிந்தனையாக இருந்தது. இதேவேளையில இரண்டு இனங்களிலும் பரஸ்பரமான நல்லுறவு வளர்வதற்கு சாத்தியம் உண்டு என்பதை உணர்த்துவதற்காக வீட்டில் பாதுகாப்பாக அடைக்கலத்தோடு துப்பாக்கியை கொடுத்தது உண்மை என்ற சம்பவத்தை எழுதினேன். இது கலவரநாட்களின் மத்தியில்  எனக்கு நடந்தது. அதே போல் வவுனியா சந்தையை  விமானப்படையினர் எரித்து மக்களை துன்புறுத்தும்போது  சிங்களப் பெண்ணான சித்திரா தமிழனை காப்பாற்றியது கற்பனையான சம்பவம். ஆனால் இதேபோல் பல சம்பவங்கள் பலருக்கு நடந்திருக்கிறது.  பேசும் மொழி மதத்துக்கு என்ற வேற்றுமையின்  வெளியே வந்து அந்த நாட்டையும் மக்களையும் நேசிக்கும் என்னால் சகவாழ்வு சாத்தியம் என்பதற்காக என்னால் முடிந்தவரை எழுதியது இந்த நாவல். இந்த நாவலை ஆங்கிலத்தில் படித்தவர்கள் பலராலும் பாராட்டைப் பெற்றது. மட்டுமல்ல ‘தெற்காசிய இலக்கியம்’ என்ற தலைப்பில் அமெரிக்காவின் பல பல்கலைக்கழகங்களில் ‘வண்ணாத்திகுளம்’ வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் இலக்கியத்தில் எனது பங்கு எவ்வளவு என்று தெரியாத போதிலும் சமூக நல்லெண்ணத்தை உருவாக்குவதில் இந்த நாவலுக்குப் பங்கு உள்ளது என்பதை எனக்கு ஆயிரம் டாலரை தந்து நூறு பத்தகங்களை வாங்கி ஒரு விடுதலைப்புலிகளின் ஆதரவுப் பெண்மணி தனது நண்பர்களுக்கும் அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும்  அனுப்பினார். வண்ணாத்திக்குளம் சிங்களத்தில் தொடர்சியாக அவுஸ்திரேலிய சிங்கள பத்திரிகையான ‘பகன’வில் வருவதுடன்  வெகுவிரைவில சிங்களத்திலும் நூல் வடிவாக வரவுள்ளது.

இன வெறுப்பாக பேசுவதோ இலக்கியம் படைப்பதோ இலகுவானது.  மனித இயற்கையானது மட்டுமல்ல மிருகங்களுக்கு கூட அடிப்படையானது இந்த விரோத உணர்வு.  என்னைப்போல் புலம் பெயர்ந்தவனால் நான் பிறந்த வளர்ந்து கல்விகற்று  மனிதனாகிய நாட்டில்; நிலவும் இனப்பகை எனது புத்தகத்தால் ஒரு சிலரையாவது மாற்றுமென்றால் அதைவிட எழுதியவனுக்கு என்ன பரிசு வேண்டி இருக்கிறது?
(தொடரும்)

 

௦௦௦௦

—————————————————————————————————————————————————

**************உங்கள் கருத்துக்களை உடனுக்குடன் பதிவிடுங்கள் (ஆசிரியர் குழு)************

—————————————————————————————————————————————————

Tags:

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment