Home » ஆசிரியர் குறிப்பு » ஆசிரியர் குறிப்பு!

 

ஆசிரியர் குறிப்பு!

 

 

 

 

 

மிகக் குறிப்பிட்ட சிறிது கால எல்லைக்குள் “எதுவரை” இணையத்தளம் உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் வாசிப்பாளர்களின் அதிக கவனத்தை பெற்றுள்ளமை குறித்த வெளிப்பாடுகள் எமக்கு மகிழ்ச்சியையும்,  தடைகளை எதிர்கொண்டு தொடர்ந்தும்  இந்த தளத்தில் இயங்குவதற்கான நம்பிக்கையையும் தந்துள்ளன.

சார்பு நிலை எடுக்காத, பல்வேறு கருத்துக்கள், போக்குகளுக்கு தளம் அமைத்து திறந்த உரையாடலுக்கும் மீள்மதிப்பீடுகளுக்குமான ஒரு சிறு வாசலைத் திறப்பதுதான் எமது நோக்கமாகும். அதன் அடிப்படையில் எமது பதிவுக்களம் அதன் உள்ளடக்கத்தையும் பரப்பையும் பேசுபொருளையும் பிரதிபலித்து நிற்பது இதற்கான சாட்சியமாகும்.

பல கருத்து நிலை கொண்டோர் ஒரு தளத்தில் எழுதுவதும் , ஒரே தளத்தில் அவற்றின் உள்ளடக்கங்களை, அவற்றுக்குள்ளிருந்து வெளிப்படும் கருத்துக்களை, அனுபவங்களை, வாசிக்கக் கூடியதாக இருப்பதும் , அவை தொடர்பான கருத்துக்களை பொதுத் தளத்தில் ஆரோக்கியமாக விவாதித்து கொள்வதுமான போக்கு நமது தமிழ் சமூக, ஊடகத் தளத்தில் ஒரு முக்கியமான மாற்றமாகவும் நிகழ்வாகவுமே மதிப்பிட வேண்டி உள்ளது.

இலங்கை தமிழ்ச் சூழல் தொடக்கம் தமிழகம், புலம்பெயர் நாடுகள் வரையான படைப்பாளிகள், கருத்தாளர்கள், எழுத்தாளர்கள், வாசிப்பாளர்கள் என்கிற விரிந்த பார்வைக்கும் உரையாடலுக்குமான சாத்திய வெளி சிறிதளவாவது திறந்து வைக்கப்பட்டுள்ளமை, ஓரளவு நம்பிக்கையான மாற்றங்கள் சமூக கருத்துத்தளத்தில் தெரியத் தொடங்கியுள்ளதனை அடையாளம் காணக் கூடியதாக இருக்கிறது.

குழுவாதமும் ,அவதூறும் ,பிற கருத்துக்களை உதாசீனப்படுத்தி, அனைத்தையும் குறிசுடும் பண்பும் பழக்கமும், ஜனநாயகமறுப்பும் நம்முன் பெரும் சவாலாகி உருத்திரண்டு பெரும் போக்காகவும், அதிகாரமாகவும் இருப்பினும், அவற்றினை கடந்தும் ,எதிர்வினையாற்றியும் புதியதொரு கலாசார பண்பாட்டுச் சூழலுக்குள் போய்ச் சேர்ந்தே ஆகவேண்டிய நிலைமையின் தீவிரம் நம்முன் உள்ளது.

“எதுவரை”யில் தமக்கு உவப்பில்லாத கருத்துக்கள் பதிவிடப்படுகிறது  ,நபர்கள் எழுதுகிறார்கள் என்பதற்காக , தமக்கு சார்பாக “எதுவரை” இல்லை என்கிற மானோபாவத்தை கடந்து , பன்முக கருத்தாடலுக்கு வாய்ப்பான போக்கிற்கும், பொது வெளிக்கும் பங்களிக்குமாறு அனைவரையும் கேட்கிறோம்.எமது தளத்திற்கு எழுதுங்கள் !, தளத்தினை படிக்கும் படிப்பாளிகள்,தமது கருத்துக்களை உடன் பதிவிடுங்கள் .!
இணையப் பதிவேற்றத்துடன் சேர்த்து, “எதுவரை” இதழை அச்சிலும் கொண்டுவரக்கூடியதான ஒரு முயற்சியை நாம் எடுத்துவருகிறோம். இதற்கு பலரின் பங்களிப்பும் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள். அனைவரின் பங்களிப்புடனேயே, சமூக மாற்றத்தைக் கோரும் இந்த விடயத்தினை சாத்தியப்படுத்த முடியும்.

ஓவ்வொரு மாதத்தின் 10ம் திகதி “எதுவரை” இணையத்தளம் பதிவேற்றப்படும். உங்கள் படைப்புகள் கருத்துக்களை ஒவ்வொரு மாதத்தின் 05ம் திகதிக்கு முன் எமக்கு கிடைப்பதற்கு வழிசெய்யுங்கள்.

– இதழுக்கான பங்களிப்பு செய்யும் அனைவருக்கும் எமது நன்றிகள் –

நட்புடன்
எம். பௌஸர்

௦௦௦

– தொடர்புகளுக்கு – eathuvarai@gmail.com , 0044   7817262980

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment