Home » இதழ் 06 » காற்றைப் போலே -மொழிபெயர்ப்பு சிறுகதை

 

காற்றைப் போலே -மொழிபெயர்ப்பு சிறுகதை

 


ஒரு நாளின் நற்தருணங்களை நான் காற்றாக மாறிய நிலையில் தான் அனுபவிக்கிறேன். என் முதுகுத்தண்டின் கீழ்ப்பக்கத்தில் வலி. அதை மட்டுப்படுத்தும் நோக்கமும் இதில் உண்டு. ஆனால் அதைவிட முக்கியம், அப்படி காற்றாக மாறிவிடுவதில் என் மனசு இளகிக்கொடுக்கிற அனுபவம். அப்போது புற விஷயங்கள் நம்மை கவலைப்படுத்தாது. நான் அப்போது அறைக்குள்ளே மிதக்கிற நிலையை அடைகிறேன். மகா சுகம் அது. விச்ராந்தி நிலை. அப்படித்தான் எனக்கு அது அமைந்திருந்தது. சூழலின் பல்வேறு இறுக்கங்களில் இருந்து விடுதலை. உடலின் அனைத்து மூலகங்கள் வரை மெல்ல பிடியுருவி தளர்த்திக் கொள்ளுதல். இந்த அடுக்கக வீடு முழுமைக்குமாக என் உடலை நீட்டிப் பரத்திக்கொள்ள என்னால் முடியும். உடம்பசதியை அல்லது எண்ணம் சார்ந்த மூளையின் அலுப்பைக் களைய எனக்கு இனியும் தூக்கம் தேவை இல்லை. ஒரு அமிழ்ந்த அமைதி நிலை அது. மயக்க நிலை. லேசாய்த் தாலாட்டி அசையும் மாயத் தொட்டிலுள் நான். என்னை நானே உயர்த்தி அந்தரத்தில் கிடத்திக் கொண்டாற் போல..

அப்படி காற்றாய் ஆகிப்போக முனைப்பும், கவனக்குவிப்பும் தேவைப்படுகிறது. படுக்கையில் மல்லாக்கப் படுத்துக்கொள்வேன். கண்ணை மூடிக்கொள்வேன். மெதுவாக என் மூளையின் மிதக்கும் மொத்த தூசித்துகள்கள் அடங்கி வண்டலாய் தரையிறங்கும். சரியான முகூர்த்தம் ஒன்றில், என் கைகால்களைத் தளர்த்தி, அதிராமல் ஆனால் துரிதமாக என் இடுப்பை மெல்ல உயர்த்திக் கொடுப்பேன். அந்த நேரத்தில் அப்படிச் செய்வது பிரயத்தனமானது தான். ஒழுங்கற்று அப்படி உடல் அச்சை முறுக்குவது மாத்திரம் போதாது. அப்படியே மெல்ல இடுப்பையும் உயர்த்தாவிட்டால் – ஒரு அசைவு மட்ட அளவில் இன்னொன்று உயரவாக்கில்… கதை ஆகாது. அதைச் சரியாய்ச் செய்ய முடிகிறபோது… கண்சிமிட்டும் நேரம் நான் மெல்ல காற்றிலேறி மிதக்கிறாப் போல… அடுத்தடுத்த விநாடிகளில் என் உடம்பின் அத்தனைப் பொருட்களும் அந்த மொத்த அறையில் மெல்ல சிதறிப் பரவுகின்றன. நான் இஷ்டப்படி ஆசுவாசமாய் சுதந்திரமாய் அறைக்குள் அறையின் நீளஅகலஉயர பரிமாணத்துக்குள் அலைய முடிகிறேது.

திரும்ப நான் இறுகும்போது, அதாவது என் பழைய நிலையை நான் எட்டும்போது, என் புட்டப்பகுதியை எதிர்திசையில் மெல்ல உருட்டிக்கொடுப்பேன். ஒரு கவிகிற மனோபாவத்தை எட்டும் முயற்சி இது. என் மொத்த உடம்பும் உள்ளே அமிழ்கிறாப் போல, நான் ஏந்திக்கொள்கிறாப் போல ஒரு பாவனை. நான் காற்றாகிப் போனபின் என் பின்முதுகு, புட்டங்கள் எங்கே என்று அடையாளம் சொல்ல இயலாது தான். அந்த மொத்த அறையுமே என் முதுகாகத் தான் உணர முடியும். என்றாலும் எப்படியோ என் சிறுமூளை, இப்படியே அதுவும் கரைந்து கலைந்து கிடந்தாலும், அது உடலின் அவயவமாகவே செயல்படுகிறது எப்படியோ, என் முதுகை அது அடையாளஞ் சொல்லிவிடுகிறது. இந்த ஆவியாகும் அனுபவம் சித்திக்காதவர்களிடம் நான் இதை சரியாக விவரிக்க இயலவில்லை. என்னிடம் வார்த்தைகள் இல்லை.
இது முக்கியம். நான் காற்றாதலுக்கு முன் அந்த வீட்டின் மொத்தக் கதவுகளும் ஜன்னல்களுமே இறுக்க அடைபட்டிருக்க வேண்டும். அதை உறுதிசெய்தபின்தான் நான் காற்றாய் மிதக்க முயற்சியெடுக்க வேண்டும். தவறிப்போய் அறைக்காற்று வெளிக்காற்றோடு கலக்க நேர்ந்தால் என் மொத்த உடம்புமே மெல்ல வீட்டுக்கு வெளியே கசிய ஆரம்பித்து விடும். மொத்த அண்ட பிரபஞ்சப் பரப்புக்கு நான் வெளியேறி விடுவதானால், அது என் சாவுக்கான வழியை நானே தேடிப் போகிறது தவிர வேறொன்றுமில்லை. ஆக இந்த விவகாரத்தில் நான் கவனப்பட்டாக வேண்டும்.

என்னைத் தேடி என் காதலி வருவாள். அவளிடம் வீட்டின் இன்னொரு சாவி இருக்கிறது. வந்தால் அவள் ஒரேசமயம் உள் கதவையும் வாசல் வெளிக்கதவையும் திறந்து வைத்துக்கொள்ளுதல் கூடாது. வார இறுதியில் அவள் வந்து சமைத்து அறையை சுத்தம் செய்துவிட்டுப் போகிறாள். நான் ஒரு சோம்பேறி. காற்றாய்க் கிடக்கையில் எனக்கு உணவு எதுவும் வேண்டாம் தான். என்றாலும் அவள் என்னை அப்படியே ஆனந்தநிலையில் ரொம்ப நேரம் காற்றாய்க் கிடக்க விடமாட்டாள். அதை அவள் நேரடியாகச் சொல்லவில்லை மாட்டாள். திரும்பவும் நீங்க வாயுவா ஆயிட்டீங்க… என கிண்டல் போல் பேசுவாள். ஆனால் அவள் தன் எதிர்ப்பை எதிர்ப்பில்லாமல் சொல்கிறாள்… என்பது தவிர இது வேறென்ன?

காற்றான என் நிலை கலகலப்பாக என்னுடன் அவள் உரையாட உவப்பாக இல்லை. என் குரலை, அல்லது குரல் போன்ற ஒன்றை நான் எங்கிருந்து அனுப்புகிறேன் என கிரகிப்பது அவளுக்கு சிரமமாய் இருந்தது. அறையின் முழுவதிலும் இருந்து அது அவளைக் கவிந்து கொண்டது. வார்த்தைகள் ஒரேசீராய் அவள் காதுகளை எட்டாமல் தூரத்திலும் அருகாமையிலுமாய் தெளிவற்ற சப்தக் குழப்பம். அதேபோல எனக்கும் தான். அவள் பேசினாளானால் அந்த ஒலிகளை நான் இந்த அறைமுழுவதிலும் இருந்தே திரட்டிச் சேர்த்துப் புரிந்து கொள்ள வேண்டியிருந்தது. காரணம் நானே அறைமுழுசும் ஒனமாய்ப் பரந்து கிடந்தேன். இப்படிப் பேசிக்கொள்வது அவளுக்குப் பேசினாப்போலவே இல்லை. எனக்கும் அவள் சிரமம் புரிகிறது.
மட்டுமல்ல. நான் காற்றாய் நிரம்புகையில் அந்த அறை வழக்கத்தை விட இன்னும் குளுமை தட்டி, அந்தக் காற்றுமண்டலம் இன்னும் அடர்ந்திருப்பதை அவளால் உணர முடிந்தது. இரத்தம் சுண்டிய யாருமே ரொம்ப நேரம் அங்கே தாக்குப்பிடிக்க முடியாது… என்று அவள் சொல்வது சரிதான். எல்லாம் சொன்னாலும், நான் காற்றாவதை அவள் தடுக்க முயலவில்லை. பல விதங்களில் எதிர்ப்பு காட்டத்தான் செய்தாள். ஆனால் என் பிடிவாத குணத்தை அவள் மன்னிக்கவும் செய்தாள், என்றுதான் சொல்வேன்.

 

 

ஒரு தினம். காற்று நிலையில் இருந்து திரும்ப என் உடலுக்குத் திரும்பும் என் முயற்சி பலிதமாகவில்லை. உடனே பதட்டமோ பரிதவிப்போ காட்டவில்லை நான். முதல் முயற்சியில் உடல் திரும்புவது பலனளிக்காமல் போனால் நான் ஓரிரு முறை ஆழ்ந்து மூச்சிழுப்பேன். (இதையும் விளக்குதல் கடினம்.) அதன்பிறகு இடுப்பை லேசாய் அசைத்துக்கொடுப்பேன். ஆனால் அன்றைக்கு இந்த யுக்தியும் ஒத்துவரவில்லை. ரெண்டுநாள் எனக்கே சிறு சளித்தொந்தரவு இருந்தது. அத்தனை சுரத்தாக இல்லை என் உடம்பு. அதுவே இப்படி நான் திண்டாட காரணமாக இருக்கலாம். ஆனால் அடுத்த நாள், அதற்கடுத்த நாள் கூட நான் திரும்ப உடல்வடிவம் பெற இயலாமல் போனது.
ம். அதைப்பற்றி அலட்டிக்க ஒண்ணுமில்லை. எப்பிடியும் திரும்ப பூதவுடல் வடிவத்துக்கு வந்துறலாம்… வராட்டியும் என்ன? அதில் எனக்கு கஷ்டம் ஒண்ணுங் கிடையாது. இவள் வந்தாள். என் காதலி. ஏய் நான் இன்னுங் கொஞ்சகாலம் இப்பிடியே காற்றாய் இருக்கப் போகிறேன்… என்றேன். அவள் என்னைப்பார்த்த பார்வை. எனக்கு என் பிடிவாதக் கிறுகிறுப்பு.

இப்படியாய் காற்றாகவே முதல் சில வாரங்கள் அறபுதமாய், இனிமையாய்க் கழிந்தோடின. வீடு முழுவதும் மனம்போல் வளையவந்தேன். திரைச்சீலைகளோடு நானும் மேல்கம்பியில் முறுக்கிக் கிடந்தேன். புத்தக அடுக்குகளின் இடுக்குகளில் புகுந்து புறப்பட்டேன். பிறகு அந்த மொத்த வீட்டிலுமாக விரவிப் பரவிக் கிடந்தேன். பெரும்பாலும் அமைதியாகவே அவை கழிந்தன. மாலை ஏற பொழுதின் இருளும் குளிரும் என்மீது கவிந்து கொண்டது. காலையில் விடியல் துவங்க என்ன ஓர் புத்துணர்ச்சி. குளிர் மெல்ல விலக கதகதப்பு வருவது, அதுவும் மோசமில்லை.

இவள் ரெண்டுநாளுக்கொருதரம் வருவது வழக்கம். எதும் விபரீதம் ஆயிறாம… அப்படி ஆனால் நஷ்டம் எனக்குத்தான், என்றாள் அவள் என்னிடம். அதெல்லாம் ஒண்ணும் ஆகாது, என்றேன் நான். ஆனால் என்ன, எனக்கு ஏதும் விபரீதம் ஆகணும்னால், அது நீ கதவைத் திறந்திட்டு வரியே, அதில் தான் இருக்கு…. என எகத்தாளமாக அவளை மறுத்துப் பேசினேன்.

என்னைப் பற்றிக் கவலைப்பட அவள் ஒருத்தி மாத்திரம் என்று இல்லை. எனக்கு ஒரு அத்தை. இதே ஊரில்தான் இருக்கிறாள். எப்பவாவது என்னை வந்து பார்த்துவிட்டுப் போவாள். அவளும் எப்படியோ சேதி கேட்டுக்கொண்டு என்னைப் பார்க்க வந்திருந்தாள். என்னால் பூட்டிக்கொள்ள முடியவில்லை. விருந்தாளிகள் வந்தால் தாங்களே கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே வரமுடிந்தது. ஆனால் என் அதிர்ஷ்டம், அத்தை வந்திருந்தபோது அன்றைக்கு மதியத்தில் இருந்து என் காதலியும் இருந்தாள்.

பொதுவாக அத்தை எதற்கெடுத்தாலும கவலைப்படுகிற வகை. இப்படி பல வாரங்களாக நான் காற்றாகவே இருந்ததில் அவளுக்கு ரொம்பக் கவலை. அறைக்குள் நுழைந்தவுடனே என்னைக் கூப்பிட முயன்றாள். அவள் கண்கள் அறையெங்கும் துழாவித் திகைத்தன. அறையெங்கும் என் இருப்பை, இருப்பின் அடையாளத்தைத் தேடினாள். கூப்பிடத் திறந்த வாயுடன் அறையெங்கும் பார்வையால் துழாவி என்னைக் கண்டுபிடிக்க, சின்னஞ் சிறு அளவேயானாலும், கிடைக்கிறதா என்று தேடினாள். நான் கொஞ்சமாவது உனக்கு உதவியாய் இருப்பேனா?… என்று கவலையுடன் கேட்டாள் அத்தை. உத்திரத்தின் ஒளிரும் விளக்கு. அதை முன்னிறுத்தி அங்கேதான் நான் இருப்பதுபோல அதைப் பார்த்தபடி அத்தை பேசினாள். என்னோட உன்னால பேச முடியுமா தெரியல்ல, இன்னாலும் உனக்கு எதும் சிரமம் இருந்தால் என்னாண்ட பகிர்ந்துக்கோ நீ. சொல்லு இவனே?
சட்டென காதலியின் பக்கம் திரும்பினாள். இருவரும் சங்கடமான புன்னகையுடன் ஒருவரை யொருவர் பார்த்துக்கொள்கிறார்கள். உத்திரத்து விளக்கொளியை அவர்கள் வெறிக்கிறார்கள். நான் பதில் சொல்லாதபட்சம் அப்படியே அவர்கள் அங்கேயே உறைந்து விடுவார்கள் போல. ஜில்லென்ற குரலில் நான் பதில் சொன்னேன்… குறிப்பா ஒண்ணும் இல்லை. என்னையிட்டு நீங்க விசாரப்பட வேண்டாம். சுவர்களில் மோதி எதிரொலித்த என் குரலை வைத்து அத்தை நான் அந்த வீட்டில் இருக்கிறதை ஊர்ஜிதம் செய்துகொண்டாள். என்றாலும் இந்த என் நிலை அவளை முன்னிலும் வெருட்டினாப் போலத்தான் இருந்தது.
அத்தை தொடர்கிறாள். ஏய், போனவாரம் நான் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பார்த்தேன்… என நிறுத்தினாள். அவள் கண்கள் இன்னும் என்னைத் தேடி அலைபாய்ந்தன. விட்டமின் அல்லது அமினோ ஆசிட் குறைபாட்டினால் நீ அவதிப்படுகிறாயா அப்பனே? நீ தனியாத்தானே இருக்கிறாய், ஒருவேளை காய்கறிச் சத்து போதிய ஊட்டத்தில் உனக்கு கிடைக்காமல்….

 

 

 

எனக்கு இது அதுமாதிரிப் பிரச்சினையாத் தெரியவில்லை…. என்று பதில் தந்தேன். ம், என்றாள் அத்தை ஒப்புக்கு. இவன் உடம்பு ஊட்டத்தை ஒழுங்கா கவனிச்சுக்கணும்… என்று அதையே திரும்பவும் என் காதலியிடம் சொல்லிக்கொண்டிருந்தாள். அவளைத் தலையாட்ட வைக்கிற பிரயத்தனம் இது. இருக்கலாம், என்கிறாப்போல ஒரு பாதி தலையாட்டலை இவள் வெளிப்படுத்தினாள். மனசின் ஓட்டங்களை விட்டு ஏதோ பேசிக்கொண்டிருப்பதாக அத்தையே நினைத்தாளோ என்னமோ, கடகடவென்று அத்தை பேச ஆரம்பித்தாள். எங்க பக்கத்து பெரிய கடையில் இருந்து உனக்கு ஒரு பரிசு வாங்கியாந்திருக்கேன் இவனே… இந்தக் கடையின் கேக்குகள் ரொம்ப மிருது, வாயில் அப்படியே கரைஞ்சிரும்னு ஊரே கொண்டாடுது. மேசையில் ஒரு கேக் துண்டை வைத்துவிட்டு அவள் அகன்றாள். இந்த என் வாயு சொரூபத்தில் என்னால் எப்படி அந்தக் கேக்கை உண்ண முடியும்? இது அவளுக்கு உறைக்கவேயில்லை!

ஒருநாள் என் காதலி குறைப்பட்டுக் கொண்டாள். என்ன இது, நாம இப்பல்லாம் ஒண்ணா வெளில சேர்ந்து போவதே கிடையாது. சாதாரண விஷயங்களானாக் கூட நாம அதை சேர்ந்து செய்யறதில் உள்ள சந்தோஷம், அதை நாம அனுபவிக்க வேணாமா?… கடை கடையா ஏறியிறங்கி துணி எடுக்கறது… தினசரி வீட்டில் புழக்கத்துக்குன்னு சூப் தட்டுகளையும், மிதியடிகளையும் பார்த்து வாங்கி வர்றது…
அவளை மறுத்துப் பேச ஒண்ணுமில்லை. நான் ஒரு யோசனை சொன்னேன். நீ வேணா சமையல் அறையில் இருந்து ஒரு பிளாஸ்க் எடுத்துக்கிட்டு வரியா, நான் அதுக்குள்ள ஒடுங்கிக்க முடியுமா பார்க்கிறேன். அதை நீ தோளில் மாட்டிக்க, நாம ஹாயா வெளில போய் வரலாம். கடைகண்ணி போகலாம். சினிமா போகலாம்… இதுல ஒரு லாபம். எங்க போனாலும் இப்ப நம்ம ரெண்டு பேருக்கும் ஒரு டிக்கெட் தான் எடுக்க வேண்டியிருக்கும். இல்லியா?
இது அவளை எவ்வளவு தூரம் திருப்திப்படுத்தியது தெரியாது. என்றாலும் இந்த மாதிரி நாங்கள் நிறையத்தரம் வெளியே போய்வந்தோம். அவள் என்னிடம் ஏதும் பேசினால், நான் பிளாஸ்க்கின் மூடியைச் சுண்டி பதில் தருவேன்.

இப்படி பயணங்களில் என்னால் வெளி உலகைப் பார்க்க முடியாமல் போகும். மூடிய பிளாஸ்கின் இருட்டு மாத்திரமே நான் பார்ப்பது. என்றாலும் தெருவில் இரைச்சல் சரசரப்புகள் பிளாஸ்கின் சுவர் வழியே என் காதுகளுக்கு எட்டின. ஓரளவு களேபரமான வகைதொகையற்ற ஒலிகள் என்றாலும் அவை என் மனதுக்கு ஒருவிதமான ஆறுதல் அளித்தன. பிளாஸ்கினுள்ளே ஒரு ஈர இறுக்கம் நிலவியது. எனக்கு நீட்டிப் பரத்திக் கிடக்க ரொம்ப வசதி. ஜில்லென்ற பிளாஸ்கின் உட்புறம் இதுவரை கிடைக்காத ஆகச் சிறந்த பாதுகாப்பை எனக்கு அளித்தாப்போல உணர்ந்தேன். வீட்டிலேயே இருந்தால் கூட நான் பிளாஸ்க்குக்குள் ஒடுங்கிக்கொள்ள விரும்பினேன். என் காதலி அதற்கு உதவினாள். உள்ள நீங்க நிசமாவே சௌகர்யமா இருக்கீங்க தானே… என அடிக்கடி அவள் கேட்டுக்கொள்வாள். ம். வசதியாத்தான் இருக்கு… என்று பட்டுக்கொள்ளாமல் பதில் சொன்னேன். நாளாக நாளாக நான் பைத்தியகாரத்தனமாய்ப் போயிட்டிருக்கேனோ என்று அவள் கவலைப்படுவதையே அந்தக் கேள்வியின் த்வனி தெரிவித்தது. எனக்கும் இதில் குற்றவுணர்வு இல்லாமல் இல்லை. அதேசமயம் அவள் அப்படிச் சொன்னது எனக்கு எரிச்சலாகத் தான் இருந்தது.

நான் இப்படி ஆகி, சரியாக ஒரு மாதம் ஆனபோது அந்த மாலையில் என் ‘தேகத்தில்’ ஒரு விநோத மாற்றம். அன்றைக்குக் காலையிலேயே ஒரு மாதிரி தலைசுற்றல் போல தடுமாற்றம் இருந்தது. மதியவாக்கில் என் தேகத்தின் ஷீணம் இன்னும் துலக்கமாய்த் தெரிந்தது எனக்கு. சூரியன் அடங்க என் புலன்கள் மேலும் ஒடுங்கிப்போனாப் போல ஒரு திணறல். என் உடம்பே துவைத்துக் காயப்போட்ட போர்வையாய் கனத்தது. கொடியில் இருந்து நழுவுகிற போர்வை. வாயு பாகமாய் இருந்த என் தேகம் தரையை நோக்கி அமிழ்ந்து விடவில்லை என்றாலும், மேலிருந்து கீழாக யாரோ என்னை அழுத்துகிறதாக ஓர் திக்குமுக்காடல்.
வழக்கத்துக்கு மாறான அமைதியில் நான். இவளுக்கு கவலையாகி விட்டது. என்னாச்சி, உடம்புக்கு ஏதாவது ஆயிட்டதா, சொல்லுங்க… என்று கேட்டாள். ம். அதாவது, பூத உடம்புன்ற விஷயமே… என்று நான் ஆரம்பித்தேன். குரலில் சிறிது வேடிக்கை. இவள் பயத்தைப் பாரேன், என்கிற கிண்டல். ஆனால் என் அப்போதைய உடல்நிலைக்கும் மனநிலைக்கும் அப்படி எள்ளி நகையாடுவது தகாது, என்கிற சுதாரிப்பு வந்தது. வாயை உடனே அடக்கிக் கொண்டேன். சிறிது மௌனம். பிறகு மெல்லச் சொன்னேன், ரொம்ப அசதியா இருக்குடி.

அவள் யோசனையில் மூழ்கியபடியே, உங்க தேகத்தில் தண்ணீர்ப்பதம் இருக்கு இல்லியா?… என்று கேட்டாள். அதெல்லாம் இருக்கு, என்றேன் நான். அவள் தொடர்ந்தாள். அப்பன்னா, இந்த சீதோஷ்ண நிலை. அதுதான் காரணமாய் இருக்கும்… அவள் குரலில் வழக்கத்துக்கு மாறான அழுத்தம். வானிலை அறிக்கை பார்த்தேன் நான். இன்னிக்கும் நாளைக்கும் இந்தக் குளிர்காலத்தின் முதல் பனி விழும்னாங்க.
ஜலதோஷம் இருக்கா என்ன, என்று எனக்குள் கேட்டுக்கொண்டேன். ம்ஹும். எனக்கு சளி போல் தொந்தரவு எதுவும் இல்லை. ஆ நான் அப்படியே உறையப் போகிறேன். என் சூட்சுமம் சொல்கிறது, ராவோடு ராவாக நான் தரைமீது ஒரு பனிக்கட்டியாக விழப் போகிறேன். இதனால் என்னாகும் எனக்கு தெரியாது. அது சாவேதானா. அல்லது பனிக்கால உறக்கம், ஹைபர்னேஷன் என்பார்களே? அந்த கும்பகர்ண உறக்க நிலையா? அல்லது என் மனம், அதற்கு முன்புபோல அதே பிரக்ஞை இருந்துவிடுமா? எது எப்படியாயினும் இந்த நிகழ்வைத் தவிர்ப்பது நல்லது…

அவளும் இப்படியே தான் நினைத்தாள். நிச்சயம் இது நல்லதுக்கில்லை என்றாள் அவள். நீங்க காற்றாகவே ரொம்ப காலம் இருந்துட்டீங்க. உங்கள் உள்ளே அது எதிர் விளைவுகளை ஏற்படுத்தியிருக்கு. இப்பவெல்லாம் சுருக்கமாகவும் சுருக் என்றும் அவள் பேசுகிறாள். என்னை அது சங்கடப்படுத்தியது. நான் சிறிது பலவீனப்பட்டிருப்பதாக அவள் உணர்ந்த விநாடியில் அவள் குரலில், செயலில் ஓர் கட்டளை, அதிகாரம் வந்திருந்தது. கொஞ்சகாலம் நான் அவளுடன் அவளது அடுக்கத்துக்கு வந்து இருக்கலாம் என்பது அவளது யோசனை. அங்கே அறையில் தெர்மோஸ்டாட் சூட்டுக்கருவி இருக்கிறது. இந்த காற்று நிலையிலும் அங்கே நீங்க இன்னும் பத்திரமா இருக்கலாம், என்றாள் அவள். கிளம்புங்க, போகலாம், என்றவள் கிடுகிடுவென்று சமையல்கூடம் போனாள். பிளாஸ்கை எடுத்துவந்தாள். என் கனமான உடலை சிரமப்பட்டு நான் அதனுள் ஒடுக்கிக் கொண்ட ஜோரில் பிளாஸ்கை இறுக மூடினாள்.

அவள் கழுத்தில் நான் ,தொங்கியபடி பயணப்பட்டோம். கிட்டத்து ரயில் நிலையத்தில் புறநகர் ரயில் ஏறினோம். அவள் புறநகரில் குடியிருந்தாள். ரயில் கதகதப்பாய்த் தான் இருந்தது. என்றாலும் பிளாஸ்கினுள் இருந்த குளிர் என்னை நடுக்கியது. அந்த உள் அமுக்கம் தாள முடியாதிருந்தது. இருந்த அயர்ச்சியும் தாண்டி இப்போது ஒரு தலைவலி உணர்வு. தும்மல் வருமாய் இருந்தது. பிளாஸ்குக்குள் இதுமாதிரி இதுவரை நான் அவஸ்தைப்பட்டதே இல்லை. அடிக்கொருதரம் அவள் பிளாஸ்கைக் கட்டிக்கொண்டாள். கவலைப்படாதீங்க… முடிந்த அளவு உள்ளே நான் வசதியாய் உணரவேண்டும் என்பது அவளது ஆசை. கைகால்களை நீட்டிக்கவும் கழுத்தை கொஞ்சம் நிமிர்த்திக் கொள்ளவும் முயற்சி செய்தேன். ரயிலில் தன்னருகே பிளாஸ்கை அவள் ஓரு இருக்கையில் வைத்திருந்தாள். நான் அசையும தோறும் பிளாஸ்க் லேசாய்க் குலுங்கி சலசலத்தது. சில சமயம் விழுகிறாப்போல சரிந்தது.

பிறகுதான் அது நடந்தது. யாரோ பிளாஸ்க் மூடியைத் திருகித் திறக்… ஓடும் ரயிலின் அடர்த்தியான காற்று பிளாஸ்குக்குள் நுழைகிறது. உடனே என் தேகம் வெளியே வந்து ரயில்பெட்டிக்குள் பரவ ஆரம்பித்தது. பிளாஸ்கின் உள் அழுத்தம் என்னை அப்படி வெளியே பிடித்துத் தள்ளினாப் போல. என் காதலி இதைக் கண்டுபிடிக்குமுன் இது நிகழ்ந்துவிட்டது. ரயிலில் தொங்கும் கைப்பிடிகளோடு நான் இங்குமங்குமாக ஆடிக்கொண்டிருந்தேன். மேலும் அது உருகி கரைய ஆரம்பித்து விடுமாய் இருந்தது. இவள் அருகே ஒரு கின்டர்கார்டன் பையன் உட்கார்ந்திருக்கிறான். ரயிலின் விளம்பரங்களை வேடிக்கை பார்த்தபடியிருந்தான் அவன். உத்திரத்திலிருந்து அவை இப்படியும் அப்படியுமாக ஆடியபடி யிருந்தன. அவன் பக்கத்தில், அவன் அம்மாவாக இருக்கலாம், என் காதலிபக்கம் திரும்பி என்னவோ மன்னிப்பு கேட்கிறாள்… இவள் அதை சட்டை பண்ணவில்லை.
அடுத்த கணம் அவள் எழுந்து நிமிர்ந்து நின்றாள். வாயை விரியத் திறந்தாள். தன் பலத்தை எல்லாம் ஒன்று திரட்டி என்னை உறிஞ்சி உள்ளிழுத்தாள். எனக்கு நினைவுதட்டு முன்னால் ஈரக் கதகதப்பான காற்றால் நான் சூழப்பட்டேன். நீள அவளது மூச்சுக்குழலுள் நான் செலுத்தப்பட்டேன்.

இப்போது நான் என் காதலியின் நுரையீரலில் வாழ்கிறேன். ரொம்ப புழுக்கமாய் ஈரமாய் இருக்கிறது உள்ளே. அவளது மூச்சுக்கு, காற்று உள் பாய்வதும் வெளியேறுவதுமாய் இருக்கிறது. இது ரொம்ப வசதியாக இருக்கிறதாய்ச் சொல்ல முடியாது. எப்பவும் அதிர்வுகளும் இரைச்சலுமான ஒரு தொழிற்சாலை அது. ஒவ்வொரு தரம் அவள் தும்மினாலும் நான் காற்றுப்பைச் சுவர்களில் முட்டி மோதுகிறேன். அதன் உட்சுவர்கள் மெலிந்தவை. ஒட்டிக்கொள்ள வழுக்குகின்றன அவை. மாதாந்திர அவள் அவஸ்தைகளில் அவளிடம் இருந்து கிளம்பும் வாடை… என்றாலும் இப்பத்திக்கு அவளை விட்டு வெளியேறும் எண்ணம் எனக்கு இல்லை.

தன் நெஞ்சைத் தேய்த்துக் கொடுக்கும்போது அவ்வப்போது அவள் என்னுடன் பேசுவாள். கொஞ்சகாலம் நீங்க அங்கியே இருங்க. இப்படியே காலகாலமாய் இருப்பதில் கூட அவளுக்கு மறுப்பு ஏதும் கிடையாது. உண்மையில் நான் அவள் காற்றுப் பைகளுக்குள் வந்த நாள் முதல் அவள் அபார உற்சாகமாய் இருக்கிறாள்.

௦௦௦௦௦௦

 

storysankar@gmail.com
Courtesy pudhupunal Oct. 2012

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment