Home » இதழ் 06 » தொடரும் ஒரு தமிழ் பலவீனம் குறித்து… யதீந்திரா

 

தொடரும் ஒரு தமிழ் பலவீனம் குறித்து… யதீந்திரா

 

 

செல்ஹெய்மின் கூற்றுக்களும் அதனையடியொற்றி மேலெழுந்திருக்கும் வாதங்களும் – சில குறிப்புக்கள்.

 

1
சில வாரங்களுக்கு முன்னர், இலங்கையின் சமாதான ஏற்பாட்டாளரும் நோர்வேயின் முன்னாள் அமைச்சருமான எரிக் செல்ஹேய்ம், யுத்தத்தின் தீர்மானகரமான இறுதிக்கட்டத்தில் தாம் மேற்கொண்ட முயற்சியொன்று குறித்து பகிரங்கமாக பேசியிருந்தார். பி.பி.சியின் தமிழ் மற்றும் சிங்கள சேவைகளுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போதே அவர் இந்த தகவல்களை தெரிவித்திருந்தார். விடுதலைப்புலிகள் அமைப்பு நிர்மூலமாகப்பட்ட பின்புலத்தில் ஆங்காங்கே கசிந்த சில தகவல்கள் இப்போது சந்தேகத்திற்கிடமற்ற வகையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. செல்ஹெய்ம் அப்படியென்ன புதிய தகவல்களை வெளிப்படுத்தியிருக்கின்றார்? – இலங்கையின் சமாதான முயற்சியில் முக்கிய பங்குவகித்த நாடுகளான அமெரிக்கா, ஐப்பான், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து 2009 ஐனவரி மாதம் ஒரு ஆலோசனையை முன்வைத்திருந்தன. ஐக்கிய நாடுகள் சபையும் இதன் பின்னனியில் இருந்தது. அன்றைய சூழலில் போரின் முடிவு இராணுவரீதியாக இலங்கை அரசுக்கு சாதகமாக இருக்கும், என்பதை பலரும் அறிந்திருந்த நிலையிலேயே மேற்படி நாடுகள் இத்தகையதொரு திட்டத்தை முன்வைத்திருந்தன. இதனடிப்படையில், சர்வதேச அமைப்பு அதாவது அமெரிக்கா இந்தியா அல்லது வேறு ஒருநாடு இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிக்கு ஒரு கப்பலை அனுப்பிவைப்பதென்றும், அதன் மூலம் போரில் எஞ்சியிருந்த பொதுமக்கள் மற்றும் விடுதலைப்புலிகள் அனைவரையும் புகைப்படத்துடன் பதிவு செய்து, கொழும்புக்கு கொண்டு சென்று பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் தவிர்ந்த அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்குவதென்றும் முடிவுசெய்யப்பட்டதாக குறிப்பிட்டிருக்கும் செல்ஹேய்ம், இது தொடர்பாக இறுதி முடிவெடுப்பதற்காக அப்போது விடுதலைப் புலிகளின் சர்வதேச செயலாராக இருந்த (கே.பி) குமரன் பத்மநாதனை பாதுகாப்பாக ஒஸ்லோவிற்கு அழைத்து வருவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் இறுதி நேரத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மேற்படி திட்டத்தை நிராகரித்துவிட்டதால் எங்களால் எதனையும் மேற்கொண்டு செய்ய முடியாமல் போய்விட்டது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் இறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள், இன்று நம்மத்தியில் உயிருடன் இருந்திருப்பர் – இதுதான் சமீபத்தில் செல்ஹெய்ம் தெரிவித்திருக்கும் கருத்துக்கள்.

 

அப்படியாயின் இறுதிக்கட்டத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதற்கு விடுதலைப்புலிகள்தான் காரணமா என்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, ஆம் என்பது போல் பதிலளித்திருக்கும் செல்ஹேய்ம் போரின் இறுதி முடிவு என்னவாக இருக்கப்போகிறது என்பதை அனைவரும் உணர்ந்திருந்த நிலையிலும், போரை ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் முடிக்காமல் கடைசிவரை போராட வேண்டுமென்று பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப்புலிகளின் தலைமை முடிவெடுத்தது ஒரு வரலாற்று தவறாகும் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார். விடுதலைப்புலிகள் அமைப்பு மக்களை பாதுகாப்பாக வெளியேற அனுமதித்திருந்தால், அதிகமான உயிரிழப்புக்களை தடுத்திருக்க முடியும் என்பது ஏலவே சிலரால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. 2007 தொடக்கம் 2009 வரையான காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் செய்தி தொடர்பாளராகவிருந்த கார்டன் வைஸ் வெளியிட்டிருக்கும் (The Cage) நூலிலும் இத்தகையதொரு கருத்தை காணலாம். ஐ.நா நிபுனர் குழு அறிக்கையிலும் விடுதலைப்புலிகள் மக்களை மனித கேடயமாக பயன்படுத்தினர் என்னும் குற்றச்சாட்டு மிகவும் தெளிவாக முன்வைக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு சர்வதேச அளவில் விடுதலைப்புலிகள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்ற ஒரு சூழலில்தான்  செல்ஹெய்மின் மேற்படி கருத்துக்கள் வெளிவந்திருக்கிறன. ஆனால் முன்னர் தமிழ் சூழலில், சர்வதேச விவகாரங்கள் தொடர்பில் எவ்வாறானதொரு மந்தமான பார்வை இருந்ததோ, அத்தகையதொரு பார்வைதான் இப்போது செல்ஹெய்மின் கருத்துக்களுக்களை அடியொன்றியும் வெளிவருகின்றது.

 

2
செல்ஹெய்மின் கருத்துக்கள் வெளிவந்ததைத் தொடர்ந்து, அதுவரை கனவுலகத்தில் சஞ்சரித்துக்கொண்டிருந்த சிலர், செல்ஹேய்மை திட்டித் தீர்க்கத் தொடங்கிவிட்டனர். செல்ஹெய்ம் எவ்வாறு இப்படிச் சொல்லலாம் என்பதே அவர்களது தடுமாற்றத்தின் அடிப்படையாக இருக்கிறது. சர்வதேசத்தை விளங்கிக் கொள்வதில் முன்னர் எத்தகையெதாரு பலவீனம் காணப்பட்டதோ, அதில் சிறிதும் முன்னேற்றமில்லாத ஒரு பார்வையே மீண்டும் வெளிப்பட்டிருக்கிறது. உண்மையில் இன்று செல்கெய்ம் குறிப்பிட்டிருக்கும் தகவல்கள் அனைத்தும், ஏலவே விடுதலைப்புலிகளின் சர்வதேச செயலராக இறுதிக்கட்டத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட (கே.பி) குமரன் பத்மநாதனால் வெளியிடப்பட்ட தகவல்களாகும். பத்மநாதன், ஆங்கில பத்திரிகையாளர் டி.பி..எஸ்.ஜெயராஜூக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போதே இதனைக் குறிப்பிட்டிருந்தார். கே.பி இத்திட்டத்தை விரிவாக குறிப்பிடாது விட்டிருந்தாலும், இது தொடர்பில் 16பக்க ஆவணமொன்றை பிரபாகரனுக்கு அனுப்பி அனுமதி கோரியதாகவும், ஆனால் பிரபாகரனோ தனது 16பக்க ஆவணத்திற்கு வெறும் மூன்று சொற்களில் ‘இதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று பதிலளித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். கே.பி அரசின் கைதியாக இருந்துகொண்டு தெரிவித்த கருத்துக்களை இலகுவாக புறம்தள்ளியவர்களுக்கு, அதனையே இப்போது, 10வருடங்களாக இலங்கையின் சமாதான ஏற்பாட்டாளர்களாக செயலாற்றியிருந்த எரிக் செல்ஹேய்ம் குறிப்பிடும்போது சகித்துக்கொள்ள முடியாமல் இருக்கிறது.

மேலும் இதிலுள்ள அவலம், நாடுகடந்த அரசின் பிரதமரான விஸ்வநாதன் ருத்திரகுமாரன் செல்ஹேய்மின் கூற்றுக்களை மறுதலித்திருப்பதாகும். உண்மையில் கே.பியால் வழங்கப்பட்ட 16பக்க அறிக்கை தொடர்பிலும், அன்றைய சூழலில் அதனை செய்வதற்கான சர்வதேச பின்னனி குறித்தும் ருத்திரகுமாரன் நன்கு அறிவார். அனைத்துக்கும்மேல் கே.பியால் பிரபாகரனுக்கு அனுப்பப்பட்ட 16பக்க அறிக்கையை எழுதியவரே ருத்திரகுமார் என்பதுதான் இதிலுள்ள சுவாரஸ்சியமான தகவல். தான் எழுதிய 16பக்க அறிக்கைக்கு பிரபாகரன் அனுப்பிய மூன்றெழுத்து பதில் பற்றி, அப்போது அமெரிக்காவில் வசித்துக் கொண்டிருந்த தனது நெருங்கிய நண்பர் ஒருவருக்கும் ருத்திரா தெளிவுபடுத்தியிருக்கிறார். ஆனால் அதே ருத்திரகுமார் – இன்று தான் நன்கு சம்மந்தப்பட்ட ஒரு விடயத்தையே மறுதலித்திருப்பதானது, தமிழர்கள் சர்வதேச சமூகத்தின் ஆதரவையும் இழந்து போவதற்கே வழிவகுத்துள்ளது. மேலும் ருத்திரகுமாரன் தமிழர்களை பொய்யர்களாகவும் சர்வதேசத்தின் முன் காட்ட முற்பட்டிருக்கின்றார். அமெரிக்காவைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் ருத்திரகுமார் கூட, சர்வதேச விவகாரங்களை வெறும் உணர்ச்சிகர விடயமாகவே அணுகியிருக்கின்றார். விடுதலைப்புலிகளின் (LTTE’s Understanding Of International Affairs Was “Close To Zero) சர்வதேச விவகாரங்கள் தொடர்பான அறிவு பூச்சியத்திற்கு நெருக்கமானதென்று ஏலவே, செல்ஹேய்ம் குறிப்பிட்டிருக்கின்ற நிலையில்தான் ருத்திரகுமாரன் இவ்வாறானதொரு மறுப்பை வெளியிட்டிருக்கின்றார்.

 

எரிக் செல்ஹேய்ம் இலங்கையின் சமாதான முன்னெடுப்புகளுக்கான ஒரு ஏற்பாட்டாளர் என்னும் வகையில் அவர் மேற்குல நலன்களை அச்சொட்டாகப் பாதுகாக்க முயலும் ஒரு ராஐதந்திரி. இதற்கு மேல், செல்ஹேய்ம் பிரபாகரன் புகழ்பாட வேண்டுமென்பதெல்லாம் சில தமிழர்களின் அறியாமையே தவிர, அது அவரது பிரச்சனையல்ல. செல்ஹெய்மைப் பொறுத்தவரையில் இலங்கையின் சமாதான முன்னெடுப்புக்கான பங்களிப்பு என்பது அவருக்கு வழங்கப்பட்ட ஒரு  (Assignment)பணி அவ்வளவுதான். இது மேற்குலக ஆசியுடன் மேற்கொள்ளப்பட்ட ((Oslo Assignment)  ஒஸ்லோ பணி. இந்த பணியில் அவர் தோற்கவுமில்லை வெல்லவுமில்லை. ஒப்பீட்டளவில் விடுதலைப்புலிகள் மீது செல்கேய்முக்கு அனுதாபமிருந்திருக்கலாம். அதற்கு செல்ஹெய்முக்கும் விடுதலைப்புலிகளின் தத்துவ ஆசிரியராக அறியப்பட்ட அன்ரன் பாலசிங்கத்திற்கும் இடையில் நிலவிய நட்பும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். சமாதான முன்னெடுப்புக்களில் நோர்வேயின் வகிபாகம் தொடர்பான (Pawns of peace)  மதிப்பீட்டறிக்கை ஒஸ்லோவில் வெளியிடப்பட்ட போது, அங்கு செல்ஹெய்ம் தெரிவித்திருந்த ஒரு விடயம் எனது ஊகத்திற்கு வலுச் சேர்க்கின்றது – பிரபாகரனுக்கு ஐனநாயக அனுகுமுறைகள் விளங்காது, அவரால் சர்வதேசத்தை விளங்கிக்கொள்ள முடியாது. அவர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் ஒரு யுத்தப் பிரபு. அவர் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வாழ்ந்த சீன யுத்தப் பிரபுக்கள் போன்றவர், தயவு செய்து அவரை விளங்கிக் கொள்ளுங்கள் – இப்படி பாலசிங்கம் தன்னிடம் பகிடியாகச் சொல்வதாக செல்ஹெய்ம் அப்போது குறிப்பிட்டிருந்தார். இந்த பின்னனியில் பார்த்தால், பாலசிங்கத்துடனான நட்பின் ஊடாக பிரபாகரன் மீது செல்ஹெய்முக்கு அனுதாபம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அந்த அனுதாபம் என்பது, பிரபாகரன் ஐனநாயக வழிக்கு வரவிரும்பின், அதற்கானதொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்னும் அளவிலானது மட்டுமே ஆகும்.

 

செல்கெய்மை பொறுத்தவரையில், சர்வாதிகாரிகள் ஆபத்தான மனிதர்கள் மேலும் பின்லேடன் போன்றவர்களுடன் கூட பேச வேண்டும், அவ்வாறானவர்களுக்கும் கூட நாம் ஒரு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டுமென்னும் கருத்தை கொண்டிருப்பவர். விடுதலைப்புலிகளின் தலைமை ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்ட நிலையில் 2009 யூன் மாதம் அவர் பி.பி.சியிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில், மேற்படி கருத்தை பதிவு செய்திருந்தார். உலகத்தால் மிகவும் ஆபத்தான பயங்கரவாதி என்று வர்ணிக்கப்பட்ட, குறிப்பாக மனிதர்களை வெடிகுண்டாக பயன்படுத்தி சாதாரண மக்களின் கொலைகளுக்கு காரணமாகவிருந்த பிரபாகரனுடன் பேச வேண்டுமென்று நீங்கள் எவ்வாறு முடிவு செய்தீர்கள்  – என்னும் கேள்விக்கு பதிலளிக்கும் போதே, செல்ஹேய்ம் இந்தக் கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார். இன்று செல்ஹேய்ம் போன்ற சமாதான ஏற்பாட்டாளர்கள் கூட பிரபாகரனின் தவறுகளை பகிரங்கமாக சுட்டிக்காட்டியிருப்பதில் இருந்து, தமிழர் தரப்பு எதனை விளங்கிக் கொள்ளப் போகிறது என்பதுதான் இந்த கட்டுரை முன்னிறுத்த விரும்பும் கேள்வி.

 

இன்று தமிழர்களுக்கு ஒரு நியாயமான தீர்வு அவசியம் என்பதில் கரிசனை கொள்ளும் தமிழ் தலைமைகள், உண்மையிலேயே அவர்களுக்கு தமிழ் மக்களது நலனில் அக்கறையிருப்பின், அவர்கள் ஒரு விடயத்தை விளங்கிக் கொள்ள வேண்டும் – பிரபாகரனும் அவரால் வழிநடத்தப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் உலகளவில் எந்தவிதமான அனுதாபமோ மரியாதையோ இல்லை என்பதுதான் அந்த விடயம். இது பிரபாகரனை கடவுள் ஸ்தானத்துக்கு உயர்த்திப் பார்ப்போருக்கு கடினமானதாக இருக்கலாம், ஆனால் இதுதான் இன்றைய யதார்த்தம். இன்றைய சூழலில் தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி சிந்திக்கும் அனைவரும் தம்மை ஒரு (De-Tiger politics)  புலிநீக்க அரசியலுக்கு உட்படுத்திக் கொள்வது காலத்தின் கட்டாயமாகும்..

 

3
இலங்கையின் சமாதான முன்னெடுப்புக்களில் பங்குகொண்ட நோர்வே என்பது வெளித்தோற்றத்தில் ஒரு நாடு போன்று காட்சியளித்திருந்தாலும், அடிப்படையில் அது மேற்குலகின் ஒரு நெகிழ்வான முகம். செல்ஹெய்ம் என்பவர் அந்த நெகிழ்வு முகத்தின் குரல் மட்டுமே. எனவே இன்று செல்ஹெய்ம் வெளிப்படுத்தியிருக்கும்  கருத்துக்கள் எவையும் அவரது தனிப்பட்ட கருத்துக்கள் அல்ல.  எனவே செல்ஹெய்மின் கருத்துக்களை உணர்ச்சி வசப்படாமல் பார்ப்போர், அதற்குள் ஒரு செய்தி பொதிந்திருப்பதை காணலாம்.
பிரபாகரனின் அரசியலை கைவிடுங்கள் என்பதுதான் அந்தச் செய்தி. ஏனெனில் நோர்வேயின் வடிவில் மேற்குலகு இலங்கையின் சமாதான முன்னெடுப்புக்களில் பங்குகொண்டமையானது, பிரபாகரனின் (அவர்களது புரிதலில்) பயங்கரவாத வழிமுறைகளுக்கு முற்றுப்புள்ளியிடுவதற்கேயன்றி பிரபாகரனை, பிரபாகரனிசத்துடன் காப்பாற்றுவதற்காக அல்ல. இங்கு முற்றுப்புள்ளியிடல் என்பது, ஒன்றில் வழிக்கு கொண்டுவருவது அல்லது இல்லாமலாக்குவது என்னும் பொருள் கொண்டதாகும். 2001ம் ஆண்டு RAND  -தேசிய பாதுகாப்பு ஆய்வு நிலையம் வெளியிட்டிருந்த அறிக்கையொன்று அமெரிக்கா விடுதலைப்புலிகள் குறித்து எவ்வாறானதொரு பார்வையைக் கொண்டிருந்தது என்பதை கோடிகாட்டியதுடன், விடுதலைப் புலிகள்; ஒரு வலுவான ஆயுத அமைப்பாக இயங்குவதை அமெரிக்கா தொடர்ந்தும் அனுமதிக்கப் போவதில்லை என்னும் செய்தியையும் தெளிவாக சுட்டிக்காட்டியிருந்தது. அந்த அறிக்கையை கூர்ந்து வாசிக்கும் ஒருவர் விடுதலைப்புலிகள் அமைப்பை பூண்டோடு அழிக்கப்படுவதற்கான புறச் சூழலை அவதானிக்கலாம் – இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்பும் லெபணானில் ஹிஸ்புல்லா அமைப்பும் (bloodies practitioner of terrorism) இரத்தக்களரியான பயங்கரவாதத்தை பயிற்சி செய்பவர்களாக இருக்கலாம் மேலும், இவ்விரு அமைப்புக்களும் கருத்தில் கொள்ள வேண்டிய Insurgent) அரசகவிழப்பு அமைப்புக்கள் என்பதை அவதானிப்பதும் இந்த அறிக்கையின் நோக்கமாகும் என்று குறிப்பிட்டிருக்கும் மேற்படி அறிக்கையானது – (Trends in Outside support for Insurgent Movements – National Security Research Davison – RAND)  விடுதலைப்புலிகள் அமைப்பு எவ்வாறு புலம்பெயர் தமிழர்களிடமிருந்து நிதியை பெறுகிறது, எவ்வாறு தங்களுக்கான ஆயுதங்களை கொள்வனவு செய்கிறது, சர்வதேச சமூகத்தின் அதரவை திரட்டும் வகையில் எவ்வாறு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றது போன்ற விடயங்கள் அனைத்தையும் விரிவாக ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கிறது.

 

அமெரிக்காவின் மீதான பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஆய்வு நிலையம் இந்த அறிக்கையை தயார் செய்திருந்தது. விடுதலைப்புலிகள் அமைப்பு என்பது உலகளாவிய ரீதியில் தீவிரவாதத்திற்கான ஒரு (Role model)  முன்மாதிரியாகவே நோக்கப்பட்டிருக்கிறது. இத்தகையதொரு பின்புலத்தில்தான் மேற்கு நோர்வேயின் ஊடாக இலங்கையின் சமாதான முன்னெடுப்புகளுக்கு உதவியது. ஏலவே அமெரிக்கா தலைமையிலான மேற்குலகால் விடுதலைப்புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யப்பட்டிருக்கின்ற புறச் சூழலை பயன்படுத்திக் கொண்டு, பிரபாகரனை ஒரு வழிக்கு கொண்டுவர முடியுமென்பதே மேற்கின் கணிப்பாக இருந்தது. எனினும் தனது இக்கட்டு நிலையை துல்லியமாக மதிப்பிட்டுக் கொண்ட பிரபாகரனோ மக்கள் பெருமளவில் இறக்கும் போது, அது சர்வதேசத்திற்கு ஒரு நெருக்கடியை கொடுக்கலாம், அதன் மூலம் தான் காப்பாற்றப்படலாம் என்று கணித்திருக்கிறார். விடுதலைப்புலிகள் மக்களை ஒரு கேடயமாக பயன்படுத்திக் கொண்டதை கருத்தில் கொண்டு சிந்தித்தால், இவ்வறானதொரு ஊகத்திற்கு வருவது தவிர்க்க முடியாத ஒன்றாகும். ஆனாலும் அது கைகூடவில்லை.  விளைவு விடுதலைப் புலிகளும் அழிந்து கூடவே மக்களும் இறக்க நேர்ந்தது.

 

 4

இதில் ஆவேசப்பட ஒன்றுமில்லை ஏனெனில் இதுதான் உலக ஒழுங்கு. இதனை பிறிதொரு வகையில் குறிப்பிடுவதானால் – பிரபாகரனை மிகவும் ஆபத்தான, மூர்க்கமான பயங்கரவாதி என்று வர்ணித்த அமெரிக்க தலைமையிலான மேற்குலகு, பிரபாகரனுக்கு ஒரு இறுதி சந்தர்ப்பத்தை வழக்கிப்பார்த்தது. சுருங்கச் சொல்வதானால், மேற்குலகம் பிரபாரனுக்கு ஐனநாயகம் தொடர்பில் ஒரு பரிட்சை வைத்துப் பார்த்தது. பரிட்சையில் பிரபாகரன் சித்தியடையவில்லை. தவிர பிரபாகரன் பரிட்சையில் தோல்வியடைவதற்கான அறிகுறிகள் தெரிந்த போது, அதனையும் மேற்கு நோர்வேயின் ஊடாக சுட்டிக்காட்டத் தவறவில்லை. லக்ஸ்மன் கதிர்காமர் விடுதலைப்புலிகளால் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நோர்வே பிரபாகரனை எச்சரிக்கும் வகையில் கடிதமொன்றை அனுப்பியிருந்தது. நோர்வேயின் வெளிவகார அமைச்சர் ஐன் பெட்டர்சனின் கையெழுத்துடன் பாலசிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட அந்தக் கடிதம், மேற்குலகின் தெளிவானதொரு செய்தியை வெளிப்படுத்தியிருந்தது. சமாதான உடன்பாடு சிக்கலானதொரு கட்டத்துக்குள் சென்றிருப்பதை சுட்டிக்காட்டிய மேற்படி கடிதம், தங்களால் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களை (If the LTTE does not take a positive step forward at this critical juncture, the international reaction could be severe – (17th August 2005) விடுதலைப்புலிகள் சாதாமாக பரிசீலித்து, முன்னோக்கி செல்வற்கான நடவடிக்கைகளை எடுக்காது விட்டால், சர்வதேசத்தின் பதில் நடவடிக்ககைள் பாரதூரமாக அமையும் – எனவே சர்வதேச சமூகம் தமிழர்களை கைவிட்டுவிட்டதே என்று கூறுவதில் உண்மையில்லை. அன்றைய சூழலில் தமிழர்களின் தலைவிதி பிரபாகரனின் நெகிழ்வான முடிவில் தங்கியிருந்தது. ஆனால் பிரபாகரனோ மேற்கின் நெகிழ்வான போக்கிற்கு இணங்கிப் போகவில்லை மாறாக, கடுமையான முடிவையே வரவழைத்தார்.

 

அன்றைய சூழலில், பிரபாகரன் இந்த பரிட்சையில் சித்தியடைவதற்கு இரண்டு வழிகள்தான் இருந்தன – ஒன்று, சர்வதேசத்துடன் (அவர்களது எதிர்பார்ப்பிற்கு ஏற்ப) ஒத்துப் போவது மற்றையது, ஒத்துப் போக மனமில்லாவிட்டால், தன்னைத்தானே மாய்த்துக் கொள்வதன் மூலம் யுத்தத்தை நிறுத்துவது. அவர் இந்த இரண்டில் எதனைச் செய்திருந்தாலும் தமிழ் மக்கள் நிட்சயம் நன்மையடைந்திருப்பர். ஏனெனில் இந்த யுத்தம் இந்தளவு தீவிரமாக முன்னெடுக்கப்பட்டதே பிரபாகரனை அழிப்பதற்காகத்தானே ஒழிய விடுதலைப்புலிகளை அழிப்பதற்காக அல்ல. மேற்படி மேற்குலக பரிட்சையின் போது, ஒரு மேற்பார்வையாளராக இருந்தவரே எரிக் செல்ஹெய்ம் ஆவார். அந்த மேற்பார்வையாளர் தனது அனுபவங்களை இப்போது சொல்ல அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். இவ்வளவுதான் விடயம். எனவே சர்வேதேச சமூகம் விடுதலைப்புலிகளுக்கு நற்சான்றிதழ் வழங்குவதற்காக வரவில்லை என்பதை விளங்கிக் கொண்டவர்களுக்கு இந்தக் கட்டுரை முன்னிறுத்தியிருக்கும் விடயங்கள் எவையுமே ஆச்சரியமானதாக இருக்காது. இலங்கைப் பணியை நிறைவு செய்து கொண்ட நோர்வே தனது அடுத்த பணியை கொலம்பியாவில் ஆரம்பித்துள்ளது. ஒரு வேளை கொலம்பியாவில் நோர்வேயின் இணக்க முயற்சிக்கு எதிர்பார்த்திருக்கும் வெற்றி கிட்டக் கூடும். ஆனால் வெற்றிகிட்டாவிட்டாலும் நிட்சயம் நோர்வே தோற்கப் போவதில்லை. சில வேளை அழிந்துபோன அமைப்புக்களின் பட்டியலில் கொலம்பிய விடுதலை இராணுவமும் சேரக் கூடும்.

௦௦௦௦

பிரத்தியேக தொடர்புகளுக்கு : jathindra76@yahoo.com

 

12 Comments

 1. vasan says:

  மிக மிக நேர்மையான முறையிலும் நடுநிலையாகவும் எழுதப்பட்டுள்ள இந்த கட்டுரை தமிழ் மக்கள் பெரும்பாண்மையினரை சென்றடைய செய்ய ஏதாவது செய்ய வேண்டும். ஓருவேளை பல இதழ்கள் வெளியிட முன் வந்தால் நல பலன் கிடைக்கும்.
  வாசன்

 2. Alavai Uma Baskaran says:

  இக்கட்டுரையானது இலங்கையில் நடைபெற்று முடிந்த விடுததலைப்போராட்டத்தில் பங்கெடுத்த தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பும் அதன் தலைமைத்துவம் பற்றியதானதாக இருக்கிறது. இக்கட்டுரையை அவ்விடுதலைப் போராட்டத்திலும், பின் தேசிய அரசியல் நீரோட்டத்திலும் இணைந்திருக்கும் அரசியல் தலைமைத்துவங்களும் படித்துக் கொள்ளுவதன் மூலம் தங்களது சுய தவறுகளை களைய முடியும். ஆகவே இக்கட்டுரையை இதுவரை படிக்காமல் இருப்பவர்களுக்கு அனுப்பி வைப்பது சிறந்தது.

 3. Thulip says:

  வார்த்தைக்கு வார்த்தை பிரபாகரன் மீதான வக்கிரத்தை கொட்டித்தீர்த்த இக்கட்டுரையில் பிரபாகரன் அழிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளின் பின்னரும் அரசியல் தீர்வுக்காக சிறிலங்கா அரசு எதுவித நடவடிக்கையும் எடுக்காத விடயத்தை பற்றி மெளனம் சாதிக்கிறது.புலிகள் தான் பயங்கரவாதிகள் அவர்களுக்கு தான் மக்கள் பற்றி எதுவித அக்கறையும் இல்லை. ஆனால் உலகின் ஜனநாயக காவலர்கள் சிறிலங்காவின் அக்கிரமங்ளை எதுவித மறுப்பும் இன்றி ஏற்றுகொள்வதையும், அதற்கு உதவி புரிவதையும் பற்றி இக்கட்டுரை வாயே திறக்கவில்லை. பிரபாகரனை அழிப்பதுதான் யுத்த்தின் இலக்கு எனபதில் தெளிவு இருந்திருந்தால் அவரிம் அழிவிற்கு பிறகு தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் தீர்க்கபட்டிருக்க வேண்டும்.

Post a Comment