Home » அ.ராமசாமி » நல்ல திரைப்படங்களைத் தெரிவு செய்யும் பாதைகள்:அ.ராமசாமி

 

நல்ல திரைப்படங்களைத் தெரிவு செய்யும் பாதைகள்:அ.ராமசாமி

 

பகுப்பாய்வை நோக்கிய ஒரு ரசிகனின் பயணம்

======================================

என் நினைவில் இருக்கும் ஆகப் பழைய படத்துக்கு வயது அரை நூற்றாண்டு ஆகப் போகிறது. கலையரசி (இயக்கம்: A.காசிலிங்கம்) திரைக்கு வந்த 1963 ஆம் ஆண்டிலேயே படத்தைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. மதுரையில் இருந்து 35 மைல் தொலைவில் இருக்கும் எழுமலை டூரிங் டாக்கீஸுக்கு ஒரு படம் வந்து சேர குறைந்தது இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஆகும். எனது ஊரிலிருந்து இரண்டு மைல் தொலைவிலிருந்த தாய்க்கிராமம் எழுமலையில், எம்.ஜி.ஆர்- பானுமதி நடித்த கலையரசியை இரண்டாம் ஆட்டமாகப் பார்த்துவிட்டு நள்ளிரவுக்குப் பின்னால் வீடு வந்து சேர்ந்த நினைவு இன்னும் பசுமையாக இருக்கிறது. அப்போது எனக்கு ஆறு அல்லது ஏழு வயதிருக்கும்.

கலையரசி என்னும் சினிமா நினைவில் இருக்கிறது என்றவுடன் அந்தப் படத்தின் கதைப்போக்கும், நிகழ்வுக் கோர்வைகளும், காமிராவில் காட்சித் துண்டுகள் பதிவு செய்யப்பெற்ற நுட்பங்களும், பதிவு செய்வதற்காக படப் பிடிப்புக் குழுவினர் செய்திருக்கக் கூடிய உழைப்பும், அதன் வழியே உருவாக்கப்பட்ட காட்சிகள் அடுக்கப்பட்ட முறையும், திரையில் விரிந்த காட்சியில் நடித்திருந்த நடிகர்களின் வெளிப்பாடும், அதன் வழி உருவாக்கப்பட்ட பாத்திரங்களின் நம்பகத் தன்மையும், நம்பகத்தன்மையை உருவாக்கும் நோக்கத்தில் காட்சிகளுக்காக அமைக்கப்பெற்ற பின்னணிக் காட்சிகளும், இவையெல்லாம் உண்டாகும்போது அலுப்புத் தோன்றி விடாமல் இருப்பதற்காகச் சேர்க்கப் பெற்ற இசைக் கோர்வைகளும், அதன் வழி உருவாக்கப்பட்ட வாழ்க்கை பற்றிய கருத்துநிலையும் என ஒரு திரைப்பட உருவாக்கத்தின் தொடர்புச் சங்கிலிகள் எல்லாம் இன்னும் தங்கி இருக்கின்றன என்று நினைத்து விட வேண்டாம். கலையரசி திரைப்படம் சார்ந்து இவற்றில் ஒன்று கூட எனக்கு நினைவில் இல்லை. நினைவில் இல்லை என்று சொல்வதைவிட இவை எவற்றையும் கவனித்து அப்போது படத்தைப் பார்த்தவன் அல்ல என்று தான் சொல்ல வேண்டும். இப்போதும் நினைவில் இருப்பதெல்லாம் கலையரசி என்ற அந்தப் படத்தின் பெயரும் அதில் நடித்த நாயக நடிகர் எம்.ஜி.ஆர். என்பதும் மட்டுமே.

 

ரசிகன் (fan) என்பவன் ஒரு நடிகனின் பெயருக்காகவும் அந்தப் பெயர் உருவாக்கும் பிம்ப அடுக்குகளுக்காகவுமே தொடர்ந்து ரசிகனாக இருக்கிறான். பெயருக்காக ஒரு நடிகரின் படத்தைப் பார்க்கச் செல்லும் ரசிகன் அந்தப்  படத்தின் வசனமோ, பாடலோ, காட்சியோ, இவைகள் இணைந்து உருவாக்கும் பிம்ப அடுக்குகளோ, அவனது வாழ்வின் பகுதியாக, நினைத்துக் கொள்ளத் தக்க ஒன்றாக ஆகும்போது அந்தப் படத்தை பிடித்த படமாகப் பட்டியலிட்டுக் கொண்டு மறக்காமல் வைத்திருக்கிறான். எம்.ஜி. ராமச்சந்திரன் நடித்த சில படங்களை அதற்கு முன்பே நான் பார்த்திருந்தாலும், கலையரசி என்ற அந்தப் படம் தான் என் நினைவில் இருக்கும் படங்களில் ஆகப் பழைய படம். கலையரசி என்ற பெயரைச் சினிமாவாக நான் நினைத்தவுடன் சட்டென்று நினைவுக்கு வருவது அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த பறக்கும் தட்டுக் காட்சிகள் மட்டுமே. அந்தக் காட்சிகள் என் நினைவை விட்டு அகலாமல் இருக்கக் காரணம் அன்று என்னைப் படம் பார்க்க அழைத்துச் சென்ற எனது பெரியம்மா மகனான அந்த அண்ணனோடு எனக்கிருந்த உறவும், கலையரசி என்ற பெயரோடு பின்னாளில் எனக்குள் நுழைந்த ஒரு பெண்ணின் முகமும் என்பது எனக்குள் இருக்கும் ரகசியம். அந்த ரகசியத்தை இப்போது சொல்லப் போகிறேன்.

 

விதிகளின்படி பார்த்தால் அந்தப் படம் பார்க்கப் போகும் போது எனக்கு அரை டிக்கெட் வாங்க வேண்டும். அரை டிக்கெட் இரண்டணா தான். (ஒரு அணா என்பது 6 பைசாக்கள்) முழு டிக்கெட் தொகையான நான்கு அணாவே என்னிடம் இருந்தது. ஆனால், அந்த அண்ணனிடம் டிக்கெட்டுக்கான நாலணா காசு இல்லை. நாங்கள் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு படம் பார்க்கப் போனோம்.  என்னிடம் இருக்கும் நாலணாவை அவரிடம் தந்து விட வேண்டும். அதற்கீடாக என்னைப் போகும் போதும், வரும் போதும் தோளில் வைத்துத் தூக்கிக் கொண்டு போய்ப் படம் காட்டித் திரும்ப வேண்டும். இதுதான் அந்த ஒப்பந்தம். ஒப்பந்தத்துக்கு ஒத்துக் கொண்டு என்னிடம் இருந்த நான்கு அணாவை அவரிடம் கொடுத்து விட்டு அவரது தோளில் உட்கார்ந்து கொண்டேன். தோள் மாற்றி தோள் மாற்றித் தூக்கிக் கொண்டு போனவர் டிக்கெட் எடுக்கும் இடத்தில் தூங்குவது போல நடிக்கச் சொன்னார். நானும் அவரது தலையில் சாய்ந்து தூங்குவது போலப் பாவனை செய்து படுத்துக் கொண்டேன். ”படம் பார்க்காமல் தூங்கும் சிறுவனுக்கு டிக்கெட் எடுக்க வேண்டியதில்லை” என்று சொல்லி, அரை டிக்கெட்டும் வாங்காமல் உள்ளே அழைத்துப் போய் கலையரசி படத்தை எனது காசில் பார்த்தார். திரும்ப வரும்போதும் அவரது கழுத்தில் என்னை உட்கார வைத்து இரண்டு கால்களையும் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு நடந்து வந்தார். தரையில் கால் வைக்காமல் நள்ளிரவுக்குப் பின் நட்சத்திரங்களின் வெளிச்சத்தில் அந்தரத்தில் செய்த பயணத்தின் போது காற்றில் அசைந்த மரங்களின் உருவங்கள் எல்லாம் விலகிச் செல்லும் மேகங்கள் போலத் தோன்றின. கலையரசி படத்தில் பறக்கும் தட்டில் பயணம் செய்யும் பானுமதியைப் பிடிக்கத் தனது கைகளையே இறக்கைகளாகப் பாவித்து அசைத்து அசைத்துச் செல்லும் எம்.ஜி.ஆர் போல அவரது தோளில் அமர்ந்து பயணம் செய்து வீடு வந்து சேர்ந்தேன்.

 

கலையரசி சினிமாவுக்குத் தோளில் வைத்துத் தூக்கிப் போன அந்த அண்ணனோடு சேர்ந்து ,எங்களூருக்குப் பக்கத்தில் இடம் மாற்றி இடம் மாற்றி அமைக்கப்படும் டூரிங்க் டாக்கீஸ்களில் பார்த்த படங்களைக் கணக்கில் வைத்துக் கொள்ள வில்லை. வாரத்துக்கு ஒரு படமாவது பார்த்து விடுவோம். நாற்பது வயதிற்குள்ளாகவே கேன்சர் நோயில் மரணத்தைச் சந்தித்த அவரிடம் தான் எனது பள்ளிப் பருவக் காதலியான கலையரசியைப் பற்றியும் பேசி இருக்கிறேன். நாடகக் குடும்பத்தைச் சேர்ந்த பாட்டுக்காரியான கலையரசியைப் பின்னாளில் சந்திக்க நேர்ந்ததும், விடலைப் பருவக் காதலில் விழுந்ததும் கூட அந்தப் படம் என் மனதை விட்டு அகலாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் என்பதுதான் அந்த ரகசியம். எனது பிடித்தமான படங்களின் பட்டியலுக்குள் கலை அரசி என்ற சினிமா இடம் பிடித்த காரணம் போல , ஒவ்வொரு மனிதர்களும் தாங்கள் பார்த்த படங்களிலிருந்து  அவர்களுக்குப் பிடித்த  விருப்பப் பட்டியலை உருவாக்கிக் கொள்கிறார்கள். திரைப்படம் என்னும் கலை மற்றும் வியாபாரம் சார்ந்த உருவாக்கங்களில் மட்டுமல்லாமல். எல்லா வகைக் கலைப்படைப்புகளையும் –படிக்க நேர்கிற இலக்கியப் படைப்புகளையும் அவரவர் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றித் தங்களின் மூளைக்குள் பதிவு செய்து வைத்துக் கொள்வதே தொடக்கநிலை ரசனையின் அடிப்படை. அந்தத் தொடக்கநிலை ரசனை சார்ந்த பிடித்தவைகளின் பட்டியலில் இருக்கும் பொதுக் கூறுகளையும் தனித் தன்மைகளையும் அளவுகோல்களாகக் கண்டறிந்து அக்கலைப்படைப்புகளைப் பற்றிப் பேசவும் எழுதவும் முடியும்போது ரசிகன் தேர்ந்த பார்வையாளன் என்னும் அடுத்த கட்டத்திற்குள் நுழைந்து விடுகிறான். தேர்ந்த பார்வையாளன் சொல்லும்  காரணங்களும் அவற்றின் பின் இருக்கும் உணர்வெழுச்சிகளும் அல்லது தர்க்கங்களும் பலருக்கும் பொதுவானதாக மாறும் போது அல்லது தோன்றும் போது விமரிசன அளவுகோல்கள் உருவாகி விடுகின்றன. தேர்ந்த பார்வையாளன் விமரிசகன் என்னும் அடுத்த கட்டத்தை நோக்கித் தாவி விடும் பாய்ச்சல் நடக்கும் வித்தை அப்படிப் பட்டதுதான். கடந்த இருபது ஆண்டுகளில் நான் எழுதிய திரைப்படக் கட்டுரைகளில் இருக்கும் விமரிசனக் குறிப்புகள் அல்லது மதிப்பீடுகள் அப்படி உருவானவையே தவிரத் தனியாகத் திரைப்படக் கலை சார்ந்த படிப்பைக் கற்றுத் தேர்ந்து உருவாக்கிக் கொண்ட இலக்கணங்களின் அடிப்படையில் உருவாக்கிக் கொண்டவை அல்ல என்பதைச் சொல்ல நான் எப்போதும் தயங்குவதில்லை.

 

கடந்த அரை நூற்றாண்டுக் காலமாகத் தமிழர்களின் வாழ்க்கையைப் பெருமளவு பாதித்து வெகுமக்களின் சிந்தனை மற்றும் செயல்பாடுகளின் இயக்குகருவியாக இருக்கும் தமிழ்ச் சினிமாவை அதன் உள்ளிருந்து பார்த்துப் பகுப்பாய்வு செய்து சொல்லும் வேலையையே நான் தொடர்ந்து செய்து வந்துள்ளேன். அப்படிச் செய்வதற்கு முழுமையும் தமிழ்ச் சினிமாவையே தரவுகளாகக் கொண்டிருக்கிறேன் என்று நான் சொல்லும்போது, திரைப்படக்கலை சார்ந்த உலகம் தழுவிய பொதுவிதிகளைக் கவனிக்காமல் குருட்டாம் போக்கில் கருத்துக்களை அடுக்கிக் கொண்டிருக்கின்றேன் என நினைத்து விட வேண்டாம். வெகுமக்கள் வாழ்க்கையைக் கட்டமைக்கும் சமகாலப் பொருளாதார, அரசியல், பண்பாட்டு மாற்றங்கள், அவற்றைப் பின்னின்று இயக்கும் சிந்தனைத் தளங்கள், அவற்றை முன் மொழியும் நபர்களின் ஆளுமைத் தாக்கம் போன்றவற்றைக் கவனத்துடன் பரிசீலித்தே எனது திரைப்படப் பகுப்பாய்வுகளை முன் வைத்து வந்துள்ளேன்.  இந்திய அளவிலும் உலக அளவிலும் உச்சரிக்கப்படும் பெயர்களையும் கூற்றுகளையும், சொல்லப் பட்ட விதிகளையும் உச்சரிப்பு மாறாமல் எனது கட்டுரைகளில் நான் எழுதிக் காட்டவில்லை என்பது மட்டுமே உண்மை. ஆனால் அவற்றை உள்வாங்கி எந்த வகையில் எனக்குத் தேவையோ அந்த வகையில் அவற்றைப் பயன்படுத்திக் கொண்டுள்ளேன். அந்தப் பாதைகளில் கொஞ்சம் முன்னும் பின்னுமாகப் பயணம் செய்யலாம்..

 

000000000

எம்.ஜி.ஆர் கட்சியாகவே அறியப் பெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கு விரியத் தொடங்கியிருந்த அறுபதுகளின் பின்பாதியிலும் எழுபதுகளின் முன்பாதியிலும் பள்ளிப் படிப்பில் இருந்த நான், அவரது நூற்றுச் சொச்சம் சினிமாக்களில் 75 சதவீதம் படங்களைப் பார்த்தவன். அவரது அரசியல் வாழ்க்கைக்குக் காரணமாக இருந்த நாடோடி மன்னன், காஞ்சித் தலைவன், காவல்காரன், எங்கள் வீட்டுப் பிள்ளை, அடிமைப் பெண், நாளை நமதே ஒளி விளக்கு,  இதயக்கனி போன்ற படங்கள்  நிகழ்கால அரசியலைப் பேசிய படங்கள் இல்லை என்றாலும், திராவிட முன்னேற்றக் கழக அரசியலோடு சேர்த்துப் புரிந்து கொண்டு பார்த்து ரசித்த காலம் அது. அவர் தி.மு.க.வில் இருந்து பிரிந்து தனிக் கட்சி தொடங்கிய பின் வந்த நம்நாடு, நேற்று இன்று நாளை, உரிமைக்குரல், உலகம் சுற்றும் வாலிபன் போன்ற படங்களை அவரது புதிய கட்சியின் நிலைபாட்டோடு பொருத்திப் பார்த்து ரசித்த காலமும் பள்ளிப் பருவக் காலம் தான். எனது பள்ளிப் பருவக் காலத்தில் எனக்குப் பிடித்த சினிமாவைத் தேர்வு செய்வதற்கு எம்.ஜி.ராமச்சந்திரன் என்ற நடிக பிம்பம் காரணமாக இருந்தது என்பதைவிட அவரது அரசியல் பிம்பமே அதிகக் காரணமாக இருந்தது. அதிலும் சமூகத்தில் நிலவும் வேறுபாடுகளைச் சுட்டிக் காட்டி எழுதப்பட்ட பட்டுக் கோட்டைக் கலியாண சுந்தரம், கண்ணதாசன், வாலி போன்ற பாடலாசிரியர்களின் வரிகளுக்கு வாயசைத்துக் கைகளை ஆட்டிய எம்.ஜி. ஆரின் பிம்பங்களைப் பார்ப்பதற்காகவே நான் அவரது ரசிகனாக இருந்தேன்; என் தலைமுறையில் பலர் அவரது ரசிகர்களாக இருந்ததற்கு அவரது படங்களில் இடம் பெற்ற பாடல்களும் அவற்றைக் காட்சிப் படுத்திய இயக்குநர்களின் திறமைகளுமே காரணங்களாக இருந்தன எனச் சொல்வது மிகையான ஒன்றல்ல.

 

பள்ளிப்பருவத்தின் தொடர்ச்சியைச் சட்டென்று அறுத்துப் போட்டது எனது கல்லூரிக் கால வாழ்க்கை. இலக்கியம் படிக்கும் மாணவனாக மதுரை அமெரிக்கன் கல்லூரியின் மாணவனாக நுழைந்த பின்னரும் வாரந்தோறும் மதுரைத் திரையரங்குகளில் வெளியாகும் எல்லாவகைப் படங்களையும் பார்த்தவனாகவே இருந்தேன் என்றாலும். எம்.ஜி.ஆர் ஒரு நடிகராக ரசிக்கப்பட வேண்டியவர் அல்ல என்ற பேரிடியை என் தலையில் இறக்கின எனது பேராசிரியர் சாமுவேல் சுதானந்தாவின் இலக்கிய வகுப்புகள். அவர் சினிமாவைப் பற்றி எப்போதும் வகுப்பில் பாடங்கள் நடத்தவில்லை என்றாலும் நல்ல இலக்கியம், ரசிக்க வேண்டிய கலைக் கூறுகள், கவனிக்க வேண்டிய போக்குகள் என்பனவற்றை  அடையாளப்படுத்தினார். பாடத்திட்டத்திற்கு அப்பால் அவர் அறிமுகப் படுத்திய புத்தகங்கள், இலக்கிய இதழ்கள் அந்தக் கல்லூரியில் செயல்பட்ட திரைப்பட ரசனைக் குழுக்கள், அதன் சிறப்பு நிகழ்வுகள், நாடக மேடையேற்றங்கள், அவற்றில் பங்கேற்க வந்த ஆளுமைகளின் பேச்சுகள் என எல்லாம் சேர்ந்து குவிக்கப்பட்ட கற்குவியல்களிலிருந்து ஒரு சில கற்களை எடுத்து உள்ளங்கையில் வைத்து உருட்டி விளையாடும்போது ஒருவித சுகம் உண்டு எனக் காட்டின. உலக சினிமா பற்றிய பேச்சுகள் எப்போதும் நடிகர்களை மையப்படுத்தியதாக இல்லாமல் இயக்குநர்களின் பெயர்கள் வழியாகவே அறிமுகம் ஆனபோது தமிழ் நடிகர்களின் பால் இருந்த ஈர்ப்பும் வெறுப்பும் தானாக விலகிப் போயின.

நடிகர்களின் பிம்பங்கள் விலகிப் போன அந்த நேரத்தில் புதிய அலையெனத் தமிழ்ச் சினிமா உலகத்தில் நுழைந்து அதன் உள்ளடக்கத்தையும் வடிவத்தையும் சொல் முறைகளையும் மாற்றிக் கட்டமைத்துக் கொண்டிருந்த பாலச்சந்தர், பாலு மகேந்திரா, பாரதி ராஜா, மகேந்திரன் என்ற பெயர்கள் பிம்பங்களாக அல்லாமல் ஆளுமைகளாக எனக்குள் நுழைந்து கொண்டன. இந்தக் கூட்டத்தில் சேராமல் ஏற்கெனவே எழுத்தின் வழியாக எனது நேரத்தைக் களவாடிக் கொண்டிருந்த ஜெயகாந்தன் சினிமா வழியாகவும் என்னை இணைத்துக் கொண்டார்.  சினிமா என்பது நடிகனின் கலை அல்ல; இயக்குநரின் வெளிப்பாட்டு வடிவம் என்பதை நான் உணர்ந்ததை ஒரு தீபாவளிக்கு வெளியான படங்கள் தான் எனக்கு உணர்த்தின. பட்டப்படிப்பில் இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருந்த எனக்கு அந்தத் தீபாவளிக்கு வெளியான எட்டுப் படங்களில் எட்டாவது இடத்தை வழங்கும் விதமாக ருத்திரையாவின் அவள் அப்படித்தானுக்கு ஆனந்த விகடன் மதிப்பெண் வழங்கியதில் பிழை இருப்பதாகத் தோன்றியது அந்த நேரத்தில் நடிப்பில் உச்சத்தில் இருந்த கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தார்கள். சிவச்சந்திரன், ரவீந்திர் போன்றவர்களோடு மையப் பாத்திரமான மஞ்சு பாத்திரத்தில் ஸ்ரீபிரியா அற்புதமாக நடித்திருந்தார். திரையிசைப் பயணத்தில் தாவித்தாவிப் பயணம் செய்து கொண்டிருந்த இளையராஜாவின் பின்னணி இசையும் கருத்தாழம் மிக்க பாடல்களும் கூட அந்தப் படத்தில் இடம் பெற்றிருந்தன. பாடல்களில் ஒன்றைக் கமல்ஹாசனே பாடியிருந்தார் என்ற போதிலும் ஆனந்த விகடனின் கவனம் விழவில்லை.

 

பாலச்சந்தரின் தப்புத்தாளங்கள், பாரதிராஜாவின் சிகப்பு ரோஜாக்கள் போன்ற படங்களுடன் சேர்ந்து 1978 தீபாவளிக்கு வெளியான எட்டுச் சினிமாக்களுள் அவள் அப்படித்தான் படத்தை முக்கியமான படமாக முன்னிறுத்தத் தவறிய ஆனந்த விகடனின் விமரிசனக்குழுவின் திரைப்படப் பார்வையில் ஏதோ கோளாறு இருப்பது மட்டும் புரிந்தது; ஆனால் என்ன வகையான கோளாறு என்பது அப்போது விளங்கவில்லை. கறுப்பு வெள்ளையில் எடுக்கப்பட்டிருந்த அந்தப் படம் கதை சொல்லிய முறையிலும், காட்சிகளை அடுக்கிய முறையிலும் வித்தியாசத்தைக் கொண்டிருந்தது. பாத்திரங்கள் பேசும் வசனங்கள் அவர்கள் அந்தப் பாத்திரங்களைத் தமிழ்ப் பெருந்திரளுக்குள் அடையாளமற்றவர்களாகக் கரைந்து போகும் நபர்களாகக் காட்டாமல் துருத்திக் கொண்டிருக்கும் நபர்களாக- குறிப்பாக அந்த அவளை- மஞ்சுவை உருவாக்கியிருந்தார் இயக்குநர் ருத்திரையா. ஆண்களைச் சார்ந்து வாழ்வதே பெண்ணின் இருப்பாக நம்பும் தமிழ்ச் சமூகத்தின் முன் தன் செயல்பாடுகளின் தோல்வியை உணர்ந்தவளாகவும், அதன் வழியாகச் சிதையும் நம்பிக்கைகளோடு ஆண்களை எதிர் கொள்ளும் தனித்தன்மை கொண்டவளாகவும் இருக்கும் பெண்ணைக் கவனப்படுத்தும் ஒரு திரைப்படத்தை ஆனந்த விகடனின் மரபான கலைப்பார்வை ஏற்றுக் கொள்ளத் தயங்கியிருக்கும் என்பது இப்போது புரிகிறது.

சினிமா என்னும் சர்வதேசக் கலைவடிவத்திற்கான மொழியை உள்வாங்கித் தமிழ் வாழ்வில் தன் காலத்தில் நடக்கும் நுட்பமான மாற்றங்களையும் விலகல்களையும் சொன்ன உன்னைப் போல் ஒருவன், சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற ஜெயகாந்தனின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்க பெற்ற  படங்களும்,  ருத்திரையாவின் அவள் அப்படித்தான், ஸ்ரீதர்ராஜனின் கண் சிவந்தால் மண் சிவக்கும், பாலு மகேந்திராவின் வீடு, சந்தியா ராகம், மூடுபனி  பாரதிராஜாவின் கல்லுக்குள் ஈரம், மகேந்திரனின் உதிரிப் பூக்கள், மெட்டி, நாசரின் அவதாரம்,  போன்றன வெகுமக்கள் ரசனையைக் கட்டமைக்கும் பத்திரிகைகளுக்குப் பிடிக்காமல் போனது போலவே பெருந்திரள் பார்வையாளர்களையும் ஈர்த்ததில்லை. அதே நேரத்தில் முள்ளும் மலரும், முதல் மரியாதை, தேவர் மகன், மகாநதி, நாயகன், அலைபாயுதே, காதல், இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி, பிதாமகன், சுப்பிரமணியபுரம், அழகி,  போன்ற விதி விலக்குகளும் இல்லாமல் இல்லை இவையெல்லாம் இன்றளவும் தமிழ்ச் சினிமாவின் முக்கியமான அடையாளங்களாக இருக்கும் படங்கள்.

ஆனந்த விகடன் அளித்த மதிப்பெண்களும் விட்டேத்தியான விமரிசனக்குறிப்புகளும் தான், மாற்றங்களை முன் வைக்கும் படைப்பாளியின் இடத்தை உருவாக்கித் தரும் பொறுப்பைத் தவறவிடும் விமரிசனத்தின் நிலைபாட்டை எனக்கு உணர்த்தியது. அப்படி உணர்ந்த உடனேயே திரைப்படங்களைப் பற்றிய விமரிசனக் கட்டுரைகளை எழுத வேண்டும் என்ற ஆவலும் விருப்பமும் எழுந்தது என்னவோ உண்மைதான். ஆனால் அப்படி எழுதுவதற்கான தரவுகளும் சொற்களும் என்னிடம் இருக்கவில்லை. தரவுகளைத் திரட்டுவதற்காக திரைப்பட ரசனையை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்பட்ட குழுமங்களில் உறுப்பினராகிப் பல்வேறு மொழி படங்களைப் பார்க்கத் தொடங்கினேன். மதுரை அமெரிக்கன் கல்லூரியிலேயே ஒரு திரைப்படச் சங்கம் இருந்தது. அச்சங்கம் தனியாகவும், மதுரையில் செயல்பட்ட யதார்த்தா திரைப்படச் சங்கத்தோடு இணைந்தும் படங்களைத் திரையிடும். திரையிட்ட படங்களைப் பற்றிய புரிதலை உருவாக்குவதற்காகத் தேர்ந்த விமரிசகர்களாக அறியப்பட்ட நபர்கள் வந்து உரையாடல் நடத்துவார்கள். அவர்கள் வழியாகத் திரைப்படக்கலை என்பது நான் ஈடுபாட்டோடு செயல்படத்தொடங்கிய நாடகக் கலையைப் போலவே ஒரு கூட்டுக் கலை என்பதையும், நாடகக் கலையைவிடச் சக்தி வாய்ந்த வெகுமக்கள் ஊடகம் என்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது.

லாபத்தை நோக்கமாகக் கொண்ட வியாபாரத்தில் முதலீடு செய்வது போலவே திரைப்படத்தயாரிப்புக்கும் பெரும் மூலதனம் தேவைப்படுகிறது. அம்மூலதனத்தின் உதவியோடு உருவாகும் சினிமா என்னும் சலனப்படம் அன்றாட வாழ்வில் பயன்படும் பேச்சு மொழியை முக்கியக் கருவியாகப் பயன்படுத்துகிறது. அதன் மூலம் சாதாரணமனிதர்களின் உடமையாக ஆகிக் கொள்கிறது. அதன் வழி அவர்களை வந்தடையும் காட்சி அடுக்குகளும், சொல்லடுக்குகளும்  முதன்மையாக மகிழ்ச்சியை அளிக்கின்றன. அந்த மகிழ்ச்சி மனித உயிரியின் ஐம்புலன்களுக்குமானது அல்ல. கண்களுக்கும் காதுகளுக்குமானவை. இவ்விரண்டின் வழியாக உயிரியின் இருப்புக்குள் நுழையும் அந்தக் குறியீடுகள் மகிழ்ச்சிப் படுத்துவதோடு, அந்த உயிரியின் இருப்பை- வாழ்வைக் கட்டமைக்கவும் முயல்கின்றன. தொடர்ச்சியாக மனித உயிரியின் மூளைக்குள் நுழையும் எல்லாவகைக் குறியீடுகளும் அவ்வுயரியின் இருப்பையும் மாற்றத்தையும் கட்டமைக்கும் என்பதை மார்க்சியம் தொடங்கி அமைப்பியல் வரையிலான புதுவகைச் சிந்தனைகள் நிறுவிக்காட்டியிருந்ததை வாசித்தவன் என்ற நிலையில் அவற்றை நான் ஏற்றுக் கொண்டவனாக மாறினேன்.  அதன் காரணமாகவே என் முன் விரியும் எல்லாவற்றையும் சந்தேகத்தோடு கேள்வி கேட்பவனாக மாறி இருந்தேன். கடந்த கால நிகழ்வுகளையும், நிகழ்கால நடப்புகளையும் ஐயத்தோடு கவனிப்பதும், ஐயத்தின் விளைவாகக் காரணங்களை உருவாக்குவதும், காரணங்களைப் பொருத்திப் பார்த்து விளங்கிக் கொள்வதும் அறிதலின் வினைகள் என்பதையும் நான் கற்ற நூல்கள் எனக்குச் சொல்லித் தந்திருந்தன.  ஆகவே என் முன் அடுக்கடுக்காய் வந்து விரியும் எழுத்துப் பிரதிகளையும் காட்சிப் பிரதிகளையும் அறிதலின் வினையாகவே நான் வாசிக்கிறேன். விளங்கிக் கொள்கிறேன். நான் விளங்கிக் கொண்ட விதத்தை மற்றவர்களுக்கு நான் விளக்கும் போது அவை எனது விமரிசனக் கட்டுரைகளாக – பகுப்பாய்வுப் பார்வையாக ஆகி அறியப்பட்டு விட்டன.

 

கலை, இலக்கியங்கள் அவை தோன்றிய காலச் சமூகத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி எனச் சொல்லப்பட்ட கருத்துநிலையின் போதாமையை உணர்ந்த நிலையில், குறிப்பிட்ட காலகட்டத்தின் தேவைக்காகவும் இயக்கத்திற்காகவும் பிரதிகள் உருவாக்கப்படுகின்றன என்ற புரிதல் ஏற்பட்டது. அதனால் வெகுமக்கள் திரள் திரளாகப் பார்த்து ரசிக்கும் திரைப்படங்களுக்குள் அவர்கள் அனைவருக்கும் தேவையான பொதுக்கூறுகள் என்னவெல்லாம் இருக்கின்றன என்பதைக் கண்டறிந்து சொல்லும் நோக்கத்தோடு வெகுமக்கள் சினிமாவைப் பார்க்கவும் விளக்கவும் முயன்றோம். 1990- களின் இடைப்பட்ட ஆண்டுகளில் இந்தப் பார்வையைத் தமிழகச் சிந்தனையாளர்கள் பலரும் வரித்துக் கொண்டார்கள். மிகச் சிறுபான்மையினருக்கான சினிமாவைக் கொண்டாடும் மனப்பாங்கைக் கைவிட்டுவிட்டுத் திரைப்பட ஆய்வுகள் வெகுமக்கள் சினிமாவை நோக்கி நகரத் தொடங்கின. அந்நகர்வுகளில் முன்கை எடுத்தவர்களில் ஒருவனாக நானும் இருந்தேன் என்பதன் அடையாளங்களே இதுவரை நான் எழுதிய திரைப்படங்கள் குறித்த கட்டுரைகள். தொழில் துறை அல்லது தொழிற்சாலை என்பது அரூபமான வினைகள் நடக்கும் வெளி அல்ல. விதிகளின்படி இயங்கும் கணதியான வினைகள் நிகழும் வெளி அது. ஆனால் களியாட்டத் தொழிற்துறையாக இருக்கும் திரைப்படம் ஒரு கனவுத் தொழிற்சாலையாக இருக்கிறது. கனவு என்பது கணதியானது அல்ல; அரூபமானது. அரூபத்தை உருவங்களாக்கி அலைய விடும் சினிமா ஒவ்வொரு தேசங்களிலும் ஒவ்வொரு விதமாக இயங்குகின்றது. இந்தியா போன்ற பன்மைச் சமூகத்திலும், தமிழ்மொழி பேசும் வெளிகளிலும் எவ்வாறு இயங்குகின்றது என்பதைச் சொல்ல வேண்டியது அதன் தேர்ந்த பார்வையாளன் என்ற கோட்டைத் தாண்டிய விமரிசகர்களின் வேலை. அந்த வேலையையே எனது கட்டுரைகள் செய்கின்றன.

 

இந்தப் பணியைச் செய்யும் பகுப்பாய்வு, மனிதர்களைச் சந்தோசப்படுத்தும் திரைப்படம் என்னும் வெகுஜனக் கலைத் திரும்பத் திரும்ப ஒன்று போல் உற்பத்தி செய்யும் வினையில் ஈடுபடுவது ஏன் என்ற கேள்வியை முதலில் கேட்க வேண்டும். பின்னர் அதன் தொடர்ச்சியாக அவ்வுற்பத்திக்கு என்னென்ன கச்சாப்பொருட்களையெல்லாம் பயன்படுத்திக் கொள்கிறது என்ற தளத்திற்குள் நுழைய வேண்டும். வாய்மொழி, இசைமொழி, காட்சிமொழி எனத் திரைப்பட மொழியின் கூறுகளில் மரபான சமூகத்தின் கூறுகள் எவ்வாறு நுழைந்து பழைய மதிப்பீடுகளை மறு உற்பத்தி செய்யவும், இருக்கும் சமூகப் போக்கில் மாற்றம் வந்துவிடாமல் தடுக்கவுமான பங்களிப்பை எவ்வாறு ஆற்றுகின்றன என்ற வேலையைச் செய்வது முக்கியமான ஆய்வுப் பணி என நான் நினைக்கிறேன். அந்த ஒற்றை நோக்கத்தோடு சேர்த்து மாற்றத்தை நோக்கிய பார்வைகள் எவ்வாறு இருக்கக் கூடும் என்ற அடையாளப்படுத்துதலையும் விலக்கி விடுவதில்லை.  ஷங்கரின் பிருமாண்டமான படங்களுக்குள் இருக்கும் எதிர்மறைக் கூறுகளை விளக்கிக் காட்டும் எனது கட்டுரைகளிலிருந்து பாலாவின் படங்கள் பற்றிய கட்டுரைகள் வேறுபடுவதைக் காணலாம். அவரது படங்கள் மைய நீரோட்டத்திலிருந்து விலகிய- விலக்கப்பட்ட மனிதர்களை அடையாளப்படுத்தும் விதமாக இருப்பதைச் சொல்லியிருப்பதைக் காணலாம்.

இருப்பை விளக்குவதோடு மாற்றத்தைச் சுட்டிக் காட்டும் நகர்வாகவே எனது விமரிசனப் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

000000

“விம்பத்தின்  ” 7வது சர்வதேச குறுந்திரைப்பட விழாவினையொட்டி எழுதப்பட்ட கட்டுரை.

 

40 Comments

 1. vasan says:

  Well written though not a complete one by norms
  vasan

 2. jeya pathmanathan says:

  hi very very nice this is article very sweet story thank you

 3. arul says:

  very good artical .

Post a Comment