Home » இதழ் 06 » கவிதைகள்–மாலினோஸ்க்னா,பைசால், மெலிஞ்சி முத்தன்,ஜே.பிரோஸ்கான்

 

கவிதைகள்–மாலினோஸ்க்னா,பைசால், மெலிஞ்சி முத்தன்,ஜே.பிரோஸ்கான்

 
மண் பிளக்கும் கடும் கோடையில்
நீ வந்திருந்தாய்
சில பொம்மைகளைப் பரிசளிப்பதற்காக
ஆறுதல்தான் எனக்கு ஏனெனில்
பொம்மைகள் கேள்விகள் கேட்பதில்லை
உனது திரும்புதலின் பின்னரான சில நாளிகைக்குள்
பொம்மைகளைக் கொட்டிச் சரியும்
புத்தகங்களின் நடுவே ஆழப்புதைத்தேன்
மீள உன் வருகை சாத்தியமில்லை
என்னும் நீனைவுடன் ஆனால்
ஒரு குற்றத்தை இந்தளவு
மகிழ்வுடன் கடந்து செல்வது நல்லதில்லை
என மூளை எச்சரித்துக்கொண்டேயிருந்தது
ஒன்றுக்கும் இன்னொன்றுக்குமிடையில்
என் இடம் சடுதியாய் வெற்றிடமாகியது
அந்த இடம் பொருந்தாமல் அலைக்கழிந்தபோது
என் வெற்றிடம் தேவையாகியது உனக்கு
இப்போதிருந்துதான் உள்ளிருந்த
எல்லாப் பொம்மைகளின் பார்வையும்
என்னையே நோக்குவதை உணர்கிறேன்
உக்கிரக்கோடையின் நடுவில் எல்லோரும் வியந்திருக்க
பொம்மைகள் மனிதர்களுடைய வெளியை
பாதுகாப்பாய்க் கடக்கின்றன.
-மாலினோஸ்க்னா
௦௦௦௦
கோழியொரு காட்டிலே
தலை தெறிக்க ஓடிவந்த கோழி
எனது அறை நிறைய அமர்ந்துவிட்டது
அறுத்து குழம்பு வைக்க எண்ணியபோது
அதன் அடர்ந்த சிறகிற்குள்
ஒழிந்திருந்த முட்டையை காட்டிக்கொடுத்துவிட்டு
சத்தம் போட்டு
அங்கு வந்த கழுகுடன் சோடியாக பறக்கிறது.வழியில்
மலை உச்சியிலிருந்து விழுந்து தற்கொலை செய்கின்றன
அதன் சில சிறகுகள்.எனது அறையில் வந்தமர்ந்து
அழுதுவிட்டுப் போகிறாள்
கோழிக்கார கிழவி.

 

 

சில நிமிடங்கள் கழித்து
எனது அறை அலுமாரியில் இருக்கும்
கவிதைப் புத்தகத்தை மெதுவாக புரட்டுகிறது குஞ்சு.
கவிதையிலிருக்கும்
கறுப்ப,  மஞ்சள் கோழியின் குஞ்சுகளுடன் சுற்றித்திரிகிறது.
கவிதைப் புத்தகத்திலிருந்து கதைப் புத்தகத்திற்கு தாவி
புத்தக அட்டையின் படமாகி உயிரைவிடுகிறது குஞ்சு.

நடுக்காடு வந்தடைந்ததும்
வேகத்தைக் குறைத்து மெதுவாக
கழுகின் செய்கைகளைப் பார்த்து கழுகுடன் இறங்குகிறது கோழி
எனக்கும் கொஞ்சம் தலை சுற்றியது

காட்டுக்குள் எனக்கு இறங்கி நிற்க முடியாது
அந்தரத்தில் நிற்கிறேன்
தொடர்ந்து பறந்தால்தான் என்னால்
இனிவரும் காட்சிகளை விபரிக்க முடியும்

கழுகு
கோழியைக் கொன்று கிழித்து சாப்பிடுகிறது

இன்னும்
காட்டுக்குள் நடக்கும் கதைகளையும, காட்சிகளையும்
பறந்தால்தான் என்னால் விபரிக்க முடியும்.

இங்கே என்ன நடக்கிறது
அறிய எல்லோருக்கும் ஆவல்தான்.

•    பைசால்

௦௦௦௦௦

அருகில்லை
உருவில்லை
அரூபமும் இல்லார் நான்.
ஆணொரு பொருட்டா என்ன…..
போர்த்தது உதிர்த்தது
போய்வர இருப்பது
நானெனச் சொல்லும்
‘நீ ‘ எனச் சொல்ல நாதியற்றேன்.
ராட்டினம் சுற்றும்
மேலெது? கீழெது?
குழந்தைமையும்பெற்றார்மையும் மோதிக்
குப்புற வீழ்கிறேன் – இக்கணம்
– மெலிஞ்சி முத்தன்
௦௦௦
௦௦௦௦௦
ஒரு கூட்டின் மூன்று பறவைகளின் பாடல்..!
தோற்றம் நிறம் மொழியென
பிரிவுகள் வௌ;வேறாயினும்
நாங்கள் ஒரு கூட்டுப்பறவைகள் தான்
என்பதான மகிழ்ச்சியில்..
சின்னயிடம் பெரிய இடமென்று ஒதுக்குதல்
கொண்டாலும் ஒரு கூட்டின்
சுவாரசியம் உயர்ந்ததுதான்.
மொழி சமிக்ஞையின் பின்னல்கள்
எங்களின் எண்ணங்களில் நிறைந்து
தூரமாக நின்றாலும்
நாங்கள் ஒரு கூட்டுப் பறவைகள்; என்று
சொல்லிக் கொள்வதில் பெருமைதான்.
இந்தப் பள்ளி புறாக்களுக்கும்
அரச மரத்துக்கிளைகளில் கூடு.
கோவில் தளங்களுக்கும் பெரிதாய்
தீர்வு என்பதான நீண்ட மழை
நனைப்பில் ஒரு துளி கூட
எம் மீது சிந்தாமல் ஒதுங்குகிறோம்
அரச மரத்தடி கூடுகளில்..!
-ஜே.பிரோஸ்கான்
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment