Home » இதழ் 06 » சில புரிதல்களுடன் ஜோர்ஜ் கீற்றை அணுகுதல்- ஏ.எச்.எம்.நவாஷ்

 

சில புரிதல்களுடன் ஜோர்ஜ் கீற்றை அணுகுதல்- ஏ.எச்.எம்.நவாஷ்

 

ஓரிரு வருடங்களுக்கு முன் பேராதனைப் பல்கலைக்கழக கலைப்பீடத்தில் ஜோர்ஜ் கீற் (George Keyt) அவர்களின்  ஓவியக் கண்காட்சி ஒன்று நடைபெற்றது.  இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பெரும்பாலான ஓவியங்கள்பெண்களை மையப்படுத்தி கீறப்பட்ட தத்துவார்த்த ஓவியங்களாகும். இந்த பெண் சித்திரிப்பு ஓவியங்களைப் பற்றிச் சிலர் “பெண்ணின் நிர்வாண ஓவியங்கள். ஆபாசத்தைத்  தவிர இதில் என்ன கலைத்துவம் இருக்கின்றது” என்ற பொருள் பட விமர்சித்திருந்தனர். இந்த விமர்சனம் ஆழமாகச் சிந்திக்கத் தூண்டுவதாகும்.

மனிதன் ஆடை அணிவதற்கு முன்பே  ஓவியம் கீற ஆரம்பித்து  விட்டான். உலகின் முதல் மொழி ஓவியமாகும். ஓவிய வரலாறு குகை ஓவியங்களிலிருந்து தொடங்குகின்றது. குகை ஓவியங்களில் பெண்களே சித்திரிக்கப்பட்டுள்ளனர். எனவே வரலாற்றில் முதலோவியச் சிறப்புப் பெற்றிருப்பவர்கள் பெண்கள் தான்.

1200 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட “விஷ்ணுதர் மோத்தரம்”  என்னும் நூலில் உள்ள கதை வருமாறு.
பதரிகாசிரமத்தில் நரன், நாராயணன் என்ற இரு முனிவர்கள் தவம் புரிந்த பொழுது  தேவ மாதர் சிலர்,
அவர்களின் தவத்தைக் கலைக்க முற்பட்டனர்.  கண்ணைத் திறந்து பார்த்த நாராயணர், தங்கள் அழகின் பெருக்கால் செருக்கித் திரிந்த தேவமாதர்கள் கர்வத்தையடக்க மாங்கனி ஒன்றையெடுத்து, அதன் சாற்றைப் பிழிந்துஅதை வண்ணமாகக் கொண்டு தன் தொடையில், எழில் மிக்க மங்கையின் உருவை வரைந்து அதற்கு உயிரும் அளித்தார். இவ்வாறு தோன்றிய ஊர்வசியைத்தான் கம்பன் “ஊறுவில் தோன்றிய உயிர்பெய் ஓவியம்” எனக் கூறினான்.

கேரள நாட்டில் முன்னூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட  “சிலபரத்னம்” என்னும் நூலின் சித்திரலக்ஷணப்
பகுதியில் கூறியுள்ள கதை இன்னொரு வகையானது. பண்டைக் காலத்தில் கேரள நாட்டை ஆண்டு வந்த
பய்ஜித் என்ற அரசனிடம் தன் மகளை யமனுக்குப் பறிகொடுத்த அந்தணன், அவளை மீட்டுத் தருமாறு வேண்டினான்.அரசன் பெண்ணைத் திரும்பத் தரமறுத்த யமனைத் தோற்கடித்துப் பிரம்மாவிடம் விரட்டினான்.யமன் பிரம்மா விடம் போய்ச் சரண்புக, பிரம்மா அரசனிடம் வந்து, அரசனை அந்தப் பெண்ணைப் போல்ஓர் ஓவியம் வரையச் செய்வித்து, அந்த ஓவியத்துக்கு உயிர் கொடுத்தான்.

இக்கதைகள் எவ்வாறாக இருந்தாலும் இக்கதைகளுக்கூடாக வரலாறு நமக்கு
உணர்த்துவது, ஆரம்ப காலத்தில் வரையப்பட்டவை பெண் உருவங்கள் என்பதையாகும்.

புராதன ஓவியர்கள் கௌதம புத்தரின் உருவத்தை மரபுக்கு இணங்க வரைந்து விட்டு,
பெண்களின் உருவங்களை ஒரு மரபுக்குள் கட்டுப்படுத்தவில்லை. மனிதனின் கற்பனைக்கும்
தத்துவத்திற்கும் தூண்டு கோலாக விளங்கும் பெண்களைக் கணக்கற்ற வகையிலே வரைந்திருக்கின்றனர்.
கைவழி நயனம் செல்லக் கண்வழி மனமும் செல்ல நடனமிடும் மாதர்கள் தங்கள் பரிவாரத்தோடு காட்சி தருகிறார்கள். அஜந்தா ஓவியங்களில் பெண்களின் வெறுங்கவர்ச்சி நிலையையா பார்க்கிறோம்.
அவர்களது தலையின் ஒவ்வொரு அசைவையும் உடலின் ஒவ்வொரு நெளிவையும் நயன வீச்சின் நாகரிகத்தையும் தரிசிக்கிறோம். அவற்றில் எத்தனையோ தத்துவார்த்த நிலைகள் உள்ளார்ந்த நிலையில் அர்த்தத்தோடு விரிகின்றன.

அஜந்தா சுவரோவியங்களை அல்லது பண்டைய நிர்வாண சிலைகளைத் தாவணி போட்டா பார்ப்பது?

அன்னதா சங்கர்ராய் “கலை” (1988) என்ற நூலில் கூறுவதுபோல், அன்றாட வாழ்வில் வெட்க உணர்வு ஒரு முக்கிய விஷயம். கலை வாழ்வு இதற்கு மாறுபட்டது. கலை வெட்க உணர்வுக்கு அடிமையாகிக் குறுகிப் போனால் அது வாழ்க்கையிலிருந்தே விலகிவிடும்.     உண்மையற்ற செயற்கையான சமூக வேடம் அல்லது விளையாட்டு கலையுலகில் இடம் பெற முடியாது. சமூகத்தின் பார்வையில்      மதிப்புக்குரியதெல்லாம் கலையின் பார்வையில் அழகாகவோ சத்தியமாகவோ  இருக்கும் என்று எதிர்பார்ர்க்க முடியாது.
சமூகம் மங்கலமாகக் கருதுவதெல்லாம் கலைஞனுக்கும் மங்கலமாகத் தோன்ற வேண்டுமென்ற கட்டாயமும் இல்லை.

 

மத்திய கால பௌதீகவதீதப் போக்கிற்குப் பதிலாக மறுமலர்ச்சிக் காலக் கலையில் உலகியல்சார் நோக்கு நிலையைக் கொணர்ந்த லியனார்டோ டாவின்சி (Leonardo Davinci; 1452-1519) யின் இலட்சியம், மனித ஆளுமையின் பன்முகத்தான வளர்ச்சி ஆகும்.  இதனைப் பிரதிபலிக்கும் ‘பிரபஞ்ச மனிதன்’ என்ற கருத்தாக்கம் அவரது பல பெண் சித்திரிப்பு ஓவியங்களுக்கூடாக வெளிப்படுகிறது.
மறுமலர்ச்சிக் காலக்கலையின் ஓவியப் பண்புகள் அனைத்தையும் வெளிப்படுத்தும் ‘மொனாலிஸா’ ஓவியம்உருவச் செம்மையைப் பேணுதல் மூலம் மனித உயிர்ப்புத் தன்மையை வெளிக்கொணர்கின்றது.

மொனாலிஸாவின் புன்னகையின் சூட்சுமம் குறித்து நூல்கள் நூற்றுக்கணக்கில் வரத்தொடங்கின.
வால்டர் பேட்டர் என்பவர் மொனாலிஸாவை மயானங்களை வென்று சாகாவரம் பெற்ற நங்கை என்றார்.
சரியலிஸ்டுகள் இவ்வோவியத்தின் பாதிப்புக்குள்ளாகினார்கள். இவ்வோவியத்தில் காணப்படும் மரபெதிர்ப்பு சரியலிஸ்டுகளுக்கு மிகவும் பிடித்திருந்தது. பௌல் ஆண்டர்சன் என்பவர் மொனாலிஸா ஓவியத்தினால் உணர்வுற்று  ‘ஒளி’ எனும் அறிவியல் நாவல் எழுதினார். ஏகாந்த வெளியின் காலமற்ற தன்மையை
உலகுக்கு எடுத்துக் காட்டுவது போல் தோன்றியது இவ்வோவியம்.

மொனாலிஸாவின் தனித்துவம் எதனை உணர்த்துகின்றது?

பெண்ணின் உருவத்துக்கூடாக பல்வேறு பரிமாணங்களில் விரியும் அழகியல் தத்துவ பிரக்ஞையை
ஏற்படுத்த முடியும் என்பதனையே மொனாலிஸா உணர்த்துகின்றது.

லியனார்டோ டாவின்சியின் இன்னொரு ஓவியமான “லெடா” (ரோம் அரசு தொடுப்பகம்)வை எடுத்துக்கொள்வோம். இவ்வோவியத்தில் “லெடா” எனும் அழகிய மங்கை அன்னப்பறவையை அணைத்துக்கொண்டுள்ளாள். லெடா முழு நிர்வாணமாகவே வரையப்பட்டிருக்கிறாள். இவளது காலுக்குக் கீழே இரண்டு முட்டைகள் உடைந்து காணப்படுகின்றன.
அதிலிருந்து ஹெலன், கிளைடெம்னெஸ்டிரா, கேஸ்டர், பொலக்ஸ் போன்ற நான்கு குழந்தைகள் வெளிப்படுகின்றன. மானுட வடிவங்களைத் தீட்டுவதில் மரபை மீறிய பாங்கினையும் மனித நேயத்தின் மீது லியனார்டோ டாவின்சி கொண்ட பேரழகினையும் காட்டுகின்ற ஓவியம் லெடா.

பிக்காஸோ  (Pablo Picasso;1881-1973) இன் “விபசாரக் காட்சி” எனும் ஓவியத்தை பார்ப்போமெனில்,
இதில் பெண்களின் முலைகள் கண்கள் போலவும், கை, கால்கள் மிகப்பெரிய அளவில் விரிவடைந்து
அருகாமையிலும், மூக்கின் எலும்புகள் முதுகுத் தண்டுகள் போலவும், முலைகள் முதுகுப்புறத்தோள் எலும்புகள் போலவும் பல்வேறு தோற்றங்களைத் தருகின்றன. இந்த ஓவியம் ஓவிய உலகையே அதிர்ச்சியால் பாதிக்கிறது. புதியவற்றை எப்போதும் மறுக்கிற  விமர்சகர்கள் பிக்காஸோவின் ஓவியத்தை வன்மையாக நிராகரித்தார்கள்.

ஆனால் ‘பிக்காஸோ தன் ஓவியங்கள் மக்களுக்கும் விமர்சகர்களுக்கும் புரிய வெகுகாலம் ஆகும்’ என்று
ஒரு கலைஞனுக்குரிய கர்வத்தோடும், வருங்காலக் கலைத்துறையின் சரியான தேவை உணர்வோடும்
உருவச்சிதைப்பு ஓவியங்களை அறிமுகப்படுத்தினார்.

இன்று பிக்காஸோவின் ஓவிய மொழியைப் பற்றிப் புகழ்ந்து பேசாதவர் யார்?

“Modern Art Aewerica”  என்ற நூலில் குறிப்பிடப்பட்டது போல, தன்னுள் கிளர்ந்தெழும் உணர்வுகளை வெளிப்படுத்தவே நவீன ஓவியன் வரைகின்றான். நவீன ஓவியனின் அர்த்தங்களைப் பார்வையாளர்கள் எல்லா நேரங்களிலும் தெளிவாகப் புரிந்து கொள்வதில்லை. ஒரு சந்தர்ப்பத்தில் பிக்காஸோ கூறினார், எனக்கு ஆங்கிலம் தெரியாது. எனவே எந்தவொரு ஆங்கில நூலும் எனக்கு வெறுமையாகவே இருக்கும்.அதனால் ஆங்கில மொழியென்று ஒன்று இல்லையென அர்த்தமாகாது. மேலும் எனக்கு என்ன தெரியாது என்பதனை
நான் உணர்ந்துக்கொள்ள முடியாதாயின் அதற்காக என்னைத் தவிர வேறெவரையும் குறைகூறுவானேன்?

சென்னைக் கலைத்தொழில் கல்லூரி ஓவியப் பேராசிரியர் சி. ஜே.அந்தோணிதாஸ் பின்வருமாறு கூறுகின்றார். “எனக்குப் பெண்ணின் உருவ அமைப்பு மிகவும் பிடிக்கும். நூற்றுக்கணக்கான நிர்வாண ஒவியங்களை நான் வரைவதற்கு   இதுவே காரணமாகும். பெண்மையின் அழகை, கண்ணியத்தை இந்த ஓவியங்களில் நான் காட்டியிருக்கிறேன்.  “காதல் பாடல்” (Song is Love) எனும் ஓவியம் இரண்டு பெண்களைக் கொண்டது.  “செய்தி” (The Massage) என்ற படத்தில் வரையப்பட்ட பெண்ணும் வரைந்த ஓவியனும் இடம் பெற்றிருக்கிறார்கள். தோட்டம்” (Garden) என்னும் ஓவியம் மெல்லிய மரஞ்செடி கொடிகளின் பின்னணியில் அழுத்தமான வண்ணக்கலவையின் மேலே அழகிய பெண் ஒருத்தியின் அம்மணக்கோலம் பழுப்பு நிறத்தில் ஒயிலாகக் காட்டப்பட்டுள்ளது. அம்மணமான உடலுக்கும் நிர்வாண ஓவியத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.

நிர்வாணம் கலைக்கு ஒரு பொருள் அல்ல. நிர்வாணம் கலையின் ஒரு பகுதியாகவே விளங்குகின்றது.
தொடக்க காலத்திலேயே முதலோவியச் சிறப்புப் பெற்றவர்கள் பெண்கள் தாமே!”

பெண்ணில் மெய்யியல் (Philosophy) பூர்வமான ஓர் அழகியல் படர்ந்துள்ளது.
பெண்களின் உடல் வளைவுகள் பல்வேறு படிமங்களை உண்டாக்கவல்லதாக உள்ளன.
எனவே கோடுகள் முக்கியத்துவம் பெறும் ஓவியங்களில் பெண் உருவங்கள் உயிர்த்துடிப்புடன் வந்து விழுந்து விடுகின்றன.நவீன ஓவியர்கள் பெண் சித்திரிப்பு அல்லது பெண் நிர்வாண ஓவியங்களை பிரக்ஞை பூர்வமாகவே வரைகின்றனர்.அதனால்தான் இதில் அழகியலுக்கூடாக மினுக்கமுறும் தத்துவார்த்த சாரத்தை அல்லது இருப்பை தரிசிக்க முடிகின்றது.

நுனிப்புல் மேய்தலில் இவை அபத்தமாகவும் ஆபாசமாவும் தான் தெரியும்.
மூன்றாம் தரமான “நோய்வாய்ப் பட்ட” கலைகளில் (மூன்றாம் தர சினிமா முதலான) பெண்களின் கவர்ச்சியைப் பார்த்த அருட்டுணர்வினாலும் பெண்களை வெறும் கவர்ச்சிப் பண்டங்களாக பார்க்கின்ற மனோ பாவத்தினாலும்ஏற்படும் விபரீதங்கள் இவை.

தமிழகத்தின் தலை சிறந்த நவீன ஓவியர் ஆதிமூலம் சொல்வது போல், நவீன ஓவியம் இசையைப் போன்றது தான். இசையைத் தொடர்ந்து கேட்டு உள்வாங்கி அதிலேயே மனதை அமிழ்த்தி ஒரு கட்டத்தில் எந்த இடத்திலிருந்தாவது லயம் கசியும்போது, செவிப்புலன் மற்ற ஓசைகளை நிராகரித்து, லயம் ஒன்றையே கிரகித்து சந்தோஷிக்கப் பழகுவதைப் போலவேகருத்தூன்றி, நவீன ஓவியங்கள் தரும்அனுபவத்தையும், அது பற்றிய புரிதலையும் பெற, ஓவியங்களைஆழ்ந்து நோக்கப் பழகுவதாலேயே முடியும். சில பண்டிதத் திறனாய்வாளர்கள்“ஓவியம் பற்றி அகநானூற்றிலே அங்கே சொல்லியிருக்கிறது, புறநானூற்றிலே இங்கே சொல்லியிருக்கிறதுஎன்று சொற்பொழிவாற்றிவிட்டு “மார்டன் ஆர்ட்” என் உள்ளே செல்ல வில்லையே என்று அங்கலாய்ப்பார்கள்.
தூங்குவது போல் நடிப்பவர்களை அவ்வளவு சுலபத்தில் எழுப்பி விட முடியாதுதான்.
வார்த்தைகள் சமிக்ஞை காட்டும் அடையாளத்திற்கு மேல் சென்று,
ஒரு கவிதையை ரசிக்கக் கூடிய ரசனையை அடைபவர்களுக்கு நவீன ஓவியத்தை அணுகுவதில் பிரச்சினை இருக்காது. அறிந்து கொள்வதில் உள்ள ஆர்வமும்,  நிரந்தரத் தேடலும் தவிர்க்க இயலாத அவசியமல்லவா!

இத்தகைய புரிதலுடன் இனி, ஜோஜ் கீற்றை அணுகுவோம்.

ஜோர்ஜ் கீற் இந்த நூற்றாண்டு (1901-1993) முழுக்க வாழ்ந்த தலைசிறந்த ஈழத்து ஓவியக் கலைஞர்.
கீற் சிறு வயது முதல் ஓவியம் வரைவதில் ஆர்வம் காட்டி 1927இல் தீவிர ஓவியராக மாறினார்.
பத்து வயதில் ‘சிலுவையில் யேசு’ என்னும் சித்திரத்தினை வரைந்து பரிசு பெற்றார். இவர் ஒரு கவிஞர், எழுத்தாளர், பல்வேறு மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவர். சிங்கள கவிதைகளை (கவி சிலுமின, முவ தெவ்தாவத)  ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். ‘கீதகோவிந்தம்; என்ற சமஸ்கிரத காவியத்தை ஆங்கில மொழியில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.
தத்துவ விசாரணைகளில் வேர்பதித்தவர். குறிப்பாக கீழைத்தேய மெய்யியலையும் (இந்து, பௌத்தம்)
இரசனையியலை (Aesthetics) யும் நன்கு அறிந்திருந்தார். பௌத்த மெய்யியலை பின்னவல தீரானந்த தேரர்
மூலமாக தெரிந்து கொண்டார்.  இந்து மெய்யியலை ரவீந்திரநாத் தாகூர் நூல்களை கற்று அறிந்து கொண்டார்.
இந்திய இசை தொடர்பான அறிவினைப்பெற்று, இந்திய ராகங்கள் பற்றிய ஓவியங்களை கீழைத்தேய,
மேலைத்தேய ஓவிய நுட்பங்களை பயன்படுத்தி வரைந்துள்ளார். மேலைத்தேய நவீன ஓவியத்தின் கூறுகளையும் அவற்றின் தேடல்களையும் தெரிந்திருந்தார். குறிப்பாக பிக்காசோவின் ஓவிய அணுகுமுறைகளைப் பின்பற்றி பல ஓவியங்களைத் தீட்டி உள்ளார். எடுத்துக்காட்டாக, பிக்காசோவின் ‘குவர்ணிக்கா’ ஓவியத்தித்தினை கீற்றின் ‘யமனை வெற்றி கொள்ளல்’ என்ற ஓவியத்துடன் ஒப்பிடுவர்.

இத்தகைய வீச்சான ஆளுமைக்கூடாக 12,000க்கும் மேற்பட்ட ஓவியங்களையும், சித்திரங்களையும்,
வரைகளையும் சிருஷ்டித்துள்ளார். ஒரு கலை பாரம்பரியத்தின் முழுமை என்று ஜோர்ஜ் கீற்றை சொல்ல முடியும். இவரது ஓவியங்கள் தத்துவார்த்த பகுப்பாய்வின் வெளிக்காட்டல்களாகும்.

கீற்றின் ஆரம்ப கால ஓவியங்களின் அடிநாதமாய் பௌத்த மெய்யியல் இருந்தது.
கண்டிய இயற்கைக் காட்சிகளையும் வடித்துள்ளார். பின், இந்து மெய்யியலால் ஈர்க்கப்பட்டு, அதனை தமது ஓவியங்களில் தனித்த ஆளுமையுடன் பதிவு செய்துள்ளார். பௌத்த, இந்து, கிறிஸ்தவ சமய, கலாசார அம்சங்களை பிரதிபலிக்கும் ஓவியங்களை வரைந்த போதிலும், பௌத்த பண்பாட்டினை சித்திரிக்கும் ஓவியங்களே இவரது ஆளுமையை முழுமையாய் வெளிப்படுத்தின. கொழும்பு பொறளையிலுள்ள கோதமி விகாரை ஓவியங்கள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். இங்கு கௌத்தம புத்தரின் வாழ்வியல் சம்பவங்களை பிரதிபலிக்கும் ஓவியங்கள் காணப்படுகின்றன. மாயாதேவியின் கனவு, புத்தரின் பிறப்பு, யசோதனையின் திருமணம், தேவாராதனை, வில்வித்தை பழகுதல், அரண்மனையைத் துறந்து வெளியேறல், யமனை வெற்றி கொல்லுதல், குதிரையில் புறப்படுதல்,
துறவு பூணுதல் எனத்தொடர்ந்து பரிநிர்வாணம் அடைதல் வரையுள்ள ஓவியங்கள் காணப்படுகின்றன.

கீழைத்தேய மெய்யியலையும், மேலைத்தேய ஒவிய பாணியையும் இணைத்து உயிர்ததும்பும் ஓவியங்களை படைத்துள்ளார். இந்த ஓவியங்கள் ஓரு புதிய பரிமாணத்தினை வெளிப்படுத்தின. ஆனால், பெண் சித்திரிப்பு ஓவியங்களை நுட்பமாகவும், ஆழமாகவும், அழகியல் பூர்வமாகவும் வரைந்து வெற்றி கண்டவர் ஜோர்ஜ் கீற்.

 

ஜோர்ஜ் கீற் கோடுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். எனவேதான் பெண்ணின் உடல் வளைவுகள் இவரது ஓவியங்களில் முதன்மை இடத்தை பெற்று விடுகின்றன. “நாயகி” என்ற பொருளில் அவர் வரைந்த தொடர் பெண் சித்திரிப்பு ஓவியங்கள் மிக அருமையானவை. காதல் பற்றிய ஓவியங்களிலும் பெண் சித்திரிப்பு கலாபூர்வமாக சித்தரிக்கப்பட்டுள்ளன. சிகிரிய ஓவியங்களைப் புதிய பரிமாணத்தில் வெளிக்கொணர்கின்ற ஓவியங்களாகவும் இவற்றைக் காணலாம். இவை நவீன ஓவியத்தின் புதிய ஓட்டத்திற்கு வழியமைப்பனவாக அமைந்தன.

“கிறிஸ்து ராஜா” என்ற ஓவியத்தில் கிறிஸ்துவுடன் பெண்கள் காணப்படுகின்றனர்.
பொதுவாக கிறிஸ்துவை சித்திரிக்கும் ஓவியங்களில் ஆண்களே காணப்படுவர்.
ஆனால், கீற் கீழைத்தேய மரபை பின்பற்றி, அதாவது புத்தர் சம்பந்தப்பட்ட ஓவியங்களில் பெண்கள் காணப்படுவது போல, யேசு கிறிஸ்து காணப்படும் ஓவியத்திலும் பெண்களையே வடித்துள்ளார்.

இவரின்  “புஷ்பாஞ்சலி” என்ற எண்ணெய் வண்ணத்திரை ஓவியத்தை எடுத்துக்கொள்வோம்.
இதில் மூன்று பெண்களும் இரண்டு சிறுமிகளும் காணப்படுகின்றனர். எல்லோருடைய கைகளிலும் தாமரைப் பூக்கள். “போதி சத்துவ பத்மபாணி” என்ற அஜந்தா ஓவியத்தைப் பற்றி கலாநிதி ஆனந்தகுமார சுவாமி குறிப்பிடுவது போல, இந்த ஓவியத்தையும் குமார சுவாமியின் பாணியில் பார்க்கலாம்.

இந்த ஓவியத்தில் உள்ள பெண்களின் கைகளிலும் மற்றும் பல இடங்களிலும் தாமரைப்பூக்கள் இருக்கின்றன.
மேலோட்டமாய் பார்ப்பவர்களுக்கு இவை மலர்கள் மட்டுமே. ஆனால், இந்திய மெய்யியலில் தாமரைக்குகு
நிறைய அர்த்தமிருக்கின்றது. இது ஒரு படிமமாகவே வரையப்பட்டுள்ளது. “புத்தர்” என்ற பெயருக்கு வெளிச்சம் என்பது பொருள். புத்தர் சூரியனுக்கு நிகரானவர். சூரியனுடைய ஒளிபட்டு தாமரை விரிகின்றது. இவ்வோவியத்தில் தாமரை குறியீடாகின்றது.

இவரின் “தெய்வீக இணைவு” என்ற ஓவியத்திற்கு கெ.றொ.கொன்ஸ்ரைன் பின்வருமாறு விளக்கமளித்துள்ளார்.

‘இது சாதாரண உடலுறவினைச் சித்திரிக்கும் ஓர் ஓவியம். ஆனால் இதனூடாக இவர் காமம், காதல் ஆகியவற்றைத் தெய்வீகத் தன்மையுள்ளதாகக் காட்ட விழைந்துள்ளார். இதில் சிற்றின்பம் மீதான இவரது தத்துவ கண்ணோட்டம் நன்கு தெரிகிறது.
மேலும், அந்த ஓவியத்தை நோக்குகையில்  ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் குறை நிரப்பிகள் என்ற
கருத்தினை எம்முன் எழச்செய்கிறது. இதில்தான் இவரது தத்துவக் கண்ணோட்டம் முழுமையடைகின்றது.

ஆக, ஜோர்ஜ் கீற்றின் பெண் சித்திரிப்பு ஓவியங்களைப் பற்றி சிந்திக்கின்ற பொழுது,
அதனை மேலும் அடர்த்தியாக்கிப் பேச விஷயங்கள் நிறையவே உள்ளன.
இவை வெறும் ஆபாசமானவை அல்ல; தத்துவ அடையாளம் குறித்த அழகியல் பிரக்ஞை கொண்டவை.

பெண் சித்திரிப்பு ஓவியர்கள் பலர் ஆண்களாகவே இருப்பது கண்கூடு. இவர்களால் பெண்மையின்
உண்மை ஒளியினை வெற்றிகரமாக வெளிக்கொணர முடியுமா என்ற வினா
இன்றைய நவீன பெண்ணிலைவாதிகளால் விவாதிக்கப்படுகின்றது.

( 07.01.1996 இல் எழுதப்பட்ட இக்கட்டுரை புதிய தகவல்களுடன்
சற்று விரிவாக்கப்பட்டுள்ளது. – ஏ.எச்.எம்.நவாஷ் ‘ஈழக்கவி’ )

· ௦௦௦௦

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment