Home » இதழ் 06 » நடேசன் நேர்காணல்-பகுதி-02

 

நடேசன் நேர்காணல்-பகுதி-02

 

 

நோயல் நடேசன் அல்லது என். நடேசன் இன்றைய ஈழத்தமிழ்ப்பரப்பிலும் புலம்பெயர் பரப்பிலும் அதிக சர்ச்சைக்குள்ளானவர்.  பல நெருக்கடிகளையும் கடினமான விமர்சனங்களையும் மிக மோசமான அவதூறுகளையும் சந்தித்தவர். இலக்கிய, ஊடக இயக்கத்தில் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறார். இந்த நேர்காணலி்ல்கூட நடேசன் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தக் கூடிய கருத்துகளைக் கூறியிருக்கிறார். இவை தொடர்பான விவாதங்களை உருவாக்குவதன் மூலம் தேவையான சிந்தனையை நாம் உருவாக்கிக்கொள்ளலாம் என்பதே இதன் நோக்கம்.

புலம்பெயர்ந்து அவுஸ்ரேலியாவில் வாழ்ந்து வரும் நடேசனின் ஊடக, இலக்கியச் செயற்பாடுகள் இதுவரையிலும் புலம்பெயர் சூழலிலேயே நடந்தன. அவுஸ்ரேலியாவில் 12 ஆண்டுகளாக ‘உதயம்’ என்ற பத்திரிகையை தமிழ் – ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியிட்டார். கூடவே ‘வாழும் சுவடுகள்’  பாகம் – 01, பாகம் 02 என இரண்டு புத்தகங்களையும் ‘வண்ணாத்திகுளம்’ என்ற நாவலையும் எழுதி வெளியிட்டுள்ளார். “உனையே மயல் கொண்டு“ இன்னொரு கதைநூல். தற்போது இன்னும் ஒரு புதிய நாவலை எழுதிவருகிறார். அண்மையில் இது வெளியாகவுள்ளது. ‘வண்ணாத்திகுளம்’ ஆங்கில மொழியில் வெளியாகி, அமெரிக்காவின் பல்கலைக்கழகங்களில் ‘தெற்காசிய இலக்கியம்’ என்ற தலைப்பில் வைக்கப்பட்டுள்ளது.

இலங்கைப் போரின் பின்னர் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிப் பணிகளை ‘வானவில்’ என்ற அமைப்பின் ஊடாகச் செய்து வருகிறார் நடேசன். இந்தப் பணியில் அவர் புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும் பிற நண்பர்களையும் இணைத்துள்ளார்.நடேசனுடன் நடத்தப்பட்ட நேர்காணலின் ஒரு பகுதி முந்திய இதழில் வெளியாகியிருந்தது. அதன் தொடர்ச்சி இதுவாகும். இந்த நேர்காணல் நேரில் ஆரம்பித்து மின்னஞ்சல் வழியாகச் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சி அடுத்த இதழில் முடிவுறும்.

சந்திப்பும் பதிவும்- கருணாகரன்

 

—————————————————————————————————————

நேர்காணல்- பகுதி இரண்டு

 

  • இன்றைய நுண்ணாய்வு முறைகளில் பிராந்திய அடையாளங்கள் சமூக அடையாளங்கள் முக்கியமாகப் பார்க்கப்படுகின்றன. இதைக் குறித்த கல்வி கூட முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. தவிர உலகமயமாக்கலின் வழியாக அடையாள அழிப்புகள் தாராளமாக நடக்கின்றன. இந்த நிலையில் இலக்கியத்தில் மேற்கொள்ளப்படும் இந்த அடையாளப் பதிவுகளும் தனித்துவக் கவனமும் முக்கியமானது என்ற நிலைப்பாடு தவிர்க்க முடியாது. இதைத் தவிர்த்து நீங்கள் சொல்வது ஒரு வகையில் இன்னொரு அடையாளத் தவிர்ப்பாக அமையுமல்லவா?

 

பிராந்திய அடையாளங்கள் என்பது மாற்றமடைந்து வரும் சமூகத்தின் ஒரு காலகட்டத்தின் நிலையாகும். அதாவது சிறுகுழந்தையின் மழலைப்பருவம். நடக்கும் பருவத்தில் அந்த குழந்தைக்கு விளயாட தேவைiயான பொருட்களை கொடுப்பது, பிறகு பருவத்திற்கு ஏற்ற கல்விகளையும் ஊட்டுகிறோம். இதைப்போல, அந்தப்பிள்ளை சுவரில் கிறுக்குவதை அன்புடன் சிறந்த ஓவியக்கலையின் முதற்படி எனப் பெருமைப்படுகிறோம். விளையாட்டில் பங்கெடுத்து வெற்றிபெற்ற குழந்தைகளுக்கு கேடயங்கள் கொடுக்கிறோம். இவைகள் தேவையானது,அவசியமானது என்பதில் இரண்டாவது கருத்தில்லை.

ஆனால் இவைகளை நாம் உச்சமாக கருதுவதில்லைத்தானே? ஒலிம்பிக் வீரரையும் முத்தையா முரளீதரனையும் வான்ஹொக்கையும் நாம் கொண்டாடுகிறேம். காரணம் அவர்கள் உச்சங்களை தொட்டதால்.

இதற்கப்பால் மனிதர்கள் வாழ்வின் வசதிகளுக்காகவும் பொருளாதாரத்தின் விருத்திக்காகாகவும்  உயிர் வாழ்வதை நீடிப்பதற்கும் பலவிடயங்களை மற்ற சமூகங்களிடம் எடுத்து வருகிறார்கள். இது தேவையானது. ரோமர்களிடம் இருந்து சட்டங்களையும் சிவில் பொறியியல் முறைகளையும் பிரித்தானியர்கள் பெற்றார்கள். அதேபோல் இந்தியர்களிடம் இருந்து கணிதத்தையும் கிரீகில் இருந்து தத்துவத்தையும் பெற்றார்கள்.

 

இவ்வாறே சீனர்களிடம் இருந்து வெடிமருந்து, அச்சுக்கலை  என்பன வந்தன. அரேபியர்களிடம் இருந்த மனித நாகரிகத்தை கடன் வாங்கினோம். இவைகள் உலகமயமாக்கலின் நன்மைகள் அல்லவா! கீழைத்தேசத்தவர் நோய்களைக் குணப்படுத்த  மேற்கு நாட்டு வைத்தியத்தைத் தேடுவதும் பஞ்சத்தைப் போக்க வீரியமான விதைகளைத்த் தேடுவதும் இப்படியானதே.மெக்சிக்கோவில் இருந்து வந்த மிளகாயையும் சீனாவில் இருந்து வந்த அரிசியையும் நமது பொருட்களாக்கினோம்.

இலங்கையில் தமிழர்கள் சண்டை செய்ய ஆயுதங்களை எங்கே வேண்டினார்கள்? வெளிநாட்டு இறக்குமதிதானே? இந்திய மேற்கு மாகாணங்களில் ஆதிவாசிகள் தாங்கள் வாழும் வன உரிமைகளை பாதுகாக்க எடுத்த ஆயுதங்கள் வில்லம்புகளா? நவீன ரக துப்பாக்கிகள் தானே?

பொருள் சார்ந்த வர்த்தகம், பணம், மனித உரிமைகள் என்பனவற்றை தனது உரிமையாக்க நினைத்த மேற்கத்தைய அரசுகளின் கைகளில் இருந்து அவை இப்பொழுது வெளிப்பரவி விட்டன.  அமெரிக்க, ஐரோப்பிய கம்பனிகள் 4000 பில்லியன் டொலர் பணத்தை வைத்துக்கொண்டு அமெரிக்காவிலோ ஐரோப்பவிலோ முதலிடாமல் சீனா, இந்தியா, லத்தீன் அமெரிக்காவில் முதலிட விரும்புகிறார்கள். காரணம் அங்குதான் லாபம் பெறமுடியும். இது எதைக்காட்டுகிறது? அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உருவாகிய  பொருள் முதல் (Capital)  இப்பொழுது ஆசியாவுக்கும் லத்தீன் அமரிக்காவுக்கும் சென்றுவிட்டதால் வேலை இல்லாத தொழிலாளர் மேற்கில் உள்ளனர். இதுதான் தற்போது அமெரிக்க, ஐரோப்பிய தலைவர்களின் பிரதான தலைபோகும் பிரச்சனையாகும்.

அதே போல் நாம் பேசும் மனித உரிமை, சட்டம் எல்லாம் எங்கிருந்து வந்தது? எமது புலம் பெயர்ந்தவர் பயனடைந்த அகதிகள் கருத்தியல் யாரால் உருவாக்கப்பட்டது? இவை எல்லாம் உலகளாவிய கருத்தியலின் வடிவங்களே.

முந்திய காலத்தின் பின்பு கத்தோலிக்க மதபீடத்தின் செல்வாக்கு ஐரோப்பாவில் உடைந்ததால் அங்கு சிந்தனையில் மறுமலர்ச்சி உருவாகியது. கைத்தொழில் புரட்சி நடந்தது. அக்காலத்தில் வலிமையான அரசுகள் உருவாக முடிந்தது. அதனால் பெருப்பாலான விடயங்கள் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் இருந்து வருவதால் குண்டுச்சட்டியில் குதிரையோட்ட விரும்பும் சிலர் உலகமயமாக்கம் என்று எதிர்க்கிறார்கள். மேற்கு நாடுகளிலும் சிலர் இதற்கு ஒத்து ஊதுகிறார்கள்.

நாம் உலகமயமாக்கலுக்குப் பயப்படாமல் நல்லனவற்றை எம் வயப்படுத்தவேண்டும். எமது மேன்மையான விடயங்கள் காலத்தால் நிற்கும். சட்டங்கள், ஒழுங்குகள் இல்லாத காலத்தில், தனி மனித ஒழுக்கம் முக்கியமாக இருக்கவேண்டிய நிலையில், ஆசியாவில் மதங்கள் உருவாகி உலகெங்கும் சென்றன. புத்தரின் சிந்தனை உலக மக்களில் பெரிய தொகையினரை நாகரீகப்படுத்தியது.  புத்த மதத்தின் சிந்தனைக்கு மேலாக சிறந்த தனி மனித சமூக ஒழுக்க கோட்பாடு உலகத்தில் உருவாகவில்லை என்பது எனது கருத்து. இதே போல் மாகாபாரதம் போன்ற இலக்கிய வடிவமும்  திருக்குறள் போன்ற ஒழுக்க நூலும் காலத்தைக் கடந்து எக்காலத்திலும் நிலைத்து நிற்பவை. இப்படியான உச்சங்களை உருவாக்கிய சமூகத்தின்  வழிவந்த நாங்கள் பிராந்திய அடையாளங்கள் என்ற காரணத்தால் மட்டும் அவை பாதுகாக்கப்படவேண்டும் என்று கூறுவதை ஏற்கமுடியாது. அதற்காகத்தான் தொல்பொருள் காப்பகங்களை வைத்திருக்கிறோம். நான் தென்கொரியாவில் ஜேஜு தீவுக்கு சென்றபோது அவர்களது குடிசைகள், மீன்பிடிப்படகுகள் எல்லாம் அருங்காட்சியகத்தில் மட்டும்தான் இருந்தன.

 

*நீங்கள் குறிப்பிடுவதைப்போல அல்லது எதிர்பார்ப்பதைப்போல இனவாதத்தை அவ்வளவு எளிதாகக் கடந்து விடமுடியுமா? அதற்கான சாத்தியங்கள் ஏதேனும் உண்டா? அல்லது இந்தக் கருத்து நிலை எப்போதையும் போல சிறிய தரப்பொன்றின் அபிப்பிராயமும் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும்தானா?

 

பல்லினங்கள் மதங்கள் சாதிகள் செறிந்து  வாழும் நாட்டில் இன முரண்பாடு இருப்பது இயற்கையானது. அதற்கு எந்த நாடுகளும் விதிவிலக்கு இல்லை. தமிழ்நாட்டில் சாதிகளுக்கிடையில் போராட்டம் வெடிக்கிறது. இது எதைக்காட்டுகிறது? இனத்துக்குள்ளும் மோதல் வரும் என்பதையே.

கற்கால மனிதன் வேட்டையாடுவதற்கு பத்து அல்லது பதினைந்திற்கு உட்பட்டவர்களை மட்டும்தான் அழைத்து செல்வான். காரணம் அவ்வளவு பேரில் மட்டும்தான் ஆழமான நம்பிக்கை வைக்கமுடியும். ஒரு மனிதன் பத்து அல்லது பதினைந்து மனிதரோடு மட்டுமே ஒன்றாக இருக்கலாம். அதற்கு மேற்பட்டவர்களிடம் ஒரு அன்னியத்தன்மை உருவாகிவிடும். இதற்கு இனம், மதம், ஊர், சாதி, வர்க்கம், நிறம் என காரணம் தேடுவது வழக்கம்.

இனவாதம் இலங்கையில் சிங்கள மக்களுக்கு மட்டும் தான் உள்ளது. மற்றவர்கள் இனவாதமற்றவர்கள் என எந்த முட்டாளும் வாதிட முடியாது. விடுதலைப்புலிகளின் இனவாதம் தெரிந்ததுதானே. இதில் வல்வெட்டித்துறையினருக்கும் யாழ்பாணத்தவர்கள் என்போருக்கும் பாகுபாடு விசேசமாக இருந்ததை நாம் அறிவோம்.

இதுபோல் நாங்கள் வாழும் மேல்நாடுகளிலும் இனவாதம் உள்ளது. சமத்துவம், சகோதரத்துவம் என புரட்சி செய்த பிரான்சில் இனவாதம், யூத எதிர்ப்பு எல்லாம் உள்ளதே?சகோதரத்துவம் பேசும் இஸ்லாமியர்கள் ஆட்சி புரியும் வளைகுடா நாடுகளில்  மற்றைய நாட்டு முஸ்லீம்கள் மட்டுமல்ல சியா முஸ்லீம் மக்களை பிரிவினைப் படுத்துகிறார்களே?

மேற்குநாட்டு அரசியல்வாதிகளில் பெரும்பாலானவர்கள் இனத்திற்கு அப்பால் நின்று நாட்டையும் மக்களையும் பற்றிப் பேசுவார்கள். நாட்டில் சகலருக்கும் சட்டம் கல்வி வசதி வாய்புகள் வேண்டுமென வாதிடுவார்கள். இந்த மாதிரியான அரசியல்வாதிகைளை நாம் உருவாக்கும்போது இலங்கையில் பிரச்சினை சுமுகமாகும். அப்படி யாராவது ஒரு அரசியல்வாதியை நாம் உருவாக்கி இருக்கிறோமா என்பது கேள்விக்குறி.

தமிழர்கள் ஆரம்பகாலத்திலே இனவாதம் பேசியதன் விளைவாகத்தான் சாதாரண சிங்கள மக்களிடம் இனவாதம் ஏற்பட்டது என்பது எனது கருத்து.இலங்கையின் சரித்திரத்தைப் பார்த்தால் ஐம்பதுக்கு மேற்பட்ட தமிழ் மன்னர்கள் அரசாண்டு இருக்கிறார்கள். அவர்களுக்குச் சிங்களப் பிரதானிகள், மந்திரிகள் ஆதரவாக இருந்திருக்கிறார்கள்.  அதேவேளையில் தென் இந்திய அரசர்களால் இலங்கை ஐம்பது முறைக்கு மேல் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. இதை விட எட்டாம் நூற்றாண்டில் தென் இந்தியாவில் புத்துயிர் பெற்ற சைவத்தின் ஆக்கிரமிப்பில் இருந்து புத்த சமயத்தையும் வழிபாட்டுத் தலங்களையும் பாதுகாக்க அவர்கள் மிகவும் போராடி இருக்கிறார்கள்.இப்படியான சரித்திர நிகழ்சிகளால் சிங்கள மக்கள் தங்களது மொழி சமய கலாச்சாரத்தை பாதுகாக்க இன உணர்வை கூராக்க வேண்டியதாக உள்ளது. இந்தியா போன்ற பெரிய தேசத்தின் அருகில் இருந்து தனித்தன்மையாக வாழ்வது இலேசான விடயம் அல்ல.

இப்படியான கட்டாயம் உலகத்தில் வேறு எந்த நாட்டிற்கும் இத்தனை ஆயிரம் வருடங்கள் இருக்கவில்லை. இப்படியான கட்டாயத்தில் இருக்கும் சிங்கள மக்கள் 18ம் நூற்றாண்டில் அவர்களது இடத்தில், மலையகத்தில் அவர்களது காணிகளில் பலவந்தமாக ஆங்கிலேயரால் குடியேற்றப்பட்ட இலட்சக்கணக்கான இந்திய தமிழர்களை வரவேற்காது விட்டாலும் பெருமளவில் பொறுத்துக் கொள்ளகிறார்கள். பதினைந்தாம் நூற்றாண்டில் போத்துக்கேயரால் துன்புறுத்தப்பட்ட இஸ்லாமியர்களை உள்நாட்டிலும் கிழக்கு கரையோரத்திலும் குடியேற வைத்தது போன்ற சம்பவங்கள் பெரும்பலான சிங்கள மக்கள் பெருந்தன்மையானவர்கள் என்பதை ஆதாரத்துடன் காட்டுகிறது. மேலும் பல சம்பவங்களை நான் எடுத்துக் கூற முடியும். குறைந்த பட்சம் எந்த இனத்திலும் பார்க்க சிங்களவர் அதிக இனவாதிகள் இல்லை.

அதேவேளையில்  இனவாதம் என்பது எல்லா மனிதர்களுக்கும் இயல்பானது. அளவுகளில் வித்தியாசப்படலாம். அது கடலின் அலை போல் எப்போதும் அடித்துக்கொண்டுதான் இருக்கும். இரண்டு சிறுபான்மை இனங்கள் சிங்களவர்கள் மத்தியில் வாழும்போது வடகிழக்கில் வாழும் பத்துவீதத்திற்கும் குறைவான தமிழர்கள் வாழ முடியாது என்பது எமது தலைவர்களின் தராதரத்தைக்காட்டுகிறது. நாட்டை பிரிக்கவேண்டும் என்று கேட்டு அவர்களை நாம் கொலை செய்ய அவர்கள் எங்களை பயங்கரவாதிகள் என கொல்லுவதற்கு முப்பது வருடங்கள் நடத்திய வன்முறை முடிவுக்கு வந்தாலும் அந்த வன்முறையின் பக்கவிளைவுகள் முதலாலாவதாக தீர்க்கப்படவேண்டும். மக்கள் அமைதியாக வாழ்வதற்கு  விடவேண்டும். இதன் பின்பே அரசியல் கோரிக்கைளுக்கு இடமளிக்கவேண்டும்.

அதாவது சாதாரணமாக வன்னியில் பாதிக்கப்பட்ட தமிழரின் தேவைகளைத்தான் இன்று அடிப்படையாக கொண்டு இயங்கவேண்டும். இதை உதாரணமாகப் புரிய வைக்கமுடியும். சமூகத்தில் கல்வியை ஆரம்ப பாடசாலையில் இருந்து தொடங்குதற்கு பதிலாக எமது அரசில்வாதிகள் பல்கலைக்கழகத்தில் தொடங்குகிறார்கள்.

இன முரண்பாடுகள் ஒவ்வொன்றாக களையப்படவேண்டும். மற்ற இனங்களையும் அவர்களது காலாச்சார வரலாற்று விடயங்களை புரிந்து கொண்டதாக நமது கோரிக்கைகளும் போராட்டங்களும் இருக்க வேண்டும். ஏற்கனவே இருக்கும் இனவாதத்தை வளர்ப்பதாக இருக்கக் கூடாது. தருமர் திரௌபதையை பயணம் வைத்து பகடை விளையாடியது போல் அப்பாவி ஏழைமக்களின் உயிரை வைத்து அரசியல் சூதாட்டம் நடத்தக் கூடாது.

பேச்சுவார்த்தை என்ற மிகவும் பொருத்தமற்ற தமிழ்ச் சொல் தற்பொழுது நெகொசியேசன்  ( Negotiation) என்பதற்கு ஈடாக பாவிக்கப்படுகிறது. இந்த நெகொசியேசன் இரண்டு பக்கமும் வெற்றி பெறும்படியாக நடத்தப்பட வேண்டும். இலங்கைச் சரித்திரத்திலே இந்த அர்த்தத்தில் பேச்சுகள் எக்காலத்திலும்  நடந்ததில்லை. சில பாராளுமன்ற ஆசனங்களை வைத்திருப்பதற்காக இனவாதப் புகையை  ஊதி நெருப்பாக்கும் நோக்கத்தில் அரசியல் நடத்தும், சொந்த நாட்டுக்கு எதிராக வெளிநாட்டில் குறை சொல்லியபடி திரியும் அரசியல் தலைவர்கள் இருக்கும் வரை நமது பிரச்சனை தீராது. புதிய சிந்தனை உருவாகினால் நல்லெண்ணத்தோடு தமிழர் சரிசமமாக வாழ்வதற்கு முடியும்.

இலங்கையில் நல்லிணைப்பு ஆணைக்குழுவுக்கு நான் வைத்த பதிலின் தமிழாக்கம் வீரகேசரியில் வெளிவந்தது. அதன் ஒரு பகுதி

“எல்லா மக்களும்  சமம் என்ற சம உரிமைப் பிரகடனம் (bill of Right)அது கீழ்வருவனவற்றை அடக்கி இருக்கவேண்டும்

1)இலங்கையின் சகலபகுதியிலும் உயிருக்கும் உடமைகளுக்கும் உத்தரவாதம்;

2)கல்வி தொழில் சம்பந்தமானவற்றில் சம உரிமை

3)தமது மொழி(சிங்களம் தமிழ் ஆங்கிலம); மற்றும் கலாச்சாரத்திற்கு ஏற்ப வாழும் உரிமை

4) சட்டத்தில் அரசியலில் அரசாங்க நிர்வாகத்தில்  அனைவரும் சம பங்குபெற உரிமை

5)எந்த பாகுபாடற்ற படி மொழி மதம் நம்பிக்கை அரசியல் சார்பு மற்றும் குடி இருக்கும் இடத்தை தேர்ந்து எடுக்கும் உரிமை அவசியமாகிறது

6) தமக்குரிய  அடையாளங்களை தேர்ந்தெடுக்க அவற்றோடு சேர்ந்திருக்கம் உரிமை

7) அரசாங்கத்துடன் தாம் விரும்பும் சிங்களம்  தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற ஏதாவது ஒரு மொழியில் தொடர்பு கொள்ள முடிதல்’.

 

*ஆனால் திட்டமிடப்பட்ட வகையில் இலங்கை அரசும் ஆட்சியாளர்களும் சிறுபான்மையினச் சமூகங்களின் அடையாளங்களை அழிக்க முயற்சித்து வருவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. நில ஆக்கிரமிப்பு மற்றும், பௌத்த அடையாளங்களின் மேலாதிக்க நிறுவுகை, சிறுபான்மையினரின் அடையாள அழிப்பு போன்றவை இந்தச் சமூகங்களைப் பதற்றத்துக்குள்ளாக்கியுள்ளன. இந்த நிலையில் எளிதாக இணக்கத்துக்கும் அமைதிக்கும் எப்படிச் செல்ல முடியும்?

 

இது பெரும்பான்மை சிறுபான்மை சமூகங்களின் உளவியல் சார்ந்த கேள்வி.

நிலம் சம்பந்தப்படட கேள்வியை உள்ளடக்கி நல்லிணைப்பு ஆணைக்குழுவுக்கு நான் வைத்த பதிலின் தமிழாக்கம் வீரகேசரியில் வெளிவந்தது. அதன் ஒரு பகுதி

‘எனக்குப் புரிந்தவரை தமிழர் பிரச்சனையை இரண்டாக வகுக்கலாம்

1)உண்மையான பிரச்சனை

2)மனத்தளவில் பரிந்து கொண்ட பிரச்சனை

1)உண்மையான பிரச்சனையாக நான் கருதுவது

1)1956ல் இலங்கையில் சிங்களம் மட்டும் அரசகரும மொழியாக கொண்டுவரப்பட்டது. பின்னர் தமிழர் எதிர்புகளை எதிர்கொண்டதின் விளைவாக  தமிழ் பாவிப்பு மொழியாக திருத்தப்பட்டாலும் இதுவரையில் திருப்திகரமாக  தமிழ்மொழி அமூல் நடத்தப்படவில்லை. இதனால் 24 வீதமான தமிழ் மொழிபேசும் மக்கள்(வடகிழக்கு தமிழர் மலையகத் தமிழர் இஸ்லாமியத்தமிழர்கள்) தங்கள் தாய் மொழியில் அரச கருமமாற்ற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

2) மொழிவாரியான தரப்படுத்தல் மூலம் தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் அனுமதி மறுக்கப்பட்டதாகும்.

2.மனத்தளவில் புரிந்து கொண்ட பிரச்சனைகள்.

1)சிங்களக்குடியேற்றம்

இலங்கை போன்ற சிறிய நாட்டில் மருத்துவ வசதிகள் முன்னேறி மலேரியா போன்ற நோய்கள ஒழிக்கப்படும் போது  மக்கள் தொகை பெருகியது.

இந்த நிலையில் எந்த அரசாங்கமும் அரசகாணிகளை மக்கள் குடியேற்றத்துக்கு கொடுப்பது தவிர்க்க முடியாது. வடமாகாணத்தில் பல காணிகள் நிலமற்ற யாழ்ப்பாண மக்களுக்கு கொடுக்கப்பட்டது. அதேபோல் கிழக்கு மகாணத்தில் அரச காணிகள் தென்னிலங்கை சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டது.

2) 1958 1977 1983 என நடந்த கலவர நிகழ்வுகள்.

இந்த நிகழ்வுகள் தமிழ் சிங்கள மக்களுக்கிடையே நடக்கவில்லை. அரசாங்கங்கள் தனது குற்ற ஒழுங்கை தடுக்கும் கடமையை செய்யாத படியால் ஏற்பட்டவை. நான் நேரில் பார்த்த 1983கலவரநிகழ்வு அரசாங்கத்தாலும் ஆயுதப்படையினராலும் நடத்தப்பட்டது.1983ன் பின் கடந்த 27 வருடங்கள் இப்படி ஒரு கலவரம் நிகழாதது அரசாங்கத்தால் இப்படி ஒன்று நடக்க முடியாமல் தடுக்கமுடியும் என்பதை எடுத்து காட்டுகிறது.’

 

தற்போது நாம் பேசும் வட கிழக்கு மாகாணங்கள் பிரித்தானியரால் நிர்வாகத்துக்காக வரையப்பட்டது. இந்த எல்லைகள் பண்டைக்காலத்தில் இருக்கவில்லை. மக்கள் ஆறுகளையும் குளங்களையும் அண்டியும் கடல்களின் அருகிலும் குடியிருந்தார்கள். நாட்டின் மக்கள் பெருகும்போது காடுகளை  அழித்து மக்களை குடியேற்றுவது எல்லா நாட்டிலும் வழமையானது. இதன்பொருட்டே கல்லோயா திட்டம் கிழக்கில் உருவானது. அப்போது கிழக்கு மாகாண மக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு ஆறுமாதங்கள் மற்றவர்கள் வரவழைக்கபடவில்லை என அறிகிறேன். அதன்பின்புதான் மற்றைய மாவட்டங்களில் இருந்த சிங்கள மக்கள் வந்தார்கள். கிழக்கு மாகாண தமிழ் மற்றும்  முஸ்லீமக்களுக்கு விவசாயத்திற் தேவையான நிலம் அங்கு இருந்ததே காரணமாகும். இதைப் போல் வடமாகாணத்தில் குடியேற்றங்கள் வந்தபோது தமிழ்மக்களுக்கு தேவையான நிலம் வவனியாவுக்கு வடக்கே இருந்தது. இப்பொழுதும் மாங்குளம் புளியங்குளம் பகுதியில் தேவைக்கு அதிகமான நிலம் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் நிலம் சம்பந்தமாக பிரச்சனையை பெரிதாக்கியது தமிழ்கட்சிகள். இதற்கு சிங்கள இனத்துவேசமே ஒரே காரணம் என்பதே. தமிழனாக பலகாலமாக வெட்கப்படும் விடயம் மட்டுமல்ல இப்படிப்பட்ட இனத்துவேச கட்சிக்கு எனது குடும்பங்கள் ஆதரவளித்து வாக்களித்தார்கள் என்பது வருத்தத்தை அளிக்கிறது.

அதைவிட இதை ஒரு அரசியல் பிரச்சினையாக்கி மக்கள் மனங்களை மூளைச்சலவை செய்வதிலும் இந்தக் கட்சிகள் வெற்றியடைந்து விட்டன.   இந்த ரீதியிலே போருக்குப் பின்னால் நில ஆக்கிரமிப்பு என்ற பதம் சுலோகமாகிறது. அரசாங்கம் சில விடங்களை தவறாக கையாளுகிறது. அவை போரால் ஏற்பட்டவை. அரசாங்கத்தின் நிர்வாக இயந்திரம் முப்பது வருடமாக செயலிழந்ததால் ஏற்பட்டவை. இவைகள் பற்றிக் கவனமாக நிர்வாகிகள் மற்றும் அரசியல்வாதிகள் தீர்வு காணவேண்டியது. தற்போது பல்கலைக்கழகங்கள் போன்றவைகளில் காணும் விடயம் போன்றது. இலங்கை போன்ற வளர்ந்து வரும் நாட்டில் உருவாகும் எல்லா விடயங்களுக்கும் இனவாத சாயம் பூசுவது மக்களுக்கு பலனைக் கொடுக்காது. வேண்டுமானால் பத்திரிகை எண்ணிக்கையைக் கூட்டவும் பாரளுமன்ற அங்கத்துவத்தை தக்கவைக்கவும் பயன்படலாம்.

இரண்டாவது மத அடையாளங்களின் திணிப்பு.

ஆதிமனிதன் இரண்டு காலை பாவிக்க தொடங்கியது அவன் மற்ற மிருகங்களில் இருந்து தப்பி வேகமாக ஓடுவதற்காக. அப்பொழுது அவனது உடலில் உள்ள மயிர்கள் குறைந்து வேர்வைச் சுரப்பிகள் அதிகமாகி அவனது உடலைக் குளிர வைத்தன. அந்தக்காலத்தில் அவனுக்கு எந்த மதமோ கடவுளோ இருக்கவில்லை. இறப்பை உணரத் தொடங்கிய மனிதன் தன்னை மீறியசக்திகளை கனவுகாணுவதால் ஆன்மா, மனசாட்சி என்ற சிந்தனைகள் உருவாகின்றன. அதனால் ஏற்படும் பிரதிபலிப்புகள் வளர்ந்து தற்காலத்து மதங்களாக பரிணாமிக்கிறது.

இந்த மதங்கள் மனிதர்களின் முக்கியமாக அரசாள்பவர்களின் ஈகோவோடு கலந்து விடுகிறது. இவைகளின் முரண்பாடுகள் போர்களின் சரித்திரம்.

மதத்தில் நம்பிக்கையற்ற நான் உங்கள் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாது  கேள்விகள் கேட்கிறேன்

இலங்கையில் காலம் காலமாக மத அடையாளங்கள் மக்கள் மேல் திணிக்கப்படுவது சரித்திரம். ஆரம்பத்தில் புத்தசமயத்தை இலங்கை அரசன் தழுவியதும் அது மக்கள் மீது திணிக்கப்பட்டது. இதன்பின் அன்னிய சமயமாகிய கத்தோலிக்க சமயம் மட்டும் எப்படி இலங்கைக்கு வந்தது? இத்தனை தேவாலங்கள் இலங்கையடங்கிலும் வந்தது எப்படி? இதற்கு அப்பால் எங்கோ இருந்து இஸ்லாமிய மதத்தை இவ்வளவு மக்கள் பின்பற்றும்படி எப்படி சந்தர்ப்பம் உருவாகியது ?

தமிழ்நாட்டில் எப்படி புத்தசமயம் அழிக்கப்பட்டது? ஏன் வைணவர்கள் விரட்டப்பட்டார்கள்?

இலங்கையின் வட பகுதியில் புத்த அடையாளங்கள் முன்பு இருக்க வில்லையா?; இலங்கையில் தெற்கே இந்து மத அடையாள்கள் காலம்காலமாக உள்ளது தானே?

எனது தந்தையின் ஊரான நயினாதீவில் காலம்காலமாக புத்த கோயில்கள் இரண்டு உள்ளன. உங்களுக்கு அந்த ஊரில் புத்தர் வந்தது மட்டுமல்ல மணிமேகலை காப்பியத்தில் சொல்லப்படும் ஊராக கருதப்படுகிறது. இந்த ஊரில் ஒரு குடும்பமாவது புத்தசமயத்தை பபின்பற்றவில்லை. இதேபோல் இஸ்லாமிய மசூதி தெற்கே உள்ளது. அந்தகாலத்தில் சங்கு குளிக்க வந்த பரம்பரையில் வந்த ஒருசில இஸ்லாமிய குடும்பங்கள் இருந்தார்கள். இதை விட ஒரு சிறிய சேச்சும் இருந்தது எனது ஞாபகம். இவை எல்லாவற்றையும் மத அடையாளங்களாகவே மதித்தோம். 99.9 வீதமானவர்கள் சைவர்களாக இன்னும் வாழ்கிறார்கள். வடமாணத்தில் தெருவோரம் வைக்கப்பட்ட புத்த சிலை உங்கள் மீது புதிதாக மதத்தை அரசு திணிப்பதாக கோசமெழுப்புவது அரசியலுக்கான விடயங்கள்.

 

*ஒரு சிக்கலான உளவியற் பின்னலில் இலங்கைச் சமூகங்கள் சிக்குண்டுள்ளன. இன, மத அடையாளங்களை முன்னிறுத்தி முன்னெடுக்கப்பட்ட அரசியல் இந்த உளவியலைக் கட்டமைத்துள்ளன. இது பல நூற்றாண்டுகளின் தொடர்ச்சி. இன்றைய நவீனகாலத்தில் இது இன்னும் வலுவாகி ஊடகங்கள், கல்வி மற்றும் சமூக நிறுவனங்கள், இலக்கியம் எனச் சகல துறைகளினூடாகவும் வளர்த்தெடுக்கப்படுகிறது. இந்த நிலையில் அமைதியைக் குறித்தும் சமாதானத்தைக் குறித்தும் எப்படிச் சிந்திக்க முடியும்? இவற்றை எப்படிச் சாத்தியப்படுத்த முடியும்?

 

பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது சிங்கள நண்பர்களோடு அநுராதபுரம் சுற்றுலா சென்றோம். அங்குள்ள பல இடிந்த கட்டிடங்களைப் பார்த்ததும் எனது சிங்கள நண்பனது முகம் மாறி ஆத்திரத்தில் தமிழர்களைத் திட்டினான். எனக்குக் காரணம்  புரியவில்லை. சிறிது நேரத்தில் அவன் வந்து ‘இலங்கையை அழித்தவர்களைத் திட்டினேன்’ என்றான். அதன் பின்னர் அவனிடம் விவரம் கேட்டபோது ‘நான் இலங்கைத் தமிழரைப்பற்றி சொல்லவில்லை. அந்தக்காலத்தில் தமிழகத்திலிருந்து வந்த படையெடுப்புகளால் அனுராதபுரம், பொலநறுவையில் இருந்த அரசுகளும் அடையாளங்களும் சோழரால் உடைக்கப்பட்டன. இதன் எச்சங்கள் இன்று பல இடங்கள் சிதிலமாக கிடக்கின்றன. அநுராதபரத்தில் உருவாகிய அரசு பின்பு இடம்மாறி பொலநறுவை போனது. அதுவும் சோழரால் மீண்டும் படையெடுப்பில் அழிக்கப்பட அங்கும் இருக்க முடியாது இராசதானி தென்னிலங்கைககு இடம் மாறியது’ என்றான்.

 

இலங்கையில் பெரும்பான்மையான சிங்கள சமுகம் தன்னை ஒரு சிறுபான்மை சமூகமாக பலகாலம் நினைத்தது. இதற்குக் காரணம் இலங்கைத் தமிழர்கள் தங்களைத் தமிழ்நாட்டுத் தமிழரோடு கலாச்சாரம், மதத்தில் மட்டுமல்லாது அரசியல் சிந்தனையிலும் இணைத்து செல்ல விழைந்ததே. இந்த நிலையில் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முயல்கிற அவர்களது மனநிலையை நமது தலைவர்கள் வளர்த்து விட்டர்கள். இலங்கைத் தமிழர்கள் இந்தியாவோடு சேர்ந்து விடுவார்கள் என்ற பயத்தால் சமஷ்டியை ஏற்கச் சிங்களவர்கள்  மறுத்தார்கள். அவர்கள் மறுத்த காரணத்தை நாம் பார்க்காமல் மேலே போய் தனி நாடு கேட்டோம்.  பலதடவை ஆக்கிரமித்து இலங்கையை சூறையாடிய சோழ அரசின் கொடியை எமது வருங்கால அரச கொடியாக வரித்தோம். இதெல்லாம் இறுக்கமான நிலைமையையே இலங்கையில் உருவாக்கியிருக்கிறது. இது அவர்களது மனநிலை.

 

நாம் தொடர்சியாக அரசாண்ட இனம் எனச் சொல்லிக் கொண்டு தனித்து வாழவேண்டும் என்பதற்காக கட்சி அரசியலால் போராடி  பின்பு ஆயுதம் எடுத்துப் போராடினோம். கலாச்சாரத்தில், மதத்தில்  நாம் தமிழ்நாட்டைப் பின்பற்றினோம். தமிழ்நாட்டில் திராவிட நாட்டு கோரிக்கை எழுந்த போது அதன் பிரதிபலப்பாக இலங்கையில் தமிழரசுக் கட்சி உருவாகியது. இருபக்கத்தினரிலும் இனவாதிகள் நடந்திய கைங்கரியங்களால்  இரண்டு சமூகமும்  மேலும் அன்னியமாக்கியது. இந்த வரலாற்றுக் காரணங்களை நாம் புரிந்து கொள்ளவேண்டும். இலங்கைத்தமிழர் யாவரும் வெளிநாடு போக முடியாது என்ற நிதர்சனத்தையும் அறிந்துகொண்டு நல்ணெண்ணத்தோடு வாழ்வதுதான் ஒரே வழி. இதுதான் எம் முன்னால் உள்ளது.

 

எமது நடத்தைகளுக்கு நாமே பொறுப்பேற்கவும் எதிர்காலத்தில் இவற்றை  தவிர்க்க பல நடவடிக்கைகள் எடுக்கப்படவும் வேண்டும்.; இலங்கை அரசாங்கத்தையும் இதில் முழுப்பங்கேற்புக்குத் தூண்டவேண்டும்.

 

*இந்த மாதிரியான வரலாற்றுப் பிணக்கை பிற சமூகங்கள் எப்படிக் கடந்துள்ளன? நீங்கள் வாழ்கின்ற அவுஸ்ரேலியச் சமூகங்களின் நிலை அங்கே எப்படியுள்ளன? அங்குள்ளபூர்வகுடிகளின் நிலை, அவர்களுக்கான அங்கீகாரம், சட்டம் மற்றும் அடிப்படை  உரிமைகள் எல்லாம் எவ்வாறுள்ளன?

 

இனம் மதம் சாதி என்பவற்றால் சமூகங்கள் உருவாகும் போது அங்கு அதைப்பாவித்து பிணக்குகளை உருவாக்குவது பலருக்கு சாதகமானது. உண்மையான, மக்கள் மீது நம்பிக்கையுள்ள அரசு இப்படியான குழுக்களை உடைத்து மொத்தமான தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்க வைக்கவேண்டும். மத கலாச்சார உணர்வுகளுக்கு சட்ட உறுதி அளித்துவிட்டு அரசியல் குழுவாகாமல் தடுப்பதன் மூலம்தான் நாட்டில் அமைதி உருவாகும்.

அவுஸ்திரேலியாவில் பதினைந்து ஆண்டுகளின் முன்பு போலின் ஹான்சன் என்ற பெண்மணி ஆசிய எதிர்ப்புக் கட்சி தொடங்கியபோது பத்து வீதமான மக்கள் அதை ஆதரித்தார்கள். பெரிய இரண்டு கட்சிகளும் ஜனநாயக முறையில் இணைந்து அவரை எதிர்த்து அரசியலில் இருந்து அழித்து விட்டார்கள். காரணம் அந்தப் பெண்ணினால் ஆசிய நாடுளுடனான வியாபாரம் பாதிக்கப்படும் என்பதே. அதன் விளைவாக நாட்டில் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதால்.

அவுஸ்திரேலிய பூர்வகுடிகள் சட்டரீதியாக சம உரிமை பெற்று இருந்தாலும் நூற்றாண்டுகளாக நீடிக்கும் புறக்கணிப்பு சாதாரணமானது அல்ல. அவர்கள் நிலைமை நான் வசித்த கால் நூற்றாண்டுகளில் பல மடங்கு முன்னேறியுள்ளது. அவர்களது நில உரிமைகளை கொடுப்பதற்கு பல அரசியல்வாதிகளும் அறிஞர்களும் முன்னிற்கிறார்கள். அவர்கள் அவுஸ்திரேலியா என்ற நாட்டுக்குள்தான் தங்கள் உரிமையை கேட்கிறார்கள்.

 

* இந்த உளவியலைக் கடப்பதற்கான எழுத்தும் சிந்தனையும் எப்படி இருக்க வேண்டும்? அதை எப்படிச் சாத்தியமாக்குவது? ஏனெனில் நீண்டகாலமாக வளர்ச்சி பெற்று நிறுவனமயப்பட்ட கருத்துருவாக்கத்தை அத்தனை எளிதாக நீக்கி விடவோ, கடந்து விடவோ முடியாது. அதேவேளை இந்தப் பின்னோக்கிய சிந்தனைக்கு ஊடகம், அரசியல் மற்றும் பிற அமைப்புகளின் பலமும் உண்டு. எனவே இந்தநிலையில் எத்தகைய வழிமுறைகளைப் பற்றிச் சிந்திக்க முடியும்?

 

இரண்டு பக்கத்தினரதும் தவறுகள் ஏற்றுக்கொள்ளப்படுவது முக்கியம். இது அறிவாளிகளிலும் சிந்தனாவாதிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் இருந்து உருவாகவேண்டும். காரணம் இவர்கள்தான் சமூகத்தின் மூளை போன்றவர்கள். இவர்களது மாற்றம் சமூகத்தின் பல பாகத்துக்கு எடுத்து செல்லவேண்டும். இதன்பின் சமூகத்தில் நல்லிணக்கத்தை உருவாக்கும் வழிமுறைகள் பலரால் ஆராயப்பட்டு நாட்டின் கொள்கைப் பிரகடனமாக வேண்டும். அவுஸ்திரேலியா, கனடா நாடுகளின் பல்கலாச்சாரம் போல் இதை பாடசாலைகளில் குழந்தைப்பருவத்தில் இருந்து படிப்பிக்கவேண்டும். இதன்பின்பு சட்டம் அதற்கேற்ப திருத்தப்பட வேண்டும்.

சில விடயங்களை கோடு காட்டுகிறேன். சிலவற்றை உடனடியாகவும் பலவற்றை படிப்படியாகவும் செய்யலாம்.

கலாச்சாரரீதியான மத சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் நேரத்தில் பாடசாலைகளிலும் ;வேலைத்தலங்களிலும் தேசிய ஒருமைப்பாட்டைத் தர்க்கரீதியாக எடுத்துச் செல்லவேண்டும்.

இலங்கையில் சிங்களம், தமிழ்  என்ற இரண்டு மொழிகளையும் கட்டாயமாக இருபகுதியினரும் கற்க வேண்டும்.

இன மொழி மத ரீதியான அரசியல் கட்சிகள் தடை செய்யப்பட்டு பாகுபாடுகளைத் தூண்டுபவர்கள் மீதும் இனவாத ஊடகங்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பாடசாலைகள் மத இன வேறுபாடு இல்லாது எல்லோருக்கும் பொதுவானதாக இருக்க வேணும்.

ஆரம்ப காலத்தில் சிங்கப்பூரின் சில சட்ட நடைமுறைகளைப்போல இலங்கையிலும்  அமுல்படுத்துவது தவிர்க்க முடியாது.

 

௦௦௦௦௦௦

 

 

2 Comments

  1. Kuha Nathan says:

    நடேன் அவர்களின் கருத்துக்கள் ஒரு விவாத மேடையை உருவாக்கவேண்டும்

  2. Kasilingam Sellathurai says:

    நடேசன் அவர்களுடைய வரலாற்றுச் சான்றுகளோடு கூடிய அவரது நேர்காணல் நமது தமிழ் அரசியல்வாதிகளுக்கு கசப்பான காடியாகவே இருக்கும்

Post a Comment