Home » இதழ் 06 » (ஈழப்போரின் நான்காம் கட்டத்தில்) நடந்த நிகழ்ச்சிகள்-கருணாகரனின் தொடர்…01

 

(ஈழப்போரின் நான்காம் கட்டத்தில்) நடந்த நிகழ்ச்சிகள்-கருணாகரனின் தொடர்…01

 


– கருணாகரன்

-01-

‘எறியப்பட்ட எல்லாக் கற்களும் பூமியை நோக்கியே வருகின்றன. அவ்வாறே, விடப்படும் எல்லா அரசியற் தவறுகளும் மக்களின் மேலேயே வீழ்கின்றன…’ என்று ஒரு கவியுரைப்புண்டு.

ஈழத்தமிழர்களுடைய அரசியற் போராட்டத்தின் அத்தனை தவறுகளும் சிந்தனைக் குறைபாடுகளும் இன்று மக்களின் மீதே சுமையாக இறங்கியிருக்கின்றன. இந்தத் தவறுகள் மக்களை மிகக் கொடுமையான வரலாற்றுத் துயரத்திற் தள்ளியிருக்கின்றன. ஒவ்வொரு காலகட்டத்தின் ஒவ்வொரு தவறுகளுக்கும் தொடரும் சிந்தனைக் குறைபாடுகளுக்கும் மக்களே விலை கொடுத்திருக்கிறார்கள், மக்களே பலியாடுகளாகியிருக்கின்றனர்.

இந்தத் தவறுகளை இழைத்ததில் கடந்த காலத்தில் இருந்த எந்தத் தமிழ்த் தலைமையும் விதிவிலக்கல்ல. வேண்டுமானால் விகித வேறுபாடுகள் இவற்றுக்கிடையில் இருக்கலாம். ஆனால், தலைமைத்துவத் தரப்புகளாக இருந்த சக்திகள் இழைத்த தவறுகள்தான் அதிக பாதிப்புகளை மக்களுக்கு ஏற்படுத்தின என்பதை யாரும் மறுக்க முடியாது.

வரலாற்றில் மிகப் பின்தங்கிய நிலையிலும் மிக நெருக்கடிக்குள்ளான நிலையிலும் மக்கள் இன்றிருப்பதற்கான காரணத்தில் சம பங்குக்கும் அதிகமான பொறுப்பு தமிழ்த்தலைமைகளுக்கு உண்டு. சிங்களத் தலைமைகள் தங்களின் நீதி மறுப்புகளை வெற்றியாக்கிக் கொள்வதற்கும் தமிழ்த்தலைமைகளே அதிக வாய்ப்பை அளித்துள்ளன.

இதற்கு முக்கிய காரணம் சிந்தனைக் குறைபாடும் சாதிய, குறுந்தேசிய மனப்பாங்குமே. தமிழ்த் தரப்பில் புரையோடிப் போயிருக்கும் சாதிய மனப்பாங்கின் மைய வடிவம் எந்தப் புதிய சிந்தனைக்கும் இடமளிப்பதில்லை. துரதிருஷ்ரவசமாக அதுவே நமது தேசியவாதமாகவும் உருக்கொண்டுள்ளது. பழமைவாதத்திலும் அதன் மிதப்புகளிலும் கிறங்கிக் கொண்டு நிகழ்காலத்தின் கொதிப்பை உணர முடியாமல் இந்தச் ‘சாதிய – தேசிய வாதம்’ இருக்கிறது.

இதன்காரணமாகவே அது முஸ்லிம் மக்களை இரண்டாந்தரப் பிரசைகளாகவும் யாழ்ப்பாணத்துக்கு வெளியேயான பிரதேசங்களை குறைநிலைப் பிரதேசங்களாகவும் நடைமுறையில் வைத்திருக்கிறது. இத்தனை காலப் போராட்டங்களுக்குப் பிறகும் அவ்வாறான உணர்நிலை மாறவில்லை. போர்க்காலத்தில் மக்கள் இடம்பெயர்ந்து பிரதேச ஊடாட்டங்கள் நடந்தும் கூட நிலைமையில் பெரிய முன்னேற்றங்கள் ஏற்படவேயில்லை. உருகிய பனிக்கட்டி மீண்டும் உறைந்ததைப்போலவே நிலைமை உள்ளது.

எனவே, ஒற்றுமை குறித்த அறைகூவல்களை விடவும் பிரிப்புகளின் – இடைவெளிகளின் – நிலைமைதான் அதிகமாக உள்ளதை நாம் நடைமுறையில் உணர்ந்து கொள்ளலாம். சிங்கள அதிகார வர்க்கத்தின் பிரிப்பு நடவடிக்கைகளை விடவும் தமிழ்பேசும் மக்களிடையே நிலவுகின்ற அல்லது பராமரிக்கப்படுகின்ற பிரிவுநிலை அதிகம். அது செயற்கையாகவே உருவாக்கப்படுவது என்றால் இது இயற்கையாகவே உருவாகியதைப்போல உருவாக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் சாதிய – பிரபுத்துவச் சிந்தனையே.

எனவேதான் இத்தனை பெரிய தியாகங்களையும் போராட்டங்களையும் பெரும் அரசியல் முன்னெடுப்புகளையும் முன்னெடுத்த பின்னரும் தமிழ் மக்கள் இன்று வலியோடும் காயங்களோடும் வரலாற்றுக்கு முன்னே கூனிக்குறுகிக் கொண்டு தெருவில் நிற்கிறார்கள். யதார்த்தத்திற்கு முகம்கொடுக்க முடியாமற் திணறுகிறார்கள். உண்மையை நெருங்க முடியாத தொலைவில் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

சிங்கள அதிகாரத்தரப்பை வெற்றிகொள்ள முடியாத தமிழ் அரசியற் தலைமைகள், தங்கள் அதிகாரத்தின் ருஸியினாலும் அறிவீனத்தின் முரண்களாலும் அரசியற் தோல்விகளைச் சந்தித்தன.  அதேவேளை அவை சர்வதேச சக்திகளின் கைகளிலும் பிராந்திய சக்திகளின் கால்களிலும் கிடந்து இன்னும் தடுமாறுகின்றன. இந்தச் சக்திகளால் இன்னும் தீர்வுக்கான ஒரு வழியைக் கண்டு பிடிக்க முடியவில்லை. தெளிவான ஒரு பதிலை மக்களுக்குச் சொல்ல இயலவில்லை. இன்னும் தங்களின் அளவில் ஒரு தீர்மானத்துக்கு வரக்கூட முடியவில்லை. ஆனால், மக்களை மயக்கும் விதமாக இந்தத் தலைமைகள் இன்னும் எதையோவெல்லாம் சொல்ல மட்டும் தெரிந்திருக்கிறது.பலனற்ற விதமான கால நீட்சியின் காரணமாக ஏற்படும் அரசியற் தோல்விகள் அத்தனையும் மக்களின் தலைகளிலேயே வீழ்ந்து கொண்டிருக்கின்றன.

இதேவேளை கடந்த ஐம்பது ஆண்டுகால ஈழத்தமிழரின் அரசியற் போராட்டத்தில் ஆக்கபூர்வமான விமர்சனங்களும் மாற்றுப் பார்வைகளும் வைக்கப்பட்டிருப்பதையும் நாம் நோக்க வேண்டும். ஆனால், அந்த மறுபார்வைகளைப் பெரும்போக்கு நிலை நிராகரித்து வந்துள்ளது. மக்களை அந்தப் பக்கம் பார்க்க அது அனுமதிக்கவும் இல்லை. ஆனால், மக்களை அரசியல் மயப்படுத்துவதற்கும் மாற்று அரசியல் முன்னெடுப்புகளுக்குமான அறைகூவலாக அந்த விமர்சனங்களும் பார்வைகளும் முன்வைக்கப்பட்டன. ஜனநாயகத்தை வலியுறுத்தி முன்வைக்கப்பட்ட கருத்துகளும் விமர்சனங்களும் இதில் முக்கியமானவை. ஆனால், அவை எதுவும் உரிய தரப்பினரால் பொருட்படுத்தப்படவில்லை.

முறையான ஜனநாயகச் சூழல் ஒன்று உருவாக்கப்படும்போது, சகல தரப்பினருடைய கருத்துகளுக்கும் இடமும் மதிப்பும் இருக்கும். அது நிகழாத வரையில் எத்தகைய பெறுமதியான உரைப்புகளும் பொருட்படுத்தப்படாமல் உதாசீனமே செய்யப்படும்.  முறையான ஜனநாயகத்துக்கான அங்கீகாரம் இருந்தாலே, பிரதேச வேறுபாடுகளும் இன மற்றும் மத, பால் வேறுபாடுகளும் மறைந்து போகும். அதிகாரத்தின் வலுவும் அற்றுப்போகும். அப்போதுதான் தேசியம் என்பதற்கான அர்த்தமும் நடைமுறையும் உரிய முறையில் அமையும்.

ஒடுக்குமுறைக்குள்ளாகிய சமூகங்களின் வலுவான ஆயுதம் ஜனநாயகமே. அந்த ஆயுதத்தின் மூலமே இன்றைய உலகை வெற்றி கொள்ள முடியும்.

ஆனால், இலங்கைத் தீவில் அது எதிர்மறையாகவே இருக்கிறது. இதனால் முன்வைக்கப்பட்ட அத்தனை விமர்சனங்களும் மாற்றுப் பார்வைகளும் நிராகரிப்புக்குள்ளாகின.மாற்றுப் பார்வைகளை எதிர்கொள்வதற்கு இலங்கையின் எத்தகைய அரசியற் சக்திகளும் தயாராக இல்லை. அதிலும் தமிழ், சிங்கள அதிகாரத்தரப்புகளிடம் இந்த மனப்பாங்கு துளியளவு கூட இல்லை. இப்போதும் இதுதான் நிலைமை.

 

 

போராட்டங்களை முன்னெடுத்த அத்தனை அரசியற் தலைமைகளும் விமர்சனங்களையும் மாற்றுப் பார்வைகளையும் புதிய சிந்தனைகளையும்  நிராகரித்து விட்டன. தெற்கில் ஜே.வி.பி தொடக்கம் வடக்கில் செயற்பட்ட அத்தனை இயக்கங்களும் இதில் அடங்கும். பதிலாக அத்தகைய விமர்சனங்களை முன்வைத்தோர், மாற்றுப் பார்வைகளை வலியுறுத்தியோர் துரோகிகளாக்கப்பட்டனர். அல்லது பழிவாங்கப்பட்டனர். அல்லது களத்துக்கு வெளியே துரத்தப்பட்டனர். அல்லது முடக்கப்பட்டனர். அதுவுமல்லாவிடில் புறக்கணிக்கப்பட்டனர். உண்மையுரைப்போரின் வாய்களிலும் மூளையிலும் ஏதோ வகையில் பூட்டுகள் பூட்டப்பட்டன.

அதேவேளை, இத்தகைய அவல நிலையை தமிழ் மக்களின் அரசியல் வரலாறு மிகப் பெருமிதமாகக் கொண்டாடியது. சிங்களத்தரப்பில் இது கொண்டாட்டமாகக் கொள்ளப்படவில்லை என்றாலும் கடைப்பிடிக்கப்பட்டது என்பதை மறுக்க முடியாது.

விமர்சன அரசியலுக்குப் பதிலாக கேள்விக்கிடமில்லாத விசுவாச அரசியலும் வழிபாட்டு நடைமுறைகளும் கண்மூடித்தனமான – கணிதங்கள் இல்லாத –விஞ்ஞானபூர்வமற்ற –நம்பிக்கைகளும் கொண்டாடப்பட்டன. இத்தகைய போக்கு இன்று தென்பகுதி அரசியலில் உருவாகி வருகின்றது.

ஈழத்தமிழரின் அரசியற் பொதுவெளியில், செல்வாக்குச் செலுத்திவரும்  ‘விமர்சனங்களுக்கும் மாற்றுப் பார்வைகளுக்கும் இடமளிக்காத அரசியற் பாரம்பரியம்’ ஏற்படுத்திய விளைவுகள், இன்று கடந்த காலத்தை தயவு தாட்சண்யமின்றி மீள் பார்வைக்குட்படுத்தக் கோருகிறது. இதில் யாரும் விதிவிலக்கில்லை. இந்தப் பத்தியாளரும் இதற்கு உட்படுத்தப்படுகிறார்.

முக்கியமாக தமிழ் ஊடகங்களும் மக்களும் இந்த மாற்றுப்பார்வைகளற்ற, விமர்சனங்களற்ற ஒடுங்கிய பாதையில் பயணம் செய்ய நேர்ந்தமை பற்றிய முறையான – நேர்மையான –  கவனத்திற்குரிய ஆய்வுகள் இன்று தேவை.

ஒடுக்கப்படும் மக்களின் அரசியற் போராட்டங்கள் எப்போதும் இலகுவானவையாக இருப்பதில்லை. அதிலும் பிராந்திய, சர்வதேசிய அரசியற் போட்டிகள், ஆதிக்கங்களின் மத்தியில் நடக்கும் போராட்டங்கள் எல்லாப்பக்கங்களாலும் நெருக்கடிக்குள்ளாகும். எந்த நிலையிலும் அபாயங்களை எதிர்கொள்ள நேரிடும்.
இத்தகைய பிராந்திய, சர்வதேசிய நெருக்கடிகள் இருந்தாலும், ஈழத்தமிழர்களுக்கு வாய்த்திருந்த அனுகூலங்கள் இந்த நெருக்கடிகளையும் அபாயங்களையும்  வென்றெடுக்கக்கூடியதாகவும் இருந்தன.

ஆனால், அதைப் புரிந்து கொள்ளக் கூடிய நுண்ணறிவும் அதற்கான அறிவை அங்கீகரிக்கக் கூடிய மனவிரிவும் வாய்ப்புகளைப் பயன்படுத்தக் கூடிய விவேகமும், தூரநோக்குப் பார்வையும் போராட்டத்தை முன்னெடுத்தோரிடையே இல்லாமற் போய்விட்டன என்பதே துக்கத்துக்குரியது.

இதில் விடுதலைப் புலிகள் இயக்கமும் உள்ளடங்கும்.

அறுபதாண்டுகால அரசியற் போராட்டங்களில் தமிழ் பேசும் மக்களில் ஒரு சிறிய குறிப்பிட்ட வர்க்கத்தினரைத் தவிர ஏனையோர் மிகவும் உச்சமான தியாகங்களைச் செய்திருக்கின்றனர். மக்கள் தமது வாழ்வுரிமைகளுக்காக மிகக் கடினமான நெருக்கடிகளைச் சந்தித்திருக்கிறார்கள். பல இழப்புகளையும் ஏற்றிருக்கின்றனர்.

என்றபோதும் போராட்டங்களுக்குத் தலைமையேற்றோரிடையே இருந்த மக்கள் நலன் குறித்த, வரலாற்றுப் பார்வையற்ற பண்பியல் நடவடிக்கைகள் எல்லாவற்றையும் தலைகீழாக்கிவிட்டன. போராடிய மக்கள் நடுத்தெருவில் நிற்கவேண்டிய நிலைமையே இறுதியில் ஏற்பட்டது.

இதன் விளைவுகளே இன்று தமிழ்மக்கள் அரசியல் அநாதைகளைப் போல தத்தளித்துக் கொண்டிருப்பதும் முடிவற்ற அவலங்களைச் சந்தித்துக் கொண்டிருப்பதுமாகும்.

 

00000

 

இந்தச் சந்தர்ப்பத்தில் அண்மைய கடந்த காலத்தில் (ஈழப்போரின் நான்காம் கட்டத்தில்) நடந்த நிகழ்ச்சிகளையும் இந்த அவல நிலை ஏற்படும் என்பதையிட்டு எச்சரிக்கப்பட்ட சில சம்பங்களையும் அதனோடிணைந்த சில உண்மைகளையும் – அப்போது விடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை அறிவிப்புகளையும், ஆலோசனைகளையும் அவை பாராமுகமாக்கப்பட்டதன் விளைவுகளையும் நாம் இப்போது பார்க்க வேண்டியுள்ளது.

விடுதலைப் புலிகளின் தோல்வி என்பது தனியே நான்காம் கட்ட ஈழப்போரின்பொழுது ஏற்பட்ட ஒன்றல்ல. அல்லது தனியே இராணுவ ரீதியாக ஏற்பட்ட வீழ்ச்சியின் விளைவும் அல்ல. அது பல வகைகளில், பல நிலைகளில், பல கட்டங்களில், பல முனைகளில் நடந்தது.

அரசியல் ரீதியான உபாயங்களை வகுப்பதிலும் பிராந்திய, சர்வதேச சக்திகளைக் கையாளக்கூடிய இராசதந்திரத்தைக் கையாள்வதிலும் பொருத்தமான வெளியுறவுக் கொள்கையை தேர்வு செய்வதிலும் ஏற்பட்ட தவறுகள் இதில் முக்கியமானவை.

இத்தகைய தொடர் தவறுகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியின் விளைவே இறுதித்தோல்வியாகியது. முக்கியமாக ஜனநாயக வெறுமை மற்றும் ராஜதந்திர ரீதியாக ஏற்பட்ட குறைபாடுகளினதும் உலக நிகழ்ச்சிப் போக்குகளைப் பற்றிய தவறான மதிப்பிடல்களினதும் விளைவே இறுதித் தோல்வியாகும்.

ஆனால், இன்று ‘விடுதலைப் புலிகளின் தோல்வி’ என்பது இலங்கையிலுள்ள  சிறுபான்மைச் சமூகங்களின் மத்தியில் எல்லாவகையிலான நெருக்கடிகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. புலிகளைத் தோற்கடித்தமையை சிறுபான்மை மக்களைத் தோற்கடித்ததாக சிங்களத் தரப்பை உணர வைத்துள்ளது. இதனால் தமிழ் மக்கள் மட்டுமன்றி இலங்கையில் தமிழ் பேசும் அனைத்து மக்களும் உளரீதியாகப் பதற்றத்துக்குள்ளாகியுள்ளனர். தாம் பாதுகாப்பற்றதொரு நெருக்கடி நிலையில் இருப்பதாக அவர்கள் உணர்கின்றனர்.

ஆனால், இந்தத் தோல்வி குறித்து ஏற்கனவே வன்னியில் விடுதலைப் புலிகளின் பகுதிகளில் இருந்த முக்கியமான அரசியல் ஆளுமையாளர்களிற் சிலரும் புலிகளின் உறுப்பினர்களிற் சிலரும் மக்களில் சிலரும் தமக்கு நேரக்கூடிய எல்லாவகையான நெருக்கடிகள், அழுத்தங்கள் எல்லாவற்றுக்கும் அப்பால் விடுதலைப் புலிகளிடமே பல ஆலோசனைகளையும் அபிப்பிராயங்களையும் விமர்சனங்களையும் முன்வைத்திருந்தனர்.

அன்றைய நிலையில் அரசியல் அரங்கில் முதன்மைப் பாத்திரத்தை ஏற்றிருந்தவர்கள் விடுதலைப்புலிகளே. எனவே, அவர்களிடம் அந்த அபிப்பிராயங்களை முன்வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டமை தவிர்க்க முடியாத ஒன்று. அது அவசியமானதும் கூட.

இதேவேளை மிகச் சிலர் வெளியில் – புலம் பெயர் நாடுகளில் இருந்தும் தமது ஆக்கபூர்வமான அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் எச்சரிக்கைகளையும் தெரிவித்திருந்தனர்.

இந்த ஆலோசனைகள் பல வகையானவை.

1.  உள்ளரங்கில் மக்களுடனான அரசியல் நடவடிக்கை சார்ந்தவை.
2.  இராணுவ உபாயங்கள் தொடர்பானவை.
3.  வெளியுறவுக்கொள்கை சம்மந்தப்பட்டவை.
4.  சர்வதேச நிலைவரங்களை மையப்படுத்திய மதிப்பீட்டின் அடிப்படையிலானவை.
5.  இராசதந்திர நகர்வுகள் தொடர்பானவை.
6.  அரசியலையும் இராணுவ நடவடிக்கையையும் வெளியுறவையும் பேணும் முறைகளைப் பற்றியவை.
இப்படிப் பல.

பொதுவாகவே கடுமையான விமர்சனங்களையும் வெளிப்படையான ஆலோசனைகளையும் விரும்பாத ஒரு மரபை விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடம்  கொண்டிருந்தபோதும் அதைக் கடந்து,  மக்களுக்கு ஏற்படவுள்ள பாதகமான நிலைமைகளைக் கருத்திற் கொண்டும் போராட்டத்தைப் பாதுகாப்பதற்காகவும்  இந்த விமர்சனங்களையும் அபிப்பிராயங்களையும் இவர்கள் முன்னிறுத்தினர்.

அரசியல் ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் இராஜதந்திர ரீதியாகவும் மேற்கொள்ள வேண்டிய புதிய நடவடிக்கைகளைப் பற்றி அவர்கள் அழுத்தமாக வலியுறுத்தினர்.

குறிப்பாக, மக்களுடைய பிரச்சினைகளுக்கும் அவர்களுடைய உணர்வுகளுக்கும் அவற்றின் நிலைப்பாடுகளுக்கும் முக்கியத்துவம் அளிப்பதைப் பற்றி, சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடுகளைப் பற்றி, மாற்றமடைந்து வரும் புதிய உலக ஒழுங்கைப் பற்றி, பிராந்திய சக்தியின் முக்கியத்துவத்தைப் பற்றி, இலங்கைச் சமூகங்களின் யதார்த்தம் பற்றியெல்லாம் அவர்கள் புலிகளுக்கு விளக்க முற்பட்டனர்.

அதேவேளை கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அணுகுமுறைகளின் தவறுகளும் மதிப்பீட்டில் ஏற்பட்ட குறைபாடுகளும் போராட்டத்துக்குப் பாதகமான ஒரு சூழலை உருவாக்கியுள்ளன என்றும் இவர்கள் சுட்டிக்காட்டினர். ஆகவே தொடரும் போராட்டமானது அந்தத் தவறுகளைச் சீர் செய்யக்கூடிய வகையிலான செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலமே வெற்றியடையமுடியும் என்றும் இவர்கள் வலியுறுத்தினர்.

அவர்களில் ஒருவர் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆய்வாளர் அன்ரன் பாலசிங்கம். மற்றவர் அரசியல் ஆய்வாளர் மு. திருநாவுக்கரசு. அடுத்தவர் ஈரோஸ் இயக்கத்தின் முன்னாள் தலைவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய உறுப்பினராக அறிவிக்கப்பட்டிருந்தவருமான திரு. வே. பாலகுமாரன். இன்னொருவர் நிலாந்தன். மற்றவர் கவியழகன். மற்றொருவர் இடதுசாரிச் செயற்பாட்டளரான இராசேந்திரம். இன்னும் பெருமாள் கணேசன், கருணாகரன் எனச் சிலர்.

இதைத் தவிர, தனிப்பட்ட உரையாடல்களிலும் பொறுப்பு வாய்ந்தவர்களுடனான பேச்சுகளின் போதும் சந்திப்புகளின் போதும் பலர் தமது விமர்சனங்களையும் அபிப்பிராயங்களையும் விடுதலைப் புலிகளுக்குத் தெரியப்படுத்தியிருந்தனர். மேலும் பலர் விடுதலைப் புலிகளின் தலைவருக்கும் ஏனைய முக்கிய பொறுப்பாளர்களுக்கும் கடிதங்கள் வாயிலாகவும் தமது அபிப்பிராயங்களைத் தெரிவித்தனர்.

இதில் முக்கியமானது அன்ரன் பாலசிங்கத்தின் கருத்து. அவர் பிரபாகரனுக்கு என்ன சொன்னாரோ தெரியாது. ஆனால், சமாதானப் பேச்சுகள் நடந்த காலத்தில்  அவர் வன்னிக்கு விஜயம் செய்திருந்த பொழுது  சிலவிசயங்களைத் தனக்குத் தெரிந்தவர்களிடம் சொன்னார்.

அன்ரன் பாலசிங்கத்தின் இறுதி விஜயம் – —– நடந்தது. அவருடன் கூடவே இலங்கைக்கான நோர்வேத் தூதுவராக இருந்த ஹான்ஸ் பிரஸ்கரும் வந்திருந்தார். அன்று ஒரு சந்திப்பு கிளிநொச்சியில் புலிகளின் சமாதானச் செயலகத்தில் நடந்தது. அந்தச் சந்திப்பு முடிய, பிற்பகல் 2.00 மணியளவில் ஒரு பத்திரிகையாளர் மாநாடு நடத்தப்பட்டது. சமாதானச் செயலகத்துக்கு அண்மையில் இருந்த புலிகளின் திட்டமிடற் செயலகத்தில் அந்தப் பத்திரிகையாளர் மாநாடு நடந்தது. அதுதான் அன்ரன் பாலசிங்கம் வன்னியில் கலந்து கொண்ட இறுதிப் பத்திரிகையாளர் சந்திப்பு.

அந்தச் சந்திப்பில் பல ஊடகத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களும் வந்திருந்தனர். அந்த மாநாட்டின்போது வழமையைப் போல பலவிதமான கேள்வகளை ஊடகத்துறையினர் கேட்டனர். அது சமாதானத்தின் துளிர்கள் கருகக்கூடிய அறிகுறிகள் தெரியத் தொடங்கிய காலம் என்றபடியால் ஏராளம் கேள்விகள். அன்ரன் பாலசிங்கமும் ஹான்ஸ் பிரஸ்கரும் மாறிமாறிப் பதிலளித்தனர். அவையெல்லாம் அன்றைய ஊடகங்கள் வெளியாகியுமிருந்தன.

இந்த மாநாடு முடிந்த பிறகு, அங்கே பலரும் வெளியேறிச் சென்று விட்டனர். ஒரு சில ஊடகவியலாளர் மட்டும் தனியாக அன்ரன் பாலசிங்கத்தைச் சந்திப்பதற்காகக் காத்திருந்தனர். அந்த வளாகத்தில் சற்றுத் தள்ளி அடேல் பாலசிங்கம் சிலருடன் தனியாக உரையாடிக் கொண்டிருந்தார்.

இறுதியில் அன்ரன் பாலசிங்கத்துடன் உள்ளுர் ஊடகக்காரர்கள் ஒரு சிலரே மிஞ்சியிருந்தனர்.

அவர்களுடன் அன்ரன் பாலசிங்கம் பேசினார். முக்கியமாக உள்ளுர் நிலைமைகளைப் பற்றிக் கேட்டார். அப்பொழுது உள்ளுரில் சனங்களுக்கு பயிற்சிகள் நடந்து கொண்டிருந்தன. அதைப் பற்றி ஊடகவியலாளர்கள் சொன்னார்கள். ‘பிறகென்ன மீண்டும் தொடங்கும் மிடுக்கு’ என்று. பாலசிங்கம் சிரித்தார். அந்தக் கணத்திலேயே அவருடைய முகம் வாடிக் கறுத்தது. தலையைக் கவிழ்ந்து ஆழமாக எதைப்பற்றியோ யோசித்தார். அந்தச் செய்தி அவருக்கு இனிக்கவில்லை. அப்படியென்றால் அது கசக்கிறதா? அது கசப்பானதா? கசப்பானதேதானா?

(அடுத்த பகுதியில் தொடரும்)

00

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment