Home » இதழ் 07 » உலகின் மிகப்பெரிய ‘சென்சஸ்’ -மொழிபெயர்ப்பு சிறுகதை/சு.மகேந்திரன்(தமிழில்)

 

உலகின் மிகப்பெரிய ‘சென்சஸ்’ -மொழிபெயர்ப்பு சிறுகதை/சு.மகேந்திரன்(தமிழில்)

 

 

த.இராமநாதன் (1913 – 1985) யாழ்ப்பாணத்தை தனது பிறப்பிடமாகக்கொண்டவர். கொழும்பு வெஸ்லிக் கல்லூரியிலும், இலங்கை பல்கலைக்கழக கல்லூரியிலும் கல்வி கற்றவர். பட்டப்படிப்பை முடிக்காமல் இந்தியாவுக்கு 1943 இல் சென்றார். அங்கே கன்னியாகுமாரியிலிருந்து பம்பாய் வரை நீண்ட ஒரு நடை பயணத்தை மேற் கொண்டார். வழி நெடுகிலுமுள்ள கிராமங்களில் தங்கினார். ஒரு கட்டத்தில் பெங்களுருக்கு அருகாமையில் மரக்கறி செய்கையில் ஈடுபட்டவரது பயிர்களை குரங்குகள் நாசம் செய்தன. சென்னைக்கு 1947 ல் வந்தவர், அங்கு சுயாதீனமான எழுத்தாளராக நான்கு வருடங்கள்  இயங்கினார். பிறகு 1951ல் இலங்கைக்குத் திரும்பி வந்தார் “ரைம்ஸ் ஒப் சிலோன்” பத்திரிகையில் பலகாலம் பத்திரிகையாளராக பணிபுரிந்தார்.

“என்கவுண்டர்” என்ற ஆங்கில சிற்றிலக்கிய ஏட்டின்  செப்ரம்பர் 1957 இதழில் உலகின் மிகப்பெரிய ‘சென்சஸ்’ என்ற இக்கதை இடம்பெற்றுள்ளது. ஆசிய –ஆப்பிரிக்க எழுத்தாளர்களுக்காக அந்த சிற்றிலக்கிய ஏடு நடத்திய சிறுகதை போட்டிக்கான பரிசை இக்கதை பெற்றிருந்தது. தேர்வுக்குழுவின் நடுவர்களில் உருவர் புகழ்பெற்ற  ஆங்கில எழுத்தாளர் “ஸ்ரீபன் ஸ்பென்ரர்”.

00

 

 

நான் வசதிக்காக ‘அறை’ என அழைக்கும் நரிக்குகை போன்ற ஒன்றின் கதவருகே, அவன் எனக்காகத் காத்திருந்தான். யாராவது “நீ எங்கு போகிறாய்?” என கேட்கும் போதெல்லாம் “எனது அறைக்குப் போகிறேன்” என நான் கூறினாலும் அரிதாகவே, ‘யாரையாவது அறைக்கு வாருங்களேன்’ என அழைப்பு விட்டிருக்கிறேன்.

இன்னும் அந்த உயரமான அந்நியன் எனக்காக காத்திருக்கிறான.; அவன் இன்று எந்த நேரத்திலும் வரலாம் என முன் கூட்டியே தெரிந்திருந்தது. அவனது வருகையை எவ்வகையிலும் தடுத்து விட முடியாது. எனது பெயரை வைத்து தெருப்பையனகள் சுவரில் எழுதியிருந்த புகழுரைகளை அவன் வாசித்துக் கொண்டிருந்தான்.(அவை பென்சிலால் கிறுக்கப்பட்டிருந்தன).

“தெருப்பையன்களால் பெரிய தொந்தரவுதான்” எனக்கூறிய நான், உரையாடலின் நடுவே “ஒருக்கரித்துண்டை அவர்களுக்கு கொடுத்து பாருங்கள.; அதுவே போதும், அவர்கள் உடனே காட்டு மிராண்டிகள் ஆகிவிடுவார்கள்” என்றேன்.

இந்தப் பேச்சுக்ககளால் ‘சென்சஸ்’ செய்ய வந்தவன் ஈர்க்கப்படவில்லை. நான் கதவைத்திறந்து அவனை உள்ளே விட்டேன். அவன் மிகவும் உயரமானவனாக இருந்ததால் உள்ளே வரக் குனியவேண்டியிருந்தது. எனது அழுக்குத்துணிகள் ஒழுங்காகவும் மிகச்சிலவே ஆன புத்தகங்கள் அடுக்கப்பட்ட நிலையிலுமிருந்திருந்தால் நன்றாக இருந்;திருக்குமே என்ற, நிறைவேற முடியாத எதிர்பார்ப்பு எனக்கு ஏற்பட்டது.

ஒரேபார்வையில் அவன் எல்லாவற்றையும் எடைபோட்டு விட்டான் போலிருந்தது. “இப்போது கிட்டத்தட்ட 7.00 மணியாகிறது” என்றேன்.

“இரவு வெகு நேரம் ரை நீங்கள் வேலை செய்ய வேண்டியிருக்குமோ?”.

சுவரில் ஒரு வெள்ளிச்சங்கிலியில் தொங்கிக்கொண்டிருந்த எனது அழகிய “குயின் ஆன்” பொக்கெட் மணிக்கூட்டின் மேல் அவனது கவனத்தை ஈர்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதுவே என்னிடமிருந்த ஒரேயொரு பெறுமதி மிக்க பொருள். அடுத்த வீட்டுப்பையன்களின் கண்களுக்கு அது ஒன்றே என்னை ஓர் உயர்வான இடத்தில் இருத்தி வைத்திருந்தது. ஆனால் ‘சென்சஸ்’ செய்ய வந்தவன் அந்த ‘பொக்கெட்’ மணிக்கூட்டுக்கு எந்த விதமான முக்கியத்துவத்தையும் கொடுக்க வில்லை.

“அடுத்த வீட்டில் யார் யார் வசிக்கிறார்கள்?”

“வீட்டின் சொந்தக்காரனும் அவனது மனைவியும்”

“அதைவிட வேறுயாராவது இங்கு இருக்கிறார்களா?”

“அவன் வீட்டின் பின்பகுதியை வேறு குடும்பங்களுக்கு கொடுத்துள்ளான்.”

“இந்த அறை கூட இந்த வீட்டின் ஒருபகுதிதானே?”

“ஆம்”

“உனது தொழில் என்ன?”

“எழுதுவது”

“அப்படி என்றால், நீ சொல்வது பத்திகையாளன் என்பதைத் தானே குறிக்கிறது?”

அவன் அதில் அரைவாசியை தனக்குள்ளே கூறிக் கொண்டான்.

“உனக்கு அப்படி எடுக்க விருப்பமானால் அப்படியும் எடுக்கலாம்”

நான் சிரித்துக் கொண்டேன்.

 

“உனக்கு என்ன வயதாகிறது?”

“முப்பத்தைந்து”

“உனக்கு திருமணமாகிவிட்டதா?”

“ஆம்”

“மாத வருமானமாக எவ்வளவு கிடைக்கிறது?”

“உத்தேசமாக தொண்ணூறு ரூபாய்வரை கிடைக்கிறது.”

 

“அது என்ன உத்தேசமாக எனக்கூறுகிறாய்?” ‘சென்சஸ்’ செய்ய வந்தவன் குறுக்கிட்டுக் கேட்டான்.

“அது சென்சஸ் இற்கு தேவைப்படாத ஒன்று’ என எரிச்சலுடன் கூறினேன். “சொல்வதென்னவோ தொண்ணூறு ரூபா என்றுதான். ஆனால் ஒரு பச்சைத்தாளைக் கண்டே பலகாலமாகிறது.”

“நீ ஓர் இந்தியன்தானே! பின் வேறு எப்படி இருக்க முடியும்”

“நீங்கள் அதில் சந்தேகப்படுகிறீர்களா?”

நான் பேச்சை முறிப்பது போல கேட்டே, அவன் எனது எரிச்சலை சட்டை செய்யவில்லை.

“நீயும் உனது மனைவியும் மட்டும் தானே இந்த அறையில் வசிக்கிறீர்கள்?”

நான் தலையை அசைத்து அதை ஆமோதித்தேன். அவன் எதையோ அசிங்கமாக நினைக்கிறான் என எனக்குத் தெரிந்தது.

“உனக்கு பிள்ளைகள் இருக்கிறார்களா?”

“இல்லை”

தேவையான தகவல்களை எல்லாம் எடுத்து விட்டான் போலும். அவனது விசாரணை அந்தக் கேள்வியுடன் முற்றுப் பெற்றது. அவன் தனது குறிப்புப் புத்தகத்தை மூடிக்கொண்டான்.

“நீங்கள் போகும் எல்லாவீடுகளிலும், இந்த கேள்விகளை எல்லாம் கேட்க வேண்டியிருக்குமோ?”

“இது ஓர் இலகுவான வேலையல்ல”

‘சென்சஸ்’ செய்ய வந்தவன் விளக்கினான்.

“ஆனால், நாங்கள் எங்களால் முடிந்தளவு மிகத்திருப்திகரமாக செய்வது என உறுதி பூண்டுள்ளோம்.”

“றோட்டில் படுக்கும் மனிதர்கள் பார்க்குகளில் துயில் கொள்வோர், பிச்சைகாரர்கள் நிலையான இருப்பிடமில்லாதோர் இவர்களையெல்லாம் என்ன செய்யப் போகிறீர்கள்?”

“எல்லோருமே கணக்கிலெடுத்துக் கொள்ளப்படுவார்கள்” என்றான் அவன்.

‘அவர்கள் எல்வோரையும் சேரர்த்து 350 மில்லியன் சுயாதீனமான மக்களை கொண்டதுதானே  இந்தியா அதுதான் பாரத்!”

 

‘சென்சஸ்’ செய்ய வந்தவன் அறையை விட்டு வெளியே போவதற்காக மீண்டும் தலையை குனிந்து கொண்டான். பிசைந்த மாவை அழுத்துவதற்காக அடுத்த வீட்டுக்கு  சென்ற எனது மனைவி அந்த நேரம் பார்த்து உள்ளே வந்தாள். மனைவி உள்ளே வந்ததும் அவனது முகத்தில் அடிப்பது போல் கதவை அடித்துச் சாத்தினேன்.

“அவர்களுக்கு வேறு வேலையே இல்லையா?” எனது மனைவி குற்றம் சாட்டினாள்.

“அழையா விருந்தினர்களைப்போல் உள்ளே நுழைந்து விடுகின்றனர். இவர்கள் இப்போதெல்லாம் பெண்களுக்கு மதிப்பு கொடுப்பதில்லை’.

“ அவர்களும் தமது வேலையைச் செய்யத்தானே வேண்டும்.” என நான் மறுத்துரைத்தேன்.

‘அது எப்படியாயினும் அவன் இனிமேல் வர மாட்டான்.”

“அவர்கள் பிள்ளைகளை ஹைதராபாத்துக்கு கடத்துகிறார்களாம்.”

எனது மனைவி அர்த்தம் இல்லாமல் கதைத்துக்கொண்டிருந்தாள்.

“எமக்குத்தான் பிள்ளைகளே இல்லையே”

என்ன உரையாடல் நடக்கிறது  என்ற சிந்தனையின்றிக் கூறினேன்.

எனது மனைவி என்னைப் புதுமையாகப்பார்த்தாள். நான் சாப்பிடுவதற்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினாள். நான் சாப்பாட்டை விழுங்கத்தொடங்கினேன். அது எனது பழக்கமாகிவிட்டிருந்தது.

“நான் வர நேரமாகும். கதவை திறந்து வைத்திரு” எனக்கூறிக்கொண்டு அறையைவிட்டு வெளியேறினேன். நான் சினிமாவுக்குத்தான் போகிறேன் என அவளுக்குத்தெரியும். அதற்கான நாலேமுக்கால் அணாவிற்காக அவள் என்னுடன் முரண்பட்டுக் கொள்வதில்லை. இது பழக்கத்தால் ஏற்பட்ட ஒரு  கட்டாயத் தேவையாக மாறியிருந்தது. ஒரு பழக்கத்தை தொடர்ந்து கைக்கொண்டு பின் அதை விடாப்பிடியாக வைத்திராவிட்டால் மனைவிமார் கவலையடையத்தொடங்கி விடுவார்கள்.

எனது அதிர்ஷ்டம் “கலரி” யில் இரண்டு பேரே இருந்தனர். அதனால் முன்னே இருந்த சீற்றில் கால்களை வசதியாக போடக்கூடியதாக இருந்தது. மண்டபம் இருளடைந்தது. உடனே திரு “பார்க்கிலிஹில்” பேச ஆரம்பித்தார். நிமிர்ந்து அமர்ந்து கொண்டு, அவரது குரலை கேட்கத்தொடங்கினேன். “உலகின் மிகப்பெரிய சென்சஸ்” திரு ஹில் சபையோலை பம்பாய், கல்கத்தா, சென்னை போன்ற நகரங்களின் சந்தடி மிக்க தெருக்களின் வழியாக அழைத்துச் சென்று கொண்டிருந்தார்.

“உங்கள் வாசலுக்கு ‘சென்சஸ்’ செய்ய வருபவன் வரும்போது” எனக் குறைந்த தொனியில் மிஸ்டர் ஹில் பேசத்தொடங்கினார். “நீங்கள் நகரத்தில் வேலை செய்பவராக இருந்தால் என்ன நாளாந்த கூலியாக இருந்தால் என்ன அல்லது மாட்டுவண்டி ஓட்டுபவராக இருந்தால் என்ன……”

நல்லது நான் மாட்டுவண்டி ஓட்டுவதில்லை, அத்துடன் ஏற்கனவே, சென்சஸ் செய்ய வந்தவனை எதிர்நோக்கியும் விட்டேன். அதில் மன எழுச்சி அடைவதற்கு எதுவுமே இருக்கவில்லை. நான் சென்சஸிலிருந்த சிரத்தையிலிருந்து விடுபட்டு, சிறுதுயிலில் ஆழ்ந்தேன்.

நான் விழித்துக் கொண்டபோது எனது கால்கள் தரையைத்தொட்டுக் கொண்டிருந்தன. முன் சீற்றத்திலிருந்த எனது கால்களை யாரோ நகர்த்திவிட்டிருந்தனர். காதோடு காதாகப் பேசும் சத்தம் கேட்டது. திரை பிரகாசமான வர்ணத்திட்டாகத் தெரிந்தது. எங்கோ மெடக்சிக்கோவில் ‘அஸ்ரெக்’ நாகரீகம் ஃவிற்ஸ் பற்றிக்…. சிறு தூக்கம் ……

மீண்டும் நான் விழித்த போது, “இப்போது அவன் இறப்பான்” என்று யாரோ கதைத்துக்கொண்டிருந்தது கேட்டது. சம்பவங்கள் பல நிறைந்த  நாடகம் போன்ற அந்த திரைப்படத்தை நான் பார்க்கத் திரும்பிய போது (வையில்ட் வெஸ்ரில் – ஒருமனித வேட்டை) அது முடிவடையும் கட்டத்தை அடைந்திருந்தது.

“ உனது மூளை சிதறுவதற்குமுன் வெளியே வா” எனக் கதாநாயகன் கத்தினான்.

“ உள்ளே வந்து என்னைப் பிடிக்கமுடியுமானால் பிடி”

 

‘பாங்க்’ என்ற சத்தத்துடன் பார்னின் 2 கதவு திறந்தது. வில்லன் மார்பில் குண்டு புகுந்த நிலையில் இறந்து கிடந்தான்.

சேணத்தை அங்கேயே விட்டுவிட்டு ஒரு குதிரை தன் பின்பக்கத்தை காட்டியபடி ஓடியது………. நான் வெளியே வர முற்பட்டேன்.

 

வெளியே, அது ஓர் அழகு பொருந்திய இரவாக இருந்தது. செம்மறி ஆட்டு ரோமக்குவியல்கள் போலிருந்த முகில்கூட்டத்தினூடாக வெளியே வந்த சந்நிரன் எனது சந்தினை ஒளிமயமாகக்கியது. கழைக்கூத்தாடியைப்போல், நுனிக்கால் விரல்களால் அங்கு படுத்துக்கிடக்கும் ஆண்கள், பெண்கள், குழந்தைகளை மிக ஜாக்கிரதையுடன் தாண்டிப்போய்க்கொண்டிருந்தேன். நான் பல வருடங்களாகவே இந்தச் சந்து வழியாகப் போய்வருபவன்தான். இந்தச்சந்து, நகரத்தின் இருதயம் போன்ற பகுதியிலிருந்தலும், அது நகரிலிருந்து வேறுபட்ட ஒரு பகுதியாகவே இருந்தது. சட்டென இனங்கண்டுகொள்ள முடியாத பல நிரையான வீடுகள் அங்கு இருந்தன. நிரைகள் முட்செடிகளால் பிரிக்கப்பட்டு இருந்தன. புதியவன் ஒருவன் ஒரு வீட்டைக்கண்டு பிடிப்பாதாயின், ஆயாச முண்டாகும் வகையில்,  பல மணி நேரத்தை அங்கு செலவளிக்க வேண்டி வரும். நிச்சயமாக அந்த பாற்காரன் ஓர் அதசயப்பிறவிதான். அங்குள்ள எல்லோரது பெயர்களும் குருட்டுப்பாடம் போல் அவனுக்குத் தெரியும். அங்கு வசிக்கும் அத்தனை பெண்களும் அவனுக்கு சிநேகிதமாகியிருந்தனர். தங்கள் கணவன்மார் இல்லாதபோது அப+ர்வமாகவே  மற்ற ஆண்களுடன் கதைக்கும் அந்தப் பெண்கள், அந்தத் தபால்காரனுடன் மட்டும் நெருங்கி பழகுவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அட்டைக்கரிப்போல் துலங்கும் இரவுகளில், அங்கு ஒரு தெரு விளக்கு மட்டுமே ஒளிர்ந்து கொண்டிருக்கும். அப்போது எனது சந்து, துக்கம் நிரம்பி காற்றுடன் கூடி  நிற்பது போன்ற உணர்வுடன் திகழும். மழை பெய்யும் போதெல்லாம் அங்கு படுத்திருக்கும் மனிதர்கள் எங்கோ மறைந்து விடுவார்கள். ஒரு அந்தத்திலிருந்து மறு அந்தம் வரை சுற்றிச் சுற்றி வளைந்து செல்லும் சாக்கடை தனித்துவிடும். உஷ்ணமாக இருக்கும் நட்சத்திரங்களினால் நிரம்பிய இரவுகளில் அல்லது முழு நிலவு வரும் உன்னதமான நாட்களில், பலமான கடற்காற்றால், உதிர்ந்த இலைகள் சுழன்றாடும். நெருக்கமாக அடைப்பட்டதுபோல் படுத்துக்கிடக்கும் உடல்கள் – காதலர்கள், கிழவர்கள், ஈனச்செயலல் புரிவோர், எலிகள் எல்லாமே வேதனையுடன் கூடிய ஆன்மாக்களாக மாறி, மாயையும் வினோதமும், கலந்த தொடர்ச்சியான விம்பங்களாகத் தெரியும்.

உயிர்ப்பே இல்லாத இந்த உலக வாழ்வில், எளிய களியாட்டங்களுடன் கூடிய இந்தத்தீவிர உணர்வுகளில் கண்களை மேய விடுவதில் எனக்கு ஒரு வகையான கிளர்ச்சி ஏற்படுவது வழக்கம். நித்திரையின் போது சுயாதீனமாக திரும்புகின்ற கால்கள், அணைக்கும் பாவனையுடன் கூடிய கைகள், காதோடு காதாக, எழும்பும்படி தனது துணைக்குக் காதலன் கூறுவது.

வழமை போல் தெருவில் உள்ள குழாயடிக்கு வந்தேன். யாரோ ஒரு கவலையீனமான மனிதன் அதனை திறந்து விட்டிருந்ததால், நீர் ஓடிக்கொண்டிருந்தது. நான் எனது கால்களை கழுவிவிட்டு குழாயைப்பூட்டினேன். மிகவும் சிரத்தையுடன் அதனைச் செய்தேன்.

அறைக்குப் போவதற்குள் மீண்டும் கால்களில் மண் படாதவாறு இருப்பதற்காக நுனிக்கால் விரல்களால் எனது கதவடி வரை நடந்தேன்.

கதவு திறந்த நிலையிலிருந்தது. உள்ளே ஓர் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. எனக்கு எரிச்சல் வந்தது. எத்தனைமுறை  நித்திரைக்குப்போவதாயின் கதவுக்கு தாழ்ப்பாள் போட்டுவிட்டுத் தூங்கும்படி எச்சரித்திருக்கிறேன். கோபத்துடன் கதவை தள்ளித் திறந்தேன். நான் அறைக்குள் வருவது போல் வேறு யாராவது அந்நியன் நுழைந்தால்…? இப்போது அகாலமாகி விட்டாலும்கூட அவளை எழுப்பி சண்டையிடத்தான் வேண்டும். அறை வெறுமையாக இருந்தது. பாய்கள் விரிக்கப்பட்டுத் தலையணிகளும் போடப்பட்டிருந்தன. ஒரு சிறிய மண்ணெண்ணெய் விளக்கின் திரி முழு அளவில் எரிந்து கொண்டிருந்தது. ஆனால் அவள் அங்கு இல்லை. எனக்கு நீரில் அமிழ்வது போன்ற உணர்வு ஏற்பட்டது. பின் அவள் அறைக்குள் வரும் காலடி ஓசை கேட்டது. இந்தப்பின்னிரவு  நேரத்தில் அடுத்த வீட்டில் ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கிறது.

 

சடுதியாக அடித்துப்பிடித்தப்படி எனது மனைவி அறைக்குள் வந்தாள்.

“ ஓ! நீங்கள் வந்திட்டீர்கள்” என அதிகார தோரணையுடன் அடித்துக்கூறினாள். பழைய பெட்டியொன்றில் கைவிட்டுக்குடைந்து ஒரு துப்பவரான கந்தல் சீலைச்சுருளை எடுத்தாள்.

“ இவை இந்த வேலையை முடிக்க உதவும்” எனக்கூறியவள், “ மருத்துவச்சி எந்த நேரத்திலும் இங்கு வரலாம்” என்றாள்.

“ எங்கே வருகிறாள்? இங்கேயே?”

“ அடுத்த வீட்டிற்கு” எனப்பொறுமையின்றி கூறியவள், “ ஜானகிக்கு வலி கண்டிருக்கிறது.” என்கிறாள்.

“ஜானகியா…?  வெரிக்கோஸ் நாளங்களுடைய அந்தப் பெண்ணா?”

எனது மனைவி என்னை வாடிய முகத்துடன் பார்த்தாள்.

“ உங்களுக்கு விளக்கிக் கொண்டிருக்க நேரமில்லை” எனக்கத்தியபடி அவள் அங்கிருந்து வெளியேறினாள். மாறுகண்களும், முழங்கால் முட்டியில் பச்சை நிறமுடைய அந்தப் பெண்ணே, அந்த ஜானகி என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.

எவ்வளவு வேடிக்கையாக இருக்கிறது. இன்று காலையில் கூட பலருடன் சேர்ந்து அவளும் பாடினாள். இப்போது முனகுகிறாள். இலேசான தடுப்பே எங்களது பகுதியையும் பிரிக்கிறது. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள், நிச்சயமாக இந்த வேலையை பெண்களிடமே விட்டிருப்பார்கள். எனது மனைவியின் குரல் அப்பெண்களின் குரல்களுடன் சேர்ந்து ஒலித்தது.

பெண்களுக்கு ஆண்களின் துணை தேவைப்பட்டாலும், சரீர சம்பந்தமான துன்பங்கள் ஏற்படும் போது அவர்கள் தம்மை தனிமையில் விடுவதையே விரும்புவர்.

“ராம்………. ராமச்சந்திரா ராம்”

அவளது முனகல் ஒலி எனது ஆன்மாவைக் கத்தியால் குத்துவது போலிருந்தது. நான் போதை வசப்பட்டவன் போல் அசைவற்றுக்கிடந்தேன். தரையில் விரிக்கப்பட்டிருந்த பாயில் சலிப்புடன் கூடிய அலட்சியத்துடன் புரண்டேன். சிறிது நேரம் நிசப்தம் நிலவியது. ஆனால் அதிக நேரம் நீடிக்கவில்லை.

“ ராம்… ராம்…. ராம்” எனது மனைவி மீண்டும் அறைக்குள் வந்தாள்.

“ எந்த நிமிடத்திலும் அது நிகழலாம்” என்றாள். எனது மனைவி மருத்துவச்சி பொறுப்பை ஏற்றுக்கொண்டுவிட்டாள்.

எமது அறையிலிருந்து ஒரு யார்கூட இல்லாத ஆப்புவடிவமான ‘பக்கீஸ்’ பலகைகளால் அமைந்த தடுப்புக்கு மறுபக்கத்தில் மரண வலியால் ஏற்பட்டிருக்கும் மெலிதான முனகலும் ஒரு குழந்தை பிறப்பிற்காகப் போராடிக்கொண்டிருப்பதும், பக்தி பூர்வமான பயத்தையும் அழுத்தத்தையும் அங்கு உருவாக்கியிருந்தது. அதன் பின் வலியால் ஏற்பட்ட கண்மூடித்தனமான கதறலுடன் குழந்தையின் அழுகுரல் கேட்டது.

‘அது பிறந்துவிட்டது போலும்’ என்று எண்ணினேன். இந்த வறுமையான இருண்ட சந்தினை அது தேர்ந்தெடுத்திருக்கிறது. மாலைக்கும் நள்ளிரவுக்கும் இடைப்பட்ட இந்த நேரத்தில், ஓர் ஆண் குழந்தை அடுத்த வீட்டில் ஜனனித்துள்ளது. சென்சஸ் செய்ய வந்தவன் எனது அறைக்கு வந்து போனது, என்னவோ வெகு நாட்களுக்கு முன்பு நடந்த காரியம் போல் எனக்குத் தோன்றியது. நடைபாதையில் துயிலும் மனிதர்கள், சாக்கடையின் மென்மையில் மிக மெலிதாக வீசும் காற்றின் சலசலப்பு, அடுத்த அறையில் நிலவும் புரிந்துகொள்ள முடியாத அமைதி எல்லாம் ஒன்று சேர்ந்து எனக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்தியது. மிகவும் மெலிதான தொனியில், சுவரிலிருந்த ‘குயின் ஆன்’ கைக்கடிகாரத்தின், டிக்-டிக் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது. நான் வியர்வையில் தோய்ந்து போனேன்;;;;;.

அறையில் வேறு யாரோ இருக்கிறார்கள். அவள் நித்திரை செய்கிறாள். எங்கள் இருவரது பாய்களையும் ஓர் அடி தூரத்திற்கு குளிர்ந்த தரை பிரிந்திருந்தது. நான் எனது கைகளை அவளின் மேல் போட்டேன். அவள் புரண்டு வந்தாள். இருவரும் ஒரே தழுவலில் கட்டுண்டோம்.

௦00

 

16 Comments

  1. Sivarasa Karunagaran says:

    பிரமிள் அறியப்பட்ட அளவுக்கு த.இராமநாதன் அறியப்படவில்லை. அல்லது மறந்து விடப்பட்டார். ஆனால்,த.இராமநாதனின் கதைகளை தேடித் தொகுத்து வருகிறார் சு. மகேந்திரன். த.இராமநாதனின் மருமகனே சு.மகேந்திரன். சு.மகேந்திரன் ஈழத்தின் முக்கியமான சிறுகதை எழுத்தாளர். காலவெளி என ஒரு நூல் ஏற்கனவே வெளிவந்துள்ளது. மொழிபெயர்ப்புகளும் செய்து வருகிறார். திசை பத்திரிகையில் ஏராளம் மொழிபெயர்ப்புகளைச் செய்தவர். பிறகு வெளிச்சத்தில். தீநிழல் என்றொரு நூல் மொழிபெயப்புப் படைப்புகளின் தொகுதியாக வெளியாகியிருக்கிறது. இனி த.இராமநாதனின் கதைகளும் வரும் என எதிர்பார்க்கிறேன்

  2. நான் இதை ஆங்கிலத்திலும் படித்திருந்தேன். மொழிபெயர்ப்பு அருமை

Post a Comment