Home » இதழ் 07 » சாமிலாவின் சேவல்-எஸ். நஸீறுதீன்

 

சாமிலாவின் சேவல்-எஸ். நஸீறுதீன்

 

சாமிலா, அவளின் கோழிகளின் மீது உம்மாவுக்கு, ஒரு காலமும் இந்த மாதிரிக் கோபம் வரக் கண்டதில்லை.. உம்மா  காகங்களுடன் உரையாடுவார். ‘என்ன இண்டைக்கு ஆக்கள் வாறாங்களா.’அட,  இஞ்சப் பார்ரா அவர்ர ஒரத்த’. சோத்துப் பானையைக் கையில் வைத்துக் கொண்டு, கா,,,கா,,என குரலிலும் நோவு வந்துவிடாதபடி கூப்பிடுவார். கோழி, புறா, குருவி எதுவென்றில்லாது அனைத்துக்கும்  தானியமிடுவார். ரொம்பவும்  சந்தோசமாயிருந்தால், குருவிகளின் ஒலிகளுக்கு அதே தாளங்களுடன் பதிலும் சொல்வதுண்டு.  அப்படிப்பட்ட, சாமிலாவின்   உம்மாவுக்குத்  திடீரென்று அவளின் கோழிகளின் மீது வெறுப்பு வந்து விட்டிருந்தது. இந்த நாட்களில் கோழியும், ஒரு பறவைதான்  என்பதை நிலை நிறுத்துவது கஷ்டமாயிருந்தது. திடீரெண்டு  என்று சொன்னால், போன வெள்ளிக்கிழமை நானா அமீர், கொழும்புவிலிருந்து வந்ததிலிருந்து.  ‘சீய்,  மூதேவி, சைத்தான், ஓடுகாலி ( கூட்டைவிட்டு வந்துட்டாம்) , பண்டி,,,,,இப்படி ஏதாவதொன்றைச் சொல்லியவர் கையை வீசி விரசியபடி, கடைசியாக மறக்காமல், ‘ நடு ஊட்டுக்க பேண்டு வைக்க வாறதப் பாரன்’ எனச் சொல்லிக் கொண்டிருந்தார்.  சியாமாவுக்கு முதலில் மூக்கு  சிவக்கக் கோபம் எழுந்தது.  நேரடியாகச் சொல்லத்தயக்கம். அவவுக்கு, அவவின் மகளில் பதினாறடிப் பாய்ச்சல் நிகழ்ந்துவிடுமோ  என  அஞ்சுகிறார், பதுங்குகிறார் என நினைத்தாள். அது பலமல்ல,  தன்னை அந்நியமாக்குகிறது எனச் சொல்லி அழலாமா எனவும், நடு இரவில் கண்கலங்கினாள்.  அவளுக்காக, அவளின் செல்லக் கோழிகள்கூட ஏச்சு வாங்குகின்றன.

ஹஜ்ஜுப் பெருநாள் விடுமுறைக்காக வீட்டுக்குவந்த நானா அமீர், அவளின்மீதான, அவனின்  நண்பனின் திருமண விருப்பத்தையும் காவிக் கொண்டு வந்திருந்தார்.  நானாவின் நண்பன் சாமிலாவின்   ஊரைச் சேர்ந்த, அவளுக்கும் தெரிந்த- மிகவும்  வசதியான  வீட்டுக்காரப் பிள்ளை. பள்ளிவாசலால் ஊரிலேயே  ஒழுக்கத்துல முதல் குடும்பம் ஐந்தைத் தெரிவு செய்தால் அவர்களின் குடும்பமும் வந்துவிடும்.  வீட்டுக்கு   எப்போதாவது வந்தால், மத்ததுகள் மாதிரி அதிரும்படி பேசாதவர்: சிரிக்காதவர்.  சாமிலா கண்டிருக்கிறாள்.

உம்மாவும்,  நானாவும், அவளின் பின்னாலேயே, ‘ நல்லா இருப்பாய்டி, ஓம் ண்டு சொல்லுடி’ எனக் கெஞ்சித் திரிந்தார்கள். வசதி,  வசதியைப் பார்க்கிறது வாப்பா, எப்போதும்போல,  ‘ அவள் விரும்பினாச் செய்துடுவம்’.  அதற்க்குக் காரணமில்லாமல்  இல்லை, என்பதுவும் அவளுக்குத் தெரியும். வாப்பாவின்,  ராத்தாவின் மகனை (மாமி மகன்- முஸ்னத்) அவள் விரும்புகிறாளா என்பதில் அவர்களுக்கு சந்தேகம் இருக்கிறது.  நானா, சாமிலாவுக்கு,  சனியோடச் சனி எட்டு நாட்களுக்குள் முடிவு செய்யலாம் என அனுமதியும் தந்திருந்தான்.  ஞாயிறு அவன் வெளிக்கிடும்போது, அவளின் முகம் மட்டும் படிந்த புகைப்படத்தின் பின்புறம்  ஒப்பமிட்டு, அவளுக்கு சம்மதம் என்பதைத் தெரியப்படுத்தினால் போதும் என்றான்..  ‘அவன் ஒழுக்கமானவன் மட்டுமல்ல நல்ல நிர்வாகியாகவும் இருக்க வேண்டும்’. அதன் பயன்தான் அரச பத்திரிகைக்கே இந்த வயதில் நிருவாக அங்கத்தினன் ஆக்கியிருக்கிறது.. காலத்துக்கேற்றாப் போல தகவல் தொழில் நுட்ப மானி. அவர் படம் அல்லது அத்தாட்சிக்கடிதம் கேட்பது  அவளுக்கும்  சரியென்றே பட்டது. ஆனால்,  உம்மாவுக்கு அவள் உடனே கலியாணத்துக்கு சரி சொல்லாததனால். சந்தேகமும், அதனால் எழுந்த கோபமும் கோழிகளுக்கு ஏழரைச்  சனியாகி விட்டிருக்கிறது.

சாமிலாவுக்கு, காசு என்பதில், ஒரு தெளிவு  தனக்கிருப்பதாக நம்பினாள். அவளின் வாப்பாவை   அதற்க்குக் காரணமாகக் கண்டிருந்தாள். பணத்தைக் கட்டிக் கொண்டிருப்பதையே- மனதின் வேலையாக்கி, அதைத்தேடி ஓடிக்கொண்டிருப்பதுவே வாழ்க்கையாகி – ‘சுத்திச் சுத்தி வந்தீக,,’ அநேக சுத்திவிட்ட  பம்பரங்களைப் பார்க்கிறவள் அவள். அப்படிப்  பார்க்கப் பழக்கியது அவளின் வாப்பாதான். அவளின்  ஏழு வயதில் பிறந்த நாள் பரிசாக ஒரு உண்டியலைக் கொடுத்து விட்டார் அவர்.  அவளும் ‘விட்டேனா பார்’ என்று, உம்மாவிடம் அடிக்கடி, ‘கடையில என்னையும் வாங்க இருக்கா?’ எனக் கேட்டு  மிக நல்ல பிள்ளையுமாகி, கண்ணில கண்டதும், பெற்றதுமாக இட்டு, ஆறு மாதங்களிலேயே அதனைக் காசு கொள்ள முடியாதபடி ஆக்கிவிட்டாள். நல்ல நாள் – வேறென்ன வெள்ளி  பின்னேரம்தான், உம்மா, நானா, வாப்பா எல்லோருமாகச் சேர்ந்து உண்டியலை உடைத்து, பங்குபோட்டு எண்ணிக் கூட்டித் தொகை கண்டார்கள்.  வாப்பா,  ‘அவ்வளவும் அவள்ல காசுதானாம், விரும்பியத வாங்கித் தாறாராம்’ என்றார். அடுத்த நாள்,  அவர்ர காசில பெற்றோல் போட்டுக் கடைக்குக் கூட்டிப்போனார். அவள் ஆசைப்பட்டதை யெல்லாம் வாங்கிக்  கொடுத்தார். மறக்காமல்,  இன்னொரு புது உண்டியலையும் வாங்கிக் கொடுத்தார். அவளின் பதினோரு வயதில், ‘இனிக் காசு எங்கும் பொறக்காதே’ என்றார்.  ‘ இது என்னடா, சியாமாவுக்கு வந்த சோதனையென்று பார்த்தால், ‘மூன்று கோழிகளை அவளிடம் பரிசளிக்கிறாராம்’  என்றார். ‘எனக்கே எனக்காக’ என ஆலாப்  பறக்கிற காலம்அது.  அவளுக்குக்  கோழிகள் சிநேகமாயின.

நட்பு என்றால், ஒரு பிச்சைககார மனிசனப் பார்க்கிற மாதிரிப்  பரிவென்று பெரிய நீலமெல்லாம் இல்லை அவளுக்கு.  பசி,  ஆனந்தம்,  பரிதவிப்பு,  மறந்துபோதல் அனைத்தும் நம்மைப் போலவே என்னமாய்த்தான் இந்தப் பறவைகள் வைத்திருக்கின்றன. ஆராய்ச்சி என்றும் சொல்லக் கூச்சப்படுபவள்.  ஒருமுறை  வீட்டுக்கு வந்த அவளின் தோழியைக் கூட்டிக் கொண்டுபோய், கோழிக்குத் தீனி யிட்டுவிட்டு, ‘என்ன அணியா, எவ்வளவு சந்தோசம் அதுல பார்,,,’ காணாததுக்கு விளக்கக் குறிப்பு வேற. பீங்கானை வைத்தவுடன் சாப்பிட அவைகளிடம்  அடிபிடி இல்லை. கொஞ்ச நேரம் கண் குத்திப்  பார்த்திருக்குமாம்.  பின் சட்டென்று, எப்ப இந்த வாய் விரிந்த,  எந்நேரம் தலை கீழ போய்வந்த எனத் தெரியாத ஒரு அள்ளுகை. அது, அவளின் மாமா  ஒருத்தர், சோறு தின்னும் அழகு போல்தானாம் என்றாள். அத்தனை நீளக் கையிருந்தும், முகம் பீங்கானிடம் வந்து  மூக்காலையும் முகர்ந்து தின்கிற மாதிரி,,,, தோழி அன்றோடு தலையிலடித்துக் கொண்டு போனவள்தான். வீட்டுப்பக்கம் வருவதேயில்லை.

அவளின் கோழிகளை , அவைதந்த முட்டைகளை, அவளிடம் அவசரத்துக்குக் கடன் கேட்கும் ஆக்களாக உம்மாவையும்,  நானாவையும் ஆக்கியிருந்தன. அவள் அந்தக் காசை அவர்களிடம் கொடுக்கும்போது  காட்டும் பந்தாவைப் பார்க்க வேண்டும். ‘நீங்கெல்லாம்  என்ன  காசுக்காறாக்கள்’. சாமிலாவின்  அன்றைய  நிலைக்குப் பின்தான் பில் கேட்சும். அவளின் சிநேகிதிகளுக்கு அவசர   உதவியாளினி  அவள்.  அவளின் கூடப் படிக்கிற வகுப்புத் தோழிகளுக்கு அவள் கோழி வளர்ப்பதும், அதை விருப்பத்துக்குரியதாக வைத்திருக்கிறாள் என்பதுவும்  தெரியும்.  மற்றும்படி உயர்தர  கணிதப் பிரிவு வகுப்புக்கே தெரிய வந்தது   அவளின் மச்சான்  முஸ்னத்தால் தான்.

ஒருகாலமும் உறவுக்காற ஆட்களுடன், ஒரே வகுப்புல உட்கார்ந்து இங்கிலிசுக்காரண்ட படிப்பைப் படிக்கேலாதத, அப்பதான் சாமிலா     கண்டடைந்தாள். ‘மத்தப்   படிப்புக்கெல்லாம் அதபுதான் முன்னுக்க  நிக்கும். வெள்ளையும்,  நீலமுமா என்னதான் முலாம் போட்டுப் பெயின்ற் அடிச்சி உடை உடுத்து, உட்கார்த்தி வைத்தாலும், சீண்டினா இழிச்சிடும். பிரம்பு காட்டி, கம்முன்னு  கிட என்றால் சரி வருமா?  இறை நீதிக்கே, மணி  ஓசையா?’ முஸ்னத்தக் காணும்போதெல்லாம் இப்படித்தான் நினைத்தாள் அவள்.

முஸ்னத் அவளைவிட  மூணு வயதுகள் மூத்தவன். ஒ.எல்.பரிட்சை யையே முக்கி, , இன்னொருமுறை முக்கிப் பாஸ் பண்ணினதுமில்லாமல், ‘கணித பாடத்தை வாற வருஷம் எடுத்துத் தரலாம்’ எனும் சலுகையடிப்படையில்,  உயர்தர கணிதப் பிரிவுக்கு, வருகிற இரு வருடங்களும்தான் ‘ படிப்புண்டா என்ன’ எனக் காட்ட வந்திருப்பவனைப் போல உட்கார்ந்திருந்தான். ஆசிரியர் வகுப்பில்  உள்ளபோது, ‘ இப்பிடியும்  ஒரு சாலிஹான புள்ளையை எங்கயும் காணேலுமா?’  என்பதைப்  போல முகம் வைத்திருப்பான். வாத்தியார்,  வாசல்ல காலெட்டு எடுத்துவைக்கப் படுபாவி தொடங்கிடுவான். படிப்பைத்   தவிர  மீதி எல்லாமே தெரிஞ்சவன் மாதிரிப் பீத்திக்குவான். சரியான  விளையாட்டுக்காரப் பிள்ளை.  பின்னால் இருந்துகொண்டு  அவனும் மற்றயவர்களும் படிப்பைத்  தவிர கண்டது, கேட்டது எல்லாமே பேசுவார்கள்.

அந்த  வகுப்பில் கணிதம் கற்கும் பெண்கள் அவளையும் சேர்த்து ஐந்தே பேர்தான். அவர்களை வலதுபக்க முன்னணியில் வைத்துவிட்டு, எதுவும் கேட்காத , எதுக்கும் சிரிக்காத மாதிரி இருக்கவும் வேண்டியிருப்பது, கொடுமையானது. அதைவிட சாமிலாவுக்கு,   இடையிடையே மூணு நிமிசமா ஒருத்தர் பின் மண்டையில முறைச்சுப் பார்க்கிற மாதிரி- தமிழ் சினிமா 90  வீதம் பொய் என்றாலும் மீதிப் பத்துல வருமாப்போல சீன் காட்டுவாங்களே- அதேமாதிரி உந்துதல்ல  அவள் திரும்பிப் பார்த்தால், சட்டுண்டு அவன் முகம் திரும்பும். என்ன பார்வைடா  இது?  சியாமா,  ‘ சொத்தையப் பாரு?’ என உதடு முணு முணுக்க,  நாடியைத் தோளில் இடித்துத் திரும்பி விடுவாள்.  அவளுக்கு    அவன்மீது  அவ்வளவு ஆத்திரம் இருந்தது. அதற்கும் அவளின் கோழிகள்தான்  காரணம்.

எந்த  அரசாங்கச் சோதனை எழுதி முடித்தாலும், ‘படிச்ச ரயர்ட் போக்கவாம்’ என்று இருமுறை சுற்றுலா போன முஸ்னத்துக்கு கடைசி ஓ. எல்லில்,  போகப் பணமில்லை.  அவனின்  வாப்பா,  ‘காசு தர மாட்டேன், முதலில் ரிசல்ட் வரட்டும்’  எனச் சொல்லி உதட்டைப் பிதுக்கி விட்டார். அவனுக்கு வெளிலையும்  சொல்ல முடியாத வெட்கம். யாரும்  உம்மாவிடம்  இதில் வெட்கப்படுவார்களா?  உறவுக்கார ஆக்களப் பார்க்கயாம் எனும் காரணம் வைத்து, விருந்தினர் போல உடை உடுத்து- ஒவ்வொரு முறையும் தனியாகவே   வீடு வருகிறவன், வரும்போது ஒருநாளும் கூட்டி வராத மாமியுடன் வந்துதான், அவளின்  கோழி முட்டைவித்து சேமித்திருந்த காசை வாங்கியது.
அவளின் மாமிதான், மாமா, காசு இல்லண்ட கதையை  முதலில் சொல்லிப் பேச்சை ஆரம்பித்தார்.  ‘ தம்பிக்கு அதால கடும் கவலையாம். அவர்ர வயசுப் பிள்ளைகளப்  பார்க்க வெக்கப்பட்டு வீட்டேயே அடைஞ்சு கிடக்காராம். ‘ கேட்கவும் வேணும். வெட்கத்துல கேட்டுக்கொள்ளவும் இயலாத சங்கோஜ  நிலையை சாமிலா, குசினிக் கதவின்ர இடைவெளியினூடாகக்   கண்டாள். வரவேற்பறையின் கதிரையில், பசி கொண்டலைகிற கண்களும், நெளியும் உடலுமான பூனையை  அடையாளம் கண்டாள். கள்ளப்  பூனையை நம்பாமல், அவளின் வாப்பாவின் ராத்தா- அவனின் உம்மாவைச் சாட்சியாக வைத்துத்தான் அவள் காசை எண்ணிக் கொடுத்தாள். ‘ மாமி  இன்னா இருக்கு 1500  ரூபாயும். உங்களைத்தான்  நம்பித் தாரன்.’. மாமி சொன்ன கெடு, மாதங்கள் மூன்று.
ராசா, அரச விடுமுறைப் பயணமெல்லாம் போய்வந்து மாசங்கள் ஐந்தாச்சு, சாமிலா, கொடுத்த காசுதான் வந்து சேரமாட்டேனென்றது. சொந்த மாமிட்டையே வாய்விட்டுக் கேக்கிறயா?. மாமி, எந்தவிதத் தடங்கலும் நேராத ஆள் போலவே, வழமைபோல வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தார். பரீட்சை முடிவுகள் வந்து உயர்தரமும் படிக்க ஆரம்பித்த பின்னர்தான்,

வீட்டுக்கு வந்த மாமியிடம் ஒருநாள்  ,’மாமி,,,’ என்றாள் சியாமா. மாமி விசயத்தைக்  கேள்விப்பட்டதுமே, பதறிப் போய் விட்டார்.
‘ அடப்பாவி!  அவன்  இன்னும் தரல்லியா அத?’ என்றார். சியாமாவுக்கு ‘ஏனடா கேட்டோம்’ என்றாகிப் போயிற்று. கடைசியில், சியாமா மாமியிடம்,
‘ நீங்க உடுங்க மாமி. நான்  கேட்டு வாங்கிக்கிறன் ‘ என்றாள்.

அவள், அன்றிரவு பூராக  ‘ நாளைக்கு  வா மகனே, உனக்கு இருக்கு’ எனக் கறுவியபடி கிடந்தாள்.  இதுவும்  விளையாட்டுத்தானா உனக்கு? எவ்வளவு  பெரிய  மொள்ளமாரித்தனம்.  இத்தனை சுளுவில  இம்பட்டுக் காசையும் அமுக்குறண்டா?  ஒரு  கஷ்டம் பட்டிருப்பியா?  ஒரு கோழி வாங்கி வளர்த்துப் பார்  அப்பதெரியும்? கோழிதான்  இல்ல, அதுட தீனியாவது ஒருநாள்ள வாங்கிவந்து  தந்திருப்பானா? மாமனா மச்,, கேட்கேலாது,இதை.  ‘ஹிஹிஹி,,, அப்படித்தான் வைச்சுக்கவன்’ எனச் சொல்லிவிட்டுப் போய்விடுவான்.

காலையில் பாடசாலைக்கு வந்த  உடனேயே அவனிடம் அவள் கேட்கவில்லை. ‘ பாவம் படிப்புக் குழம்பிடும்’.  கடைசிப் பாடம் துவங்க இருக்கக்கதான் சியாமா, நல்ல வார்த்தையாகத்தான் கேட்டாள்.

‘ மாமி எப்பவோ குடுக்கச் சொல்லித் தந்துட்டாங்களாமே. நீங்க சொல்லவும் இல்ல,  இன்னமும் தரவும் இல்ல.’

கடைசியாகத்தான்,
‘ இது ஒரு நல்ல மனிசன் செய்ற வேலையா?’ என்றாள். அவள்  முன்னர் புத்தகங்களில் .  ‘ அரும்பு மீசை கோபத்தில் துடித்தது’ என்று படித்திருக்கிறாள்.   அன்று  நேரடியாகக் கண்டாள்.  துரைக்கு ரோசம்  பொத்துக் கொண்டு வந்து விட்டது.  சியாமா  அடுத்த இரண்டு மாசங்களை எண்ணிக் கழிப்பதற்கிடையில், காசைக் கணக்குப் பண்ணி விடுவதாக சவடால் விட்டான். சியாமா, நம்பாதமாதிரி முகம் வைத்துக் கொண்டு,
‘ பார்க்கத்தானே  போறன்’ என்றாள்.  கண்தானே பார்க்கப் போகுது என நம்பியவளுக்கு, அருகாய்க் காதும் வைத்திருப்பது அப்போது நினைவிலிருக்கவில்லை

அடுத்த நாளே முஸ்னத், அவனின் வேலையைத் துவங்கி  விட்டான். வகுப்பில் பாடமில்லாத நீண்ட பொழுதுகளில்,  அவளால் இருந்து கொள்வதே பெரும் பாடாய் இருந்தது. எல்லோரும் பொதுவாக, ஒரு பொருள் பெறுமதி  இல்லாதது என்பதைக் காட்ட ‘ அஞ்சு சதம் பொறுமாடா அது?’ எனக் கேட்பதைத்தான் அவள் கேள்விப்பட்டிருக்கிறாள். அவளின் பின்னால், முஸ்னத்தின்ர  கூட்டாளி- தெறிப்பான் ஒருவன், கைக்குக் கிட்ட அம்புடுகிற எதோ ஒரு பொருளை (பென்சில், பேனை, கொம்பாஸ், புத்தகம் என்று தோழிகள் சொல்வார்கள்)  அவன் முன்னாகக் காட்டியபடி,
‘ புதுசுடா மச்சான். இண்டைக்கு  வாங்கினது. எவ்வளவுண்டு  சொல்லு பார்ப்பம்’ என்பான்.  அதுக்கு அவன் பதிலாக கேட்பான்:
‘ ஒரு கோழி முட்டை பெறுமாடா?’  உடனே எல்லோரும் ஏதோ  கேளாததக் கேட்ட   மாதிரிக் கொல்லென்று சிரிப்பார்கள். சியாமாவுக்குக்  காது வழியா, சூடு செஞ்ச கம்பிக்கோல் பூர்ர மாதிரி  இருக்கும். அதையும்  தாங்கலாம்.  பரவாயில்லை. பொதுவாக வாய்ப்பாடுகளைப் பிரதியிட்டுக் காண்கிற   கணக்குகளை,   இரசாயனச் சமன்பாடுகளைச் சமப்படுத்துகிற வேலையை- அதாவது, ஆம்பலின் நீரளவை அறிந்ததால் இலகு கேள்விகளை அவனிடம் கேட்பார்கள். அவனும் பெரிய சிக்கலைத் தீர்க்கிற மாதிரிப் பாவனை பண்ணி, விடையை எழுதியபின் கடைசியாகச் சொல்வான்:
‘ இனிமே இந்த மாதிரி, முட்டையில மயிரு புடுங்க இங்க வராத’  அன்றைக்குத்தானே இது என்று பார்த்தால்,, அடுத்தநாள் இன்னொருவன். சியாமாவுக்குக் காதோடச்  சேர்ந்து கன்னமும்  சிவந்ததுதான் மிச்சம்.  அந்தப் பணத்தை  பாடசாலை வாழ்க்கை முடிந்த பின்னும்,   அவளால் அவனிடமிருந்து  வாங்க முடியாது போயிற்று.

ஏ. எல்லோடப் படிப்புக்கு முஸ்னத் குட்பை சொல்லிட்டான். மாடுதான், மனிசன  இழுக்கணும். மனிசனால  மாட்டக் கட்டி இழுக்கேலுமா?   சியாமா  முன்னர் பாடசாலைக்கு நடந்து போனாள். இப்ப  அவளை  வளாகத்துக்கும், வீட்டுக்கும் பஸ் ஏத்தி இறக்குது.  வேலையிலமாற்றமில்லை.  பரீட்சைவரை அசைபோட்டுத் துப்புறதுதான்.  அவன் மட்டும் மாறாம இப்பவும் அவள் பார்த்திருக்க  விளையாட்டும் ஆளுமாவே திரிந்தான்.
சியாமாட  வீடு,  மெயின் வீதியில் இருக்கிறது. வீதிக்கு  மறு புறம் மைதானம்.  மைதானத்தின்   ஒருதொங்கலில்  ஹோட்டல், மறு தொங்கலில் சில்லறைக் கடை.  அவளறிய, அவளின் பனிரெண்டு வயதிலிருந்து, அவனை அந்த மைதானத்தில் காண்கிறாள்.  உதைபந்து  வெறியன்.  அவள் கோழிகளுக்கு  தானியம் நிரம்பிய பீங்கானை வைத்ததுமே கோழிகள் கோக் கோக் என்ற இரைச்சலுடன் அதனைச் சூழ்வதுபோல்தான், அந்த ஒற்றைப் பந்தை நோக்கி விரைவார்கள். ஒரு கோல் அடித்த உடனேயே அவர்களின் ஆரவாரம், ஆண் சேவல் மதில் சுவரின் மேலாகப்  பாய்ந்து செல்வதை அவளுக்கு ஞாபகப்படுத்தும்.  அப்போது,  ஊருக்குரிய ரீமில் விளையாடிக் கொண்டிருந்தான்.  மெட்ச் இருக்கிற நாட்கள்ள பெரிய ஜனத்திரளாயிருக்கும்.  ஊராக்களுக்கு எல்லா  மெச்சுமே  நம்ம ஊரான் வெல்லத்தான் என்று நினைப்பு.  வெளியூரான்  வந்து விளையாடி வென்றால், தாங்க ஏலாமப் போயிடும்.  மைதானம்  உடன காலியாயிடும். புலம்பிக்கொண்டு போவார்கள்:
‘ வெண்டவன்ட  சொத்தயப்  பாரன், தோத்தவன்ர  டிக்கியப்போல’ என்பார்கள். இப்போது  அந்த மாதிரியெல்லாம் வீட்டின் முன்புறம் இல்லை. விளையாட்டிடத்தை  வைத்தியசாலை  ஆக்கியிருக்கிறார்கள். முன்னர் விளையாடியதால்,  தேவையில்லை என்று நினைத்திருப்பார்களாக்கும். ஆனால்,   அப்போது போலவே இப்போதும்  ஜன நடமாட்டத்துக்குக் குறைவில்லை. அதேநேரம், அவனைப் பிடித்து, இஞ்ச மட்டும் விளையாடாத, மாவட்டம் பூரா விளையாட்டுப்  பார்த்து வருவதையே அரச வேலையாக்கிக் கொடுத்திருந்தார்கள்.  நல்ல காலம்,முதலாளியாகாமல், மாதம் வேலைசெய்து சம்பாதிக்கிற விளையாட்டு உத்தியோகத்தன். பைசிக்களை  மோட்டார் சைக்கிளாக்கி, கை  பெல்லுக்குப் பதிலாக, கால் கிளச் மிதித்து சிலவேளைகளில் அவளைக் குறுக்கறுப்பான்.

சனியும், ஞாயிறும் பிடித்துவைக்க முடியாதபடி கழிந்து போயின. இரவு  பகல் என்பது தவிரப் பொழுதுக்கு பிரிவேது. சியாமா  இரவில் தூங்கக் கஷ்டப்பட்டாள்.  அவர்களைப்  போலவே, அவளுக்கும் அதில் சந்தேகமே இருக்கிறது.   இதுவரை அவன்,  அந்த மாதிரி ஒருபோதும் பேசியதில்லை.  நானா,  இதற்காகத்தான் வந்திருக்கிறார் என்பது  தெரிந்திருக்குமா?’  வீட்டுக்கு  வந்த மாமியிடம் அவளாகவே நானா திருமணம் பேசி வந்திருக்கும் செய்தியைச் சனியே சொல்லி விட்டிருந்தாள்.  ஞாயிறு  ஒருபொழுதும் வீதியில் மோட்டர் சைக்கிள் உறுமிக் கொண்டு செல்லவில்லை.  திங்களும், செவ்வாயும்  உப்புச் சப்பறே அவளுக்குக் கழிந்து போனது. எப்படியோ  அந்தப் பொன்னான புதனும் வந்து சேர்ந்தது.

அவள் இப்போது  இறுதித் தேர்வுக்குச் சப்பிக் கொண்டிருக்கிற காலம். மூன்று வருடங்களாக வைத்தியசாலையின் முன்னுள்ள இந்த  பஸ் தரிப்பிடத்திலிருந்துதான் போய் வருகிறாள்.அன்று  தரிப்பிடத்துக்கு, நேர காலத்துடனேயே  வந்துவிட்டிருந்தாள். இனி, பஸ் வந்து விடும். அப்போதுதான்  மைய வாடியின் பக்கமிருந்து உறுமலின் சத்தத்தைக் கேட்டாள். முன்னரும்  மாதத்திற் கொருமுறையாவது ஊரில் வீழும் மையத்தை அதிகாலையே அடக்கம் செய்யும் ஜனங்களில் ஒருத்தனாக அவன் அவளைக் கடந்ததுண்டு. அவளறிய  இன்று யாரும் மரணித்ததாக பள்ளிவாயலிலும் அறிவிக்கவில்லை. ஆக்களும்  இல்லாத தனிப்பாட்டை. அதுதான்  அதிகாலையிலேயே இத்தனை உறுமல்.  தவிர்க்க முடியாதபடி முகத்தெதிராய் அம்புட்டானானால்,  ‘ தெரிஞ்சாக்கள்’ ரகப் புன்னகையை  வழங்கிவிட்டு ஒதுங்கி  விடுவாள்.  இன்றும் அவன் கடந்து விடுவான் என்றே எதிர்பார்த்தாள். அப்படி நிகழவில்லை.  தரிப்பிடத்துக்கு பதினைந்து  அடியளவில்  இடைவெளி விட்டு, வாகனத்தில் சாய்ந்தபடியே அவளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டான்.  சனங்கள், அவளைத்  தெரிந்தவரா எனப் பார்வையால் கேள்வி கேட்டார்கள். அவள்  அவனை  மெதுவாக நெருங்கி வந்தாள்.

எல்லாமே வேகம்தான் அவனுக்கு புலம்பித் தீர்த்துவிட்டான் மாமிமகன் அவளிடம். அவள் சொந்த நானாவையே அவன் பேசியதையும் தடுக்காமல், நிலம் பார்த்தபடி கேட்டுக் கொண்டிருந்தாள். அவன்  கணிதம்  படிக்க வந்ததே அவளுக்காகத்தானாம். அவளின் நானா,  இதைத் தெரிந்திருந்தும், மாப்பிள்ளை பார்க்கிறானாம். அவன்  விரும்புவது மட்டுமல்ல, அவளும் விரும்புவதால்தான்  அனுமதிக்கிறாளாம் எனும் கண்டு பிடிப்பும் செய்துள்ளதாகப் பீற்றல் வேறு..  அவன் மனைவி,  அவள் மட்டும்தானாம். இல்லையென்றால்,  அவள்  பார்த்திருக்க பிரம்மச்சாரியாவே இருந்துடுவானாம்’.  சாமிலா கேட்டுக் கொண்டே இருந்தாள். அவன் அவளைக் கடைசியாகக் கேட்டான்:

‘இதில உங்க முடிவு தெரியணும். ஓம், இல்லை எதுவாயிருந்தாலும் சரி..’ அவள் அவனைப் பாராமல் நிலம் நோக்கிய படியே சொன்னாள்:

‘ என்னால் முடியாது. வாப்பாட்ட முதல்ல  பேசிப் பாருங்க’.

ஒரு   பஸ்  போய்விட்டிருந்தது.  அவள் நிலையத்துக்குத்  திரும்பி  விட்டாள்.  அப்போதிருந்தே  அவளின் மனது அலைபாய ஆரம்பித்துவிட்டது. வாப்பாவுடன்   ஏடாகூடமாகப்  பேச்சு நிகழ்ந்து விடுமோ என அஞ்சினாள். வீட்டில்  வரும்  ஞாயிறுக்கிடையில், எழப்போகும் நிகழ்வுக்காக, முட்டை அடைவைத்த கோழிபோல அமைதியாகக் காத்துக் கொண்டிருந்தாள்.
வியாழன்  அமைதியாகக் கடந்து போனது. வெள்ளி வாப்பா ஜூம்மாவுக்குப் போய்வரும்போது, அவள், விருமாண்டியில் கமல் ஹாசன் தொன்மையான, ஆண்மையைப் போற்றும் மகத்துவத்தை, நானா பார்த்திருக்கும் மாப்பிள்ளை விலாவாரியாகக் கிலாகித்து, அவனின் அரச சஞ்சிகையில் எழுதியிருந்த கட்டுரையை  வாசித்துக் கொண்டிருந்தாள். வாப்பாவின்  கையில்,  ஒரு அழகிய சேவல் இருந்தது.  தங்களின் நேர்ச்சையை நிறைவேற்ற மக்கள் கோழி, ஆடு, மாடுகளைப்  பள்ளிவாயலுக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். எல்லா நாளும்  பாவங்கள் மலிந்த பூமி. பள்ளிவாயல்,   ஜூம்மா முடிந்ததும்,  ஜனங்களை முன் வெளியில்  நிற்க வைத்து ஏலத்தில் விற்கும். சியாமாவுக்கு முன்னரும் இதேபோலக்  கோழிகள்  வாங்கிவந்து தந்திருக்கிறார். ஆனால்,  அப்போதைய  மலர்ச்சியுடன்  அவர் கை தன்புறம் நீளாததைக் கண்டாள் . ‘  சொல்லி விட்டானா?. நல்ல இடத்தைத்தான் தெரிந்தெடுத்திருக்கிறான். ஏழைகளின்  ஹஜ்ஜு. கடின மொழி  பேசிவிடாதீர்கள். சண்டை   பிடிப்பது  தடுக்கப்பட்ட இடம்.  என்ன சொல்லி இருப்பான்?  அவள்   எதுவும் பேசாமல் சிவப்பு நிறச் சாவலை வாங்கிக் கொண்டு வீட்டின் பின்புறம்  நடையைக் கட்டினாள். வாப்பா,  உம்மாவை நோக்கிச் செல்வதை அவதானித்தாள்.

பின் வளவுக்கு  புதுச் சேவலுடன் சியாமா வந்தாள். எந்தப்  புதுசும், கொஞ்ச காலம் கட்டில் இருப்பது அவசியம். சூழலை  மறக்காதபடி பதியச் செய்ததும் அவிழ்த்து விடலாம். சாமிலா  சிவப்புச் சேவலை கத்தா மரத்தில் ஒரு நுனி பிணைத்திருந்த கயிற்றால், கால்களில் ஒன்றை முடிந்து தரையில் விட்டாள். பின்வளவு  எங்கிலும் செல்ல முடியும் கோழிகளுக்கு, சாமிலா தானியமிட விரும்பினாள். பீங்கானில் அரிசியிட்டு, வரும்போதுதான் அந்த மகிரத்தை அவள்  காணும்படியாயிற்று.  சத்தியமாக அதை அவளின்  இரு கண்களாலும் கண்டாள்.

அவள் வாப்பாவிடம்  இந்தப் புதுசை வாங்கும்போதே, இதை ஓரளவு  எதிர்பார்த்தே இருந்தாள்.  ஆறுக்கும்  ஒன்றுதான் என அலைந்தாயே, இன்னொருத்தனும் வருகிறான்?  சவங்கள், அதை  நினைப்பில வைச்சே அத்தனையும் மட்டிடுமா? ‘ அவள் அது இத்தனை வல்லது என நினைக்கவேயில்லை.
ஒரு அரைப் பிறையை ஞாபகம் கொள்ளுங்கள். அதன் உள்ளாகவே நிலத்தில் அடைத்து வைத்தமாதிரி  அத்தனை கோழிகளும் நின்றிருந்தன.                  அரைவட்டத்தின் ஒருமுனையில்  பழைய சாவல்.  மறுமுனையில் புதுச் சிவப்பி.  நேர்ந்துவிட்ட கோழிகளை யாரும் தொந்தரவு  செய்வதில்லை. கவனிப்பும் அதிகம். அது உடம்பு  தினவெடுத்து தலை சிலிர்ப்பி நின்றது. எப்போதும்  அதன் உடலின் சிவப்பைவிடச் செக்கச் சிவந்த கொண்டை வளைவை உயர்த்தி,  இரத்த உள்கோப அளவைக் காட்டின.  பழைய சாவலை நடுவே வைத்தபடி உலா வரும் ஆறு பேடுகளும்  மையம்விட்டு மேல்நோக்கி நகர்ந்தன. யார் பக்கமும சாராமை.  யாராயிருந்தாலென்ன, வெற்றிக்கொடி நட்ட  பின்னர் வா.  எத்தனை  அழகிய மௌனம் சூழ் பின்னகர்வு அது.  ‘நாங்கள் குழப்பவேயில்லை. கண்டு கழிக்கிறோம்.’.

சிவப்பி, திண்ணென்று  தலை நிமிர்த்தி நின்றது. அதன் கால்கள் இரண்டும் நிலத்தை உறுதியாகப் பற்றியிருந்தது .  சிறகுகள் இரண்டும் விரிவதும் தாழ்வதுமாக ஆக்ரோசம் காட்டியது. அவளின் பழைய சேவல் சண்டைக்கு நானும் தயார் எனச் சிலிர்த்து நின்றது. அதைப் பார்த்ததும் தமிழ்ப்பட சத்தியாராஜ் அவளின் நினைவில் வந்தார். படம் முழுக்க  சர வெடியாய்த்  தூவிட்டு, வில்லன் வந்த உடனே சட்டையக் கழட்டி முடியக் காட்டுவதுபோல் தான்  அதன் ரோசமும் ஆக்ரோஷமும்  இருந்தது. எடுத்தவுடன் அவைகள் மோதவேயில்லை. ஆளையாள் கண்கொட்டாமல்  முறைத்தன. அவள்  கண்முன்னே ஆடுகளம். அவள்  பீங்கானில்  இட்ட அரிசி மணிகள் கேட்பாரின்றிக் காய்ந்தது. அவள் விடுப்புப் பார்க்க உட்கார்ந்து விட்டாள்  சற்று நேரத்தில் இரு சேவல்களும் தங்களின் முன்னிருக்கும் காலைப் பின்னகர்த்தின. முன்னோக்கிய ஓட்டத் தயார் நிலை. சாமிலா  பார்த்துக் கொண்டே இருந்தாள். சிவப்பி  சட்டென்று நிலம் கீறிப் புழுதி கிளம்பு தலையை உதறியது.  ‘ வாடா பார்ப்பம்’.
அதே போலப் பழையதன் பக்கமும் .  ‘ இடையில வந்ததே நீதான். நீ வாடா’
சிவப்பிக்கு ரோசம்  பொத்துக் கொண்டு வந்து விட்டது. அதன்  விஸ்வரூபம் பெரிதாயிருந்தது. அதே நேரம்  பழைய சாவலின் கண்களில் அவள் பயத்தையே  காணவில்லை. சியாமா மாறி மாறிப் பார்த்துக் கொண்டே இருந்தாள். திடீரென நெஞ்சுப் பகுதி  பின்னகர, வால் பணிந்து கொள்ள இரெண்டும் அந்தரத்தில் நெஞ்சு மோதின. சியாமா அய்யய்யோ என்றாள். பழைய சாவலின் தலையைத் தள்ளி விடுவது, கழுத்து நீண்டு தலை பெருத்த சிகப்பிக்கு இலகுவாயிருந்தது. பழையது தளரவில்லை. மீண்டும் உறுமல்கள் துவங்கின,,,சியாமாவுக்கு மேலும் அதைச் சொல்ல விருப்பமில்லை. நீங்கள் ஆடுகளம் பார்த்துக் கொள்ளுங்கள்.  அவளின் பழைய சேவல்  தோற்றுப் போயிற்று. சிவப்பி  பழையதன்  தலையில், கண்ணருகே சேதம் விளைவித்திருந்தாள். சிவந்து  தெரிந்தது.   அது இயல்பே. ஆனால் அந்த ஐந்து பெட்டைக் கோழிகளும்  உடனேயே சிவப்பியுடன் இணைந்ததும், அவரின் மேற்பார்வையிலான ஊட்டுகையும், ஊர்வலமும்,,,சாமிலா இனம் புரியாத சோர்வுடன் எழுந்து கொண்டாள்.

அன்றிரவு கோழிகளின் எண்ணிக்கையை உறுதிப் படுத்த வேண்டி கூட்டினுள் தலை நீட்டிக் கணக்கிட்டாள். எல்லாப் பேடுகளும் இருந்தன. சிவப்பி இருந்தது. சேவலைக் காணவில்லை. அருகிலுள்ள பரப்பெங்கும்  கண் விரித்து ரோச்சடித்துத் தேடினாள். காணவேயில்லை.  கொஞ்ச நேரம் எங்கு போயிற்ரென்ற கவலை இருந்தது.

அதிகாலை எழுந்ததுமே மீளவும் வந்த தடம் தெரிகிறதா எனத் தேடினாள். அப்பாடா! வந்திருக்கிறது. கூட்டினுள்  எட்டியும் பார்க்கவில்லை. கத்தா மரத்தின்  கிளைக் கம்பில் இரவைக் கழித்திருக்கிறது. மரத்திலும், நிலத்திலும்  கழித்திருந்த எச்சம்,  காலம் சொல்லியது. அதிகாலையே முதல் கூவலுடன் சுவறேறிப் போயிருக்கிறது. வீடு வெளிச்சமணிய ஆரம்பித்தது.

பழக்கம் இரெண்டாவது இயற்கை என்பார்கள். சனி பகல் முழுதும் ஞாபகம் வைத்திருந்து நாலைந்து முறை வெளியே வந்து தேடினாள். கால் கட்டப்பட்ட சிவப்பியின் அருகாகவே உண்ணலும், தூங்கலுமாக மற்றவைதான் இருந்தன. இரவுச் சமையலின் போது, சிறகின் படபடப்புக் கேட்டு வெளியே வந்து ஒளி பாய்ச்சினாள். பச்சையும், இருளும் அணிந்த உடையில் தூங்குவதாகப் பாசாங்கு செய்தபடி மௌனமாய்க் கண் மூடிப் பதுங்கும் சேவலைக் கத்தாவில் கண்டாள். நிம்மதியாகக் கதவை மூடினாள்.
நானாவுடனான அன்றைய கடைசி இரவுச் சாப்பாடு . எல்லோரும் உட்கார்ந்திருந்தார்கள். வாப்பாதான் எப்போதும் போல பேச்சை ஆரம்பித்தார்:
‘ மகள், தம்பி  என்ன பதிலச்  சொல்ற, நாளைக்கு? ‘ அவள் கொஞ்ச நேரம் மௌனமானாள். உம்மாதான் மேலும் மேலும் தூண்டிக் கேட்டுக் கொண்டே இருந்தார். அவள் இனியும் சமாளிக்க முடியாது போகவே, ‘ எனக்கு இப்ப கலியாணம் வேணாம். படிக்கேன் உம்மா?’
நானாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
‘ நான்  நினைச்சன். அந்தக் கோழிக் கள்ளன் இவளுக்காகத்தான் என்னையும் பார்க்க வாரான்ண்டு’
அவள் கதிரையை பின்  நகர்த்தி எழுந்தாள். கை கழுவினாள். நானாவை முறைப்புடன் பார்த்தாள். சொன்னாள்:
‘ நான் கோழியுமில்ல. அவக கள்ளருமில்ல.  வாப்பாட்டக்  கலியாணம்தானே  கட்டிக் கேட்டாக’ அவ்வளவுதான். நானா பின்னால்,

‘ நேற்றுவரை அவராயிருந்தவர், இப்ப அவகளாம்’ எனச் சொன்னதைக்  கேட்டுக்கொண்டே, தன்னறை விரைந்தாள். ஆனாலும்  இத்தனை சத்தமாய்க் கதவை அறைந்திருக்கக் கூடாது. காதைக் கூர்மையாக்கி  செவிமடுத்தாள்.  நானா, ‘ எல்லாம் வாப்பா  கொடுக்குற இடம்தான்’ எனப் புலம்பிக் கொண்டிருந்தார். உம்மா,
‘ அவள் விருப்பப் பட்டதைக் குடுப்பமே. நம்முட கண்ணுக்கெதுக்கயாச்சும் இருக்கும்.  உம்மா படுற பாட்டப் பார்த்தும், அந்தக் குடும்பத்துக்கதான் உழப்போறன்  எங்கிறவள நாமொண்டும் பண்ணேலா’.

நானா என்பதே மூத்தவன் என்பதுதானே. நானாவுக்கு வாப்பாவின் கள்ளச் சிரிப்பு , உம்மாவும், வாப்பாவும் ஏற்கெனவே பேசி வைத்துப் பேசுவதுபோல் இருக்கிறது என்றான். அவள் சந்தோசமாக அறையை விட்டும் வெளியானாள்.

00000000

 

37 Comments

  1. mansoorcader says:

    அற்புதமான செதுக்குகை. சோக்கான குறியீட்டுப் புனைவு. கதை நகர்த்துகையும் கலா நிர்மாணமும் சந்திக்கும் இடங்கள் லாவகமாக ஜொலிக்கின்றன. தலையைப் போட்டு உடைத்துக் கொள்ளத் தேவைப்படாத வெளிச்சமான அழகியல் வார்ப்பு. முந்தைய கதைகளில் காணப்பட்ட முதிர்ச்சியை மீறி பீறிட்டெழும் புதிய ஆனால் அற்புதமான படைப்பாற்றல். வீண்விரயமின்மை. எள்ளல் கூட மிக இயல்பாக ‘போட்டோவுக்குச் சிரிக்காமல்’ தெரிகின்ற நளினம். ச்சா…. நன்றாகவே அமையப் பெற்றுள்ளது. வாழ்த்துக்கள் நஸீறுதீன்

  2. நீண்ட இடைவெளிக்குப்பின் படிக்கக் கிடைத்த அருமையான சிறுகதை.காதலின் உன்னதங்களோடு
    வாசலில் தினமும் வாசிக்கும் கோழியியலையும் சிறுகதைக்குள் இயல்பாகவே உணர்ந்து ரசிக்கமுடிந்தது.
    அற்புதமான படைப்பு.
    வாழ்த்துக்கள் நஸீறுதீன்.

Post a Comment