Home » இதழ் 07 » “இத்தனை விருது கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. நன்றி -விம்பம்”!

 

“இத்தனை விருது கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. நன்றி -விம்பம்”!

 

-லாவண்யா

நிஜமான மனிதர்களை ஹீரோக்களாக வெண் திரையில் காட்டிய பெருமை நிச்சயமாய் குறும்படங்களைத்தான் சாரும். கதை, காமெடி, திகில், பரபரப்பு, பஞ்ச் டயலாக், நடிப்பு, என சினிமாவிற்கு சளைக்காத கலைதான் குறும்படம். நேரம் குறைவாக இருப்பதால் `குறும்`படமானது புகழிலும் அப்படியே இருப்பது கலைத் தாய்க்கு வந்த மாபெரும் சோதனை.

ஒருசில டி.வி நிகழ்ச்சிகள் இதில் ஆர்வம் காட்டினாலும் மிகப்பெரிய விருதுகள் குறும்படங்களுக்கு வழங்கப்படுவதில்லை என்றிருந்த என் எண்ணம் விம்பம் சர்வதேச குறும்திரைப்பட விழாவிற்குச் சென்றபிறகு முழுமையாக மாறிவிட்டது.

இங்கிலாந்து நாட்டில் வசிக்கும்  ஏழுபேரால் 2004-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அமைப்பு `விம்பம்`. புத்தகங்கள் வெளியிடுதல், கருத்தரங்கம், கண்காட்சி நடத்துதல் போன்று கலை மற்றும் இலக்கியம் தொடர்பான சேவைகளை நடத்துவதோடு ஒவ்வோரு ஆண்டும் சர்வதேச அளவில் குறும் திரைப்பட விழாவும் நடத்துகிறார்கள்.

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஏழாம் ஆண்டு குறும்திரைப்பட விழாவிற்கு உலகம் முழுவதும் தமிழர்களால் இயக்கப்பட்ட குறும்படங்கள் கலந்துகொண்டன.

சிறந்த குழந்தை நட்சத்திரம், நடிகர், நடிகை, திரைக்கதை, ஒளிப்பதிவு, எடிட்டர், இயக்குநர் என்ற வரிசையோடு இலங்கை, இந்தியா மற்றும் புலம்பெயர் தமிழர்களின் படம் என்ற வரிசையிலும் விருதுகள் வழங்கப்பட்டன.

இலங்கையில் இருந்து வந்த படங்களுள் சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டது `அடிவானம். ஏழைச் சிறுவன் சாக்லேட் சாப்பிட ஆசைப்படுவதுதான் கதை. அவன் கையில் ஒரு ரூபாய் இருக்கும். கடைக்காரர் அதற்கு சாக்லேட் இல்லையென, ஏக்கத்துடன் பார்ப்பவன், அருகிலுக்கும் பிச்சைக்காரரிடம் `எனக்கு ஒரு ரூபாய் தருவீங்களா?` என்று கேட்பான். சிறுவனின் ஏக்கம் அறிந்த அவரும் காசுதர, சந்தோஷத்துடன் கடைக்குச் செல்லும் சிறுவனிடம் `சாக்லேட் ஐந்து ரூபாய் என்பார் கடைக்காரர். அந்த நிலையில் சிறுவனின் ஏமாற்றம்தான் கதை. இந்த குறும்படத்தை பார்த்துவிட்டு அழாதவர்களுக்கு `இதயம் இல்லை` என்று அர்த்தம்.

இப்படத்தில் நடித்த சிறுவன் ஜெகன் ஹரிஷ்-க்கு குழந்தை நட்சத்திரத்திற்காக விருதும் படத்திற்கு இலங்கை மதிப்பில் ஒருலட்ச ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டது.

இந்தியாவில் இருந்து வந்த படங்களில் தேர்வு செய்யப்பட்டது `தமில்` படிப்பறிவே இல்லாத கிராமத்துச்சிறுமி தமிழ்-க்கு தன் பெயரை மட்டும் `தமில்` என எழுத தெரியும். வீட்டு வேலைக்குச் செல்லுமிடத்தில், அங்கிருக்கும் புகைப்படங்களைப் பார்த்து, தானும் போட்டோ எடுக்க ஆசைப்படுகிறாள். ஒழுங்காய் இருந்தால், போட்டோ எடுப்பதாக எஜமானி சொல்ல, மாடாய் உழைப்பவள் எப்படியெல்லாம் `போஸ்`தர வேண்டுமென கற்பனையில் மிதக்கிறாள். டவுனுக்குச் சென்று போட்டோ எடுத்த பிறகு, ஒருவேளை வேலைக்காரி திருடிக்கொண்டு போய்விட்டால் போலிஸில் புகார் தருவதற்காகவே தன்னை எஜமானி போட்டோ எடுத்தாள் என்று தெரிந்ததும் தன் கையாலேயே போட்டோவை கிழித்து எறிகிறாள் தமில். இந்திய சிறந்த படம் என்ற விருதோடு இருபத்தி ஐந்து  ஆயிரம் ரூபாய் பரிசும் இயக்குநர் வசந்த் குமாருக்கு வழங்கப்பட்டது.

புலம்பெயர் தமிழர்களின் சிறந்த படமாக, பிரான்ஸிலிருந்து `நகல்` தேர்ந்தெடுக்கப்பட்டது.  பிரசான் என்ற சிறுவனுக்கு காலை கடமைகளை முடித்து பள்ளிக்கு அழைத்துச் செல்கிறார் ஜென்னி. பள்ளியில் `மதர்ஸ் டே-காக அவன் வடிவமைத்த வாழ்த்து அட்டையை ஆர்வமாக பார்க்கிறார். பின் இருவரும் பிரெஞ்ச் பாட்டு பாடியபடியே, பார்க்கில் விளையாடுகிறார்கள். வீட்டில் சாப்பாடு தந்து, கதை சொல்லி பிரசானை தூங்கவைக்கும் ஜென்னி, சிறுவனின் தாய் வந்ததும் பொறுப்பான `சைல்ட் மைண்டராக` கிளம்பும் நேரம் வாழ்த்து அட்டை பற்றி சொல்கிறார். சிறுவனின் தாய் அதைக் கண்டுகொள்ளாமல் விட, அங்கிருந்து கிளம்பும் ஜென்னி ஏக்கத்துடன் தன் கையிலிருக்கும் புத்தகத்தை பார்க்கிறார். அதில் `அம்மாவுக்கு வாழ்த்துக்கள் என்ற அட்டையின் ஜெராக்ஸ் காப்பி அதாவது நகல் இருக்கிறது. காசுக்காக குழந்தையை கவனித்துக் கொள்பவளுக்கும் தாய்மை உண்ர்வு இருக்கிறது என்பதுதான் கதை.

சிறந்த நடிகை, திரைக்கதை, இயக்குநர், புலம்பெயர் தமிழ்ர்களின் சிறந்த படம் மற்றும் பார்வையாளர்கள் தேர்வு செய்த படம் என ஐந்து பிரிவில் விருதுகள் வாங்கிய தயாபரிக்கு இது முதல் குறும்படமாம்.

ஆச்சர்யத்துடனும், வாழ்த்துகளுடனும் தயாபரியிடம் பேசினேன்.

“நான் இலங்கையில் பிறந்தவள். போர் ஓசையில் வெடித்த இதயமாய், 1998-ம் ஆண்டு அகதியாய் பிரான்ஸ்க்கு அனுப்பப்பட்டேன். பெற்றோரையும் நாட்டையும் விட்டு பத்துவயதில் வெளிநாடு வரும் சிறு பெண் மனரீதியாய் எவ்வளவு ஏங்கியிருப்பாள் என்பதை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. நல்லவேளை என் அண்ணனும் என்னுடன் அகதியாய் வந்தார்.

சிறுவயதில் நிறைய போராட்டங்களைப் பார்த்து பழகியதால், பட்டாம்பூச்சிகளால் சிறகடிக்கும் குழந்தைகளை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். என்னைச் சுற்றியுள்ள குழந்தைகளை கவனிக்கும் போதுதான் `நகல்; கதை உருவானது. அதை குறும்படமாக எடுக்க காரணம் என் அண்ணா பொன்.கேதாரன். விஷ்வல் கம்யூனிகேஷன் படித்தபிறகு, யாழ் மீடியா என்ற கம்பெனியை உருவாக்கினார். பிரான்ஸில் பல படங்களுக்கு ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் செய்திருக்கிறார். (பொன்.கேதாரனுக்கு இந்தவருடம் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதும் கடந்த வருடம் சிறந்த எடிட்டிங்கிற்கான விருதும் கிடைத்துள்ளது).

அவருடைய ஆர்வத்தில்தான் `நகல்`ஐ உருவாக்கினேன். என் முதல் குறும்படத்திற்கு இத்தனை விருது கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. தேங்க்ஸ் டூ விம்பம்` என சந்தோஷத்தில் மிதக்கும் தயாபரி செஞ்சிலுவை சங்கத்தில் வேலை பார்த்தபடி பிரெஞ்ச் கற்பித்தலில் மாஸ்டர் டிகிரி முடித்திருக்கிறார்.

இத்திரைப்பட விழாவில் சிறப்பு நடுவராக அழைப்பட்ட இயக்குநர் பாலாஜி சக்திவேல் பரிசுபெற்றவர்களைப் பாராட்டும் போது, `இந்த விழாவிற்கு வந்த எல்லா படங்களுமே பரிசுக்குரியதுதான். சில காரணங்களில் சில படங்கள் விருது பெற்றிருக்கு. அதனால மற்றப்ப்படங்கள் தரமில்லைன்னு அர்த்தம் இல்லை. என் மனசுக்குப் பிடிச்சதுன்னா அது அடிவானம் படத்தில் நடிச்ச சிறுவன்–தான். போரால் சிதறிக்கப்பட்ட நாட்டில் எப்படி இவ்வளவு அருமையா ஒரு படம் எடுத்தாங்கன்னு ஆச்சர்யமா இருக்கு. படம் பார்த்தவுடனேயே, அதன் டைரக்டர் சுஜிதன் –க்கு போன் பண்ணி பேசினேன். இன்னிக்கு விருது வாங்கிய எல்லோருக்கும் தமிழ் சினிமால நல்ல எதிர்காலம் இருக்கு` என்று பாலாஜி சக்திவேல் பாராட்டகூட்டத்தில் ஒருவர் `அப்போ உங்க படத்தில் சான்ஸ் தாங்களேன்` என்ற கோரிக்கையை வைக்க.உடனே தமிழ் சினிமாவில் பிரபலமான தன் காதல் படத்தில் சொன்ன `மைண்ட்-ல வைச்சிருக்கிறேன்` என்ற டயலாக்கை சொன்னவர், அட நிஜமாத்தாங்க, என்னோட டயலாக்கை சொல்லவில்லை. இப்போதைக்கு மைண்ட்-ல வைச்சிக்கிட்டு, அடுத்த படத்தப்ப யூஸ் பண்ணிக்கிறேன்` என்று அரங்கையே அதிர சிரிக்க வைத்தார்.

இது சினிமா மனிதனுக்குள் ஊறிப்போனதற்கான உதாரணம்.

————————————————————————————————————————————————

௦௦௦௦

 

 

 

 

 

 

 

41 Comments

  1. லாவண்யா எழுதியுள்ள குறும்படமுட்பட இதர குறும்படங்களை நாமும் பார்க்க ஏதேனும் மார்க்கமுள்ளதா? நன்றி.

Post a Comment