Home » இதழ் 07 » யாத்திரீகன்,ஈழக்கவி – கவிதைகள்

 

யாத்திரீகன்,ஈழக்கவி – கவிதைகள்

 

பிடாரனின் உலகினை நோக்கி …

பல்லி இட்ட எச்சத்தின் மீது

நெளிகின்றன புழுக்கள் .
நினைவறுக்கப்பட்ட
காலங்களின்
கடைசி யுகத்தின்
இறுதி இரவாய்
கழிகிறது இந்த நிமிடம் .
வனப்பு மிகுந்த
ஓவியத்தின் வர்ணங்கள்
களவாடப்பட்ட
ஓர் இரவில்
லியனடாவோ டாவின்சியின்
விம்பம் சிரிக்கிறது
சலனங்கள் ஏதுமற்று …………
காலங்கடந்தும்
நினைவுகள் அறுந்தும்
தூசேறிப்போன
சித்திரங்களில்
பல்லி இட்ட எச்சத்தில்
இன்னும்
நெளிகின்றன புழுக்கள் .
கடைசி இரவின் வினாடிகள்
நகர்கின்றன …
ஒரு பிடாரன்
நடமாடும்
உலகினை நோக்கி …..

௦௦௦௦௦௦௦

– யாத்திரீகன்

================================================================================================

பாராளுமன்ற பாம்புகள்

மகடிக்காரர்கள்
பாம்பாட்டிகள் போல
மகுடிகளோடு வந்தமர்தார்கள்

பொய்களும் நயவஞ்சகங்களும்
மாறி மாறி மகுடி ஊத ஊத
பாராளுமன்ற பாம்புகள் படமெடுத்தாடின

மகடிக்காரர்களின் அரசியல் மடிக்குள்
மகுடிகள் வைக்கப்பட்டதும்
கொடிய அரவங்கள் ஆவிகளாய்
ஊருக்குள் சீறிப்பாய்ந்தன

கண்கொத்திகள் கண்களை கொத்தின 
நாகங்கள் தவளை பிடிப்பது போல
நாக்குகளை பிடித்துத் தின்றன
புடையன்கள் அடிவயிறுகளை கடித்தன
நல்லபாம்பு காதுபுற்றால் புகுந்து
மூளைக்குள் படுத்துக்கொண்டது
மலைப்பாம்புகள் அச்சமின்றி எழுகின்றவர்களை
வெள்ளை வேன்கள் போல முழுசாய் விழுங்கின

போராயுதங்கள் போன்ற மகுடிகளால்
பாம்புகள் அட்டகாசமாய் ஆட்டம்போட்டன
மக்கள் மரமண்டைகளாய்
மகடிக்காரர்களுக்கு கொண்டாட்டம்தான்

28102012 மாலை 5.45

-ஈழக்கவி

 

 

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment