Home » இதழ் 07 » (ஈழப்போரின் நான்காம் கட்டத்தில்) நடந்த நிகழ்ச்சிகள்-கருணாகரனின் தொடர்…02

 

(ஈழப்போரின் நான்காம் கட்டத்தில்) நடந்த நிகழ்ச்சிகள்-கருணாகரனின் தொடர்…02

 

ஈழப்போராட்டம் பற்றிய பதிவுகளும் விமர்சனங்களும் மறுபார்வைகளும் முன்வைக்கப்பட்டுவரும் காலம் இது. கனவுகளும் இலட்சிய வேட்கையும் கருகிப் போன நிலையில் ஒவ்வொருவரும் தாம் செயற்பட்ட தளங்களில் இருந்து தங்கள் அனுபவங்களையும் தாங்களறிந்த விசயங்களையும் தாம் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகளையும் பதிவு செய்து வருகின்றனர். கூடவே விமர்சனங்களுக்குட்படுத்தியும் வருகின்றனர். இது ஒரு வகை. இந்த வகை எழுத்துகள் மேலும் பலவாகத் தொடரவுள்ளன.

இதேவேளை ஈழப்போரின் நான்காம் கட்ட நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்கள் இன்னொரு தளத்தில் பரவலாக எழுதப்பட்டும் வெளிப்படுத்தப்பட்டும் வருகின்றன. விக்கி லீக்ஸ், சனல் – 4 காட்சிகள் தொடக்கம், ஐ.நா அறிக்கை, கோடன் வைஸின்  The Gaje(கூண்டு), பிரான்ஸிஸ் ஹரிசனின் (Frances Harrison) Still Counting the Deadபோன்ற நூல்கள், வன்னிப்போர் நாட்கள் பற்றி அந்தப் போரிலே சிக்கியிருந்த பலரும் பத்திரிகைகளில் எழுதிய தொடர் கட்டுரைகள், காத் நோபிளின் கட்டுரை, கே.பி என்ற குமரன் பத்மநாதனின் நேர்காணல்கள்,  அமைதிப்பேச்சுகளின் நாயகமாக இருந்த எரிக் சொல்கெய்ம் தெரிவித்த கருத்துகள், அண்மையில் இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது ஐ.நா. செயற்பட்ட விதம் தொடர்பாக சார்லஸ் பெட்றி தலைமையிலான குழு தயாரித்துள்ள அறிக்கை வரை ஏராளம் தரப்புப் பதிவுகளும் சாட்சியங்களும் வெளிப்படுத்தல்களும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. மேலும் ‘விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள், சாத்திரி எழுதிவரும் ‘பங்கு பிரிப்புகளும் படுகொலையும்’ போன்ற தொடர்களும்.

இவற்றை ஒட்டுமொத்தமாக அவதானிக்கும்போது பல உண்மைகள் நிரூபணமாகின்றன. ஈழப்போராட்டத்தில் என்ன நடந்தது, அவையெல்லாம் எப்படி நடந்தன என்ற உண்மைகள். இத்தகைய பல தரப்பு வெளிப்பாடுகள்தான் வரலாற்றின் சிறப்பாகவும் வடிவமாகவும் அமைகின்றன.

இறுதிப்போர்க் கால நிகழ்ச்சிகள், அவற்றின் பின்னணிகள் பற்றிச் சுருக்கமாக நானும் ஏற்கனவே காலச்சுவடு உள்ளிட்ட சில இதழ்களில் எழுதியிருக்கிறேன். நான் சம்மந்தப்பட்டவற்றையும் என்னால் அறியப்பட்டதையும் நாம் அனுபவித்ததையும் அந்தப் பதிவுகளில் வெளிப்படுத்தியிருக்கிறேன். இன்னும் அத்தகைய ஒரு வெளிப்படுத்தலையே தொடர்ந்தும் இங்கே ‘எறியப்பட்ட எல்லாக் கற்களும் பூமியை நோக்கியே வருகின்றன’ என்ற இந்தச் சிறு தொடரில் எழுதி வருகிறேன். இது வரலாற்றுக்கு என் தரப்பிலிருந்து வழங்கப்படும் ஒரு சாட்சியமளித்தலே.

இத்தகைய அனுபவங்களும் அறிதல்களும் பலருக்கும் பலவிதமாக உண்டு. அவர்களுடைய சாட்சியங்கள் இன்னொரு விதமாக அமையும். அவர்களுடைய அறிதல்கள், அனுபவங்கள், அவர்கள் சார்ந்த நிகழ்ச்சிகளின் வழியாக. ஆனால், எந்தத் தரப்பிலிருந்து வெளிப்பட்டாலும் சாட்சியங்கள் உண்மையாக இருக்க வேண்டும். அப்படி இருப்பதே சரியான வரலாகும். பொய்களின் வரலாறு மீளவும் குருதி சிந்த வைப்பதிலும் இருண்ட யுகமொன்றை அந்த வரலாற்றைக் கொண்ட சமூகங்களுடைய மடியில் கொண்டு வந்து இறக்குவதாகவுமே அமையும்.

வரலாற்று உண்மைகளை வெளிப்படுத்துவது என்பது ஒரு அவசியமான பணியாகும். அவற்றை வெளிப்படுத்துவதில் பலருக்கும் பலவிதமான சங்கடங்கள் இருக்கலாம். காலநேரப் பொருத்தப்பாடுகள் குறித்த அபிப்பிராய பேதங்கள் இருக்கலாம். ஆனால், உரிய காலத்தில் சிகிச்சை செய்யப்படாத நோய் பேராபத்தையே விளைவிக்கும் என்பது பொது அனுபவம். அதைப்போல உரிய காலத்தில் உரிய விசயங்களைச் சொல்ல வேண்டியது காலக்கடமை. அதைச் சரியாகச் செய்யவேண்டியது அவசியப் பணி.
பலரும் தமது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றமாதிரியே எழுத வேண்டும் என விரும்புகிறார்கள். இது தவறு. நம் பிள்ளைகளுக்கு பொய்களைச் சொல்லிச் சொல்லியே அவர்களை வளர்த்தால் அவர்களின் பயணத்திசையும் பயணமும் வேறாகவே அமையும். அவர்கள் சென்றடைகின்ற புள்ளியும் வேறாகவே இருக்கும். அதைப்போலவே நாம் சமூகத்துக்கும் பொய்களைச் சொல்ல முடியாது. அல்லது உண்மைகளை மறைக்க முடியாது. அப்படி உண்மைகளை மறைத்து பொய்களையும் கற்பிதங்களையும் முன்னிலைப்படுத்தும்போது அந்தச் சமூகம் தவறான வழிகளிலேயே பயணித்து, பாதகமானதொரு புள்ளியைச் சென்றடையும்.
நமது அதீத கற்பிதங்களே நமது தோல்விகளுக்கும் பின்னடைவுக்கும் காரணம் என்பது நமது அனுபவமாகவே உள்ளது. ஆகவேதான் சுயவிமர்சனங்கள் இன்று அவசியமாகப் படுகின்றன. அந்த உணர்வோடு எழுதப்படும் வரலாற்றுக் குறிப்புகள் முக்கியமானவை. அவற்றுக்கு ஒரு பெரும் பங்களிப்புள்ளது.

 

வரலாறு ஒரு போதும் தட்டையானதோ ஒற்றைப்படையானதோ அல்ல. யாருடைய விருப்பு வெறுப்புகளைச் சார்ந்தும் இருப்பதில்லை. அது உள்ளபடி, உண்மையின் அடிப்படையில் இருக்கும். புனைவதும் மறைப்பதும் வரலாற்றுக்கு இழைக்கும் துரோகமாகும். அது வரலாற்றுக்கு மட்டுமல்ல அந்த வரலாற்றைப் புனைந்திருக்கும் சமூகத்துக்கும்தான்.

ஒற்றைப்படையான வரலாறாக இருந்தால் அது அதிகாரத்தின் வரலாறாகவே இருக்க முடியும். அல்லது வரலாற்றின் அதிகாரமாகவே அது அமையும். உண்மையில் வரலாறு என்பது பன்முகமுடையது. அது வௌ;வேறு நிலையிலான பல கலவைகளின் வெளிப்பாடு. பல தரப்பினர், பல்வேறு மனிதர்கள், பல நிகழ்ச்சிகள், பல நிலைமைகள் எனப் பலவற்றின் கலவையில் இருந்து உருவாகும் ஒரு வடிவம். ஆகவே தனி நபர் ஒருவர் எழுதுவது மட்டுமே வரலாறு என்று ஆகிவிடாது. அத்தகைய குறுகலான எண்ணத்தோடு எழுதும் வரலாற்றை நவீன அறிவியல் கேள்விக்குட்படுத்தியே பல காலமாயிற்று.
தவிர, என்னுடைய இந்தப் பதிவிலும் யாரையும் குற்றம்சாட்டுவதோ அல்லது எந்தத் தரப்பையும் தவறாக விமர்சிப்பதோ, கீழிறக்குவதோ நோக்கமல்ல. மிகப் பெரும் சேதங்களைத் தரும் இயற்கை அனர்த்தமாயினும் சரி, செயற்கையான போர் போன்ற நிகழ்ச்சிகளாயினும் சரி, அவற்றின் காரண காரியங்களை ஆராய்வது சமூக இயல்பும் தவிர்க்கவே முடியாத ஒரு பொறிமுறையும்கூட. அந்த வகையில் என்னுடைய பதிவும் ஒன்று. இது போல எதிர்காலத்தில் ஏராளம் பதிவுகள் வெளிவரப்போகின்றன.

இது தவிர்க்கவே முடியாதது. இது விக்கி லீக்ஸ் யுகம்.
00

=========================================

எறியப்பட்ட எல்லாக் கற்களும்
பூமியை நோக்கியே வருகின்றன’

– கருணாகரன்

(02)

‘நிலைமை நல்லாயில்லை. இப்ப நாங்கள் சண்டையைத் தொடங்கினால், அது எங்களுக்கே பாதகமாக அமையும். சர்வதேச சமூகம் வேற மாதிரி யோசிக்குது. அது சண்டையை விரும்பேல்ல’ என்றார் அன்ரன் பாலசிங்கம்.

ஏறக்குறைய இத்தகைய விளங்குதல் வன்னியில் இருந்த ஒரு சாராரிடமும் இருந்தது. ஆனால், அவர்கள் சிறிய எண்ணைக்கையினர்.

வரலாற்று அனுபவங்களோடும் சர்வதேச அரசியற் போக்கின் அடிப்படையிலும் விளங்கிக் கொள்ள முற்படுவோர், நிலைமைகளை எளிதாக விளங்கிக் கொள்வர்.

விடுதலைப் புலிகளை ஜனநாயக மயப்படுத்தி, அவர்களை ஒரு மென் சக்தியாக்குவதே சர்வதேச சமூகத்தின் நோக்கம். குறிப்பாக மேற்குலகத்தின் விருப்பம். இதற்காக மேற்குலகும் யப்பானும் தென்னாபிரிக்காவும் புலிகளின் மைய உறுப்பினர்களை தங்கள் நாடுகளுக்கு வரவழைத்து, உபசரித்து, சிநேகத்தை வளர்க்க முயன்றன. அதாவது புலிகளுக்கு ஜனநாயக வழிமுறைகளை ஊட்டவும் அவற்றைப் புரிந்து கொள்ள வைக்கவும் முயற்சித்தன.

இதன் மறுபக்கம் போருக்கு எதிரான ஒரு மனப்பாங்கை உருவாக்குவதாகும்.

இந்த நோக்கோடு புலிகளின் தலைமைச் சக்திகள் வெளியுலகுக்கு அழைக்கப்பட்டன. ஆனால், வெளியுலகின் விருப்பத்துக்கு புலிகள் முழுமையாக இடமளிக்கவில்லை.

பதிலாக வெளியுலகத்துடன் முரண்பட்டுக் கொள்ளாமல், தமது இரண்டாம், மூன்றாம் வளையங்களைச் சேர்ந்த உறுப்பினர்களில் சிலரைப் புலிகள் வெளியுலகப் பயணங்களுக்கு அனுப்பினர். இந்தப் பயணங்களில் அவர்கள் வெளியுலகம் கற்பிக்க முயன்றதை உள்வாங்கிக் கொள்வதையும் விட, இந்தப் பயணங்களில் இயக்கம் திட்டமிட்டிருந்த காரியங்களை எப்படிச் செய்வது என்பதிலேகே கூடிய கவனம் செலுத்தினர்.

புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள், தமக்குரிய வேலைகளைச் செய்தனர். நிதித்துறையைச் சேர்ந்தவர்கள் தமது காரியத்தில் கண்ணாயிருந்தனர். அரசியற் செயற்பாட்டாளர்கள் தங்களுடைய வேர்களைப் பலப்படுத்த முயன்றனர். வெளிநாட்டுத் தொடர்பாளர்கள் கிளைகளைச் செழிப்பாக்க முயற்சித்தனர். இந்தக் குழுக்களுடன் பயணித்த புலிகளின் ஊடகத்துறையினர் தங்களின் ஊடக விரிவாக்கத்துக்குரிய ஏற்பாடுகளில் இறங்கினர்.

இப்படி ஒவ்வொரு துறையினரும் தத்தம் வேலைகளைச் செய்வதற்காக இந்தப் பயணங்களைப் பயன்படுத்திக் கொண்டனர்.

சர்வதேச சமூகத்தின் விருப்பங்களுக்கு மாறாகவே இந்தப் பயணங்களின் பெறுபேறுகள் அமைந்தன. அப்படிப் பார்த்தால் சர்வதேச சமூகத்தின் முதற்தோல்வியே இந்தப் பயணங்களில் நிகழ்ந்து விட்டது.
இதை உணர்ந்ததாலோ என்னவோதான் மேற்குலம் சில சமிக்ஞைகளைக் காட்டியிருக்கிறது.

குறிப்பாக அன்று லண்டனில் இருந்த அன்ரன் பாலசிங்கம் தம்பதியினரிடம் தன்னுடைய உணர்வோட்டத்தை அது வெளிப்படுத்தியது.

செப்ரெம்பர் 11 க்குப் பிறகான உலகத்தில் விடுதலைப் புலிகளைப் போன்ற இயக்கங்களின் போருக்கும் தீவிர நடவடிக்கைகளுக்கும் இடமளிப்பதில்லை என்ற தீர்மானத்தை எடுத்திருந்த மேற்குலகம், முரண்படாத நிலையில் புலிகளைக் கையாண்டு, அவர்களை மெதுமைப்படுத்துவதற்கே முயற்சித்தது.

இதற்காக அது பல மில்லியன் டொலர்களையும் பெருமளவு மூளை உழைப்பையும் செலவிட்டது.

இந்த நிலையில் ‘மீண்டும் தொடங்கும் மிடுக்கை’ அது எப்படி ஏற்றுக்கொள்ளும்? எப்படி அங்கீகரிக்கும்?

எனவேதான் போருக்குரிய சூழல் சர்வதேச நிலைமையில் இல்லை எனவும் போர் ஒன்றை மீளவும் புலிகள் ஆரம்பித்தால் அது புலிகளுக்கே பேராபத்தாக அமையும் என்பதையும் மேற்குலகம் அன்ரன் பாலசிங்கத்திடம் சிநேகபூர்வ அழுத்தத்தோடு சொல்லியிருந்தது.

இதையே பாலசிங்கம் வன்னியில் சொன்னார்.

‘அப்பிடியெண்டால் இயக்கத்தின்ரை நிலைப்பாடு என்ன?’ என்ற கேள்வி பாலசிங்கத்திடம் கேட்கப்பட்டது.

‘இயக்கத்துக்கும் இது தெரியும்’ என்றார் பாலசிங்கம். ஆனால், இயக்கத்தின் நிலைப்பாடு என்ன என்று அவர் சொல்லவில்லை.

‘இயக்கத்துக்கு நீங்கள் என்ன சொல்லியிருக்கிறீங்கள்?’ என்ற கேள்வி அடுத்து பாலசிங்கத்தை நோக்கி வந்தது.

‘நிலைமையை விளங்கப்படுத்தியிருக்கிறன்’ என்று முடித்துக் கொண்டார்.

பிறகு சனங்களின் நிலைமை, அவர்களுடைய பிரச்சினைகளைப் பற்றிப் பொதுவாகவே உரையாடிய பிறகு அவர் விடைபெற்றுச் சென்று விட்டார்.

ஆனால், அவருடைய உரையாடலில் மகிழ்ச்சியும் உற்சாகமும் இருக்கவில்லை.

அன்ரன் பாலசிங்கத்தின் இந்தக் கூற்றுக்கு மாறாக இன்னொரு சாராரிடம் சண்டையைத் தவிர வேறு வழியே இல்லை என்ற எண்ணம் வலுப்பட்டிருந்தது.

பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்ற ஏமாற்றத்தோடு,  வரவர படைத்தரப்பு இறுக்கமான நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தமை இந்த மாதிரிச் சண்டைக்குப் போகும் உள நிலையை அவர்களிடம் ஊக்கப்படுத்தியிருந்தது.

இதேவேளை அமைதிப் பேச்சுக் காலத்தில் இயக்கம் சண்டையில் மட்டுமல்ல அரசியலிலும் சர்வதேச அளவில் வளர்ந்திருக்கிறது என்ற எண்ணம் பலரிடம் ஏற்பட்டிருந்தது.

சர்வதேச சமூகத்தின் பிரதிநிதிகள் கிளிநொச்சிக்கு வந்து புலிகளைச் சந்திப்பதையும் புலிகளை பல  நாடுகளும் அழைப்பதையும் அவர்கள் இந்த அடிப்படையிலேயே புரிந்திருந்தனர்.

இந்தக் காலத்தில் இயக்கம் இன்னொருபடி உச்ச வளமாகியிருந்தது. இந்த வளம் என்பது வாகனங்கள், வருவாய், கட்டுமானங்கள், தேவையான பொருட்களின் சேகரிப்பு எனப் பல வகையில் அமைந்தது.

சனங்களின் வாழ்வில் மட்டுமல்ல, போராளி குடும்பங்களின் வாழ்விலும் நெருக்கடிகள் குறைந்திருந்தன.

ஆனால், இந்தக் காலத்தில் இயக்கத்துக்குத் தேவையான ஆயுதங்களைக் கொண்டு வருவதில் இயக்கம் பல நெருக்கடிகளைச் சந்தித்தது.

சமாதானக் காலத்தில் வெளியே இருந்து வந்து கப்பல்களை இலங்கை அரசு கடலில் வைத்தே தகர்த்தழித்துக் கொண்டிருந்தது.

இது பெரும் நெருக்கடியை இயக்கத்துக்குக் கொடுத்தது.

ஒரு பக்கத்தில் பெரும் சிரமங்களின் மத்தியில் வெளியே இருந்து எடுத்து வரப்பட்ட ஆயுதங்கள் கை சேர முன்னரே கடலில் அழிக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

இன்னொரு பக்கத்தில் சமாதானப் பேச்சுகளில் ஈடுபடும் புலிகள் எதற்காக ஆயுதங்களைக் கொண்டு வருகிறார்கள்? என்று எழுப்பப்படும் கேள்விகள்.

இப்படி இரண்டு பக்க நெருக்கடிகளை இயக்கம் அப்பொழுது சந்தித்துக் கொண்டிருந்தது.

என்றாலும் சண்டையைத்தான் பெரும்பாலானவர்கள் விரும்பியிருந்தனர். சண்டையின் மூலம் எதிரிக்குத் தக்க பாடம் படிப்பிக்க முடியும் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருந்தது.

இதற்குக் காரணமும் உண்டு.

முன்னரெல்லாம் எவ்வளவோ சொல்லியும் கேட்காத அரசும் படைகளும் புலிகளின் தாக்குதலின் மூலம் பின்னடைவைச் சந்தித்திருந்தன. வெற்றியடைந்த புலிகள் நினைத்ததெல்லாம் நிறைவேறியது.

சண்டைக்கு முகம்கொடுக்க முடியாத படைகள் தப்பியோடின. படைகள் பின்னடையும்போது அரசு பேச்சுவார்த்தைக்கு வந்தது.

ஆகவே ‘அடியைப் போல அண்ணன் தம்பி உதவமாட்டான்’ என்ற எண்ணத்தில் பெரும்பாலான போராளிகள் உறுதியாக இருந்தனர். எனவே சண்டையை அவர்கள் விரும்பினர். இதில் பெரும் தளபதிகளும் உள்ளடங்குவர்.

அந்த நாட்களில் கிளிநொச்சி ஒரு தலைநகரமாக மாறிக் கொண்டிருந்தது. இலங்கையில் இரண்டு அதிகார மையங்கள் உள்ளன. ஒன்று கொழும்பு. மற்றது கிளிநொச்சி என்று ஈழநாதத்தில் நிலாந்தன் கட்டுரை எழுதினார்.

இந்த இரண்டு மையங்களும் போரையோ சமாதானத்தையோ தீர்மானிக்கும் அளவுக்கு வலுவுடன் இருக்கின்றன என்று சொல்லப்பட்டது. நிலைமையும் அப்படித்தான் இருந்தது.

வெளிநாடுகளின் பிரதிநிதிகளும் முக்கியத்தர்களும் கொழும்புக்கும் கிளிநொச்சிக்குமாக வந்து போய்க் கொண்டிருந்தனர்.

எனவே பலமான நிலையில் இருக்கும்போது மேலும் சண்டையைப்பிடித்து, இருக்கின்ற பலத்தை மேலும் அதிகரித்துக் கொள்ளலாம் என்பதே பெரும்பாலான போராளிகளின் எண்ணம்.

சனங்களிலும் ஒரு சாரார் சண்டையை விரும்பினர். அவர்களுடைய பார்வையிலும் படைகளுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

ஆனால், இன்னொரு சாராருக்கு சண்டையே விருப்பமில்லை. மீண்டும் ஒரு போர் தொடங்கினால், அது மோசமான போராகவே அமையும் என்பது அவர்களுடைய எண்ணம். போரில் புலிகளோ தமிழர்களோ வெற்றியைப் பெற்றாலும் அதற்குப் பெரும் விலைகளைக் கொடுக்க வேண்டும் என்பது அவர்களுடைய பார்வை. அப்படிப் போரொன்றை எதிர்கொள்ள வேண்டி வந்தாலும் அதை புலிகளாக ஆரம்பிக்காமல், அரசாங்கமே தொடங்க வேண்டும் என்று அவர்கள் கருதினர்.

இதேவேளை இனிமேல் போரே வேண்டாம் என்று கருதுவோரும் இருந்தனர். எப்படியாவது நோர்வையை நழுவ விடாமல் பேச்சுவார்த்தைக் களத்தில் வைத்திருக்க வேணும் என்று இவர்கள் விரும்பினர்.

கொழும்பு அரசு பேச்சுவார்த்தையைக் குலைக்க முயன்றாலும் மேற்குலகமோ நோர்வேயோ இலகுவில் கைவிடாது என்று இவர்கள் நம்பினர். சற்றுப் பொறுமை காத்தால் நல்லது என்பது இவர்களுடைய எதிர்பார்ப்பு. ஆனால், இந்த எதிர்பார்ப்புக்கு மாறாகவே நிலைமைகள் அமைந்தன.

புலிகளை பேச்சுமேசையில் இருந்து தள்ளிவிடவேண்டும் என்ற குறியில் கொழும்பு தந்திரோபாயங்களைப் பிரயோகித்தது. இதற்குத் தோதாக கொழும்பில் ஹெகலிய ரம்புக்வெல தன்னுடைய வார்த்தைகளுக்குச் சூடேற்றிக் கொண்டிருந்தார்.

நோர்வே புலிகளுக்குச் சார்பாகச் செயற்பட்டுக்கொண்டிருக்கிறது என்று சொல்லி, எரிக் சொல்கெய்மின் கொடும்பாவியை எரித்தார் விமல் வீரவன்ச.

ஜே.வி.பி தெருவில் இறங்கிப் பகிரங்கமாகவே மேற்குலகத்துக்கும் எரிக் சொல்கெய்முக்கும் எதிராகப் போராட்டங்களை நடத்தியது.

படைகள் வடக்குக்கிழக்கில் தமது பிடியை இறுக்கின.

ஏட்டிக்குப் போட்டியாக புலிகளும் நடந்து கொண்டனர்.

2002 தொடக்கம் 2006 என நான்கு ஆண்டுகள் வரையில் மதிப்போடிருந்த போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு இரண்டு தரப்புக்குமிடையில் கிடந்து நெரிபடத் தொடங்கியது.

போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு போரை நிறுத்த முடியாத கண்காணிப்புக்குழுவாக மாறிக்கொண்டிருக்கிறது என்று அந்த நாட்களில் ஒரு நண்பர் பகிடியாகச் சொல்வார்.

அவர் சொன்னது பகிடியல்ல, உண்மையே.

புலிகள் மெல்ல மெல்ல பயற்சி நடவடிக்கைகளை பகிரங்கமாகவே ஆரம்பித்தனர்.

யாழ்ப்பாணத்திலிருந்தும் வவுனியாவிலிருந்தும் பொதுஅமைப்புகளை சேர்ந்த உடல் உழைப்பாளர்கள், அன்றாடம் காய்ச்சிகள் வன்னிக்கு வந்து பயிற்சிகளைப் பெற்றுச் சென்றனர்.

சர்வதேச – மேற்குலகின் விருப்பங்களுக்கு மாறாக ஒரு நிகழ்ச்சி நிரல் உருவாகிக் கொண்டிருந்தது.

இந்த நிலைமையை – மேற்கின் நாடியோட்டத்தையும் புலிகளின் இயல்பையும் புரிந்து கொண்டு கொழும்பு நிலைமைகளைக் கையாண்டது. அது மெல்ல மெல்ல அரசியல் ரீதியாக நெருக்கடிகளை ஏற்படுத்தியது. அதேவேளை படைத்துறையின் நெருக்கடிகளையும் அதிகரித்தது.

புலிகளை ஒரு பொறிக்குள் சிக்கவைப்பதில் கொழும்பு தீவிரமாகியது.

யுத்தத்தைத் தவிர, புலிகளுக்கு வேறு வழிகள் இல்லையென்ற நிலை மெல்ல மெல்ல உருவாகியது.

அவர்களை வெளிப்படையாக ஆதரிக்கவோ அரவணைத்துக் கொள்ளவோ மேற்குத் தயாராகவில்லை.

இதேவேளை அது யப்பான், தென்னாபிரிக்கா போன்ற நாடுகளைப் பயன்படுத்திப் புலிகளைப் பதப்படுத்த யோசித்தது.

இதைப்பற்றி பின்னாளில் அமெரிக்காவின் தரப்பிலிருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.

(தொடரும்)…………………………..

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment