Home » இதழ் 07 » என் படுக்கை அறைக்குள் நுழைந்திருந்தது மரம்- திருமாவளவன்

 

என் படுக்கை அறைக்குள் நுழைந்திருந்தது மரம்- திருமாவளவன்

 

—————————————————————————  03   —————————————————————————————-

து நம்பமுடியாததுதான். கவிஞனின் கற்பனை என்று கூட நீங்கள் எண்ணக்கூடும். ஜெயமோகனின் அறம் தொகுப்பின் ஒரு கதையை படித்து முடித்த போது தூக்க விலங்கு தலைமாட்டோரம் இருந்து முகத்தை வாஞ்சையோடு நக்கிக் கொண்டிருந்தது. அது எப்போது என்னை விழுங்கியது.  இப்போ நினைவில் இல்லை. திடிரென ஏதோ ஒருவித அமுக்கம். அந்த சிறிய அறைக்குள் ஒரு பெரிய யானை நுழைந்து விட்டதைப் போல அல்லது நெடுந்தூரம் விமானத்தில் பறந்து அது தாழ இறங்கும்போது உடல் உணர்வதுபோன்ற ஒருவகை அசுமாத்தம்.  எதிரே பார்த்தேன்.  என் கால்மாட்டோரம் ஒரு கிழவன் இருந்தான். அவனை முன்பு எங்கோ பார்த்தது போன்ற பிரமை இருந்தது. மேலே சேட் அல்லது ஒரு துவாய்த் துண்டு கூட போட்டிருக்கவில்லை அவிழ்ந்து தொங்கும் நீளத்தலைமுடியிலிருந்து நீர் சொட்டிக்கொண்டிருந்தது. வெளியே நல்ல உறைபனிக்குளிர். இருந்தும் அவனது உடலில் நடுக்கம் இருக்கவில்லை. ஒரு மல்யுத்த வீரனின் உருக்குலைந்த தேகம் போல தோன்றியது.

“இந்த குளிரில் ஒரு எப்படி’ ஜக்கட்’ கூட இல்லாமல் வந்திருக்கிறீர்கள்?”

பதில் இல்லை;  கிழவனின் உடலில் சிறு அசைவு கூட இல்லை. கண்கள் மட்டும் விடிவெள்ளிபோல சுடர்ந்தவண்ணம் இருந்தது. அந்தப் பார்வை என்மீது நிலை குத்தி நின்றது. அதில் ஒளிர்வது பரிவா  பரிகாசமா கோபமா அல்லது சாபமா? எதுவும் எனக்குப் புரியவில்லை.  உள்ளத்தை கூசவைக்கும் அந்தப் பார்வையை எதிர் கொள்ளத் திரானியற்று தலையை குனிந்து கொண்டேன். மௌனமும் இறுக்கமும் நிறைந்த அந்தச் சூழல் எனக்குள் ஒருவித அச்சத்தைத் தந்தது. உண்மையில் கொஞ்சம் பயந்து போனேன். இப்போ  மௌனத்தை கலைக்க ஏதாவது பேசியாக வேண்டும் போலத் தோன்றியது.

“இதென்ன கோலம் அப்பெல்லாம் எவ்வளவு திடமாகவும் உறுதியாகவும் இருந்தியள். என்ன நடந்தது?  இடையில் ஏதாவது வருத்தம் கிருத்தம் வந்து இருந்தீர்களா?”

மீண்டும் நானே விசாரிக்கிறேன். அதற்கும் மூச்சுவிடவில்லை. மௌனம் சில சமயம் அழகு.  மனத்தின் பரிபாசை என்றுகூடச் சொல்லலாம். அதற்காக எப்போதும் அப்படியே இருக்கும் என்றல்ல. பல சமயங்களில் எரிச்சலுட்டும். சினம் கொப்பளிக்கும். இவர் என்ன பேச்சிழந்து போனாரோ? கொஞ்சம் வாயைத் திறந்தால் என்ன குறைஞ்சா போய்விடும்.   ஆனால் பார்வையைப் பார்!.   நெருப்பு. மனசைச்  சுடுகிறதே.

“என்ன ஒன்டும் கதைக்கிறியள் இல்லை”

குரலை உயர்த்தி கொஞ்சம் உறைப்யாய்க் கேட்டன். கிழவன் திரென சற்று அசைந்து இருந்தான். அப்பதான் பார்த்தேன். அவனது ஒரு கை இல்லை. கை  இழந்த உடலின் சுவடு பெரும் சூறைக்கு காவு கொடுத்த பெருமரத்தின் பொந்துபோலத் தெரிந்தது.

என்னை அறியாமலே  “ஓ! நீங்களா?” என்றேன். அவ்வளவுந்தான் தெரியும்.  திரென இருட்டு. என் முன்னே எதுவும் இல்லை.

“இப்போதாவது தெரிஞ்சுதா?  நீ இனி என்னைப்பார்க்க வரமாட்டாய். அது எனக்கு வடிவாய்த் தெரியும்.  உன்னைப் பார்க்க வேண்டும் போல வாஞ்சையாய் இருந்திச்சு. வந்தேன்.”

திடுக்கிட்டு முழிச்சுப் பாத்தன். கனவு. துணையின் பக்கம் திரும்பினேன். அவள் நல்ல உறக்கத்தில் இருந்தாள்.  இது யாருடைய குரல். ஒரு கணம் என் அப்பாவின் குரல் போலவும் இருந்தது. பிறகு இல்லை என்றும் தோன்றயது.  ஒருவித அச்சம் படர்ந்தது. தேகம் நடுங்கியது. உடல் வியர்க்கத் தொடங்கிவிட்டது. வெளியே சன்னலினூடு என் பார்வை விழுந்தது. முழுநிலவு. நல்ல பால்போலக் காயுது.  கடும் காற்று.  வில்லோ மரத்திலிருந்து தொங்கும் நீண்ட தூவல்கள் வெறிகொண்டவளின் மயிர்கற்றை போன்று காற்றில்; காற்றின் திசையில் அங்கும் இங்குமாய் அலையுது. மௌனகுரு அண்மையில் சந்திரலேகாவின் ஒரு நடனத் தோற்றத்தின் படத்தை முகப்புத்தகத்தில்  பதிவேற்றியிருந்தார். சந்திரலேகாவின் அலைபோன்ற நீண்ட வெண்கேசம் நினைவுக்கு வந்தது.

 

டந்த வருடம் என் மகளின் திருமணம் நிகழ்ந்தது.  அது புரோகிதர் இல்லா  மணவிழா. அதற்கான நிகழ்ச்சி நிரலை தயாரித்துக் கொண்டிருந்தேன். விழாவை எப்படி ஆரம்பிப்பது.  முன்பெல்லாம் ஊரில் ஒரு விழா என்றால் தேவாரத்தோடு ஆரம்பிப்பார்கள். பின் ‘வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி’ என்ற தமிழ் வாழ்த்துப் பாடலாக அது மாறியது.  அண்மையிலே திராவிட கீதம் என்ற தலைப்பில் “நீராரும் கடலுடுத்த” என்ற பாடல் ஒரு வெளியீட்டுவிழாவின் தொடக்கமாக ஒலித்தது. “திராவிட நற்திருநாடு”என்று ஒருவரி வருகிறது. அதனாற்போலும் அது திராவிட கீதமாகிவிட்டது.

பெருமழையின் பின் பாய்கிற வெள்ளம் பள்ளத்தின் திசையில் ஓடிக்கொண்டிருக்கும். அதைத் தடுத்திது நிறுத்தி மேட்டுக்கேற்றுதல் என்பது கல்லிலே கயிறு திரித்தலுக்கு ஒப்பானது. வேன்டுமாயின் வேறொரு பள்ளத்தில் திருப்பிவிடலாம். ஈழப்போரும் அப்படித்தான்.  ஈழத்தமிழரின் எல்லாப் பாண்பாட்டு விழுமியங்களையும் வேறெரு பள்ளத்தில் திருப்பிவிட்டது..  இப்போ விழாக்கள் அனைத்தும் ஒருநிமிட மௌனஅஞ்சலியுடன் தொடங்குவதே புதுவழக்கு. யாருக்கு அஞ்சலி என்பது நடத்துவோரைப் பொறுத்தது. அது விழாவுக்கு விழா வேறுபடும். ஒரு திருமணவிழாவின் ஆரம்பத்தை அஞ்சலியோடு தொடங்க மனம் ஒப்பவில்லை. என்னதான் நவீனம், பின் நவீனம், அதி பின்நவினம் என புதிசுபுதிசாய் எது வந்தாலும்முன்னே செல்கிற தலைமுறைக்கு  நான் கொஞ்சம் பழைய மனிசன் தான். அது ஏதோவொன்றுக்கு பழகிப்போன மனசு. சிலசமையம் சொல்வழிகேட்பதில்லை. ஓரு காப்பு கவிதை இருந்தல் அழகாக இருக்கும் என்று தோன்றியது. பழந்தமிழ் இலக்கியங்களில் காப்புப் கூறி தொடங்குதல் மரபு. அப்படியே முடிவு செய்தேன்.  இப்போ அதிலும் சிக்கல் வந்துவிட்டது. எந்தக் கடவுளை வேண்டி “காப்பு” கேட்பது. மனிதர்கள்தான்  கடவுளை உருவாக்கினார்கள் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.  சிறுவயதில் விழுந்த பொறி வயது ஏறஏற  பெரு நெருப்பாயிற்று.

இருந்தும் இப்போதும் மனம் அவாவும்போது கோவிலுக்கு போவேன்.  தனிவழியில் வரும் போது  மனப்பயம் தீர உயரக் குரலெடுத்து பாடுவதில்லையா! அது போலவேதான் துன்பம் வரும்போது மனசு அவாவுகிறது.  எப்போதாகிலும் அரிதாய் போகிறேன்.  அவ்வளவே.  என் முழு நம்பிக்கையும் அறத்தின் மீதே.  சரி.  இப்போ எந்தக்கடவுளை வேண்டுவது? எதை எழுதுவது? இக்கணத்தில் மனசில் தோன்றுவதெதுவோ அதுவே  வரட்டும் .  எழுதத்தொடங்கினேன்.

என் ஊர் மூலம்

முதிர் மாமருது

வானுற ஓங்கி விரிசடை பரப்பி

முறுகித் திரண்டு

வேருக்குள் உறுதிகொண்ட முதல்வன்

முன்னோர் தொடங்கி

என் ஊர் இருக்கும் வரையிலும்

மரமெனக் கருதார்

தெய்வம் என்றே கையெடுத்து தொழுத மருதன்.

மாமுனிவன்.

உன் வேர்முகம் மனதிருத்தி

இச்சிறு இணைகளின் மணவினைக்கருமம் தொடங்கினேன்

தேவரீர்!

நீயே இதற்கு காப்பு.

என் கவிதைகளில் பொதுவாகவே ‘மரம்’  பல்வேறு படிமங்களாக ஆக்கிரமித்து நிற்கும்.   இங்கும் அந்தமரமே என் முன் காப்புக்கவிதையாக எழுந்து  நின்றது.

என் ஊர் நடு  நின்றது  அந்தப் பெருமரம்.  ஊருக்கு ஊர்  தேசத்துக்கு தேசம் ஓரு அடையாளம் உண்டு. தொரன்றோ என்றால் சீ. என். கோபுரம். பாரீஸ் என்றால் ஈபிள் கோபுரம். கொழும்பு என்றால் கோட்டைப் புகையிரத நிலையம். யாழ்ப்பாணம் என்றால் பனைமரம்.  இந்த வைகையில் என் ஊர் என்றதும் நினைவுக்கு வருவது இந்தப் பெருவிருட்சந்தான்.

ஒரு தரு எத்தனை ஆண்டுகள் வாழும். அதற்கு வயது உன்டா இல்லையா என சில சமயம் யோசிப்பதுண்டு. பள்ளியில் தாவரவியலில் படித்த ஆண்டு வளைக் கணக்கெல்லாம்சாதாரண மனித மூளைக்கு  சரிப்பட்டு வராது.  அதற்காக மரத்தை அறுத்து வீழ்த்தி அந்த மரத்தை கொன்ற பின் கணக்கிட்டு என்ன பயன்? மன்னாரில் ஒருமரம் உண்டு. ஐநூறுஆண்டு பழமை வாய்ந்தது எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். அது ஐரோப்பியர் வருகையின் போது கொண்டுவந்து நாட்டியதால் இந்த ஐநூறு ஆண்டுக் கணக்கு. வெள்ளரசுக்கிளை மகிந்தன் சங்கமித்திரையால் கொண்டுவரப் பட்டதென மகாவம்சம் கூறுகிறது. அது உண்மையெனில் அதன் வயது இப்போது இரண்டாயிரத்து இருநூறு வருடங்கள். இங்கு காப்புப் பாடலில்  நான் குறிப்பிட்ட மருதப் பெரு மரம் ஐநூறு வருடங்களுக்கு அப்பால் சில நூற்றாண்டுகளாவது முதுமைகண்டதென்பது என் ஐயுறவற்ற முடிபு. அசைக்க முடியாத நம்பிக்கை. ஐந்தாறுபேர்  சேர்ந்து கட்டிப்பிடித்தாலும் கைகொள்ளாதது. அதனுடன் சூழ மேலும் சில மரங்கள். ஒரு கூட்டுக்குடும்பம் போலத் தோன்றும் . இந்த மூல மரத்தில் மட்டும் ஆல் புளி வேம்பு மற்றும் காத்தோட்டி என வேறும் சில மரங்கள். மரத்தின் பெரும் பொந்துகளில் பறவைகள் கொணர்ந்திட்ட எச்சம் முளைவிட்டு வேர்விட்டு இப்போ துணை விருட்சங்களாகி விட்டன. அதிலும் குறிப்பாக  ஆல் விழுதிறங்கி நிலத்தில் வேர்கொண்டு விட்டது. பலஇனக்கிளை கொண்ட ஒரு ஒட்டு மாங்கன்று போல இந்த மரமே பல்வேறு இனமரங்களைக் கொண்ட தனிக் காடு.

இரவில் பார்த்தால் ஊரின் நடுவே மலைக்குன்றென இம்மரக்கூட்டம்  காட்சி தரும்.  பகலில் யானைக்கிளை நடுவே  ஒரு பெரு யானை தலைமைகொள்வது போலத் தோன்றும். அதன் காலடியோரம் சிறு குளம்.  குளத்தில் இவை வேர்களால் நீர் அருந்துகின்றனவா அல்லது கிளைகளால் அருந்துகின்றனவா என்ற ஐயம் எழும். அந்த அளவுக்கு இரண்டும் அன்னியோன்னியமானவை. இரண்டுக்குமிடையே பெருத்த உறவுண்டு. குளம் நிரவியிருக்கின்ற காலத்தில் மருதன் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. புதுத்தளிர் எறிந்து சிரிப்பதும் பூக்களை உதிர்த்து மகிழ்வதுமாக இருக்கும்.  கோடைவர குளத்தின் சோகம் மருதனுக்கும் தொற்றிவிடும். ஆடித்தூக்கம்போல் எந்த அசைவும் இருக்காது. மயில் இறகு கொட்டுவது பழுத்த இலைகள் மெல்ல கீழ்இறங்கும்.

 

இந்த இரண்டுமே என் ஊர் தொடங்க காரணமாக அமைந்திருக்கலாம்.  அதிலிருந்துதான் நாலாபுறமும் ஊர் விரிந்திருந்தது. முதுமையை, பிரமாண்டத்தை, அமானுசத்தை, அதிசயத்தை  வணங்குவதென்பது எங்கள் வழிவழி வந்ததொன்று. இங்கே யார் தொடக்கியதெனத் தெரியாது. ஒரு மந்தை மேய்க்கின்ற இடையன் தொடங்கியதாகச் சிலர் சொல்கிறார்கள். ஆனால் ஊரவர் படிப்படியாக இந்த மரத்தை வணங்கத் தொடங்கிவிட்டனர். பின்னாளில் மரத்திலே கடவுளை பிரதிஸ்டை செய்தனர். பிறகென்ன ஐயர் வந்தார். பூசை முதலியன தொடங்கியது. மரத்துக்கு சொல்வதற்குத்தான் பிராமணர்களிடம்  எந்த மந்திரங்கள் இல்லையே. எனவே மந்திரங்கள் சொல்லக்கூடிய கடவுளைத் தெரிவு செய்யவேண்டும். இப்போ எந்தக் கடவுளை உருவகிப்பது. அவர் கனவிவில் வந்தார்;  இவருக்கு அசரீதி சொன்னார் என்ற வகையில் உப கதைகள் பரவின. மலைகுன்று என்றால் சந்தேகமே இல்லை முருகனைப் பிரதிஸ்டை செய்துவிடலாம். இது மரம். கூடவே குளமும். பிளளையார்தான் பொருத்தம்..  ஆல் அரசு வேம்பு பாலை ஆறு, குளம் என எந்த இடமாயிருந்தால் என்ன! ஒரு மொக்கும் முழியுமாயுள்ள கல்லை அடியில் வைத்துவிட்டால் போதும்.  பிள்ளையார் எனச் சொல்வது மிகச்சுலபம்.   அவரும்  பொறுமையின் சிகரம்.  கோபித்துக் கொள்ளமாட்டார்.   ஆறு அல்லது குளத்தங்கரைகளில் மரங்ளின் கீழ்  பிள்ளையார் தானே குந்தியிருக்கிறார்

இங்கே கல்லெடுக்கும் வேலையைக் கூட மரம் இவகளுக்கு வைக்கவில்லை. தன் அடிப்புறம் முழுவதும் பல வடிவங்களில் முறுகித் திரண்டு ஒரு நவீன ஓவியனின் கைவண்ணம் போல வெளிப்படுத்திக் கிடந்தது.  நீங்கள் எந்தெந்த  உருக்களை மனதிருத்திப் பார்க்கிறீர்களோ அந்தத்த வடிவம் அதில் தெரியும். யாரோ ஒரு ஞனக்கிறுக்கன் கிழக்குப்புறமாய் நிலத்தோடிருந்த குமிழ் போன்ற பகுதியை தெரிவுசெய்து பிள்ளையாரின் முடியெனச்சொல்லி பூ வைக்கத் தொடங்கிவிட்டான். பின் அதற்கு மேல் ஒரு காவோலையை நிழலாய் வைத்தான். தொடர்ந்து வளர்ந்து ஒரு கிடுகுக் குடிசையானது. பின் மடாலயம். பிறகு சிறு கோவில்.  ஊர் கலைந்தோடிய காலத்தில் ஓரளவு  பெரிய கோவிலாகிவிட்டது.

முதுகிலே தன் ஓட்டைச் சுமந்தபடி மரமேறும் பெரு நத்தையைப் பார்த்திருப்பீர்கள். அப்படித்தான் வேரும் கிளையுமாய் நடுவில் தன் வீட்டைச் சுமந்தபடி மனக்கண்முன் தோற்றந்தருகிறது மரம்.

பிறகென்ன கொண்டாடத்திற்கு சொல்லவா வேண்டும். பாலும் இளநீரும் பருகி வளர்ந்தது மரம். நான் நாஸ்தீகன் கிடையாது. அதற்காக முழுமையான ஆஸ்தீகனும் அல்ல. என்னிடம் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்விகளுக்குப் பதில் இல்லை. அந்த ஆராட்ச்சிக்குள் போவதும் இல்லை. இருந்தும் எனக்கும் இந்த மரம் கடவுள் போல. உன் மிகச்சிறந்த நண்பன் யாரெனக் கேட்டால் மருதன் என்று இந்த மரத்தின் பெயரைத் தயக்கமின்றிச்  சொல்வேன். எனக்கு மிக நல்ல ஆசான். உரிமையுள்ள உறவினன். ஏதாவது மனசுக்கு துன்பம் வரும் வேளையில் முதல் நினைவுக்கு வருவது இந்த மருதன் தான். இப்போதும் கூட ஊருக்குப் போக அனுமதி கிடைத்தால் நான் பார்க்கப் பேச மனம் அவாவுகிற இடம் இந்த மரத்தடிதான்.

மரத்துக்கு ஞானமுன்டா? மனிதமொழி தெரியுமா? மனிதனுக்கு பகுத்தறிவுண்டல்லவா? இப்படி முட்டாள்த்தனமாய் மரத்தைப் போற்றலாமா?   என யாருக்காவது  ஐயுறவெழக்கூடும். புத்தன் எங்கே ஞானத்தைப் பெற்றான். வெள்ளரசின் கீழ் இருந்தல்லவா! மணிவாசகனுக்கு குருந்தை மரமல்லவா அதை அருளியது. மரத்துக்கு மொழி தெரியாமலா ஊரவர் எல்லோரும் மரத்துக்குத் தன் துயரங்களைச் சொல்கிறார்கள். மரத்தை சுற்றிச்சுற்றி மனதால் வேண்டுபவர்களை பார்த்திருக்கிறேன். மரத்தோடு வாய்விட்டு பேசுபவர்களை பார்த்திருக்கிறேன். மரத்துக்குத் தம் துயரங்களைச் சொல்லி கண்ணீர்விட்டு அழுபவர்களையும் பார்த்திருக்கிறேன்.

என் சித்தம் அரைவேக்காட்டுப் பருவத்திலிருந்தபோது அப்பாவிடம் கேட்டேன். மரத்துக்கு சக்தியுண்டா? எல்லோரும் கடவுள் என்கிறார்களே! நீங்கள் நம்புகிறீர்களா என்றேன். அவர் சொன்ன பதில் மிகச்சுவாரசியமாக இருந்தது.  இமையமலை அடிவாரத்தில் பலர் நிஷ்டையிலிருந்து உயிருடன் சமாதியடைந்திருப்பதாக படித்திருக்கிறாராம். அதேபோல இங்கும் யாராவது சமாதியடைந்திருக்கலாம் என்றார். எனது கிறுக்குப் புத்திக்கு அது விகடமாக இருந்தது.  எனது சந்தேகத்தைப்  புரிந்து கொண்ட  அவர் “உனக்குத் தெரியுமா நல்லூர் ஆலயம் ஒரு முஸ்லிம் தர்க்கா. அதற்குள் ஒரு முஸ்லீம் சாதுவின்  சமாதியிருக்கிறது. அங்கே வாழ்ந்த முஸ்லீகளை பொம்மைவெளிக்கு துரத்திவிட்டுதான் நல்லூர் கோவிலை எழுப்பினார்கள். இன்றும் அங்கே அந்த மகானின் சக்தி இருக்கிறது. அந்த சக்தியைதான் வணங்குகிறார்கள் என்றார். வேண்டுமானால் பின்புறம் போய் பார் என்றார்.  அது உண்மையென்று உணர்ந்த பின் மரத்தின் மீது எனக்கு ஒருவித மதிப்பேற்படத் தொடங்கியது.

வித்துவசிரோன்மணி கனேசையர் இந்த மரத்தோரம் ஆச்சிரமம் அமைத்து  நெடுங்காலம் ஒரு தவமுனிபோலவே வாழ்ந்தார். அவர் காலத்தில் அவரிடம் பாடங்கேட்காத தமிழ்ப் புலமையாளர்கள் இல்லை. அவர்கள் எல்லோரையும் மரம் அறியும். அவருக்கும் மரத்தின் மொழி தெரியும். மரத்தோடு  பேசுவார். மரத்திடம் வேண்டுதல் வைத்து ஊனின்றி பழிகிடப்பார். ஒரு சமயம் பெரும்புயல். மரத்துக்கு  ஈடுகொடுக்க முடியவில்லை. கிளையை காவு கொடுக்க தயாராகிவிட்டது. அது மரத்தின் வலக்கை போன்ற பெரிய கிளை. வீழ்ந்தால் மரத்துக்கு மனிதர் இணக்கிய வீட்டின் மூலமே சிதைந்து விடும்.  அது கணேசையரின் பெரும் உழைப்பில் கட்டிய குடில். ஊன் உறக்கமின்றி மரத்தின் கீழ் பழிகிடந்தாராம். முடிவில் விலகி வீழ்ந்ததாம் கொம்பர். மரத்துக்கும் அவருக்குமான உறவு மிக நெருக்கமானது. சிலசமையம் அவரைப் பார்க்கும் போது மரமே மனிதனாய் உருவெடுத்து உலாவுகிறதோ என எண்ணத் தோன்றும் என என்தாயார் சொல்லுவார்..

கொம்பரை இழந்த தடம் பெரிய ஒரு மனிதன் நடந்து செல்லக்கூடிய பெரும் பொந்து போலத் தோன்றும். கல்கியின் சிவகாமியின் சபதம் நாவலில்  புலிகேசி என்றொரு புத்த பிச்சுவின் பாத்திரம்வரும். அதற்கு மணியனின் ஓவியம் மிக அழகாக இருக்கும். மொட்டைத் தலையும் முறுகித் திரண்ட உறுதியான தேகமும் தீர்க்கமான விழிகளும் என மனதை விட்டகலாத ஓவியம்.  கடைசியில் படையெடுத்துச் சென்ற பல்லவன்அவரது ஒற்றைக் கையை வெட்டி விடுவான். எனக்கு மரத்தை பார்க்கும்போது எனக்கு அந்த ஓவியம் நினைவுக்கு வரும். புலிகேசி தீமை விளைவிக்கும் பாத்திரந்தான். இருந்தாலும் இம்மரத்தைப் பார்த்ததும் அந்த உறுதியான உடலும் கிளையிழந்த தடமும் எப்போதும் அந்த ஓவியத்தை நினைவூட்டும்

இந்த மரத்திடம் ஆயிரமாயிரம் கதைகள் உண்டு. தன் ஊரில் குடியேறிய முதல் குடியை இந்த மரம்  அறியும். அவர்களின் வாழ்வறியும். ஒவ்வொருவரின் கதையும் அதற்குத் தெரியும். தனக்கு பாலூற்றியவர்களை அறியும்.  அடுத்தவர்க்குப் பழி செய்தவர்களை அறியும்.  பழிசெய்த பாவம் கழிய பாலூற்றியவர்களையும் அறியும். யார் யாரை மிதித்து மேலே எழுந்தார்கள் என்பதை அறியும். யாருடைய நிலத்தை எவர்  அபகரித்தார்கள் எனபதை அறியும். யார் கள்ள உறுதி எழுதி காணி பிடித்தார்கள், யார் எல்லைதாண்டி வேலியடைத்தார்கள், யார் பொய்ச் சத்தியம் செய்தார்கள், யார் மொட்டைக் கடிதம் எழுதி அடுத்தவர் குடும்பத்தை கெடுக்க நினைத்தார்கள், யார் யாருக்கு பெட்டிசம் போட்டார்கள், யார் யாருக்கு செய்வினை வைத்தார்கள், யார் யாருக்குப் பிறந்தார்கள், யார் அருகில் நின்ற துணைமரங்களுக்கு உமி கொட்டி தீயிட்டார்கள்  என்ற விபரம் எல்லாம் அதற்குத்தான் வெளிச்சம்.

சிறு வயதிலிருந்தே மருதன் எனக்கு நண்பன். நான் நினைவுக்கெட்டிய காலத்தில் இருள் பிரியுமுன்பு சின்னத்தங்கச்சிப்பாட்டி பூக்கூடையோடு வருவாள். நரை மின்னலடிக்கும் கூந்தலிலிருந்து  நீர் சொட்டும்.    எங்கள் முற்றத்தில் செவ்வரத்தையில்அப்போதுதான் அவிழத் தொடங்கி பூக்கள் அரைமொட்டுப்பருவத்தில் இருக்கும்.  ஒவ்வொரு கிளையாக தாழ்த்திப்  பறிக்கத் தொடங்குவாள்.

“சிவம் எழும்படா.  உங்கை பார் சின்னத்தங்க ஆச்சி பூவாய்கிறா. நீ என்னும் படுக்கையிலை சுருண்டு கிடக்கிறாய். எழும்பு.  எழும்பி பல்லை மினுக்கிப்போட்டு வா! தேத்தண்ணி ஊத்திறன்.”

அம்மாவின் ஆய்க்கினை தாங்க முடியாமல் பழஞ்சேலைப் போவையை விலக்கி முற்றத்தைப் பார்த்தால்  பனிப்புகாருக்குள்ளாலை பாட்டி பூவாஞ்சு கொண்டிருப்பது தெரியும். பாயைச்சுற்றி வைத்துவிட்டு விறகுக் கரியை பல்லில் நொருக்கி பெருவிரலால் விளக்கியபடி முற்றம் வந்தால் ’வருகிறாயா என்னோடு கோயிலுக்கு’ என்பாள். காலையில் போய் மரத்துக்கு பூச்சூட்டி வந்தபின்தான் ஒருமிடறு தேநீர் அவள் வயிற்றில் இறங்கும்.

எனக்கு வெடிவால் முளைத்த பருவத்தில் மார்கழி வந்தால் கொண்டாட்டம்தான். மரத்தை பறவைகள் துயில் எழுப்பா மாதமது. ஈரப்பனிக்காற்றில் தூரத்தே சந்நிதிகோவில் மணிஒலிகேட்டால் போதும் அம்மா உசுப்பி எழுப்பிவிடுவாள்.  வரதன், வணங்காமுடி, லிங்கன் என ஒவ்வொருவராய் சேர்ந்து  ஒன்றாய் கூடிவிடுவோம். விநாயமூத்தி அண்ணைதான் எங்கள் வழிகாட்டி. மரத்தை சுற்றி பள்ளியெழுச்சி பாட மரம்  சோம்பல் முறித்து விழிக்கும். கிழக்கு வெளுக்கும்.

இந்த நாட்களில் திருவாதவூரர் புராணபடனம் நடக்கும். வினாயகமூர்த்தி அண்ணன் செய்யுள் படித்து சந்திபிரித்து அடியெடுத்துக் கொடுக்க  பண்டிதர் சங்கரப்பிள்ளை அதை விரித்துப் பரப்பிப் பொருள்சொல்லுவார். அவர் ஆசிரியராக இருந்தவர். நாங்கள் எப்போதும் அவரை உச்சிவிட்டு குளக்கட்டில் போயிருந்து வேடிக்கை பார்ப்போம். என்னைப்பிடித்து கட்டிவிட்டால் மற்றவர்கள் தானக வந்து இருந்துவிடுவார்கள் என்பது  அவரது உத்தி. எனக்கு புராணபடனப் புத்தகம் வாங்கித் தந்து தினமும் ஐந்து செய்யுள்களை படித்து சந்திபிரித்து பொருள்சொல்ல எடுத்துதரவேண்டும் என்பது கட்டளையிட்டார்.  அங்கேதான் என் இலக்கிய உலகம் முகைஅவிளத் தொடங்கியது.

சின்னப்பொடியனாய் திரிகையில்திரிகையில் தென்னங்கோம்பைப் பாதியில் சுள்ளிகளை நிறைத்து தீமூட்டி குளத்தில் புகைக்கப்பல் மிதக்கவிடுவோம். தை பிறந்தால் மழைமுடிந்து சூரியன் மின்னத் தொடங்கும். குளம் நிரவியிருக்கும். அதிகமும் மதிய நேரங்களில் மரத்தடி சனசஞ்சாரமற்று அமைதியாய் இருக்கும். திருவிழாவுக்கு கட்டிய வாழைக் குற்றிகளை இணைத்து படகோட்டுவோம். படகு கவுண்டு நீரில்வீழ்ந்து நனைந்த கழிசானை பிழிந்து காயவைத்துவிட்டு அம்மணமாய்  அலறிச் செடியின் பின்னால் மறைந்திருப்போம். எப்படித்தான் காயவைத்து போட்டுக்கொண்டு போனாலும்  அம்மாவுக்கு எப்படியோ மணத்துவிடும். பிறகென்ன சொல்லவாவேண்டும். பூவரசந்தடிப் பூசைதான். மறுநாள் மீளப்போனால் எப்படி நல்ல அடிகிடைத்ததா என்பது போல மெல்லிய வாடைக்காற்றில் அசைந்து துளிர் இதழ்களால் நக்கல் சிரிப்புதிர்க்கும்

மீசைமுழைத்து வாலிபங் கண்டபின் சோலிகள் கூடிவிட்டது. பாலினக்கவற்சிகள் தொடங்கிவிட்டது.  மனசு சொல்வழி கேட்காது. அந்தப் பருவத்தில்தான்  என் அப்பாவை கான்சர் மிருகம் தின்று தீர்த்துவிட்டிருந்தது.  வீட்டிலே வறுமை. எப்போதும் வயிற்றிலே பசி. மனசிலும் கூட. என் பெரும் பொழுது மருதனோடுதான் தான் கழிந்தது. மருதுக்கு பூசைசெய்யும் ஐயர் எனக்கு நண்பர்.

‘கொஞ்சம்நில்! போகும்போது என்னை சந்தித்துவிட்டு போ!’

எனக்கந்த குறிப்புணர்த்தல் தெரியும்.  ஆட்கள் எல்லாம் போனபின்பு எனக்கு ஐந்தாறு மோதகம் கிடைக்கும். வெள்ளி அல்லது விசேடநாட்கள் என்றால் அவருடைய பங்கிலிருந்து மூன்றுநான்கு தேங்காய்ப்பாதி தருவார்.

 

 

நினைவுகள் எவ்வளவு அற்புதமானவை. அப்படி ஒன்றில்லை என்றால் இவற்றினூடு நான் இன்று வாழமுடியுமா? நினைவுகள் அல்லவா என் வாழ்வை அர்த்தப்படுத்துகின்றன. மனசின் இச்சைக்குள் வீழ்ந்த பெண்ணின் பெயரின் முதலெழுத்தை என் பெயரின் முதலெழுத்துடன் சேர்த்து மருதின் கீழ் குளத்துபடிக்கட்டில் ஆழப் பொறித்து வைத்திருந்தேன். அது இன்றும் அழியாமல் இருக்குமா இல்லையா அல்லது அவள் இருக்கிறாளா இல்லையா என்பதெல்லாம் தெரியாது. ஆனாலும் நினைவிருக்கிறது இன்றும் ஈரமாய். அலைஎழும்ப கடலிலே வீசி எறிந்த கல் போல. பளபளத்தபடி அடிமனசின் ஆழத்தில் .

இந்தக்காலத்தில்தான் எனக்கு காண்டேகர் அறிமுகமானார். ‘கிரௌஞ்சவதம்’ கிடைத்தது. பலமுறை மீளமீளப் படித்தேன்.  ‘கருகிய மொட்டு’ கிடைத்தது முதல்தடவை பெரிதும் உள்ளேசெல்ல முடியவில்லை. பிறிதொரு பொழுதில் முழுவதும் படித்து முடித்தேன். அது ஐந்து சோடி கணவன் மனைவியரின் தாம்பத்தியம் தொடர்பான நாவல். எனக்கு  நாவலை விடவும் அதை என்னிடம் படிக்கத் தந்த பெண்மணியே நினைவில் நின்றார்.  சு. நல்லபெருமாளின் ’கல்லுக்குள் ஈரம்’ கிடைத்தது. மு. வரதராசனின் பலநாவல்கள் படித்தேன். எனக்கு இலக்கியத்தின் மீது ஆவல் பிறந்தது.

அந்த நாட்களில்தான் கப்பல் மாமா தெருவோரம் அழகான வீடுகட்டி  ஊருக்கு குடிவந்திருந்தார். அவரின் பிள்ளைகளில் மூத்தவள் மிக அழகி. பெண்களை  தங்கவிக்கிரகம் என உவமிப்பார்களே! அது முற்றிலும் அவளுக்குத்தான் பொருத்தம். கொழும்பில் வாழ்ந்தவள். செல்வச் செழிப்பு வேறு. ஒரு சினிமாநடிகை போலவே தோற்றந்தருவாள். அவளைப்பின் தொடர்ந்த என் வயதொத்தவர்கள் பலர். முடியாத கட்டத்தில் அவளை துன்புறுத்தியவர்கள் வீட்டுக்கு முன்னால்சீனவெடி கொழுத்திப் போட்டு  வெறுப்பேற்றியவர்கள் எனப் பல சம்பவங்கள் உண்டு. அதில் அந்த மரத்தடியில் சேரும் ஒரு நண்பன் இருந்தான்.  உயரத்தில் கொஞ்சம் குள்ளம். குணத்திலும் கூட. அவனுக்கு இவள் ஒரு வகையில் மச்சாள் உறவு. அவளுக்கு “கூனி”யின் மகன் பாடசாலையில் வகுப்புத்தோளன். உறவினனும் கூட.. குறிப்பிட்ட சில வார நாட்களில் அவர்கள் இருவரும் சைக்கிலில் அந்த மருதை கடந்து காங்கேசன்துறைக்கு “அதிபர் கனெக்ஸ்”சிடம் ரியூசன் போவார்கள். அந்த நாட்களையும் நேரத்தையும் கணக்கில் வைத்து அவர்கள் போகிற பாதையில் முள்ளுக் கம்பியை நிலத்தில் மறைத்து வைத்துவிட்டு மரத்தோரம் ஒட்டியிருந்து பார்ப்பான். அவளை வெறுப்பேற்றி மகிழ்கிற அல்ப சந்தோசம் ஒன்றுதான் அவன் குறி. ஒரு தடவைகூட அவன் வைத்த கண்ணியில் அவர்கள் அகப்பட்டதில்லை. மரம் அவன் செயல் கண்டு நகைத்துச் சிரிக்கும்.  கூட இருந்த எனக்கும் உள்ளுர சிரிப்புத்தான்.

ஒரு நடுப்பகலில் இந்தமருதின் நீழலிற்தான் எனது இணை தன் காதலை எனக்கு குறிப்புணர்த்தினாள். இவ்வளவு நாட்களும் இது தெரியாது அசடனாயிருந்துவிட்டேனே என அசடுவழிய  நிமிர்ந்து பார்த்தேன். உச்சியிலே இருந்து ஏதோ ஒரு பெயர் தெரியாப் பறவை  தன் இணையோடு  ஊடலில் இருந்தது.

போர் தொடங்கிய பிற்பாடு என் பெரும்பொழுது  மருதனுடனே கழிந்தது.  யாராவது ஒருவர் என்னைத் தேடிவந்து ஊரில் என்வீட்டை அடையாளம் கேட்டால் அடையாளம் சொல்லியபின்  அவன் அனேகம் மருதின் கீழ் நிற்பான்.  அங்கே  போனால் காணலாம் என்று கூடவே விபரம் சொல்வார்கள்.

 

1990 ஜலை 10ஆம் தேதி.

மதியம் கழிந்து மாலைதொடங்குகிறது.  என். கே. பத்மநாதனின் நாதஸ்வர இசை  பெரு மழையெனச்  சொரிகிறது.  மருதின் நீழலில் ஊர்கூடி நிறைந்திருந்தது.  எல்லோர் மனதிலும் ஒருவித ஊமை அமுக்கம்.  சிறுமகிழ்வும் அழிந்து இருள் படரத் தொடங்கிவிட்டது ஒருவித பதட்டம். பதகளிப்பு. இந்திய ராணுவம் சென்றதும் அமைதியாயிருந்த சிலகாலமும் முடிவடையப்போவதாக குசுகுசுக்கிறார்கள்.

திடீரென மேற்கிலிருந்து எழுகிறது இரண்டு துவக்குகளின் தொடர் வேட்டோலி.  ஒருநிமிட அமைதி.  மீண்டும் தொடகிறது சரவெடிகள்.  கிழக்கே பலாலியிலிருந்து எழுந்துவிட்டது ஹெலி. பிறகு கச்சேரிக்கு சொல்லவா வேண்டும். ஹெலி சுற்றிச்சுற்றி அடிக்கிறது.  பத்மநாதன் நாதஸ்வரத்தை உளையுள் சுற்றிக் கட்டியபடி பாதுகாப்பான இடம்தேடி ஓடுகிறார்.  பெரு மழை ஓய  பாய்கிறது ஊர் பெருவெள்ளமாக. இரண்டு நாட்களில் ஊர் வடிந்து ஒருசொட்டுமில்லாமல்  தீர்ந்துவிட்டிருந்தது.

நான் வீட்டுக்கும் மருதுக்குமிடையே பலமுறை நடந்துவிட்டேன். இரவு மருதின்கீழ் தங்கினேன்.  ஒரு மரணவீட்டில் இராப்பிணம் காப்பது போல இரவு  முழுவதும் விழித்திருந்தேன். என்னோடு தங்கிய கண்ணப்பன் இனி இருப்பதில் பலனில்லை, காலையில் புறப்படுவோம் என்றான். மூன்றாம் நாட்புறப்படு முன் மரத்தை நிர்ந்து பார்த்தேன்.  அசைவற்று கிடந்தது. வீட்டிலிருந்து ஒரு பொருள்கூட எடுக்கவில்லை. நடந்தேன் . நெடுந்தூரம்.  உலகின் எல்லை வரை.

இப்போ இருபது வருடங்களுக்கு மேலாயிற்று.

 

0000

 

ன் படுக்கையிலிருந்து விழித்ததும் யன்னலினூடு முதலில் தெரிவது அந்த விலோமரந்தான். காலையில் காற்று அகோரந்தணிந்து அடங்கியிருந்தது. இள வெயில் . கண்கள் கூசும் அளவுக்கு மின்னலடித்தது.

ஏனோ தெரியாது, இந்த புலம்பெயர்ந்த மண்ணில் மேப்பிள் மரத்தைவிடவும் விலோ மரங்களே என் மனதைக் கவர்பவை.  மிகவும் உயரமான மரங்கள். அவற்றின் கிளைகளிலிருந்து தொங்கும் கூந்தல் முழந்தாள் தாண்டி நிலம்வரையில் நீண்டிருக்கும். நான் நீண்ட கூந்தலையுடைய பெண்களின் அழகில் மனம் மயங்குபவன். அடர் பச்சைசையை விடவும் சாம்பர் படிந்த மென்பச்சை மீதும் விருப்பம் அதிகம். இப்போ நினைத்துப் பார்க்கும் போது அதுகூட மருதின் இலைகளின் நிறச்சாயல் கொண்டதனால் கூட இருக்கலாம் என்று தோன்றுகிறது. இவையாவுமே இந்த விலோமரத் தெரிவுக்கு காரணமாக இருக்கலாம்.

விலோ மரம் எந்தச் சலனமுமற  மிக அமைதியாக நின்று புன்னகைத்தது.  இருந்தும் என் சலனம் அடங்கவில்லை.  இரவுகண்ட கனவின் மீதியில் மனம் நனைந்து அலைவுறத் தொடங்கிவிட்டது. நினைவுகளின் ஆழ்மன வெளிப்பாடுதான் கனவு என்கிறார்கள். இதில்  உண்மையிருக்குமா?  நான் கடந்த நாட்களில் என்ன நினைத்தேன்.  திடீரெனப் பொறிதட்டியது போல் நினைவு விழித்துக்கொண்டது.

என் தங்கை வீட்டுக்கு முன் ஒரு நடுத்தர அளவிலான மரம் நின்றது. மிகப் பரந்த நிழல் தரு. கிளிப்பச்சை நிறத்தில் பூவரச இலையின் சாயலில் தேக்கிலைபோன்ற பெரிய இலைகளை கொண்டமரம். இளவேனில் காலத்தில் வெள்ளைப் பூக்களை உதிர்க்கும். மாலையில் இதன் நறுமணம் மனதை மயக்கும். அது விட்டின் முன்கூடத்தின்  யன்னலோரம் நின்றதால் உள்ளே ஒளிபுக வழியில்லை. எனவே ஓரிரு கிளைகளை நறுக்குவதென எண்ணியிருந்தோம்.

இரண்டு நாட்களுக்கு முன் அதை அவர்கள் நறுக்கியதாக அறிந்திருந்தேன். காலை நடைப் பயிற்சியோடு சேர்த்து அதையும் பார்த்து வரலாம் என்ற எண்ணத்தில் புறப்பட்டேன். அவர்கள் வீடு என் வீட்டிலிருந்து ஒரு அரைமணி நேரம் நடக்கும் தூரத்திலிருந்தது.

அண்மிக்கும் போதே ஆழ்மனதிருந்து ஒருவித துயரம் என்னை ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டது. அருகில்சென்று மரத்தைப் பார்த்ததும் அதிர்ந்தே போனேன். மரத்தின் அனைத்துக் கிளைகளையும் அடிமரத்துக்கு நெருக்கமாக நறுக்கியிருந்தார்கள். இருபது கரங்களையும் தோளோடு வெட்டி வீழ்த்திவிட்ட பின்பும் எழுந்து நிற்கும் ராவணணின் தோற்றம் என் கண்முன் தெரிந்தது.  மரம் உயிர் மூச்சைப் பிடித்தபடி நடுங்கும் குரலில் முனகிக் கொண்டிருந்தது.

எனக்கு குரல் விம்மத் தொடங்கிவிட்டது. துயரை அடக்கிக் கொண்டு தங்கையிடம் விபரம் கேட்டேன்.  முதலில் ஓரிரு கிளைகளை வெட்டுவதென்றே தொடங்கினார்களாம். ஓவ்வொன்றாக வெட்ட வெட்டஆசை விடவில்லை. உற்சாகம் கரைபொங்க  அதை வெட்டினால் நன்றாயிருக்கும் இதை வெட்டினால் நான்றாயிருக்கும் என முடிவில் எல்லாவற்றையும் வெட்டவேண்டியதாயிற்று என்றார்கள்.

மரம் வெட்டுவதாக இருந்தால் என்ன, போர் செய்வதாக இருந்தால் என்ன, ஆயுதங்கள்  கைக்கு வரும்வரைதான் மனிதன் மனிதனாக இருக்கிறான். அவை இயங்கத் தொடங்கிய பின், அவையே அவனை இயக்கத் தொடங்கிவிடுகிறது.  அதை அடக்கத் தெரிந்தவன் கலைஞனாகிறன்.  முடியாதவன் அதன் வழிப்போய் அதனூடே மாள்கிறான்.  இதுதானே எங்கள் கடந்தகாலப் பட்டறிவு.

தொரன்ரோவில் மரம் வெட்டுவதாயின் நகரசபையிடம் முன்அனுமதி பெறவேண்டும். இவர்கள் சில கிளைகளை மட்டும் நறுக்குவதற்கே எண்ணியிருந்தனர். அதற்கு அனுமதி தேவையில்லை. ஆனால் தொடங்கிய கருமம் முடிவில் மொட்டைஅடிப்பில் அல்லவா முடிந்துவிட்டது.

யாரோ நகர சபைக்கு தகவல் கொடுத்துவிட்டார்கள். அதிகாரிகள் வந்து விசாரனை செய்திருக்கிறார்கள். இவர்களுக்கு மரத்தை முழுதாக அழிக்கும் எண்ணம் இல்லை என்பதை புரிந்து கொண்டு எச்சரித்திருக்கிறார்கள். சில சமயம் மரம் இறந்தால் இரண்டு லட்சம் டாலர்கள் வரையில் அபராதம் விதிக்க சட்டத்தில் இடமுண்டு எனக் கூறியிருக்கிறார்கள்.

தங்கை மிகப் பயந்து போயிருந்தார்.  ’மரம் அடியோடு பட்டு விடுமா?’ என என்னிடம் கேட்டார். நான் இப்போது அவருக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறவேண்டியிருந்தது.

மனிதரைப் பார்த்து ‘மரமண்டை’ என்று பேசுவதெல்லாம் வெறும் அபத்தம். அது உயிருள்ளது.  தன்னைக் கொல்வதற்கு வெட்டினீர்களா அல்லது தேவைகருதி கிளைகளை நறுக்க முனைந்தீர்களா என்பது அதற்கு நன்கு  தெரியும். நீங்கள் தன்மீது கரிசனையாய் இருக்கிறீர்களா இல்லையா என்பதை எல்லாம் மரம் அறியும். ஆதலால் அதன்மீது அன்பாயிருங்கள். எப்படியும் பிழைத்துவிடும்’ என்றேன்

இரண்டு மாதங்கள் கழிந்தது. ஒரு காலையில் போயிருந்தேன். எல்லாக் கொம்பரிலும் புதுக் குருத்து. மரம் முழுவதும் கிளிகள் குந்தியிருப்பது போல மதாளித்து நின்று புன்னகைத்தது மரம்.

•••

 

37 Comments

  1. நெடுதுயிலோன் says:

    மிக சிறந்த படைப்பு, மனத்தை மரத்தால் கசக்க முடியும் என்று இதைவிட கதைசொல்ல எவரால் முடியும் இனி.

Post a Comment