Home » இதழ் 01 » கசகறணம் – இனவொற்றுமை பறிக்கப்பட்ட மக்களின் அவலச்சாட்சியம் !

 

கசகறணம் – இனவொற்றுமை பறிக்கப்பட்ட மக்களின் அவலச்சாட்சியம் !

 

கசகறணம் – இனவொற்றுமை பறிக்கப்பட்ட மக்களின் அவலச்சாட்சியம் !

-உமா

எனது கணவர் காணமல் போய் வருகின்ற ஜனவரி 24ம் திகதியுடன் இரண்டு வருடங்கள் ஆகப்போகின்றன. அரசாங்க அதிகாரிகளைச் சந்தித்து என் கணவர் சம்பந்தமாக நான் எழுப்பிய கேள்விகளிற்கு எனக்கு இன்னும் எந்தவித பதிலும் கிடைக்கவில்லை.எனது பொருளாதார நிலைமை மிகவும் மோசமாகவுள்ளது. எனது மூத்த மகன் க. பொ.த சாதரணப்பரீட்சை எழுதி சித்தியடைந்த  நிலையில் அவனது மேற்படிப்பிற்காக மேலதிக பணம் தேவைப்படுகின்றது. எனது இளைய மகன் தந்தை காணாமல் சென்றதைத் தொடர்ந்து சுகயினமுற்றிருக்கிறார். இவரது வைத்தியச் செலவையும் கவனிக்க வேண்டியுள்ளது. அரசாங்கம் எனது கணவர் வெளிநாடொன்றில் ஒளிந்திருப்பதாகக் கூறுகின்றது. அப்படியானால் ஜனவரி 24க்கு முன்பாக எனது கணவர் இருக்கும் இடத்தை அரசாங்கம் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும.; இனி ஒரு பெண் தனது கணவரை இழப்பதையும் பிள்ளைகள் தமது தந்தையை இழப்பதும் தடுக்கப்படவேண்டும். இல்லையெனில் நான் மேல் மட்டத்தில்  சில நடவடிக்கைகளை எடுக்க நேரிடுமென  இலங்கை அரசை நோக்கி அண்மையில் சவால் விட்டிருக்கிறார்  காணாமல் சென்ற ஊடகவியலாளர் பிரகித் எக்னலிகொடவின் மனைவி சகோதரி சந்தியா எக்னலிகொட.

இந்த சவாலிற்கும் கசகறணம் நாவலிற்கும் என்ன சம்பந்தம் என நீங்கள் யோசிக்கலாம். இந்த 30 ஆண்டுகால யுத்தத்தில் அதிகளவில் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள். யுத்தத்தினால் ஏற்பட்ட அனைத்து அனர்த்தங்களிற்கும்; முகம் கொடுத்திருக்கிறார்கள் பெண்கள்.  புள்ளிவிபரங்களின்படி நாடளவில் 89000 பேர்  கணவர்மாரை இழந்துள்ளனர். கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் 49 000 பெண்கள் கணவர்மாரை இழந்துள்ளனர். இப்பெண்கள் பொருளாதா ரீதியில் பல இன்னல்களிற்கு முகம் கொடுப்பதோடு குடும்பச்சுமையை சுமக்கவேண்டியவர்களாகவுமுள்ளனர். போராட்டத்தின பேரில் கொலை செய்யப்பட்ட ஒவ்வொரு உயிரும்  அவள் பெற்றெடுத்து பத்திரப்படுத்திய அவளது சொத்துக்கள். இராணுவத் தாக்குதல்களின் போதிலும், சகோதரப்படுகொலைகளின்போதும், இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட அனைத்து உயிர்களிலும் ஓடுவது பெண்களின் இரத்தம். உலகெங்கிலும் நடைபெறும் யுத்தங்களில் பெண்கள் தான் ளழகவ வயசபநவள. இராணுவத்தின் பழிவாங்கல்களிற்கும், ஒரு இனம் மீதான வெறுப்பைக் காட்டவும் பெண்கள்  பாலியல் வன்முறைக்குட்படுத்தப்படுகிறார்கள்.விடுதலைப்புலிகளினால் நிகழ்த்தப்பட்ட சகோதரப்படுகொலையின் போதும்  பெண்கள் மாற்று இயக்கத்தவர்களை மறைத்தும், கொல்ல வந்தவர்களை விரட்டியும் தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இறுதிக்கால யுத்தத்தில பெண்கள்  அதிகமாக ஈடுபடுத்தப்பட்டனர். அதே நேரம்  போரை நிறுத்தக் கூறியும்;  காணமல் போன தமது புதல்வர்மாரையும் கணவர்மாரையும் மீளத்தரும்படிக்கோரியும் பல பெண்கள் போராட்டங்களில் தம்மை இணைத்துக் கொணடனர்.

இந்த யுத்தத்தில் பெண்களின் ஆளுமை நிறைந்த வாழ்வு சிதைக்கப்பட்டது, அவர்களைச் சூழ்ந்த இன்னல்களும் ஈடுசெய்யமுடியாத இழப்புகள் என்பவற்றின் சாட்சியமாக விமல் குழந்தைவேலின் கசகறணம் நாவல் விளங்குகிறது.  யுத்தத்திற்கும் பெண்களிற்குமான தொடர்பு எந்த புனைவுகளுமின்றிச்  சித்தரிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொடூர  யுத்தத்தில் தமது வாழ்வு சிதைக்கப்பட்டு, உறவும் உடமையும் இழந்து  அந்த மண்ணின் இனவொற்றுமை அவர்களிமிருந்து பலவந்தமாக பறிக்க்கப்பட்ட தமிழ் முஸ்லீம் காதாமாந்தர்களின் உயிர்ப்பான பதிவுதான் கசகறணம்.

இந்நாவலை அறிமுகப்படுத்த குறிப்பிடப்பட்டிருந்த .“ மண்ணை இழந்த மனிதர்களையும் மனிதர்கள் இழந்த மண்ணையும் பற்றிய கதை“என்ற வாக்கியம் நாம் ஆயுதப் போராட்டத்தின்  விளைபொருளாகக் கண்டவைகளைச் சொல்லி நிற்கின்றது. யுத்தம் முடிவுற்று இலட்சக்கணக்கான மக்கள் தமது மண்ணிலிருந்து விரட்டப்பட்டும் கொலைசெய்யப்பட்ட நிலையில் எல்லோரது மனங்களிலும் எழுந்த கேள்வி நாம் என்ன சாதித்தோம் என்பதே. இந்த யுத்தத்தால்  உண்மையில்பெரும்பாலாக பாதிக்கப்பட்டவர்கள் விளிம்புநிலையில் வாழும் இழப்பதற்கு ஒன்றுமே அற்ற மக்களும்,  தமது நிலத்தை நம்பி உழைத்து வாழ்ந்த மக்களுமதான். இன்று இந்த மக்கள்  நிலங்களையும் உறவுகளையும் இழந்து அநாதரவாகத் தவிக்கின்றார்கள். இத்தைய மக்களின் வாழ்வின் பிரதிபலிப்புகளே இந்நாவலில் வாழும் வெள்ளும்மாவும்;;, மைலிபெத்தாவும், ஏனேய   பாத்திரங்களும்.

இந்நாவல்  இரண்டு அத்தியாயங்களைக் கொண்டது முதலாவது  அத்தியாயததில்; அக்கரைப்பற்று என்ற கிராமத்தில் தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமையான பின்னிப் பிணைந்த  அவர்களது ரம்மியமான வாழ்வை எம்மால் உணரமுடிகின்றது.  ஒரு சந்தையை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இக்கதை, ஆயுத போராட்டம் ஆரம்பிக்க முதல் அம்மனிதர்களுக்கிடையில் இருந்த  உன்னதமான பரஸ்பர உறவுகளும்  அவரவரவர் மீது அவர்கள் கொண்ட அக்கறையும்  அழகான நிகழ்வுகளின் கோர்வைகளாக தத்துரூபமாகக் காட்டப்பட்டுள்ளது. இதில் வரும் குறட்டை காக்கா, மைலிப்பெத்தா, வெள்ளும்மா, குழத்தழகி,கனகவேல் போன்ற பாத்திரங்கள் எமக்கு நன்கு பரிச்சையாமானவர்கள் போல் எம்மனதில் ஒற்றிக் கொள்கிறார்கள்;. இவர்களின் பாத்திரங்கள் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இந்நாவலின் பலம் அப்பாத்திரங்களை அம்மக்களுக்கேயுரிய அவர்களது வட்டார வழக்குச் சார்ந்த மொழியில் உறவாடவிட்டிருப்பதே. ஒரு மண்ணைச் சார்ந்த மக்களது ஆத்மா அவர்களது மொழியில்தான்  அடங்கியுள்ளது. அவர்களது சந்தோஷம்,,துயரம், கோபம்; வீரம், இயலாமை என்பவற்றை  வெளிப்படுத்தும் கருவியாக அவர்களுக்கேயுரிய மொழிவழக்கும் அவர்களது சாம்பாஷணைகளுமே செயல்படுகின்றன. ஒரு மண்ணின் கதையைச் சொல்லும் போது அவர்களது மொழியை அவர்களிடமிருந்து பிரிக்கமுடியாது. அந்த வகையில் நாவலாசிரியர் அந்த மக்களது மொழியை அவர்களிடத்திலிருந்து பறித்தெடுக்காமல் இக்கதைமாந்தர்களை உயிர்ப்பித்திருப்பது இந்நாவலின் வெற்றி. கிழக்கு மாகாணத்தில் வழக்கிலுள்ள சொற்றாடல்கள் ஏனேயோருக்கு புரியாது என்ற நோக்கில் ஒரு அகராதியை இணைத்திருப்பது ஒரு துர்ப்பாக்கியமே. ஓரு மொழியைப் பேசும் மக்களுக்கிடையான உறவுகளின்  இடைவெளியே இங்கே  தென்படுகின்றது. ஒரு பிரதேசத்தின் வட்டார வழக்ககைப்   புரிந்து கொள்வதற்கு நாம் காட்டும் தயக்கமென்பது  நாம் வெட்கித்தலைகுனிய வேண்டிய விடயமே.

 

இந்நாவலின் உயிர்நாடியாகத் திகழ்பவர்கள்  இந்நாவலில் வரும் பெண்பாத்திரங்கள். இவ்வாணாதிக்கச்சமூகம் பெண் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் ஒடுக்குமுறைகள், பெண்களின் உழைப்பிற்கு மதிப்பளிக்கப்படாமை ,பாதுகாப்பின்மை என்பவற்றை  அவர்களின் வாழ்க்கையூடாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இக்கதையின் முக்கிய பாத்திரங்களான குலத்தழகி, வெள்ளும்மா, மைலிப்பெத்தா மற்றும்  பாத்திரங்களான மலர் ,திரவியம் , பெத்தாவின் மருமகள், பொன்னம்மை, குஞ்சரக்கா  என அனைவரும் சமூகத்தில் பெண் வகிக்கும் பாத்திரங்களையும் அவர்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறைகளையும் நன்கு பிரதிபலிக்கின்றனர்.

வெள்ளும்மா, மைலிப்பெத்தா போன்ற பாத்திரங்கள் ஆளுமைமிக்கவர்களாகவும், தம் ஒடுக்கும்  நிலையை உணர்ந்தவர்களாகவும்;, பொருளாதாரச் சுதந்திரமடைந்தவரகளாக, தமது உழைப்பின் பெறுமதியை உணர்ந்தவர்களாகவும். மற்றவர்களின் உரிமைகளிற்கு குரல் கொடுப்பவர்களாகவும் படைக்கப்பட்டிருக்கிறார்கள்.  இவர்கள் தமது உழைப்புச்சக்தியை விரயம் செய்யாது தமது சொந்த உழைப்பில் தமது வாழ்வாதாரத்தைத் தேடிக்கொள்பவர்கள். பெண்கள் எதிர் கொள்ளும் ; சமூகரீதியானதான  பாரபட்சங்களிற்கு முக்கியத்த்துவம் கொடுக்கப்பட்டு, அவை கோடிட்டிக் காட்டப்பட்டுள்ளன.

மைலிப்பெத்தாவின்  துயரங்களின்  நீட்சியாய் தொடரும் வாழ்வு.  தனிச்சவளாக குடும்பச்சுமையைச் சுமந்து வாழும் அப்பெண் யுத்தத்தின் நிகழ்வுகளால் தனது உறவுகளையும் இழந்து, இறுதி வரைக்கும்  தனது  பேரனையும், தன்னொடு அன்பாய் உறவாடிய உறவுகளிற்காக ஏங்கித் தவிக்கின்றாள்.  அவள் விரும்பாத யுத்தம் அவள் அறியாமலேயே அவளைக் குற்றவாளியாக்குகின்றது.

;வெள்ளும்மா ஒரு உழைக்கும் பெண்ணாக  தன்னைச்சுற்றி நிகழும் அனைத்து அநீதிகளையும் தட்டிக் கேட்கக் கூடிய ஆளுமைமிக்கப் பெண்ணாகச் சித்தரிக்கப்பட்டுள்ளாள். அவள் தன் உள்ளவெளிப்பாட்டையும், சூழல் சார்ந்த தனது விமர்சனங்களையும்   கிராமியப் பாடல்களாகவே வெளிப்படுத்துவாள்.

ஓரு காட்சியில் குழத்தழகி கணவனால் தாக்கப்படும் போது, அவனைப் பார்த்து இப்படிக் கேட்கிறாள்.

/சுட்டக்கருவாடும் சுடச் சுடச்

சோறும் வேணும்,

கட்டில் சுகமும் வேணும்

கால்,கை அமுக்கவும் வேணும்

இட்ட வேலையெல்லாம்

இடுப்பொடியச் செய்யவும் வேணும்

இத்தனையம் ஏங்காபுள்ள- நாம்

பொண்பொறப்பு எண்டுறதாலோ . . .?/

இன்னொரு சந்தர்ப்பத்தில் அவளது பாய்வியாபாரத்தின் போது பேரம் பேசிய  ஒரு ஆண் ஏளனமாக சும்மா கொளத்துல கிடக்குற பன்னுக்கு இந்த விலை செல்லுறாயே எனக் கூறியதிற்கு

/நாங்க தண்ணிக்க எறங்குனா எப்ப முதலை வருமெண்டு பயப்பிடோணும். அடித்துடையில் அட்டை கடிக்கும்.முன்னங் காலுல முரல் குத்தும். குதிகாலுல சுங்கான் முள்ளேறும் ஒத்த முலையில பாம்பு ஊர்ந்து போகும். இப்படியல்லாம் பயந்து கயிற்றப்பட்டு புடுங்கிவந்து, அதையும்  தாறுவாயாக்கிழிச்சி காயவைச்சி, சாயம்போட்டுத்தான் வாப்பா சந்தைக்குப் பாயாக்கி கொண்டாறம். நீயென்னடா எண்டா சும்மா கொளத்துல கிடக்குங பன்னெங்குறாய் எலுவா? /

அதன்பின அவர் அந்தப் பொருளை அவள் கூறிய விலைக்கு வாங்கச் சம்மதித்தும், அவள் கோடி ரூபாய் கொடுத்தாலும்  பொம்பிளையின் உழைப்பை மதிக்கத் தெரியாத உனக்கு விற்கமாட்டேன் என மறுத்துவிடுவாள்.அதேசமயம் அவளது பொருட்களை பார்த்து ஆசைப்படும் ; ஒரு கர்ப்பினிப் பெண்ணிற்கு பணம் வாங்காமலே அவள் விரும்பும் பொருட்களைக் கொடுத்துவிடுவாள்.

இந்நாவலில் வரும் குலத்தழகி மிகவும் வெகுளித்தனமான சினிமா மீது பேரார்வம் கொண்ட  ஒரு பெண். அவள் சந்தைக்கு வரும்போதெல்லாம் தான் விற்பதற்கு கொண்டுவந்த பொருட்கiளில் அக்கறை காட்டாது சினிமாத்தட்டிகளில் லயித்துவிடுவாள். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சினிமா கொட்டகைக்குள் புகுந்து படம் பார்த்து விடுவாள். ஒரு சமயம் அவள் படம் பார்த்து வரும் போது  அவளது கணவனிடம் அகப்பட்டு  சந்தையில் வைத்தே அடித்து துன்புறுத்தப்படுகிறாள். அந்த அவமானம் தாங்காது அவள் தற்கொலை செய்துகொள்கிறாள். ஒரு பெண்ணின் சின்ன சின்ன ஆசைகள் எல்லாம் நிறைவேற்றப்படாமல் சுக்குநூறாக உடைந்து போவதையும், அவளது விருப்பங்களிற்கு  மதிப்பளிக்கப்படாமல் அவளைச் சுற்றியுள்ளவர்களால் கட்டுப்படுத்தப்படுவதும் இந்த ஆணாதிக்கச் சமூகத்தின் கூறுகள்.

அச்சந்தையை உயிர்ப்பிக்கும் ஜீவன்களை பதியும் போது தவிர்க்கமுடியாதவராகவும் , எம்மனங்களில் ஆழப் பதியும்படியாகவும் வடிக்கப்பட்ட பாத்திரம்  கனகவேல். ஓரினச் சேர்க்கையாளனாக  சமூகத்தில்  அவர் எதிர்கொள்ளும்  தொடர்ச்சியான அடக்குமுறைகள், அவமானங்கள் என்பன  நிகழ்வுகளாகக் கோர்க்கப்பட்டுள்ளன. கனகவேல்  விரும்பிப் பழகும் நண்பர்களாக, தனது மனதிலுள்ள குறைகளை பகிர்ந்து கொள்பவர்களாக இந்நாவலில் வரும் முக்கிய பெண் பாத்திரங்களேயுள்ளனர். எமது சமூகக்கட்டுமாணத்தில் வெளிப்படுத்தமுடியாமல் ஆண்-ஆண் சார்ந்த உறவுகள் முறிவடைவதும்,அதனால் கனகவேல் அடையும் மனவேதனையும், கனகவேல் பெண் வேடம் ஏற்று நடித்த போது கடத்தப்பட்டு பாலியல்பலாத்காரத்திற்குட்படுத்தப்படுவதும்,இறுதியாக அவன் சந்தேகநபராகக் கொல்லப்படுவது வரை அவன் எதிர்கொள்ளும்  ஒடுக்குமுறைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.   எமது சமூகத்தில் சமபாலுறவு நிந்திக்கப்படுவதும், எள்ளிநகையாடப்படுவதும்  ஒவ்வொரு காட்சியிலும் அழகாகப் பிரதிபலிக்கப்பட்டுள்ளது.   ஒடுக்கப்படுபவர்களின் பிரச்சினைகளை நன்கு உணர்ந்தவராகவும,; அவர்கள் மேல் கரிசனைகொணடவரான  கனகவேல் குழத்தழகி தாக்கப்படும் போது ,… இந் ஆம்புளையளே இப்படித்தான் பொட்ட. எதுக்கெடுத்தாலும் பொம்பளையளப் போட்டு அடிப்பானுகள்.” என  அவன் குறுக்கே விழுந்து மறித்து அடியும் வாங்குகிறான்.

ஒரு கிராமத்தில் வாழும் அனைத்து மனிதர்களினதும் அக்கிராமத்துடனான  தொடர்பும் பதிவு செய்யப்படும் போது  விளிம்புநிலையில் வாழும் குறவர் சமூகத்தினது துயரமானதும், பாதுகாப்பு அற்றதுமான  வாழ்வும் மறைக்கப்படாமல் சேர்க்கப்பட்டுள்ளது. அவர்கள் தமது வாழ்வாதரங்களைத் தேடிக் கொள்வதற்காக அலைவதும், அவர்கள் தங்குமிடங்களில் பெண்கள் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்படுவதும்  குறிப்பிடப்பட்டுள்ளது.

பெண்பாத்திரங்களிற்கு முக்கியத்துவம் கொடுத்து  படைக்கப்பட்ட இந்நாவலில் கற்பழிப்பு என்ற பதம் தொடர்ந்து கதாசிரியரால் உபயோகிப்பட்டிருப்பது நெருடலாகவுள்ளது. இனிவரும் தனது படைப்புகளில் இச்சொற்பிரயோகங்களைதத் தவிர்த்தல் வேண்டும்.

போர்சூழலும் இனமுரண்பாடுகளும்  இக்கிராமங்களை ஆக்கிரமிக்க முன்பான காலத்தில அனைத்து இனமக்களுக்கிடையான உறவுகளும் அன்னியோன்னியமாகவேயிருந்தன. மைலிப்பெத்தா  மருந்தெடுக்க உமார் பாரியாரியிடம் செல்வதும், திரும்பி வரும்வழியில் வெள்ளும்மாவின் உறவினர்களிடம் செல்வதும், அவர்கள் உறவினர்களைப் போலப் பராமரித்து உணவுப் பொருட்கள்   கொடுத்தனுப்புவதும், ஒருவர் பால் ஒருவர் அக்கறையோடிருத்தலும், மைலிப்பெத்தாவின் வீட்டில்  சத்தராதி பிடித்துள்ளதாகவும் அதற்கு பரிகாரம் செய்யும் பொருட்டு குறட்டைக் காக்கா அவர்கள் வீட்டிலேயே தங்கியிருப்பதும்; அம்மக்கள் வாழ்ந்த வாழ்க்கைக்குச் சாட்சியம் சொல்லும் காட்சிகள்.;

அம்மக்களின் ஒற்றுமையான வாழ்வும், இனமுரண்பாடற்று அவரவர் தம் மீது வைத்த நம்பிக்கையையும் தமிழ்தேசிய விடுதலைப் போராட்டத்தின் தொடர்ச்சியாய் நிகழ்ந்த மாற்றங்கள் சிதைத்தழித்தது.

கிழக்கு மண்ணின் வாழ்வியலுக்குச் சம்பந்தமற்ற ஆதிக்கம்  அம்மக்களின் விருப்பத்திற்கு மாறாக அங்கு திணிக்கப்பட்டது.

வெள்ளும்மா தமிழர் செறிந்து வாழும் பகுதியால்   . . நடந்து வரும் போது அப்பிரதேசத்தைச் சாராத இயக்கப் பெடியன்களால் வழிமறிக்கப்பட்டு, நீ யாரு எனக் கேட்கப்படுகிறார்.  அதற்கு அவர் / ஏன் வாப்பா நானும் மனிசி தான் பார்த்தா தெரியல்லயா?/ அதற்கு அவர்கள் /அது தெரியுது . . . எந்த ஊர்? ; எங்க இருந்து வாறாய்? /என்றதற்கு

/கட்டாயம் தெரிஞ்சுக்கணுமா . .

பாய்க்கட்டோட ஒருத்தி

பயப்படாம போறாள்

அவள் ஆரெண்டு- இந்த

ஊருக்குள்ளேயே கேளு

பதில் செல்லுவாங்க

 

ஊருல அவளவளுக்கு

குந்த ஒரு குடிலில்ல,

குடிக்கக்கூடக் கஞ்சியில்ல.

கந்தல் துணியக்கூட-கனநாளாய்

மாத்தயில்ல . . .

இந்தப்பொடியனுகளென்னெண்டா

எண்ட வமிசாவழி கேக்குறாங்ககா/

வெள்ளும்மாவிற்கு இக்கணத்தில் எற்பட்ட ஆதங்கம் தான், தமது  மண்ணிலிருந்து  வெளியேற்றப்பட்ட அனைத்து முஸ்லீம் மக்களினது மனங்களிலும் தோன்றியிருக்கும்.

கிழக்குமகாணத்தில புட்டம்பையிலிருந்து முஸ்லீம் மக்களது உடமைகள் சேதமாக்கப்பட்டு, அம்மக்கள் வெளியேற்றப்பட்டபோதும், தாம் இந்த மண்ணில் சகோதரர்கள் போல் வாழ்ந்தவர்கள் அதனால் தமதுயிருக்கு ஒன்றும் நேர்ந்து விடாதென்ற நினைப்பில் வாழ்ந்த வெள்ளும்மாவின் பேத்தியின் கணவர் நிஸார் கொல்லப்பபடுகிறான். இச்சம்பவம் பற்றி கதைக்கும் போது வெள்ளும்மா மைலிப்பெத்தாவிடம் இப்படிக் கூறுகிறாள்./ பாலப் பார்க்கையில்லெண்டாலும் பால் வார்த்த பானையைப் பார்த்திருக்கக்கூடாதா. ;எண்ட பேத்திர புருசன வெட்டிச் சாக்காட்டனவனுகளுக்கு இந்த வெள்ளுமாட முகம் நெனப்புக்குவரயில்லயாமா? /

தான் கிராமத்தில் ஒருத்தியாய் அம்மக்களிற்கு உதவிகள் புரிந்த அவளது மனம் ஆற்றாமல் வெம்முகிறது. புட்டம்பை  சம்பவத்தை நினைக்கும் போது அவள் உறவாடிய உறவுகள் அவள் முன் வருகின்றன. நிஸார் எத்தனை பேரின் தாகத்தை இளநீர் கொடுத்துத் தீர்த்திருப்பான். இம்மக்களுக்கு நிகழ்ந்த கொடூரங்களிற்கு தனது பேரனையும் சபிக்கின்றாள். ஊரைவிட்டுச் செல்லும் போது உமார் பரியாரி புட்டம்மை நினைவாக அவளது கையில தான் மருந்திடிச்ச அம்மியையும் உரலையும் கொடுக்கிறார். அன்பின் அடையாளங்கள் மௌனமாகவே மண்ணில் புதைக்கப்பட்டன.

இந்நாவலின் கதாசிரியர் விமல்  கதைசொல்லல் முறையால்  போர்ச்சூழலால் அப்பிரேதேசம் முற்றுகையிடப்படும் போது அந்த ஊரிலும் மக்களிலும் ஏற்பட்ட சிறுசிறு மாற்றங்களையும் நிகழ்வுகளுடாக யாதார்த்த பூர்வமாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.  நேரத்தைப் பொருட்படுத்தாது சந்தையில் சந்தோசமாகப் பொழுதைக் கழித்தவர்கள்  இராணுவத்தின் நடமாட்டத்தினால் சந்தையைவிட்டு வெளியேறுவதும், முன்னைநாட்களில் மரையிறைச்சி வாங்குவதற்காக மட்டும் சனம் கூடும் மையங்களில் பாதிசிதைக்கப்பட்ட உடலங்களின் உறுப்புகளை வைத்து அடையாளம் காணப்படுவதும் இம்மாற்றங்களைக் காண்பிக்கின்றன.

போர்ச்சூழலில் வியாபித்திருந்த ஆயுத கலாச்சாரம் சிறுவர்களினது சிறுபிராயத்தை எவ்வாறு அழித்தொழித்தது, அவர்களை எவ்வாறு உள்வாங்கியது என்பதுவும் காலத்தின் பதிவாக வடிக்கப்பட்டுள்ளது. மைலிப்பெத்தாவின் பேரன் கேசவன் அவளின் பேத்தியின் மகன் செந்திலுக்கு துப்பாக்கியை வைத்துச் சுடுவது மாதிரி காட்டிக் கொடுக்கும் போது அதனைப் பார்த்த மைலிப்பெத்தா திடுக்குற்று அவனைக் கடிகின்றாள்.  செந்தில் சிறுபிராயத்திலிருந்தே தாயின் தையல் பெட்டியுடன்தான் விளையாடுவான்.; தான் காண்பவற்றையெல்லாம் அதற்குள் போட்ட கிளுக்கி விளையாடுவான். போரின் கோரப்பற்கள் அவ்வூரின் அமைதிவாழ்வில் வடுக்களை இட்டுச் சென்ற போது, அவனது தையல் பெட்டிக்குள்; தாயை அழித்தச்சன்னங்களை கடலைச சாக்கிலிருந்து பொறுக்கி எடுத்துச் சேர்த்துக்கொள்கிறான்.  இச்சன்னங்களின் ஒலி அவனுக்கு விளையாட்டாகிறது.

ஆயுதப்போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னர் இக்கிராமத்தில் நிலவிய சுபீட்சமான வாழ்வும் இனமுரண்பாடுகளை; முன்நின்று தவிரக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் அருகிப் போயின. வெள்ளும்மா என்ற பெண் தனித்து  ஒரு இனக்கலவரத்தை தடுக்கக் கூடியதாகவிருந்தது. முன்பொருசமயம் ஒரு தமிழ் சாரதியின் லொறி ஏற்றப்பட்டு ஒரு முஸ்லிமிற்குச் சொந்தமான ஆடொன்று இறக்கின்றது. இதைச் சாட்டாக வைத்து எழவிருந்த கலவரத்தை அவள் நடுநிலையாக நின்று தவிர்க்கின்றாள். இது போல இன்னும் பல சம்பவங்கள் இந்நாவலில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் அதே கிராமத்தில் தமிழ் தேசியத்தின் பெயரால் நிகழ்த்தப்ப்பட்ட வன்முறைகளின் உச்சமாய் இனமுரண்பாடுகள் பூதகரமாக்கப்பட்டு இனவொற்றுமையின் சின்னமாகவிருந்த அக்கரைப்பற்றுச் சந்தையே எரிக்கப்படுகின்றது.

போரின் வலியால் பாதிக்கப்பட்ட மனிதர்களின் வாழ்வை உள்ளடக்கிய இந்த நாவலைப் படித்த பின்பு எம்முன் எழுவது என்ன? இவற்றை நாம் வெறும் சம்பவங்களாக மாத்திரம் எடுத்துக் கொள்ளப் போகிறோமா? தழிழ்த்; தேசியத்தின் பெயரில் சிறுபான்மையினருக்கு இழைக்கப்பட்டத் தவறுகளை சுயவிமர்சனம் செய்யாதிருக்கப்போகிறோமா? பிரதேசங்களுக்குரிய தனித்தவத்தை புறக்கணிக்கப் போகிறோமா? தமது சொந்த மண்ணில் மீளகுடியேற விரும்பும் முஸ்லீம் சகோதரசகோதரிகளிறகுக் கதவுகளை அடைக்கப் போகிறோமா? யாழ்ப்பாணத்திற்குள் சோனகர்கள் திரும்பவும் சாமான்கள் விற்கத் தொடங்கிற்றினம் எனத் தொடர்ந்தும் இனவாதத்தைக் கக்கிக் கொண்டிருக்கப் போகின்றோமா?  அப்படியாயின் குறட்டைக்காக்காவின் ஆதங்கமும், தனது உயிருக்கு ஆபத்தென்று தெரிந்த போதும் தனது பேரனின் உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்று நினைத்து கிரனைட்டை தனது  கடலைச்

சாக்கிலிருந்து  இராணுவத்தினர் எடுத்தபோது தனது பேரனைக் காப்பாற்றி விட்டேன் என்று சந்தோசப்படும் மைலிப்பெத்தாவின் சிரிப்பும் அர்த்தமற்றதாகிவிடும்

.0000

27.11.11 அன்று பேர்லினில் நடைபெற்ற உரையாடல்களின் அரங்கில் முன்வைக்கப்பட்ட விமர்சனம் விரிவாக்கப்பட்டு பிரசுரிக்கப்படுகின்றது.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment