Home » இதழ் 07 » காலம்,பிரதிகள் மீதான வாசிப்பு – விமல்குழந்தைவேல்

 

காலம்,பிரதிகள் மீதான வாசிப்பு – விமல்குழந்தைவேல்

 

 

இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் இதுவரைகாலமும் வெளிவந்த சிறுகதைகள் நாவல்கள், வரலாற்றுப் பதிவுகளை முன்வைத்து…. வரலாற்றுப் பதிவுகள் என்ற சொல்லாடலில் சற்று உடன்பாடற்றவனாக நின்றே என் உரையைத்  தொடங்குகின்றேன்.

இங்கே நித்தியானந்தனோ, மற்றவர்களோ குறிப்பிட்ட பிரதிகளெல்லாம் ஏதோ ஒரு தேவை உள்ளடக்கியதான வரலாற்றுப் பதிவுகளாக இருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் என்னென்னவைகள் வரலாறாக பதியப்பட வேண்டுமோ அவைகள் பதிவில் வராததின் ஆதங்கமாகவே எனது கருத்தை முன்வைக்கின்றேன். இதற்கு நலிந்த மக்கள் பற்றியே எழுதப்பழகிவிட்ட எழுத்தாளன் நான் என்ற காரணத்தால் என் மனநிலையும் அப்படி மாறியிருக்கலாம்.

முப்பது வருட போராட்டம் முடிவுற்று எந்தலாபமும் இல்லாமல் நட்டப்பட்டு நிற்கும் நம் கடந்த காலம் பற்றி எழுதிக் கொண்டிருக்கின்றோம் என்று நமக்கு நாமே சொல்லிக் கொண்டு எழுத்துரு பெறுபவைகள் எல்லாவற்றையும் மேடையேற்றி ஒப்புக்கு சப்புக் கொண்டிருக்கின்றோமே தவிர எழுதப்பட்டவைகளெல்லாம் போராட்டம் பற்றியதுதானா என்ற சந்தேகத்தைக்கூட எழுப்ப மறுக்கின்றோம். முதல் பிரதி வாங்க வரும் அதிதிக்காக காத்திருந்து முடியும் பணச்சடங்கிற்காகவே பல பிரதிகள் அச்சில் ஏறியிருக்கின்றன.

ஈழப்போராட்டம் பற்றிய வரலாற்றை அறிய ஆவல்படும் ஒரு வெளிநாட்டவருக்கு தூக்கிக் கொடுக்க முறிந்த பனையைத் தவிர எங்களிடம் வேறு எதுவும் இல்லை என்பதே இது வரை வந்த படைப்புகள் எமக்கு தெளிவுபடுத்தும் உண்மை. ஆதலால் முறிந்த பனையையும் புதியதோர் உலகத்தையும் தவிர்த்தே எனது விசனத்தை  தொடங்குகின்றேன்.

இதுவரை வந்த வரலாற்றுப் பதிவுகளில் பலதும், எழுதுபவரின் தான் சார்ந்த பக்கசார்பான ஒப்புதல் வாக்கு மூலம், அல்லது தனக்கு எதிரானவர் பற்றிய குற்றப் பத்திரிகை போலவேதானே தவிர ஒரு நடுநிலையான பிரதிகளாக இல்லை.

தான் எந்த இயக்கத்தில் இருந்தேன், இருந்த போது யார் யாரோடு நட்புக் கொண்டிருந்தேன், எங்கெங்கு சென்றேன், யார், யாரையெல்லாம் சந்தித்தேன், என்னென்ன உண்டேன், எங்கெங்கு உறங்கினேன் என்பது போன்ற துணுக்குகள்  அடங்கிய தனிநபர் சுயசரிதைகளாகவே பல பதியப்பட்டு பிரதிகளாகியிருக்கின்றன. இதன் மூலம் ஒவ்வொருவரும் தங்களை ஒரு ஹீரோ, ஹிரோயின் அந்தஸ்தில் நிறுத்தவே முனைந்திருக்கின்றனர். அமிர்தலிங்கத்திற்கு ரத்ததிலகமிட்டதையும். எம்.ஜிஆர் இயக்கத்திற்கு பணம் தந்ததையும் வரலாற்றுப் பதிவாக எத்தனைபேர் எவ்வளவு நாட்களுக்குத்தான் எழுதிக்கொண்டிருப்பது…….

மக்களை நினைத்து ஆயுதம் தேடினோம், ஆயுதம் கிடைத்ததும் மக்களை மறந்தோம் , இப்போது எழுதுகிறோம். அதிலும் கூட மக்களையே நிராகரிக்கின்றோம், மக்களை மறந்து நடந்த போராட்டம் எப்படி தோல்வியில் முடிந்ததோ அதேபோல் மக்களை மறந்த எழுத்தும் நிலையாது.

ஒரு போராட்டம் கண்ட தோல்வியின், வெற்றியின் சரி பிழைகளே இன்னொரு புரட்சிக்கான முதல் பாடம். உலக போராட்ட புரட்சி வரலாறு பற்றிய பதிவுகளெல்லாம் மக்களைப்பற்றி சொன்னதால்தான் இன்னும் அவைகள் முன்னுதாரணமாகக் கொள்ளப்படுகின்றன.

கார்ல் மார்க்ஸையும், லெலினையும், ஸ்டாலினையும், சேகுவேராவையும் இடுப்பில் செருகிக் கொண்டு வந்து நடு இருட்டில் மக்களைக் கூட்டி பாசறை வகுப்பு நடத்தி போராடத் தயார் படுத்திய நாம் இன்னொரு போராட்டமோ, புரட்சியோ ஏற்படுமிடத்து மீண்டும் அவர்களையே இடுப்பில் செருகுவதை விடுத்து நடந்து முடிந்த முப்பது வருட போராட்டம் பற்றிய சரி பிழைகளைக் கண்டறிந்து அவைகள் பின்னால் இனிவரும் சந்ததி நடக்க நாம் எழுதிவைத்திருக்கும் ஆவணமென்ன என்பது கேள்வி – இயக்கம் வளர்த்ததும், ஆயிரம் மேசை மகாநாடுகளில் கூடிக்குலாவிவிட்டு வெட்டிவிலத்திய சங்கதிகளுமே வரலாறென்றால், பயன்படுத்திவிட்டு பலிகடாவாக்கப்பட்ட மக்களின் வரலாற்றை  யார் முழுமையாக எழுதினர்?

உருப்படியாக இருந்த ஒருசமூகக் குழுமத்தை, விதவைகளென்றும், அனாதைகளென்றும், ஊனமுற்றோர் என்றும், கைதிகளென்றும், காணாமல்போனோர் என்றும், இடம் பெயர்ந்தோர் என்றும், சொத்துடமை இழந்தோர் என்றும், முன்னாள் போராளிகளென்றும், முள்வேலி அகதிகளென்றும், கட்டம் போட்டு பிரித்து வகுப்பறைகளாக்கி வைத்திருக்கின்றது முப்பது வருடப் போராட்டம். இந்தக்குழுக்கள் பற்றிய எந்தவித உருப்படியான பதிவேனும் பதிவேறாதது ஏன்?

எங்கோ பிறந்து வளர்ந்தவர்களெல்லாம், தேவகுமாரர்களாக வந்திறங்கிய போது அவர்களை ராஜகுமாரர்கள்  போல் ஆதரவு காட்டியதெல்லாம் கிராமத்து மக்கள், தங்களைத் தத்தெடுத்து ஆதரித்த அந்தக்கிராமத்தையும், அந்தக் கிராமத்து மக்களுடனான தங்களுக்கேற்பட்ட அனுபவங்களையும் எழுத்தில் கொண்டு வர இன்னுமொரு போராளிக்கேனும் மனம் வரவில்லை.

மசூதிப்படுகொலைகளும், சகோதரப் படுகொலைகளும் இன்னும் கூட வெட்டி ஒட்டி வைத்திருக்கும் செய்தித்தாள்களின் தலைப்புச் செய்திகளாகவே இருக்கின்றன. மேற்சொன்னவைகள் பற்றியெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக பல சிறுகதைகளிலும், சில நாவல்களிலும் சொல்லப்படடிருந்தாலும் கூட இன்று எவராலும் சொல்லப்படாத கூறாக இருப்பது கடந்த போராட்ட காலத்தில் சிறை சென்றவர்கள் பற்றிய பதிவே என்பது வேதனையான உண்மை.

இந்த முப்பது வருடத்துள்ளும் சிறை சென்று மீண்டவர்கள், சிறையில் மாண்டவர்கள், சிறையில் இருப்பவர்கள் அடங்கிய பட்டியல் லட்சத்தை தொட்டிருக்கும் ஒரு போராட்ட காலவரலாற்றில், பதியப்பட வேண்டிய முக்கிய கூறான இந்தச் சிறைவாசம் பற்றி எழுத அந்த லட்சத்தில் ஒருவரேனும் இல்லாமல் போனதேன் என்பது கேள்விக்குரியது . இரண்டு வருடங்கள் சிறைமுகாமில் அடைபட்டிருந்தவன் நான் என்ற எனது அனுபவத்தில் தமிழ் இளைஞர்கள் மலம் திணிக்கப்பட்டது, அவர்களை மனிதக்கழிவில் குளிக்கவைத்தது ஓரின வன் புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டது போன்ற மனித உரிமை மீறல்களை நேரில் கண்டறிந்தவன் நான். இந்த மனித உரிமை மீறல்கள் பற்றி ஒரு பதிவேனும் எந்த தமிழ் கைதியானவர்களிடமிருந்தும் இதுவரையிலும் பதியப்படாதது போரியல் வரலாற்றின் வெற்றிடமே.

மக்களுக்காக என்று சொல்லிக் கொண்டு, மக்களைக் கொண்டு நடாத்தி மக்களைப் பலிகொடுத்த போரியல் தந்த அனுபவங்களை எழுதும் போது அம் மக்களை மறந்து எழுதுவதென்பது அம் மக்களுக்கு நாம் செய்யும் இன்னொரு துரோகம்.

என்றாலும்கூட ஈழத்திலிருந்தும், புலத்திலிருந்தும் இன்றுவரை வந்த சிறுகதை ,நாவல்களின் எழுத்துக்களில் போரின் அடையாளங்கள்  தெரிகின்றதே என்கின்ற போதிலும் கூட அவையெல்லாம் பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலுமான முழுமையற்ற பதிவுகளாகவே வந்திருக்கின்றன.

பிரசவம் பற்றிய வலியையும், உணர்வையும், அனுபவத்தையும் சொல்ல ஒரு தாய் மட்டுமே தரமும் தகுதியும் பெற்றவள் என்பது போல, போராட்டத்தின் கொடூரத்தையும், இழப்புகளின் வலியையும் அதன் ரணத்தையும் சொல்ல போராட்டத்தில் பங்குபற்றியவனுக்கோ, அல்லது அக்காலத்தில் அங்கு வாழ்ந்தனுபவித்தவனுக்கோ மட்டும்தான் தகுதியுண்டு.

போராட்டம் தொடங்கும் முன்பே புலம் பெயர்ந்து விட்டு வெறுமனே கேள்வி பட்டதில் கதை புனைந்து அதை சாகாசமாக்க தமிழ் நாட்டை தளமாக்கிக் கொண்டிருக்கின்றார்கள் சில எழுத்தாளர்கள்.

முள்ளிவாய்க்கால் சம்பவம்  நம் கண்முன்னே நேற்று நடந்த யதார்த்த அனர்த்தம் அதைப்பற்றி, கர்ணன் எழுதினால் அது தர்மம் .முப்பது வருடமாய் புலம்பெயர்ந்த நான் முள்ளிவாய்க்கால் பற்றி கதைபுனைந்து அதை  பிரபல்யபடுத்துபவனாக இருந்தால் புணத்தோடு புணர்ந்த சிப்பாய்க்கும் எனக்கும் என்ன வித்தியாசம்?

ஷோபா சக்தியையும் கர்ணனையும், சயந்தனையும் நோக்கியே என்பார்வை செல்கிறது.

செங்கை ஆழியான், கணேச லிங்கம், எஸ்.போ, ஜீவா, பொ. கருணாகரமூர்த்தி, முத்துலிங்கம், தாமரைச் செல்வி, ஓட்டமாவடி அரபாத், றஞ்சகுமார், உமாவரதராஜன், இளைய அப்துல்லா, கவியுவன், திசேரா போன்றவர்களுடன் இன்னபிற எழுத்தாளர்களெல்லோருமே போரியல் வாழ்வு பற்றி எழுதியிருந்தாலும், பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும் பத்தோடு பதினொன்றகவே அவர்களின் படைப்புகளில் போரியல் சம்மந்தப்பட்டிருக்கின்றது.ஆனால் ஷோபா சக்தி,கர்ணன்,சயந்தன் தங்களின் படைப்புக்கள் அனைத்துலுமே போரியலை உள்ளடக்கியதென்ற வகையில் இம் மூவரும்  முக்கியத்துவம் பெருகின்றனர்.

கொரில்லா, ம் என்ற நாவல்களின் மூலமாக தனக்கென ஒரு வாசகர் கூடத்தை ஏற்படுத்திக் கொண்டவர் ஷோபா சக்தி. இவ்விரு நாவல்களையும் விட அவரின் சிறுகதைகளே சிறந்தது என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

ஷோபாவின் கதை மாந்தர்கள் அனைவரையுமே கேலிச் சித்திரங்கள் போல சித்தரிப்பது அவருக்கே உரிய பண்பு. அதாவது கதையில் வரும் மாந்தர் படித்தவரோ, பட்டிக்காட்டானோ, பதவியில் இருப்பவனோ, பெரும் தலைவனோ, தகப்பனோ தாயோ, யாராக இருந்தாலும் அவர்களை கார்ட்டூன் சித்திரம் போல விபரிப்பது எல்லோராலும் முடியாத அவருக்கு மட்டுமே உரிய ரசிக்கக் கூடிய தன்மை. அவரின் மொழியை வளப்படுத்த வழிவகுத்துக் கொடுத்தவர்களே அவரின் கதாமாந்தர்கள்தான்.

ஷோபாவின் முன்னைய சிறுகதைகளிலும், கொரில்லாவிலும் காணப்பட்ட எள்ளலும் ஏளனமும் கலந்த லாவகமான மொழிநடையும், நாவல் பிரதியாக்கத்தின் புதுமுயற்சி உத்தியும் கதை  சொன்ன பாணியும் சேர்ந்து ஷோபாவை சுற்றி ஒரு ஒளிவட்டத்தை ஏற்படுத்திட்டு. போர்க்கால தகவல்கள் பல நாவல் முளுவதும் பரவி, அப்போதைக்கு அவைகள் புதுத்தகவல்கள் என்ற பரபரப்பில் அந்த நாவல் போரியியல் நாவல் என்ற இடத்தைப் பிடித்ததை தவிர்க்க முடியாது போயிற்று. அதற்காக தன்னை முன்னிலைப்படுத்தி தன்னைத்தானே ஹீரோ என்பது போல் சித்தரித்து தனது அனுபவத்தில் பாதியையும் அறிந்த வற்றில் பாதியையும் கூட்டிக் குழைத்துப்படைத்த “ம்” க்கும் ம் ம் என்றும் கெட்டியது அதிகபட்சமன்றே நினைக்கிறேன்.

இந்த இடத்திலிருந்துதான் நாம் யோ. கர்ணனை உற்றுநோக்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகின்றோம்.

போராட்டத்தின் காலிறுதி, அரையிறுதி ஆட்டங்களிலிருந்து விலகி நாடு கடந்து வந்தவர்கள் நாங்கள் .ஆனால் யோ. கர்ணனோ முழுஆட்டத்தின் முடிவுவரை ஆடிமுடித்து அடிபட்ட புலியாக வெளிவந்தவர். அந்த அடிபட்ட வேதனையும் அனுபவக்காயம் ஏற்படுத்திய ரணங்களும் ஆத்திரமும் ஆவேசமும் ஆதங்கமும் அவரின் எழுத்தில் அப்பட்டமாகவே தெரிகின்றது.

நான் சிறியவன், இவைகள் எனது கண்ணி முயற்சி என்ற தயவு வேண்டுகின்ற பேச்சுக்குள் நில்லாமல் முதல் முயற்சியிலேயே தனது உத் வேகத்தை காட்டிய இவரின் எழுத்துக்களில் உள்ள உண்மைகளை ஜீரணிக்க முடியாதவர்கள் இவரை சந்தர்ப்பவாதி, காட்டிக் கொடுப்பவர், காசு வாங்குபவர், அரச முகவர், என்றெல்லாம் சொல்பவர்களை கண்டு கொள்ளாமல் விடுவதே கர்ணனுக்கு நல்லது.

ஷோபா சக்தியிடமிருக்கும் எள்ளலும் ஏளனமுமான கதை சொல்லும் மொழிநடை கர்ணனுக்கும் வாய்த்திருக்கின்றதென்பது உண்மை. அதற்காக ஷோபாசக்தியின் நகல் என்று கர்ணனை வர்ணப்பதை அனுமதிப்பது கர்ணனுக்கும் ஆரோக்கியமல்ல ஷோபாவுக்கும் அழகல்ல. அதாவது கர்ணனை ஷோபாசக்தியின் நகல் எனும் போது கர்ணன் தனக்கென ஒரு தனி அடையாளத்தை பெரும் வாய்ப்பை இழப்பதுடன் ஷோபாசக்தியும் முன்னாள் எழுத்தாளர் என்ற இடத்திற்கு தள்ளப்படும் அபாயத்தை எதிர் கொள்ள வேண்டிவரும் .

முப்பது வருடப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிந்ததென்னவோ உண்மைதான். அதற்காக முள்ளிவாய்க்கால் ஒன்றே முப்பது வருட போராட்டமென்பது போல் கர்ணன் அதற்குள்ளயே நின்று கதை சொல்கிறார். முள்ளிவாய்க்காலின் ஊற்றுக்காலிருந்து அள்ளியிரைத்துக் கொண்டிருக்கும் கர்ணன் அந்த வாய்க்கால் வற்றிய பின்பு, அழகியல், மனித மன உணர்வுகள், சமூக உறவுகள் பற்றியெல்லாம் கதைசொல்வாரா என்ற கேள்வியின் பின்னால் கர்ணன் நிற்கின்றார்.

கர்ணன் கதைகளின் ஊடாக புனிதங்களை/வழிபாடுகளை கட்டுடைப்பு செய்கின்றார் என்ற கருத்து அவருக்கு மூன்று தரப்பு வாசகர்களை சேர்த்திருக்கின்றது.

ஓன்று :-   புனிதங்களல்ல என்று எங்களுக்கு தெரிந்தவைகளை கர்ணன் புனிதங்களல்ல என்று சொல்வதில் என்ன ஆச்சரியம் இருக்கின்றதென்ற போராட்டகால  வாழ் அனுபவ வாசகர்கள்.

இரண்டு :-  ஆ…!  அப்படியாயின் அவைகள் புனிதங்களே இல்லையா? இவ்வளவு காலமும் ஏமாந்தோமா? என்று வாய்பிளக்கும் அப்பாவி ஆச்சரிய வாசகர்கள்..

மூன்று :-  புனிதங்கள் இல்லை என்று தெரிந்தும் புனிதம் என்று சொல்லி மக்களை ஏமாற்றி போராட்டம் என்ற பெயரில் அரசியல் வியாபாரம் செய்தவர்களின் ஆவேசப்பார்வை . எழுதஆரம்பித்த குறுகிய காலத்துக்குள்ளேயே அதிகப்படியான வாசகர்களின் பார்வைக்குள்ளான முதல் இளம் எழுத்தாளர் என்று கர்ணனை சொல்லலாம்.

இந்த நேரத்தில்தால் ஆறாவடுவோடு வரும் சயந்தனும் நம் கவனத்திற்குள்ளாகின்றார். நடுக்கடலில் படகில் தன்கதையை நகர்த்திச் செல்லும் சயந்தன் கரையோரக் கிளைக்கதை துடுப்புக்களால் அப்படகை கரை சேர்க்கின்றார். இது வரையிலும் பெரிதாக கூறப்படாத போராட்ட காலத்து வடபுலத்து தைரியமிக்க, துணிச்சலான பெண்களை ஆறாவடுவில் சயந்தன் உலாவ விட்டிருப்பது என்னைக் கவர்ந்த விசயங்களில் ஒன்று .கதை சொல்லும் பாணியாலும், புதிய உத்திகளாலும் சயந்தன் வெற்றி பெற்றிருக்கின்றார் என்றாலும், அந்தப் பிரதியின் வாசிப்பு சயந்தனிடம் சில சிக்கலான குழப்ப நிலை உள்ளதென்பதை உணர்த்துவதை மறுக்கமுடியாது.

சயந்தனிடம் கதை இருக்கின்றது ….

அதை சொல்லவும் நினைக்கின்றார்.

சொல்ல முடிந்தும் சொல்லத்தயங்குகின்றார்.

ஈழத்து இலக்கிய வெளியில் பரந்து விரிந்து ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடிய ஆறாவடுவை …. சயந்தனுக்கு மட்டுமே தெரிந்த சில காரணங்களால், பூசி மெழுகிய எழுத்துச் சுருக்கத்தால், அந்நாவல் தொடவேண்டிய எல்லையை தொடமறுத்து நிற்கின்றது.

சொல்ல வேண்டிய நியாயங்களை சொல்வதில் காட்டிய தயக்கம் சொல்லவேண்டிய, சொல்லக்கூடிய மொழியில் புனிதம் காத்தது – புலி சார்ந்த கருத்தில் கூடுதலாக தலைசாய்த்தது போன்ற சின்னச்சின்ன குறைபாடுகளால் சிற்சில இடங்களில் ஆறாவடு ஓசியில் ஒரு பேப்பர் வாசித்த உணர்வைக்கூட ஏற்படுத்திற்று.

மொத்தத்தில் இந்த மூவரின் படைப்புகளில் இருந்து இவர்களை உற்று நோக்கும்போது,இவர்களின் கதைமாந்தர்கள் ஒரே நேர்கோட்டிலே நிற்கிறார்கள்.நாற்றுமேடையிலிருந்து தெரிந்து பிடுங்கிய ஒருபுடி பயிர்க்கற்றை போல எழுதப்பட்ட பாத்திரங்கள் ஒரு முகத்தோடு தெரிகிறார்கள்.ஆனால் ஈழக்கொடும்போர் ஏற்படுத்திய தாக்கமும் அழிவும் தழும்பும் பலப்பல முகங்களுடயவை.

சகோதரப்படுகொலைகள்

மஸூதிப்படுகொலைகள்

காட்டிக்கொடுப்பு

இனமுரண்பாடுகள்,இனமோதல்

பெண்களின் அவலம்

ஏழைகளின்பாடு

பாரம்பரிய நிலக்குறியீடுகளின் அழிவு

அகதிவாழ்வு

இவை அனைத்தும் ஈழப்போரின் பெயரில் நாம் பெற்றவைகள்.இவைகள் குறிப்பிட்ட ஒரு இடத்தில்,ஒரு பிரேதேசத்தில் மட்டும் நடந்தவையல்ல.ஆனால் யாழ்பாணத்திற்கு வெளியே இவைகள் நடக்கவில்லை என்பதான தோற்றப்பாடு ஏற்படுத்தப்படுகிறது.இதற்கு காரணம் நமது இலக்கியத்தில் ஆதிக்கம் செய்கின்ற மேலாதிக்கமே.இதை நான் சொல்லவில்லை,தெரிந்தவர்களுக்கு தெரிந்ததுதான்.

௦௦௦௦

 

 

 

 

 

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment