Home » இதழ் 08 » *பயணியின் பார்வையில் — 01—முருகபூபதி

 

*பயணியின் பார்வையில் — 01—முருகபூபதி

 

எனது சில சிறுகதைகளையாவது சிங்களத்தில் மொழிபெயர்த்து வெளியிடவேண்டும் என்று நீண்ட நாட்களாக எனது நீண்டகால நண்பர் திக்குவல்லை கமால் சொல்லிக்கொண்டிருந்தார். நாம் கடந்த 2011 அம் ஆண்டு தொடக்கத்தில் கொழும்பில் நடத்திய முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் இடம்பெற்ற மொழிபெயர்ப்பு அரங்கை ஒழுங்குசெய்தவரும் கமால்தான்.

இந்த ஆண்டு (2012) இறுதியில் நான் தாயகம் வருவதற்கு சில மாதங்களுக்கு முன்பே சில கதைகளை தேர்வுசெய்து பிரதிகளை அவருக்கு அனுப்பியிருந்தேன்.
“ பூபதி நீங்கள் வரும்போது உங்கள் கதைகள் மொழிபெயர்க்கப்பட்டு அச்சுக்கு தயாராகியிருக்கும்” என்று தொலைபேசி ஊடாகவும் அவர் சொல்லியிருந்தார்.
நானும் வந்துசேர்ந்தேன். திக்குவல்லை கமாலை கொழும்பில் கொடகே பதிப்பக பணிமனையில் சந்தித்தேன். எனது நூல் ஆனமடுவ என்ற பிரதேசத்தில் தயாராவதாக அவர் சொன்னபோது எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது.

எங்கள் ஊர் நீர்கொழும்புக்கு அப்பால் யாழ்ப்பாணம் செல்லும் சிலாபம் வீதியால் சென்று ஆனமடுவ என்ற ஊருக்குச்செல்லவேண்டும்.

ஒருநாள் இரவு கமால் தொலைபேசியில் தொடர்புகொண்டு எனது நூலை பதிப்பிக்கும் ஆனமடுவ தோதன்ன பதிப்பாளரின் பெயரையும் தொலைபேசி இலக்கத்தையும் தந்து இயலுமானால் சந்திக்குமாறும் சொன்னார். அப்பொழுது இரவு 9 மணியிருக்கும். எனக்கு அந்தநேரம் நித்திராதேவி என்னை அரவணைக்கும் அவுஸ்திரேலியா நேரம்.
இலங்கைவரும்பொழுதெல்லாம் இந்த நித்திராதேவி என்னுடைய அன்றாட வாழ்வை குழப்பிக்கொண்டுதான் இருப்பாள். காரணம் சுமார் ஐந்தரை மணிநேர வித்தியாசம்.

நான் நீர்கொழும்பில் தங்கியிருக்கும் அக்கா, தங்கை, தம்பி வீடுகளில் அதிகாலை மூன்று மணிக்கே துயில் எழுந்துவிடுவேன்.
இந்த பயணியின் பார்வையை நான் எழுதும்போது இலங்கையில் அதிகாலை 4.45 மணி. அப்பொழுது அவுஸ்திரேலியாவில் காலை 10.15 மணி. அவுஸ்திரேலியாவில் காலை 5 மணிக்கே எழுந்துவிடுபவனுக்கு தாயகம் வந்தால் அதிகாலையிலேயே… அதாவது 3 மணிக்கே விழிப்பு வந்துவிடும். இந்தத் துன்பம் எனக்கு மட்டுமல்ல என்னைப்போன்று தமது உறவுகளை நட்புகளை சந்திக்கவரும் புலம்பெயர்ந்த அனைவருக்கும் பொதுவானதுதான்.
இலங்கையில் நீர்கொழும்பில் எனது உடன்பிறப்புகளின் வீட்டில் அதிகாலை எழுந்து நான் நடத்தும் அட்டகாசங்களை சகித்துக்கொண்டிருக்கும் எனது இரத்த உறவுகளுக்கு காலம்பூராவும் நன்றிசொல்லக்கடமைப்பட்டவன்.
மின்விளக்குகளைப்போட்டுக்கொண்டு சமையலறையில் எது கோப்பி போத்தல் எது சரக்குத்தூள் போத்தல் (நெஸ்கபே என்ற அழகிய காகிதம் ஒட்டப்பட்ட கோப்பி போத்தலில் சரக்குத்தூளை வைத்திருந்தால் நான் என்னதான் செய்வது?) என்று தெரியாமல் சமையலறையில் நான் தடுமாறும் சத்தம்கேட்டு யாராவது எழுந்துவந்து, எனக்கு கோப்பியோ, தேநீரோ தயாரித்து தருவார்கள். அதனால் அவர்களின் ஆழ்ந்த தூக்கம் களைந்துவிடும். இந்த சங்கடங்களை அவர்களுக்குத்தராமல், முதல்நாள் இரவே எது எது எங்கே இருக்கிறது என்பதை சமையலறையில் பார்த்து வைத்துவிடும் பழக்கத்தை தற்போது வழக்கமாக்கிக்கொண்டேன்.

நான் அறிந்தவரையில் இந்த உலகத்தில் இரண்டுபேர் கொடுத்துவைத்தவர்கள். ஒருவர் மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவா. மற்றவர் எனது மனைவி மாலதி. இருவருமே படுத்தவுடன் கண்ணயர்ந்து உறங்கிவிடுபவர்கள். எந்தக்கவலையும் அற்ற உறக்கம் அவர்களுக்கு வந்துவிடும். இந்தப்பாக்கியம் உள்ள பலரை வாசகர்களாகிய உங்களுக்கும் தெரிந்திருக்கலாம்.
ஆனால் நானோ ஒரு ஊசிவிழுந்த சத்தம்கேட்டாலும் எழுந்துவிடும் அபாக்கியசாலி.

சரி இனி விடயத்துக்கு வருகின்றேன்.
கமால் குறிப்பிட்ட ஆனமடுவ என்னுமிடத்திலிருக்கும் பதிப்பாளர் தனது பெயரில் எங்கள் அவுஸ்திரேலியாவில் அயல் மாநில தலைநகரின் பெயரையும் தன்னுடன் இணைத்துக்கொண்டவர்.
சிட்னி மார்க்கஸ் டயஸ்.
அவருடன் தொடர்புகொண்டு மறுநாள் 19 ஆம் திகதி புதன்கிழமை முற்பகல் வருவதாகச்சொன்னேன். மாலையில் எனக்கு மினுவாங்கொடை என்ற பிரதேசத்தில் என்னிடம் ஒரு காலத்தில் தமிழ்கற்ற பௌத்தபிக்குகள் மற்றம் சிங்கள சகோதர சகோதரிகளை சந்திக்கும் நிகழ்ச்சி நிரல் இருந்தது.

18 ஆம் திகதி இரவு கமால் தகவல்தரும்பொழுது எங்கள் ஊரில் அடைமழை. மின்னல் வெட்டியபோதும் ஒருவாறு தொலைக்காட்சியில் ஏனையபிரதேச வெள்ள அனர்த்தங்களை பார்த்துக்கொண்டேன்.
திட்டமிட்டவாறு நான் ஆனமடுவவுக்கு புறப்பட்டபோது, “ இந்த மழைக்குள்ள எங்கே போய் அலையப்போகிறாய்” என்று அக்கா  நடுநடுக்கத்துடன் சத்தம்போட்டார். அக்காவுக்கு குளிர்காய்ச்சல்.
தங்கையோ, “ஆனமடுவ சிங்களப்பிரதேசம். ஏன் இப்படி தனியே புறப்படுகிறீர்கள்?” என்று கவலைப்பட்டாள்.
மனைவியோ எந்தக்கவலையும் இன்றி ஆழ்ந்த நித்திரை. மனைவியை தட்டி எழுப்பி என்னைப்பற்றி குறைசொன்னாள் தங்கை.
“அந்த மனுஷன் சென்னாக்கேட்காது. எங்கேயாவது போகட்டும்” எனச்சொல்லிவிட்டு மறுபுறம் திரும்பி படுத்துவிட்டாள் மனைவி.

என்னைக்கட்டிய புதிதில் அத்தான் என்றாள். சிறிதுகாலத்தில் அப்பா என்றாள். தற்காலத்தில் மனுஷன் என்கிறாள்.
எல்லா தமிழ் வீட்டிலும் இதுதானே. அதனால் கவலையில்லை.
தங்கை எனது பாசமலர். அவளுக்கு ஆறுதல்சொல்லிப்புறப்படும்போது, “ ஏர்ணஸ்ட் சேகுவேரா செல்லியிருக்கிறார் “தனது காலடி பதியும் இடமெல்லாம் தனக்குச்சொந்தம்.” என்று சென்னேன்.
“புரியவில்லை” என்றாள் தங்கை.
“யாதும் ஊரே…யாவரும் கேளீர்..” அதனைத்தான்  ஏர்ணஸ்ட் சேகுவேரா சொன்னார் என்றேன்.
“ அது யார் அண்ணா ?” என்று கேட்டாள் எனது அப்பாவித்தங்கை.
“திரும்பிவந்து சொல்கிறேன்” எனச்சொல்லிவிட்டு புறப்பட்டேன்.
ஆனைமடுவ
ஆனையிரவு என்ற பெயர் எப்படி வந்தது? யானைகள் இரவில் வந்த இடம் என்பதனாலா?
ஆனையிரவை சிங்களத்தில் அலிமங்கட என்பார்கள். ஆங்கிலத்தில் Eliphant Pass.
தமிழின விடுதலைப்போராட்டத்தில் கேந்திரமுக்கியத்துவம் மிக்க பிரதேசம். ஆயிரக்கணக்கானோரை காவுகொண்டு தற்போது காட்சிப்பிரதேசமாகியுள்ளது.
ஆனைமடுவவிலும் யானைகள் வாழ்ந்தமையால் அந்தப்பெயர் வந்திருக்கலாம் ஒரு காலத்தில் காட்டுப்பிரதேசம். சின்னவயதில் என்னை அப்பா இங்கு அழைத்துச்சொன்றிருக்கிறார். அப்பொழுது அப்பா ஒரு கம்பனியின் விற்பனைப்பிரதிநிதி. விடுமுறை காலத்தில் கம்பனி வாகனத்தில் அந்தப்பிரதேசம் மட்டுமல்ல இலங்கையையே சுற்றிக்காண்பித்திருக்கிறார்.

எனக்கு ஆனைமடுவ நல்ல பரிச்சியமான ஊர். எனது இனிய தோழர் ஒருவர் ஒரு காலத்தில் இந்தத்தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அவருடன் போட்டியிட்ட மற்றவர் சிங்கள கலை இலக்கிய ரசிகர் மத்தியில் பிரபலமானவர். அவர்தான் ஆயிரக்கணக்கான மேடையேற்றங்களைக்கண்ட ‘சுப சக யச’ என்ற அரசியல் நையாண்டி நாடகத்தின் நடிகர், இயக்குநர் சைமன்நவகத்தேகம.  அவர் ஒரு செயின்ஸ்மோக்கர்.
ஒரு சிகரட்டை பற்றவைத்து அது அணையும் தருவாயில் அதன் நெருப்பில் மற்றுமொரு சிகரட்டை பற்றவைத்துக்கொள்பவர். பல வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் சீனதூதரகத்திற்கு அருகிலிருந்த கலாசார திணைக்களத்தில் செயலாளராக பணியாற்றிய எனது இனிய நண்பர் கே.ஜி. அமரதாஸவை சந்திக்கச்சென்றபோது சைமன்நவகத்தேகமவுடன் உரையாடியிருக்கிறேன். அமரதாஸ பற்றி எனது நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் நூலில் பதிவுசெய்துள்ளேன்.

1985 காலப்பகுதியில் ஆனமடுவ தொகுதி எம்.பி.யாகவிருந்த சத்தாதிஸ்ஸ வடிகமங்காவ எம்முடன் மாஸ்கோவில் நடந்த சர்வதேச இளைஞர் மாணவர் விழாவுக்கு வந்திருந்தார். ஸ்மைலோவா ஹோட்டலில் தங்கியிருந்தபோது உரையாடியிருக்கின்றேன்.
இவர்களை நினைத்துப்பார்த்தவாறே நீர்கொழும்பு பஸ் நிலையம் சென்று ஆனைமடுவவுக்கு பஸ்ஸை விசாரித்தேன். நான் விசாரித்த அலுவலர்கள் நல்ல புத்திசாலிகள்(?)
ஆனைமடுவ பிரதேசமும் வெள்ளத்தில் மூழ்கிய தகவலை எனக்குச்சொல்லவில்லை. சிலாபம் பஸ்ஸில் சென்று அங்கிறங்கி ஆனைமடுவ பஸ்ஸில் செல்லுமாறு சொன்னார்கள்.
நானும் ஒரு சிலாபம் பஸ்ஸில் ஏறினேன். அந்த பஸ்ஸின் நடத்துனர் அதிபுத்திசாலி(?)
சுமார் முன்று கிலோ மீற்றர் தூரம் பஸ் நகர்ந்துகொண்டிருக்கும்போது என்னிடம் கட்டணம் வசூலிக்க அருகில் வந்தபோது சொல்கிறார்:-“ மாத்தையா…மகாவௌவுக்கு அப்பால் பஸ் செல்லாது… அங்கே குளங்கள்… ஆறுகள் பெருக்கெடுத்து வெள்ளம்.”
இந்தத்தகவலை இந்தப்புத்திசாலிகள் பயணிகள் பஸ்ஸில் ஏறுவதற்கு முன்பே சொல்லியிருந்தால் சிலாபம் செல்லவிருந்த பயணிகள் சிரமப்பட்டிருக்கமாட்டார்கள்.
வெளியே வெய்யில் காய்ந்துகொண்டிருக்கிறது. எப்படியும் இன்று வெள்ளம் வடிந்துவிடும் என்று எனக்கு நம்பிக்கை. இல்லை நப்பாசை.
இந்த உலகத்திலேயே நாம் எதிர்த்துப்போராட முடியாத சக்தி இயற்கைதான் என்ற உண்மையை சுனாமி கடற்கோள் காலத்தில் அறிந்திருக்கின்றேன்.
மகாவௌ வரையிலுமாவது சென்று வெள்ளத்தை தரிசித்து திரும்புவோம் என்ற தீர்மானத்துக்கு வந்து நடத்துனர் கேட்ட கட்டணம் 48 ரூபாவை கொடுத்தேன். நல்ல நடத்துனர் மிகுதிச்சில்லறை தந்தார்.
பெரியமுல்லை, கட்டுவை, கடந்து கொச்சிக்கடை வந்தது. தமிழர்கள் பலர் கடைகளை நடத்திய இடம் கொச்சிக்கடை. எங்கள் ஊர் பிள்ளையார் கோயிலில் வருடாந்த உற்சவம் நடக்கும்போது ஏழாம் திருவிழாவின் உபயகாரர்கள்  கொச்சிக்கடை மற்றும் அதற்கு சமீபமான ஊர் தங்கொட்டுவை ஆகிய இடங்களில் வியாபாரம் செய்த காரைநகர் வாசிகள். அவர்களின் உபயத்தினால் நாம் அந்த நாட்களில் திருவிழாக்காலங்களில் தவில் வித்துவான்கள் நாச்சிமார்கோயிலடி கணேசன், இணுவில் சின்னராசா, பஞ்சமூர்த்தி- கானமூர்த்தி சகோதரர்களையெல்லாம் பார்த்தோம். சின்னமேளக்காரிகளின் அழகில் சொக்கியவர்களும் அப்பொழுது எங்கள் ஊரில் இருந்தார்கள்.

இந்தப்பிரதேசத்தில் தமிழ் டொக்டர்மாரும் கிளினிக்குகள் நடத்தியிருக்கிறார்கள்.
இச்சந்தர்ப்பத்தில் மற்றுமொரு சுவாரஸ்யமான தகவலையும் சொல்லிவிடுகின்றேன்.
அவுஸ்திரேலியாவில் இருக்கும் எனது மூத்த மகள் பாரதிக்கு இந்தப்பிரதேசத்திலிருந்து ஒரு வரன் தொலைபேசி ஊடாக வந்தது. மணமகன் ஒரு கணக்காளர். அவரைப்பெற்றவர்களுக்கு அவுஸ்திரேலியாவில் நிரந்தரவதிவிடவுரிமையுள்ள பெண் தேவைப்பட்டிருக்கிறது. நாங்கள் நீர்கொழும்பு என்பதனால் எனது மகளை ஒருபெண்மணி அந்த கணக்காளர் வீட்டாருக்கு சிபாரிசு செய்துவிட்டு எனது தொலைபேசி இலக்கம் கொடுத்துள்ளார். சில நாட்கள் தொலைபேசி ஊடாக பேசிவிட்டு, தொடர்பை நிறுத்திவிட்டார்கள்.
ஒருநாள் அந்தப்பெண்ணுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, “என்ன முடிவு?” எனக்கேட்டேன்.
“ அவர்கள் டொக்டர் பெண் கேட்கிறார்கள். உங்கள் மகள் I.T செய்திருக்கிறாள்” என்றார்.
இந்த முடிவை எனது மகளிடம் சொன்னேன். அதற்கு  “ அப்பா அந்த மாப்பிள்ளைக்கு ஏதும் சுகவீனமா?” என்று கேட்டாள் 21 ஆம் நூற்றாண்டில் வசிக்கும் எனது மகள்.

இனி நான் கடக்கும் கொச்சிக்கடைக்கு வருவோம்.
கடைகள் பல செறிந்துள்ள அந்த ஊரில் ஒரு மைதானம். மழையினால் செம்மண் சேறாகியிருந்தது. சில ஆட்டோக்கள் தரித்து நின்றன.
1977 இல்  தேர்தல்நடந்த காலத்தில் அந்த மைதானத்தில் இடதுசாரி ஐக்கிய முன்னணியை அதரித்து நடந்த பிரசாரக்கூட்டத்தில் கலாநிதி கொல்வின் ஆர். டீ. சில்வா தலைமையில் நானும் பேசியிருக்கிறேன்.
பஸ் நடத்துனரை அதிபுத்திசாலி என்றேன்.
கொல்வினை அதிமேதை என்று சொல்லலாம். அவர் சட்டமேதை. 1972 இல் சிறிமா அம்மையார் ஜனநாயக சோஷலிஸ குடியரசாக எங்கள் தேசத்தை பிரகடனப்படுத்தியபோது அரசியல் யாப்பை வரைந்த மேதை. தமிழ் மக்களை இரண்டாந்தரப்பிரஜைகளாக்கி இந்த நாட்டில் இரத்த ஆறு ஓடுவதற்கும் இலட்சக்கணக்கானோர் நாட்டை விட்டு ஓடுவதற்கும் அதிதீர்க்கதரிசனமாக அரசியல் யாப்பை தயாரித்த மேதை. அவர் விட்ட குறையை அவரைப்போன்று சட்டம் படித்த ஒரு பரீஸ்டர் மிஸ்டர் தர்மிஸ்டர் ஜே.ஆர். ஜயவர்த்தனா நிறைவேற்று அதிகாரம் கொண்ட தலைமையாக முடித்துவைத்தார்.
தேசம் மேதைகளின் மேதமையை அறுவடை செய்கிறது.

கொச்சிக்கடையை கடந்தால் வருகிறது வாய்க்கால் என்ற ஊர். செங்கல் சூளைகளும் ஓட்டுத்தொழிற்சாலைகளும் இங்கு அதிகம். வீடுகள் கட்டிடங்கள் கட்டுவதற்கான மூலப்பொருட்களை உற்பத்தி செய்யும் பிரதேசம். கொச்சிக்கடை, வாய்க்கால்… கவனியுங்கள். இவை தமிழ்ப்பெயர்கள்.

வென்னப்புவை வருகிறது. அப்பா நடக்கமுடியாமல் சிரமப்பட்ட காலத்தில் இந்தஊருக்கு வந்துதான் ஒரு சிங்கள ஆயுர்வேத வைத்தியரின் வீட்டில் தங்கியிருந்து அப்பாவை பராமரித்தேன். அப்பா சில நாட்களில் குணமடைந்தார். இங்கிருந்த ஒரு தியேட்டரில் வீட்டுக்குத்தெரியாமல் நண்பர்களுடன் சிவாஜி-பத்மினி-கே.ஆர். விஜயா நடித்த இருவர் உள்ளம் படம் மெட்னிஷோ பார்த்தேன். அந்த தியேட்டர் இப்போது அங்கில்லை. மறைந்துவிட்டது. இருந்த சுவடும் தெரியவில்லை.

வென்னப்புவைக்கு அடுத்துவருகிறது மாறவிலை என்ற ஊர்.
இந்த ஊரில் ஒரு காலத்தில் பொருட்களின் விலைகள் மாறாதிருந்திருக்கவேண்டும். அதனால் மாறாதவிலையில் பொருட்களை வாங்கமுடிந்த பிரதேசம் காலப்போக்கில் மருவி மாறவிலை என்ற சிங்களப்பெயராக மாறியிருக்கலாம் என்று எனக்கொரு கற்பனை.
கேட்டுத்தெரிந்துகொள்வதற்கு மூத்தமுதியவர்கள் எங்கள் ஊரில் இல்லை. இறைவன் அவர்களை தன்னிடம் அழைத்துக்கொண்டார்.

நடத்துனர் குறிப்பிட்ட மகாவௌ என்ற ஊர் நெருங்குகிறது. மக்கள் வீதியில் நிற்கிறார்கள். வாகனங்கள் பல வீதியோரங்களில் தரித்து நிற்கின்றன. அப்பொழுது எனது கைத்தொலைபேசி பாடுகிறது.
மறுமுனையில் தோதன்ன பதிப்பகத்திலிருந்து சிட்னி மார்க்கஸ் டயஸ்.
“ஆனைமடுவவுக்கான போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டிருக்கிறது.” எனச்சொல்லிவிட்டு தொடர்ந்து கலை, இலக்கியம் பேசுகிறார்.
“ஆனமடுவவையும் உங்களையும் இந்தத்தடவை பார்க்கமுடியாதுபோனாலும் எழுதுவதற்கு விடயம் கிடைத்திருக்கிறது. வெள்ளத்தினால் மக்கள் படும் அவலம் தெரிகிறது.” எனச்சொல்லிவிட்டு, நீர்ப்பாசனம் செய்வதற்கு இடம் தேடினேன்.
நான் ஒரு இனிமையான மனிதன். நான் இறந்தால் தகனம் செய்யவோ புதைக்கவோ வேண்டாம். ஒரு சீனித்தொழிற்சாலைக்கு உடலைக்கொடுங்கள் என்று குடும்பத்திடம் சொல்லியிருக்கின்றேன்.”
பயணங்களில் இந்த நீர்ப்பாசன சேவையிலும் ஈடுபடுவேன்.
ஏற்கனவே வெள்ளப்பெருக்கு. மேட்டு நிலம் ஒன்றில் நீர்மட்டத்தை சற்று உயர்த்திவிட்டு ஒரு தேநீர்கடையினுள் நுழைந்து தேநீர் அருந்தினேன். 35 ரூபா அதற்கு கொடுத்தேன்.

தெருவுக்கு வந்து நீர்கொழும்பிலிருந்து மகாவௌ வரையில் வந்து திரும்பும் ஒரு பஸ்ஸில் ஏறி “ போன மச்சான் திரும்பி வந்தார் பூ மணத்தோட…” என மனதுக்குள் பாடியவாறு மீண்டும் 48 ரூபாவை அந்த பஸ்ஸின் நடத்துனரிடம் நீட்டினேன்.
இனி கணக்குப்பார்ப்போம் பஸ்கட்டணம் + தேநீர்…131 ரூபா. அவுஸ்திரேலியா நாணயத்தில் ஒரு டொலருக்கும் குறைவு. வாழ்க நாணயப்பெறுமதி. வாழ்க பணவீக்கம்.

நீர்கொழும்பில் இறங்கி மினுவாங்கொடை உடுகம்பொலையில் கொரஸ கிராமத்தில் ஒருகாலத்தில் என்னிடம் தமிழ்கற்றவர்களை பார்ப்பதற்காக கம்பஹா செல்லும் பஸ்ஸில் ஏறினேன்.
வயல்களும் தென்னஞ்சோலைகளும் பலா, கமுகு, கித்துல் மரங்களும் நிறைந்த பசுமையான கிராமம் கொரஸவில் நான் இறங்கும்பொழுது,  எனது முகத்தை மழைத்தூரல் முத்தமிட்டது.
(பயணங்கள்  தொடரும்)

 

16 Comments

  1. /“ அவர்கள் டொக்டர் பெண் கேட்கிறார்கள். உங்கள் மகள் I.T செய்திருக்கிறாள்” என்றார்.
    இந்த முடிவை எனது மகளிடம் சொன்னேன். அதற்கு “ அப்பா அந்த மாப்பிள்ளைக்கு ஏதும் சுகவீனமா?” என்று கேட்டாள்/

    சிரிப்பை வரவைத்த வரிகள், மொத்தத்தில் காலத்தின் தேவை உணர்ந்த பத்தி.

Post a Comment