Home » இதழ் 01 » கர்ணனை வாசித்தல்.

 

கர்ணனை வாசித்தல்.

 

நிலாந்தன்

நந்திக்கடல் வீழ்ச்சிக்குப் பின் வன்னியால் வந்தவர்கள் மத்தியில் அதிகம் சர்ச்சைக்குள்ளானவர்களில் ஒருவர் யோ. கர்ணன்.  வன்னியால் வந்தவர்கள் 3 வகைப்படுவர்.

1. தப்பிவந்தவர்கள்

2. சரணடைந்தவர்கள்

3. கைதுசெய்யப்பட்டவர்கள்

என்ற இந்த மூன்றையும் இன்னும் சுருக்கிக் கூறின் கைதிகளும் அகதிகளும் எனலாம்.  இவ்விதம் கைது செய்யப்பட்டவர்கள் பலர்; சர்ச்சைக்குள்ளாயினர்.  அங்கே நிற்கிறார்கள்.  இங்கே நிற்கிறார்கள்.  ‘ஏயார்போட்டில் ;நிற்கிறார்கள் என்றெல்லாம் கூறப்படுகிறது.  ஆனால் அவர்களில் எவருமே திரும்பி வரவில்லை.

கர்ணன் ஒரு திரும்பிவந்தவர்.  அதாவது கைதுசெய்யப்பட்டு அல்லது சரணடைந்து புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தில் மீள இணைக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒருவர்.  திரும்பிவந்தவர்களில் அதிகம் பிரபலமடைந்தவரும் அவரே.  அதிகம் சர்ச்சைக்குள்ளானவரும் அவரே.  எனவே,  ஒரு கலை இலக்கிய ஆளுமையாக ஈழத்துப் போரிலக்கியப் பரப்பில் அவருடைய ஸ்தானம் எது என்பதைக் குறித்தும் யுத்த சாட்சியத்தைப் பொறுத்தவரை அவருடைய ஸ்தானம் எந்தகையது என்பது குறித்தும் நானிங்கு பேச விளைகிறேன்.  அதாவது, கர்ணனை விளங்கிக் கொள்ளல்.

மகாபாரதத்தில் வரும் கர்ணன் அங்கீகாரத்திற்கும் அங்கீகாரமின்மைக்குமிடையே தத்தளிக்கும் ஒரு பாத்திரம். மரணநேரத்திற்தான் அவருக்கு விஸ்வரூப தர்சனமும் கிடைத்தது.  அங்கீகாரமும் கிடைத்தது.  திரு. பிரபாகரனுக்கு மிகப்பிடித்த ஒரு புராணபாத்திரம் கர்ணன்.  நமது யோ.கர்ணனும் அங்கீகாரத்துக்கும் நிராகரிப்புக்கும் இடையே நிற்கிறார்.  எனவே அவரை விளங்கிக்கொள்வது என்பது அதன் மிக ஆழமான அர்த்தத்தில் அதாவது கலை இலக்கிய அரசியல் மற்றும் உளவியல் அர்த்தங்களில் செய்யப்படவேண்டும்.

கர்ணணை இரண்டு தளங்களில் விளங்கிக்கொள்ள வேண்டும்.  ஒன்று ஒரு கதை சொல்லியாக அவர் யாராக இருக்கிறார் என்பது.  அதாவது அவர் எத்தகைய ஒரு கதைசொல்லி என்பது.  இரண்டு, அவர் கதை சொன்ன காலகட்டம் எதுவென்பது.  இதை இன்னும் தெளிவாகச் சொன்னால் அவர் கதைசொன்ன காலகட்டத்தின் உளவியல் எத்தகையது என்பதும், அந்த உளவியல், அவர்சொன்ன கதைகளை எவ்விதம் எதிர்கொண்டது என்பது பற்றியதும்.  மேற்சொன்ன இரண்டு தளங்களினூடாகவும் நாம் கர்ணனை விளங்கிக்கொள்ள முயற்சிப்போம்.

முதலாவதாக கர்ணன், எத்தகைய ஒரு கதைசொல்லி என்பது. எள்ளல்தான்  அவருடைய பிரதான பலம்.  எள்ளல்தான் அவருக்குப் பகைவர்களையும் பெற்றுக்கொடுக்கிறது.  எள்ளலைக் கழித்துப் பார்த்தால் கர்ணன் என்ற கதை சொல்லியின் படம் மங்கலாகவே கிடைக்கும்.ஈழத்துப் போரிலக்கியப்;பரப்பில் எள்ளலுக்கென்று ஒரு செழிப்பான பாரம்பரியம் இல்லை.  எல்லாமே, ‘சீரியஸ்’ தான்.  ஒரு சிறிய இனம், தனது வலிமைக்கு மீறி, பெரும் செயல்களைச் செய்யமுற்பட்டதால் ஈழத்துப்போர்ப்பரப்பில்; எல்லாமும் சிரியஸ் ஆகிவிட்டது.  அங்கே அழுவதற்கும் நேரமிருக்கவில்லை.  சிரிப்பதற்கும் நேரமிருக்கவில்லை.  இது காரணமாகவும் ஒற்றைப்பரிமாண அரசியல் காரணமாகவும் ஈழப்போர், ஒரு செழிப்பான காட்டூன் பாரம்பரியத்தை உருவாக்கத்தவறிவிட்டது.  எமது சிறுபராயப்பாடப்புத்தகங்களில் ‘சிரிக்கத்தெரிந்த பாரசீகரைப் பற்றிப் படித்திருக்கிறோம்.  ஆனால் எங்களுடைய சிரிப்பு நரம்புகள் எங்கேயோ அறுந்துபோய்விட்டன.  சிரித்திரன் சுந்தருக்குப்பின் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஓர் எள்ளற் பாரம்பரியத்தை உருவாக்க முடியாது போயிற்று இத்தகைய ஒரு பின்னணியில் உமாவரதராஜன், சோபாசக்தி, கர்ணன் போன்று மிக அரிதாகவே எள்ளலுடன் கூடிய கதை சொல்லிகளைக் காணமுடிகிறது.

 

கர்ணனுடைய எள்ளல்தான் அவருடைய மொழியைத் தீர்மானிக்கிறது.  கதைசொல்லும் முறைமையைத் தீர்மானிக்கிறது.  பாத்திர உருவாக்கத்தைத் தீர்மானிக்கிறது.  அவருடைய கதைகளில் இடையிடையே வந்து கலக்கும் தமிழாக மருவிய ஆங்கிலச் சொற்களைத் தீர்மானிக்கிறது.  அவர் எள்ளலோடு கொடுமைகளைச் சிரித்துக்கடக்கிறார். அல்லது, அவற்றைச் சிரிப்பாக்கிவிட்டுக் கடந்துபோகிறார்.  எதையும் எள்ளிநகையாடும் ஒரு கதை சொல்லியாக அவர், ஒரு வீரயுகத்தின் பாடுபொருட்களையும் திருச்சொரூபங்களையும் கரிக்கேச்சர் செய்கிறார்.  இத்தகைய அர்த்தத்திற் கூறின் நான் அவரை சொற்களாற் காட்டூன் வரைபவர் என்பேன்.  ஒரு வீரயுகத்தின் எந்தப் புனிதங்களும் விழுமியங்களும் திருச்சொரூபங்களும் தனது எள்ளற் பரப்புக்கு வெளியில் இல்லை என்று கூறமுற்படும் அவர், தேவதைகளுக்கும் தீட்டுவரும், அந்தத்தீட்டுத்துணியும் நாற்றமெடுக்கும் என்று ;கூறும்போது, ஒரு வீரயுகத்தின் புனிதபடிமங்கள் எள்ளலுக்குள்ளாகின்றன.  இது, அந்தத் தேவதைகளைத் துதிப்போர், ரசிப்போர், விசுவாசிப்போருக்குக் கோபத்தை ஏற்படுத்துகிறது.

 

இங்கேதான் கர்ணனின் எள்ளல் பகையைச் சம்பாதிக்கிறது.  அவருடய பலமே அவருடைய எள்ளல்தான்.  ஆனால் அதுதான் அவருக்குப் பகைவர்களைப் பெற்றுக்கொடுக்கிறது.தேவர், அசுரர், கதாநாயகன், வில்லன் போன்ற எமக்குப் பழக்கப்பட்ட நன்கு வாலாயமான கறுப்புவெள்ளைச் சிந்தனைக்கூடாகப் பார்க்கும்போது தேவர்கள் அல்லது யுகபுருசர்கள், அல்லது நாயகர்கள் போன்றோர் அப்பழுக்கற்ற தூய்மை வாதிகளாகவும் அல்லது விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்களாகவும் அல்லது கருவிலேயே திருவுடையவர்களாகவும் தோன்றுவர்.  ஆனால் யதார்த்தத்தில் தேவதைகளுக்கும் தீட்டுவரும் இறைதூதர்களுக்கும் காயம் வரும். ரத்தம்வரும். மரணம்வரும்.கர்ணன் இந்த யதார்த்தத்தைத்தான் சொல்ல வருகிறார்.  அவர் சொல்பவை ஒன்றில் உண்மைகள் அல்லது உண்மையின் வகைமாதிரிகள் அல்லது உண்மையின் வகைமாதிரிகளின் மீதான புனைவுகள்.

அவர் சொல்லும்; சில கதைகளோடு எனக்கும் உடன்பாடில்லை.  இத்தொகுப்பில் உள்ள “;தமிழ்க்கதையை” தவிர்க்குமாறு அவரிடம் கேட்டிருந்தேன்.  அவரும் சம்மதித்திருந்தார்.  ஆனால் தொடர்பாடற்தடைகள் காரணமாக அந்தக் கதை பிரசுரத்துக்கு வந்துவிட்டதாக அவர் பின்னர் கூறினார்.அவர் கூறும் சிலவற்றோடு நான் உடன்படவில்லைத்தான்.  ஆனால் அவற்றைச் சொல்ல அவருக்குள்ள உரிமைகளை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.  அந்தக் கதைகளை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அதை எழுதட்டும்.  அதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. அதில் தான் Diversity இருக்கும்.

இந்த இடத்தில் ஒரு கேள்வி எழும் ஒரு கதைசொல்லி கூறும் உண்மைகளும் சட்டப்பெறுமானம் உடைய யுத்தச் சாட்சியங்களும் ஒன்றா? என்று. ஒன்றில்லைத்தான். ஆனால் ஹேபர்ட் மார்க்யூஸ் கூறுவது போல “புள்ளிவிபரங்கள் ஒருபோதும் குருதி சிந்துவதில்லை” – கதை சொல்லிகளே புள்ளிவிபரங்களை குருதிசிந்த வைக்கிறார்கள்.  ஆவணங்கள் அறிக்கைளில் வரும் புள்ளிவிபரங்களை விடவும் கதைசொல்லிகளால் ரத்தம் சிந்த வைக்கப்படும் உண்மைகள் அதிகம் கூரானவை, உயிருள்ளவை.கர்ணனும் அவனைப் போன்றவர்களும் புனைவின் இழைகொண்டு உண்மைகளைக் கோர்ப்பவர்கள்தான்.

 

இவ்விதம் உண்மைகளைக் கோர்க்கும் ஈழத்துப் போரிலக்கியப் பாரம்பரியத்தில் ஆகப் பிந்திய எழுச்சிகளில் ஒருவராகக் கர்ணணும் காணப்படுகிறார்.  இந்தப் பாரம்பரியத்தின் தொடக்கமாக மு. தளையசிங்கம் காணப்படுகிறார்.  அவரை ஈழத்துப் போரிலக்கியத்தின் கட்டியக்காரன் எனலாம்..தளையசிங்கம் 1960இல் எழுதிய “ஒரு தனிவீடு” நாவல் “1958 கலவரத்;தைப் பற்றியதாகும்.  நாவலின் இறுதிப் பகுதியில் ஓர் அண்டகிரவுண்ட் ஆயுதப் போராட்ட இயக்கம் பற்றியும், தனிநாடுபற்றியும் அல்லது தமிழகத்தோடு இணைந்த ஒரு பரந்த கூட்டாட்சி பற்றியும் கூறப்படுகிறது.  இதில் ஒரு தீர்க்கதரிசனம் இருப்பதாக தான் நம்புவதாக தளையசிங்கம்; பின்னாளிற் கூறியிருக்கிறார்.  மு. தளையசிங்கத்தின் இலக்கியக் கோட்பாடாகிய “மெய்யுள்”: இன்படி உண்மையே படைப்பின் உள்ளடக்கமாக இருக்கும். அதாவதுFaction அல்லது Fictious Faction. . இங்கு மு. தளையசிங்கம் உண்மை எனப்படுவதை அதன் மிக ஆழமான அர்த்தத்திற் பயன்படுத்தியிருக்கிறார்.  இனிவரும் காலத்தில் இலக்கியம் “மெய்யை” உள்ளடக்கமாகக் கொண்ட “மெய்யுள்” ஆக இருக்கும் என்று கூறும் மு. தளையசிங்கம்; அதற்கு முன்னுதாரணமாக ஜோன் ரீட்  எழுதிய “உலகைக் குலுக்கிய பத்துநாட்கள்” என்ற படைப்பினை முன்வைக்கிறார்.  மேலும் ஹென்றி ஜசிமோ ஜசக் ஜசிமோ, மற்றம் ஆதர் சி கிளார்க் போன்றோரின் விஞ்ஞான மெய்விபரப் புனைவுகளையும் அவர் மனதிற்கொண்டிருந்ததாக அறியமுடிகிறது.

மு. தளையசிங்கத்தின் காலத்தில் தென்னிலங்கையில் இடம்பெற்ற தமிழர்களுக்கெதிரான வன்முறைகளே இனத்துயராகக் காணப்பட்டன.  ஆனால் அவர் தீர்க்கதரிசனம் உரைத்தது போல ஓர் ஆயுதப் போராட்டத்தின் எழுச்சியோடு தமிழ்மக்களின் இனத்துயர் எனப்படுவது ஒவ்வொரு கட்ட ஈழப்போரிலும் பெரிதாகிக் கொண்டே வந்தது. தளையசிங்கத்தின் காலத்தில் தென்னிலங்கையில் தமிழர்களுக்கு நடந்தவைதான் கொடுமைகளாகக் கருதப்பட்டன.  ஆனால் அதன்பின் யாழ்நூலக எரிப்பு அதைவிடக் கொடுமையானதாகக் காணப்பட்டது.  அதற்குப் பின் இயக்கச்சண்டைகள் வந்தன.  இடம்பெயர்வுகள் வந்தன.  முஸ்லிம்களோடு மோதல் வந்தது. பின்வந்த கொடுமை முன்வந்த கொடுமையை விட பெரிதாக இருந்தது.  பின்னர் 1995இல் பேரிடப்பெயர்வு வந்தது.  ஒரு சமூகத்தின் ஆயிரமாயிரம் ஆண்டுகால வேர்களையறுத்து அதன் இருப்பையே குலைத்த அந்த இடப்பெயர்வு அதற்குமுன் நேர்ந்த எல்லாக் கொடுந்துன்பங்களை விடவும் பெரிதாக இருந்தது.  அதன் பின் தொடர் இடப்பெயர்வுகள் (Multiple displacements) உண்டாயின. இத்தொடர் இடப்பெயர்வுகளில் இறுதியானதே நந்திக்கடல் வீழ்ச்சியாகும்.  அது ஈழப்போரில் அதற்குமுன் நிகழ்ந்த எல்லாக் கொடுமையான அனுபவங்களோடும் ஒப்பிடுகையில் ஆகப்பெரிய இனத்துயராக முடிந்தது.  இனி இ;தைவிடப் பெரிய ஒரு கொடுந்துயர் வராது எனும் அளவிற்கு அது ஒரு யுகமுடிவின் பிரளய அனுபவமாக மாறியது.  இனி ஈழத்தமிழருக்கு எத்தகைய பேரிடர் வந்தாலும்  அது, முள்ளிவாய்க்காலில் அனுபவித்த பிரளயத்துயரோடு ஒப்பிடுகையில் அற்பமானதாகவே தோன்றும்.

 

இத்தகைய ஓர் அனுபவப் பின்னணியை உடைய எந்தவோர் இனத்தினதும் படைப்பிலக்கியம் எனப்படுவது உண்மையைத்தான்  அதன் உள்ளடக்கமாகக் கொண்டிருக்கும்.  நிச்சயமாகக் கற்பனையை அல்ல.  ஏனெனில் கற்பனையை விடவும் பயங்கரமான அல்லது கற்பனை செய்யமுடியாத அளவிற்குப் பயங்கரமான உண்மைகள் ஈழத்தமிழர்களிடம் உண்டு.  எனவே, ஈழத்துப் போரிலக்கியம் என்பது தளையசிங்கம் கனவுகண்டதுபோல உண்மையை உள்ளடக்கமாகக் கொண்ட ஒன்றாக எப்பொழுதோ எழுச்சிபெறத் தொடங்கிவிட்டது.

லங்காராணியிலிருந்து இந்த பாரம்பரியத்தை; துலக்கமாக அடையாளங்காண முடியும்.  அதன் பின் செங்கை ஆழியானால் புனைபெயரில் எழுதப்பட்ட 24 மணிநேரம் என்ற படைப்பினைக் குறிப்பிடலாம்.  அதன் இலக்கியத்தரம் பற்றிய சர்ச்சைகளுக்கப்பால் அது அதிகபட்சம் உண்மையை உள்ளடக்கமாகக் கொண்டிருப்பது என்பது சுட்டிக்காட்டப்படுகிறது.  அதன்பின் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் எழுச்சியோடு வெளிவந்த விடியலுக்கு முந்திய மரணங்கள் என்ற படைப்பைக் கூறமுடியும்.  இங்கு ஒரு நூதனமான தொடர்ச்சியைச் சுட்டிக்காட்டவேண்டும்.  மேற்படி படைப்பை எழுதியவர் மு. தளையசிங்கத்தின் அணியைச் சேர்ந்த   சு. வில்வரத்தினத்தின் மருமகனாகிய பாலகணேசன் என்பவரே அது. அதன்பின் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலிருந்து நிறையப் படைப்புக்கள் வெளிவந்தன. இவற்றின் இலக்கியத் தகுதி பற்றிய விமர்சனங்களுக்கும் அப்பால் அவை உண்மையின் ஒரு பகுதியை உள்ளடக்கமாகக் கொண்டிருந்தவை என்பதற்காக அவற்றை இங்கே குறிப்பிடவேண்டும்.இந்தக் காலப் பகுதியில் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்தும் ஈழப்போரில் “சகபயணிகள்” என்று வர்ணிக்கத்தக்க படைப்பாளிகளும் எழுதினார்கள்.

இவை எல்லாவற்றையும் பற்றி நான் 2005இல் கிளிநொச்சியில் நிகழ்ந்த ஒரு புத்தக வெளியீட்டின்போது; மிகவிரிவாக ஓர் உரையாற்றினேன். இன்னொரு போர் முகம் என்ற நாவலின் மீதான நீண்ட மதிப்பீட்டுரையில் மேற்படி உண்மையை உள்ளடக்கமாகக் கொண்ட ஈழத்துப் போரிலக்கியப் பாரம்பரியம் குறித்து நான் உரையாற்றினேன்இந்தப் பாரம்பரியத்தில் ஓர் உடைவாக மற்றொரு புதிய கிளைப்பாரம்பரியத்தை கோவிந்தனின் புதியதோர் உலகம் உருவாக்கியது.  கோவிந்தனில் தொடங்கி சோபாசக்தி, ஜீவமுரளி, சக்கரவர்த்தி, செழியன், இப்பொழுது கர்ணன் என்று இந்தக் கிளைமரபு நன்கு விஸ்தரிக்கப்பட்டுவிட்டது.

 

 

மு.தளையசிங்கம் மெய்யெனக்கருதியது அதிகமதிகம் ஆன்மிக அர்த்தத்தில்;தான்.  என்றாலும் ஓர் ஆன்மீகச் செயற்பாட்டுக்காரர் என்ற அடிப்படையில் அவருடைய குறுகிய கால ஆயுட்காலத்தினுள் அதாவது 36 வயதுக்குள் அவர் வாழ்ந்த வாழ்க்கை முறைக்கூடாக, எமக்குக் கிடைக்கும் சித்திரத்தின்; அடிப்படையிற் கூறின் அவருடைய ஆன்மிகம் எனப்படுவது நிச்சயமாக அரசியல் நீக்கம் செய்யப்பட்ட ஒன்றல்ல.எனவே, ஒரு தனிவீட்டிலிருந்து தொடங்கி இடையில் நாலாங்கட்ட ஈழப்போரின்போது வன்னியில் எழுதப்பட்ட கவனிப்புக்குரிய ஆனால் சர்ச்சைக்குரியது என்பதால் பிரசுரத்திற்கு அனுமதிக்கப்படாத ஏணைப்பிறை நாவலும் உள்ளடங்கலாக சேகுவேரா இருந்த வீடு வரையிலுமான ஈழத்துப் போரிலக்கியப் பாரம்பரியம் எனப்படுவது அதிகமதிகம் உண்மைகளை உள்ளடக்கமாகக் கொண்டதாகும்.  அதாவது Faction தான் அல்லது புனைவின் நுண் இழைகொண்டு உண்மைகளைக் கோர்க்கும் ஓர் இலக்கியப் பாரம்பரியம் எனலாம்.இந்தப் பாரம்பரியத்தின் ஆகப்பிந்திய எழுச்சியாக கர்ணனும் ஒரு தொகுதி உண்மைகளோடு அல்லது உண்மையின் வகைமாதிரிகளின் மீதான புனைவுகளோடு எங்களை நோக்கி வருகிறார்.

ஆனால் அவர் எள்ளலோடு ஒரு வீரயுகத்தின் பாடுபொருட்களையும் திருச்சொருபங்களையும் கரிக்கேச்சர் செய்யும்போதுதான் மிகச் சிக்கலானதும் அறிவினால் நிதானப்படுத்தக் கடினமானதும் அதிகமதிகம் உணர்ச்சிக் கொந்தளிப்பானதுமாகிய ஒர் உளவியற் பரப்பினுள் நுழைய நேரிடுகிறது.இதை இன்னும் ஆழமாக விளங்கிக் கொள்வதென்றால் நான் இப்பேச்சின் தொடக்கத்திற் கூறியதுபோல கர்ணனை விளங்கிக் கொள்வதற்குரிய இரண்டாவது தளத்தினுட் பிரவேசிக்கவேண்டும். அதாவது கர்ணனின் கதைகளை எதிர்கொண்ட உளவியற் சூழல் எத்தகையது என்பது?

நந்திக்கடல் வீழ்ச்சிக்குப் பின்னரான ஈழத்தமிழ் உளவியல் எனப்படுவது நான் ஏற்கனவே பொங்குதமிழ் இணையத்தளத்தில் எழுதிய கட்டுரையில குறிப்பிட்டிருப்பதுபோல அதிகம் உணர்ச்சிக்கொந்தளிப்பானது சிக்கலானது.  பல தள அடுக்குகளையுடையது.

 

நந்திக்கடலுக்குப்பின் ஈழத்தமிழ்சமூகத்தில் மூன்று உட்கூறுகள் காணப்படுகின்றன.

முதலாவது, வன்னியால் வந்தவர்கள்.

இரண்டாவது, வன்னிக்கு வெளியே இருந்தவர்கள்.

மூன்றாவது, புலம்பெயர்ந்து வாழ்பவர்கள்

இங்கு, வன்னிக்கு வெளியே வாழ்ந்தவர்கள் என்பது இறுதியுத்தத்திற்கு முன்பே ஸ்ரீலங்கா அரசகட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துவிட்ட வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழ் முஸ்லிம் சமூகங்களைக் குறிக்கும்.

மேற்சொன்ன மூன்று பிரதான உட்கூறுகளினதும் ஒன்றுக்கொன்று சில விடயங்களில் ஒத்துப்போகின்ற அல்லது மாறுபடுகின்ற மனோநிலைகளின் கலவையாக உருவாகியதே நந்திக்கடலுக்குப் பின்னரான ஈழத்தமிழர்களின் கூட்டு உளவியலாகும்.  இதில் ஒவ்வொரு உட்கூறுக்கும் தனித்தனியான அனுபவத்தொகுப்புண்டு.  நிலையான நலன்களுண்டு. அச்சங்களுண்டு.  வேறு பிரச்சினைகளுண்டு.

 

வன்னியால் வந்தவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் ஒரு பிரளயத்தை வாழ்ந்து கடந்துவந்த மக்கள்.  போரிடும் இரண்டு தரப்புக்குமிடையே சான்ட்விச்சாக நசிபட்டவர்களே இதில் அதிகம்.  வாழ்க்கையின் அடிக்கட்டுமாணங்கள் அனைத்தும் தகர்ந்துபோன ஓர் நிலையில் எல்லாவற்றையும் முதலிலிருந்து தொடங்கவேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.  வன்னிக்கு வெளியே இருந்தவர்கள், குறிப்பாக மூதூர் சம்பூர் உள்ளடங்கலான உயர்பாதுகாப்பு வலயங்களால் அகதிகளானவர்கள் தவிர, ஏனைய எல்லோருக்கும் வாழ்க்கையின் அடிக்கட்டுமாணங்கள், வன்னி அகதிகளோடு ஒப்பிடுகையில் ஓரளவுக்கேணும் ஸ்திரமாக இருக்கின்றன.  புலம்பெயர்ந்த தமிழர்களைப் பொறுத்தவரை, அவர்கள் ஒப்பீட்டளவில் நிதிப்பலத்தோடும் தமது விருப்பு வெறுப்புக்களை வெளிப்படுத்தக் கூடிய ஓர் சுதந்திரச் சூழலிலும் வாழ்கிறார்கள்.

வன்னிக்கு வெளியே வாழ்ந்தவர்களில் குறிப்பாக அரச கட்டுப்பாட்டுப்பகுதிகளுக்குள் வாழ்ந்தவர்களில் ஒரு தொகுதியினர் வன்னி அரசியலோடு நேரடியான தொடர்புகளைக் கொண்டிருந்த காரணத்தால் ஒன்றில் கொல்லப்பட்டார்கள் அல்லது காணாமற்போனார்கள் அல்லது கைதுசெய்யப்பட்டார்கள் அல்லது துரத்தப்பட்டார்கள்;.மற்றொருதொகுதியினர் வன்னிக்குவெளியே வாழ்ந்த போதும் மனதால் வன்னிக்குள் வாழ்ந்தார்கள்.இவ்விரு தொகுதியினரையும் தவிர எனையபெரும்பாலானவர்கள்; நந்திக்கடல் வீழ்ச்சியை தொலைக்காட்சிகளிற் பார்த்தவர்கள்தான். இவர்கள் எல்லாருமே    ஒரு யுகமுடிவை கையாலாகத் தனத்தோடும் பிரயோகிக்கவியலாக் கோபத்தோடும், குற்றவுணர்ச்சி;யோடும்,இருபரிமாண அல்லது முப்பரிமாணக் காட்சியாகக் கண்டவர்கள்தான்;. நந்திக்கடற்கரையில் ஆடைகளின்றிக் கிடந்த அந்த உடல் ஏற்படுத்திய அதிர்ச்சி, துக்கம், அவமானம், இழப்புணர்வு போன்ற எல்லாவற்றினதும் கலப்பாயுருவான மிகக் கொந்தளிப்பான மனோநிலையோடு இவர்கள் காணப்படுகிறார்கள்.

ஒரு பிரளயத்தை, அதன் உயிர்ப்பரிமாணங்களோடு வாழ்ந்து கடந்தவர்களுக்கும்  அதை முப்பரிமாணக் காட்சியாகக் கண்டவர்களுக்கும் இடையில் அனுபவ வேறுபாடுகள் நிச்சயமாக இருக்கும்.  வன்னியால் வந்தவர்கள் எதையாவது சொல்லமுற்படும்போது, அதை வன்னிக்கு வெளியே இருந்தவர்கள் எதிர்கொள்வதில் இந்த அனுபவ வேறுபாடுகளுக்கும் ஒரு பங்கிருக்கும்.

 

நந்திக்கடல் வீழ்ச்சிக்குப் பின்னரும் நாடு, வென்றவர்களுக்கும் தோற்றவர்களுக்குமிடையே இரண்டாகப் பிளவுண்டிருக்கிறது.  கொழும்பில் முன்னெப்பொழுதையும் விட பலமாகக் காணப்படும் கறுப்பு வெள்ளை அரசியலின் விளைவே இது எனலாம்.  கொழும்பில் அதிகாரத்தில் இருப்பவர்கள் கறுப்பு வெள்ளையாகச் சிந்திக்கும் ஒரு நிலை உள்ளவரை அதன் விளைவாக உருவான யுத்தவெற்றி வாதம் தென்னிலங்கையில் வெகுசனமயப்பட்ட ஒரு நிலை உள்ளவரை, நந்திக்கடல் தோல்விக்குப் பின்னரான தமிழ்மக்களின் கொந்தளிப்பான உளவியலில் மாற்றமேற்பட வாய்ப்பில்லை.  இத்தகைய ஒரு கொந்தளிப்பான உளவியலோடு கர்ணனின் எள்ளலை எதிர்கொள்வதே இங்குள்ள பிரச்சினை.

ஆனால், கர்ணனுடைய இரண்டாவது தொகுப்பாகிய சேகுவேரா இருந்த வீடு, அவர்மீதான விமர்சனங்களுக்கு ஓரளவுக்குப் பதிலாக வந்திருக்கிறது.  மொத்தம் பதின்மூன்று கதைகள் இதிலுண்டு.  ஏறக்குறைய ஏழுகதைகள்.  அவரை அதிகாரத்தின் ஒரு அடுக்கை மட்டுமல்ல.  எல்லா அடுக்குகளையும் எள்ளிநகையாடுபவராக நிறுவி இருக்கின்றன.  இதை இன்னும் திருத்தமாகச் சொன்னால் வன்னியிற் தோற்கடிக்கப்பட்ட அதிகாரத்தின் ஓர் அடுக்கைமட்டுமல்ல.  இலங்கைத்தீவின் அதிகாரத்தின் ஏனைய அடுக்குகளின் மீதும் கர்ணனின் விமர்சனம் பாய்கிறது.  இப்படிப்பார்த்தால், இந்தத் தொகுப்பின் மூலம் கர்ணன் அதிகாரத்தின் எல்லா அடுக்குகளையும் எள்ளி நகையாடும் ஒருவராகத் தன்னை வெளிப்படுத்த முற்படுவதன் மூலம் தான் எந்த அணிகளுக்குள்ளும் சிக்காத ஒரு சுயாதீனமான கதை சொல்லியாக நிறுவ முற்படுகிறார்.அதாவது ரிஸ்க் எடுக்கிறார்.  முன்னரும் ரிஸ்க் எடுத்தவர்.  ஒரு காலைக் கொடுத்தவர்.  இப்பொழுது மறுபடியும் ரிஸ்க் எடுக்கிறார்.

நந்திக்கடல் வீழ்ச்சிக்குமுன் பேசப்படாத உண்மைகளை அல்லது வன்னியில் பேச முடியாதிருந்த உண்மைகளை கர்ணன் அதிகம் பேசுகிறார்.  ஆனால் நந்திக்கடல் வீழ்ச்சிக்குப் பின்னரான ஓர் அரசியல் மற்றும் உளவியற் சூழலில் அந்த உண்மைகளை எதிர்கொள்ளும்போது உருவாகும் பிரச்சினைகள் அல்லது மனத்தடைகளே கர்ணனை விளங்கிக் கொள்வதிலுள்ள மனத்தடைகளுமாகும். இங்கு பிரச்சினை என்னவென்றால்; கர்ணன் சொல்வது உண்மையா இல்லையா என்பதல்ல.  அவர் அதைச் சொல்லும் காலம் பொருத்தமா இல்லையா என்பதுமல்ல. அவரை எதிர்கொள்ளும் தோல்விக்குப் பின்னரான உளவியல் எனப்படுவது சரியா பிழையா என்பதுமல்ல.  மாறாக கர்ணன் சொல்லும் கதைகளையும் அதை எதிர்கொள்ளும் தோல்விக்குப்பின்னரான உளவியலையும் எதிரெதிர் நிலைகளில் வைத்துப் பார்ப்பதுதான இங்குள்ள பிரச்சினை.  உண்மையில் அவை இருவேறு எதிரெதிர் யதார்த்தங்களல்ல.மாறாக அவை  ஒரு முழுமையான யதாhர்த்தத்தின் இருவேறு கூறுகளே.  அவற்றை எதிரெதிராக வைத்துப்பார்ப்பது என்பதே ஒருவகைக் கறுப்பு வெள்ளை நோக்குநிலைதான்.  கர்ணன் சொல்லும் கதைகள் ஒரு யதார்த்தம். அதை எதிர்கொள்ளும் உளவியல் மற்றொரு யதார்த்தம.; இரண்டுமே ஒரு முழுமையை உருவாக்கும் இருவேறு யதார்த்த மூலக்கூறுகள்தான்.

இந்த யதார்த்தத்தை தரிசிக்க முடியாதிருப்பவர்களுக்கு நான் ஓர் அழைப்பை விடுக்கிறேன்.  தயவு செய்து வன்னிக்குப் போங்கள். நீங்கள் கொழுமபுக்குப் போகும்போதோ அல்லது வெளிநாடுகளுக்குப் போகும்போதோ கடந்துபோகும் வன்னிக்கு அல்ல. கண்டிவீதி வழியே நீங்கள் காண்பது ஒரு ஷோக்கேஸ் பீ;ஸ் மட்டும்தான்.  கண்டிவீதி இப்பொழுது ஒரு காட்சியறை.  முன்பு ரணில் – பிரபா – ஒப்பந்த காலத்திலும் அது ஒரு காட்சியறையாக இருந்தது.  அது அப்பொழுது சமாதானத்தின் காட்சியறை.  இப்பொழுதும் அது யுத்த வெற்றிவாதத்தின் காட்சியறை.  காட்சியறைகளிற்குள் இதயம்  இருப்பதில்லை.  வன்னியின் இதயம் அதன் ஆழத்தே ரத்தச்சோகை பிடித்த குள மையக் குடியிருப்புக்களிற்குள் இருக்கிறது. அதன் கிறவற்சாலைகள். கலிங்குகள்.  குளக்கட்டுக்கள் மற்றம் அறுத்தோடிகளின் வழியே செல்லும்போதுதான் வன்னியின் இதயத்தைக் கண்டுபிடிப்பீர்கள்.

நீங்கள் எந்தவிதமான முன்கற்பிதங்கள் இன்றியும், அரசியல் உள்நோக்கம் இன்றியும் இதயத்தாற்  தேடுவீர்களானால் அது உங்களுக்குப் புலப்படத் தொடங்கும்.ஒருபோக மழையினால் மட்டும் கழுவிச் செல்லப்பட முடியாத ரத்தமும் சாம்பலும் படிந்த அந்த கிறவற் சாலைகளின் வழியே வாருங்கள்.  ஒரு வீரயுகத்தின்; பொன்னிறமான நினைவுகள் ஒட்டிக்கொண்டிருக்கும் காட்டுக் கூறுகளினூடாக வாருங்கள். குடும்பத்தின் தலைப்பிள்ளையை சாகக்கொடுத்துவிட்டு அல்லது தொலைத்துவிட்டு அல்லது பிள்ளை திரும்பிவரும் என்று யாரோ ஒரு குறிசொல்லி அல்லது கலையாடி கூறியதை நம்பிக் காத்திருக்கும் பெற்றோரோடு கதையுங்கள்.  அல்லது கையைக் காலைக்கொடுத்துவிட்டு அல்லது வாழ்நாள் முழுதும் சிறுகச் சிறுகச் சேமித்த எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு தத்தளிக்கும் யாரோடாவது கதையுங்கள்.அப்பொழுது அவர்களுடைய கண்ணீரின் சூட்டையும் இப்பொழுதும் தணியாது எரியும் ஒரு தேசிய நெருப்பின் சூட்டையும் ஒரு சேர ஸ்பரிசிப்பீர்கள்.

அப்பொழுதுதான் உங்களுக்குத் தெரியவரும் கர்ணன் சொல்லும்கதைகளும் அவரை எதிர்கொள்ளும் வீழ்ச்சிக்குப் பின்னரனான உளவியலும் ஒன்றுக்கொன்று எதிரான யதார்த்தங்கள் அல்ல என்பது. மாறாக அவை ஒரு முழுமையான தேசிய யதார்த்தத்தின் இறுவேறு தவிர்க்கப்படவியலாத கூறுகளே என்பது.

(கர்ணனின் சேகுவேரா இருந்தவீடு நூல்வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரையின் சுருக்கப்பட்ட வடிவம்)

 

34 Comments

 1. //வன்னியின் இதயம் அதன் ஆழத்தே ரத்தச்சோகை பிடித்த குள மையக் குடியிருப்புக்களிற்குள் இருக்கிறது. அதன் கிறவற்சாலைகள். கலிங்குகள். குளக்கட்டுக்கள் மற்றம் அறுத்தோடிகளின் வழியே செல்லும்போதுதான் வன்னியின் இதயத்தைக் கண்டுபிடிப்பீர்கள்.

  நீங்கள் எந்தவிதமான முன்கற்பிதங்கள் இன்றியும், அரசியல் உள்நோக்கம் இன்றியும் இதயத்தாற் தேடுவீர்களானால் அது உங்களுக்குப் புலப்படத் தொடங்கும்.ஒருபோக மழையினால் மட்டும் கழுவிச் செல்லப்பட முடியாத ரத்தமும் சாம்பலும் படிந்த அந்த கிறவற் சாலைகளின் வழியே வாருங்கள். ஒரு வீரயுகத்தின்; பொன்னிறமான நினைவுகள் ஒட்டிக்கொண்டிருக்கும் காட்டுக் கூறுகளினூடாக வாருங்கள். குடும்பத்தின் தலைப்பிள்ளையை சாகக்கொடுத்துவிட்டு அல்லது தொலைத்துவிட்டு அல்லது பிள்ளை திரும்பிவரும் என்று யாரோ ஒரு குறிசொல்லி அல்லது கலையாடி கூறியதை நம்பிக் காத்திருக்கும் பெற்றோரோடு கதையுங்கள். அல்லது கையைக் காலைக்கொடுத்துவிட்டு அல்லது வாழ்நாள் முழுதும் சிறுகச் சிறுகச் சேமித்த எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு தத்தளிக்கும் யாரோடாவது கதையுங்கள்.அப்பொழுது அவர்களுடைய கண்ணீரின் சூட்டையும் இப்பொழுதும் தணியாது எரியும் ஒரு தேசிய நெருப்பின் சூட்டையும் ஒரு சேர ஸ்பரிசிப்பீர்கள்.// நிலாந்தன் உறவாடும்படி கூறியிருக்கிற இத்தகை மனிதர்களின் அனகேமானவர்களுடன் தொலைபேசியூடாக தினமும் உரையாடிக்கொண்டிருக்கிறேன். நானும் 2பிள்ளைகளுக்கு அம்மா. அங்கே தனது பிள்ளை வருமென்று நம்புகிற அம்மாவின் வலியை , அக்காளின் துயரை , தங்கையின் தவிப்பை , சிறைகளில் வாடுகிற அண்ணன்களின் தம்பிகளின் கண்ணீரை , அவர்களது குடும்ப உறவுகளை நிறையவே அவர்களது காயங்களை நேரில் காணாவிடினும் இதயத்தால் கேட்டு தினமும் அந்த வலிகளை காண்கிறேன். சமாதான காலம் மீள் தரிசனம் கிடைத்த வன்னியின் இதயத்தை அதன் கீறல்களை சிதைவுகளை , அழிவுகளை , ஆற்றமுடியாத துயரங்களையெல்லாம் அங்கே பிரியாவிடை தந்த நட்புகளைத் தேடுகிறவர்களுள் நாளும் ஒருத்தியாய் தேடிக்கொண்டிருக்கிறேன். இந்த உளவியல் யுத்தம் என்னையும் சிதைத்துக் கொண்டிருக்கிறது.

 2. நெடுதுயிலோன் says:

  மிக அருமை

 3. sasi says:

  நல்ல பதிவு. உண்மையான விசயம்.

 4. நிலாந்தன் கர்ணனை வாசித்து
  போரிலக்கியத்தின் கட்டியக்காரன் என்கிறார் கர்ணனை .
  நாம் போர் எதிர்ப்பு இலக்கியத்தின் வாசகர்கள் .
  கட்டியக்காரன் என்றால் கட்டியம் கூறுபவன் அல்லது வழி மொழிபவன் .
  இப்போது போர் இலக்கியத்தை கர்ணன் வழிமொழிகிறாரா என்பதை யாரிடம் கேட்பது ?

 5. கொஞ்சம் குழப்பி எழுதிவிட்டேன் ,

  கர்ணனுடையது போரிலக்கியமா? போரெதிர்ப்பு இலக்கியமா?

  பதில் சொன்னால் மகிழ்ச்சி .

 6. நெடுதுயிலோன் says:

  கற்பனையிலும்,கணணியிலும் கதை சொல்பவர்களைவிட நிலாந்தனின் கருத்தில் நிட்சயம் மெய் இருக்கும். முள்ளிவாய்க்கால் முடிவுக்கு பின் அவர் எழுதிய “ஈழத்தமிழர் என்ன செய்யவேண்டும் எங்கிருந்து தொடங்க வேண்டும்” கட்டுரை இன்னும் பல தலைமுறைகள் படித்து நினைவு வைத்திருக்க வேண்டியது.

 7. எள்ளலுடன் கதை சொல்பவர்களில் அ.முத்துலிங்கம் குறிப்பிடத்தக்க ஆளுமை.

Post a Comment