Home » இதழ் 08 » *ஈரானிய சினிமா: கலை சமூகம் மற்றும் அரசு- தமிழில்: ஜிஃப்ரி ஹாஸன்

 

*ஈரானிய சினிமா: கலை சமூகம் மற்றும் அரசு- தமிழில்: ஜிஃப்ரி ஹாஸன்

 

1979 ஈரானியப் புரட்சியையடுத்து ஓர் இஸ்லாமியக் குடியரசு நிறுவப்பட்டது. அநேகமானவர்கள் ஈரானிய சினிமா புதிய தடைகளால் நிறுத்தப்பட்டுவிடும் என்று எதிர்வு கூறினார்கள். ஆனால் ஈரானிய சினிமா, ஈரானிய சமூகத்திலும், பண்பாட்டிலும் பாரியளவான மாற்றங்களை நிகழ்த்தி தானும் பல குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு முகங்கொடுத்து அழியாமல் பிழைத்துக் கொண்டது.

இன்று ஈரானிய சினிமா உலகில் ஊட்டமூட்டக்கூடிய புத்தாக்கம் நிறைந்த ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஈரானிய தயாரிப்பாளர்களால் சர்வதேச திரைப்பட விழாக்களில் மிகுந்த வரவேற்புடன் திரைப்படங்கள் காண்பிக்கப்படுகின்றன. ஈரானின் சுதந்திரமற்ற தோற்றத்திற்கும் (Imagination) ஈரானிய சினிமாவின் புத்தெழுச்சிக்குமிடையிலான தெளிவான முரண்நிலை பற்றிய பிரச்சினைக்கான பதிலைப் பெற்றக்கொள்வதற்கு ஈரானியப் புரட்சிக்குப் பின்னரான கலை. சமூகம் மற்றம் அரசு ஆகியவற்றுக்கிடையிலான உறவை விளங்கிக்கொள்வது அவசியமாகும்.

புரட்சியின் ஒரு பிரபல்யமிக்க தன்மை யாதெனில், இஸ்லாமியக் குடியரசுக்குள் காணப்பட்ட உட்குழுவாதம் கலைஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் அரசுடன் பேச்சுவார்த்தை, கூட்டிணைவு, எதிர்ப்பு போன்ற பரந்துபட்ட செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியது. கலை மற்றும் பண்பாடு குறித்து அரசாங்கத்தின் பழைமைவாதப் பிரிவினரும் தாராண்மைவாதப் பிரிவினரும் வெவ்வெறான கொள்கைகளையே கொண்டிருந்தனர். அரசாங்கத்தில் அங்கம் வகித்த பழைமைவாதப் பிரிவினர் சினிமாவை எதிர்த்தனர்.

ஈரானியப் படங்களில் காட்டப்படும் பெண்கள் மற்றும் காதல் போன்றன இந்த எதிர்ப்பின் பிரதான விடயங்களாக மாறின. புரட்சிக்குப் பின் உடினடியாக பிக்ஹ் சட்டத்தால் இவை திரையிலிருந்து பலாத்காரமாக மறைக்கப்பட்டன. ஆணுக்கும் பெண்ணுக்குமிடையிலான உணர்ச்சிகள் ஒரு சிறிய வட்டத்துக்குள் குறுக்கப்பட்டன. ஹிஜாப் அணிதல் கட்டாயமாக்கல் சட்டத்துடன் பால் சார்ந்த பிரிவினை, பொது நிகழ்வுகளில் பெண்களின் பிரசன்னம், காதல் வெளிப்பாடுகள் போன்றன கடுமையான தடைகளுக்குள்ளாகின. உண்மையைச் சொல்வதானால் ஒரு தசாப்த காலமாக ஈரானியத் தயாரிப்பாளர்கள் திரையில் பெண்களையும், காதலையும் வேறு விடயங்களைக் கொண்டே பிரதிநிதித்துவப்படுத்த வேண்டி இருந்தது.

கலையின் நிச்சயமற்ற தன்மை

1979 புரட்சிக்கு முன்னர் ஈரானிய மார்க்க அறிஞர்கள் சினிமாவை நிராகரித்திருந்தனர் அல்லது புறக்கணித்திருந்தனர். அவர்கள் தடைசெய்யப்பட்ட கலை வடிவங்களுள் ஒன்றாக சினிமாவை கருதினர். மார்க்கப்பற்றுள்ள பல குடும்பங்கள் சினிமாவுக்குச் செல்வதை ஒரு பாவச்செயலாக கருதினர். இதற்கு பிரதான காரணம் சினிமாவில் பெண்களினதும் காதலினதும் இருப்பு ஈரானிய பண்பாட்டில் மிக நீண்ட காலமாகவே இருந்து வந்த இம்மை-மறுமை நம்பிக்கையை சீர்குலைப்பதாக கருதப்பட்டதுதான்.

காதல் என்பது பாரசீகக் கவிதை மரபில் எப்பொழுதும் ஓர் மைய விடயமாக இருந்து வந்துள்ளது. ஆனால் அது எழுத்தாளர்கள் தெய்வீக காதல் பற்றியா அல்லது பூலோகக் காதல் பற்றியா அல்லது ஆண்-பெண் காதல் பற்றியா பேசுகிறார்கள் என்பது பற்றி மிகக் குறைந்தளவு தெளிவினையே  கொண்டிருந்தது. பாரசீக மொழியும் அதன் கவிதை வடிவமும் எழுத்தாளர்கள் இப்போக்கினைத் தொடர்வதற்கும் கலையின் இத்தகைய நிச்சயமற்ற தன்மையுடன் பணியாற்றுவதற்கும் அவர்களை அனுமதித்தது. கலையின் நிச்சயமற்ற தன்மையானது ஹாபிஸ் போன்ற செவ்வியல் கவிஞர்களின் படைப்புகளில் மிகச்சிறப்பாக கையாளப்பட்டிருந்தன. ஆனால் அத்தகைய நிச்சயமற்ற தன்மையானது ஆற்றுகை மற்றும் வரைகலைகளில் தொடரப்பட முடியவில்லை.  பெண்களையும் காதலையும் பிரதிநிதித்துவப்படுத்துவதில் அவ்விரு கலைகளும் வெளிப்படைத்தன்மையையும் நேரடித் தன்மையையும் வேண்டி நின்றதே அதற்குக் காரணமாகும். இப்பிரச்சினைக்கு ஒரு தீர்வாக இக்கலைகளிலிருந்து பெண்கள் முற்றாக வெளியேற்றப்பட்டு வேறு விதங்களில் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டனர். நாடகங்களில் பொதுவாக பெண்களின் பாத்திரம் ஆண்களாலேயே நடிக்கப்பட்டது. அல்லது ஒரு கற்பனையான பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. கஜார் யுகத்தின் ஆரம்ப கட்ட ஓவியங்களில் அஃறினை உருவங்களால் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டனர்.

19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புகைப்படக் கலையின் வருகையுடன் பெண்களின் பிரதிநிதித்துவம் மிகவும் யதார்த்தபூர்வமானதாக மாறியது. றிழா ஷாஹ்வின் நவீனமயமாக்கலின் கீழ் ,சினிமாவானது ஈரானில் வெகு ஜனங்களுக்கான பொழுதுபோக்குத் துறையாக முன்னேற்றங் கண்டது. இந்த நிலை மேலும் வலுவூட்டப்பட்டது. ஈரானியப் பெண்களின் பொது வாழ்க்கை வகிபாகம் மற்றும் அவர்களின் சமூக அந்தஸ்து போன்றன மாற்றத்திற்குள்ளானது மட்டுமன்றி சினிமா வர்த்தகத்தின் வளர்ச்சிக்கும் பெண்களும் காதலும் முக்கியமான விடயங்களாக மாறின.

இத்தகைய ஒரு சிக்கலான நிலமையுடனேயே இஸ்லாமிய அரசு உதயமானது. சினிமாவின் சக்தியை விளங்கிக்கொண்ட இஸ்லாமிய ஆட்சி பீடங்கள் முன்பு மார்க்க அறிஞர்கள் செய்ததைப் போன்று அதனை நிராகரிக்கவோ அல்லது புறக்கணிக்கவோ முனையவில்லை. இன்னொரு வார்த்தையில் சொல்வதானால், சினிமா பற்றி ‘பிக்ஹ்’வில் எதவும் சொல்லப்பட்டிருக்கவில்லை. அதாவது இஸ்லாமிய சட்டங்கள் சினிமாவை ஹலால் (அங்கீகரிக்கப்பட்டது) என்றோ அல்லது ஹறாம் (தடை) என்றோ எதுவும் சொல்லப்பட்டிருக்கவில்லை.

கொமெய்னியின் ஆட்சிக் காலத்தில் இறையியல் அரசாட்சியின் கீழ் சினிமாவைக் கொண்டு வருவதற்கு பாரிய முயற்சிகள் எடுக்கப்பட்டன. அதாவது சினிமா இஸ்லாமியமயப்படுத்தலுக்குள்ளாக்க முயற்சிக்கப்பட்டது. ஆனால் இந்த இஸ்லாமியமயமாக்கல் நடைமுறை தோல்வியடைந்தது. திரைப்படத் தயாரிப்பாளர்களைப் போன்றே ஏனைய கலைஞர்களும் இறையியல் அரசின் பிக்ஹ் சட்டதிட்டங்களிலிருந்து படிப்படியாக விடுபட்டு தங்களது கலையை சுதந்திரமானதாக முன்னெடுத்தனர்.

 

கலையை இஸ்லாமிய மயப்படுத்துவதற்கான முயற்சி

இஸ்லாமியக் குடியரசின் சமூக அரசியல் கால கட்டங்களுக்கும் சினிமாவக்குமிடையிலான உறவென்பது மூன்று காலகட்டங்களைக் கொண்டது. முதலாவது கட்டமானது இஸ்லாமிய அரசின் உருவாக்கத்துடன் தொடங்குகிறது. அது தற்போது முதலாம் குடியரசு எனக் குறிக்கப்படுகிறது. அது ஒரு தசாப்த காலம் வரை தொடர்ந்திருந்தது. ‘தாராண்மைவாதிகள்’ மற்றும் ‘நவீனத்துவவாதிகள்’ எதிர் ‘தீவிரவாதிகள்’ மற்றும் ‘அடிப்படைவாதிகள்’ எனும் இரு பிரிவினர் காணப்பட்டனர். இதில் ஆயத்துல்லாஹ் கொமெய்னியினால் ஆதரவு வழங்கப்பட்ட இரண்டாவது அணியினர் புரட்சிக்கு முன்னர் அதிகாரத்திலிருந்தவர்களை வெளியேற்றி புரட்சிக்குப்  பிந்திய அரசை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் போராட்டத்தில் வெற்றி பெற்றனர்.

இந்த முதலாவது காலகட்டமானது ஈரான்-ஈராக் யுத்தத்தின் (1980-88) செல்வாக்குக்குட்பட்டிருந்தது. மேலும் இக்காலப்பகுதியில் இஸ்லாத்திற்கெதிரான நவீனத்துவப் பார்வை கொண்டவர்கள் மற்றும் சீர்திருத்தக் கோரிக்கையாளர்கள் மீது கடுமையான அடக்குமுறைகளும் பிரயோகிக்கப்பட்டன. கலை மற்றும் பண்பாடுகளையும் அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தீவிரமாக முயற்சித்த ஒரு காலப்பகுதியாகவும் இது விளங்கியது. அதனால் கலாசாரப் புரட்சிக்கான ஒரு குழுவும் இந்த ஆட்சியின் போது நிறுவப்பட்டிருந்தது. அனைத்துக் கலைகளையும் மற்றும் பண்பாட்டு செயற்பாடுகளையும் இஸ்லாமியமயப்படுத்தும் ஒரு கட்டளைச் சட்டத்துடன் பண்பாடு மற்றும் கலைகளுக்கான அமைச்சு பின்னர் பண்பாடு மற்றும் இஸ்லாமிய வழிகாட்டல் அமைச்சாக மாறியது. இவ்வமைச்சின் பல்வேறு பிரிவுகளுக்கூடாக 1980களின் ஆரம்பப் பகுதியில் தனித்துவமான இஸ்லாமியப் பின்னணிலான சினிமாவின் உருவாக்கத்திற்கு அரசு உற்சாகமளித்தது. இதனால் அந்தக் காலப்பகுதியில் தரமான சினிமா எதுவும் உருவாகவில்லை. மேலும் பெண்கள் தயாரிப்பாளர்களாக பணியாற்றியிருந்தும் கூட  கெமராவுக்குப் பின்னால் அவர்களின் தரிசனம் நிகழ்ந்திருந்த போதும் பெண்களும் காதலும் கிட்டத்தட்ட முற்றாகவே திரையிலிருந்து நீக்கம் செய்யப்பட்டிருந்தனர். திரையில் பெண்களின் இருப்பு இல்லாத நிலையில் அன்பு, மனித உணர்வுகள் போன்றவை சிறுவர்களுக்கூடாக வெளிப்படுத்தப்பட்டது. இதனால் இக்காலப்பகுதியில் சிறுவர்களை மையப்படுத்திய கதைகள் திரையை அதிகமும் ஆக்கிரமித்திருந்தது. 1980களின் மத்திய பகுதியில் பிக்ஹ் அடிப்படையிலான இந்தக் கருத்தியல் படிப்படியாக தளர்த்தப்பட்டது. தரமிக்க படைப்புகளின் காலம் உதயமானது. இதனால் ஈரானிய சினிமா மீண்டும் சர்வதேச கவனயீர்ப்பைப் பெறத் தொடங்கியது.

முதலாவது காலகட்டத்தின் இறுதித் தருவாயில், அப்துல் கரீம் சொரூஸ் மற்றும் Mohsen Makhmalbaf போன்ற இஸ்லாமிய அறிவுஜீவிகளும் கலைஞர்களும் இஸ்லாமியக் கொள்கைகள் குறித்த தவறான புரிதல்களை நீக்கினர். பிக்ஹை அடிப்படையாகக் கொண்ட ஆட்சி மீதான எதிர்வினைகள் உருவாகத் தொடங்கின.  சொரூஸின் நவீன இஸ்லாமிய சிந்தனைகளுக்கும் மொஹ்ஸீன் மெக்மல்பஃபின் புதிய சினிமாவுக்கமிடையில் ஒரு இணைவுத்தன்மை காணப்பட்டது.

குறுங்குழுவாதத்தின் புதிய சுற்று

1988 ல் ஈராக்குடனான யுத்தம் முடிவடைந்தது. 1989ல் நிகழ்ந்த ஆயத்துல்லாஹ் கொமெய்னியின் மரணம் அதிகாரக் கட்டமைப்பில் ஒரு சிறு மாற்றத்தைக் கொண்டு வந்தது. ஆயத்துல்லாஹ் கொமெய்னி ஆன்மீகத் தலைவராகவும் அலி-அக்பர் ஹாஸிமி ரப்ஸன் ஞானி ஜனாதிபதியாகவும் ஆனபோது ஒரு புதிய சகாப்தம் ஆரம்பமாகியது. “மீள்கட்டுமானம்” என்பதை அது குறித்து நின்றது. இஸ்லாம் பற்றிய பல்வேறுபட்ட நோக்குநிலைகளுக்கிடையில் காணப்பட்ட அதிகரித்த பதட்டமான நிலமைகள் மற்றும் இஸ்லாமியக் குடியரசுக்குள் காணப்பட்ட ‘இடதுசாரிகள்’ மற்றும் ‘வலதுசாரிகள்’ எனும் இரு வகையான ஆட்சியாளர்களுக்கமிடையில் காணப்பட்ட பதட்டநிலமைகளால் அது குறித்துக் காட்டப்பட்டது.

இஸ்லாமியக் குடியரசுக்குள் ஆளும் குழுக்களுக்கிடையிலும் அதாவது வலதுசாரிகள் மற்றும் இடதுசாரிகள் என அழைக்கப்பட்ட இவ்விரு பிரிவினரையும் கொண்டிருந்த எதிர்ப்பாளர்களதும் அடிப்படைவாதிகளினதும் தந்திரோபாயக் கூட்டமைப்பானது இப்பொழுது பிளவுபடத் தொடங்கியது. கொமெய்னியின் செல்வாக்குக்குட்பட்டிருந்த இடதுசாரிகள் அவர்களுடைய அமைச்சுப் பதவிகள், பாராளுமன்றப் பிரதிநிதித்துவம், நீதித்துறையில் அவர்கள் கொண்டிருந்த செல்வாக்கு போன்றவற்றை படிப்படியாக இழந்தனர். குறுங்குழுவாதத்தின் இப்புதிய சுற்று கலை மற்றும் கலாசாரத்திலும் கவனத்தைச் செலுத்தியது.

கலாசாரப் புரட்சி எனும் சிந்தனை கலாசார ஆக்கிரமிப்புக்கு பாதை அமைத்துக் கொடுத்தது. உள் எதிரிகளை (இடதுசாரி எதிரிகளை) இல்லாமல் செய்வதற்கும், மதிப்பிறக்கம் செய்வதற்கும் வலதுசாரிகளின் கருத்தியல் ஆயுதமாக அது மாறியது. இது சில ஆரம்பகால தீவிரவாதிகளையும் எதேச்சதிகாரக் கருத்தியல்களிலிருந்து படிப்படியாக வெளியேறிக் கொண்டிருந்த அடிப்படைவாதிகளையும் உள்ளடக்கியிருந்தது. அத்துடன் மிதவாதத்தையும் தாராண்மைவாதத்தையும் அது விருத்தி செய்து கொண்டிருந்தது. பின்னர் இந்தக் குழுவில் சில மிதவாதிகளும் தாராண்மைவாதிகளும் (தற்போது மதத் தேசியவாதிகள் என அறியப்படுகின்றனர்) மதச்சார்பற்றவர்களும் (வெவ்வேறுபட்ட சிந்தனையாளர்கள்) இணைந்து கொண்டனர்.

அவர்கள் 1997ல் தோற்றம் பெற்ற சீர்திருத்தவாத இயக்கத்தின் முதுகெலும்பாக மாறினர். வலதுசாரிப் பிரிவினர் அவர்களின் தாக்குதலை கலாசார அமைச்சு மீது தீவிரப்படுத்தினர். முகம்மத் கத்தாமி 1982லிருந்து அமைச்சராக இருந்தார். அவர் உள்நாட்டு சினிமாத்துறையின் வளர்ச்சிக்கான அடிப்படையை இட்டார். அத்துடன் திறந்த கலாசாரக் கொள்கையின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பின் ஓரங்கமாக சுதந்திர ஊடகம் மற்றும் உள்நாட்டுச் சினிமாவின் வளர்ச்சிக்கான அடித்தளத்தையிட்டமை போன்றவற்றைக் குறிப்பிடலாம். ஃபாராபி சினிமா பவுண்டேசன் எனும் செமி கவர்ன்மென்ட் அமைப்பொன்றை அவர் உருவாக்கினார். வெளிநாட்டுப் படங்களின் மீது ஒரு பகுதியளவான தடை விதிக்கப்பட்டதோடு உள்நாட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு நிதி உதவியும் வழங்கப்பட்டது.

ஆனால் ரப்ஸன் ஞானி கலாசார அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுப்பதை விரும்பவில்லை. இதனால் அவர் கத்தாமியைக் கைவிட்டார். இதன் விளைவாக கத்தாமி தனது பதவியை 1992ல் இராஜினாமாச் செய்ய வேண்டி ஏற்பட்டது. அதேநேரம் வலதுசாரிப்பிரிவினர் தலைவரினால் வழங்கப்பட்ட உதவிகளை அனுபவித்து மகிழ்ந்தனர். அத்துடன் அதிகாரத்தையும் அவர் (ரப்ஸன் ஞானி) முமுமையாகப் பற்றிக் கொண்டார். இது 1980களின் பிற்பகுதியில் ஒரு திறந்த கலாசாரக் கொள்கையின் முடிவினையே அறிவித்தது. பழைமைவாத மதகுருக்களான வலதுசாரிகளினால் இந்த நிலமை மேலும் தொடரப்பட்டது. அவர்கள் பண்பாட்டு மற்றும் கலைப் படைப்புகள் மீதான பிக்ஹ் அடிப்படையிலான பார்வையை மேலும் திணித்தனர்.

சமூக விமர்சனமாக சினிமா

ஆனால் அது மிகவும் தாமதமாக இருந்தது. தடை செய்யப்பட்ட விடயங்களாக இருந்த பெண்கள் மற்றும் காதல் போன்றன ஏற்கனவே திரைமறைவில் வெளிப்படுத்தப்பட்டே இருந்தது. மொஹ்சீன் மக்மல்பஃபின் திரைப்படமான A TIME TO LOVE’  (1991) இது புதிய அணுகுமுறைக்கான தொடக்கத்தைக் குறித்து நின்றது. இத்திரைப்படமானது தடைசெய்யப்பட்ட விடயமான காதல் முக்கோணத்துடன் (ஒரு பெண், இரு ஆண்கள்;)தொடர்பானது. A TIME TO LOVE’ அதிர்ச்சிகரமானதாக இருந்தது. இந்த அதிர்ச்சிக்குக் காரணம் இப்படத்தின் மூலம் இஸ்லாத்துக்காகத் தன்னை அர்ப்பணித்த தயாரிப்பாளர்களின் நிலமையில் மாற்றத்தை ஏற்படுத்தியது மட்டுமன்றி ஒரு சென்சிடிவ்வான கதைப்போக்கையும் அவர் தெரிவு செய்திருந்ததாகும். அவரது செய்தியை அறிவிப்பதற்கு அவர் ரொமான்டிசத் தன்மையான காதல் கதையை தெரிவு செய்திருந்தார். துருக்கியில் படமாக்கப்பட்ட அத்திரைப்படம் ஈரானின் பொதுத் திரையரங்குகளிலன்றி பஜ்ர் திரைப்பட விழாவில் மட்டுமே காண்பிக்கப்பட்டது.

இக்காலகட்டத்தில் பெண் திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஆண் நோக்கிலிருந்து (Male Vision) விடுபட்டு பெண் பாத்திரங்களையும் காதலையும் தெளிவாக வெளிப்படுத்தும் திரைப்படங்களை உருவாக்கத் தொடங்கினர். அத்தகைய படங்களுள் ரக்ஸான்-பனி-இதிமாத்தின் Nargess(1992) எனும் திரைப்படம் மிக முக்கியமானதாகும். அது இன்னொரு காதல் முக்கோணக்(இரு பெண்கள்;, ஒரு ஆண்) கதையாகும். அத்திரைப்படம் 1992ம் ஆண்டு பஜ்ர் திரைப்பட விழாவில் விருதை வென்றெடுத்தது.

சுதந்திர ஊடகமல்லாத இக்காலப் பகுதியில் சமூக விமர்சனமாக சினிமா வந்தது. அதன் விமர்சன முறைமையானது வெளிநாட்டு இரசிகர்களையும் சென்றடையக்கூடியதாக இருந்தது. ஈரானின் இந்த தனித்துவ நிலமையை அதன் மாற்று முகமாக (Alternative face) சர்வதேசத்துக்கு எடுத்துக் காட்டியது. கலாசார அமைச்சினை ஆட்டுவிக்கின்ற வலதுசாரியினரின் பழைமைவாதக் கொள்கைகள் திரைப்படத் தயாரிப்பாளர்களை அரசியல் மயப்படுத்தியது. 1997 ஜனாதிபதித் தேர்தலின் போது முதன்முதலாக திரைப்படத் தயாரிப்பாளர்கள் தமது உள்ளார்ந்த அரசியல் மனோநிலைகளை வெளிப்படுத்தினர். கிட்டத்தட்ட ஒட்டுமொத்த சினிமா சமூகமும் முகம்மத் கத்தாமியை ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுத்தனர். அவருடைய அரசியல் பிரச்சாரங்கள் வர்த்தகரீதியாக திரைப்படத் தயாரிப்பாளரான சைபுல்லாஹ் டாட் இனால் உருவாக்கப்பட்டன. மேலும் ஏனைய திரைப்படத் தயாரிப்பாளர்களும் அவருக்கு ஆதராவாகப் பேசினர்.

மீளிணக்கத்துக்கான ஊடகமாக சினிமா

காத்தமியின் எதிர்பாராத தேர்தல் வெற்றியையடுத்து, சமூக மெய்மைகளுக்கு பிக்ஹ் அடிப்படையில் விளக்கமளித்து வந்த பழைமைவாதிகளின் கட்டுப்பாட்டிலிருந்து கலாசார அமைச்சு சுதந்திரமடைந்தது. தவிர, அதிக சகிப்புத் தன்மையுள்ள கலாசாரக் கொள்கைகளுக்காக நீண்டகாலமாகவே வாதிட்டு வந்த சீர்திருத்தவாதிகளின் கட்டுப்பாட்டின் கீழ் கலாசார அமைச்சு வந்தது. இந்தப் புதிய யுகமானது ‘மூன்றாம் குடியரசு’ என அழைக்கப்பட்டது. இக்காலகட்டமானது ஈரானியத் திரைப்படங்களுக்கு முன்னால் இருந்த தடைகளைக் குறைத்தது. பொது அரங்கில் தடைசெய்யப்பட்டிருந்த பெண்கள் மற்றும் காதல் போன்ற விடயங்களைப் பேசும் தஹ்மினாஹ் மிலானியின் Two women (1998), பணி எதிமாத்தின் Lady of may (1998) போன்ற படங்கள் இந்தக் காலப்பகுதியிலேயே வெளியாகின.

இக்காலகட்டத்தின்  முக்கிய அம்சங்களாக தனிமனித சுதந்திரத்தைக் கோரும் புதிய குரல்கள் தோற்றம் பெற்றமையும், பிக்ஹ் அடிப்படையிலான பால்நிலை உறவுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டமையையும் குறிப்பிடலாம். பால்நிலை வகிபங்குகள் குறித்து விமர்சனரீதியாகவும், திறந்த மனதுடனும் உரையாட முனைந்த திரைப்படங்களில் இத்தகைய குரல்களைக் கேட்க முடிகிறது. அவை பிரதான கதைக் கருவாக காதலை வெளிப்படுத்தின. 1990களில் சர்வதேச அளவில் இரானிய சினிமாவுக்கான பாராட்டுதல்கள் வந்து குவிந்தன. ஈரானியத் திரைப்படங்கள் ஈரானிலிருந்து இடம்பெயர்ந்து சென்று நாடற்றவர்களாகவிருந்த ஈரானியர்கள் தங்கள் நிலத்துடன் தமது உறவினை மீளப் புதுப்பிக்கவும் ஈரானிய சினிமா உதவியது. வெளிநாடுகளில் வசித்து வந்த ஈரானியர்கள் வெட்கப்படாதவகையில் ஈரானிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ஒரேயொரு விடயமாக திரைப்படங்கள் மட்டுமே இருந்தன.

இந்தப் புதிய யுகம் இன்னும் முன்னேற்றங் கண்டபடியேயுள்ளது. இன்று ஈரான் இறையியல் ஆட்சியிலிருந்து ஜனநாயக ஆட்சிக்கு மாறியுள்ளது. 1980களில் கோலோச்சிய தீவிரவாதக் கருத்தாடல்கள் தற்போது பன்மைத்துவக் கொள்கைகளால் சவாலுக்குட்பட்டு மிகவும் சகிப்பத் தன்மையுள்ள ஓர் அரசியல் சூழல் படிப்படியாக வளர்ந்துள்ளது. இந்த மாற்றத்தில் ஏனையகலை பண்பாட்டு வடிவங்களைப் போன்ற சினிமாவும் ஒரு பிரதான இடத்தைக் கொண்டுள்ளது. அது ஒரு புதிய சமூக விமர்சனத்தைத் தோற்றுவித்தது மாத்திரமின்றி உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் ஈரானியர்களுக்கிடையில் மீளிணக்கத்துக்கான ஓர் ஊடகமாகவும் உள்ளது.

௦௦௦

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment