Home » இதழ் 08 » (ஈழப்போரின் நான்காம் கட்டத்தில்) நடந்த நிகழ்ச்சிகள்-கருணாகரனின் தொடர்…03

 

(ஈழப்போரின் நான்காம் கட்டத்தில்) நடந்த நிகழ்ச்சிகள்-கருணாகரனின் தொடர்…03

 

ஈழப்போராட்டம் பற்றிய பதிவுகளும் விமர்சனங்களும் மறுபார்வைகளும் முன்வைக்கப்பட்டுவரும் காலம் இது. கனவுகளும் இலட்சிய வேட்கையும் கருகிப் போன நிலையில் ஒவ்வொருவரும் தாம் செயற்பட்ட தளங்களில் இருந்து தங்கள் அனுபவங்களையும் தாங்களறிந்த விசயங்களையும் தாம் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகளையும் பதிவு செய்து வருகின்றனர். கூடவே விமர்சனங்களுக்குட்படுத்தியும் வருகின்றனர். இது ஒரு வகை. இந்த வகை எழுத்துகள் மேலும் பலவாகத் தொடரவுள்ளன.

இதேவேளை ஈழப்போரின் நான்காம் கட்ட நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்கள் இன்னொரு தளத்தில் பரவலாக எழுதப்பட்டும் வெளிப்படுத்தப்பட்டும் வருகின்றன. விக்கி லீக்ஸ், சனல் – 4 காட்சிகள் தொடக்கம், ஐ.நா அறிக்கை,கோடன் வைஸின்  The Gaje(கூண்டு), பிரான்ஸிஸ் ஹரிசனின் (Frances Harrison) Still Counting the Deadபோன்ற நூல்கள், வன்னிப்போர் நாட்கள் பற்றி அந்தப் போரிலே சிக்கியிருந்த பலரும் பத்திரிகைகளில் எழுதிய தொடர் கட்டுரைகள், காத் நோபிளின் கட்டுரை, கே.பி என்ற குமரன் பத்மநாதனின் நேர்காணல்கள்,  அமைதிப்பேச்சுகளின் நாயகமாக இருந்த எரிக் சொல்கெய்ம் தெரிவித்த கருத்துகள், அண்மையில் இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது ஐ.நா. செயற்பட்ட விதம் தொடர்பாக சார்லஸ் பெட்றி தலைமையிலான குழு தயாரித்துள்ள அறிக்கை வரை ஏராளம் தரப்புப் பதிவுகளும் சாட்சியங்களும் வெளிப்படுத்தல்களும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. மேலும் ‘விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள், சாத்திரி எழுதிவரும் ‘பங்கு பிரிப்புகளும் படுகொலையும்’ போன்ற தொடர்களும்.

இவற்றை ஒட்டுமொத்தமாக அவதானிக்கும்போது பல உண்மைகள் நிரூபணமாகின்றன. ஈழப்போராட்டத்தில் என்ன நடந்தது, அவையெல்லாம் எப்படி நடந்தன என்ற உண்மைகள். இத்தகைய பல தரப்பு வெளிப்பாடுகள்தான் வரலாற்றின் சிறப்பாகவும் வடிவமாகவும் அமைகின்றன.

இறுதிப்போர்க் கால நிகழ்ச்சிகள், அவற்றின் பின்னணிகள் பற்றிச் சுருக்கமாக நானும் ஏற்கனவே காலச்சுவடு உள்ளிட்ட சில இதழ்களில் எழுதியிருக்கிறேன். நான் சம்மந்தப்பட்டவற்றையும் என்னால் அறியப்பட்டதையும் நாம் அனுபவித்ததையும் அந்தப் பதிவுகளில் வெளிப்படுத்தியிருக்கிறேன். இன்னும் அத்தகைய ஒரு வெளிப்படுத்தலையே தொடர்ந்தும் இங்கே ‘எறியப்பட்ட எல்லாக் கற்களும் பூமியை நோக்கியே வருகின்றன’ என்ற இந்தச் சிறு தொடரில் எழுதி வருகிறேன். இது வரலாற்றுக்கு என் தரப்பிலிருந்து வழங்கப்படும் ஒரு சாட்சியமளித்தலே.

இத்தகைய அனுபவங்களும் அறிதல்களும் பலருக்கும் பலவிதமாக உண்டு. அவர்களுடைய சாட்சியங்கள் இன்னொரு விதமாக அமையும். அவர்களுடைய அறிதல்கள், அனுபவங்கள், அவர்கள் சார்ந்த நிகழ்ச்சிகளின் வழியாக. ஆனால், எந்தத் தரப்பிலிருந்து வெளிப்பட்டாலும் சாட்சியங்கள் உண்மையாக இருக்க வேண்டும். அப்படி இருப்பதே சரியான வரலாகும். பொய்களின் வரலாறு மீளவும் குருதி சிந்த வைப்பதிலும் இருண்ட யுகமொன்றை அந்த வரலாற்றைக் கொண்ட சமூகங்களுடைய மடியில் கொண்டு வந்து இறக்குவதாகவுமே அமையும்.

வரலாற்று உண்மைகளை வெளிப்படுத்துவது என்பது ஒரு அவசியமான பணியாகும். அவற்றை வெளிப்படுத்துவதில் பலருக்கும் பலவிதமான சங்கடங்கள் இருக்கலாம். காலநேரப் பொருத்தப்பாடுகள் குறித்த அபிப்பிராய பேதங்கள் இருக்கலாம். ஆனால், உரிய காலத்தில் சிகிச்சை செய்யப்படாத நோய் பேராபத்தையே விளைவிக்கும் என்பது பொது அனுபவம். அதைப்போல உரிய காலத்தில் உரிய விசயங்களைச் சொல்ல வேண்டியது காலக்கடமை. அதைச் சரியாகச் செய்யவேண்டியது அவசியப் பணி.
பலரும் தமது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றமாதிரியே எழுத வேண்டும் என விரும்புகிறார்கள். இது தவறு. நம் பிள்ளைகளுக்கு பொய்களைச் சொல்லிச் சொல்லியே அவர்களை வளர்த்தால் அவர்களின் பயணத்திசையும் பயணமும் வேறாகவே அமையும். அவர்கள் சென்றடைகின்ற புள்ளியும் வேறாகவே இருக்கும். அதைப்போலவே நாம் சமூகத்துக்கும் பொய்களைச் சொல்ல முடியாது. அல்லது உண்மைகளை மறைக்க முடியாது. அப்படி உண்மைகளை மறைத்து பொய்களையும் கற்பிதங்களையும் முன்னிலைப்படுத்தும்போது அந்தச் சமூகம் தவறான வழிகளிலேயே பயணித்து, பாதகமானதொரு புள்ளியைச் சென்றடையும்.
நமது அதீத கற்பிதங்களே நமது தோல்விகளுக்கும் பின்னடைவுக்கும் காரணம் என்பது நமது அனுபவமாகவே உள்ளது. ஆகவேதான் சுயவிமர்சனங்கள் இன்று அவசியமாகப் படுகின்றன. அந்த உணர்வோடு எழுதப்படும் வரலாற்றுக் குறிப்புகள் முக்கியமானவை. அவற்றுக்கு ஒரு பெரும் பங்களிப்புள்ளது.

வரலாறு ஒரு போதும் தட்டையானதோ ஒற்றைப்படையானதோ அல்ல. யாருடைய விருப்பு வெறுப்புகளைச் சார்ந்தும் இருப்பதில்லை. அது உள்ளபடி, உண்மையின் அடிப்படையில் இருக்கும். புனைவதும் மறைப்பதும் வரலாற்றுக்கு இழைக்கும் துரோகமாகும். அது வரலாற்றுக்கு மட்டுமல்ல அந்த வரலாற்றைப் புனைந்திருக்கும் சமூகத்துக்கும்தான்.

ஒற்றைப்படையான வரலாறாக இருந்தால் அது அதிகாரத்தின் வரலாறாகவே இருக்க முடியும். அல்லது வரலாற்றின் அதிகாரமாகவே அது அமையும். உண்மையில் வரலாறு என்பது பன்முகமுடையது. அது வௌ;வேறு நிலையிலான பல கலவைகளின் வெளிப்பாடு. பல தரப்பினர், பல்வேறு மனிதர்கள், பல நிகழ்ச்சிகள், பல நிலைமைகள் எனப் பலவற்றின் கலவையில் இருந்து உருவாகும் ஒரு வடிவம். ஆகவே தனி நபர் ஒருவர் எழுதுவது மட்டுமே வரலாறு என்று ஆகிவிடாது. அத்தகைய குறுகலான எண்ணத்தோடு எழுதும் வரலாற்றை நவீன அறிவியல் கேள்விக்குட்படுத்தியே பல காலமாயிற்று.
தவிர, என்னுடைய இந்தப் பதிவிலும் யாரையும் குற்றம்சாட்டுவதோ அல்லது எந்தத் தரப்பையும் தவறாக விமர்சிப்பதோ, கீழிறக்குவதோ நோக்கமல்ல. மிகப் பெரும் சேதங்களைத் தரும் இயற்கை அனர்த்தமாயினும் சரி, செயற்கையான போர் போன்ற நிகழ்ச்சிகளாயினும் சரி, அவற்றின் காரண காரியங்களை ஆராய்வது சமூக இயல்பும் தவிர்க்கவே முடியாத ஒரு பொறிமுறையும்கூட. அந்த வகையில் என்னுடைய பதிவும் ஒன்று. இது போல எதிர்காலத்தில் ஏராளம் பதிவுகள் வெளிவரப்போகின்றன.

இது தவிர்க்கவே முடியாதது. இது விக்கி லீக்ஸ் யுகம்.
00

=========================================

எறியப்பட்ட எல்லாக் கற்களும்
பூமியை நோக்கியே வருகின்றன’

– கருணாகரன்

   ———————————————————————————————————————————————————————-

– 03 –

இலங்கைக்கான அமெரிக்கத்  தூதுவராக (2003 – 2006) இருந்த ஜெப்ரி லூன்ரெட் என்பவரின் ஆய்வில் ஒரு அறிக்கையை அமெரிக்கத் தரப்பு வெளியிட்டது. அநேகமாக அது 2006 இன் இறுதிப் பகுதி என நினைவு. அந்த அறிக்கை புலிகளால் தமிழாக்கம் செய்யப்பட்டு உட்சுற்றில் முக்கியமானவர்களின் வாசிப்புக்கு விடப்பட்டிருந்தது. முப்பத்திஐந்து பக்கங்கள் வரையிலான அறிக்கை அது.

அந்த அறிக்கையின் முக்கிய கவனம், பேச்சுவார்த்தையின் முறிவுக்கு என்னென்ன காரணங்கள் அடிப்படையாக அமைந்தன என்பதைக் கண்டறிவதே. அத்துடன் இந்தப் பேச்சுவார்த்தைக் காலத்தில் இலங்கை  விசயங்களில் – குறிப்பாக புலிகளுடனான அமெரிக்காவின் அணுகுமுறைகள் எப்படி அமைந்தன? எப்படி அமைந்திருக்க வேண்டும்? என்பதைப்  பற்றிய மதிப்பீடாகவும் அது அமைந்திருந்தது.

2002 இல் ஆரம்பிக்கப்பட்ட புலிகள் அரசுப் பேச்சுவார்த்தை என்பது செம்ரெம்பர் 11 க்குப் பின்னரான அமெரிக்க நிகழ்ச்சி நிரலின் ஒரு நடவடிக்கையே. இதை அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் நோர்வேயின் அனுசரணையுடன் மேற்கொண்டது. இந்தியாவுக்கும் இதில் அரைகுறை விருப்பம். இதற்குக் காரணம், தனியே புலிகளைக் கையாள முடியாத ஒரு யதார்த்தத்தில் இந்தியா சிக்கியிருந்தது. எனவே புலிகளைக் கையாளும் விசயத்தில் அது தன்னுடைய கூட்டாளிகளான மேற்குடன் ஒரு சமரசத்திற்கு வரவேண்டியிருந்தது. அதேவேளை இலங்கை தொடர்பான விசயத்தில் எந்த நிலையிலும் தன்னுடைய பிடி முற்றாகத் தளர்ந்து விடுவதையும் அது விரும்பவில்லை. எனவே, பேச்சுகளின்போதும் யுத்தத்தின்போதும் அது தன்னுடைய இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள விரும்பியது. இதனால், பேச்சுகளில் மத்தியஸ்தப் பொறுப்பை வகித்த எரிக் சூல்கெய்ம் ஒஸ்லோவிலிருந்து டில்லி சென்று கொழும்புக்கு வருவார். அல்லது கொழும்பிலிருந்து டில்லி சென்று ஒஸ்லோ சேர்வார். இப்படியான ஒரு தவிர்க்க முடியாத பொறியமைப்பை இந்தியா பேணியது. இந்தியாவின் இந்த மறைமுகமான நிபந்தனையை நோர்வேயும் மேற்கும் ஏற்றுமிருந்தன.

இந்தப் பேச்சுவார்த்தையின் மூலம் புலிகளை அவர்களின் போர்க்குணாம்சத்திலிருந்து தணித்து வெகுஜன அரசியல் நீரோட்டத்துடன் இணைத்து விடுவதே மேற்படி கூட்டணியின் பிரதான நோக்கம். சர்வதேசப் பார்வையில் அச்சுறுத்தலுக்குரிய அம்சங்களைத் தங்களுடைய போர் முறையிலும் அரசியல் முறைமையிலும் கொண்டிருந்த புலிகளை குணமாற்றம் செய்வதன் மூலம் செம்ரெம்பர் 11 இன் பின்னான நெருக்கடிகளை குறைக்கலாம் என்பதே இதன் அடிப்படை.

அதாவது ஜனநாயக வழிமுறைகளில் புலிகளை இணைத்து அந்த  நடைமுறைகளைப் பின்பற்றும் ஒரு அமைப்பாக மாற்றிவிடுவது. இப்படி மாற்றுவதன் மூலம் புலிகளைப்போன்ற அமைப்புகளுக்கு ஒரு முன்மாதிரியை ஏற்படுத்துவது.

இந்த நோக்கத்தில் இந்தக் கூட்டணி ஆரம்பத்தில் நம்பிக்கை வைக்குமளவுக்குச் சில சமிக்ஞைகளும் தென்பட்டன. பாராளுமன்ற அரசியலில் நம்பிக்கை அற்றிருந்த அல்லது அதை முற்றாகவே நிராகரித்து வந்த புலிகள் முதற்தடவையாக ஒரு மெல்லிய நெகிழ்ச்சிக்குட்பட்டு தங்களின் சார்பாக ஒரு அணியைத் தேர்தலில் இறக்கினர். புலிகளின் குணாம்சத்திலும் அவர்களுடைய அரசியல் முறைமைகளிலும் மாற்றங்களை விரும்பிய மேற்கு அன்ரன் பாலசிங்கத்தின் மூலமாகவும் உள்ளுரில் உள்ள சில சக்திகளின் மூலமாகவும் இதற்காக முயன்றது. இந்த இருவழி முயற்சியின் விளைவாக உருவாகியதே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு.

ஆனால், இந்தப் பெரிய ஏற்பாடுகளுடனும் வியூகங்களுடனும் நோக்கத்துடனும்  மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை எதிர்பார்த்ததற்கும் எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கும் மாறாக இடையில் முறிவடையத்தொடங்கிவிட்டது. மேற்கு நாடுகளும் இந்தியாவும் என்ன மாதிரியான சிறப்பான விருப்பத்தைக் கொண்டிருந்தாலும் அரங்கிலே பேசுவதும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதும் புலிகளும் இலங்கை அரசுமே.

ஆனால், இரண்டு தரப்புகளும் தங்கள் மரபுரீதியான சந்தேகங்களிலிருந்தும் பிடிவாதங்களிலிருந்தும் மரபுரீதியான குணாம்சத்திலிருந்தும் வெளியேறவில்லை. அவற்றை விட்டுக்கொடுக்கவும் விரும்பவில்லை. எதையும் விட்டுக்கொடுக்க விரும்பாத ஒரு பாரம்பரியத்தைக் கொண்டிருந்த கடும்போக்குடைய இரண்டு தரப்பையும் சமாளித்து வழிக்குக் கொண்டு வருவதற்கான பல கட்ட முயற்சிகள், பல வடிவங்களில் மேற்கொள்ளப்பட்டபோதும் அவை எல்லாமே பயனற்றுப்போயின.

எனவே போருக்கான ஆரம்ப முளைகள் கருக்கட்டத்தொடங்கின.

ஆனால், புலிகளை முற்றாக அழித்து விடும் ஒரு யோசனையை விட அவர்களைப் பதப்படுத்திக் கையாளலாம் என்பதே இறுதிவரையில் மேற்குலகத்தின் விருப்பமாக இருந்தது.

அது முடிந்த அளவுக்கு நோர்வேயினூடாகவும் பிற வழிகளிலும் முயற்சிக்கப்பட்டது.

ஏனெனில் இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் எண்பதுகளின் நடுப்பகுதியில் இருந்து பல பேச்சுகள் நடந்துள்ளன. இந்தியாவின் மத்தியஸ்துவத்துடன் நடந்த பேச்சுகளும் சரி, இலங்கை இந்திய உடன்படிக்கையும் சரி நடைமுறையில் தோல்விகளையே தந்திருந்தன. இந்தத் தோல்விகள் அல்லது முறிவுகளின் பின்னான நிலைமை பெரும் பாதகமாகவே அமைந்தது. பேச்சுக்கள் முறியும்போது போர் உக்கிரமாக வெடிக்கும். உக்கிரமாக வெடிக்கும் போரினால் சனங்களின் வாழ்க்கை  மிக நெருக்கடிக்குள்ளாகும். முக்கியமாகச் சனங்கள் ஒவ்வொரு பேச்சுவார்த்தை முறியும்போதும் அல்லது உடன்படிக்கைகள் மீறப்படும்போதும் பெரும் சேதங்களையும் அழிவுகளையும் நெருக்கடிகளையும் சந்தித்தனர். அதேவேளை புலிகளின் எழுச்சி அல்லது அவர்களுடைய நடவடிக்கைகள் தீவிரமடையும்.

இதற்குப் பல காரணங்கள் உண்டு. ஒவ்வொரு அமைதிக்காலத்திலும் அல்லது பேச்சுவார்த்தைக் காலத்திலும் புலிகளின் தொடர்பாடல்களும் நடவடிக்கைப் பிராந்தியமும் வடக்குக் கிழக்குக்கு அப்பால் விரியும். இதன்மூலம் அவர்கள் அடுத்த கட்டப் போருக்கும் தமது அரசியலுக்கும் தாரளமான வளங்களையும் வாய்ப்புகளையும் பெற்றுக்கொண்டு விடுவர். இது புலிகளின் வளர்ச்சியை மேலும் ஊக்கப்படுத்தும்.

அதேவேளை தொடர் அழுத்தங்களுக்குள்ளாகியிருக்கும் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதி மக்களுடைய வாழ்க்கை நெருக்கடிகளை இந்தப் பேச்சுவார்த்தைக் காலம் சற்றுத் தணித்து, மூச்சுவிடக் கூடிய நிலைமையைத் தந்திருக்கும்.

ஆகவே மீண்டும் ஒரு போரை முழு வேகத்தோடு தொடங்குவதற்கு புலிகளுக்கு பேச்சுவார்த்தைக் காலங்கள் ஏதோவகையில் உதவியிருக்கின்றன.  இந்த வளர்ச்சி நிலையானது புலிகளை உள்நாட்டுக்கு அப்பால், பிராந்தியத்துக்கு அப்பால், சர்வதேச அளவில் கவனம் பெற வைத்தது. ஆனால், புலிகளின் இந்த வளர்ச்சி, செப்ரெம்பர் 11 க்குப் பின்னரான அமெரிக்க உளவியலிலும் அரசியலிலும் அச்சத்தை ஏற்படுத்துவதாக அமைந்ததே பிரச்சினைக்குரியதாகியது. ஆகவே அது புலிகளுக்கு எதிரான தடையையும் தீவிரப்படுத்தியது.

இங்கே நாம் இன்னொரு விசயத்தையும் கவனிக்க வேண்டும். செப்ரெம்பர் 11 க்குப் பிந்திய மேற்கின் அணுகுமுறையானது ஆயுதமேந்திய அமைப்புகளை முடிவுக்குக் கொண்டு வரும் தீர்மானத்தை எடுத்திருந்தபோதும் புலிகள் தொடர்பாக அது அப்படிச் செய்யவில்லை. இதற்குக்காரணம், புலிகளின் ஆதரவாளர்களில் வலுவான ஒரு தரப்பினராகிய புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தினர் மேற்குலகுடன் இசைவாக்கம் கொண்டிருந்தமையாகும்.

நடந்த பேச்சுகளிலும் அத்தகையவர்களின் பங்கேற்பிருந்தது. உருத்திரகுமாரன், ஜோய் மகேஸ்வரன் உள்ளிட்ட பலரின் பங்கேற்பை இந்த வகையில் நினைவு கூரலாம்.   அத்துடன் புலம்பெயர்ந்த தமிழர்களை ஒரு காலத்தில் விமர்சித்த, பெரிய அளவில் பொருட்படுத்தாது விட்ட நிலையை மாற்றி, அவர்களுடைய தேவை புலிகளுக்கு அவசியம் என்ற நிலை உருவாக்கப்பட்டது. இயக்கத்தின் விரிவாக்கத்துக்கு புலம்பெயர் மக்களின் பொருளாதாரப் பங்களிப்பு தவிர்க்க முடியாதது,முக்கியமானது என்ற நிலை உருவானபோது அவர்களுடன் அனுசரித்துப் போவதும் புலிகளைப் பொறுத்தவரையில் தவிர்க்க முடியாததாகியது. இந்த நிலைமையை மதிப்பிட்ட மேற்குலகம், புலம்பெயர் தமிழ்ச் சக்திகளின் மூலமும் காய்களை நகர்த்தியது. புலிகளை மென்மைப்படுத்துவதற்கு இந்தச் சக்திகளின் மூலமாகவும் முயற்சித்தது.

பேச்சுகளின் போது புலிகளின் அணிகள் பல நாடுகளுக்குப் பயணிக்கக் கூடிய ஏற்பாட்டைச் செய்ததும் இந்த நோக்கத்தில்தான். ஆனால், இதற்கு இலங்கை அரசின் ஒப்புதலோ ஆதரவோ விருப்பமோ இருக்கவில்லை. அதை ஒருவாறு சமாளித்து, ஜனநாயகத்துக்குப் புலிகளை அழைத்து வரவேண்டுமானால், அந்த வழிமுறைகளைப் பழக்க வேண்டுமானால், தவிர்க்க முடியாமல் அவர்களை இப்படி வெளியுலகத் தொடர்பாடலில் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தியது மேற்கு. ஆனால், இதனை இந்தியா பெரிய அளவில் அங்கீகரிக்கவில்லை. மட்டுமல்ல, எந்தச் சந்தர்ப்பதிலும் புலிகளின் அணிகளை இந்தியா தன்னிடம் வரவழைத்துக் கொள்ளவோ, தொடர்புறுத்திக் கொள்ளவோ விரும்பவில்லை. இந்த விசயத்தில் அது உச்ச எச்சரிக்கையோடிருந்தது. என்றாலும் நடக்கும் நிகழ்ச்சிகளை, நிலைமைகளை அது உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தது.

ஆகவே மொத்தத்தில் புலிகளைப் பதப்படுத்தும் முயற்சிகள்தான் 2002 க்குப் பிந்திய நோர்வே அரசு தலைமையிலான பேச்சுவார்த்தையாக அமைந்தது. ஆனால், இந்தப் பேச்சுவார்த்தை முறியத் தொடங்கியபோதுதான் முன்னர் குறிப்பிட்டவாறு அவசர அவசரமாக அமெரிக்கா ஒரு ஆய்வை மேற்கொண்டது. ஏனெனில் பேச்சுக்கள் முறியும்போது நிச்சயமாக ஒரு யுத்தம் வெடிக்கும் என்பது அதற்குத் தெளிவாகவே தெரியும். அந்த யுத்தமானது சாதாரணமாக அமையாது. அது பல எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று அது கருதியது.

ஆகவே முடிந்தவரையில் யுத்தத்தத்தை தவிர்ப்பது. முடியாதபோது அதை எதிர்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது. ஆனால், யுத்தத்துக்குச் செல்லாமற் தடுப்பதே முதற்குறி என்றபடியால் நடந்த நிகழ்ச்சிகளில் என்ன தவறுகள் நடந்தன என்பதை அறியும் அவசியம் அமெரிக்காவுக்கு ஏற்பட்டது.

இதேவேளை புலிகளை ஜனநாயகப்படுத்துவதை – பண்புமாற்றத்துக்குட்படுத்துவதை ஒரு பரிசோதனை நடவடிக்கையாகவும் மேற்குலகம் செய்து பார்த்தது. அப்படி அது அமைதியை நோக்கியதாகச் சாத்தியப்படுமானால், போர் வீரர்களைத் தயார்ப்படுத்துவதை விடவும் சமாதானத்தூதர்களைத் தயார்ப்படுத்தலாம் என்று யோசித்தது.

ஆகவே யுத்தத்தை நோக்கியதாக நிலைமை இறுகிச் செல்வதற்கான காரணங்கள் என்ன? அதில் அமெரிக்கத்தரப்பின் குறைபாடுகள் எவை என்ற பார்வை முக்கியப்படுத்தப்பட்டது.

நேரடியாகப் புலிகளுக்கும் அமெரிக்காவுக்கும் முரண்பாடுகளோ பகையோ இல்லாதபோதும் சர்வதேச நியமங்களின் அடிப்படையில் அமெரிக்காவில் புலிகள் தடைசெய்யப்பட்ட அமைப்பு. ஆகவே நேரடியாக அமெரிக்கா புலிகளுடன் தொடர்பு கொள்ள முடியாது. வெளிப்படையாக தொடர்பாடல் எதனையும் பேணவும் முடியாது.

இந்த நிலையில் அது குறிப்பால், வெவ்வேறு உணர்நிலைகளால், இடைநிலைத் தொடர்பாடல்களால் என மாற்று வழிகளினாலேயே அதனுடைய தொடர்புகளும் உறவும் இருந்தது.

இது புலிகளிடம் போதிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அவர்களிடம் குறிப்பிட்ட திருப்தியையும் உருவாக்கவில்லை. குறிப்பாக லண்டனில் இருந்த அன்ரன் பாலசிங்கத்துடன் வெவ்வேறு வழிகளின் மூலமாக உணர்த்தப்பட்ட எந்த விசயங்களும் பிரபாகரனைத் திருப்திப்படுத்தக் கூடியதாக ,அவர் வேறுவிதமாகச் சிந்திக்கக் கூடியதாக அமையவில்லை. பாலசிங்கத்திடம் கூடிய நெருக்கத்தை பிரபாகரன் ஏற்படுத்தியிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் பாலசிங்கம் உறுதிபட எதையாவது பிரபாகரனுக்கு எடுத்துரைத்திருக்க முடியும் என்ற சாரப்பட சற்று வருத்தத்தோடு ஜெப்ரி தன்னுடைய அறிக்கையில் விவரித்திருந்தார்.

இதேவேளை புலிகளின் மீதான தடையைக் கூட இடையில் சற்றுத் தளர்த்தியிருக்கலாமோ என்றும் ஜெப்ரி ஐயம் தெரிவித்திருந்தார்.

ஆனாலும் இந்தத் தவறை ஈடுசெய்யக் கூடியவாறும் பின்னர் ஏற்பட்ட நெருக்கடி நிலையை உச்ச நிலை அடையாதவாறும் மேற்குப் பார்த்துக் கொண்டது. இதற்காக அது ஒரு தந்திரோபாயத்தையும் வகுத்துக் கொண்டது.

யுத்தம் உச்சமாக நடந்தபோது அந்த யுத்தத்தில் மேற்குலகத்தின் பங்கு அதிகமாக உள்ளது என்று புலிகளுக்குத் தெரிந்தபோதும் புலிகள் மேற்கின் பக்கம் எதிர்நிலை எடுக்காதிருக்குமாறு மேற்கு கவனமாக இருந்தது. புலிகள் மீதான தடையைப் பேணிக்கொண்டே புலிகளுக்கான ஆதரவை அது வெளிப்படையாக ஆதரித்தது. புலிகளின் மீதான யுத்தத்தை நடத்திக் கொண்டே புலிகளுக்கு ஆதரவான – யுத்தத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்கு இடமளித்தது.

இது உண்மையில் புலிகளை முட்டாளாக்கும் நடவடிக்கையே. ஆனால், இத்தகைய ஒரு தந்திரோபாயத்தைக் கையாண்டு, புலிகளின் எதிர்ப்பைச் சந்திக்காமல் இறுதிவரையில் மேற்கு வெற்றியடைந்தது. (இதனைப் பற்றிப் பின்னர் இன்னொரு சந்தர்ப்பத்தில் விரிவாகப் பார்க்கலாம்).

ஆகவே, யுத்தத்தின் முளைகள் கருக்கொள்ளத் தொடங்கிய கட்டத்தில் ஜெப்ரியின் அறிக்கை வந்திருந்தபோது அந்த அறிக்கையைப் படித்திருந்த புலிகளின் மேல்மட்ட உறுப்பினர்களில் சிலருக்கு ஆச்சரியம். சிலருக்கு அச்சம். சிலருக்கு சிரிப்பு. சிலருக்கு அது ஒரு கவனிக்கத் தக்க அறிக்கை என்ற புரிதல்.

இந்த நிலையில் அந்த அறிக்கை எப்படி இரகசியமாகக் கசிய விடப்பட்டது என்ற கேள்வியும் புலிகளில் சிலரிடம் எழுந்தது. அது கூட ஒரு உத்திதான். அறிக்கையின் தயாரிப்பு என்பது அமெரிக்காவுக்குத் தேவையான ஒன்றாக இருந்தாலும் தன்னுடைய தரப்பில் குள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொள்ளுவதற்காக, தன் தரப்பில் தவறுகள் நடந்தன என்று ஏற்றுக்கொள்ளும் குறிப்புகளை அந்த அறிக்கையின் மூலமாக வெளிப்படுத்துவதன் மூலமாக புலிகளிடம் உருவாகியருந்த கடும்போக்கைத் தணிப்பதாகவே அந்த இறுதி முயற்சி நடந்தது.

ஆனால், அறிக்கையை வாசித்த புலிகள் யுத்தத்தை நோக்கிச் செல்லும் முடிவை மாற்றிக் கொள்ளவேயில்லை. பலருக்கு அது விருப்பமாக இல்லாதிருந்தபோதும் அதை வெளிப்படையாகச் சொல்லி, பிரபாகரனிடம் எதிர்ப்பைச் சந்திக்க அவர்கள் தயாராக இருக்கவில்லை.

௦௦௦௦௦

இந்தக் கட்டத்தில் புலிகளின் ஊடகங்களில் நடக்கும் அரசியல் விவாதங்களில் அப்போது வன்னியில் இருந்த அரசியல் ஆய்வாளர்கள் பங்கேற்று நிலைமைகளை விளக்க முயற்சித்தனர். இதில் சுவாரஷ்யமான சங்கதிகள் பலவுண்டு.

புலிகளைப் பொறுத்தவரையில் தங்களின் அரசியலுக்குச் சாதகமான – சார்பான அரசியல் நிலைவரமொன்றை உருவாக்க முயற்சிப்பது வழமை. அது அவர்களுக்குத் தவிர்க்க முடியாததும் கூட. மட்டுமல்ல, தேவையான ஒன்றுமாகும். புலிகள் மட்டுமல்ல எந்த ஒரு அரசியற் சக்தியும் தன்னை, தன்னுடைய நோக்கை நியாயப்படுத்த அல்லது அதற்கு ஆதரவு சேர்ப்பதற்காக ஊடகங்களைக் கையாள்வது இயல்பு. அப்படியான ஒரு நிலையில் முடிந்த அளவுக்கு அதற்குள் நின்று கொண்டு தங்களின் கருத்துகளை முன்வைக்க முயன்றனர் சிலர்.

இதில் முக்கியமானது நிலாந்தன் தெரிவித்த கருத்து.

தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் நடந்த நிலவரம் என்ற அரசியல் விவாத நிகழ்ச்சியில் 2007 இல் நிலாந்தன் தெரிவித்திருந்த கருத்து முக்கியமானது.

அந்த நிகழ்ச்சியை நடத்தும் மையவாளரின் கேள்வி இப்படி அமைந்தது. தமிழீழம் அமையக் கூடிய சாத்தியப்பாடுகள் இன்றைய நிலையில் எந்த அளவில் உள்ளன?

இதற்கு நிலாந்தனின் பதில் – தென்னாசியப் பிராந்திய யதார்த்தத்தின்படி நடைபெற்ற ஆயுதப்போராட்டங்கள் அத்தனையும் குருதி சிந்தச் சிந்த ஒடுக்கப்பட்டுள்ளன. இந்தப் போராட்டங்களை ஒடுக்குவதில் ஒரு கூட்டுநிலை அல்லது ஒருங்கிணைந்த நிலை காணப்படுகிறது. இதை மீறி தமிழீழ விடுதலைப் போராட்டத்தை சாத்தியப்படுத்த வேண்டுமானால் சவாலாக உள்ள அக, புற நிலைமைகளை விளங்கிக் கொண்டு போராட்டத்தைத் தீர்க்கதரிசனமாக முன்னெடுக்கக் கூடிய தூரநோக்குப் பார்வையும் அனுபவச்  செறிவும் முக்கியமாகும். அதற்குரிய பண்பை வளர்ப்பது அவசியம் என்ற வகையில் அமைந்தது.

இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகியும் விட்டது. தொடர்ந்து இந்த நிகழ்ச்சி புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகளுடைய ஊடகங்களின் வழியாகவும் வெளியாகியிருந்தது.

இந்த நிகழ்ச்சியைப் பார்த்த புலிகளின் தலைமைப் பீடம் உடனடியாகவே நிகழ்ச்சித் தயாரிப்பாளரை அழைத்து இதைப்பற்றிய விளக்கத்தைக் கேட்டது. விளைவு பதில் நிகழ்ச்சி ஒன்று தயாரிக்கப்பட்டது. அந்தப் பதில் நிகழ்ச்சியில் மக்கள் நம்பிக்கை இழக்காத வகையில் தமிழீழம் என்பது நம்பிக்கையான ஒன்று எனவும் அதை அடைவதற்கான வழிகள் சிறப்பாகவே உள்ளதாகவும் சொல்லப்பட்டது.

இதேவேளை நிலாந்தன் ஈழநாதம் பத்திரிகையில் வாராவாரம் எழுதி வந்த அரசியற்பத்தி இடைநிறுத்தப்பட்டது.

00

 

குறிப்பு…

 அடுத்த பகுதி (04)சற்று விரிவானது. அதில் திருநாவுக்கரசு, பாலகுமாரன் போன்றோரின் உரைகளும் கடிதங்களின் பதிவுகளும் வரும்….
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment