Home » இதழ் 01 » மூத்த தொழிற்சங்கவாதியும் அரசியல் செயற்பாட்டாளருமான பி,ஏ. காதர் அவர்களுடனான சந்திப்பு!

 

மூத்த தொழிற்சங்கவாதியும் அரசியல் செயற்பாட்டாளருமான பி,ஏ. காதர் அவர்களுடனான சந்திப்பு!

 


* தோட்டத் தொழிலாள மலையக மக்களின் வாழ்விலும் இருப்பிலும் அவர்களை அமைப்பாக்குவதிலும் நீண்ட உழைப்பினை வழங்கியவர் நீங்கள்.மலையக மக்கள் முன்னணி என்கிற அரசியல்    கட்சியை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியவர். தோட்டத் தொழிலாளர்கள் என்கிற எண்ணப்பாட்டினைக் கடந்து அம்மக்களை ஒரு தனியான தேசிய இனம் என்கிற கருத்தாக்கத்தினை நோக்கி வளர்த்தெடுக்க பணி செய்த காலகட்டம்,அதன் முக்கியத்துவத்தினைப் பற்றி உங்கள் அனுபவத்தினை விபரிக்க முடியுமா?

இதற்கு பதிலளிப்பதானால் மலையக மக்களின் முழு வரலாறையும் சொல்லுவதாக அமைந்துவிடும். சுருக்கமாகக் கூறுவதென்றால் வெகு அண்மைக்காலம் வரை இலங்கையின் மிகப் பெரிய தொழிலாளர் அணியைக் கொண்ட, ஒரு பிரத்தியேக வரலாற்றைக் கொண்ட தனியான தேசிய இனமான மலையக தமிழ் மக்கள் வெறுமனே கூலிகளாக மாத்திரமே கருதப்பட்டு வந்தனர். அவர்களது தேசிய உரிமைகள் யாவும் – பிரஜா உரிமை வாக்குரிமை உட்பட – மறுக்கப்பட்ட நிலையில் சுற்றிவர சிங்கள கிராமங்களால் சூழப்பட்ட “கைதி தொழிலாளராக” அவர்கள் வாழ்ந்து வந்தனர். சிங்களவாத வன்செயல்களின் குரூரத்தை நேரடியாக அனுபவித்துக் கொண்டு தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு வழியறியாது தவித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்படாமல் தோட்டநிர்வாகத்தின் செல்லக் குழந்தைகளாக வளர்க்கப்பட்ட ஒரு சில தொழிற்சங்கங்களின் ஆதிக்கத்தின்கீழ் அவர்கள் சிறையுண்டு கிடந்தனர். இவர்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியதில் மலையகத்தில் உருவான இளைஞர் அமைப்புகளுக்கே மிகுந்த பங்குண்டு. படித்த புதிய இளைஞர் அணி ஒன்று சமூக சக்தியாக உருவெடுத்த 1960 களின் பிற்பகுதியில் தான் இந்த உறக்க நிலை கலைந்தது. இந்த மனோபாவத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய ஆரம்ப அமைப்புகளாக சண்முகதாசன் தலைமையிலான செங்கொடி சங்கம், இரா சிவலிங்கம் தலைமையிலான மலையக இளைஞர் முன்னணி நெடுஞ்செழியன் தலையிலான இலங்கை திராவிட கழகம் ஆகிவற்றைக் கொள்ள முடியும் .இக்காலப்பகுதியில சி. வேலுப்பிள்ளை போன்ற எழுத்தாளர்கள் ஆற்றிய பங்கினையும் குறைத்து மதிப்பிட முடியாது.

ஆனால் பிற்காலத்தில் 1970 களின் நடுபகுதிகளில் தான் வீரஉணர்வு கொண்ட மலையக தேசியவாதம் உருவானது. இதுவே நாம் கூலிகள் அல்ல இந்தியர்கள் அல்ல தேசிய உரிமையுடைய இந்நாட்டின் மக்கள் என்ற உணர்வு ஏற்பட்டது. சரியாகக் கூறுவதானால் 1977 வன்செயலுடன் ஏனைய மலைய இளைஞர் அமைப்புகள் செயலிழந்து போனபின்னர் துணிச்சலும் அரசியல் சிந்தனையும் உள்ள இளைஞர் அணிஒன்று “மலையக வெகுஜன இயக்கம்” என்ற பெயரில் உருவானது. இதில் மலையகத்தில் வாழ்ந்த வடக்கு கிழக்கைச் சேர்ந்த பல இளைஞர்களும் இடதுசாரி சிங்கள இளைஞர்களும் இணைந்திருந்தனர். (மலையக வெகுஜன இயக்கத்திலிருந்த பல இளைஞர்களால் 1989ல் உருவாக்கப்பட்டதுதான் காலஞ்சென்ற சந்திரசேகரன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி. அதில் தான் நான் ஆரம்பகால செயலாளர் நாயகமாக செயற்பட்டேன். இலங்கை ஆசிரியர் சங்கத்தில் பிரதி தலைவர் பதவி வகித்த பின்னர் நான் வகித்த பதவி இதுதான்

மலையக வெகுஜன இயக்கம் இயங்கிய காலகட்டத்தில் இடம்பெற்ற இரண்டு சம்பவங்களை இங்கு குறிப்பிடவேண்டும்:; அப்போது ஜே. ஆர். அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுக் கொண்டிருந்த மலையக ஆசிரியர் நியமனத்தை சில ஊழல் மிக்க அரசியல் வாதிகள் வெளியாருக்கு கள்ளத்தனமாக விற்றுக்கொண்டிருந்தார்கள். இதற்கெதிராக ம.வெ.மு நடத்திய போராட்டத்தில் வடக்கைச் சேர்ந்த ஆசிரியர்கள் பலர் முன்னணி வகித்தார்கள். 1977 வன்செயலுக்கு பின்னர் மலையக இளைஞர்கள் இனி சிங்கள இனவாதிகள் தங்களைத் தாக்கினால் திருப்பித் தாக்குவதற்கு தம்மைத் தயார்படுத்திக் கொண்டிருந்தார்கள். இவர்களுக்கு பக்கபலமாக சில சிங்கள இடதுசாரி இளைஞர்கள் நின்றுதுடன் தமிழ் இளைஞர்களுக்கு கராட்டி கிளாஸ் நடத்தி பயிற்சியளித்தனர். இவர்களில் சிலர் இன்றும் மலையக மக்கள் முன்னணியில் முக்கிய பதவி வகிக்கின்றனர். ஒரு தேசிய இயக்கத்தில் குறுகிய தேசியவாதம் மேலோங்காத வரை அது புரட்சிகரமானதாக இருக்கும் வரை அதனால் அனைத்து நேசசக்திகளையும் இணைத்துக் கொள்ளமுடியும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

பின்னர் மலையகத்தில் வெடித்த பல போராட்டங்களுக்கு வடக்கின் இயக்கங்கள் சில உறுதுணையாக நின்றன. இந்த உன்னதமான காலகட்டத்தி;ல் மலையக மக்களின் எழுச்சியோடு இணைந்த எனது அன்றைய அரசியல் செயற்பாடுகள் குறித்து நான் மகிழ்ச்சியடைந்தாலும் தொழிற்சங்கவாதத்தின் பிடியிலிருந்து மீண்டு பாராளுமன்ற அரசியலில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ள அதே ஊழல்மிக்க தலைமைகளின் பிடியில் இவர்கள் மீண்டும் சிக்குண்டு கிடப்பதைப் பார்க்கும் போது மிகவும் கவலையாக இருக்கிறது.

*.வர்க்க அடிப்படையிலான ஒரு தொழிலாளர் வர்க்கத்தினை,முழுதான இனத்துவம் சார்ந்த அரசியல் அடையாளத்திற்குள் அடையாளப்படுத்துகின்ற போது அம்மக்களின் அரசியல்உரிமைகள் தொழிலாளர் உரிமைகள் தொடக்கம் அம்மக்களுக்குஅரசியல் தலைமை வழங்க முன்வரும் தலைமைகளின் அரசியல்,வர்க்க பண்பு மாற்றங்கள் தொடர்பாக,மலையக மக்களின் சமகால நிலையை முன்வைத்து உங்கள் பார்வைதான் என்ன?

மலையக மக்கள் ஒரு வர்க்கமா அல்லது ஒரு தேசிய இனமா என்ற விவாதம் மலையக இளைஞர்கள் மத்தியில் மாத்திரமல்ல சமூக ஆய்வாளர்கள் மத்தியிலும் நீண்டகாலமாக இடம்பெற்று வந்தது. இப்போது மலையக மக்கள் மத்தியில் இவ்விவாதம் ஓய்ந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். மலையக மக்கள் ஒரு தேசிய இனம் அதில் தொழிலாளர்களை விட ஏனைய வர்க்கத்தினரும் இருக்கிறார்கள். ஒருகாலத்தில் சுமார் 91 சதவீதமான மலையக மக்கள் தோட்டத் தொழிலாளர்களாகவும் அவர்களைச் சார்ந்தவர்களாகவும் இருந்தனர். இப்போது தோட்டத் தொழிலாளர்கள் அல்லாதவர்களின் விகிதம் கிட்டத்தட்ட 40 சதவீதமாக அதிகரித்துள்ளது. மறுபுறத்தில் இலங்கையில் ஏனைய எந்த சமூகத்தையும் விட மிக அதிகமான வீதமான தொழிலாளர்களை இச்சமூகம் கொண்டிருப்பது இதன் சிறப்பம்சம். இந்த தொழிலாளவர்க்க குணாம்சம்தான் அவர்களது தேசியவாதத்தில் போராட்டகுணம் அதிகமாக காணப்பட்டாலும் குறுகியதேசியவாதத்தின் வெளிப்பாடு குறைவாக காணப்படுதற்கான காரணியான அமைகிறது. எனது அனுபவத்தில் சொல்வதானால் ‘சுத்த தொழிலாளவர்க்கம்’; என்ற வாதம் இம்மக்களை தொடர்ந்தும் கூலிகளாக உறக்க நிலையில் வைத்திருப்பதற்கே துணைபோனது. ஏனைய சமூகங்களைப் போல தாமும் சமதையாக வாக்குரிமை பிரஜாவுரிமை மாத்திரமல்ல மண்ணுரிமையுமுள்ள மக்களாக வாழவேண்டும் என்ற உணர்வை மழுங்கடிப்பதற்கே உதவியது. மறுபுறத்தில் வர்க்க சிந்தனையை மழுங்கடிக்கும் சுத்த தேசியவாதம் ஊழல்மிக்க மலையக தமிழ் -பாராளுமன்ற- தலைமைகளுக்கே சாதமாக அமைந்தது. எனவே இவ்விரண்டும் சமநிலைப்படுத்தப்பட வேண்டும் – மலையக மக்கள் முன்னணி ஆரம்ப கட்டத்தில் சகல போராட்ட சக்திகளையும் இணைத்துக் கொண்டு செயற்பட்டதைப் போல.

* தொழிலாளர்கள் தலைமைதாங்கும் அரசியல் முன்னெடுப்புகள் பின்தள்ளப்பட்டு முதலாளிய தலைமைகள் அங்கு பலம்பெருகின்ற.,அம்மக்களுக்கு அரசியல் ரீதியாக தலைமை தாங்குகின்ற நிலை தொடர்கின்றதே?

மலையகத்தில் மாத்திரமல்ல. இலங்கையில் உள்ள சகல அரசியல் கட்சிகளினதும் நிலைமை இப்படித்தான் இருக்கிறது. தெற்கைப் பாருங்கள். அங்கே இரண்டு பிரதான சிங்கள கட்சிகளான மக்கள் சுதந்திர கட்சியும் யூ.என்.பியும் இருக்கின்றன இவை இரண்டுமே தொழிற்சங்களைக் கொண்டிருக்கின்றன. அடுத்து ஒருகாலத்தில் இடதுசாரிகளாக இருந்து பின்னர் சு.க அரசாங்கத்தின் தொங்கு தசையாக மாறிவிட்ட கம்யூனிசகட்சியும் சமசமாஜ கட்சியும் முன்னொரு காலத்தில் இலங்கையின் நகர தொழிலாளர்கள் அனைவரையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. முதலில் தொழிலாளவர்க்கத்தின் உரிமைக்காக மாத்திரமல்ல தமிழ்பேசும் மக்களின் சமஉரிமைக்காகவும் முன்னின்று போராடிய உன்னதமான வரலாறு இவற்றுக்கு உண்டு. ஆனால் பிற்காலத்தில் தமக்குப்பின்னால் அணிதிரண்ட தொழிலாளர்களை தாம் பாராளுமன்றம் செல்வதற்கான வாக்கு வங்கியாக மாத்திரம் கருதத் தொடங்கி கடைசியில் சிங்கள பேரினவாதத்திற்கு சிகப்பு சாயம் பூசுபவர்களாக மாறினர்.

ஜே.வி.பி. யினர்  சிங்கள இளந்தலைமுறையினரை வர்க்கமும் – பேரினவாதமும் கலந்த ஒரு தீவிரவாத கலவை சித்தாந்தத்தை முன்வைத்து அணிதிரட்டி இதே பாராளுமன்ற அரசியலுக்குள் நீச்சல் போடுகின்றனர். வடக்கின் தலைமை நிலைமையும் அதுதான். இளைஞர்களின் ஆயுத போராட்டம் நிகழ்ச்சிநிரலாக இருந்தகாலத்தில் அவர்களுக்கு விசுவாசமாக இருப்பவர்களாக தம்மைக் காட்டிக் கொண்டவர்கள் மீண்டும் பழையபாணியில் – வடக்கில் பெரியளவிலான தொழிலாள வர்க்கம் இல்லாத நிலையில் – ஏனைய வர்க்கங்களின் சிங்களபேரினவாதத்திற்கு எதிரான எதிர்ப்புணர்வை தமது வாக்கு வங்கியாக பயன்படுத்திக் கொண்டு தனது பழைய நண்பனான ஐ.தே.கவுடன் கூட்டு சேர்ந்து வருகிறது. இவர்களைப் பொருத்தளவில் தேசியவாதத்தை தமது பாராளுமன்ற அரசியலுக்கு பயன்படுத்துவது ஒரு தந்திரோபாய பிரச்சினை மாத்திரமே.

இன்றைய இலங்கையில் அடையாள அரசியல் நிகழ்சிநிரலாகியுள்ள நிலையில் ஒவ்வொரு தேசிய இனத்தின் மத்தியிலுமுள்ள தொழிலாளவர்க்கம் தமது தேசிய இனம்சார்ந்த பிரச்சினைகளை மறந்துவிட்டு அல்லது புறந்தள்ளி விட்டு தொழிலாள வர்க்கம் என்ற அடிப்படையில் மாத்திரம் ஓன்று படமுடியாது. உதாரணமாக ஒரு தோட்டத்தொழிலாளி ஒரு தொழிலாளி என்ற முறையில் மாத்திரம் அல்ல தமிழன் என்ற முறையிலும் ஒடுக்கப்படுகிறான். எனவே தேசிய ஒடுக்குமுறைக்கு எதிராகவும் அவன் போராட வேண்டும் – தனது வர்க்கக் கடமையை மறந்து விடாமல்……

*மலையக மக்கள் முன்னணி என்கிற அரசியல் இயக்கத்தின் உருவாக்கம் தொண்டமான் தலைமைக்கான எதிர்வினையாக மட்டும் இருந்ததாக சொல்ல முடியாதுதான்,ஆனால் அவ்வியக்கத்தின் பாதையும் பயணமும் அப்படியானதோர் தோற்றத்தினைத்தானே இப்போது ஏற்படுத்தி இருக்கிறது?

நீங்கள் சரியாகச் சொன்னீர்கள். நாம் உருவாக்கிய மலைய மக்கள் முன்னணி தொண்டமானை எதிர்ப்பதை மாத்திரம் நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதல்ல. அதுவரை தொண்டமானை எதிர்ப்பதை மாத்திரமே நோக்கமாகக் கொண்டு பல அமைப்புகள் மலையகத்தில் தோன்றின. ஆனால் அவை வெற்றி பெறவில்லை. தொண்டமானின் பலம் அவரது தொழிற்சங்கமான இ.தொ.கா.வில் இருந்தது. தென் கிழக்காசியாவிலே மிகப்பெரிய தொழிற்சங்கமாக அது ஒருகாலத்தில் கருதப்பட்டது. தொண்டமானுக்கு எதிராக அரசியல் செய்ய முற்பட்டவர்களிடம் ஒரு மாற்று அரசியல் இருக்கவில்லை. எனவே அவர்களது செயற்பாடுகள் மாற்று தொழிற்சங்கங்களை அமைத்து தோல்வியில் முடிந்தன. இரா.சிவலிங்கம் போன்றவர்கள் அமைத்த இளைஞர் அமைப்புகள் தொண்டமானை எதிர்த்துக்கொண்டு அதேசமயம் தொழிற்சங்கத்தையும் தொழிலாளர்களையும் புறக்கணித்து படித்த இளைஞர்களை மாத்திரம் ஆதாரப்பட்டிருந்தன. மலையக மக்கள் முன்னணி தான் புரட்சிகரமான தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியலை முன்வைத்து மலையகத்தில் உருவான முதலாவது அரசியல் கட்சியாக இருந்தது. அது மலையக தொழிலாளர் மத்தியிலும் படித்த அணியினர் மத்தியிலும் இருந்த போர்க்குணமிக்க இளைஞர்களை அணிதிரட்டி ஒரு பேரெழுச்சியை உருவாக்கியது. எப்படி வடக்கு கிழக்கிலே இளைஞர்களின் ஆயுத போராட்டம் ஆரம்பகாலப் பகுதியில் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தியதோ அதே நிலைமை மலையகத்தில் ம.ம.முன்னணியின் தோற்றம் உருவாக்கியது. ஆனால் பாராளுமன்ற அரசியலுக்குள் மூழ்கிய பின்னர் அது சராசரி பாராளுமன்ற கட்சியாக மாறிவிட்டது ஒரு துரதிர்ஷ்டம்.

 

* மார்க்ஸிய சித்தாந்த வழிமுறைக்கூடாக அரசியல் பணிக்கு வந்தவர் நீங்கள்,வர்க்க போராட்ட அடிப்படை கொண்ட தொழிலாளர் இயக்கத்திற்கு உழைத்தவர் என்கிற வகையில் இன்றைய சூழலில் இலங்கை தொழிலாளர் இயக்கத்தின் நிலைபற்றிய தங்கள் பார்வை என்ன?

முதலில் தொழிலாள வர்க்கத்தின் குணாம்சத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தொழிலாள வர்க்கத்தின் பிராதான தன்மைகளில் ஒன்று யாதெனில் அது உற்பத்தில் வகிக்கும் பாத்திரம் காரணமாக சகதொழிலாளருடன் இணைந்து ஒரே இடத்தில் ஒரு நிறுவனத்தில் தொடர்ச்சியான பணிபுரிவதால் எளிதாக நிருவனப்படுத்தக் கூடிய நிலையில் இருக்கிறது. இதனாற்றான் தொழிற்சங்கங்களை இவர்கள் மத்தியில் உருவாக்க முடிகிறது. சமூக பரிணாம வளர்ச்சியில் முதலாளித்துவம் ஒரு வளர்ச்சிக்கட்டம். முதலாளித்துவத்தோடு பல புதிய வர்க்கங்களும் உருவாகின்றன. ஆயினும் முதலாளித்துவ உற்பத்தியின் ஆதார சக்தியான புதிய தொழிலாளவர்க்கம் ஏனைய அனைத்து வர்க்கங்களையும் விட போர்க்குணமும் ஒழுங்கமைக்கப்பட்ட வடிவில் போராடக்கூடிய தன்மையையும் கொண்டிருப்பதால் அது மிகவும் புரட்சிகரமான வர்க்கமாகக் கருதப்படுகிறது. ஆனால் ஒரு விடயத்தை நாம் சில சமயங்களில் மறந்துவிடுகிறோம். தொழிலாள வர்க்கத்தின் போர்க்குணத்தை தொழிலாள வர்க்க தலைமைகள் மாத்திரமல்ல மிகமோசமான பிற்போக்கு வர்க்கங்களும் கூட தமது வர்க்கத் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். உதாரணமாக ஐரோப்பாவிலே மிகவும் முன்னணியில் திகழ்ந்த ஜேர்மனிய தொழிலாள வர்க்கத்தின் ஒரு பகுதி ஹிட்லரின் பாசிச சித்தாந்தத்திற்கு அடிமையாகி ஏனைய தேசியங்களை அழித்தொழிப்பதில் முன்னணி வகித்தது.

முன்பு இலங்கையில் சம சமாஜகட்சின் தலைமையில் தொழிலாள வர்க்கத்தின் உரிமைக்காக மாத்திரமன்றி தமிழ்பேசும் மக்களின் உரிமைக்காகவும் போராடிய இலங்கையின் நகர்ப்புற தொழிலாள வர்க்கம் ஐக்கிய தேசிய கட்சியின் தொழிற்சங்கத்தில் அங்கத்துவம் வகிக்க தொடங்கிய போது ஏனைய தொழிற்சங்கங்கள் நடத்திய போராட்டத்தை காட்டிகொடுப்பதில் மாத்திரமல்ல அவற்றை வன்முறையின் மூலம் முறியடிப்பதிலும் முன்னணி பாத்திரம் வகித்தது. 1936 முதல் 1956கள் வரை இலங்கையில் தொழிலாள வர்க்கம் ஒரு நிர்ணயகரமான முற்போக்கான போராட்ட சக்தியாக செயற்பட்டது. ஏனெனில் தொழிலாள வர்க்க தத்துவத்தின் வழிகாட்டலில் அது அப்போதிருந்தது. அதன் பின்னர் இலங்கையில் தொழிலாள வர்க்கத்தின் பலம் திட்டமிட்டமுறையில் பலவீனப்படுத்தப்பட்டது. இது யு.என்.பி. 1948 மலையக தொழிலாளர்களின் பிரஜா உரிமையை பறித்த நடவடிக்கையுடன் தொடங்கி வைக்கப்பட்டது. பின்னர் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சியில் (1970 – 1977) அதுவரை இடதுசாரி கட்சிகளாக இருந்த சமசமாஜகட்சியையும் ரஷ்ய சார்பு கம்யூனிச கட்சியையும் இணைத்துக் கொண்டதுடன் தொழிலாளவர்க்க இயக்கம் சரணடைவு – சந்தர்ப்பவாத அரசியலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டது. பின்னர் மீண்டும் ஜே.ஆர். ஆட்சிகாலத்தில் (1977- 1989) முதற்தடவையாக யு.என்.பி. தொழிற்சங்கங்களை அமைக்கத் தொடங்கியது. இலங்கை தொழிற்சங்க இயக்கத்தில் அரசின் ஊடுறுவலும் அரசின் சலுகைக்காக சோரம் போகும் போக்கும் ஊழலும் உருவானாது. மேலும் சுதந்திர வர்த்தக வலையம் போன்ற தொழிற்சங்க உரிமைகள் மட்டுப்படுத்தப்பட்ட துறைகள் மேலும் தொழிலாளர் இயக்கத்தைப் பலவீனப் படுத்தியது. சுருங்கச் சொன்னால் தொழிலாளர்கள் சுதந்திர வர்த்தக வலயத்திலும் மீன்பிடிக்கும் பகுதிகளிலும் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களது பிறவி போர்க்குணம் அழியவில்லை. ஆனால் தொழிலாள வர்க்க இயக்கம் பலவீனப்பட்டிருக்கிறது. ஒரு மாற்று வேலைத்திட்டத்துடன் கூடிய தொழிலாள சித்தாந்தத்தின் அடிப்படையிலான போராட்டங்கள் மூலமே இவ்வியக்கத்தை மீண்டும் புத்துயிர் பெறச்செய்ய முடியும். ஜீவனுள்ள தொழிலாள வர்க்க இயக்கம் புத்துயிர் பெற்று புரட்சிகரமான தேசிய போராட்டத்தையும் தன்னுடன் இணைத்துக் கொண்டால்தான் இலங்கையில் ஒரு உண்மையான மாற்றம் ஏற்பட முடியும்.

*. இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம் என்கிற மலையக மக்கள் குறித்த தங்களது ஆய்வு ஈரோஸ் அமைப்பினால் வெளியிடப்பட்டது.வடக்கு கிழக்கில் தோன்றிய ஆயுத இயக்கங்களுடனும் தனி நபராகவும் அமைப்பாகவும் வேலை செய்திருக்கிறீர்கள்.நாற்பது வருடத்திற்கு மேலாக இலங்கை தமிழர் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறீர்கள. ‘தமிழ் தேசியத்தின் போராட்டம் தொடர்பாக இன்று நடைபெற்றுவரும் கருத்துப் போக்குகளைப் பற்றி என் நினைக்கிறீர்கள்?”?

வெறும் பார்வையாளனாக அன்றி ஒரு ஆய்வாளனாக மாத்திரமில்லாமல் எந்த தமிழ் இயக்கங்கத்துடனும் இணையாமல்  ஆனால் கொள்கையை பணயம் வைக்காத முறையில் அவற்றோடு நல்லுறவை பேணிவரக்கூடிய நிலைமை எனக்கிருந்தது. போராட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் நான் மலையகத்தைச் சேர்ந்தவன் என்பதும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப்பற்றிய புரிதலை தெற்கு பகுதியிலே தத்துவார்த்த போராட்டமாக முன்னெடுத்தவன் என்பதனாலும் எனது கடந்தகாலமும் பல இயக்கத்தலைவர்கள் என்னை அறிவதற்கு உதவின. வடக்குடன் இணைந்ததாக மலையகத்தில் ஒரு அமைப்பை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக செயற்பட்ட வேளை 1985ல் நான் கைதானேன். எமது தேசிய போராட்டம் ஒரு கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த ஒரு நிர்ணயகரமான காலகட்டத்தில் நான் கைதாகி ஏழு வருடம் சிறையிலிருந்தபடியால்; தொடர்ச்சியாக என்னால் நேரயாக எமது தேசிய இயக்கத்தில் பங்கு கொள்ளமுடியாமற் போய்விட்டது. ஆனாலும் நான் இருந்த சிறைச்சாலைகளில் சகல அமைப்புகளையும் சேர்ந்த ஆரம்பகால உறுப்பினர்கள் பலர் இருந்தனர். அவர்களோடு நல்லுறவை பேணிக்கொண்டு நடப்பு நிலைமைகளை அறியக்கூடியதாக இருந்தது. நான் விடுதலையாகி வெளி வந்த சிலநாட்களில் மீண்டும் மலையக அரசியலை விட்ட இடத்திலிருந்து தொடரக் கூடியதாக இருந்தது. மலையக மக்கள் முன்னணியின் உருவாக்காம் செயற்பாடு என எனது அரசியல் தொடர்ந்தது. அது வடக்கு கிழக்கு பேராட்டத்திற்கோ நகர்ப்புற தொழிலாளரின் போராட்டத்திற்கோ எதிர்திசையில் அமையவில்லை. அவற்றோடு நல்லுறவை வளர்த்த படியே எமது வளர்ச்சி அமைந்தது.

இலங்கையின் சகல இடதுசாரி தலைவர்களையும் சகல தமிழ் இயக்க தலைவர்களையும் மாத்திரமல்ல இலங்கையில் உருவான தலைசிறந்த பல புத்திஜீவிகளையும் சந்தித்து கருத்துகளைப் பரிமாறக் கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இத்தகைய வாய்ப்புகள் ஒரு சிலருக்குத்தான் வாய்க்கும். இக்காரணங்களால் எமது போராட்டத்தின் எழுச்சி பின்னடைவு ஆகிய இரு நிலைமைகளையும் மதிப்பீடு செய்வதில் என்னால் ஒரு காத்திரமான பங்களிப்பைச் செய்ய முடியும். ஆனால் அது முறைப்படி செய்யப்பட வேண்டும். அதற்கு ஆத்ம சுத்தியுடன் கூடிய அறிவுபூர்வமான கலந்துரையாடல் தேவை. சுய விமர்சனத்தின் அடிப்படையிலான ஒரு நியாயமான மதிப்பீடாக அது அமைய வேண்டும்.

ஆனால் இங்கே ஒரு போலித்தனம் தெரிகிறது. ஒரு புறத்தி;ல் ஒருசாரார் புலிகளை புனிதர்களாகவும் தெய்வாதீனம் பொருந்தியவர்களாகவும் அப்பழுக்கற்றவர்களாகவும் சித்தரிக்க முயற்சிக்கிறார்கள். இவர்களிடம் இரட்டை வேடம் தெரிகிறது. சர்வதேச சமூகம் புலிகளின் செயற்பாடுகள் எல்லைமீறிய சமயங்களில் அதனால் பாதிக்கப்பட்டவர்களின் நீண்ட பட்டியலை முன்வைத்து ‘புலிகளின் மனித உரிமை மீறல்கள்’ இவை என வாதிடும் போது இவர்கள் அதனை மறுக்க முடியாமல் இரகசியமாக ஆமாம் போட்டுவிட்டு வெளியே ‘புனிதம்’ பற்றி உரக்கக் கூவுகிறார்கள்.மறுமுனையிலிருக்கும் ‘புலி எதிர்ப்புவாதிகளுக்கு’ புலிகளைத் திட்டுவதை விட்டால் வேறு அரசியலே கிடையாது. புலிகளைத் திட்டுவதன் மூலம் தங்களை இவர்கள் புனிதர்களாக காட்ட முயற்சிக்கிறார்கள். இவ்விரு சராருமே சிங்கள பேரினவாதிகளுக்கு தம்மையுமறியாமல் சேவை செய்து கொண்டு வரலாறுக்கு துரோகமிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எமது போராட்டங்களில் ஏற்பட்ட தவறுகளை ‘அவை தவறுகள்தான்’ என்று சொல்வதற்கு எமக்கு பக்குவமில்லை என்றாலும் சரி எமது போராட்டத்தில் ஏற்பட்ட தவறுகளை மாத்திரமே நாம் உயர்த்திப்பிடித்துக் கொண்டிருந்தாலும் சரி நாம் சாராம்சத்தில் ஒரேகாரியத்தைத் தான் செய்கிறோம்;; – எமது போராட்டத்திலுள்ள நியாயத்தன்மையை நாம் கொச்சைப்படுத்துகிறோம். அதனை வெளியுலகம் அறியமுடியாமல் ‘பயங்கரவாத போர்வையால்’ மூடிமறைப்பதற்கு இலங்கை அரசுக்கு துணைபோகிறோம் .இப்போராட்டத்தில் பல்வேறு அமைப்புகளையும் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான போராளிகள் வெவ்வேறு அளவில் ஆற்றிய பங்களிப்பையும் தியாகங்களையும் அவமானப்படுத்துகிறோம் என்றுதான் அர்த்தம். எனவே நாம் பழைய விரோதங்களை மறந்துவிட்டு ஒரு பொதுவான வேலைத்திட்டத்திற்கு வரவேண்டும். அதற்கு முன் நிபந்தனையாக இரு தரப்பும் தமது தவறுகளை சுயவிமர்சனம் செய்து கொள்ள வேண்டும். எமது போராட்டத்தின் நியாயத்தன்னையை ஏற்றுக் கொண்டு அதன் அடிப்படையில் இந்த சுயவிமர்சனம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

*. தமிழ் இடதுசாரிகளுக்கும் ,தமிழ் தேசியவாதிகளுக்குமிடையிலான-தேசியஇனவிடுதலஅரசியலகருத்தியல்/அணுகுமுறை/செயற்பாடுகள்/ தொடர்பாக தொடர்ச்சியாக நிகழ்ந்து வரும் வாதங்களில் நீங்களும் ஒருவராக இருந்துள்ளீர்கள்,இருந்து வருகிறீர்கள். இன்றைய அனுபவங்களின் பின் இதனை எப்படி பார்க்கிறீர்கள்?

இன்றைய இலங்கையின் நிலைமை முன்னர் ஒரு போதும் இல்லாத அளவுக்கு மோசமாகியுள்ளது. புலிகளுக்கெதிரான யுத்தத்தின் பொருளாதார பளு மாத்திரமல்ல மகிந்த அரசின் யுத்தத்தின் பின்னரான கொள்கைகளும் – அதற்கொரு தேசிய பொருளாதார திட்டம் இல்லாததாலும் தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசங்களை இன்னொரு விதமான இராணுவ முகாமாக மாற்றும் அதன் இனவாத கொள்கையினாலும்; ஆடம்பர நிர்மாண பணிகளாலும் எல்லா மட்டத்திலும் அதிகரித்துவரும் ஊழலாலும் குறிப்பாக ராஜபக்ச குடும்பத்தின் புல்லுறுவித்தனத்தாலும் ஏற்பட்டுவரும் அநாவசியமான விரயம் காரணமாகவும் மக்கள் அன்றாடம் வாழ்வதற்கே தடுமாற வேண்டியுள்ளது. இதற்கெதிரான அதிருப்தி பலவழிகளில் வெளிப்படுகிறது. தினமும் வெளியாகிக் கொண்டிருக்கிற செய்திகளைப் பார்த்தால் எங்கோ ஒரு இடத்தில் அன்றாட வாழ்கை தொடர்பான பிரச்சினையால் அல்லது ஏதாவது உரிமை சார்ந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டு அதற்கெதிராக தொழிலாளர்களும் ஏனைய மக்களும் தன்னெழுச்சியாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் பிரதேசங்களில் அடக்குமுறைக்கு எதிரான போராட்டம் தினமும் நடந்து கொண்டிருக்கிறது. மலையகத்தில் நடைபெறும் போராட்டங்கள் அநேகமாக வெளிவருதில்லை ஆனால் அங்கு பூகம்பம் வெடிக்கக் கூடிய அளவுக்கு பிரச்சினை உக்கிரமடைந்துள்ளதை தினமும் அங்கு நடைபெறுகின்ற போராட்டங்கள் வெளிப்படுத்துகின்றன. முன்னர் “பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம்” என்ற பெயரில் மக்களின் பிரச்சினைகளை அரசு மூடிமறைத்தது. இன்று மேற்கத்தைய நாடுகளினதும் புலத்தில் வாழும் புலிகளின் எச்ச சொச்சங்களினதும் அச்சுறுத்தலில் இருந்து நாட்டைக் காப்பாற்றுவது என்ற கோஷத்தை எழுப்பி பிரச்சினையை திசைத் திருப்ப அரசாங்கம் முனைகிறது. ஆனால் தன்னெழுச்சியான போராட்டங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இது எதனைக்காட்டுகிறது என்றால் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் அதற்காகப் போராட தயாராக இருக்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு சரியான தலைமை இல்லை என்பதைத்தான்.

எனவே இன்று மூன்றாவது தலைமை ஒன்று உருவாகவேண்டும்.  இவை ஒரு தலைவனின் கீழ் மக்களை ஒன்று திரட்டுவதாக இருக்க முடியாது. இன்றைய சூழலில் தென் பகுதிகளிலும் கூட பல்வேறு சராரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் புரட்சிகர தலைமைகள் உருவாக முடியுமே தவிர தனிநபர் தலைமை உருவாக முடியாது. தொழிலாளரின் நலனை பிரதிநிதித்துவ படுத்தக்கூடிய அவர்களின் நம்பிக்கையைப் பெற்ற தலைமைகளே இதற்கான முன்முயற்சியை எடுக்க வேண்டும். அதேபோல ஈழத்தமிழர் மத்தியிலிருந்தும் பிராந்திய ரீதியாகவும் பல்வேறு மக்கள் சாராரின் நியாயமான அபிலாசைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய தலைமைகளின் கூட்டாகவே அது உருவாக முடியும். மலையக மக்கள் மத்திலிருந்தும் முஸ்லீம் மக்கள் மத்தியிலிருந்தும் இவ்வாறே பல தலைவர்களைக் கொண்ட கூட்டாகவே அது அமையமுடியும். இவ்வாறான ஒரு கூட்டுத்தலைமை எவ்வாறு உருவாகும்? அது எமது பொதுவான எதிரிக்கெதிரான சகல தரப்பினரதும் பிரச்சினைகளுக்கான தீர்வை உள்ளடக்கிய ஒவ்வொரு தலைமையும் தனித்தனியாக செயற்படுத்தக் கூடிய விரிவான வேலைத்திட்டத்தையும்  அனைத்து மக்களுக்குமான பொதுவான பிரச்சினைகளுக்கான பொதுவான வேலைத்திட்டத்தையும் உள்ளடக்கிய பொதுவான குறிகோள்களை இனங்கண்டு அதனை மையமாக கொண்ட ஐக்கிய முன்னணியாகவே அமைவது பொருத்தமாக இருக்கும்.

சாராம்சத்தில் ஆங்காங்கே வெடித்துக் கொண்டிருக்கும் தனனெழுச்சியான போராட்டங்களுக்குப்பதிலாக பேராட்டங்களை பரஸ்பர நலனின் அடிப்படையில ஓருங்கிணைக்கக் கூடிய பொது எதிரிக்கெதிரான பரந்துபட்ட ஐக்கிய முன்னணியாக இது அமைய வேண்டும் என்பது எனது அபிப்பிராயமாகும். இன்னொரு விதத்தில் கூறுவதானால் நாம் தமிழராக இருக்கும் உரிமை எமக்கிருப்பதைப் போல மற்றவர்கள் தாங்கள் சிங்களவர்களாவும் மலையகத் தமிழராகவும் முஸ்லீம்களாகவும் இருக்கும் உரிமையை மதித்துக் கொண்டு எமது தனித்துவத்துவத்தையும் சுயநிர்ணய உரிமையையும் விட்டுக்கொடுக்காத விதத்தில் அவற்றை உறுதிசெய்யும் விதத்தில் நாம் பொதுவான பிரச்சினைகளில் எமது பொதுவான எதிரிக்கெதிரான போராட்டத்தை கூட்டாக முன்னெடுக்க முடியும் என நான் திடமாக நம்புகிறேன்.

* சிங்கள மக்கள் மத்தியில தமிழ் மக்களுடைய தேசிய இனப்பிரச்சினை சரியான வழிமுறையில் எடுத்து செல்லப்படவில்லை என்கிற கருத்து உள்ளது. இதனை நீங்களும் பல இடங்களில் குறித்து காட்டியுள்ளீர்கள்.  —-சுயநிர்ணய உரிமை தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் ஒரு தீர்மானத்தினை கொண்டு வந்து,அத்தீர்மானத்தினை தென்னிலங்கை காலியில் பெருமளவு சிங்கள மக்களின் மத்தியில் நிறைவேற்றுகிறீர்கள்.இப்படியான ஒரு காலமும் இருந்தது.பின்னான காலப்போக்கில் முரண்பாடுகள் தீவிரமடைவதற்கும்,எதிர்நிலையில் மக்களை தள்ளுவதற்குமான வரலாற்றின் முக்கிய போக்குகளை குறித்து காட்டுங்கள்..

தவறு இருதரப்பிலும் இருக்கிறது. முதலில் நாம் எம்மைத்தான் இந்த நிலைமைக்காக குறைகூற வேண்டும். இன்றும் கூட நாம் யாதார்த்தத்தை உணரவில்லை. உதாரணமாக எமது போராட்டத்தில் நிகழ்ந்த சில தவறுகள் தமிழ்; பேசும் மக்கள் என்ற முறையில் நாம் ஒன்று படுவதற்கு இன்றும் தடையாக இருக்கிறது. குறிப்பாக முஸ்லீம் மக்களை எடுத்துக்கொள்ளுங்கள். இன்று அவர்கள் தமது சந்தர்ப்பவாத தலைவர்களின் பிடியிலிருக்கிறார்கள். அம்மக்களை தமிழ் பேசும் மக்கள் என்ற அணியிலிருந்து பிரித்தெடுக்கவேண்டிய தேவை சிங்களவாத அரசுக்கு இருக்கிறது. இஸ்லாமிய நாடுகளின் ஆதரவைப்பெறுவதற்கும் எமது கூட்டுபலத்தை பலவீனப்படுத்துவதற்காகவும் அவ்வாறு அது செய்கிறது. இப்போக்கை எவ்வாறு தடுத்து நிறுத்துவது? ‘முன்னர் நடந்ததை இப்போது கிளற வேண்டாம். அனைத்தையும் மறந்துவிட்டு தமிழர் என்ற முறையில் ஒன்று படுங்கள்’ என்று சொன்னால் நிலைமை மாறிவிடுமா? நிச்சயமாக இல்லை. எம்மால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்குவதன் மூலமே நாம் மற்றவர்களிடம் இருந்து எமக்கு நியாயத்தை எதிர்பார்க்க முடியும். நான் முன்னர் கூறிய வேலைத்திட்டத்தில் இது ஒரு பகுதியாக இருக்கும். எம்மத்தியில் எப்படி கடைந்தெடுத்த தமிழ்இனவாதிகள் இருக்கிறார்களோ அதேபோல சிங்களவர் மத்தியிலும் பச்சை இனவாதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். எப்படி எல்லா தமிழர்களையும் புரட்சிகர தேசியவாதிகளாக மாற்றமுடியாதோ அப்படித்தான் பச்சை சிங்கள இனவாதிகளையும் மாற்ற முடியாது. ஆனால் எமது பிரச்சினைகளையும் உரிமைகளையும் பற்றிய புரிதலை உரியமுறையில் நாம் முன்னெடுக்கும்போது அதனை அங்கீகரிப்பதற்கு மாத்திரமல்ல அதற்காகப் போராடுவதற்கும் தயாரான மக்களணி ஒன்று இன்றும் என்றும் சிங்கள் மத்தியிலே; உண்டு. ‘புலிகளை பயங்கரவாதிகள்.. தமிழ் மக்களின் பிரச்சினை ஒரு பயங்கரவாத பிரச்சினை’ என்ற பிரச்சாரம் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த காலகட்டத்தில் கூட இப்படியான ஒரு அணி சிங்களவர் மத்தியிலிருந்தது.

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து அதற்கான பிரச்சாரத்தை முன்னெடுத்த எச் என் பெர்ணான்டோ தலைமையிலான இலங்கை ஆசிரியர் சங்கம் – ‘மகாவம்ச சித்தாந்தம்’ என்பது தமது நலனுக்காக பேரினவாதிகளின் செய்த வரலாற்றுத் திரிபு என்பதையும் தமிழ் மக்களின் பிரச்சினை எவ்வாறு உக்கிரமடைந்து தனிநாட்டு கோரிக்கை நோக்கி வளர்ந்தது என்பதையும் – தமிழ் மக்களின் கோரிக்கையிலுள்ள நியாயத்தன்மையையும் சிங்களமக்கள் மத்தியில் நிலவும் தமிழர் உரிமைசார்ந்த சர்ச்சைக்குரிய பல விடயங்கள் தொடர்பாகவும் துணிகரமாகவும் விஞ்ஞானபூர்வமாகவும் ஆய்வுகளை நடத்தியும் கருத்தரங்குகள் நடத்தியும் நூல்கள் வெளியிட்டும் சிங்கள பேரினவாதத்திற்கெதிராக 70களிலிருந்து தொடர்ச்சியாக கருத்தியல் போராட்டம் நடத்திவரும் குமாரி ஜயவர்தன தலைமையிலான சமூக விஞ்ஞானிகள் அமைப்பு – அதில் முக்கிய பாத்திரம் வகித்த இன்று எம்முடன் இல்லா நியூட்டன் குணசிங்க சார்ள்ஸ்; அபேசேகர போன்ற தலைசிறந்த புத்திஜீவிகள் – தமிழர்க்கெதிரான வன்செயல் தலைவிரித்தாடிய காலத்திலும் சிங்களபேரினவாத அரசுக்கு அஞ்சாமல் தமிழ் இயக்கங்கள் தனது அலுவலகத்தில் தங்கி செயலாற்றுவதற்கு துணிச்சலோடு இடம்தந்து பாதுகாப்பு வழங்கியதோடு எமது உரிமைக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்த குணசேன மகாநாம போன்ற தொழிற் சங்கவாதிகள் – தெற்கிலிருந்து கொண்டு தமிழ் மக்களின் போராட்டத்தை ஆதரித்து தொடர்ச்சியாக குரல் கொடுத்து வரும் பெடறிக் பெர்ணான்டோ போன்ற பத்திரியாளர்கள்- உயிரச்சுறுத்தலுக்கு மத்தியில் இன்றும் துணிந்து தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்துவரும் சுனிலா அபேசேகர, நிமல்கா பெர்னான்டோ போன்ற மனித உரிமைவாதிகள் என ஒரு நீண்ட பட்டியலை எம்மால் போடமுடியும்.

ஆனால் சிங்கள மக்களின் பிரச்சினை தொடர்பாக ஆராய்ந்த ஒரு தமிழ் தேசியவாதியை நாம் தேடவேண்டாம் எமது சகோதர சமூகங்களான முஸ்லீம்களினது பிரச்சினை தொடர்பாக அல்லது மலையக மக்கள் தொடர்பாக (இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம் இதற்கு விதிவிலக்கு) எம்மத்தியிலிந்து ஆய்வுகள் ஏதாவது மேற்கொள்ளப்பட்டதா? திம்பு பேச்சுவார்த்தைக்குப் பின்னர் மலையக மக்களின் உரிமைதொடர்பாக பேசப்படுவது கூட நிறுத்தப்பட்டுவிட்டது. ஒரு விடயம் தெரியுமா தெற்கின் ஒரு தொழிற்சங்கத்தைச் சேர்ந்த இருபதுக்கும் அதிகமான சிங்கள முன்னணி உறுப்பினர்கள் ‘எமது தமிழ் சகோதரர்கள் தமது உரிமைக்காக போராடும் போது நாம் வாயளவில் அதனை ஆதரித்து பிரச்சாரம் செய்தால் மாத்திரம் போதாது நாமும் அவர்களோடிணைந்து போராட வேண்டும்” என சண்டைபோட்டுக் கொண்டு புலிகள் அமைப்பில் இணைந்தார்கள். அவர்களில் பலர் கைதாகி இன்றும் சிறைகளில் வாடுகிறார்கள். அவர்கள் தமது வக்கீல்களுக்கு கட்டணம் செலுத்தக் கூட பணமின்றி தடுமாறுகிறார்கள். ஆனால் எமது தமிழ் தலைவர்கள் இவர்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. மாறாக சிங்களவன் காட்டுமிராண்டி அவனுடன் வாழமுடியாது என எம்மை ஏமாற்றிக்கொண்டு எமது முதுகுக்குப்பின்னால் சிங்கள பேரினவாதத்திற்கு தலைமை தாங்குகின்ற மகிந்தவுடன் தனித்தனியாக சென்று குலாவுகிறார்கள். முன்னரும் இதே பல்லவிதான். சிங்கள தலைவர்களுடன் பேசிப்பார்த்தோம் அவர்கள் எம்மை ஏமாற்றிவிட்டார்கள் என ஒப்பாரிவைத்துக் கொண்டு அதே தலைவர்களிடம் அமைச்சர் பதவி வாங்கிக்கொண்டு அவர்களுக்கு பாதபூஜை செய்தார்கள். இவர்கள் சிங்கள மக்கள் பற்றி எம்மனதில் தீட்டிய தீட்டிக்கொண்டிருக்கின்ற சித்திரங்களில் எமது மக்களும் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த மயக்கத்திலிருந்து விடுபடும்வரை எமது தலைவர்கள் என நாம் நம்பிக்கொண்டிருக்கின்ற வேடதாரிகள் தமது அரசியல் தலைமையை வேண்டுமானால் தக்கவைத்துக் கொள்ளலாம் ஆனால்; பொதுவான எமது எதிரிக்கெதிரான போராட்டத்தை சரியான பாதையில் எம்மால் முன்னெடுக்க முடியாது என்பதைப்புரிந்து கொள்வதோடு எமது பிரச்சினைகளையும் எமது கோரிக்கையிலுள்ள நியாயத்தன்மையையும் எப்படி பரந்துபட்ட சிங்கள மக்களுக்கு புரியவைப்பது என்ற கலையில் நாம் தேர்ச்சி பெறவேண்டும். இலங்கை ஆசிரியர் சங்கத்தி;ல் எனது அனுபவமும் சிங்களமக்கள் மத்தியிலுள்ள சர்வதேசியவாதிகள் பலரோடு எனக்குள்ள நட்பும் அது சாத்தியம் என்பதை ஆணித்தரமாக சொல்ல வைக்கிறது.

*. தேசிய இனங்களுக்கிடையிலான புரிதல்/முரண்பாடுகள்,சிங்கள தேசியவாதத்திற்கும் தமிழ் தேசியவாதத்திற்கும் இடையில்-பிரிவினைக்கு எதிராகவும்,பிரிவினைக்கு ஆதரவாகவும் மாறிவிட்ட நிலை -நிலைமையை மேலும் சிக்கலாக்கி விட்டுள்ளது அல்லவா?

தேசியவாதம் வரலாற்றில் பலதரப்பட்ட பாத்திரங்களை வகித்திருக்கிறது. அது ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பிலிருந்து விடுதலை பெறுவதில் சிறப்பான பாத்திரத்தை வகித்துள்ளது. இதற்கு உதாரணமாக வியத்நாம் விடுதலை போராட்டத்தை எடுத்துக் கொள்ளலாம். தேசிய விடுதலை இயக்கம் சோசலிச புரட்சியின் போது தொழிலாள வர்க்கத்தின் பலம் மிக்க துணைசக்தியாக பயன்பட்டிருக்கிறது. ரஷ்யாவில் அக்டோபர் புரட்சியின்போது நகர்ப்புற தொழிலாளர்களும் விவசாயிகளும் தீவிரமாகப் போராடியபோது ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களும் ஜார் மன்னனுக்கு எதிராக அதனோடு இணைந்து போராடியதை இங்கு நினைவு கூறலாம். பிற்காலத்தில் ஸ்டாலின் அக்டோபர் புரட்சியின் வெற்றிக்கான அடிப்படைக் காரணத்தை ஆராய்கையில் அது தொழிலாள வர்க்க தலைமையில் தொழிலாளர்களின் சேசலிசத்திற்கான போராட்டம் விவசாயிகளின் நிலத்துக்கான போர்  ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் விடுதலைக்கான போராட்டம் ஆகிய மூன்று வகையான போராட்டங்களின் கூட்டு என விபரித்தார். அடுத்ததாக தேசிய விடுதலை போராட்டமே அனைத்து நேச சக்திகளையும் இணைத்துக் கொண்டு புதிய ஜனநாயக புரட்சியில் முடிவுற்றதை சீன புரட்சியின்போது கண்டோம். இவை தேசியவாதத்தின் அழகான பக்கங்கள். அதற்கொரு அவலட்சணமான மறுபக்கமும் இருக்கிறது. முதலாம் உலக மகாயுத்தத்தின் போது ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டையும் சேர்ந்த ஏகாதிபத்தியவாதிகள் ‘தாய்நாட்;டைக் காப்பது’ என்ற கோஷத்தின்கீழ் தமது மக்களை அணிதிரட்டி ஏனைய நாடுகளைக் கொள்ளையடிப்பதற்காகவும் ஏனைய நாடுகளில் வாழும் மக்களை கொலை செய்யவும் தேசியவெறியை கிளப்பினர். ஹிட்லர் தனது பாசிச சித்தாந்தத்தின் மூலம் தேசிய வெறியை உச்சகட்டத்திற்கு உயர்த்தி ஜேர்மனிய மக்களை மிருகங்களை விடவும் ஈவிரக்கமற்ற கொடியவர்களாக மாற்றி ஏனைய தேசிய இனங்களை கொடூரமான முறையில் அழித்தொழிப்பதற்கு பயன்படுத்திக் கொண்டான்.

இலங்கையில் சிங்கள பேரின ஆளும்வர்க்கம் மகாவம்ச சித்தாந்தத்தின் மூலம் சிங்களமக்களின் தேசிய உணர்வில் விசத்தைக் கலந்து தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக அவர்களை தனக்கு பின்னால் அணிதிரட்டி வருகிறது. ஒருவித்தியாசம் சிங்கள மக்கள் தமிழ் மக்கள்மீது யுத்தம் தொடுக்கவில்லை சிங்கள அரசாங்கமே அக்காரியத்தைச் செய்கிறது. இங்கே சிங்கள ஆளும்வர்க்கத்திற்கு சிங்கள மக்களின் வாக்குகளே பிரதான தேவை. அவர்களின் படையணிக்கு ஒரூ குறிப்பிட்டளவு சிங்கள இளைஞர்களே தேவைப்படுகிறார்கள். மறுபுறத்தில் சிங்கள பேரினவாத அடக்குமுறைக்கு எதிராக தமிழ் மக்கள் மத்தியில் உருவாகும் புரட்சிகரமான தேசியவாதத்தில் குறுகியதேசியவாத நஞ்சைக்கலந்து தமிழ் சந்தர்ப்பவாத தலைமைகள் தமக்கு வாக்கு வங்கிகளை உருவாக்கிக் கொள்கின்றவே தவிர அவர்களும் உண்மையாக மக்கள் விடுதலைக்கு எதிரானவர்கள் தான்.

இந்நிலையில் தேசியவாதம் இலங்கையில் இருமுனை கத்தியைப் போல செயற்படுகிறது. சிங்கள பேரினவாதம் தமிழ்மக்கள் மத்தியில் அதற்கெதிரான தேசியவாதத்தைத் தோற்றுவிக்கிறது. தமிழ் தேசியவாதம் சிங்கள பேரினவாதத்தை வலுபடுத்துகிறது. இவ்வாறு இரு தேசியவாதங்களும் பரஸ்பரம் ஒன்றை ஒன்று ஊட்டிவளர்க்கின்றன. அப்படியானால் தேசியவாதம் பிழையானது அதனைப்பற்றி பேசுவதே தவறு என்ற முடிவுக்கு வருவதானால் அது தீக்கோழி மணலுக்குள் தன் தலையை புதைத்துக் கொள்வதைப் போன்ற செயலாகவே இருக்கும். உண்மை என்ன வென்றால் இதுதான் யதார்த்தம். இந்த யதார்த்தத்தை புறந்தள்ளிவிட்டு எந்த ஒரு சரியான அரசியல் செயற்பாட்டையும் முன்னெடுக்க முடியாது. நாம் இலங்கையில் சிங்கள தொழிலாளர்களின் போராட்டத்தோடும் மாணவர்கள் ,மீனவர்கள், விவசாயிகள் போன்ற கீழ்தட்டு மக்களோடு எமது தேசிய போராட்டத்தை இணைப்பதற்கான வழிவகைகளை ஆராயவேண்டும். ஒரு விடயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சிங்கள பேரினவாதம் எந்த ஒரு புரட்சிகரமான பாத்திரத்தையும் வகிக்கமுடியாது. ஆனால் தமிழ் மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிரான தேசியவாதம் ஒரு புரட்சிகர பாத்திரத்தை வகிக்கமுடியும் – அது பிறதேசியங்களை ஒடுக்குவதற்கு துணைபோகாத வரைக்கும்…..

*.இலங்கையின் இனத்துவ விவகாரம்,சிங்களவர் ,தமிழர் மட்டுமானதாகப் பார்க்கும் பெரும்போக்கு குறித்து உங்கள் பார்வை என்ன?

ஆம் இலங்கையின் இன்றைய நிலைமை அப்படித்தான் இருக்கிறது. இலங்கையில் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான பிரச்சினை மாத்திரமே இருக்கிறது என்பதைப் போன்ற ஒரு மாயத் தோற்றப்பாடு செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இது சிங்கள பேரினவாதத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். இதைச் சொல்லித்தான் சிங்கள மக்களை தனது சிங்கள பேரினவாத அரசு தனது பிடிக்குள் வைத்திருக்க முடிகிறது. சிங்கள மக்களின் உண்மையான பிரச்சினைகளில் இருந்து அவர்களது கவனத்தை திசைதிருப்பவும் அவற்றிற்கு எதிராக எழும் போராட்டங்களை நசுக்கிவிடுவதற்கும் அதற்கு இந்த நிலைமையை நீடிப்பது அவசியம். இதைச் சொல்லிக் கொண்டு அன்றாடம் அரசியலில் வாழ்வதற்கு தமிழ் தலைவர்கள் எனப்படுவோர்க்கும் இந்நிலைமையின் நீடிப்பு தேவைப்படுகிறது. இது ஒன்றும் அகற்றப்பட முடியாத இரும்புத்திரை அல்ல. மூன்றாவது சக்தி ஒன்று உருவாகி சரியான திசையில் மக்களின் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் போதுதான் இந்த நிலைமையை மாற்ற முடியும்.

*.அண்மையில் தமிழ்மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகத்தால் நடத்தப்பட்ட உரை அரங்கில் நீங்கள் பேசியபோது ஐக்கிய முன்னணி என்கிற பதத்தினை பிரேயோகித்தீர்கள்.நேரம் போதமையினால் இது பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் பேசுவதாக சொன்னீர்கள்.இது பற்றி சொல்லுங்கள்….

நான் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக முன்வைத்து வரும் ‘ஐக்கிய முன்னணி – முன்றாம் சக்தி – புதிய வேலைத்திட்டம்’ என்ற கருத்தை விளக்கமாகவும் விரிவாகவும முன் வைக்க எனக்கு இதுவரை சந்தர்ப்பம் கிடைக்க வில்லை. அதனை தனியாகவும் மிக ஆழமாகவும் பரவலாகவும் விவாதத்திற்கு உட்படுத்திய பின்னர் எழுத்துருவில் முன்வைப்பது தான் சரியான அணுகுமுறையாக இருக்கும். எனினும் அவ்விவாதத்தை தொடங்கி வைப்பதற்கு ஒரு நகல் பிரேரணை தேவை அல்லவா?. எனவே அதனை சுருக்கமாக எழுத்து வடிவில் விரைவில் தருவேன்;. அது ஒரு நகலாக இருக்குமே தவிர இறுதி வடிவம் பெற்ற ஒரு பிரேரணையாக இருக்காது. அதனை விவாதத்திற்கான தொடக்க புள்ளியாக மாத்திரமே கொள்ளவேண்டும்.

*. இலங்கையின் இன்றைய சிங்கள தேசியவாத அரசியல் அதிகார நிலையும் போக்கும் ஏனைய தேசிய இனங்களான மலையக மக்கள்,முஸ்லீம்கள் இரு சாரார் மீதும் திரும்பும் வாய்ப்பு தொடங்கி விட்டதாக கருதுகிறீர்களா?

ஆம் இன்று மகிந்த அரசின் பிரித்தாளும் தந்திரம் வெள்ளையருக்கே பாடம் சொல்லிக் கொடுப்பதைப் போலமைந்துள்ளது. சிங்கள மக்கள் மத்தியிலுள்ள சகல கட்சிகளுக்குள்ளும் பிளவுகளை ஏற்படுத்தி அவற்றை பலவீனப்படுத்துவதில் இவ்வரசு வெற்றிகண்டிருக்கிறது. அதே போல வடக்கு கிழக்கு மக்கள் மத்தியிலுள்ள தலைமைகளைக் கூட கூறுபோட்டுள்ளது. கிழக்கில் பிள்ளையான் வடக்கில் டக்ளஸ் தேவானந்தா மத்தியில் கருணா ,கூட்டமைப்புக்குள் தனது செல்லப்பிள்ளைகள் என அதன் கரம் நீண்டுள்ளது. முஸ்லிம் தலைமைகளை பிரித்து தமக்குள் ஒருவரை ஒருவர் மோதவிடக்கூடிய சூழலை தோற்றுவித்து அனைவரையும் தனது காலடியில் விழுந்து கிடக்கச் செய்துள்ளது. ஊழல் மிக்க மலையக தலைமைகள் எந்த அரசாங்கம் வந்தாலும் அதனோடு இணைவதை தமது கொள்கையாகக் கொண்டிருந்தன. ஆயினும் தமக்குப் பின்னாலுள்ள தொழிலாளரின் பலத்தைக் கொண்டு ஓரளவுக்காவது அவ்வப்போது பேரம்பேசக்கூடிய நிலையில் அவை இருந்தன. இன்று ஒவ்வொரு மலையக கட்சிக்குள்ளும் தனது ஏஜெண்டுகளாக சில தலைமை மட்ட உறுப்பினர்களை பிடித்து வைத்துக் கொண்டு அவற்றை அடிபணிய வைத்துள்ளது.

எனவே தலைமைகள் பலவீனமாக்கப்பட்டுள்ள இன்றைய நிலைமையில் அடக்குமுறை முஸ்லீம் மக்கள்மீதும் மலையக மக்கள்மீதும் அதிகரிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் மக்களின் நிலம்சார்ந்த பிரச்சினைகளும் வியாபார வர்த்தக நலன் சார்ந்த பிரச்சினைகளும் புதுவடிவை எடுத்துள்ளது. குறிப்பாக ஹெலா உருமயவின் அரசியல் முஸ்லிம் எதிர்ப்புவாதத்தையே பிரதானமாகக் கொண்டிருக்கிறது. மலையக மக்களின் மத்தியில மீண்டும் நில அபகரிப்பு சிங்கள குடியேற்றம் புதுவடிவத்தை எடுத்திருக்கிறது. பொருளாதார பளு அவர்களை வெகுவாகப் பாதித்திருக்கிறது. மலையக மக்கள் இருவேளை கோதுமை மா பண்டங்களையும் ஒருவேள சோறையும் உணவாகக் கொள்வதை பழக்கத்தில் கொண்டிருந்தவர்கள். அவர்களது தொழில்முறைக்கு அதுவே உகந்ததாகவும் இருந்தது. கோதுமை மாவின் விலை உயர்வும் பாணின் விலையேற்றமும் இவர்களை மிகவும் பாதித்துள்ளது. பலவீனமான தலைமைகள் இருப்பது தலைவர்களே இல்லாத நிலைமையைக்காட்டிலும் ஆபத்தானது. இந்த நெருக்கடியான காலகட்டத்தைத்தான் மலையக மக்களும் முஸ்லிம் மக்களும் இன்று அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். இனரீதியான பிளவுகள் ஆழமடைந்துள்ள இன்றைய சூழலில் இலங்கை மக்கள் இனரீதியாக பிரிந்திருப்பதை விட பல பலவீனமான தலைமைகளின் கீழ் தமக்குள் பிளவுண்டு கிடப்பதுதான் மிகவும் மோசமான நிலைமையாகும். ஆயினும் இதற்கு மற்றொரு பக்கமும் உண்டு. இந்த சந்தர்ப்பவாத தலைமைகள் யாவும் அம்பலப்பட்டு பலவீனப்பட்டுள்ள நிலைமை புதிய மூன்றாவது தலைமை சக்தி ஒன்று உருவாவதற்கான சூழலையும் தேவையையும் ஏற்படுத்துகிறது.

௦௦

சந்திப்பு-எம்-பௌசர்

 

உரையாடலைத் தொடங்கும் வகையில் முதற்படியான வினாக்களே இங்கு எழுப்பப்பட்டுள்ளன .பி.ஏ.காதர் அவர்களிடம் நீங்கள் கேள்விகளை கேட்க விரும்பின், உங்கள் பெயர் விபரங்களுடன்,கேள்விகளையும் எமக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்!அடுத்த இரண்டு இதழ்களிலும் அவரது பதில்கள் இடம் பெறும்.

 

22 Comments

 1. RAGAVAN says:

  காதர் அவர்கள் தமிழ் தேசியவாதமும் சிங்கள் தேசியவாதமும் பரஸ்பரம் ஒன்றையொன்று வளர்க்கின்றன என்கிறார். அதே சமயம் தமிழ் மக்களின் ஒடுக்குமுறைக்கெதெரான தேசியவாதம் புரட்சிகர பாத்திரத்தை வகிக்கமுடியும் என்கிறார். இந்த கதையாடல்களைத்தான் நாம் கடந்த 30 வருடங்களாக கேட்டு முள்ளிவாய்க்காலில் ஆழ்ந்த சயனம் கொண்டோம். பாலசிங்கம் இதைவிட அதிகமாக புரட்சிகர தேசியவாதம் பற்றியும் தர்மயுத்தம் பற்றியும் போதித்து இருக்கிறார். ஈ பி ஆர் எல் எப் இலிருந்து என் எல் எப் டி வரை தமிழ் தேசியவாதம் முற்போக்கென நிறுவ முயன்று தத்துவார்த்த- நடைமுறை தோல்வி கண்ட பின்னும் மீண்டும் அதனையே சொல்வது சலிப்பாகவே இருக்கிறது.

  ஒரு மார்க்சிய வாதி வர்க்கபோராட்ட பார்வையிலிருந்து தான் அனைத்தையும் ஆய்வுசெய்வான். காலனித்துவத்துக்கெதிரான தேசிய விடுதலை போராட்டங்களை மார்க்சியர்கள் முற்போக்கு பாத்திரம் வகித்ததென கூறுவதற்கான திண்ணமான காரணிகள் இருந்தன. காலனித்துவ தரகு முதலாளிகளின் தலைமையை அழிப்பதன் மூலம் தேசிய முதலாளித்துவத்தை பலமாக்கி அடுத்தகட்டமாக சோசலிச பாதைக்கு நடைபோடுவதே அதன் தாற்பரியம். அதுமட்டுமல்ல காலனித்துவ சங்கிலியை உடைப்பதன் மூலம் ஏகாதிபத்தியத்திற்கெதிரான ஐக்கியத்தை கட்டுவதும் அதன் நோக்கு. தேசிய முதலாளிய ஆட்சி சூழலில் தொழிலாளர் ஸ்தாபனமயப்படுத்தப்பட முடியும் என்பதும் மாக்சியர்களின் பார்வை. இந்த விடயத்தில் காலனித்துவத்துக்கு எதிரான தேசியவாதமானது பல்வேறு இனங்களின் குறைந்த பட்ச அய்க்கியத்தில் உருவானது. பல்வேறு குறைபாடுகள் இருப்பினும் பல சமூகங்கள் ஒரங்கட்டப்பட்டபோதும் காலனித்துவத்துக்கெதிரான தேசியவாத போராட்டம் பேரளவிலாயினும் பல்வேறு இனக்குழுமங்க்களின் ஒற்றுமையை வேண்டியது. எனவே மார்க்சிய வாதிகளை பொறுத்தவரையில் காலனித்துவத்துக்கெதிரான தேசிய போராட்டம் பாட்டாளி மக்களின் வலுவை அதிகரித்து சோசலிசமாற்றத்திற்கு செல்லும் ஒரு படிகல்.

  வரலாற்று பொருள்முதல் வாதத்தில் நம்பிக்கை கொண்ட ஒரு மாக்சியவாதி தேசியவாதத்தை வெறும் உச்சாடனமாக கொண்டு சர்வரோக நிவாரணியாக பரிந்துரைப்பதில்லை. முதலாளித்துவ வாதிகளின் சட்ட வரைமுறைக்கண்ணாடி கொண்டு உள்ளார்ந்த சுயனிர்ணயம் பற்றி அலட்டிகொள்வதில்லை. மாறாக தேசியவாதத்தின் முழுப்பின்னணியையும் வரலாற்று ரீதியாக ஆய்ந்து அதன் வர்க்கபின்னணி அதன் வரலாற்று பாத்திரம் என்பவற்றை கருத்தில் கொண்டு ஒரு நிபந்தனையுடன் கூடிய ஆதரவை தேவைப்படும் போது அளிக்கிறான். தேசியவாதம் பாசிசமாக மாறும் சூழலில் அதன் மாற்றங்களை துல்லியமாக கவனித்து தனது எதிர்ப்பை காட்டுகிறான். அவனுக்கு தேசியத்தில் நல்லது கெட்டது தெரியாது. பாட்டாளி வர்க்க நலனை அது முன்னெடுத்தால் அதற்கு ஆதரவு. அது பாட்டாளிமக்களின் நலன்களை பாதிப்பின் அதற்கு எதிர்ப்பு.
  தமிழ் தேசியவாதத்தை இனி புதிதாக புரட்சிகரமாக கட்டுவதென்பது வெறும் கற்பனையே. அதனை எவ்வாறு கட்டுவது என்பதற்கு காதர் சொல்வது போல் ‘நாம் இலங்கையில் சிங்கள தொழிலாளர்களின் போராட்டத்தோடும் மாணவர்கள் ,மீனவர்கள், விவசாயிகள் போன்ற கீழ்தட்டு மக்களோடு எமது தேசிய போராட்டத்தை இணைப்பதற்கான வழிவகைகளை ஆராயவேண்டும்’ என்பது சமூக யதார்த்தம் அக புற சூழ் நிலை பற்றிய ஆழமான ஆய்வின்றி சொல்லப்படும் உச்சாடனங்களே . அன்று ஈபி ஆர் எல் எப் இதனை தான் செய்து பின்னர் ஈழத்து பள்ளராக தமிழ் தேசியவாத சக்திகளால் ஓரங்கட்டபட்டது. சிங்கள தமிழ் தேசிய வாத சிந்தனை இலங்கையை பீடித்திருக்கிறது- சிங்கள பவுத்த தேசியவாதம் சிறுபான்மை இனங்களை நசுக்கிறது என்பது உண்மை. ஆனால் இதற்கு வழி திரும்பவும் முள்ளிவாய்க்கால் அல்ல.

  காதரிடம் ஒரு கேள்வி – சிங்கள பாட்டாளிவர்க்கத்தையும் மற்றைய சிறுபான்மை இன பாட்டாளிவர்க்கத்தையும் ஒன்று படுத்த தமிழ்தேசியவாத சிந்தனை முறை எவ்வாறு உதவும். அயர்லாந்து தேசியவிடுதலையை ஆதரிப்பது தான் பிரித்தானிய பாட்டாளிகளின் தளையை அறுக்கும் என்ற பழைய சுலோகத்தை தவிர்த்து எமது நாட்டு நிலை 30 வருட யுத்தம் தமிழரின் துயர் நிலை முஸ்லிம் மக்களின் வெளியேற்றம் மலையக மக்களின் கையறு நிலை போன்ற அக புற காரணிகளை ஆய்ந்து புதிய புரட்சிகர தேசியம் எவ்வாறு பாட்டாளி மக்களை ஒடுக்க பட்ட மக்களை ஒன்றுபடுத்தும் என விளக்கமுடியுமா.?

 2. B.A.Kader says:

  Thank you very much for your comment Ragavan. I will answer your question and respond to your comment in the next issue of this magazine along with other questions. Thank you once again for participating in this debate in a constructive manner.

 3. சத்தியன்-பிரான்ஸ் says:

  விடுதலைப் புலிகளின் இராணுவத் தோல்வியையும் அழித்தொழிப்பையும் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? உங்களது ரீவிப் பேட்டிகளை பார்த்திருக்கிறேன்.அவற்றில் நீங்கள் இது பற்றி அதிகமாக பேசியதில்லை. அது பற்றி உங்களின் கருத்துக்களை விரிவாக அறிவதற்கு
  ஆவலாக உள்ளேன்.

 4. மாறமுத்து-தலவாக்கல says:

  மலையக மக்கள் முன்னணியில் நீங்கள் இல்லாமால் போனது சந்திரசெகரனுக்கும் கட்சிக்கும் பெரும் இழப்புத்தான்.சந்திரசேகரன் அவர்கள் இதனை பின்னாடி உணர்ந்ததாக இங்குபலர் சொல்ல கேட்டிருக்கிறேன்.உங்கள் வெற்றிடம் மலையக மக்களின் கட்சிபலத்திற்கும் மக்களை அரசியல் விழிப்பு செய்வதேட்கும் தேவையான பங்களிப்பு செய்யக்கூடிய உங்களை இழந்தது இழப்பானது. மலையக மக்கள் முன்னணியிலிருந்து நீங்கள் வெளியே செல்ல காரணம் என்ன என்பதனை நீங்களாக சொல்வது பொருத்தமானதாக இருக்கும் என நம்புகிறேன்.

  உங்கள் கருத்துக்களை படித்துது எனக்கு பழைய காலங்களை நினைவுக்கு கொண்டு வருகிறது.

 5. B.A.Kader says:

  Thank you very much for your kind comment. I know how much the Up-country people love me. I miss them and my concern and love towards them will remain in my heart forever. However, I do not like to tell the reasons that led me to leave the UPF in public as some of them, including late Mr. Chandrasekaran, had atoned their mistakes. As you are aware, the reasons for my leaving the UPF were political and not personal. I have detailed them in my resignation letter. Thank you very much for your kindness.

  Kader Master

 6. குமரன்-வவுனியா says:

  சிங்கள,தமிழ், முஸ்லீம் மக்களை இணைக்கும் வேலைத்திட்டம் எவ்அடிப்படையில் கட்டியெழுப்பப்பட வேண்டுமென கருதுகிறீர்கள்? கட்டாயமாக நடைபெற வேண்டிய விசயம் இது,ஆனால் இலங்கை நாட்டின் அரசியல் வரலாற்றில் இதுவரை சாத்தியமாகாத இந்த விசயம் இனி சாத்தியப்படுமென நினைக்கிறீர்களா?

  • B.A.Kader says:

   Nothing is impossible. Who thought the conservative-Jaffna would lead an armed struggle? Let us work out a realistic and pragmatic programme- Kader

 7. ஸ்ரீபன்-கனடா says:

  நீங்களும் வெளிநாட்டில்தான் வாழ்கிறீர்கள், நானும் பதினைந்து வருடகாலமாக வெளிநாட்டில்தான் வாழ்கிறேன். நாட்டுப்பிரச்சினையில் அக்கறைகொண்ட ஆயிரக்கணக்கானவர்கள் வெளிநாடுகளில் உள்ளனர். பெருமளவு பணஉதவி செய்பவர்களும் வெளிநாடுகளில்தான் உள்ளனர். அங்குள்ள மக்களின் துயரங்கள் குறைய,நாட்டுப்பிரச்சினை தீர இங்குள்ளவர்கள் இன்றையநிலையில் செய்யக்கூடியது,செய்யக் கூடாதது என்ன?

  • B.A.Kader says:

   We should not allow the defeatist mentality to defeat us. We should put our head up and look forward. – Kader

 8. வித்தியாசமான நேர்காணல், மலையகத்தைப் பிரதிநிதித்துவம் செய்கின்றவர் என்ற அடிப்படையில் அவரது கருத்துக்கள் ஆழமாக இருப்பதும் அவதானமாக இருப்பதும் பாராட்டத்தக்கது.

 9. B.A.Kader says:

  Thank you. Kader

Post a Comment