Home » இதழ் 09 » *சேபாலிக்கா- மொழிபெயர்ப்பு சிறுகதை,தமிழில்:தேவா

 

*சேபாலிக்கா- மொழிபெயர்ப்பு சிறுகதை,தமிழில்:தேவா

 

 

மெதுவான அமைதியில் அப்பகுதியே உறைந்துபோய் கிடந்தது. பறவைகள் தங்கள் பாடலை நிறுத்திவிட்டிருந்தன. காட்டுக்குள் போயிருக்க கூடும். போகாமல் அங்கே இருந்தவைகூட  அமைதியாக இருந்தன. தங்கள் காதுகளை கூர்மையாக்கிக்கொண்டு ஏதோ ஒன்று நடைபெறும்வரை காத்துக்கிடந்தன. யாரோ ஒரு சமிஞ்ஞையை கொடுக்கும்வரை. கிடைத்தவுடன் அவ்விடத்தைவிட்டுப்போய்விடக் கூடும். அப்பா எங்கள் குடில் முன்னால்  பரந்துவிரிந்த வானத்தைக்கண்களால் துலாவியபடி நின்றார். காலைக்குளிர் சூழவிரிந்திருந்தது. கண்களில் மீதமிருந்த தூக்கத்தை கைகளால் தேய்த்துக்கொண்டே, வீட்டின் பின்புறம் காலை உணவு தயாரித்துக்கொண்டிருந்த அம்மாவை நோக்கி  நடந்தேன். இன்னும் வெளிச்சம் வரவில்லை. மண்ணெண்ணெய் குக்கர் வெளிச்சத்தில் அம்மா சமைத்துக்கொண்டிருந்தாள். நான் வாசல்படியில் நிற்பதைக் கண்டு,  “போய் முகத்தைக்கழுவி பாடசாலை போக ஆயத்தமாகு” ஏற்கனவே கலைந்திருந்த என் முடியை தடவிக்கலைத்தபடியே சொன்னாள்.

 

சமன்மாலி அக்கா தேங்காய் திருவிக்கொண்டிருந்தாள். என்னைவிட இரண்டே வயது கூடிய அவள் அதிக வயதானவள்போல் தெரிந்தாள். எங்கள் இளைய தங்கை, வெண்ணிநிற இதழ்களையும்  செம்மஞ்சள் நிறமமான காம்புகளையுமுடைய சேபாலிக்கா எனும் காலையில் மலரும் சிறிய பூவின் பெயரைக்கொண்டவள்.  ஏங்கள் வீட்டின் முன்பாக  சேபாலிக்கா மரம் ஒன்று நிற்கிறது. காலையில் அதன் வாசம் காற்றில் பரவும்போதுதான் நாங்கள் கண் விழிப்போம். பூக்கள் எல்லாம் மரத்தடியில் விழுந்து  வெள்ளைக்கம்பளம் விரித்தாற்போல் பரந்து கிடக்கும். அந்த பூக்கள் மலர்ந்து காற்றெல்லாம் வாசம் வீசிய ஒரு காலைவேளையில் பிறந்ததால் தங்கைக்கு அந்த பெயரை வைத்தோம்.  தோட்டத்தில் மலர்ந்த பூக்கள்போல் சேபாலிக்கா  அழகாயிருக்கிறாள் என அம்மா சொல்வாள். எல்லோருக்குமே தங்கையின் பெயர்பற்றிய திருப்தியிலும் மகிழ்ச்சியிலும் மிதந்திருந்தோம். சேபாலிக்கா தனது சிறிய தொட்டிலில் அறையில் நித்திரையில் இருந்தாள்.

 

மரத்தடிக்குப்போய் கீழே கிடந்த பூக்களில் நல்லவைகளை மாத்திரம் பொறுக்கி எடுத்தேன். ஒரு தட்டில்  பரப்பி தண்ணீர் தெளித்து வீட்டிலிருக்கும் புத்தர் சிலைக்கு காணிக்கையாக வைத்தேன். மிகுதியை ஒரு பையிலிட்டு வகுப்பறையிலிருக்கும் புத்தர் படத்துக்கு வைப்பதற்காக எடுத்துக்கொண்டேன். சிலவேளைகளில் சமன்மாலியும் பூக்களைக் கொண்டுவருவதுண்டு.  ஆனால் எப்போதுமே பூக்களை கொண்டு செல்வது நான் தான்.கீழே விழுந்த பூக்கள் நெடுநேரம் வரை அப்படியே இருப்பதில்லை. காலை வெயிலில் வதங்கி மதியத்தில் நிறம் மாறிவிடும். மீண்டும் விடிகாலையில் புதிதாக  பூக்கள் மலர்ந்து காற்றில் வாசத்தை பரவவிடும்.  இன்று நிறைய பூக்கள். இரண்டு பைகள் நிறைத்து எடுத்து வீட்டுவாசலில் வைத்தேன். விளக்குமாறு ஒன்றை எடுத்து  எங்கள் சிறிய தோட்டத்தில் நேற்றிரவு உதிர்ந்த காய்ந்த இலைகளை கூட்டினேன். பக்கத்து வீட்டுக்காரி சாருலதா விசுக் விசுக்கென தன் தோட்டத்தில் கூட்டிக்கொண்டிருந்தாள். சாருலதா எனக்கு மேல்வகுப்பு படிப்பவள். அக்கா, சாருலதா, நான் என இப்பகுதியில் இருக்கும் எல்லோருமே  பாடசாலைக்கு ஒன்றாகத்தான் போவோம். பாடசாலை தூரக்கிராமத்தின் நடுவிலிருந்தது. நெடுந்தூரம் நடக்கவேண்டும். பாடசாலை செல்வதென்றால் எனக்கு நல்ல விருப்பம். தூரம்பற்றி  கணக்கெடுப்பதே இல்லை. படிப்பதில்- புதிய சுவையான வித்தியாசமான விடயங்களை கற்பதில் மிகுந்த ஆர்வமிருந்தது. மூன்று வருடங்களுக்கு முன்புதான்  பாடசாலைக்கு போகத்தொடங்கினேன். அது அவ்வளவு நீண்டகாலம் இல்லைதான்.

 

என் பெயர் சாகர. எங்கள் நாட்டை சுற்றி பெரிய கடல் இருக்குதாமே.  அதன் பெயர்தான் எனக்கும்.  இதுவரை நான் கடலைப்பார்க்கவில்லை. என்றோ ஒரு நாள்  பார்ப்பேன். அதுவரை இந்த சிறிய கிராமத்தில் அப்பா அம்மாவுடனும் என் சகோதரிகளுடனும் தான்  இருப்பேன்.சேபாலிக்கா பூக்களின்மேல் எவ்வளவு  பிரியமிருந்ததோ அதே அளவு பிரியத்துடன் என் தங்கையுடன் விளையாடுவேன். நான்கு மாதங்களின் முன்புதான் அவள் பிறந்தாள். அவளால் பெரிதாக என்னுடன் விளையாட முடியாது.  குட்டிக்கைகால்களுடன் சிறிய குழந்தை.  ஆனால் அழகாக அவளுக்குச்சிரிக்க தெரியும்.  “நீயும் வளர்ந்து பூக்கள்போல் அழகாக இருப்பாய்” மென்மையான அவளது கன்னங்களை தடவியபடியே அவளுக்குச்சொன்னேன். விழித்துக்கொண்ட அவள்  தான் விழித்ததை எங்களுக்கு சொல்லும் முயற்சியில் இருந்தாள். தன்பெரிய கண்களை என் பக்கம் திருப்பி கொஞ்சல்  மொழியில்  தன் மகிழ்ச்சியை  எனக்கு சொன்னாள். தொட்டில்பக்கத்தில் நான் உட்கார்ந்ததில் அவளுக்கு அவ்வளவு சந்தோசம்.
அம்மா  மூன்று மாத கர்பகாலத்தின் போதே  பக்கத்து நகரத்திலிருக்கும் தன் தாய் வீட்டிற்கு போய்விட்டாள்.  அவளுக்கும் குழந்தைக்கும் அதுதான் நல்லதென எல்லோரும் நினைத்தார்கள்.  வாழ்க்கையின் பரபரப்பு  தாய்க்கும்  குழந்தைக்கும் நல்லதல்ல என காரணம் சொன்னார்கள். அம்மா அங்கே போக பெரியம்மா எங்களுக்கு உதவியாக  வந்தாள். அவள் சமையலில் வலு கெட்டிக்காரி. அவள்மாதிரி யாராலும் சமைக்க முடியாது.  இரண்டு வாரங்களுக்கு முன்புதான் அம்மா திரும்பி வந்தாள். பெரியம்மா உதவிக்காக இங்கேயே இருக்கிறாள்.

 

குளித்துவிட்டு சமன்மாலி நடுங்கிக்கொண்டே வந்தாள். காலையில் தண்ணீர் குளிராக இருப்பதால் காலைக்குளியல் எப்போதுமே கடினமாக தான் இருக்கும். இப்போது என் முறை. குளித்து பாடசாலைக்குச் செல்ல ஆயத்தமாக வேண்டும். கிணற்றுக்குப் போவதற்கு காலடி எடுத்து வைக்க, வீட்டின் முன்புறம் பேச்சு சத்தம் கேட்டது. அந்தக் குரல்களில் குழப்பம் தெரிந்தது.  அம்மா சமையலை நிறுத்திவிட்டு அவர்கள் பேசுவதை உன்னிப்பாக கவனித்தாள். பெரியம்மா  கதைக்கு காது கொடுத்தாலும் சமையலை நிறுத்தவில்லை. அவள் சமையல் பாத்திரத்தை மூடியால் மூடியபோது, அவசரமாக வந்த அப்பா,  நாங்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டுமென்று சொன்னார்.  ஆண்கள் கும்பல் ஒன்று  கிராமத்தை நோக்கி வருவதை தூரத்திலிருந்து பார்த்திருக்கிறார்கள். எல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டு அவசரமாக வெளியே வந்தோம். இது ஒரு பழக்காமாகவே வந்துவிட்டதால் யாரும் தாமதிக்கவோ யோசிக்கவோ இல்லை.  வழமைபோல் இப்படியான சந்தர்ப்பங்களில் சாப்பிடுவதற்கு ஏதாவது எடுத்துபோவோம். வீட்டைவிட்டு எவ்வளவு நேரம் வெளியே இருக்கவேண்டுமென்று யாருக்குமே தெரியாது.  இன்று எடுத்துச்செல்ல ஒன்றுமே இல்லை. றொட்டி சுட்டு முடிந்திருந்தாலும் பருப்புக்கறி இன்னும் முடியவில்லை அடுப்பில் கொதித்துக்கொண்டிருந்தது.  அம்மா அப்போதுதான் கடைசி றொட்டியை அடுப்பில் போட்டிருந்தாள் அவள் அதை எடுக்கவும் நேரமில்லாது வீட்டினுள்போய் சேபாலிக்காவை தூக்கினாள்.
“ நீ என்ன செய்கிறாய்?” சேபாலிக்காவை அம்மா தூக்கி வந்ததை பார்த்து அப்பா கேட்டார்.
“இவளை தனியாகவா விட்டுவிட்டு போவது?”  அவளது குரலிலிருந்து படர்ந்த கவலை முகமெங்கும் பரவியது.
“அவளை கொண்டுபோகவும் முடியாது காட்டினுள் அவளுக்கு வசதியாகவும் இருக்காது”
“என்ன செய்வது?”
சேபாலிக்காவை என்ன செய்வதென தெரியாமல் அம்மாவும் அப்பாவும்  தடுமாறிக் கொண்டிருக்க, “நான் வேண்டுமானால் இருக்கிறேன்” என பெரியம்மா சொன்னாள்.

“மடத்தனமாக பேசாதே உனக்கு அவர்கள் எவ்விதத்திலும் இரக்கம் காட்டமாட்டார்கள். குழந்தையை சிலவேளைகளில் கவனிக்காமலும் விடலாம். ஆனால் அவளை எடுத்துப்போனால்  அழுகை சத்தம் எங்களை காட்டிக்கொடுத்துவிடும்” பெரியம்மாவின் முகத்தில் படிந்திருந்த அவநம்பிக்கையை பார்த்து அப்பா சொன்னார்.
“அது என்றால் உண்மைதான். எங்கள் எல்லோரையும் காட்டிக்கொடுத்ததாக முடியும்” மெதுவாக பதில் சொன்ன அம்மா, என்னதான் செய்ய முடியும் என்று கேட்டாள்.
“நன்றாகச் சீலையில் சுற்றி அவளை கட்டிலிற்கு  அடியில் போடு.  அவர்கள் அங்கு கண்டுபிடிக்கமாட்டார்கள். வீட்டிற்குள் இருந்தால்  அவளும் சத்தம் போடமாட்டாள்” அப்பா ஒரு கண யோசணைக்குப்பின் சொன்னார்.
சேபாலிக்காவின் வாயினுள்  றபர் சூப்பி ஒன்றை சொருகி,  செம்மஞ்சள் நிற சிறு கம்பளியால்  அவளை சுற்றி அலுமாரிக்குப் பின்பாக தரையில் வைத்துவிட்டு, “இங்கு இவளை யாரும்  காணமாட்டார்கள் வெயிலும் படாது” என சொல்லிக்கொண்டே அம்மா, பெரியம்மாவுடன் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தாள். அப்பா கதவை பூட்டியபின்  அவசர அவசரமாக காட்டை நோக்கி ஓடினோம்…….


கிராமத்தின் மறுபுறம்  இருக்கும் இரணுவமுகாமிற்கு தகவல் அனுப்ப நேரம் போதாது.  சைக்கிளில் போவதாக இருந்தாலும் அந்த தூரத்தைக்கடக்க அரைமணியாவது தேவை.  அதைவிட, இராணுவமுகாமிற்கு திரும்பும் பாதை பக்கமாகத்தான் தமிழ் பயங்கரவாதிகள் வந்து கொண்டிருந்தார்கள். யார் இராணுவ முகாமை நோக்கி போனாலும் அவர்கள் தாக்கப்படுவது நிச்சயம் . அரைவாசி தூரத்தைக்கூட யாராலும் கடக்க முடியாது. கிராமத்தவர்கள் எல்லோருமே காட்டை நோக்கித்தான் ஓடிக்கொண்டிருந்தார்கள். செறிவான பற்றைக்காடு காய்ந்து வரண்டு கிடந்தது.  மரங்கள் வாடி, களைத்ததுபோல் தெரிந்தன. மரங்களின்மேலும் பற்றைகளின் உள்ளும் ஒளிந்துகொண்டு  பயங்கரவாதிகள் கடந்து செல்லும்வரை காத்திருந்தோம். அவர்கள் கிராமத்தை விட்டு போனதை எப்பாடியாவது நாங்கள் தெரிந்துகொள்வோம். சிலமணித்தியாளங்கள் மாத்திரமே அவர்கள் கிராமத்தில் நிற்பார்கள். இராணுவத்துக்கு தெரிந்துவிடும் என்ற கவனம் அவர்களுக்கு உண்டு. இம்முறை நெடுநேரம் காத்திருக்க வேண்டி இருந்தது.  அவர்கள் போய்விட்டார்கள் என்று உறுதியாக தெரியும் வரை காத்திருக்க வேண்டும்.

ஒருமுறை பக்கத்து கிராமத்தவர்களிற்கு ஒரு சம்பவம் நடந்தது. பயங்கரவாதிகளிற்கு பயந்து காட்டிற்குள் ஒளிந்திருக்கிறார்கள். பயங்கரவாதிகள் வெளியேறியதும் திரும்பி வந்திருக்கிறார்கள். கிராமத்த்திற்குள் பயங்கரவாதிகள் நுழைந்ததை கேள்விப்பட்ட இராணுவம் கிராமத்தை நோக்கி வந்திருக்கிறது. வெளியேறிக் கொண்டிருந்த பயங்கரவாதிகள், இராணுவம் வருவதையறிந்து திரும்பவும் கிராமத்திற்குள் வந்துவிட்டார்கள். மீண்டும் காட்டுக்குள் ஓடி ஒளிய கிராமத்தவர்களிற்கு அவகாசம் கிடைக்கவில்லை. பலரை கொன்று விட்டார்கள்.சிலர் உடனே இறந்து விட்டார்கள் சிலர் மணிக்கணக்காக கிடந்தபின் இறந்திருக்கிறார்கள். யாருமே அவர்களுக்கு உதவுவதற்கு அருகில் இல்லை. இராணுவம் வருவதற்கிடையில் எல்லாமே நடந்து முடிந்திருந்தது. கிராம மக்களில் பலர் இறந்துபோனார்கள். பயங்கரவாதிகள் நிச்சயமாக திரும்பி போய்விட்டார்களென்று  தெரியும் வரை நாங்கள் காட்டை விட்டு வெளியே வரவில்லை. சிலவேளைகளில் ஒரு நாள் முழுவதும்கூட காட்டினுள் காத்திருந்திருக்கிறோம். பசி. எல்லோருக்குமே அகோரப்பசி . பசியை கவனத்தில் எடுக்காமல் இருக்க இப்போதெல்லாம் நன்றாகவே பழகி இருந்தோம். எந்தவிதமான சிறு அசைவு கூட எங்களை காட்டிக்கொடுத்துவிடும் என்பதால் அதீத கவனத்துடன் காத்திருந்தோம்.

 

சின்னஞ்சிறிய இந்தக்கிராமத்தின் பெரும்பகுதியினை காடு ஆக்கிரமித்திருந்தது. கண் பார்வை தெரியுமளவுக்கு காடுதான் தெரியும். கிழவனின் வீட்டுக்கு பின்னால் காடு தொடங்கும். எங்கள் கிணற்றுக்கு அப்பால்தான் கிழவனின் வீடு. இந்தக்காட்டுக்கு நான் பல தடவை வந்துள்ளேன். தமிழ் பயங்கரவாதிகள்  கிராமத்துக்கு வரும்போதெல்லாம் காடு மட்டுமே பாதுகாப்பான இடம். இன்று எங்களுக்கு பாடசாலை இல்லை. சொல்லாமல் கொள்ளாமல் பாடசாலைக்கு வராமலிருப்பது அடிக்கடி நடக்கும் ஒன்று. ஆசிரியர்களுக்கும் தெரியும். இந்தப்பகுதி வாழ்க்கையில் இதுகும் தவிர்க்கமுடியாத ஒன்று. அதிஸ்ரம் இருந்தால் மாத்திரமே உயிரோடு இருக்கலாம். இப்படித்தான் வாழ்க்கை போய்கொண்டிருக்கிறது.
காட்டுப்பூனைகளுக்கும் கரடிகளுக்கும் பாம்புகளுக்கும் காட்டு யானைகளுக்கும் வாழ்விடமாக இக்காடு ஒரு காலத்தில் இருந்தது. நீர் நிலைகளை நோக்கி மிருகங்கள் வந்துபோய்கொண்டிருந்தன. இப்போதெல்லாம் காட்டு மிருகங்கள் குறைவாகத்தான் இருக்கின்றன. காட்டு மிருகங்கள் மீதான பயம் எங்களுக்கில்லை.  ஒருவகை மிருகங்களுக்குத்தான் எங்களுக்கு பயம், புலி வரிகளுடனும்  துப்பாக்கிகளும் நீளக்கத்திகளுடனும் ஈவிரக்கமின்றி கொன்று குவிக்கும் மனிதர்கள் மீதுதான் எங்களுக்கு பயம். நாங்கள் அப்பாவி விவசாயிகள். எங்களில் அதிகமானோர் வயது முதிர்ந்தவர்கள் பெண்கள் , குழந்தைகள் அதுபற்றியெல்லாம் அவர்கள் கணக்கெடுப்பதே இல்லை. எங்கள் மீதான வெறுப்பிற்கு காரணமே நாங்கள் வித்தியாசமானவர்கள் என்பதுதான்.  வேறு இனத்தை சேர்ந்தவர்கள். நாங்கள் வாழ தகுதியற்றவர்களாகத்தான் அவர்கள் பார்க்கிறார்கள். அவர்களுக்குத்தான் நாங்கள் பயப்படுகிறோம் . தமது பாதையில் குறுக்கிடும் எங்கள் காய்கறி தோட்டங்கள், வீடுகளை எல்லாம் அழித்தொழிக்கும் காட்டு யானைகளை விட அவர்களுக்குத்தான் நாங்கள் பயப்படுகிறோம். காட்டு யானையிடம் நியாயம் பேசக்கூட வாய்ப்பு உண்டு ஆனால் பயங்கரவாதிகளிடம்  எந்த நியாயமுமில்ல.
இராணுவம் எங்களை பாதுகாக்க முகாம் ஒன்றை அமைத்தது ஆனாலும் அவர்களால் எங்களை  முழுமையாக பாதுகாக்க முடியவில்லை. பல கிராமங்கள் தாண்டி மறுமுனையில் அவர்கள் பயங்கரவாதிகளுடன்  போரிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.  அடிக்கடி அவர்கள் பாதுகாப்பு ரோந்துகளை செய்தாலும்  பயங்கரவாதிகள் மறைந்திருந்து தாக்குகிறார்கள். இராணுவத்திற்கு அவர்கள் முகத்தை காட்டுவதே இல்லை. கிராம மக்கள் பின்னால் ஒளிந்துகொண்டு இரவில் மட்டும் தாக்குவார்கள். இராணுவம் இல்லாதவேளைகளில் மாத்திரம் கிராமங்களுக்குள் நுழைவார்கள். கிராமத்தில் யாரிடமுமே துப்பாக்கி இல்லை. ஆயுதத்துடன் ஒருபகுதி வெற்றுக்கையாக கிராம மக்கள் என்று சமனில்லாத நிலை. கிராமமக்களால் செய்யக்கூடியது காட்டுக்குள் ஓடி ஒளிவதுதான். அங்குதான் ஆயுதம் வைத்திருப்பவர்கள் இவர்களை கண்டுபிடிக்க முடியாது.
யார் வீட்டினதோ அடுப்புப்புகை வெகு தூரத்திலிருந்து  மேலெழுவது  தெரிந்தது. எல்லோருமே காலைச்சாப்பாடு தயாரிக்கும் நேரம். யாருமே சாப்பிடவில்லை. ஓடி ஒளியும் அவசரத்தில் அடுப்புக்கள் அணைக்கப்படாமல்  புகைந்துகொண்டிருந்தன. நான் மரத்தில் ஒரு கிளையில்  ஒளிந்துகொண்டிருந்தேன் தலைக்குமேல் இன்னுமொரு கிளை  என்னை அமத்த அதனை கையால்  பிடித்திருந்தேன்.   சமன்மாலி அடுத்த உயரமான  கிளையில் அமர்ந்திருந்தாள். என் உயர ஒளிவிடத்திலிருந்து அம்மாவையும் பெரியம்மாவையும் பார்க்கக்கூடியதாக இருந்தது. இரண்டு புதர்களின் நடுவில் மறைவாக இருந்தார்கள். எங்கள் பக்கத்துவீடுகளில் ஒன்றிலிருக்கும் கிழவி  ஒருத்தி அவர்கள் பக்கத்தில் குந்தியிருந்தாள். ஆண்கள் எல்லோரும் பற்றைகளினுள் மறைவாக கிராமமக்களைச்சுற்றி வட்டமாக நின்றார்கள்.  அவர்கள் கைகளில் தடிகளும் கத்திகளும். திருப்பித்தாக்க வேறொன்றுமில்லை. வயதானவர்களையும் பெண்களையும் குழந்தைகளையும் தங்களையும் பாதுகாக்க  தடிகளையும் கத்திகளையுமே நம்பியிருந்தார்கள்.

 

பக்கத்துகிராமங்களில் இருந்து யாராவது எங்கள் பக்கம் வருகிறார்களா என கண்காணிக்க ஆண்கள் மரத்தில் ஏறிநின்று கவனித்துக்கொண்டிருந்தார்கள். காய்ந்துபோயிருக்கும் மரங்களும் பற்றைகளும் அடர்த்தியாக இருந்தது எங்களுக்கு வரம்போன்றதொன்று. இதுகும் இல்லாவிடில் நாங்கள் எங்குபோய் ஒளிந்துகொள்வோம்?  புத்தரின் சிலைக்கு பூக்களை காணிக்கையாக்கிய பின்  புத்தசூத்திராவை அமைதியாய் மனதினுள் சொல்வேன்.  பாதுகாப்புக்காக சொல்லும் அந்த சூத்திராக்களில் என் நினைவில் இருந்த ஒரே ஒரு சூத்திரா அதுதவிர வேறு ஒன்றும் எனக்குத்தெரியாது. மீண்டும் அந்த சூத்திராக்களை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டு பயங்கரவாதிகள் எங்களை தேடி காட்டினுள் வரமாட்டார்கள் என்ற நம்பிக்கையோடு இருந்தேன்.

 

பயத்தில் உறைந்து அமைதியாக எந்தவித அசைவுகளுமின்றி  காதுகளை கூர்மையாக்கிக்கொண்டு கால காலமாக இருந்ததுபோல் நேரம் நீண்டுகொண்டேபோனது. சூரியன் தலைக்கு நேராக வந்துவிட பற்றைக்காடுகள் வெப்பத்தை உமிழ்ந்தன ,காற்று வீசவே இல்லை, பறவைகள் பாடவில்லை முழுமையான அமைதி. எங்கள் வயிறுகள் போட்ட சத்தம்கூட நின்றுவிட்டது. கிளைகளை பிடித்திருந்த கை வலித்தது,தொண்டை வரண்டு காய்ந்துபோனது இருந்தும் நான் அசையாது உட்கார்ந்திருந்தேன். சிறு சத்தம்கூட பயங்கரவாதிகளுக்கு எங்களை காட்டிக்கொடுத்துவிடும். ஒரு சிறிய சத்தம் எங்கள் எல்லோரையும் கொன்றுவிடும். அதனால்தான் நாங்கள் சிலைபோல ஆடாது அசையாது இருக்கவேண்டும். அசையக்கூடாது எந்த உணர்வுகளையும் உணராது இருக்கவேண்டும் . இப்படி பலதடவைகள் நான் இருந்திருக்கிறேன். இருவது தடவைகளுக்குப்பின் நான் எண்ணுவதை விட்டுவிட்டேன். பாடசாலைக்கு போவதைவிட  காட்டினுள் அதிக தடவை ஒளிந்திருக்கின்றோம் என நினைக்கின்றேன். நான் சொல்வதையெல்லாம் மறுப்பது சமன்மாலியின் வழமை. ஒரு நாள் இதை நான் அம்மாவுக்கு சொன்னபோது அவள் மறுக்கவில்லை.  விநோதமாக என்னைப்பார்த்துவிட்டு மறுபக்கம் திரும்பிவிட்டாள்.

 

தூரத்தில் கேட்ட சத்தத்தில் எல்லோரும் விதிர் விதிர்த்துபோனோம். பயங்கரவாதிகள்தான் எங்களைத்தேடி வருகிறார்களோ? மூச்சை பிடித்துக்கொண்டு காத்திருந்தோம்.  சிறிது நேரத்தின் பின் எங்கள் குழுவிலிருந்து ஒருவர் பேச சகஜநிலை திரும்பியது.  நாங்கள் கேட்ட குரல்கள் கண்காணிப்புக்காக ஆங்காங்கே நின்றவர்களின் குரல்கள். கிராமத்துக்கு போகலாம் என்ற செய்தி படிப்படியாக எங்களை வந்தடைந்தது. பயங்கரவாதிகள் போய்விட்டார்கள். எவ்வளவு அமைதியாக கிராமத்தைவிட்டு வேளியேறினோமோ அதேபோன்று அமைதியாக கிராமத்துக்கு திரும்பினோம். அமைதியாக இருப்பதுதான் உயிர்தப்ப முக்கியமானது என நாங்கள் எல்லோரும் அறிந்துவைத்திருந்தோம் அத்தோடு விழிப்பாயிருத்தலும் சேர்த்தி.
கிராமம் அப்படியேதான் இருந்தது. ஒன்றுமே நடவாததுபோலவும் நாங்கள் கிராமத்தைவிட்டு போனபோது இருந்ததுபோல் இருந்தது. எந்த வீட்டிலிருந்தும் புகை வரவில்லை. அணைந்துபோயிருக்கலாம். குசினியிலிருந்த றொட்டி நினைவுக்கு வர அவசரமாக வீட்டை நோக்கி நடந்தோம். காட்டிலிருந்து வீடு திரும்புவதற்கு அதிக நேரம் எடுத்ததுபோலிருந்தது. உண்மையிலேயே காட்டிற்குள்போய் ஒளிய இடம் தேடத்தான் அதிக நேரம் பிடித்தது.  அப்பா வீட்டுக்கதவை திறக்க நாங்கள் எல்லோரும் உள்ளே போனோம்.  வீடு தலைகீழாக கிடந்தது. அவர்கள் வீட்டின் பின்கதவால் வந்திருக்கவேண்டும். எங்கள் புத்தகங்கள் எல்லாம் சிதறிக்கிடந்தன நம்பமுடியாது பார்த்துக்கொண்டு நின்றோம். புத்த பெருமானுக்கு வைத்த பூக்கள் தரையில் சிதறிக்கிடந்தன , பூத் தட்டு கதிரையின்கீழ் கிடந்தது,புத்தரின் சிலையும் தரையில் கிடந்தது தலைசிதறி உடல்வெடிப்புக்களுடன். சிலையை தரையில் வீசி எறிந்திருக்கிறார்கள். சமையைல் அறையும் தாறுமாறாக கிடந்தது. சமையல் அறையுள் ஒரு வித்தியாசமான மனம் என்னவென்று குறிப்பாக எங்களால் சொல்லமுடியவில்லை சாருலதாவின் அம்மா பக்கத்துவீட்டில் பெருங்குரலில் ஆற்றாமையால் கத்திக்கொண்டிருந்தாள். அவளின் வீட்டையும் பயங்கரவாதிகள் குலைத்துப்போட்டிருக்கவேண்டும். எங்கள் சாப்பாட்டையெல்லாம் சாப்பிட்டுவிட்டார்கள் .சாருலதாவின் அம்மா ஆத்திரத்துடன் கத்தினாள்.

 

எங்களது றொட்டிகளையும் காணவில்லை. றொட்டிகள் அடுக்கியிருந்த தட்டு வெறுமையாக கிடந்தது,பருப்புக்காய்ச்சிய மண்பானை குசினிமூலையில் வீசப்பட்டிருந்தது. அடுப்பில் நெருப்பு மெலிதாக எரிந்துகொண்டிருக்க றொட்டிக்கல் அடுப்பின்மீது விட்டுச்சென்றதுபோல் இருந்தது ஆனால் அம்மா எடுக்காமல் விட்ட றொட்டியைக்காணவில்லை.  றொட்டிக்கல்லின்மீது வெளிர்மஞ்சள் பொதி ஒன்று எரிந்து கருமையாக நொது நொதுவென  கொதித்துக்கொண்டிருந்தது. அம்மா அடுப்பின்முன்னால் மயங்கி விழுந்தாள். கம்பளிச்சுற்றுக்கு வெளியே தெரிந்த முகத்தில் உறைந்துபோயிருந்த வேதனையின் சுளிப்பை நான் இதுவரை எங்கும் பார்த்ததில்லை. காலை வெய்யிலில் சேபாலிக்க பூக்கள் வாடியபின் காய்ந்த இலைகளை பார்ப்பதுபோலவே இருந்தது. நானும் அலறிக்கொண்டே அம்மாவின் பக்கத்தில் வீழ்ந்தேன்.
பல வருடங்கள் கழிந்தபின் கொழும்புக்கு வேலை தேடிவந்தேன்.  அப்பாவிற்கு வயதாகிவிட்டதால் வயலில் வேலை செய்யமுடியாது. கண்ணிவெடியில்  கால் ஒன்றை இழந்தும் விட்டார். நொண்டி நொண்டி நடக்கத்தான் அவரால் முடியும். சமன்மாலிதான் பெற்றோருக்கு உதவியாக வீட்டில் இருக்கிறாள். அவளும் தன் கணவன் வீட்டிற்கு சீக்கிரம் போய்விடுவாள். அவளின் கணவனின் கிராமத்தில் அவ்வளவாக பயப்படதேவையில்லை. அப்பாவும் அம்மாவும் தங்களை தாங்களே காப்பாற்றிக்கொள்ளவேண்டும். அவர்களுக்கு வயதானதால் நான் உழைக்கும் பணம் உதவியாக இருக்கும். யூனிவசிற்றியில் படிப்பதற்கும்  என் உழைப்பு உதவும்.  இங்கே வாழ்க்கை கிராமத்தைவிட வித்தியாசமானது. எங்கள் கிராம வாழ்க்கை பற்றி இங்கே இருப்பவர்களுக்கு தெரியவுமில்லை சொன்னால் புரிவதுமில்லை என்பதை என்னால் இன்றுவரை விளங்கிக்கொள்ளமுடியவில்லை. எங்கள் வாழ்க்கைமுறைமீது பரிவுணர்வு இருப்பினும் முழுமையாக விளங்கிக்கொள்ள இவர்களால் முடியவில்லை. எங்கள் கதைகளை இந்நகர மக்களால் நம்பமுடிவதுமில்லை.
ஓன்றில் அதிர்ச்சி அடைவார்கள் அல்லது பரிதாபப்படுவார்கள். முழுமையாக புரிந்துகொள்ளமாட்டார்கள். எங்களுக்கு உதவுவதற்கு அவர்களுக்கு விருப்பம்தான். ஆனால் நிலைமையை மாற்ற எங்களாலோ அவர்களாலோ முடியாதநிலை.  நான் தங்கியிருப்பது சிறியதொரு அறை.  இன்னும் இரண்டுபேருடன் கூட்டாக  அதில் பெரிதாக எனக்கு சங்கடம் ஒன்றுமில்லை அத்தோடு அந்த போடிங்கை நடத்துபவர்களும்  நல்ல மனிதர்கள். இந்த வீடு எனக்கு பிடித்திருக்கிறது கிராமத்தில் என் வீட்டை நினைவுபடுத்தும். வீட்டு நினைவு வரும்போதெல்லாம்  செம்மஞ்சள் காம்பு கொண்ட வெள்ளைப்பூ மரத்திரனடியில் போய் உட்கார்ந்துகொள்வேன். அந்த பூவின் பெயரை நீண்டகாலமாகவே நான் சொல்வதில்லை. சொல்லமுடிவதில்லை. இதே மரம்தான் எங்கள் கிராம வீட்டின் முன்னும் நிற்கிறது. இந்த பூக்களை கண்டாலோ அல்லது இம்மரத்தினை கண்டாலோ நான் சிறுவனாய் இருந்தகாலம் வந்துகொண்டே இருக்கும் ,என்றும் என்னால் அதை மறக்கமுடியாது.  மரத்தினடியில் கண்களை மூடி மவுனமாக  என்னைவிட்டு பிரிந்த எல்லோருக்குமாக பிராத்திப்பேன்.

௦௦௦௦

 

Breaking news. Short stories in English by Shriani  Rajapakse

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment